அதிகாரம் 01
1 கொரிந்து நகரில் இருக்கும் கடவுளின் சபைக்கு. கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாய் அழைக்கப்பட்ட சின்னப்பனும், சகோதரனான சொஸ்தெனேயும் எழுதுவது:
2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரை எங்கும் போற்றித் தொழுகின்ற அனைவரோடும் கூடப் புனிதராயிருக்கும்படி அழைக்கப்பட்ட உங்களுக்கு, அவர்களுக்கும் நமக்கும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தராக்கப்பட்ட உங்களுக்கு.
3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உண்டாகுக.
4 கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களுக்கு அளிக்கப்பட்ட இறை அருளுக்காக உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி கூறுகிறேன்.
5 ஏனெனில், கிறிஸ்துவைப் பற்றி நாங்கள் அளித்த சாட்சியம் உங்களுக்குள் உறுதிப் பட்டிருந்தால்,
6 சொல் வன்மையும் அறிவும் நிரம்பப்பெற்று அவருக்குள் எல்லா விதத்திலும் வளம் பெற்றவர்கள் ஆனீர்கள்.
7 அதனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்பட வேண்டுமெனக் காத்திருக்கிற உங்களுக்கு ஞானக்கொடை எதிலும் குறையே இல்லை.
8 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாளில் நீங்கள் குறைபாடற்றவர்களாயிருக்க அவரே உங்களை இறுதி வரை உறுதிப்படுத்துவார்.
9 கடவுள் நம்பிக்கைக்குரியவர். 'தம் மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவோடு நீங்கள் நட்புறவு கொள்ள அவரே உங்களை அழைத்திருக்கிறார்.
10 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால், உங்களை நான் வேண்டுவது: நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழுங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். மாறாக, ஒரே மனமும் ஒரே கருத்தும் கொண்டு, மீண்டும் முற்றிலும் ஒன்றித்து வாழுங்கள்.
11 என் சகோதரர்களே, உங்கள் நடுவில் சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோவேயாளின் வீட்டினர் எனக்கு அறிவித்தனர்.
12 உங்களுள் ஒவ்வொருவரும், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன், நான் கேபாவைச் சேர்ந்தவன்,. நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்' என்று பலவாறு சொல்லிக் கொள்ளுகிறீர்களாம்.
13 கிறிஸ்து பிளவு பட்டிருக்கிறாரோ? சின்னப்பனா உங்களுக்காகச் சிலுவையில் அறையப் பட்டான்? அல்லது சின்னப்பன் பெயராலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?
14 நல்ல வேளையாக கிரிஸ்பு, காயு ஆகிய இருவரைத் தவிர உங்களுள் வேறெவனுக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை.
15 ஆகவே,. நீங்கள் ஞானஸ்நானம் பெற்றது என் பெயரால் என்று யாரும் சொல்ல முடியாது.
16 ஆம், ஸ்தேபனாவின் வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். மற்றப்படி வேறெவனுக்கும் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை.
17 கிறிஸ்து என்னை அனுப்பினது ஞானஸ்நானம் கொடுக்க அன்று, நற்செய்தியை அறிவிக்கவே, அதுவும் நாவன்மையை நம்பியன்று. அப்படி நம்பினால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றதாய்ப் போகும்.
18 சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுபவர்களுக்கு மடமையே; மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
19 ஏனெனில், ' ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்; அறிஞர்களின் அறிவுத் திறனை வெறுமையாக்குவேன்' என்று எழுதியுள்ளது.
20 உலகைச் சார்ந்த உன் ஞானி எங்கே? உன் சட்டவல்லுநன் எங்கே? வாதாடுவோர் எங்கே? கடவுள் உலக ஞானத்தின் மடமையைக் காட்டி விட்டார் அல்லரோ?
21 ஏனெனில், கடவுளின் ஞானம் வகுத்த திட்டத்தின்படி, உலகம் தனது ஞானத்தைக் கொண்டு கடவுளை அறிந்து கொள்ளாததால், நாங்கள் அறிவிக்கும் செய்தியின் மடமையால், விசுவாசிகளை மீட்கத் திருவுளங்கொண்டார்.
22 யூதர்கள் அருங்குறிகள் வேண்டும் என்கின்றனர்; கிரேக்கர்கள் ஞானத்தை நாடுகின்றனர்.
