நற்கருணை ஆண்டவர் முன் முதலில் பயம் வேண்டும்…
கிறிஸ்து நாதர் பேசுகிறார்..
“நாம் பரிசுத்தத்தனத்தை நேசிக்கிறவர். சர்வ அர்ச்சிஷ்ட்டத்தனத்தையும் (புனிதத்தனத்தை) தந்தருள்பவர் “
“நாம் சுத்த இருதயத்தை தேடுகிறோம். அதுவே நாம் இளைப்பாறும் இடம் “
“நமக்கு ஒரு பெரிய அசனசாலையை நன்றாக ஜோடித்து ஆயத்தம் செய். நமது சீடர்களோடு உன்னிடம் பாஸ்காவை கொண்டாடுவோம் “
”நாம் உன்னிடத்தில் தங்க உனக்கு மனதுண்டானால் உன் பழைய புளித்த மாவை ( துர்க்குணத்தை ) ஒழித்து விடு, உன்னிருதய வாசஸ்தலத்தைச் சுத்திசெய். “
உலக கவலைகளையும், துர்க்குணங்களின் சகல மயக்கத்தையும் அகற்றி விடு: கூரை மேல் “ ஊர்க்குருவி தனித்து உட்கார்ந்திருப்பது போல ” நீ தனித்து உட்கார்ந்து “ உன் பாவங்களை துக்க மனஸ்தாபத்தோடு நினைத்துக் கொள்.”
ஏனெனில் எந்தச் சிநேகிதனும் தன்னை நேசிக்கும் நேசனுக்கு அதிக மேலானதும், அதிக அலங்காரமுள்ளதுமான இடத்தை தயார் செய்கிறான்; அவ்விதம் தன் அன்பனை நேசிக்கும் விதம் விளங்குகின்றது.
“ ஆயினும் ஒரு வருஷ முழுமையும் வேறெதையும் சிந்திக்காமல் நீ ஆயத்தம் செய்துகொண்டே வந்தாலும் உன் சொந்த செயலின் பேறுபலனால் நீ தக்க ஆயத்தம் செய்யக் கூடுமானவனல்ல என்று அறிந்திரு. அதெப்படியெனில் ஒரு ஏழை, செல்வந்தவனுடைய விருந்துக்கு அழைக்கப்பட்டால் அந்த உபகாரத்திற்கு நன்றி செலுத்த அவன் தன்னைத் தானே தாழ்த்தி நன்றியறிந்த தோத்திரம் செய்யலாமே தவிர மற்றென்ன செய்யக்கூடும். அவனைப் போலவே நீயும் நமது விருந்திற்கு வர உத்தரவளிக்கப்படுகிறாய்.
உன்னால் கூடிய ஆயத்தம் செய், சுறுசுறுப்பாய்ச் செய்; உன்னிடத்தில் எழுந்தருளி வரச் சித்தமாயிருக்கிற உன் தேவனாகிய அன்புள்ள ஆண்டவருடைய திருச்சரீரத்தை, வாடிக்கையைப்பற்றியல்ல, ஆனால் பயத்தோடும், வணக்கத்தோடும், நேசத்தோடும் உட்கொள். உன்னை அழைத்தவர் நாமே, உன்னிடத்தில் குறையானதைத் தீர்ப்பவரும் நாமே.
நீ வந்து நம்மை உட்கொள்.
சிந்தனை : ஆண்டவர் கூறுவது நம் காதுகளுக்கு கேட்கிறதா “பயத்தோடும், வணக்கத்தோடும், நேசத்தோடும் உட்கொள் “ என்று. திவ்ய நற்கருணை ஆண்டவரிடத்தில் முன்பிருந்த பயம் எங்கே ? பக்தி எங்கே ? தாழ்ச்சி எங்கே ? விசுவாசம் எங்கே ? நன்றி எங்கே ?
ஓரு கத்தோலிக்கக் கிறிஸ்தவன் மட்டும் நற்கருணை ஆண்டவரைக் கண்டுபிடித்து விட்டால் அவன் ஆன்மீக நிலையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் ஓர் உயர்வான தலை சிறந்த இடத்திற்கு முன்னேறிவிடுவான்…
ஆனால் ‘கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக‘ விசுவாசம் தேய்ந்து, பயம் தேய்ந்து, பக்தி தேய்ந்து, தாழ்ச்சி தேய்ந்து நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். சர்வேசுவரனைப் பற்றி பயம் இல்லாமல்,
1. பக்தியில்லாமல்
2. பயமில்லாமல்
3. கண்ட கண்ட ஆடை உடுத்திக்கொண்டு ( சில பல பெண்கள், சில ஆண்கள், பல இளைஞர்கள் )
4. தலைக்கு முக்காடிடாமல் (பெண்களுக்கு மட்டும்)
5. காலில் செருப்பை போட்டுக்கொண்டு ( சிலர், பலர்)
6. தாச்சியில்லாமல்
7. ஏதோ ஒரு பொருளை வாங்க வருவது போல்
8. தலைக்கர்வத்தோடு (சிலர்)
9. கைகளில் அல்லது இடதுகையில் ( சிலர், பலர்)
10. தகுந்த தயாரிப்பின்றி,
11. நன்றி கெட்டத்தனத்தோடு,
அவரை வாங்குவதால்தான் வேறு பயங்கள் நம்மைத் தொற்றிகொள்கிறது. நம் வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தை பற்றி, நம் உடல் நிலையைப் பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறோம்.. பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பயத்தை தீர்ப்பவரை பக்கத்தில் வைத்துக்கொண்டே பயத்தில் வாழ்கிறோம்..
ஆண்டவர் நம்மை பார்த்து கேள்வி கேட்கும் நாள் வரும் முன்னே திவ்ய நற்கருணை ஆண்டவரை நல்ல பாவசங்கிற்தனம் செய்து, தகுந்த தயாரிப்போடு, முழங்காலில் நின்று பயபக்தியோடு நாவில் வாங்குவோம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !