நவம்பர் 13

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது சேசுநாதருக்கு மிகவும் உகந்த புண்ணியம் என்று காண்பிக்கிற வகையாவது.

தியானம்.

சேசுகிறிஸ்துநாதர் சுவாமி மெய்யான சர்வேசுரனாகையால் போன தியானத்திலே சொன்ன நியாயங்களெல்லாம் அவருக்குச் செல்லுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. மீண்டும் வேறே சில காரணங்களைக் கொண்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறது அவருக்கு எவ்வளவு பிரியமுள்ள புண்ணியமென்று சற்றுநேரம் தியானித்துப் பார்க்க வேணும்.

முதலாவது சேசுகிரிஸ்துநாதர்சுவாமி கெட்டுப்போன மனுஷரை மீட்டிரட்சிக்க என்ன செய்தாரென்று சற்றே நினைத்துப்பாருங்கள். சர்வத்துக்கும் வல்ல சுவாமிதாமே மனுஷனாகத் திருவுளமாகி, விடுவாசலின்றி, உதவி செய்வாரின்றி, ஒரு கெபியிலே பிறந்து ,எவ்வித துன்ப வருத்தங்களிலும் வளர்ந்து, நிந்தையும் அவமானமும்பட்டு. அரிதான வறுமையிலே முப்பது வருஷம் செலவழித்தபின்பு மகாப் பிரயாசையோடு எங்கும் சென்று, கணக்கற்ற புதுமைகளைச் செய்து, தம்முடைய உபதேசத்தை யாவருக்கும் கற்பித்தபிற்பாடு, வலிய மனதோடு தம்மைத்தாமே சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுத்து, சொல்லிலும் நினைவிலுமடங்காத அவமானங்களையும் பாடுகளையும் பட்டு, உயர்ந்த சிலுவையிலே அறையுண்டு, கடின மரணத்தையடைந்து தம்முடைய திவ்விய இரத்தத்தை சிந்தினாரல்லோ? இவையெல்லாம் செய்வதிலும் அநுபவிப்பதிலும் சேசுநாதர் நினைத்துத் தேடின பலன் என்ன ?

ஆத்துமாக்களை பாவத்தினின்றும் நித்திய நரகத்தினின்றும் மீட்டிரட்சித்து மோட்ச பேரின்பத்துக்குக் இட்டுக் கொள்ள வேணுமென்பதே அவர் நினைத்து தேடின பலனல்லாமல் வேறல்ல. அது இப்படியிருக்க , அந்த ஆத்துமாக்கள் மோட்சத்தை அடைந்தபிற்பாடு மாத்திரமே சேசு கிறிஸ்துநாதர்சுவாமி நினைத்துத் தேடின பலன் சம்பூரணமாய் நிறைவேறுமென்பது நிச்சயம்.

ஆனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மோட்சத்துக்குக்குப் போவதற்கு அவர்கள் தேவ நீதிக்குச் செலுத்த வேண்டிய பரிகார நிபந்தனை ஒரு விக்கினம்போலிருக்கிறதினால் இந்த விக்கினம் நீங்கிப்போகுமளவும் சுவாமி நினைத்த பலனைச் சரியாய் அடைகிறதில்லை.

அதனாலே அவர் தேடும் இரட்சிப்புக்கு ஒரு குறை இருந்தாற்போலே மனம் வருந்துவாரென்று சொல்லத்தகும். அது இப்படியிருக்க, சேசுகிறிஸ்துநாதர் பேரில் பக்தியுள்ளவர்கள் வேண்டிய பரிகாரக் கடனைத் தீர்த்து அவர்களை மோட்சத்துக்கு சேரப்பண்ணினால், சுவாமி தேடிய இரட்சிப்பும் அவர் நினைத்துத் தேடின பலனும் நிறைவேறுமென்று சொல்லக்கடவோம்.

இவ்விஷயம் அதிகமாய்த் தெளிவாகும்படிக்கு அப்போஸ்தலரான அர்ச் சின்னப்பர் சொல்லுகிறதைக் கேளுங்கள். அதாவது சேசுகிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறவைகளை அவருக்கு ஞான உடலாகிய திருச்சபையைக் குறித்து என் சரீரத்தில் நிறைவேற்றுகிறேன் என்றார்.

அப்படி சேசுகிறிஸ்து நாதருடைய ஞான உறுப்புகளாகிய இந்த உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுகிறவர்கள், சுவாமி பட்ட பாடுகளுக்குக் குறைவாயிருக்கிறதைத் தீர்த்துக் கொள்ளுகிறாற்போலே இருக்கிறார்களென்று சொல்ல வேனுமல்லவோ?

இரண்டாவது : சகல உலகங்களுக்கும் ஆண்டவராகிய _கிறிஸ்துநாதர் இவ்வுலக கடைசி நாட்களிலே எல்லா பலுவுரையும் நடுத்தீர்க்க வந்து நல்லவர்களைத் தமது வலது பக்கத்திலும், பொல்லாதவர்களைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவாரே. அப்போது அவர் தமது வலதுபக்கத்திலிருக்கிற நல்லவர்களை நோக்கி வசனிப்பதாவது நமது பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள். உலகம் உண்டான நாள் முதற்கொண்டு உங்களுக்கு நியமித்த இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள். ஏனெனில்: பசியாயிருந் தோம், அப்போது போசனம் கொடுத்தீர்கள். தாகமாயிருந் தோம், அப்போது பானங் கொடுத்தீர்கள். பரதேசியாயிருந் தோம், அப்போது நம்மை ஆதரித்தீர்கள். வஸ்திரமில்லாத வராய் இருந்தோம், அப்போது நமக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள். நோயாளியாய் இருந்தோம், அப்போது நம்மைச் சந்தித்தீர்கள். சிறைச்சாலையில் அடைப்பட்டிருந் தோம் அப்போது நம்மிடத்தில் வந்தீர்கள் என்பார்.

அப்போது நல்லவர்கள் அவருக்கு மறுமொழியாகச் சொல்லுவதாவது : ஆண்டவரே ! நீர் பசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்குப் போஜனம் அளித்ததும் , தாகமாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு பானம் அளித்ததும் எப்போது ? மேலும் நீர் பரதேசியாய் இருக்கக் கண்டு நாங்கள் உமக்கு வஸ்திரங் கொடுத்ததும் எப்போது? நீர் நோயாளியாய், அல்லது சிறைச்சாலையில் இருக்கக்கண்டு நாங்கள் உம்மிடத்திலே வந்தது எப்போது " என்பார்கள்.

அதற்கு ஆண்டவரான சேசுகிறிஸ்துநாதர் சுவாமி மறுமொழியாக "மிகவும் சிறியவர்களாகிய என் சகோதரரானவர்களில் ஒருவனுக்கு நீங்கள் அப்படிச் செய்தபோதெல்லாம் நமக்கே செய்தீர்களென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறோம்" என்பார்.

கிறிஸ்துவர்களே, சேசுகிறிஸ்துநாதரைக் குறித்து செய்யப்பட்ட உதவி சகாயம் எல்லாவற்றையும் சுவாமி அவ்வளவு வாழ்த்தி, அவைகள் தமக்கே செய்திருக்கிறார் போல பாராட்டி, அவைகளுக்கு வெகுமதியாக மோட்ச இராச்சியத்தைக் கொடுக்கிறாரே. அது இப்படியிருக்கையில் ,அழிந்துபோகிற சரீரத்துக்குச் செய்த சகாயங்களுக்கு அவர் அப்படி செய்யும் போது, அழியாத ஆத்துமாக்களுக்கு அவரைக் குறித்துச் செய்யப்பட்ட உதவி ஒத்தாசைகளுக்கு அதிகமாய்ச் சந்தோஷப்பட்டு மேலான வெகுமதி கொடுப்பாரென்கிறதற்குச் சந்தேகப்படுவாருண்டோ? ஆனதினால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்களுக்காகச் செய்யப்படுகிறதெல்லாம் சுவாமிக்கு அதிகப் பிரியப்பட்டு மனுஷனுக்கு அதிக வெகுமதி பெறுவிக்குமென்பது நிச்சயந்தான்.

ஆனாலும் சரீரத்துக்கடுத்த முன்சொன்ன நற்கிரியையெல்லாம் சர்வேசுரனைக் குறித்துச் செய்து அவைகளை உத்திரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுத்தால் அதிக பலனும் அதிக பிரயோஜனமுமாய் இருக்கும். இதெல்லாவற்றையும் தக்க கவனத்தோடு ஆராய்ந்துப் பாத்தால், உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் உங்களுக்கு அதிக பக்தி வரும் என்கிறதற்குச் சந்தேகமில்லை.

மீண்டும் சேசுகிறிஸ்துநாதர் சுவாமி முன் சொன்ன பிரகாரமே நல்லவர்களை வாழ்த்தி அவர்களுக்கு மோட்ச இராச்சியத்தைக் கட்டளையிட்ட பிற்பாடு பொல்லாதவர்களை நோக்கி நீங்கள் முன் சொன்ன நற்கிரியைகளைச் செய்யாதிருந்ததைப்பற்றிச் சபிக்கப்பட்டு நித்திய நரகத்துக்குப் போங்கள் என்பார் சரீரத்துக்கடுத்த நற்கிரியைகளைச் செய்யாதவர்களைச் சுவாமி நித்திய நரகத்துக்குத் தள்ளும் போது ஆத்துமத்தைச் சேர்ந்த நற்கிரியைகளைச்  செய்யாதவர்களுக்கு என்னத்தைக் கட்டளையிடுவார்?  இது இப்படி யிருக்க, நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒன்றும் செய்யாதிருப்பீர்களேயானால் சுவாமிக்கு என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்?

மூன்றவது: பரம கடவுளான சேசுகிறீஸ்துநாதர் சுவாமி சகலமான ஆத்துமாக்களை மீட்டிரட்சிக்கச் சிலுவையிலே அறையுண்டு படாத பாடுபட்டுத் தம்முடைய திவ்விய பிராணனைக் கொடுக்கப்போகிற சமயத்தில்தானே தாகமாயிருக்கிறேன் என்றார். சுவாமி அநுபவித்த இந்த தாகம் தண்ணீர்தாகமோ ?வேறே தாகமோ ?அவர் அநுபவித்த தாகம் அவர் ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் படுகிற மட்டற்ற ஆசையைக் காண்பிக்கிறதென்று வேதசாஸ்திரிகள் எல்லோரும் நிச்சயித்துச் சொல்லுகிறார்கள். சேசு கிறிஸ்துநாதர் சுவாமியுடைய திரு இருதயத்தில் பற்றி எரியும் இந்தப் பெரிய ஆசையானது, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்ப வீட்டில் தம்மிடமாக வரவேண்டுமென்கிற ஆசையாம் என்று சொல்லத்தகும். அந்த ஆத்துமாக்கள் தம்மிடம் சேருமளவும் அவருடைய ஆசை தீராது .

உங்களுக்கு அறிமுகமில்லாத பிச்சைக்காரன் ஒருவன் தாகமாயிருக்கிறேன் என்று கொஞ்சம் தண்ணீர் கேட்டால் கொடுப்பீர்கள் அல்லவோ ? உங்களுடைய இரட்சருமாய் உங்களை அத்தியந்த பட்சத்தோடு நேசிக்கிறவருமாய் உங்களை நடுத்தீர்ப்பவருமாயிருக்கிற உங்களுடைய சுவாமி உத்தரிக்கிற ஆத்துமாக்களின் இரட்சிப்பின் பேரில் தாகமாயிருக்கிறேனென்று உங்களிடத்தில் சொல்லும் போது நீங்கள் அவருடைய இந்தத் தாகம் தீரும்படிக்கு ஒன்றும் செய்யாதிருப்பீர்களோ? செய்யவேணுமென்றால் உங்களுடைய ஜெபதப தான தர்மங்களினாலே அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவீர்களாக.

கிறிஸ்துவர்களே ஒரு தோட்டத்தில் நல்ல மழை பெய்தபிற்பாடு பயிர் வகைகளெல்லாம் செழிப்பாய் வளருமல்லவோ? இப்போது சொன்ன நியாயங்கள் ஒரு அதிர்ஷ்டமான மழை போல் உங்கள் மனதிலே விழுந்து அதில் சுகிர்த பயிர்களாகிய உத்தம முயற்சிகளை விளையப்பண்ன வேண்டும்.