23 நாங்களோ, சிலுவையில் அறையுண்ட ஒரு மெசியாவை அறிவிக்கின்றோம். இது யூதர்களுக்கு இடறலாயுள்ளது. புறவினத்தாருக்கு மடமையாயுள்ளது.
24 ஆனால், யூதராயினும் சரி, கிரேக்கராயினும் சரி, அழைக்கப்பட்டவர்களுக்கு அவர் மெசியா, கடவுளின் வல்லமையும், கடவுளின் ஞானமுமானவர்.
25 எனெனில், கடவுளின் மடமை மனிதரின் ஞானத்தை விட ஞானமிக்கது. கடவுளின் வலுவின்மை மனிதரின் வன்மையை விட வன்மை மிக்கது.
26 சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட போது என்ன நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். மனிதர் மதிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வல்லமையுள்ளவர்கள் எத்தனை பேர்? உயர் குலத்தோர் எத்தனை பேர்?
27 இருப்பினும் ஞானிகளை நாணச்செய்ய மடமை என உலகம் கருதுவதைக் கடவுள் தேர்ந்து கொண்டார். வன்மையானதை நாணச் செய்ய வலுவற்றது என உலகம் கருதுவதைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.
28 உலகம் பொருட்படுத்துவதை ஒழித்து விட, உலகம் பொருட்படுத்தாததையும் தாழ்ந்ததெனக் கருதுவதையும், இகழ்ச்சிக்குரியதையும் கடவுள் தேர்ந்து கொண்டார்.
29 எந்த மனிதனும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி இவ்வாறு செய்தார்.
30 அவர் செயலால் தான் நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறீர்கள், இவரே கடவுளின் செயலால் நமக்கு ஞானத்தின் ஊற்றானார். இறைவனுக்கு நாம் ஏற்புடையவர்களும் பரிசுத்தர்களும் ஆவதற்கு வழியானார். நமக்கு விடுதலை அளிப்பவருமானார்.
31 ஆகவே, மறைநூலில் எழுதியுள்ளபடி, ' பெருமை பாராட்டுவோன் ஆண்டவரில் பெருமை பாராட்டுக'.
அதிகாரம் 02
1 சகோதரர்களே, கடவுளின் மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது சிறந்த சொல் வன்மையையோ, ஞானத்தையோ காட்டிக் கொள்ளவில்லை.
2 ஏனெனில், நான் உங்களிடையே இருந்த போது இயேசு கிறிஸ்துவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையுண்ட அவரைத் தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.
3 உங்களோடு இருந்த போது வலுவற்றவனாய் மிகுந்த அச்ச நடுக்கத்தோடு இருந்தேன்.
4 நான் சொன்னதும் அறிவித்ததும் மனித ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை; ஆவியானவரும், அவரது வல்லமையும் தந்த அத்தாட்சியின் மீது அமைந்தன
5 உங்கள் விசுவாசம் மனிதர்களின் ஞானத்தில் ஊன்றியிராமல் கடவுளின் வல்லமையிலே ஊன்றியிருக்க வேண்டுமென்றே இவ்வாறாயிற்று.
6 எனினும், நிறைவு பெற்றவர்களிடையில் நாங்கள் ஞானத்தையே பேசுகிறோம். ஆனால் அது இவ்வுலகின் ஞானமன்று அழிவுக்குரிய இவ்வுலகத் தலைவர்களின் ஞானமுமன்று.
7 கடவுளின் ஞானத்தையே பேசுகிறோம். அதுவோ மறை பொருளான ஞானம், இது வரையில் அது மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அது நமது மகிமைக்காக உலகம் உண்டாகு முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
8 அதை இவ்வுலகின் தலைவர்களுள் யாரும் அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால் மாட்சிமை மிக்க ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்கவே மாட்டார்கள்.
9 நாங்கள் அறிவிப்பதோ மறைநூலில் எழுதியுள்ளவாறு, ' கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது'.
10 இதைக் கடவுள் தம் ஆவியின் வழியாய் நமக்கு வெளிப்படுத்தினார். ஆவியானவர் எல்லாவற்றையும் ஊடுருவிக் காண்கிறார். கடவுளுடைய உள்ளத்தின் ஆழத்தையும் காண்கிறார்.
11 மனிதனின் உள்ளத்தில் இருப்பதை மனிதனுக்குள் இருக்கும் அவன் ஆவியேயன்றி வேறு எவரும் அறியார். அவ்வாறே கடவுளின் உள்ளத்தில் இருப்பதைக் கடவுளின் ஆவியேயன்றி வேறெவரும் அறியார்.
