அதிகாரம் 01
1 விசுவாச வாழ்வில் என் உண்மை மகனாகிய தீமோத்தேயுவுக்கு, நம் மீட்பராகிய கடவுளிடமிருந்தும், நம் நம்பிக்கையாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் பெற்ற கட்டளைபோல், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான சின்னப்பன் யான் எழுதுவது:
2 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உமக்கு அருளும் இரக்கமும் சமாதனமும் உண்டாகுக!
3 மக்கெதேனியாவுக்கு நான் புறப்படும் பொழுது, எபேசுவிலேயே தங்குமாறு உம்மைக் கேட்டுக்கொண்டேன். அங்கே சிலர் தவறான கொள்கைகளைப் போதித்திருக்கிறார்கள்.
4 இவர்கள், முடிவே இல்லாத புராணக் கதைகளிலும், தலைமுறை வரலாறுகளிலும் கவனம் செலுத்துகிறார்கள். இவையோ, விசுவாசத்தை மையமாகக் கொண்ட இறைத்திட்டத்திற்குப் பயன்படாமல் வீண் ஆராயச்சிகளுக்கே இடம் தருகின்றன. இப்படிச் செய்யாதபடி நீர் அவர்களுக்குக் கட்டளையிடும்.
5 தூய உள்ளம், குற்றமற்ற மனச்சாட்சி, நேர்மையான விசுவாசம் இவற்றினின்று பிறக்கும் அன்பைத் தூண்டுவதே அக்கட்டளையின் நோக்கமாயிருக்கட்டும்.
6 இந்நெறியைவிட்டு விலகிச் சிலர் வீண் வாதங்களில் இறங்கிவிட்டனர்.
7 தாங்கள் பேசுவது இன்னதென்று தாங்களே அறியாதிருப்பினும், தாங்கள் அழுத்தமாகக் கூறுவது தங்களுக்கே புரியாதிருப்பினும், அவர்கள் சட்ட வல்லுநராயிருக்க விரும்புகின்றனர்.
8 திருச்சட்டம் நல்லதுதான், அது தெரியும், ஆனால், திருச்சட்டத்தைச் சட்டமாக மட்டுமே கொள்ளவேண்டும்.
9 அதாவது, சட்டம் நீதிமான்களுக்காக இயற்றப்படவில்லை. நெறிகெட்டவர். கட்டுக்கடங்காதவர், கடவுள் பற்றில்லாதவர், பாவிகள், கடவுளைப் புறக்கணித்தவர்கள், தெய்வ சிந்தனையற்றவர்கள், தாய் தகப்பனைக் கொலை செய்வோர், கொலைகாரர்.
10 காமுகர், இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர். ஆட்களை அடிமைகளாக்கிக் கடத்திச் செல்வோர், பொய்யர், பொய்யாணையிடுவோர், மற்றும் நலமிக்க போதனைக்கு மாறாக நடப்போர், இவர்களுக்காவே சட்டம் இயற்றப்பட்டது.
11 இப்போதனை பேரின்பக் கடவுள் என்னிடம் ஒப்படைத்துள்ள நற்செய்திக்கு, அவரது மாட்சிமைபற்றிய நற்செய்திக்கு ஒத்துள்ளது.
12 என்னை உறுதிப்படுத்திய நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். ஏனெனில், என்னைத் தம் ஊழியத்திற்கு ஏற்றுத் தம் நம்பிக்கைக்குத் தகுதியுள்ளவன் எனக் கருதினார்.
13 நானோ முன்னர் கடவுளை நிந்தித்தேன். திருமறையைத் துன்புறுத்தினேன். கொடுமை புரிந்தேன், இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப் பெற்றேன். ஏனெனில், விசுவாசத்தைப் பெறாத நிலையில் அறியாமையால் அவ்வாறு நடந்தேன்.
14 கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்தோடும் அன்போடும் நம் ஆண்டவருடைய அருள் இணைந்து அளவின்றிப் பெருகலாயிற்று.
