அர்ச். வெரோணிக்கம்மாள் - கன்னிகை (கி.பி. 1497).
வெரோணிக்கம்மாளுக்கு உலக நன்மைகள் இல்லாவிடினும் ஞான நன்மைகள் ஏராளமாயிருந்தன. இவளுடைய பெற்றோரின் தரித்திரத்தால் இவள் எழுதப்படிக்கத் தெரியாதவளாயிருந்தாள்.
இவள் தோட்டத்தில் வேலை செய்யும்போது மற்றவர்களுடன் சேராமல் தனித்து சர்வேசுரனைப்பற்றித் தியானித்துக்கொண்டு வேலை செய்வாள். வீட்டிலும் வேலை செய்துகொண்டே ஜெபம் செய்வாள்.
தனக்குப் படிப்பறிவு இல்லாததினால், இந்தப் புண்ணிய மாது மனவருத்தப்பட்டு இரவிலாகிலும் படிக்க முயற்சிக்கையில் தேவதாயார் அவளுக்குத் தரிசனையாகி அவளுக்குப் படிப்பு தேவையில்லை என்றும், ஆனால் (1) பரிசுத்தக் கருத்துள்ளவளாயும் (2) பிறர் சிநேகமுடையவளாயும் (3) நாள்தோறும் சேசுநாதருடைய திருப்பாடுகளைத் தியானிக்கிறவளாயும் ஜீவித்து வந்தால், அதுவே அவளுக்குப் போதுமென்று அறியச்செய்தார்கள்.
இந்தப் புண்ணியவதி பலமுறை பரவசமாகி நம்முடைய கர்த்தருடைய ஜீவியத்தைப்பற்றிய அநேக தரிசனங்களைக் கண்டாள்.
சில வருஷங்களுக்குப் பின் இவள் அர்ச். மார்த்தம்மாள் மடத்தில் தவக் கன்னியாஸ்திரீயாக ஏற்றுக் கொள்ளப்பட்டாள். அந்த மடம் வெகு கஷ்டநிலையிலிருந்தபடியால், வெரோனிக்கா சகோதரி நாள்தோறும் வீடு வீடாய்ச் சென்று தர்மம் கேட்க நேரிட்டது. இந்த வேலையையும் மடத்திலுள்ள மற்ற தாழ்மையான வேலைகளையும் அக்கறையுடனும், ஆசையுடனும் செய்வாள்.
இந்தப் புண்ணியவதிக்கு அடிக்கடி கடின வியாதி உண்டான போதிலும், அதனால் அவள் தன் வேலையை விடாமலும், சபையின் ஒழுங்கை மீறாமலும், சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய்ப் பிரகாசித்து அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.
யோசனை
சாதாரணமான காரியங்களைத் திருத்தமாய்ச் செய்வதே உத்தமதன மாகையால், உன் ஞானக் காரியங்களை ஆசையுடனும், அக்கறையுடனும் செய்வாயாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். கெந்திஜெர்ன், மே.