அக்டோபர் 13

கர்த்தர் பிறக்கிறார்.

பெத்லகேம் ஊருக்கு வெளியே மாட்டுக் குடிலில் யாரைக் காண்கிறோம் ? பலவீனமான சிறு குழந்தை ; பரிதாபமான சூழலில், தனக்கு உதவி செய்ய முடியாத நிலையில் , மாட்டைக் குகையில் , எளிய மிருகங்களின் சுவாசமே , குளிரைப் போக்கும் தணலாகத் தாயிடம் பிறந்து தவிக்கிறார். இவர்தாம் நித்தியமானவர்; சர்வ வல்லபமுல்லவர் ; உலகத்தைச் சிருஷ்டித்தவர் ; ஆதியிலிருந்தே கடவுளோடிருந்த வார்த்தையான இறைவன் . இவர் மோட்ச மாட்சியிலும் மகிமையிலும் வந்திருக்கலாம் ; தெய்வீக கம்பீரமாய் உதித்திருக்கலாம்.

தாம் தெரிந்து கொண்ட அன்பின் பாதையை ஆதி முதலில் இருந்தே காட்டுகிறார் . ஈடேற்றமளிக்க வெற்றி மாலை  சூட வந்தார் . மானிட இரட்சகர்களெனப் பெருமையடித்துக் கொள்ளும் வெற்றியாளர்களைப் போலல்ல , இவருக்கு ஆயுதங்கள் சாந்தம், தாழ்ச்சி , கெஞ்சும் நேசம் . கடவுள் , சிருஷ்டிகர் , நீதிபதி என்ற தம் கௌரவத்தையும், பெருமையையும் பிறப்பிலிருந்தே மறைத்து  வைத்தார் ,மனிதர்களுடைய உள்ளத்தை வசீகரிக்க.

பெத்லகேமின் குழந்தை மனித சுபாவத்தை வானுற உயர்த்தினார் . தேவ சுபாவத்தில் வாதனைப் பட முடியாத கடவுளின் வாதனையைக் காட்டினார் . குளிரினால் குழந்தை நடுங்குகிறதா , கடவுள் தாம் நடுங்குகிறார் . தாயின் அமுதை குழந்தை பருகுகிறதா , கடவுள் தாம் பருகுகிறார். தாயும் சேயும் இருப்பது எவ்வளவு எளிய நிலை . இது முதல் ஏழைகள் மட்டில் மரியாதையும் , தரித்திரத்தின் மேல் அன்பும் , அபிமானமும் உலகில் உதித்தன.

அம்மா, தாயே ,உம் பெருமையை எவ்விதம் வருணிப்பேன் ? தரையும், நுரையும், தாரகையும் , பூமியும் , கடலும், நட்சத்திரங்களும்  தாழ்ந்து வணங்கி ஆராதிக்கும் ஆண்டவரைப் பெற்றெடுத்தீர் . மகிமையுள்ள ஆண்டவளே , வானிற்கு மேல் உயர்ந்தவளே, உன்னைச் சிருஷ்டித்தவருக்கே அமுதூட்டி ஆராதித்தவளே! வாழ்க !

"நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார் ! ". நமக்கு ஒரு மகன் வந்திருக்கிறார் . அவர் நம்முடையவர். முழுவதும் அவர் நமக்குச் சொந்தமானவர் . எல்லாரை விட  எல்லாவற்றையும் விட அவர் நமக்கு அதிக சொந்தம் . நல்லெண்ணத்தாலும் ஆசையாலும் தேவ நற்கருணை வழியாகவும் ஓயாமல் எப்பொழுதும் நம்மில் பிறக்கிறார் .

"உம்மை உண்டாக்கியவரை நீர் பிறப்பித்தீரே" அவரை ஆராதிப்போம் . நமக்குள்ளதைப் போன்ற சதையையும் , இரத்தத்தையும் , மனித சுபாவத்தை , மாமரி அவருக்களித்துள்ளார் . தேவ குமாரன் நமக்குச் சகோதரர் ஆனார் . அவர் நம் சகோதரர் . மகிழ்ச்சியால் துள்ளுவோம்.

வானரம் தான் எங்கள் கொள்ளுப்பாட்டன் ; குரங்கு தான் எங்கள் சகோதரன் என்று கூத்தாடும் மதி இழந்தோர் ," மரி, உம்மை உண்டாக்கினவரை நீர் பெற்றெடுத்தீரா? இதை நாங்கள் நம்புவோம் என்று கருதுகிறீரா ? உலக முழுவதையுமே உண்டாக்கிய  பெருமான் ஒரு பெண்ணின் கையில் தங்கி எங்களுக்குச் சகோதரர் ஆனார் என்ற கதையை நாங்கள் நம்ப முடியுமா? யுக யுகமாய் கோடி சூரியன்களை நாட்டுவித்த வல்லாளர் நாசரேத் கன்னிகையின் கரத்தில் குழந்தையாய்த் தவழ்கிறார் என்ற செய்தி நம்பத் தக்கதா? " என்று கேட்கலாம்