15 ' பாவிகளை மீட்கவே இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார் ' - என்னும் மொழி உண்மையானது, எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அந்தப் பாவிகளிலெல்லாம் பெரும் பாவி நானே.
16 இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப்பெற்றேன். எதற்கெனில், இயேசு கிறிஸ்து முதன் முதல் என்னிடம் நீடிய பொறுமையைக் காட்ட விரும்பினார். இவ்வாறு, அவரில் விசுவாசம் கொண்டு, முடிவில்லா வாழ்வு பெறவேண்டியவர்களுக்கு நான் மாதிரியானேன்.
17 உலகெல்லாம் ஆளும் அரசன் அழிவிலான், கண்ணுக்குப் புலப்படான், ஒரே கடவுளுக்கென்றென்றும் மகிமையும் மாட்சியும் உண்டாகுக! ஆமென்.
18 தீமோத்தேயுவே, என் மகனே, உம்மைக் குறித்து முன்னர் சொல்லப்பட்ட இறைவாக்குகளுக்கேற்ப நான் உமக்குக் கொடுக்கும் அறிவுரை இதுவே:
19 அவ்வாக்குகளின் ஆற்றலைத் துணையாகக் கொண்டு விசுவாசத்துடனும், குற்றமற்ற மனச் சாட்சியுடனும் நன்மைக்காகப் போரிடும் மனச்சாட்சியைப் புறக்கணித்ததால் தான் சிலர் விசுவாசத்தை இழந்து அழிந்தனர்.
20 அத்தகையோர்தான் இமெனேயும், அலெக்சாந்தரும். ஆகையால், அவர்கள் தண்டனை பெற்று, இனியும் கடவுளைப் பழிக்காதிருக்கப் பாடம் கற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைச் சாத்தானுக்குக் கையளித்துவிட்டேன்.
அதிகாரம் 02
1 முதன்முதல் வேண்டுதல்,செபம் மன்றாட்டு, நன்றியறிதலை அனைவருக்காகவும் நீங்கள் செலுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.
2 நாம் பக்தியும் ஒழுக்கமும் உடையவர்களாய்க் கலகமில்லா அமைதி வாழ்வு நடத்துமாறு அரசர்களுக்காகவும் அதிகாரிகளுக்காவும் மன்றாடுவோம்.
3 நம் மீட்பாராகிய கடவுளின் கண்ணுக்கு இதுவே சிறந்தது, இதுவே ஏற்றது.
4 எல்லா மனிதரும் மீட்புப்பெறவும், உண்மையின் அறிவை அடைந்து கொள்ளவும் வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
5 ஏனெனில், கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.
6 இவர் அனைவரின் மீட்புக்கு ஈடாகத் தம்மையே கையளித்தார். இவ்வாறு குறித்த காலம் வந்தபொழுது அந்த மீட்புத் திட்டத்திற்குச் சாட்சியம் தந்தார்.
7 இதற்காகவே, நான் தூதுரைப்போனாகவும், அப்போஸ்தலனாகவும், விசுவாசத்தையும் உண்மையையும் புறவினத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப் பெற்றேன். நான் சொல்வது உண்மையே, பொய்யன்று.
8 எனவே, ஆடவர் சினமும் சச்சரவும் தவிர்த்து, எவ்விடத்திலும் தூய கைகளை உயர்த்திச் செபிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
9 பெண்டிரும் அடக்க ஒடுக்கத்தோடும் நாணத்தோடும் ஏற்புடைய ஆடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின்னல் சடையும், பொன்னும் முத்தும்,ஆடம்பரமான உடைகளும் அல்ல அவர்களுக்கு அணிகலன்.
10 கடவுள் பற்று உள்ளவர்களெனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கேற்ப அவர்கள் செய்யும் நந்செயல்களே அவர்களுக்கு அணிகலன்.
11 பெண்கள் பேசாமல் தாழ்மையோடு அறிவுரையேற்க வேண்டும்.
12 பெண்கள் கற்பிக்கவோ, ஆண்கள்மேல் அதிகாரம் செலுத்தவோ, நான் விடமாட்டேன், அவர்கள் பேசலாகாது.