12 நாம் பெற்றுக் கொண்டது இந்த உலகத்தின் மனப்பான்மையன்று, கடவுளிடமிருந்து வரும் ஆவியே, கடவுள் நமக்கு அருளியவற்றை அந்த ஆவியினால் உணரக் கூடும்.
13 அவற்றை நாங்கள் மனித ஞானம் கற்பிக்கும் சொற்களால் பேசாமல், ஆவியானவர் கற்பிக்கும் சொற்களால் பேசுகிறோம். இங்ஙனம், தேவ ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவிக்குரியவற்றை விளக்கியுரைக்கிறோம்.
14 மனித இயல்பால் மட்டும் இயங்குபவன் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவனுக்கு மடமையாகத் தோன்றும். அவற்றை அவனால் அறியவும் இயலாது. ஏனெனில், தேவ ஆவியைக் கொண்டு தான் அவற்றை மதித்துணர முடியும்.
15 அந்த ஆவியைப் பெற்றுக் கொண்டவன் எல்லாவற்றையும் மதித்துணர்கிறான்.
16 அவனையோ, ஆவியைப் பெறாத எவனும் மதித்துணர முடியாது. 'ஆண்டவர் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை தரக்கூடியவர் யார்? ஆனால் நாம் கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.
அதிகாரம் 03
1 சகோதரர்களே, ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களிடம் பேசுவது போல் உங்களிடம் பேச முடியவில்லை. ஊனியல்பு உள்ளவர்கள் போலவும், கிறிஸ்தவ வாழ்க்கையில் குழந்தைகள் போலவும், உங்களைப் பாவித்துப் பேச வேண்டியதாயிற்று.
2 உங்களுக்கு நான் ஊட்டியது பால் உணவே, கெட்டியான உணவன்று. அதை உண்ண முடியாதிருந்தீர்கள். இப்போதுங் கூட முடியாமல் தான் இருக்கிறீர்கள்.
3 ஏனெனில், இன்னும் ஊனியல்பு, உள்ளவர்களாகவே இருக்கிறீர்கள். உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவும் இருக்கையில் நீங்கள் ஊனியல்பு உள்ளவர்கள் தானே மேலும் மனித இயல்பு உள்ளவர்களாகத் தானே வாழ்கிறீர்கள்!
4 உங்களுள் ஒருவன், 'நான் சின்னப்பரைச் சேர்ந்தவன்' எனவும், வேறொருவன், ' நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன் ' எனவும் சொல்லும்போது நீங்கள் காட்டுவது வெறும் மனித இயல்பே அன்றோ?
5 ஆகிலும் அப்பொல்லோ யார்? சின்னப்பன் யார்? உங்களுக்கு விசுவாசம் கொண்டு வந்த வெறும் பணியாளர்களே அல்லரோ!
6 ஆண்டவர் அருளியவாறு அவனவன் பணியாற்றுகிறான். நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்;
7 ஆனால், விளையச் செய்தவர் கடவுள் தாமே. ஆதலின் நடுகிறவனுக்கு என்ன பெருமை? நீர் பாய்ச்சுபவனுக்கு என்ன பெருமை? விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை எல்லாம்.
8 நடுகிறவனும் நீர் பாய்ச்சுப்பவனும் ஒன்றுதான். ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்பத் தனக்குரிய கூலியைப் பெறுவான்.
9 ஏனெனில், நாங்கள் கடவுளோடு உழைப்பவர்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் பண்ணை, கடவுள் எழுப்பும் கட்டடம்.
10 கடவுள் எனக்களித்த அருளுக்கேற்பக் கை தேர்ந்த கட்டடக் கலைஞனைப் போல் நான் அடித்தளம் இட்டேன். வேறொருவன் அதன் மேல் கட்டுகிறான். ஒவ்வொருவனும் தான் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாய் இருக்கவேண்டும்.
11 ஏனெனில், ஏற்கனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறு அடித்தளத்தை எவனும் இடக்கூடாது.
12 இந்த அடித்தளத்தின் மேல், பொன், வெள்ளி,. விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றாலோ, மரம், புல், வைக்கோல் ஆகியவற்றாலோ ஒருவன் கட்டடம் எழுப்பலாம்.
