உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிரயாசைப்படுவது மகிமையுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற வகையாவது.
தியானம்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் உங்களுக்கு மேன்மேலும் பக்தி வரத்தக்கதாக அந்த ஆத்துமாக்களுடைய மகிமை எவ்வளவென்று கொஞ்சமாகிலும் காண்பிக்கவேணும். இந்த மகிமையை அறிவதற்கு முதலில் மனுஷருடைய ஆத்தும்ம் எதுவென்று அறியவேணும்.சகல உலகங்களை உண்டுபண்ணினவருமாய்ச் சகலத்தையும் அழிக்க வல்லவருமாயிருக்கிற சர்வேசுரன் அந்த ஆத்துமத்தை தமது சாயலாக படைத்ததன்றியே அந்த ஆத்துமம் தமக்குண்டான சகல நன்மைகளையும் அளவின்றி முடிவின்றித் தம்மிடத்திலே அநுபவிக்கும்படியாய் உண்டு பண்ணினார்.
சூரியன் சந்திரன் நவக்கிரகங்கள் முதலான சகல நட்சத்திரங்களையும் பூமண்டலத்திலுள்ள சகலத்தையும் மனுஷனுக்காகத்தானே சர்வேசுரன் படைத்தாரென்கிற தினாலே எல்லாவற்றுக்கும் மேலான மகிமையை மனுஷன் கொண்டிருக்கிறானென்று சொல்லக் கடவோமல்லவோ? மேலும் மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமையை அதிகமாய் அறியத்தக்கதாக அந்த ஆத்துமத்தை மீட்க சேசுநாதர் சுவாமி செய்ததையும் பட்டதையும் இன்னும் சற்றுநேரம் யோசிக்கவேணும். சத்தியமாகவே அந்த ஆத்துமத்தை இரட்சிக்க அவர் மெய்யான கடவுளாயிருந்து மனிதனாய்ப் பிறந்து அளவில்லாத பலனுள்ளதாகிய தாம் பட்ட நிந்தை அவமானங்களையும், வாதை வேதனைகளையெல்லா, துேம் அதற்கு விலையாகத் தந்தருளினாரல்லவோ?
மயக்கமுமின்றி, இருளுமின்றி, தெளிந்த காட்சி ஞானமுடையவராகிய சுவாமி இந்தப்படி ஆத்துமத்தை மதித்தபின்பு நாம் அதன் மாட்சிமையைக் காட்ட வேறொரு நியாயம் தேடவேணுமோ? ஆதலால் அளவில்லாத பலனுள்ள தமது பாடுகளை ஓர் ஆத்துமத்துக்கு விலையாக ஆண்டவர் வலிய மனதோடு கொடுத்திருக்க, நாம் அதை மதிக்கத்தக்கதாக அதிகமாய்ச் சொல்லமுடியாது.
மனுஷருடைய ஆத்துமத்தின் மகிமை பொதுப்பிரகாரமாய் அப்படியிருக்க, உத்தரிக்கிற ஆத்துமாக்களுடைய பெருமை அதற்குமேற்பட்டதென்றே சொல்ல வேண்டிய தாகும். அதெப்படியென்றால், ஆத்துமத்தில் இருக்கக் கூடுமான வரங்களுக்குள்ளே இஷ்டப்பிரசாதமானது எல்லாவற்றிலும் உயர்ந்த வரமென்பது நிச்சயம். அந்த ஆத்துமாக்களெல்லாம் இஷ்டப்பிரசாதத்தோடே உயிர்விட்டு, தேவசிநேகத்தில் பிசகக்கூடாமல் நிலைமையைக் கொண்டிருக்கிறார்களல்லவோ? அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன் தீர்ந்தவுடனே சர்வேசுரனுடனே பிரத்தியகூடிமான தரிசனத்தை அடைந்து, மோட்ச பேரின்ப இராச்சியத்தில் செஞ்சுடைரைப் போல் பிரகாசித்து, இராஜாக்களைப் போல் பிரதாபக் கீரிடம் சூட்டப்பட்டு, சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து என்றென்றைக்கும் வாழ்வார்களென்பது தப்பாத சத்தியமாம்.
இப்படியாகையில் இப்பேர்ப்பட்ட ஆத்துமாக்களுக்காக வேண்டிப் பிரயாசைப்படுவது மகா மகிமையென்றும் சொல்லவேணுமல்லவோ? மனுஷர் இவ்வுலகத்தில் செய்யத்தகும் தொழில்களுக்குள்ளே குருக்கள் செய்யும் தொழிலே மேலான தொழிலென்று அர்ச் கிறகோரியூசென்னும் பாப்பானவர் சொல்லியிருக்கிறார். அதேதெனில், மற்றத் தொழில்களெல்லாம் அழிந்துபோகிற சரீரத்தைச் சார்ந்த தொழில்களாயிருக்கையில், அழியாத ஆத்துமாக்களை விசாரிக்கும் தொழில் குருக்களுடைய தொழிலாம். சேசுநாதர் சுவாமி செய்த தொழிலும் இந்தத் தொழில்தான். குருக்கள் எல்லோருக்கும் புத்திமதிகளைச் சொல்லி, ஆத்துமம் கெட்டுப்போகாதப்படி பாவத்தை விலக்கவும், புண்ணியத் தைச் செய்யவும் போதித்துக் கொண்டு வருகிறார்கள். மீண்டும் ஆத்துமத்தின் பல அவசரங்களுக்கு ஆண்டவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஏழு தேவதிரவிய அநுமானங்களையும் அளிக்கிறார்களல்லவோ?
மேலும் சேசுநாதர் சுவாமி அடைந்த மட்டில்லாத பலனுள்ள திவ்விய மரணத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் மோசம் போகாதபடிக்கு, குருக்கள் பலரும் வீடுவாசல் காணிபூமியை விட்டு, சகலத்தையும் துறந்து வருத்தங்களுக்கும் சாவுக்கும் முதலாய் அஞ்சாமல், அன்னிய தேசங்களுக்குப் போய்மிக்க பிரயாசையும் படுகிறார்களன்றோ? ஆயினும் அவர்கள் நினைத்த பலன் சரிவரக் கிடைக்குமோ கிடைக்காதோ சந்தேகம். அதெப்படியென்றல், மனுஷனானவன் இவ்வுலகத்தில் இருக்கும் வரையில் வேண்டும் வேண்டாமென்கிற மனச்சுதந்திரத்தைக் கைக் கொண்டிருக்கிறான் என்கிறதினால், நன்னெறியில் உறுதியாய் நிலைக்கொண்டு மோட்சத்தை அடைவானோ, அல்லது மனங் கெட்டுப் புத்தி மயங்கிப் புண்ணிய வழியைவிட்டு அவலமாய்ச் சாவானோவென்பது தெரியாத காரியமாயிருக்கும்.
அதனால் இவ்வுலகத்திலுள்ள ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவது நல்லதாயினும், நமக்கு இந்தப் பிரயாசை பலனுள்ளதாயினும், அது அவ்வாத்துமாக்களுக்கு உதவுமோ உதவாதிருக்குமோ தெரியாது. ஆனால் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவது அப்படியல்லவே. அந்த ஆத்துமாக்கள் இஷ்டப்பிரசாதத்திலும் தேவ சிநேகத்திலும் ஸ்திரப்பட்ட நிலைமையென்கிற பரம வரத்தைக் கொண்டிருக்கிறார்களன்கிறதினாலே ஒருபோதும் பாவத்தைச் செய்யவுமாட்டார்கள், ஒருபோதும் கெட்டுப் போகவுமாட்டார்கள். என்றென்றைக்கும் மோட்சத்தில் வாழ்வார்களென்பது நிச்சயமாகையால், அவர்களைக் குறித்துச் செய்வதெல்லாம் செய்பவர்களுக்கும் பலிக்குமல்லாது அந்த ஆத்துமாக்களுக்கும் உதவுமென்கிறது தப்பாத சத்தியமாம்.
