அர்ச். கனூத்துஸ் - இராஜா, வேதசாட்சி (கி.பி. 1086).
இவர் டென்மார்க் தேசத்தின் அரசனாகி, நற்குணசாலியும் தேவபக்தி உள்ளவருமாயிருந்தார். இவருடைய சகோதரர் சிம்மாசனம் ஏறி அரசு புரிந்த இரண்டாம் வருஷம் மரித்தபடியால் கனூத்துஸ் என்பவர் இராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டார்.
இவர் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தார்மேல் படையெடுத்து அவர்களை ஜெயித்து, சத்திய வேதக் குருக்களை அவ்விடம் அனுப்பி அவர்களை கிறிஸ்தவர்களாக்கினார்.
தன் தேசத்திலுள்ள அநேக அலங்கோலங்களைத் திருத்தி பிரஜைகளுக்கு அவசியமான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி, எங்கும் சமாதானமும் திருப்தியுமுண்டாகும்படி செய்தார். மேலும் அநேக தேவாலயங்களைக் கட்டிவைத்து, குருக்களுடைய தேவைகளுக்கு வேண்டிய உதவிபுரியும்படி பிரஜைகளுக்கு சட்டம் ஏற்படுத்தினார்.
கடைசியாய் சகலமும் சர்வேசுரனால் உண்டாகிறதென்று தெளிவாய் அறிந்து தமது இராஜ முடியை பாடுபட்ட சுரூபத்தின் பாதத்தில் காணிக்கையாக சமர்ப்பித்தார்.
இந்த நல்ல இராஜா வேத அபிவிருத்திக்காகச் செய்த சட்டத்தால் சில துஷ்டர் இவர் மீது விரோதம் கொண்டு, ஒரு நாள் அவர் கோவிலிலிருக்கும்போது அவரை அம்பால் எய்து கொன்றார்கள்.
இவருடைய மரணத்துக்குப்பின், அவரை சர்வேசுரன் அநேக புதுமைகளால் மகிமைப்படுத்தி, அவரைக் கொலை செய்தவர்களைப் பலவாறான துன்பங்களால் தண்டித்தார்.
யோசனை
தேவ காரியங்களுக்கு வேண்டிய உதவி செய்யப் பின்வாங்காது இருப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். மாரிஸும் துணை, வே.
அர்ச். ஹென்ரி, அதிமே.
அர்ச். உல்ஸ்ட ன், மே.
அர்ச். லோமர், ம.
அர்ச். பிளேயித்மயிக், ம.