நித்திய காலமுள்ளவர் இன்று ஒரு நாளையக் குழந்தையாய் , மாமரி , உம் பரிசுத்த கரங்களில் தவழ்கிறார். தம் ஒரு மூச்சால் கோடானு கோடி கோளங்களை ஆட்டி அசைத்து , அவை தவறான வழியில் அணுவளவும் பிசகாமல் அனந்த காலம் நடத்திவரும் வல்லாளர் உம் அமுதை நாடி அழுகிறார் என்று ஆனந்தத்தோடு விசுவசித்து உம்மடியிலுள்ள பாலனின் அடி பணிந்து ஆராதிக்கிறோம்

"மகாப் பரிசுத்த பழுதற்ற கன்னிகையே , உம்மை எவ்விதம் புகழ்ந்தேத்துவது என்று எனக்கு தெரியவில்லை . ஏனெனில் , வானலோகங்களைத் தாங்கொணாதவரை உமது திரு உதரத்தில் தாங்கப் பெற்றீர் ."

கடவுளை மறந்த மனிதனின் புத்தி தான் எவ்வளவு கோணல் ! கன்னிப் பிறப்பு முடியாதென்ற சாஸ்திரிகள் தற்சமயம் தங்கள் ஆராய்ச்சிசாலையில் கன்னிப்பிறப்பைக் காட்டப் போவதாக தங்கள் அரிய புத்தியைக் கடன் கொடுத்து , தங்கள் பொன்னான காலத்தை இழந்து மண்டையை உடைத்துக் கொள்ளுகிறார்கள் . அவர்கள் பிரயாசை வீண்   -  ஒரே கன்னித்தாய் , ஒரே கன்னிப் பிறப்பு

இச்செயல் தேவனின் அரிய செயல். ஓ மாமரி , உமது திருமகனை உயர்த்தியருளும் . நாங்கள் அவரை நோக்கும் வண்ணம் அவரை உயர்த்தியருளும். அவருடைய தாழ்மையைக் கண்டு  -  நாங்கள் தற்பெருமையால் புத்தி மயங்கி மாளாவண்ணம், அவரைப் பார்த்து தாழ்ச்சியைக் கற்றுக் கொள்ளுவோம் .

 நாங்கள் அற்பத் தூசி . எங்களுக்குள்ள புத்திக் கூர்மையோ , அறிவுத் தேர்ச்சியோ , உடல் நலமோ எல்லாம் அவர் தந்த கொடை.அவரது பரிசுத்த பார்வை எங்கள் உள்ளங்களில் பாய்ந்து , அங்குள்ள ஈன பாவ நாட்டங்களையும் , இழிவான இச்சைகளையும் , அங்குள்ள நோயையும் , குஷ்டத்தையும் , அசங்கிதத்தையும் அவலட்சணத்தையும் கண்டு எங்கள் மேல் இரங்கி எங்கள் புத்தியைத் தெளிவித்து அக்குற்றக் குறை குப்பைகளைச் சுட்டெரிப்பதாக.

சூசையும் குழந்தையோடு கொஞ்சினார் . அவருக்கெல்லா சேவையையும் கடவுளுக்குச் செய்வது போலச் செய்தார் . அவருடைய அச்சய பிரமிப்பில் " உன்னதமானவரின் குமாரனை எனக்கு மகனாகக் கொடுத்தது யார் ? உமது தாயின் மேல் எனக்கு சந்தேகம் . அவளைத் தள்ளி வைக்க நினைத்தேன்  -  அவளுடைய உதரத்தில் விலையில்லாத மாணிக்கம் , என் நிலையைத் திடீரென உயர்த்தும் கருவூலம் இருந்ததை நான் அன்று அறிந்திலேன் "  "திவ்விய குழந்தாய், இயேசு குழந்தாய் " என்று கெஞ்சினார் , கொஞ்சினார்

செபம்.

மனித அவதாரம் எடுத்த அன்பே , எங்களிடத்தில் பிறந்தருளும் . எங்களுடைய சதையையும் , இரத்தத்தையும் எடுத்துக் கொண்டு , உமது மனுஷீகத்தை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் கண்களை எடுத்துக் கொண்டு உமது பார்வையை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் புத்தியை எடுத்துக் கொள்ளும் . உமது பரிசுத்த எண்ணங்களை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் பாதங்களைத் தூக்கி , உமது பாதையில் திருப்பியருளும் . எங்கள் கரங்களை ஏந்தி உமது செபத்துக்காக குவித்தருளும்

எங்கள் உள்ளங்களைக் கவர்ந்து அவைகள் நேசிக்க உமது நாட்டத்தை தந்தருளும், செபமாலை இராக்கினியே எங்களை மற்றொரு இயேசு ஆக்கும்.

ஆமென்.