மேலும் சுவிசேஷச்திலே எழுதின பிரகாரம் நமது இரட்சகரான சேசுநாதர்சுவாமி தம்முடைய சிநேகிதனான இறந்துபோன லாசரென்பவருக்காக அழுதார். பின்பு இவர் அவரை அடக்கம்பண்ணப்பட்ட கல்லறைக்குப் போய் அதை மூடியிருந்த கல்லை எடுக்கச்சொல்லி, லாசரே, வெளியே வா என்று சத்தமாய்க் கூப்பிட்டார். அக்கணமே இறந்தவர் உயிர்த்துக் கல்லறையைவிட்டுப் புறப்பட்டு வந்தார். சுவாமி அப்படிச் செய்தது பெரிய புதுமை என்றாலும், நாம் உத்தரிக்கிறிஸ்தலத்திலுள்ளோருக்கு பண்ணும் சகாயம் அதற்கு மேற்பட்டாற்போலே காணப்படும். அதேதெனில் இந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருக்கிறவன், அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக் கடனைத் தன்னுடைய பிரயாசையால் தீர்த்து, அவர்களைக் கூப்பிட்டு நீங்கள் சிறைப்பட்டிருக்கிற இந்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு மெய்யான ஜிவியமாகிய நித்திய பேரின் பத்துக்குப் போங்கள் என்கிறாற்போல அவன் யோசிக்கத்தக்கதாயிருக்கிறது.
அந்த ஆத்துமாக்களோவென்றால் உத்தரிக்கிற ஸ்தலத்தை விட்டு மிகுந்த சந்தோஷத்தோடும் மகா பிரதாபத்தோடும் மோட்சத்துக்குப் போகையில், தங்களை மீட்டவனை வாழ்த்திக் கொண்டாடி ஆசீர்வதித்து அவனுக்காக ஆண்டவரை மன்றாடுவார்களல்லவோ ?லாசரென்பவர் சேசுகிறிஸ்துநாதர் சுவாமியால் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அவர் சில வருஷத்துக்குப் பிற்பாடு மரணத்தை அடைந்தார். மீட்கப்பட்ட உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில், அநவரதகாலம் குறையுமின்றி முடிவுமின்றி வாழ்ந்து, திருப்தியடைந்து செல்வ பாக்கிய மெல்லாவற்றையும் அனுபவித்துச் சர்வேசுரனிடத்தில் ஜீவித்துக் கொண்டிருப்பார்கள். உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களே ! நீங்கள் செய்வது எவ்வளவு பெரிதென்று இதனாலே அறிந்துக் கொள்ளுங்கள்.
கடைசியிலே சேசுகிறிஸ்துநாதர் சுவாமி சிலுவையில் அறையுண்டு மரித்தவுடனே அவருடைய பிரதாபமுள்ள திரு ஆத்துமம் பாதாளங்களில் இறங்கி, அங்கே இருந்த புண் ணியாத்துமாக்களுக்குத் தம்மைக் காண்பித்து, அவ்விடத்திலேயிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு தம்முடனே மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டுப் போனாரல்லவோ? இதை நாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மீட்கும்போது செய்யுந் தொழிலும் அதுவே, இதற்கு மேற்பட்ட தொழிலுண்டோவென்று சொல்லுங்கள். ஆனால் அதுக்கும் இதுக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டென்பது மெய்தான். நம்மாலே மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் பேரின்ப வீட்டுக்குப் போகும்போது நாம் இந்தக் கண்ணிர் நிறைந்த கணவாயிலே கொடிய சத்துருக் களுக்குள்ளே கிடக்கிறோமே.
ஆயினும் பிரதாபம் நிறைந்த அந்த ஆத்துமாக்கள் பேரின்பமாய் வாழும்போது தங்களை மீட்டவர்களை மறப்பார்களோ? மறதியானது இப்பூமியிலே இருக்கிறதல்லாமல் பரலோகத்திலே இல்லை. ஆனதினாலே மோட்சவாசிகளான அந்த ஆத்துமாக்கள் நம்மை நினைத்துத் தாபரித்துக் கை தூக்கித் தங்களிடத்தில் சேர்ப்பார்ளென்பது உறுதியாய் நம்பத்தகும் விஷயமாம். ஆகையால் அந்த ஆத்துமாக்களின் பேரில் அதிகதிகமாய்ப் பக்திவைக்க வேணுமென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
சேசுவின் திரு இருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
செபம்
ஜீவியர்களுக்குயிரும் மரித்தோர்களுக்கு நம்பிக்கையும் உம்மை விசுவசிக்கிறவர்களுக்கு ஈடேற்றமுமாயிருக்கிற சர்வேசுரா! ஸ்திரி பூமான்களான விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பை அடைந்து தேவமாதாவினுடைய உதவியினாலும், சகலமான மோட்சவாசிகளுடைய வேண்டுதலினாலும் நித்திய பிரகாசத்தையும், நித்திய சமாதானத்தையும் கைக்கொள்ளச் செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
பதினைந்தாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து முப்பத்து மூன்று மணிச் செபம் செய்கிறது.
புதுமை
அர்ச். தெரேசம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வெகு பக்தியுள்ளவளாயிருந்ததினாலே அந்த ஆத்துமாக்களுக்கு இளைப்பாற்றியை வருவிக்கத்தக்கதாக அநேக ஜெபங்களையும், தவங்களையும் பண்ணிக்கொண்டு வந்ததுமல்லாமல், தாம் உண்டுபண்ணின சபையிலே உட்பட்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் அந்த ஆத்துமாக்களுக்காகப் பிரயாசைப்பட வேணுமென்று கற்பித்தாள்.
ஒரு வருஷம் உத்தரிகின்ற ஆத்துமாக்கள் திருநாளில் அந்த ஆத்துமாக்களைக் குறித்துச் செபம் பண்ணும் போது, மனுஷருக்கும் சர்வேசுரனுக்கும் சத்துராதியாயிருக்கின்ற துர்மனப் பசாசு அவளுக்குப் பல பராக்குகளை வருவிக்க முயன்றது. ஆனால் அந்தப் புண்ணியாத்துமாவான கன்னியாஸ்திரியானவள் தேவ கிருபையைக் கொண்டு
துஷ்டப் பசாசைத் துரத்திச் செபத்தைக் குறைவின்றி முடித்துவிட்டாள். ஜெபம் முடிந்தவுடனே அந்த செபங்களுக்கு. பலனாக அநேக ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டிரச்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதைக் கண்டாள்.
மன்ரசாவென்னும் ஒரு பிரபுவான வர் வல்ல தொலித்தென்ற பட்டணத்தில் தேவமாதாவின் பேராலே அர்ச். தெரேசம்மாள் தம்முடைய சபையைச் சேர்ந்த மடமொன்று ஸ்தாபிக்கும்படியாக, அவளுக்கு ஒரு நல்ல வீட்டையும், நேர்த்தியான தோட்டத்தையும் கொடுத்தார். மீண்டும் தமக்கு யாதொரு பொல்லாப்பு சம்பவிக்குமோவென்று பயந்து அந்த மடத்தைச் சீக்கிரமாய் முடிக்கவேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்தப் பயம் சர்வேசுரனாலே அவருக்கு வந்ததென்று நினைக்கத்தக்கதாயிருக்கின்றது. ஏனென்றால், சில நாட்களுக்குப் பிற்பாடு தூரமாயிருக்கையில் குருக்கள் இல்லாத இடத்திலே பாவசங்கீர்த்தனமில்லாமல் திடீரெனச் செத்தார். அவர் அதிக ஆஸ்தியுள்ளவருமாய் மகிமை சிலாக்கியமுள்ளவருமாய் இவ்வுலக செல்வ பாக்கியத்தைத் தேடுகிறவருமாயிருந்ததுமல்லாமல், அவருடைய நடத்தை நல்ல கிறிஸ்துவனுடைய நடத்தையல்ல.
