கபிரியேல் மங்கள வார்த்தை சொல்லுதல்.
"ஆறாம் மாதத்தில் .. தேவதூதன் அவரை விட்டகன்றார் " (லூக் 1: 26 - 33)
இறைவனுடைய கட்டளையைத் தாங்கி கபிரியேல் சம்மனசு நாசரேத்தை நாடுகிறார். தோற்றத்தில் அழகு மின்னும் அரசகுல ஆண் மகன் ; அவரது வதனத்திலிருந்து நாலா பக்கமும் பிரகாசக்கதிர்கள் சிதறுகின்றன . கம்பீரமான தோற்றம் அச்சத்தையன்று , அதிசயக் கவர்ச்சியை அளித்தன . மேலோக தூதர் தனிமையாய்ச் செல்வாரா ? அவரைச் சூழ்ந்து அவருக்கு முன்னும் பின்னும் கணக்கற்ற சம்மனசுக்கள் ஏகினர்.
நசரேத்தூர் சிற்றில்லம் சுத்தத்தினால் பளிங்கு போல் இலங்குகிறது . பொருட்கள் அதிகம் இல்லை . வீட்டில் உள்ள சில பொருட்களும் இருக்கவேண்டிய இடத்தில் ஒழுங்காய் இருப்பதால் , காலியான பளிங்கறை என்றே முதல் நிமிஷம் தோற்றமளிக்கிறது . பதினான்காண்டு பெண்மகள் , வயதுக்கு மேலே வளர்த்தியுள்ளவள், சித்திரப்பாவை போல் முக்காலியில் அமர்ந்து நூற்றுக் கொண்டிருக்கிறாள் . இப்பூவுலகில் இத்தகைய அழகுள்ள பெண்மணியும் உண்டா என்று தான் எவரும் மயங்க வேண்டும் .கண்ணும் கருத்தும் ஆண்டவர் மேல் பதிந்திருக்கிறது "வார்த்தையானவர் பிறந்து மக்களோடு வசிக்கும் நாள் வந்து விட்டதா ? மனுமக்கள் மனித உருவில் அவரைப் பார்ப்பார்களா ? அவரைப் பார்த்தறிய பாக்கியம் பெற்றவர் யார் ? அவர் பாத மலர் பதிந்த தரையை முத்தி செய்யத் தவம் புரிந்தோர் யார் ?
" இசையாஸ் குறிக்கும் அவரது அன்னையின் அடிமையாய் இருக்கும் செல்வ பாக்கியவதி யார் ? மோட்சவாசலைத் திறக்கும் தாவீதனின் திறவுகோலே , நித்திய ஞானமே , புதுச்சபைக்குச் சட்டங்கள் வகுப்பவரே வாரும் . உமது மக்களின் அடிமைத்தனத்தைப் போக்கும் . எல்லாச் சரீரமும் உமது ஈடேற்றத்தைக் காண்பதாக " என்று அவளது உள்ளம் செபித்துக் கொண்டிருக்கிறது
திடீரெனக் கண்களைத் திறக்க , வான தூதரைக் காண்கிறார் . அவருக்கு வணக்கம் செலுத்த முக்காலியை விட்டு எழ எத்தனிக்கிறார். " வேண்டாம் ,வேண்டாம் , அது சரியல்ல " என்று கபிரியேல் தூதர் அதைத் தடுத்து , தானே கீழே விழுந்து அவரை நமஸ்கரிக்கிறார். பின்னர் பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து தான் கொண்டு வந்த வாசகத்தைக் கூறுகிறார். " அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே ! பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே !" இப்புகழ்ச்சிமணியின் ஒலியைக் கேட்ட தாழ்மை நிறைந்த மங்கை அம்மொழிகளைக் காதில் வாங்கிக் கலங்குகிறார் ."அரசி அஞ்ச வேண்டாம் . மூவுலகும் ஆளும் தேவன் உமது உத்தரத்தில் அவதரித்துப் பிறக்கப் போகிறார் "
" நான் கன்னிமையென்னும் வார்த்தைப்பாட்டைக் கொடுத்தவள் . ஆணின் காற்றண்டாதவள் . இது எவ்வாறாகும் ? "
"மேலான அரசியே , உமது கன்னிமைக்கு பங்கமில்லாமலே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இது நடக்கும். இதோ , மலடியெனப்பட்ட உமது உறவினளாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் . கடவுளால் ஆகாத காரியம் ஒன்று உண்டோ ? "
தாயே எமது ஈடேற்றம் , மனுக்குலத்தின் இரட்சணியம் , உம கரத்தில் இருக்கிறது. இறைவனுடைய தாயாக சம்மதியும் அன்னையே , மனுக்குலத்தின் நிர்பாக்கியத்தைக் கண்டு சற்று முன் தானே நீர் மனங்கலங்கிக் கொண்டிருந்தீர் "
தாய் தலை குனிந்தார். பொற் பேழையில் பொதிந்து வைக்க வேண்டிய வார்த்தையை வழங்கினார் . "இதோ நான் ஆண்டவருடைய அடிமை . உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக் கடவது "
அந்நேரமே வானலோகத்தவர் மகிழ்ச்சிக் கீதம் இசைத்தனர் . திரியேக இறைவன் கன்னியின் இரத்தத்திலிருந்து ஓர் உயிரை உருவாக்கினார். ஓர் ஆத்துமத்தைச் சிருஷ்டித்தார் . இரண்டாம் ஆளான வார்த்தையானவர் அந்த மனுஷீகத்தை எடுத்துக் கொண்டார். மனித அவதாரம் நிறைவேறியது . வானமே , பூமியே மகிழுங்கள் . திரியேக தேவனைப் புகழுங்கள் .
இரண்டாம் தேவ ஆள் மனித அவதாரம் எடுத்து மனுக்குலத்தைப் பழைய உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டுமென்று தீர்மானித்த ஞானமானவர் தமது அன்பின் வழியின் பிரகாரம் செய்வார் . அது அவருக்குத் தாயாக வேண்டியவளின் சம்மதத்தின்மேல் நிறைவேற வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார். மரியும் அன்பின் வழியே நடந்து யாதொரு கட்டாயமுமின்றி அதற்குச் சம்மதித்தார். அதனால் வர இருக்கும் துக்கம் துயரம் எல்லாம் தெரிந்தும் தாயாகச் சம்மதித்தது அவரது பெருந்தன்மையையும் , தாராள சிந்தையையும் துலக்குகிறது . அதேபோல நாமும் அன்பின் வழியைப் பின்பற்றி நமது ஈடேற்றத்திற்காக உழைக்க வேண்டியவர்கள்
கன்னித்தாய் தனிப்பட்ட முறையில் மட்டும் தம் சம்மதத்தை அளிக்கவில்லை . மனுக்குலத்தின் பேரால் சம்மதம் அளித்தார். ஆதாமின் பாவத்திற்கு ஏவை காரணமாயிருந்தது போல, இயேசு உலகை ஈடேற்றும் பணிக்கு கன்னிமரி காரணமாயிருக்க வேண்டியவர்.
வார்த்தையானவர் மாம்சமானார் . கன்னிமரி தன உதரத்தில் குழந்தையைத் தாங்கிச் சென்றவர். இறைவனை மனித உருவில் தாங்கிச் சென்றார் . பரிசுத்த சூசை அர்ச் கன்னிமரியாளின் மெய்யான பத்தா. எனினும் இந்த இரகசியத்தை அவருக்கு அறிவிக்கவில்லை . ஆதலால் அவருக்கு எவ்வளவு வாதனை ! சூசையப்பருக்கும் எவ்வளவு கலக்கம் . இரகசியமாய் இறைவனைச் சுமந்து செல்லுகிறவர்களைக் கண்டுபிடிக்கிறவர்கள் அபூர்வம் . அவர்கள் நண்பர்கள் முதலாய் , கடவுளை நேசிக்கும் நண்பர்கள் முதலாய்க் கண்டுபிடிக்காமல் அவர்களைக் கலங்கடித்துத் தானும் கலங்குகிறார்கள் . இதற்கு இறைவன் சம்மதிக்கிறார்
சரிதை.
ஆலன்லான்வாலி , ஆல்பிஜென்சியர் என்னும் அசத்தியத்தைக் கக்கும் விரோதிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த பெரெத்தொன் படை வீரன் . ஒரு நாள் பகைவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள் . செபமாளைப் பக்தியுள்ள அவர் செபமாலை அன்னையிடம் வேண்டிக் கொண்டார் . திடீரென்று நூற்று ஐம்பது கற்கள் அவரது எதிரிகள் மேல் விழவே ,அவர்கள் ஓடிப் போயினர் . அவர் தப்பிப் பிழைத்தார் . வேறொரு சமயம் அவர் பயணித்த கப்பல் தண்ணீரில் மூழ்கி அமிழும் தருவாயில் இருந்தது . தேவதாயின் கிருபையால் நூற்று ஐம்பது சிறு சிறு குன்றுகள் தண்ணீருக்கு மேல் தோன்றின . அவைகளின் உதவியால் அவர் பேரேத்தனி சுகமாய்ப் போய் சேர்ந்தார்.
இப்புதுமைகளுக்கு நன்றியறிதலாக தீனான் என்னும் நகரில் சாமிநாதர் சபைத் துறவிகளுக்கு ஓர் ஆசிரமம் எழுப்பினார். அவர் ஒவ்வொரு நாளும் செபமாலை செபித்து வந்தார் . இறுதியில் அவர் துறவறத்தில் சேர்ந்து ஆர்லீன்ஸ் நகரில் பாக்கியமாய் மரித்து ஆண்டவரின் பாதம் சேர்ந்தார்.
செபம்
உயிரளிக்கும் பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். நாங்கள் வாழும் வண்ணம் எங்கள் உள்ளத்தில் இறங்கி வாரும் . வெறுமை நிறையும் வண்ணம் வெறுமையில் இறங்கி வாரும் . தூசி பூத்துக் குலுங்கும்படி தூசிக்குள் இறங்கி வாரும் . இருளில் ஒளி பிரகாசிக்கும்வண்ணம் இருளுக்குள் இறங்கி வாரும் . செபமாலையை நாங்கள் பக்தியாய்ச் செய்து முடிக்க எங்கள் மேல் இறங்கியருளும்.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அக்டோபர் 11
Posted by
Christopher