13 ஏனெனில், முதலில் உண்டாக்கப் பட்டது ஆதாம், பிறகுதான் ஏவாள்.
14 ஏமாந்தது ஆதாம் அன்று, பெண்தான் ஏமாந்துபோய்ப் பாவத்தில் வீழ்ந்தாள்.
15 இருப்பினும், அடக்க ஒடுக்கத்தோடு விசுவாசம், அன்பு, பரிசுத்தத்தில் நிலைத்திருப்பின் தாய்மைப் பேற்றினால் மீட்புப் பெறுவாள்.
அதிகாரம் 03
1 ' விசுவாசிகளை மேற்பார்வையிடும் அலுவலை ஏற்க விழைபவன் ஒரு மேன்மையான தொழிலையே விரும்புகிறேன் ' என்பது உண்மையான வார்த்தை.
2 எனவே, அவ்வலுவலை ஏற்பவர் பிறருடைய குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். ஒரு முறை மட்டும் திருமணம் புரிந்தவராய், மிதமிஞ்சிக் குடியாமல் விவேகம், நயமான நடத்தை, விருந்தோம்பல் கற்பிக்கும் ஆற்றல் ஆகிய நல்லியல்புகள் வாய்க்கப்பெற்று,
3 குடிவெறி, கலகம், வீண்சண்டை, பொருளாசை இவற்றை விலக்கிக் கனிந்த உள்ளத்தினராய் இருத்தல் வேண்டும்.
4 குடும்பத்தை செவ்வனே ஆண்டு, தம் மக்களைக் கீழ்ப்படிதலிலும் ஒழுக்கத்திலும் வளர்க்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
5 தம் குடும்பத்தையே ஆண்டு நடத்தத் தெரியாதிருந்தால் கடவுளின் சபையை எவ்வாறு கண்காணிக்க முடியும்?
6 அவர் புதுக் கிறிஸ்துவனாகவும் இருத்தல் கூடாது. 'இருந்தால் இறுமாப்புக்கொள்ளக் கூடும். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அடையலாம்.
7 மேலும், திருச்சபையைச் சேராதவர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவராயிருக்க வேண்டும். இல்லையேல், இகழ்ச்சிக்காளாகலாம்; அலகையின் வலையிலும் விழக் கூடும்.
8 அவ்வாறே திருப்பணியாளர்கள் இரட்டை நாவுள்ளவர்களாகவோ, மதுபானப் பிரியர்களாகவோ, இழிவான முறையில் ஊதியம் தேடுபடுவர்களாகவோ இராது கண்ணியமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
9 விசுவாசத்தின் மறை பொருளைத் தூய மனச்சாட்சியோடு காத்துவரவேண்டும்.
10 அவர்களை முதலில் சோதித்துப் பார்க்கவேண்டும். யாதொரு குறைச் சொல்லுக்கும் ஆளாகாதிருந்தால் திருப்பணிக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
11 அவர்களுடைய மனைவியரும் அவ்வாறே கண்ணியம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். புறணிபேசாமல், மிதமிஞ்சிக் குடியாது, எல்லாவற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருக்கட்டும்.
12 திருப்பணியாளர்கள் ஒருமுறை மட்டுமே திருமணம் செய்தவர்களாய்த் தம் மக்களையும் குடும்பத்தையும் செவ்வனே நடத்துபவர்களாயிருக்க வேண்டும்.
13 திருப்பணியை நன்கு ஆற்றுவோர் உயர்நிலையடைவர். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப்பற்றிப் பேசத் துணிவும் பெறுவர்.
14 நான் இதை எழுதும்போது விரைவில் வந்து உம்மைக் காணும் நம்பிக்கையோடு எழுதுகின்றேன்.
15 ஒருவேளை நான் வரத் தாமதித்தால், நீர் கடவுளின் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை இக்கடிதம் உணர்த்தும். இவ்வீடு உயிருள்ள கடவுளின் திருச்சபையே. அதுவே உண்மைக்குத் தூணும் அடிப்படையுமாகும்.
