செம்மறிப்புருவையானவருக்குக் கலியாணம் ஆயத்தம் பண்ணப்பட்டதும்; தேவ வார்த்தையானவர் பரலோக சேனைகளோடு வந்து, மிருகத்தையும் அதன் பரிவாரத்தையும் ஜெயித்ததும்.
1. இவைகளுக்குப் பின்பு பரலோகத்திலே திரளான கூட்டத்தாருடைய குரலொலிக்கொப்பான சத்தத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலுயா; இரட்சணியமும், மகிமையும், வல்ல மையும் நம்முடைய சர்வேசுரனுக்கே உரியது.
2. ஏனெனில் அவருடைய நியாயத் தீர்ப்பு சத்தியமும் நீதியுமாயிருக்கின்றது. தன் வேசித்தனத்தால் பூமியைக் கெடுத்த பெரிய வேசிக்குத் தீர்ப்பிட்டு, அவள் தன் கையால் சிந்தின தம்முடைய ஊழியர்களின் இரத்தத் துக்குப் பழிவாங்கினார் என்றார்கள்.
3. மறுபடியும் அவர்கள்: அல்லேலுயா, அவளைச் சுடுகிற புகை அநவரத காலத்துக்கும் எழும்புகிறது என்றார்கள்.
4. இருபத்துநான்கு வயோதிகர்களும், நான்கு ஜீவஜெந்துக்களும் தெண்டனாக விழுந்து: ஆமென், அல்லேலுயா என்று சொல்லி சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனை நமஸ்கரித்தார்கள்.
5. அல்லாமலும் சிங்காசனத்திலிருந்து ஓர் குரல்சத்தம் புறப்பட்டு: நம்முடைய சர்வேசுரனுடைய ஊழியரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவருக்குப் புகழ் கூறுங்கள் என்றது.
6. அன்றியும் திரளான ஜனக்கூட்டத்தின் ஆரவாரம்போலவும், பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலவும், பலத்த இடிகளின் முழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலுயா, ஏனெனில் சர்வ வல்லபமுள்ள நம்முடைய ஆண்டவர் இராச்சிய பாரம் பண்ணுகிறார்.
7. நாம் களித்து, மகிழ்ந்து அவரை மகிமைப்படுத்துவோமாக. ஏனெனில் செம்மறிப்புருவையானவருடைய கலியாண நாள் வந்தது. அவருடைய பத்தினி யும் தன்னை ஆயத்தம்பண்ணியிருக் கிறாள் என்று சொல்லக்கேட்டேன்.
8. பளபளப்பான மெல்லிய வஸ்திரந் தரித்துகொள்ளும்படி அவளுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த மெல்லிய வஸ்திரம் அர்ச்சியசிஷ்டவர்களுடைய புண்ணிய செய்கைகளாமே.
9. பின்னும் அவர் என்னை நோக்கி: செம்மறிப்புருவையானவருடைய கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்களென்று எழுது என்றார். மேலும் இவைகள் சர்வேசுர னுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னார். (மத். 22:2.)
10. அப்பொழுது நான் அவரை நமஸ்கரிக்கும்படி அவருடைய பாதத்திலே விழுந்தேன். அவரோ என்னைப்பார்த்து: பத்திரம், அப்படிச் செய்யாதே. உன்னோடும் சேசுவின் சாட்சியத்தைக்கொண்டிருக்கிற உன் சகோதரரோடும் நானும் ஒரு ஊழியன். சர்வேசுரனை நமஸ்கரி. சேசுநாதரைப் பற்றிய சாட்சியம் தீர்க்கதரிசனத்துக்குரிய இஸ்பிரீத்துவாமே என்றார்.
* 10. இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்ட சம்மனசானவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறதுபோல், அர்ச். அருளப்பரும் இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டுத் தீர்க்கதரிசனஞ் சொல்ல வரம்பெற்றதினால் இருவரிடத்திலும் ஒரே இஸ்பிரீத்துசாந்துவானவர் குடியிருந்தார். ஆகையால் சம்மனசானவர்: நானும் உன்னைப்போல் ஒரு ஊழியன்தானே என்கிறார்.
11. அப்பொழுது பரலோகம் திறக் கப்படக் கண்டேன். இதோ, ஒரு வெள் ளைக் குதிரை தோன்றினது: அதன் மேல் ஏறியிருந்தவருக்குப் பிரமாணிக்க முள்ளவரென்றும், சத்தியமுள்ளவ ரென்றும் பெயர். அவர் நீதியோடு நடுத்தீர்த்து யுத்தம் பண்ணுகிறவர்.
12. அவருடைய கண்கள் அக்கினிச் சுவாலையைப்போல் இருந்தது. அவரு டைய சிரசின்மேல் அநேக கிரீடங்களும் இருந்தன. அவர் ஒருவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு நாமம் எழுதி அவருக்குச் சூடியிருந்தது.
13. அவர் இரத்தத்தினால் தெளிக்கப் பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். தேவனுடைய வார்த்தை என்று அவருக்குப் பெயர். (இசை. 63:1.)
14. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையான மெல்லிய வஸ்திரங்க ளைத் தரித்து, வெள்ளைக் குதிரைகள் மேலேறி அவரைப் பின்சென்று போனார்கள்.
15. புறஜாதியாரை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து இருபுறமும் கூரான பட்டயம் புறப்பட்டது. அவர் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவார். அவரே சர்வ வல்லமையுள்ள சர்வே சுரனுடைய உக்கிரம கோபமாகிய மது வின் ஆலையை மிதிக்கிறார். (சங். 2:9.)
16. இராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன் என்று அவருடைய வஸ்திரத்திலும், தொடையிலும் எழுதப்பட்டிருந்தது. (காட்சி. 17:14; 1 தீமோ. 6:15.).)
17. பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன். அவர் வானத்தின் நடுவே பறக்கிற சகலமான பறவைகளையும் நோக்கி: மகா சத்தத்தோடே கூப்பிட்டு:
18. வாருங்கள், நீங்கள் இராஜாக்களின் மாம்சங்களையும், சேனைத்தலைவர்களின் மாம்சங்களையும், வீரசூரருடைய மாம்சங்களையும், குதிரைகளின் மாம்சங்களையும், அவைகளின் மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சங்களையும் சுயாதீனர், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய இவர்களெல்லோருடைய மாம்சங்களையும் பட்சிக்கும்படி சர்வேசுரன் கொடுக்கும் மகா விருந்துக்கு வந்து கூடுங்கள் என்றார்.
19. பின்பு மிருகமும், பூமியின் இராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும் குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய இராணுவத்தோடும் யுத்தம் பண்ணும்படிக்குக் கூடிவரக் கண்டேன்.
20. அப்போது மிருகம் பிடிபட்டது. அத்தோடுகூட கள்ளத் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இவன் அதற்கு முன்பாக அற்புதங்களைச் செய்து அவைகளின் மூலமாய் மிருகத்தின் முத்திரையைத் தரித்து, அதன் உருவத்தை நமஸ்கரித்த வர்களையும் மயக்கிக் கெடுத்தவன். இருவரும் கெந்தகம் பற்றியெரிகிற அக்கினித் தடாகத்திலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
* 20. மிருகத்தினால் அந்திக்கிறீஸ்தும், கள்ளத் தீர்க்கதரிசியால் அவனுடைய பொல்லாத மந்திரியும் குறிக்கப்படுகிறார்கள். (கிராம்போன்.)
21. மற்றவர்களோ, குதிரையின் மேல் ஏறியிருக்கிறவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள். பறவைகளெல் லாம் அவர்களுடைய மாம்சங்களால் திருப்தியடைந்தன.
* 21. மற்றவர்கள் என்பது மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியும் நீங்கலாக, அந்த மிருகத்தைப் பின்சென்ற இராஜாக்கள் முதலியவர்களாம்.