தெய்வீக மருந்து
“ மனிதனுடைய புலன்கள் இளம் வயது முதற்கொண்டு தீமையை நாடியிருக்கின்றன “
இத்தெய்வீக மருந்தின் உதவியினாலே தவிர மற்றபடி அவன் சீக்கிரத்தில் அதிக கெடுதியான பாவங்களில் விழுந்து விடுவான்.
திவ்ய நன்மை உட்கொள்ளுதல் தீமையினின்று மீட்டு இரட்சிக்கின்றது, நன்மையில் உறுதிபடுத்துகின்றது. ஆதலால் நான் இப்போதே நன்மை வாங்கியும், பூசை செய்தும்/பூசையில் பங்கேற்றும் இவ்வளவு அடிக்கடி அசட்டையும், வெதுவெதுப்புமாயிருக்க, தெய்வீக மருந்தை நான் சாப்பிடாமலும்,இவ்வளவு பலத்த உதவியைத் தேடாமலிருப்பதும் இருந்தால் நான் என்னமாய் இருப்பேனோ?
நாள்தோறும் திவ்யபூசை செய்ய/பங்கேற்க அல்லது திவ்ய நன்மை வாங்க என்னிடம் தகுதியான ஆயத்தமில்லாமலிருந்த போதிலும் இவ்வளவு பெரிய அநுக்கிரகத்திற்குப் பங்காளியாவதற்கு தக்க நாட்களில் ஆகிலும் இந்த பரிசுத்த தேவதிரவிய அநுமானத்தைப் பெற ஆசைப்படுவேன். எனெனில் பிரமாணிக்கமுள்ள ஆத்துமம் இந்த அழிவுக்குரிய சரீரத்தில் அடங்கி உமக்குத் தூரமாயிருக்கிற வரையிலும், அடிக்கடி தன்னுடைய தேவனை நினைத்து தனது நேசரைப் பக்தியுள்ள மனதோடு உட்கொள்ளுவதே அதற்கு ஏகமும், பிராதனமுமான ஆறுதலாகின்றது.
ஆண்டவராகிய சர்வேசுவரா ! சகல அரூபிகளையும் சிருஷ்ட்டித்தவரும் அவற்றிற்கு உயிர் கொடுத்து வருபவருமான நீர் எனது ஏழை ஆத்துமத்தில் எழுந்தருளி வரவும், உமது தெய்வீகத்தையும், மனுஷீகத்தையும் எல்லாம் கொண்டு அதன் பசியை ஆற்றவும் தயை புரிகிறீர் !. ஓ, இது எங்கள் மட்டில் உமக்குள்ள அன்பின் ஆச்சரியத்திற்குரிய கருணையல்லவா !.
ஆ ! தன் ஆண்டவரும் தேவனுமான உம்மை பக்தியாய் உட்கொள்ளவும், உம்மை உட்கொண்டு ஞான சந்தோசத்தால் பூரிக்கவும் பாத்திரமான ஆத்துமம் எவ்வளவோ பாக்கியமுள்ளது. அது உட்கொள்ளுகிற ஆண்டவர் எவ்வள்வோ மகத்துவமானவர். அது தன்னிடம் வரவழைக்கின்ற விருந்தாளி எவ்வளவோ அன்புள்ளவர். அது கைக்கொள்ளுகிற துணைவர் எவ்வளவோ அழகுள்ளவர் !. அது பெற்றுக்கொள்கிற சிநேகிதர் எவ்வளவோ பிரமாணிக்கமுள்ளவர் !. எவ்வளவோ அழகும், மேன்மையும் பொருந்திய பர்த்தாவை அரவணைத்துக் கொள்கிறது. ஆசிக்கப்படவும் நேசிக்கப்படவும் தக்கதான எவ்வஸ்துக்களையும் ( எல்லாவற்றையும், எல்லாரையும் ) விட இவர் நேசிக்கப்பட எவ்வளவோ தகுதியானவர் !.
மிக்க மதுரம் பொருந்திய என் அன்பரே, பரலோகமும், பூலோகமும் அவைகளின் அலங்காரம் அனைத்தும் உமது சந்நிதானத்தில் மவுனமாயிருக்கக்கடவன !. ஏனெனில் அவைகளில் புகழ்ச்சிக்குரிய அலங்காரமாயிருப்பதெல்லாம் உமது தாராளத்தின் கிருபையால் உண்டானதல்லாமல், அவை “ அளவிறந்த ஞானமுடைய “ உமது சர்வ அலங்காரத்திற்கு ஒருக்காலும் இணையாக மாட்டாது..
நன்றி : கிறிஸ்துநாதர் அநுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்
சிந்தனை : இந்த கிறிஸ்துநாதர் அநுசாரத்தில் திவ்ய நற்கருணைநாதர் குறித்த அதிகாரங்களில் அருட்தந்தை தாமஸ் கெம்பீஸ் எழுதியுள்ள ஒவ்வொரு வரிகளும் திரும்ப திரும்ப வாசித்து தியானிக்க வேண்டிய வரிகள். நற்கருணை நாதரை எப்படி அநுபவிப்பது ? எப்படி ஆராதிப்பது? அவரை எப்படி பயன்படுத்திக்கொள்வது குறித்து மிக அழகாக, தெளிவாக அனுபவப்பூர்வமாக தருகிறார்… ஒவ்வொரு பகுதியையும் தவற விடாதீர்கள்..
நம் பாவ நோயை நீக்க வந்த இந்த தெய்வீக திருமருந்தை நாம் பக்தியோடு தகுந்த தயாரிப்போடு முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !