கன்னிமரி எலிசபெத்தம்மாளை வினவுகிறார்.
வயது முதிர்ந்த உறவினளின் இரகசியத்தை அறிந்த உடனே அவளைக் காண வேண்டும் என்று மரியின் மனம் தவிக்கின்றது . " அந்நாளில் மரி எழுந்து மலைப் பிரதேசத்தில் உள்ள யூதாவின் நகரை நோக்கி விரைந்து சென்றார் " லூக் 1:39 -59.
மரியிடம் இருந்து மனுரூபம் எடுத்து ,அவரது இருண்ட உதரத்தில் வல்லமையற்றவராகப் பலவீனராகப் படுத்த நாதர் , அவர் பிரியம் போல் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல இணங்குகிறார். குழந்தையின் கைப்பொம்மை போல . ஈடேற்ற அருள் வழியில் முதல் அடி எடுத்து வைத்தல் இப்பிரயாணம் . மனுமக்களை ஈடேற்றக் கடவுள் செய்ததென்ன ? மக்களின் கரங்களில் , அதிகாரத்தில் , தம்மைக் கையளித்து விடுகிறார் . மாமரி இந்தப் பதவிக்கு ஏற்றவர் . இந்நாள் முதல் அவர் எங்கு சென்றாலும் ஏசுவைக் கொண்டுவருவார் . திருச்சபைச் சரிதையும் இதை விளக்குகிறது. எங்காவது தேவதாய்க்கு விஷேஷ வணக்கம் வளருமேயாகில் , அது தேவ நற்கருணைப்பக்தியில் மலர்ந்து பழுக்கும் . லூர்துநகர் காட்சியிலும் , அற்புத நீரூற்றிலும் தோன்றியது லூர்துமாதாவின் பக்தி . இப்போது தேவ நற்கருணைச் சுற்றுப் பிரகாரத்தில் தானே பெரும் புதுமைகள் பூக்கின்றன .
பெருந்தன்மையும் தாராள சிந்தையும் உள்ள அன்னையின் அன்பை இங்கு காணலாம் . மலைக்காடு- பாதையோ கஷ்டம் - ஐந்து நாள் பிரயாணமா - அதற்கும் மேலா - உண்ண , உறைய எவ்வளவு சிரமம் ! குளிரும் , பனியும், வெயிலும் இலேசா? அன்பு சிரமம் அறியாது . உறவினளின் மகிழ்ச்சியை இரசித்தவளாய் புள்ளி மானைப் போல் துள்ளி ஓடுகிறார் இக்குழந்தை . (பதினான்கு வயதானாலும் குழந்தை தானே ) இந்த இளமங்கை விருந்தாடும் நோக்கோடு போகவில்லை . வயது முதிர்ந்த எலிசபெத்துக்கு பனி புரியும் கருத்தோடு செல்கிறார். வழியில் வயிற்றிலிருக்கும் தெய்வக் குழந்தை என்ன ஞான மகிழ்ச்சித் தேனைத் தாயின் உள்ளத்தில் பொழிந்திருக்க வேண்டும் ! தாய்க்குத் தம் மகனின் காட்சி , சிந்தை , செபம் , இது அன்னையின் அலுவல் . நம் பிரயாணங்களில் இயேசுவைத் தங்க வைத்து நாம் மட்டும் போகலாகாது . இயேசுவின் சிந்தையையாவது தாங்கிச் செல்ல வேண்டும் .
