அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 16

புனித சூசையப்பர் காணாமல் போன இயேசுவை கோவிலில் கண்டதை தியானிப்போம்.

தியானம்.

பழைய உடன்படிக்கை மற்றும் வேத நூல் படி ஆண்கள் எல்லோரும் வருடந்தோறும் வரும் மூன்று பெரிய திருவிழாவிற்கு ஜெருசலேம் ஆலயம் சென்று வழிபட வேண்டும். இவ்வழக்கத்திற் கேற்ப புனித சூசையப்பர் இயேசுவையும் மரியன்னையையும் அழைத்துக் கொண்டு வந்து செபிப்பார்.

இயேசுவுக்கு பனிரெண்டு வயதாகும்போது அவ்வாறே சென்றனர். பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு வழிபாட்டினை முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பினர். ஆனால் இயேசு மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். ஆனால் புனித சூசையப்பரும் மரியன்னையும் இயேசு தமது உறவினர்களுடன் வந்து கொண்டிருப்பார் என எண்ணி ஒருநாள் பயணத்தினை கடந்தனர். இரவில் தங்குமிடத்தில் அவரைத் தேடினார்கள், அவர் கிடைக்கவில்லை. மிகவும் பயந்து கவலை அடைந்தனர். விரோதிகளால் தாக்கப்பட்டு விட்டாரா என அறியாமல் தவித்தனர். மீண்டும் ஜெருசலேம் திரும்பிவந்து பல இடங்களிலும் தேடினர்.

மூன்று நாட்களாகியும் இயேசு கிடைக்கவில்லை. மிகுந்த வேதனை அடைந்தனர். இறைவனின் ஆலயத்திற்குள்ளேயும் பெற்றோர்கள் சென்று தேடலானார்கள். அப்போது அங்கே இயேசு வேதநூல் வல்லுநர்கள் நடுவே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அவர்களுக்கு வேதநூல்களை விளக்கியும் வினா எழுப்பியும் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். வேதநூல் அறிஞர்கள் இவரின் ஞானத்தை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த மரியன்னையும் புனித சூசையப்பரும் மகிழ்ச்சியடைந்தனர். மரியன்னை மகனிடம் உன்னைக் காணாது உனது தந்தையும் நானும் எவ்வளவு கவலையடைந்தோம், ஏன் இவ்வாறு செய்தாய் எனக் கேட்டதும், நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள். நான் தந்தையின் வீட்டில் தந்தையின் பணியினை செய்து கொண்டிருப்பேன் என உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார். என்றாலும் பின்னர் அவர்களோடு புறப்பட்டு போய் கீழ்ப்படிந்து இருந்தார்.

புனித சூசையப்பரும் மரியன்னையும் பழைய உடன்படிக்கையின் கட்டளைகளை தவறாது கடைப்பிடித்தது போல் நாமும் நம் வாழ்வில் அவற்றினை கடைப்பிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, கடன் திருநாள்களை கடைப்பிடிப்பது போல் இயேசுவின் பிறந்தநாள், பாஸ்கா திருவிழா, பரிசுத்த ஆவியின் நாட்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் மட்டும் ஆலயம் சென்றால் போதுமென்று இராமல் மனைவி, மக்கள், வேலைக்காரர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். கோயிலில் சென்று செபிக்க வாய்ப்பு அளிக்கவும் வேண்டும். இயேசுவை தம்முடன் காணாததால் மரியன்னையும் புனித சூசையப்பரும் பெரிதும் கவலை அடைந்தனர். நாம் பாவத்தால் இயேசுவை இழந்து போனாலும் கவலைப்படாது ஆடிப்பாடி மகிழ்ச்சியாய் இருக்கிறோம். உயிரற்ற பிணத்தைப் பார்த்து அழும் மனிதன் பாவத் தால் இறந்த ஆத்துமாவைப்பற்றி அழுவதை காணோம். உடலைவிட ஆன்மாவே பெரிது என புனித அகுஸ்தினார் எழுதியுள்ளார்.

ஒப்புரவு அருட்சாதனம் மூலம் நாம் இழந்த இயேசுவை மீண்டும் பெறலாம் என்பதை அறிந்தும் உடனே செய்பவர்களில்லை. கொடிய வியாதிக்கும், நல்ல பாம்பின் கடிக்கும் உடனே மருந்து சாப்பிடாவிட்டால் என்ன நிகழும் என்பதை அறிந்து உடனே மருந்து சாப்பிடுவர். ஆனால் சாவான பாவத்தை செய்தவர்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை பெற காலங்கடத்துவர். அப்போது திடீரென மரணம் நிகழ்ந்தால் மன்னிப்பு பெறாவிட்டால் நரகத்திற்கல்லவா செல்லவேண்டியதிருக்கும். இப்படி நமக்கு நிகழாதவாறு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒப்புரவு அருட் சாதனத்தினை தவறுகள் செய்த போதெல்லாம் அடிக்கடி பெறுவோம்.

இயேசுவை அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினாலும் இறுதியில் ஆலயத்தில்தான் கண்டார்கள். நாமும் ஒப்புரவு அருட்சாதனத்தை குருவிடமிருந்து பெற்று திவ்விய நற்கருணையை உட்கொண்டு இயேசுவை மீண்டும், மீண்டும் நம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும்.
சகல வேதநூல்களையும் அறிந்தவராக இயேசு இருந்தபோதும் வேதநூல் வல்லுநர்களிடமிருந்து வேதங்களை கேட்டறிந்தார். அதனால் நாமும் மறைநூல், நற்செய்தி நூல் இவற்றினை நாமும் படித்து நம்மைச் சார்ந்தவர்களையும் படிக்கச் செய்வோமாக! புதுமை
படிப்பறிவில்லாத ஒருவன் மற்றொருவனுக்கு சேவை செய்து வந்தான்.

அவன் எல்லாவற்றிலும் புனித சூசையப்பரை நன்மாதிரிதையாகக்கொண்டு வாழ்ந்து வந்தான். அதுதான் அவன் பெற்ற கல்வியும் வேத நூலுமாகும். தான் செய்யும் வேலையிலும், செபத்திலும் அவரையே நினைத்து அவரைப்போல் இருக்க முயற்சி செய்வான். அதனால் அவன் தன்னுடைய உடலை ஒறுத்து, சிறு தவறுகளைக்கூட செய்யாமல் புண்ணியங்களை மட்டுமே செய்து வாழ்ந்தான். வேதங்களையும், பத்தி, புண்ணியங்களையும் வேதநூல் வல்லுநர்களைவிடவும் அதிகமாக தெரிந்து வைத்திருந்தான். ஆனால் எந்தவித பெருமையும் கொள்ளாது தாழ்ச்சி, பொறுமையோடு தன்னுடைய நிலைக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தான்.

ஒருநாள் இயேசுசபை அருட்பணியாளர் இவரோடு சேர்ந்து பயணம் செய்தபோது இவரது அடத்தத்தையும் நற்பண்புகளையும் தண்டு, புண்ணியங்களில் வானதூதர்களைப்போல் இருப்பதையும் வேதங்களில் முழுவதும் தேர்ச்சிப் பெற்றவனாக இருப்பதை கண்டு இம்மனிதரிடத்தில் அவனைப்பற்றி விசாரித்தான்.

அதற்கு அம்மனிதன் நான் தாழ்வான அந்தஸ்தில் பிறந்ததால் எழுத்து, கல்வி அறிவு பெற முடியவில்லை. ஆனால் தந்தையாகிய தூய சூசையப்பரை . நினைப்பதும் அவரது செயல்களை வாழ்வில் கடைப்பிடிப்பதும் தான் எனக்கு கல்வி மற்றும் மறைநூல் ஆகும். அவர் எனக்கு ஆதரவும் அடைக்கலமாகவும் இருக்கிறார் என்றான்.

புனித சூசையப்பரை நம்பி அவர் வழியில் செல்ல முயற்சிப்பவர்கள் | எப்போதுமே ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் ஞானத்திலும் புண்ணியத்திலும் வளர்ந்து மோட்சத்தை அடைவார்கள்.

நாமும் நமது நிலைக்குரிய வகையில் புனித சூசையப்பரை நினைத்து புனிதராக முயற்சி செய்வோம். (3 பர், அரு, பிதா)

செபம்

இயேசு காணாமல் போனதால் அளவில்லாத துன்பப்பட்ட தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை பக்தியோடு வணங்கி புகழ்கிறோம். மூன்று நாட்களாக இயேசுவை தேடினீரே, எத்தனையோ பேர் சாவான பாவத்தில் மூழ்கினாலும் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று மீண்டும் இயேசுவை தேடுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது நாங்கள் உடனே மனம் வருந்தி காலந்தாழ்த்தாது ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற அருள் புரியும். இயேசு காணாமல் போனதை நினைத்து வருந்திய உம்முடைய பக்தர்களாயிருக்கிற நாங்கள் சாவான பாவத்தில் சாகாதபடி உதவி செய்தருளும் என உம்மை நோக்கி தயவாக மன்றாடுகிறோம். ஆமென்.

அடிக்கடி சொல்ல வேண்டிய செபம்

இயேசு காணாமல் போனதால் கவலைப்பட்ட புனித சூசையப்பரரே! பாவிகளை மனந்திருப்பியருளும். காணாமல் போன இயேசுவைத் தேடிய புனித சூசையப்பரே ! பாவிகளை ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறச் செய்தருளும். இயேசுவைக் கண்டு சந்தோஷமடைந்த புனித சூசையப்பரே ! அன்னை மரியே; மனந்திரும்பிய பாவிகளைத் திடப்படுத்தியருளும்.

செய்ய வேண்டிய நற்செயல்

ஒரு சில பாவிகளை ஒப்புரவு அருட்சாதனம் பெறச் செய்வது.