1918 முதல் 1923 வரை தந்தை பியோ ஒவ்வொரு நாளும் பதினைந்து முதல் பத்தொன்பது மணி நேரம் பாவசங்கீர்த்தனம் கேட்பதில் செலவிட்டார். 1940-களிலும் 1950-களிலும் அவர் ஒரு நாளைக்கு ஐந்து முதல் எட்டு மணி நேரம் பாவசங்கீர்த்தனம் கேட்டார். பெண்களிடம் காலையில் பாரம்பரியமான பாவசங்கீர்த்தனத் தொட்டியிலும், ஆண்களிடம் சாக்றீஸ்தியில் அவர்களின் தோளின் மீது கை வைத்தபடியும் பாவசங்கீர்த்தனம் கேட்பது அவரது வழக்கமாக இருந்தது.
பொதுவாக ஒரு பாவசங்கீர்த்தனத்திற்கு அவருக்கு ஆகும் நேரம் மூன்றே நிமிடங்கள்தான். பாத்ரே பியோ தன் வாழ்நாள் முழுவதும் 50 லட்சம் பாவசங்கீர்த்தனங்கள் கேட்டார் என்று சொல்லப்படுகிறது.
மிக ஏராளமான மக்கள் அவரிடம் பாவசங்கீர்த்தனம் கேட்க வந்ததன் காரணமாக, ஒருவர் தன் முறை வருவதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கூட காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த எண்ணிக்கை எவ்வளவு பெரியதாக இருந்தது என்றால், பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் கேட்பதற்கு என்று ஓர் அலுவலகம் திறக்கப்பட்டு, அங்கே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில் எந்த நாளில். எந்த நேரத்தில், எந்த வரிசையில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விவரங்கள் தரப்பட்டிருந்தன! இந்த அனுமதிச்சீட்டு முறை 1950 ஜனவரி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் ஒரு ஆள் ஒரு பாவசங்கீர்த்தனத்திற்கு பின் எட்டு நாட்கள் கழித்தே பாத்ரே பியோவிடம் அடுத்த பாவசங்கீர்த்தனத்திற்கு வர வேண்டும்.
1962-ல் 83,035 பெண்களும் 19,837 ஆண்களும் மேற்கூறிய பாவசங்கீர்த்தனப் பதிவேட்டின்படி அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 273 பேர் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள்.
1967-ல் சுமார் 15,000 பெண்களும், 10,000 ஆண்களும் பாவசங்கீர்த்தனம் செய்தார்கள். இந்த எண்ணிக்கையின் ஒரு நாள் சராசரி 70 ஆகும்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
சிந்தனை : கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வரை வாரம் ஒருமுறை பாவசங்கீர்த்தனம் செய்யும் வழக்கம் வழக்கத்தில் நம்மிடையே இருந்தது.. அது படிப்படியாக குறைந்து வருடத்திற்கு ஒரு முறை அதுவும் தவக்காலத்தில் மட்டும் செய்தால் போதும் என்பது போல் ஆகிவிட்டது . வொவ்வொரு கத்தோலிக்கரும் வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ... பாவசங்கீர்த்தனம் செய்தே ஆக வேண்டும்...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !