பரிசுத்தத்தின் பரிசுத்தர்
நீர் பரிசுத்தத்தில் உத்தம பரிசுத்தர். நானோ மகா பெரும் பாவியாயிருக்கிறேன். ஆயினும் இதோ உம்மை நோக்கி பார்க்க தகுதியற்றவற்றனாகிய என்னைச் சந்திக்கும்படி நீர் உம்மைத் தாழ்த்தி வருகின்றீர்.
நீர் என்னிடம் வருகின்றீர். என்னோடிருக்க ஆசைப்படுகின்றீர். நான் உண்பதற்கு ஒரு பரலோக உணவு, “ சம்மனசுக்களின் அப்பம் “ அதாவது “ பரலோகத்தினின்று இறங்கி உலகத்திற்கு ஜீவியம் கொடுக்கிற உயிருள்ள அப்பமாகிய “ உம்மையே எனக்குத் தந்தருள சித்தமாகிறீர்.
அதுதான் உமது நேசத்தின் அடையாளம். உமது உந்நத தயாளத்தின் விளக்கம். கைம்மாறாக உமக்கு எவ்வளவோ பலத்த நன்றியறிந்த தோத்திரமும் துதியும் செலுத்தப்பட வேண்டியது.
ஓ ! இந்த தேவத்திரவிய அநுமானத்தை நீர் ஏற்படுத்திய கருத்து எவ்வளவோ உத்தமமும், பிரயோஜனமான கருத்து. உம்மையே நீர் உணவாக கொடுத்த போது அது எவ்வளவோ இன்பமும், மதுரமுமான விருந்து.
ஓ ! ஆண்டவரே ! உமது செயல் எவ்வளவோ ஆச்சரியத்திற்குரியது. உமது புண்ணியம் எவ்வளவோ வல்லபமுள்ளது. உம்முடைய சத்தியம் எவ்வளவோ தவறாதது !. ஏனெனில் “ நீர் சொன்னீர்; சகலமும் உண்டாயிற்று; நீர் கட்டளையிட்டதெல்லாம் செய்யப்பட்டன.
என் ஆண்டவராகிய சர்வேசுவரா ! மெய்யான தேவனும், மெய்யான மனிதனும் ஒன்றாகிய நீர் முழுமையும், கொஞ்சம் அப்பக் குணங்களுக்குள்ளேயும், கொஞ்சம் இரசக் குணங்களுக்குள்ளேயும் அடங்கியிருப்பதும், உட்கொள்ளுகிறவன் உம்மைப் புசித்தாலும், நீர் கொஞ்சம் கூட குறைந்து போகாமலிருப்பதும், மனிதப் புத்திக்கெட்டாததும் எல்லாரும் விசுவசிக்க வேண்டியதுமான ஆச்சரியத்திற்குரிய காரியம்.
சர்வத்திற்கும் ஆண்டவரே ! எவருடைய ஒத்தாசையும் உமக்கு அவசியமில்லை. ஆயினும் நீர் தேவநற்கருணையின் வழியாய் எங்களில் வாசம் செய்ய சித்தமானீரே; உமது மகிமைக்காகவும், உமது நேசத்தின் இடைவிடாத ஞாபகத்திற்காகவும் நீர் விஷேசமாய் திட்டம் செய்து ஏற்படுத்தின உமது பரமபலியை; நான் சந்தோஷமும், பரிசுத்தமுமான மனசாட்சியோடு என் நித்திய இரட்சண்யத்திற்காக அடிக்கடி நிறைவேற்றக் கூடுமாயிருக்கும்படி/பங்கேற்க கூடுமாயிருக்கும்படி என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் மாசின்றி காப்பாற்றியருளும்.
நன்றி : கிறிஸ்துநாதர் அநுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்
சிந்தனை : பரிசுத்தரின் பரிசுத்தன் பிரசன்னமாகி, தன்னையே உணவாகத் தரும் இந்த தெய்வீக மோட்ச உணவை பரிசுத்தமான உள்ளத்தோடு, நல்ல விதமாக நம்மை தயாரித்து பக்தியோடு முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம். நம்மில் எழுந்தருளி வந்த சர்வேசுவரனிடம் பேச அவரை ஆராதிக்க ஒரு பத்து நிமிடமாவது செலவழிப்போம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !