நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி செய்திமியுஸ் செவேருஸ்.
காலம் : கி. பி. 193 - 211.
செவேருஸ் அரசன் தன் ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளாக கிறீஸ்தவர்களை எந்த இம்சையும் செய்யாமல் விட்டிருந்தான். அவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தார்கள். ஆனால் அதன்பின் அவன் அவர்களைப் படுத்திய கொடுமையில் அவர்கள் அந்திக் கிறீஸ்துவின் காலம் வந்து விட்டதோ என்று நினைத்தார்கள்.
எஜிப்தில் தொடங்கியது இந்த ஐந்தாம் வேத கலகம். ஆப்ரிக்கா முழுவதிலும் பரவி ஆயிரமாயிரம் கிறிஸ்தவர்களைக் கொன்றது.
அலெக்ஸாந்திரியா பட்டணத்தில் ஓரிஜன் என்பவரின் தந்தை லெயோனிதாஸும் அவரிடம் பயின்ற மாணவர்கள் ஏழு பேரும் தலை வெட்டப் பட்டார்கள்.
பெதாமியேனா என்ற பெயருடைய ஓர் அடிமை இருந்தாள். அவளைத் தன் இச்சைக்கு அடிமைப்படுத்த அதிகாரி விரும்பினான். அவள் சம்மதித்திருந்தால் உயிர் பிழைப்பது மட்டுமின்றி சுயாதீனப் பெண்ணாயும் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவள் கிறீஸ்துவை மறுதலிக்க மறுத்து விட்டாள். கோபக் கனல் மூண்ட அதிகாரி அவளை கொதிக்கும் தார் எண்ணைய்க்குள் போட்டுக் கொல்ல உத்தரவிட்டான். கொடிய சேவகர் அவள் துகிலை உரிய வந்தபோது, அவள் தன்னைத் துகிலுடன் போடும்படி கேட்டாள்.
அப்படியானால் கொஞ்சங் கொஞ்சமாகவே கொதிக்கும் தார் எண்ணெய்க்குள் அவளை இறக்குவதாக அக்கொடி யவர்கள் கூறினார்கள். அவள் தன் மானம் காக்க அதை ஏற்றுக்கொண்டாள். 3 மணி நேரமாக அவள் மெதுவாய் எண்ணெய்க்குள் இறக்கப்பட்டாள்! கொடுமை! ஆயினும் அந்த வீர வேதசாட்சி கிறீஸ்து வின் மேல் வைத்த அன்பால் அவ்வேதனையைத் தாங்கினாள். இல்லை, கிறீஸ்துவுடன் தாங்கினாள்!
அந்நேரம் அவளை ஏளனமும், அவமரியாதையான கேலியும் செய்த சேவகர்களை பாஸிலிதஸ் என்ற சேவகன் தடுத்து அவளுக்காகப் பரிந்து பேசினான். அவனுக்குப் பொதாமியேனா நன்றி கூறி, தன் கடவு ளிடம் தான் போய்ச் சேர்ந்தவுடனே அவனுக்காக மன்றாடுவதாக வாக்களித்தாள்.
வேதசாட்சி இறந்ததும் பாஸிலிதஸ் என்ற அச்சேவகன் "நான் கிறிஸ்தவன்'' என்று உரக்கக் கூறி னான். எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரித்தனர். ஆனால் அவன், தான் ஒரு கிறீஸ்தவனே என்று மீண்டும் உறுதியாய்க் கூறவே, அவனைப் பிடித்து சிறையில் அடைத்தான் அதிகாரி. அங்கே அவன் அவதிப்பட்ட நாட்களில் கிறீஸ்தவர்கள் இரகசிய மாய் அவனைச் சந்தித்து அவன் கொல்லப்படுவதற்கு முந்திய நாளில் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத் தார்கள்.
கார்த்தேஜ் நகரில் இவ்வேத கலாபனை மிகவும் வேகமாய்ப் பரவியது. பெர்பெத்துவா என்ற சீமாட்டியும், பெலிசித்தா என்ற அடிமையும் கிறீஸ் தவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பெர்பெத்துவாவுக்கு ஒரு மாதக் கைக்குழந்தை ஒன்று இருந்தது. வயோதி கரான அவள் தந்தை தன் நரைத்த முடியைப் பார்த்தும், அவள் பெற்ற ஒரு மாதக் குழந்தையின் முகத்தைப் பார்த்தும் இந்த மரணத்திலிருந்து தன்னை அவள் விடுவித்துக் கொள்ளும்படி உருகிக் கேட்டுக் கொண்டேயிருந்தார்.
அச்சமயம் பெர்பெத்துவா எழுதிய ஒரு கடிதத்தில், ''என் குடும்பத்திலுள்ள எல்லோரிலும் என் தகப்பனார் மாத்திரமே என் மகிமையைப் பற்றி மகிழ்ச்சியடையாமல் இருக்கிறாரே என்றுதான் நான் வருந்துகிறேன்'' என்று குறிப் பிட்டாள்!!
பெலிஸித்தா சிறையிலிருக்கும் போது அவளுக்குத் தலைப் பேறுகாலம் நிறைவேறியது. சிறைக்காவலன் அவள் பட்ட வேதனைகளைக் குறிப்பிட்டு, "இப்பொழுதே நீ இப்படிக் கஷ்டப்படுகிறாயே, உன்னைக் காட்டு மிருகங்களுக்குப் போடும் போது எப்படிக் கஷ்டப்படுவாய்!" என்றான். அதற்கு அவள், "இப்போது நான் கஷ்டப்படுகிறேன். ஆனால் அப்போது இன்னொருவர் என்னுடன் கஷ்டத்தை அனுபவிப்பார். ஏனென்றால் நான் அவருக்காக வேதனைப்படுவேன்" என்று பதில் கூறினாள்.
இவ்விருவர் மீதும் காட்டுப் பசுக்கள் அவிழ்த்து விடப்பட்டன. அவை கொம்பினால் இவர் களைத் தூக்கி ஆகாயத்தில் வீசின. கீழே விழுந்ததும் அவர்கள் செய்த முதல் காரியம் கலைந்து கிடந்த தங்கள் ஆடைகளை மரியாதையாக சரி செய்ததே யாகும். பின்னர் வாளால் தலை வெட்டப்பட்டு வேதசாட்சி முடியைப் பெற்றார்கள். சகல அர்ச்சிய சிஷ்டவர்களின் பிரார்த்தனையில் அர்ச். பெர்பெத் துவா, அர்ச். பெலிசித்தா என்னும் இவ்விருவரும் மன்றாடப்படுகிறார்கள்.