16 மெய்யாகவே, நமது விசுவாசத்தின் மறை பொருள் பெரியது, ஐயமே இல்லை. ஊன் உருவிலே அவர் தோன்றினார். தேவ ஆவியின் செயலாலே அவர் இறைவனுக்கு ஏற்புடையவரென விளங்கினார். வானத்தூதர்க்குத் தமைக் காண்பித்தார். புறவினத்தார்க்கு அறிவிக்கப்பெற்றார். விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பெற்றார். மாட்சிமையிலே அவர் விண்ணேற்பு அடைந்தார்.
அதிகாரம் 04
1 ஆவியானவர் தெளிவாய்க் கூறுகிறபடி, இறுதிக் காலத்தில் சிலர் தீய ஆவிகளின் வஞ்சனைகளுக்கும், பேய்களின் போதனைகளுக்கும் செவிமடுத்து விசுவாசத்தை மறுத்து விடுவர்.
2 பேய்க்குரியவன் என மனச்சாட்சியில் சூடிடப்பட்ட பொய்யர்களின் போலிப் பேச்சுகளால் கவரப்படுவர்.
3 அந்தப் பொய்யர்கள் திருமணத்தை விலக்குகின்றனர். சிலர் உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென்கின்றனர். உண்மையை நன்கறிந்த விசுவாசிகள் நன்றிக் கூறித் தூய்க்கவன்றோ இதெல்லாம் கடவுள் படைத்தார் ?
4 கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதுதான். நன்றி கூறி உட்கொண்டால், எந்த உணவையும் விலக்கவேண்டியதில்லை.
5 கடவுளுடைய வார்த்தையும் நம் செபமும் அதைப் புனிதமாக்கும்.
6 இக்கருத்துக்களையெல்லாம் சகோதரர்களுக்கு எடுத்துக்காட்டினால் நீர் இயேசு கிறிஸ்துவின் நல்ல ஊழியராய் இருப்பீர். விசுவாசக் கோட்பாடுகளிலும், நற்போதனையிலும் பயிற்சி பெற்றவராயும் விளங்குவீர்.
7 ஆனால், இலௌகீகக் கட்டுக் கதைகளைப் பாட்டிக் கதைகளெனத் தள்ளிவிடும். பக்திப் பயிற்சியில் நிலைத்திரும்.
8 உடற்பயிற்சி ஓரளவு தான் பயன் தரும். பக்தியோ அளவில்லாப் பயன் தரும். ஏனெனில், இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு பெறுவோம். என்னும் உறுதிப்பாடு பக்தியில் அடங்கியுள்ளது.
9 இது உண்மையான வார்த்தை. எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
10 நாம் வருந்தியுழைப்பது உயிருள்ள கடவுளை நம்புவதால் தான். அவரே மனிதர் எல்லாருக்கும், சிறப்பாக விசுவாசிகளுக்கும் மீட்பர்.
11 நீர் விடுக்கும் ஆணைகளும், தரும் போதனைகளும் இதற்கேற்ப அமையட்டும்.
12 நீர் இளைஞராயிருப்பதால் உம்மை யாரும் அவமதியாதிருக்கட்டும். சொல், நடத்தை, அன்பு, விசுவாசம், தூய்மை முதலியவற்றில் நீர் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
13 விசுவாசிகளுக்கு வாசித்துக்காட்டுவதிலும், அறிவுரை கூறுவதிலும் போதிப்பதிலும் நான் வரும்வரை கருத்தாய் இரும்.
14 மூப்பர் ஒன்றுகூடி உம்மீது கைகளை விரித்தபோது, இறைவாக்கினால் ஞானவரம் உமக்களிக்கப்பட்டது. உம்மில் இருக்கும் அவ்வரத்தைப் பற்றி அசட்டையாய் இராதீர்.
15 உமது முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியும்படி இவற்றைச் செய்வதில் கவலையாயிரும். இவற்றிற்கே உம்மை முழுவதும் ஒப்படைத்துவிடும்.