ஆகையினாலே அர்ச் தெரேசம்மாள் அவர் செத்த சேதியைக் கேட்டு அவருக்கு சர்வேசுரன் நல்ல தீர்வையிட்டிருப்பாரோ இல்லையோவென்று அறியாததினாலே வெகு கவலைப்பட்டு அவருடைய ஆத்துமத்துக்காக திரளான கண்ணிர் சிந்திச் செபித்துக் கொண்டாள். அவள் செபம் பண்ணுகையில் சேசுகிறிஸ்துநாதர் அவளுக்குத் தோன்றி, அந்த துரை தேவமாதாவின் பேராலே ஒரு மடத்தை உண்டாக்க வேண்டியவைகளைக் கொடுத்திருக்கிறபடியினாலேயும் தேவமாதா அவனுக்காக வேண்டிக்கொண்டிருக்கிற படியினாலேயும் அவன் சாகிற வேளையில் உத்தமமனஸ்தாபப்பட்டு நித்தியநரகத்துக்குத் தப்பினானென்றும், ஆனால் அம்மடத்தில் முதல் பூசை செய்யப்படும்வரையில் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவன் வெகு வேதனைப்படத் தீர்வையிடப்பட்டானென்றும் அறிவித்தார்.
அதை அர்ச். தெரேசம்மாள் கேட்டு அந்த மடம் சீக்கிரமாய் முடியவும், அதில் திவ்விய பூசை தாமதமில்லாமல் செய்யப்படவும் வெகு பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தாள் . அவள் எந்தளவு பிரயாசைப்பட்டாலும் வேலை சீக்கிரமாய் முடிந்தபாடில்லை .அப்போது சேசுநாதர் அவளுக்கு தரிசனமாகி அந்த ஆத்துமம் வெகுவாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப் படுகிறதினாலே நாம் கற்பித்ததைச் சீக்கிரமாய்ச் செய்யவேணுமென்றார்.
அப்போது கன்னியாஸ்திரியானவள் மடத்துக் கோவில் இன்னம் முடியாதிருந்தாலும் ஓர் அறையிலே வேண்டிய முஸ்திப்புப் பண்ணி அதில் திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கப்பண்ணினாள். அவள் திவ்விய நற்கருனை வாங்குகிற நேரத்தில் மேற்சொன்ன துரையினுடைய ஆத்துமம் மிகுந்த மகிமைச் சந்தோஷத்தோடு அவளுக்குக் காண்பித்து, நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணி, தாம் மோட்சத்துக்குப் போகிறதாக அவளுக்கு அறிவித்தது . அதைக் கண்டு அந்த அற்சிஷ்டவள் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்து அவ்வளவு தயை பண்ணின சர்வேசுரனை வாழ்த்தினாள்.
கிறிஸ்துவர்களே, அர்ச்சியசிஷ்டவர்கள் எல்லோரும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்களாய் இருந்தார்களே. நீங்களும் அப்படித்தானே இருக்கவேணும்.
தேவமாதாவைக் குறித்துச் செய்த தர்மத்தினால் மேற் சொன்ன துரையானவர் நித்திய நரகத்துக்குத் தப்பினாரென்று கேட்டீர்களே, நீங்களும் நித்திய நரகத்துக்குத் தப்பத்தக்கதாக தேவமாதாவின் பேரில் பக்தியாயிருக்கிறது மல்லாமல் அவளைக் குறித்துச் சில தர்மங்களைச் செய்யவேணும்.
மேற்சொன்ன துரையினுடைய ஆத்துமம் திவ்விய பூசை நடந்த பிற்பாடு மாத்திரமே உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்கப்பட்டு நித்திய பேரின்ப விட்டுக்குப் போனது. இதனால் ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யக்கூடுமான எல்லா நற்கிரியைகளுக்குள்ளே திவ்விய பூசையே சிறந்ததாயிருக்கிறபடியினாலே, உங்களால் கூடினமட்டும் அடிக்கடி திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்க வேணுமென்று அறியக்கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
நவம்பர் 15
Posted by
Christopher