முதலாவது- உங்களைப் படைத்து இரட்சித்த சேசுநாதர் பேரில் விசேஷ பக்தி பட்சம் உங்களுக்கு உண்டானால், அவர் விரும்பினாற்போல உத்தரிக்கிற ஆத்துமாக்களை உங்களுடைய ஜெபங்களினாலும் தர்மங்களினாலும் மீட்டிரட்சிக்கப் பிரயாசைப்படுவீர்கள். அதை செய்யாமலும் அதன்பேரில் ஆசையில்லாமலும் இருக்கிறவன் சுவாமி பேரிலே பட்சமுள்ளவனென்றும், அவருடைய சீடனென்றும் பிள்ளையென்றும் சொல்லக் கூடுமோ ?சொல்லக்கூடாது.

இரண்டாவது- எத்தனையோ பேர்கள் தாங்கள் ஈடேறுவோமோ இல்லையோவென்று சந்தேகப்பட்டு அங்கலாய்த்து வருந்துகிறார்கள். மோட்சத்தை அடைவோமென்கிற உறுதியான விசுவாசத்தையும், தளராத நம்பிக்கையையும் உண்டாக்குகிறதற்குத் தர்மம் செய்வது உத்தம வழியாம். ஆயினும் செய்யக்கூடுமான தர்மங்களுக்குள்ளே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண் ணுவது மேலான தர்மமாகையால் அந்த ஆத்துமாக்களின் பேரிலுள்ள பக்தியானது மோட்சத்துக்குப் போவதற்கு ஒரு தப்பாத அடையாளமாம்.

மூன்றாவது- சுவாமி சிலுவை சுமந்து கபாலமலைக்குப் போகையில் அவருக்கு சிரேன் என்கிற சீமோன் உதவி செய்தாரே மீண்டும் பக்தியுள்ள ஸ்திரியான வெரோனிக் கம்மாள் அவருடைய திரு முகத்தைத் துடைத்தாரே. அவர்களைப் பாக்கியவான்களென்று வாழ்த்துவீர்களல்லவோ? ஆனால் நீங்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு வேண்டிய உதவி சகாயம் பண்ணுவீர்களேயாகில், அவர்களிலும் நீங்கள் பாக்கியவான்களென்று சொல்ல வேண்டியதுதான். ஆகையினால் சேசுகிறிஸ்துநாதர் பேரில் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருப்பார்களோ அவ்வளவு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் பக்தியுள்ளவர்களாயிருக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்.

சேசுவின் திரு இருதயமே ! எங்கள் பேரில் இரக்கமாயிரும் .

செபம்.

உயர்ந்த சிலுவையிலே உம்மை நித்திய பிதாவுக்கு உகந்த பலியாக ஒப்புக்கொடுத்த சற்குருவான சேசுவே, மரித்த மேற்றிராணிமார்களுடையவும் குருக்களுடையவும் ஆத்துமாக்களைக் கிருபையாய்ப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவர்களை மீட்டுச் சகல பாக்கிங்களையும் அநுபவிக்க உம்மிடத்திலே சேர்த்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.

பதிமூன்றாந் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது:

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாயிருக்க வேணுமென்று சிலபேர்களுக்குச் சொல்லுகிறது.

புதுமை

தியோப்பிலு சென்கிறவர் மூர்க்கப் பதிதனாயிருந்து சுருப வணக்கம் ஆகாதென்று சுரூபங்களை வணங்குகிற கிறிஸ்துவர்களை வெகு இடைஞ்சல் பண்ணின பிற்பாடு மரண வேளையில் மனந்திரும்பித் தன் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்து மரண த்தை அடைந்தார். ஆனால் தான் செய்த பாவங்களுக்கு தவத்தினால் வேண்டிய பரிகாரத்தைப் பண்ணக்கூடாததைப் பற்றி இந்தப் பரிகாரக் கடனை உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வேதனைப்பட்டுச் சொல்லவேண்டியதாயிற்று.

அவருடைய மனைவியான தெயோதோறாவென்னும் ராணியானவள் சத்தியவேதத்திலே கொஞ்சமாவது பிசகாமல் நிரம்பப் பக்தியுள்ளவளாயிருந்ததினாலே தம் புருஷன் மனந்திரும்பத்தக்கதாக மிகவும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாள். அரசன் செத்தப்பிற்பாடு அவர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே பொறுக்கப்படாத ஆக்கினைகளை அனுபவிக்கிறாரென்று அறிந்து அவருக்கு ஆறுதல் வருவிக்கத்தக்கதாக தான் திரளான கண்ணீர் விட்டு செபங்களைப் பண்ணினதுமல்லாமல் அரண்மனையில் இருக்கிறவர்கள் எல்லோரும் அரசன் ஆத்துமத்துக்காக செபிக்கப் பண்ணினாள் . மீளவும் கொன்ஸ்டாண்டிநோபிள் என்ற மகா நகரில் உள்ள சகல மடங்களிலும் செபங்களையும் பூசைகளையும் மற்ற வேண்டுதல்களையும் செய்யக் கற்பித்தாள் . அதல்லாமல் அப்பட்டணத்தில் உள்ள அதி மேற்றிராணியாரான  அர்ச் மேத்தொதியுஸ் என்கிறவர் எல்லாக் கோயில்களிலும் பொது செப பிரார்த்தனை நடக்கும்படி செய்தார் .  மேலும் ராணியானவள் இந்த ஆத்துமத்துக்காகப் பிச்சைக்காரருக்கு கொடுத்த தர்மம் எவ்வளவென்று சொல்லத்தகுந்தன்மையல்ல.

இவ்வளவு ஜெபங்களுக்கும் தர்மக்கிரியைகளுக்கும் திவிய பூசைகளுக்கும் சர்வேசுரன் இரங்கி அவருடைய கோபம் அமர்ந்து அரசனுடைய பரிகாரத்துடன் தீர்ந்து அவருடைய ஆத்துமம் மோட்சத்துக்குப் போனது என்றார். அக் கணத்திலேதானே அதிமேற்றிராணியாரானவர்  பெரிய கோவிலிலே சமஸ்த ஜனங்களுடன் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும் போது ஒரு தேவதூதன் வந்து அவருக்குச் சொன்னதாவது : அதிமேற்றிரானியாரே! நீர் செய்த செபங்கள் கேட்கப்பட்டன . அரசனுடைய ஆத்துமம் மன்னிப்பை அடைந்து மோட்சத்துக்குப் போனது ' என்றார் . அதே நேரத்திலே ராணியார் ஒரு காட்சியைக் கண்டு தான் செய்த செபங்களினாலும் குருக்கள் பண்ணின பூசையினாலும் அரசனுடைய உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதாக அறிந்தாள்.
இந்த சந்தோசமான சேதியினால் மனந்தேறி ராணியானவளும் மேற்றிராணியாரும், அப்பெரிய பட்டனத்துக்குடிகள்  எல்லோரும் சர்வேசுரனுக்குத் தோத்திரம்பண்ணி வெகு கொண்டாட்டம் செய்தார்கள்.

கிறிஸ்தவர்களே ! இப்போது சொன்ன ராணியானவள் தன் புருஷனான அரசனுடைய ஆத்துமத்துக்காக அவ்வளவு செபங்களைப் பண்ணி தர்மங்களைப் பொழிந்து அத்தனை திவ்விய பூசைகளை ஒப்புக்கொடுக்கச் செய்தாளே, நீங்கள் உங்களுடையவர்களின் ஆத்துமாக்களைக் குறித்து அவ்வளவு செய்ய முடியாதென்பது மெய்தான் . ஆயினும் அந்த ஆத்துமாக்களையும் மறவாமல் அவர்களுக்காகத் தினந்தோறும் ஜெபம் பண்ணி உங்களுடைய அந்தஸ்துக்குத் தக்க பிச்சைக் கொடுத்து, வருஷத்திலே இரண்டு மூன்று தடவையாகிலும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்யவேணுமென்று அறியக் கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும் ​​​​