16 உம் வாழ்க்கை முறைப்பற்றியும் போதனைபற்றியும் விழிப்பாயிரும். இவற்றில் நிலையாயிரும். இவ்வாறு நடந்தால் நீர் மீட்படைவீர். உமக்குச் செவிசாய்ப்பவர்களையும் மீட்படையச் செய்வீர்.
அதிகாரம் 05
1 முதியோரிடம் கடுமையாயிராதீர். அவர்களைத் தந்தையராகக் கருதி அறிவு புகட்டும். அவ்வாறே, இளைஞரைத் தம்பியராகவும்,
2 வயது முதிர்ந்த மாதரைத் தாய்மாராகவும், இளம் பெண்களைத் தூய உள்ளத்தோடு தங்கையராகவும் கருதி நடத்தும்.
3 கைம்பெண்களுக்கு மரியாதை காட்டும். ஆதரவற்ற கைம்பெண்களையே ஈண்டுக் குறிப்பிடுகிறேன்.
4 எந்தக் கைம்பெண்ணுக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், அவர்கள் முதலில் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும், பெற்றோருக்கும், பாட்டி பாட்டானுக்குமுரிய நன்றிக் கடன் ஆற்றவும் கற்றுக்கொள்ளட்டும். இதுவே கடவுளுக்கு ஏற்றது.
5 ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண் தன் முழு நம்பிக்கையையும் கடவுள் மேல் வைத்து, அல்லும் பகலும் செபத்திலும் மன்றாட்டிலும் நிலைத்திருப்பாளாக.
6 சிற்றின்பத்தில் மூழ்கியுள்ளவள் நடைப்பிணமே.
7 கைம்பெண்கள் யாதொரு குறைச் சொல்லுக்கும் ஆளாகாதபடி இவையெல்லாம் எடுத்துச் சொல்லும்.
8 தன் உறவினரை, சிறப்பாகத் தன் சொந்த வீட்டாரைப் பார்த்துக் கொள்ளாதவன் விசுவாசத்தை மறுதலித்தவனே. அவன் அவிசுவாசியைவிடக் கேடு கெட்டவன்.
9 அறுபது வயதுக்குக் குறையாத கைம்பெண்ணையே கைம்பெண்கள் சபையில் சேர்க்கலாம். அவள் ஒருமுறை மட்டுமே திருமணம் ஆனவளாக இருக்கவேண்டும்.
10 பிள்ளைகளை நன்றாய் வளர்த்தல், விருந்தோம்பல், இறைமக்களின் பாதம் கழுவுதல், துன்புற்றோருக்கு உதவியளித்தல் முதலிய எல்லா நற்செயல்களையும் செய்து, தன் நடத்தைக்கு நற்சான்று பெற்றவளாகவும் இருக்கவேண்டும்.
11 இளம் கைம்பெண்களை இச்சபையில் ஏற்றுக்கொள்ளாதீர். ஏனெனில், கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கக்கூடிய சிற்றின்ப வேட்கை எழும் போது அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
12 தாங்கள் கொடுத்த வாக்கை இவ்வாறு மீறுவதால் குற்றத்தீர்ப்புக்கு உள்ளாவார்கள்.
13 அதோடு வீடுவீடாகச் சென்று, சோம்பேறிகளாயிருக்கக் கற்றுக்கொள்வார்கள். சோம்பேறிகளாயிருக்க மட்டுமன்று, தகாத பேச்சுக்கெல்லாம் இடம் கொடுத்து வம்பளக்கவும், பிறர் காரியங்களில் தலையிடவும் கற்றுக்கொள்வார்கள்.
14 எனவே, இளம் கைம்பெண்கள் மீளவும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, குடும்பத்தை நடத்தவேண்டும். இதுவே என் விருப்பம். அப்பொழுது நம்மைக் குறைகூற எதிரிக்கு எவ்வித வாய்ப்பும் இராது.
15 ஏனெனில், நெறி தவறிச் சாத்தானைப் பின்சென்றவர்கள் சிலர் ஏற்கெனவே உள்ளனர்.