கன்னிமரி எலிசபெத்தின் இல்லம் இறங்கியவுடனே குதூகலத்தோடு உறவினளை வாழ்த்தி நலம் விசாரிக்கிறார் . மாமரியின் பிரசன்னத்தினால் எலிசபெத் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறாள் . வந்திருப்பவர் சாதாரண உறவினர் அல்ல , இறைவனின் தாய் என்று முதியவளுக்குத் தெரிய வருகிறது . கன்னித்தாயின் சுயநலமற்ற அன்பு மனிதாவதாரத்திற்கு பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட முதல் சாட்சியைப் பிறப்பிக்கின்றது
'மாக்னிஃபிக்காத் '- என் ஆத்துமமானது ஆண்டவரை போற்றுகின்றது " என்று உன்னத கீதம் முழங்குகிறது . இக்கீதத்தை ஆழ்ந்து அலசிப் பார்க்கிறவர்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு முடிவையும் , வழியையும் , மெய்யான மானிட வாழ்வுக்கு வழியையும் காண்பர். மாமரி தம் ஒன்றும் இல்லாமையை உணர்ந்தார் , கடவுளைப் புகழ்ந்தார் , அவரிடத்தில் மெய்யான தாழ்ச்சி ஆழ்ந்து ஓடுகிறது . ஆதலால் இறைவன் தம் அரிய கொடைகளையும் அவரிடம் ஒப்படைக்கலாம் . அவரைச் சந்ததி சந்ததியாய் எல்லாத் தலைமுறைகளும் வாழ்த்தலாம் . " வல்லபமுள்ளவர்களை உயர்ந்த அரியணையினின்று தள்ளி, தாழ்ந்தவர்களை உயர்த்தினார் ". வருங்காலத்தில் இயேசுபிரான் நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களையும் ஆசீர்வதிப்பார் . அதைக் கன்னித்தாய் இப்பொழுதே கற்றுக் கொண்டார் . " பசித்தவர்களை நன்மைகளால் நிரப்பித் தனவந்தர்களை வெறுமையாய் அலைய விட்டார் " என்றார் . இக்கீதத்தை ஊன்றிப் பார்ப்போமாக .
இருவரும் தங்கள் சுகக்ஷேம விசாரணை முடிந்தபின் நடையைக் கடந்து உள்ளே சென்றனர் .கன்னிமரி சக்கரியாசின் முன் முழந்தாள்படியிட்டு ஆசீரைப் பெறுகிறார் . அவர் குருவல்லவா ? அவருக்கு நிகழ்ந்த குறையைக் காண மாமரிக்கு உள்ளத்தில் வருத்தம்
எலிசபெத் தன சொந்தமான உள் அறையை , மாமரி ஒதுங்கி செபிக்க ஒழித்துக் கொடுக்கிறாள். இரவும் பகலும் எத்தனையோ மணிநேரம் கன்னித்தாய் செபத்தில் ஈடுபட்டிருந்தார். நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கே எழுந்து கன்னித்தாய் செபிப்பார் என்று சில தரிசனிகளும் பக்தியுள்ளோரும் சொல்லிப் போயிருக்கின்றனர்
எலிசபெத் வயது முதிர்ந்தவள் . மேலும் இந்த உடல் நிலையில் அவளால் என்ன வேலை செய்ய முடியும் ? வீட்டைப் பெருக்குவதும் , பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவுவதும் , துணிகளைத் துவைத்துக் காய வைப்பதும் , தானியத்தைத் திருகையில் வைத்து அரைப்பதும் , சமையல் செய்வதும் , குடும்பத்தில் எவ்வளவோ சிறு சிறு அலுவல்கள் உள என்று பெண்களுக்குத் தெரியும் . எல்லாவற்றையும் கன்னித்தாய் செய்திருப்பாள் . முதல் துவக்கத்தில் எலிசபெத் சம்மதிக்காமல் வாதாடினாள் . ஆனால் அன்புப் போட்டியில் , தாழ்ந்த சேவைப் போட்டியில் , மாமரிக்கே வெற்றி . எலிசபெத் அடுத்த தினத்தில் இருந்து சும்மா இருந்து விட்டாள். மலர்கொத்துக்களையும் அங்கும் இங்கும் மனையில் வைத்து சிற்றில்லத்தின் அழகை சௌந்தரவதியான கன்னிகை பெருக்கினாள்.
சிறிது நேரம் ஒவ்வொரு நாளும் இரு பெண்களும் சல்லாபித்திருக்கலாம் . தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை தீர்க்கதரிசி என்று எலிசபெத் அறிவாள்; தம் குழந்தை உலக இரட்சகர் என்று தேவதாய்க்குத் தெரியும் . இவைகளைப் பற்றி பெரும் அதிசயத்தோடு பேசி இருவரும் ஆண்டவரைப் புகழ்ந்தார்கள்
சேவிகைகளுக்கு , பொதுவில் பெண் மக்களுக்கு , கன்னித்தாய் எடுத்துக்காட்டு
சரிதை
13 ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் ஒரு பெண் இருந்தாள். மகா புத்தியுள்ளவள். பெரும் புண்ணியவதி. ஆனால் தான் என்ற மமதை கொண்டவள் . அர்ச் சாமினாதரின் ஆலோசனையைக் கேட்க எண்ணி அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யப் போனாள். பரிகாரமாக ஒரு முழுச் செபமாலை செய்யச் சொன்னதோடு , தினந்தோறும் செபமாலை செய்து வர புத்தி சொன்னார். தான் நாள்தோறும் ரோமாபுரியிலுள்ள பல கோவில்களைச் சந்தித்து வருவதாகவும் , இது முடியாத காரியம் என்றும் , மேலும் உரோம ஆடை தரித்திருப்பதாகவும் , ஆதலால் இப்புது வழக்கம் தனக்குத் தேவையில்லை என்றும் சொன்னாள்.
செபமாலைப் பக்தியின் மேன்மையை புனிதர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியும் அவளுக்கு அது உரைக்கவில்லை. தனக்குப் பிரியமில்லா வழக்கத்தைத் தன் தலையிலே கட்டிவிடத் தேடிய புது ஆத்தும குருவின் புத்திமதிக்குப் பயந்தவளாய் வீடு திரும்பினாள். எனினும் ஒரு செபமாலை மட்டும் சொல்லி முடித்தாள்.
பின்னொரு நாள் செபம் செய்து கொண்டிருக்கும்போது அவள் பரவசமானாள் . நீதி சிம்மாசனத்தில் வீற்றிருந்த இயேசுவிடம் அவள் ஆத்துமம் சென்றது . மிக்கேல் சம்மனசு அவள் செபதவங்களை ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொன்றில் அவளது குற்றங்குறைகளை எல்லாம் வைத்தார் . குற்றம் குறையுள்ள தட்டு கீழே சென்றது (அகங்காரி இப்போதாவது உன் அகங்காரத்தைக் கண்டுணர்ந்தாயா?)
பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சைப் போல் அவள் பயந்து போய் தனக்கு அடைக்கலமாகத் தேவதையை அழைத்துத் தன்மேல் இரக்கமாயிருக்கும்படி கெஞ்சினாள். அபராதமாக அவள் ஒரு செபமாலை சொல்லி இருந்தாள் அல்லவா ? அவள் சொன்ன ஒரே செபமாலையை நற்கிரியைகள் உள்ள தட்டில் தேவதாய் வைத்தார் . அவளுடைய பாவங்களை எல்லாம் விட இச்செபமாலை அதிக நிறையாய் இருந்தது . சாமினாதரின் புத்தியை கேளாததற்கு தேவதாய் அவளை இலேசாகக் கண்டித்தார்
தன் நினைவுக்கு வந்த உடனே அவள் ஓடி , சாமிநாதர் பாதத்தில் விழுந்து நடந்தவை எல்லாவற்றையும் சொல்லி, அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டாள். தினந்தோறும் செபமாலை சொல்லி வர போவதாக ஒப்புக் கொண்டாள். இவ்வழக்கத்தால் புண்ணிய பாதையில் விரைந்து நடந்தாள்.
செபம்.
முட்கள் காற்றில் பறப்பது போல் கிறிஸ்துவின் சிநேக ஓட்டத்தில் எங்களைத் தூக்கிச் செல்லும் மோட்ச ஆவியே , எங்கள் ஆத்துமம் துளிர் விடும் காலம் , கிறிஸ்து எங்களில் இரகசியமாக மௌனத்தால் உருவாகும்போது சிருஷ்டிகளின் கரங்களில் சிருஷ்டிகரைப் போலவும் , குருவானவரின் கரங்களில் ஒச்தியைப் போலவும் நாங்கள் சுமந்து செல்லக் கிருபை செய்யும் . எலிசபத்தின் இல்லத்திற்கு சிநேக அலுவலின் நிமித்தம் மலைகளின் மேல் மாமரி அவரைக் கொண்டுபோனது போல , நாங்களும் அவரைத் தாங்கிச் செல்ல கிருபை செய்தருளும்
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அக்டோபர் 12
Posted by
Christopher