16 கிறிஸ்தவப் பெண் ஒருத்தியின் வீட்டில் கைம்பெண்கள் இருந்தால், அவளே அவர்களைப் பார்த்துக்கொள்ளட்டும். சபையின்மேல் அச்சுமையைச் சுமத்தக் கூடாது. ஏனெனில், ஆதரவற்ற கைம்பெண்களைத்தான் சபை பார்த்துக்கொள்ள வேண்டும்.
17 சபைகளைச் செவ்வனே நடத்தும் மூப்பர்கள், சிறப்பாகப் போதிப்பதிலும், தேவ வார்த்தை அறிவிப்பதிலும் ஈடுபட்டுழைப்பவர்கள் இருமடங்கு மதிப்புக்குரியவர்கள் ஆவர்.
18 ஏனெனில், 'போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே' என்றும், 'வேலையாள் தன் ஊதியத்துக்கு உரியவனே' என்றும் மறைநூல் கூறுகிறது.
19 மூப்பர் ஒருவரை யாராவது குற்றம் சாட்டினால் இரண்டு மூன்று பேர் சாட்சி சொன்னாலன்றி ஏற்றுக்கொள்ளாதீர்.
20 ஆனால் யாராவது பாவ வழியிலேயே இருப்பதாகத் தெரிந்தால், எல்லாருக்கும் அச்சம் உண்டாகும்படி வெளிப்படையாய்க் கடிந்துகொள்ளும்.
21 கடவுள் முன்னிலையிலும், இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வானதூதர் முன்னிலையிலும் உம்மை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஒருதலைச் சார்பாய் எதுவும் செய்யாமல், நடுநிலைமையோடு இவற்றைக் கடைப்பிடியும்.
22 யார்மேலும் பதற்றத்தோடு கைகளை விரித்துப் பட்டம் கொடுக்காதீர். கொடுத்தால் அவர்களுடைய பாவங்களில் நீரும் பங்குகொள்வீர். உம்மைக் குற்றமற்றவராகக் காத்துக் கொள்ளும்.
23 தண்ணீர் மட்டுமே குடிப்பதை விட்டுவிடும். அடிக்கடி உமக்கு ஏற்படும் உடல் நலிவின் பொருட்டு, வயிற்றின் நலனுக்காகச் சிறிது திராட்சை இரசம் குடித்துவாரும்.,
24 சிலருடைய குற்றங்கள் வெளிப்படையானவை. தீர்ப்புக்கு அவர்கள் போகுமுன்பே அவர்களுடைய குற்றங்கள் போய் நிற்கும். வேறு சிலருடைய குற்றங்களோ பின்னரே தெரியவரும்.
25 நற்செயல்களும் வெளிப்படையானவையே. வெளிப்படையாக இல்லாவிடினும் என்றுமே மறைந்திரா.
அதிகாரம் 06
1 அடிமைத்தளையில் கட்டுண்டிருப்பவர் எல்லாரும் தங்கள் தலைவர்களை முழு மரியாதைக்கு உரியவர்களாகக் கருத வேண்டும். அப்பொழுதுதான் கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் இழுக்கு ஏற்படாது.
2 விசுவாசிகளைத் தலைவர்களாகக் கொண்டுள்ள அடிமைகள், தலைவர்கள் சகோதரர்கள் தானே என்று மதிப்புக் கொடுக்காதிருந்தால் தவறு. தங்கள் ஊழியத்தால் பயன் பெறுபவர்கள் விசுவாசிகளும் கடவுளுடைய அன்பர்களுமாக இருப்பதால், அடிமைகள் இன்னும் ஆர்வத்துடன் ஊழியம் செய்யவேண்டும். நீர் தரும் போதனைகளும் அறிவுரைகளும் இதற்கேற்ப அமையட்டும்.
3 யாராவது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நலமிக்க வார்த்தைகளிலும், பக்தி நெறிக்கு ஒத்த போதனையிலும் நிலைத்திராது மாறுபட்ட கொள்கைகளைப் போதித்தால், அவன் ஓர் அறிவிலி.
4 இறுமாப்புக் கொண்டு குருடனானவன். வீண் வாக்குவாதம் செய்வதிலும், வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவதிலும் பைத்தியம் கொண்டவன். இவற்றினின்று தான் பொறாமை, சண்டை, சச்சரவு, பழிச்சொல், பிறர் மீது பொல்லாத சந்தேகங்கள்.
5 சீரழிந்த மனத்தவர்களிடையே மோதல்கள் முதலியனவெல்லாம் உண்டாகின்றன. இப்படிச் சீரழிந்தவர்கள் உண்மையை இழந்தவர்களாய், பக்தி நெறியை ஆதாயம் தரும் தொழில் எனக் கருதுகிறார்கள்.
6 ஆம், பக்தி நெறி நல்ல ஆதாயம் தருவதுதான்; ஆனால் போதுமென்ற மனமுள்ளவர்களுக்கே தரும்.
7 பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டுவரவில்லை. இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.
8 எனவே, உணவு, உடையோடு மனநிறைவுகொள்வோம்.
9 செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்; பேயின் வலையில் சிக்குகிறான். தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான். இவையோ அவனைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்திவிடும்.
10 பண ஆசைதான் எல்லாத் தீமைகளுக்கும் வேர். அந்த ஆசையால்தான் சிலர் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வதுபோல் பல துன்பங்களைத் தங்கள்மேல் வருவித்துக்கொண்டார்கள்.
11 ஆனால், கடவுளின் அடியாராகிய நீர் இவையெல்லாம் தவிர்த்துவிடும். நீதி, பக்தி, விசுவாசம், அன்பு, மனவுறுதி, சாந்தம் இவற்றைக் கடைப்பிடியும்.
12 விசுவாச வாழ்வு என்னும் சீரிய பந்தயத்தில் தளராதீர். முடிவில்லா வாழ்வைக் கைப்பற்றிக் கொள்ளும். அதற்காகவே அழைக்கப் பெற்றிருக்கிறீர். அதை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் சிறந்த விசுவாச அறிக்கை செய்தீர்.
13 அனைத்திற்கும் உயிரளிக்கும் கடவுள் முன்னிலையிலும், போஞ்சு பிலாத்தின் முன் நின்று சிறந்த விசுவாச அறிக்கையைச் செய்த இயேசு கிறிஸ்து முன்னிலையிலும் உமக்கு வலியுறுத்திச் சொல்லுகிறேன்.
14 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும் வரை எக்குற்றத்திற்கும் இடம் தராமல் இக்கட்டளைகளைக் கடைப்பிடியும். அப்பிரசன்னத்தைக் கடவுள் குறித்த காலத்தில் நாம் காணச் செய்வார்.
15 அப்பேரின்பக் கடவுள் ஒரே வேந்தர், அரசர்க்கெல்லாம் அரசர். ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்.
16 இறப்பே அறியா ஒருவர், அணுக முடியா ஒளியில் உறைபவர். அவரைக் கண்டவர் யாருமே இலர். காணக்கூடியவர் ஒருவரும் இலரே! அவருக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உரியன, ஆமென்.
17 இவ்வுலகில் செல்வம் படைத்தவர் இறுமாப்புக் கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
18 அவர்கள் நன்மை செய்து, நற்செயல்கள் என்னும் செல்வம் சேர்ப்பார்களாக, தங்களுக்குள்ளதைப் பிறரோடு தாராள மனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் நீர் அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்.
19 அவ்வாறு அவர்கள் தங்கள் வருங்கால வாழ்விற்கான சிறந்ததொரு சேமிப்பைச் சேர்த்து வைப்பார்கள். அதைக் கொண்டு அவர்கள் உண்மை வாழ்வை அடைய இயலும்.
20 தீமோத்தேயுவே, உம்மிடம் ஒப்படைத்துள்ளதைப் பாதுகாப்பீராக. இலௌகீக வீண் பேச்சுக்கும், போலியறிவின் முரண்பாடான கருத்துக்களுக்கும் காது கெடாதீர்.
21 அந்தப் போலியறிவைக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தைவிட்டு விலகினர். இறையருள் உங்களோடு இருப்பதாக.