13 அவனவன் செய்த வேலை இறுதியில் தெரிந்துவிடும். இறுதி நாள் அதைக் காட்டி விடும். ஏனெனில், அது நெருப்பின் நாளாய் வெளிப்படும். அந்த நெருப்பு ஒவ்வொருவனுடைய வேலை எத்தன்மையது என்பதை எண்பித்துவிடும்.
14 கட்டிய கட்டடம் நிலைத்திருந்தால் கட்டியவன் கூலி பெறுவான். கட்டியது எரிந்து போனால், அது அவனுக்கு இழப்பாகும்.
15 அவனோ நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவன்போல் மீட்படைவான்.
16 நீங்கள் கடவுளின் ஆலயம் என்பதும், கடவுளின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?
17 கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம்.
18 யாரும் ஏமாந்து போகக் கூடாது. உங்களுள் எவனாவது இவ்வுலகப் போக்கின்படி தன்னை ஞானி எனக் கருதினால், ஞானியாகும்படி மடையனாகட்டும்.
19 ஏனெனில், இவ்வுலகத்தின் ஞானம் கடவுள் முன் மடமை தானே. ' ஞானிகளை அவர்களுடைய சூழ்ச்சியிலேயே சிக்க வைக்கிறார்' என்றும்,
20 ' ஞானிகளின் எண்ணங்களை அறிவார், அவை வீண் என அவருக்குத் தெரியும் என்றும் எழுதியுள்ளதன்றோ?
21 ஆகையால் வெறும் மனிதர்களைப் பற்றி யாரும் பெருமை பாராட்டலாகாது.
22 சின்னப்பனோ, அப்பொல்லோவோ, கெபாவோ, உலகமோ,
23 வாழ்வோ, சாவோ, நிகழ்காலமோ எதிர்காலமோ எல்லாம் உங்களுக்கு உரியவையே. நீங்களோ கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
அதிகாரம் 04
1 ஆகவே எங்களைக் கிறிஸ்துவின் பணியாளர், கடவுளுடைய மறைபொருள்களின் கண்காணிப்பாளர் என்றே எவரும் கருதவேண்டும்.
2 இனி, கண்காணிப்பாளர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம் அன்றோ?
3 என்னைப் பொருத்த மட்டில் எனக்கு நீங்களோ, மனிதரின் நீதிமன்றமோ தீர்ப்புக் கூறுவதுபற்றி நான் கவலைப்படவில்லை. நானும் எனக்குத் தீர்ப்பிட்டுக் கொள்ளமாட்டேன்.
4 என் மனச்சாட்சி என்னை எதிலும் குற்றம் சாட்டவில்லை. ஆயினும் இதனால் நான் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது. எனக்குத் தீர்ப்புக் கூறுகிறவர் ஆண்டவர் தாம்.
5 ஆகையால் குறித்த காலம் வருமுன் தீர்ப்பிடாதீர்கள். ஆண்டவர் வரும்வரை காத்திருங்கள். இருளில் மறைந்திருப்பதை அவர் வெட்ட வெளிச்சமாக்குவார். உள்ளங்களின் உட்கருத்துகளை வெளியாக்குவார். அப்பொழுதான் ஒவ்வொருவனும் கடவுளிடமிருந்து புகழ்பெறுவான்.
6 சகோதரர்களே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் உவமைப்படுத்திப் பேசினேன். "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதன் பொருளை எங்களைப் பார்த்து நீங்கள் கற்றுக்கொள்ள இவையெல்லாம் எடுத்துரைத்தேன். உங்களுள் யாரும் ஒருவனைச் சார்ந்து கொண்டு வேறொருவனுக்கு எதிராக நின்று இறுமாப்பு அடையவேண்டாம்.
7 ஏனெனில், நீ உயர்ந்தவன் என்று சொன்னது யார்? பெற்றுக்கொள்ளாதது உன்னிடத்தில் என்ன உண்டு? நீ பெற்றுக் கொள்ளாதவனைப் போல் ஏன் பெருமை பாராட்டிக் கொள்கிறாய்?
8 உங்களுக்கு வேண்டியதெல்லாம் இதற்குள் கிடைத்துவிட்டதோ! இதற்குள் நீங்கள் செல்வர்களாகி விட்டீர்களோ! எங்களை விட்டு நீங்கள் மட்டும் அரசாளத் தொடங்கிவிட்டீர்களோ! அப்படி நீங்கள் அரசாளத் தொடங்கிவிட்டால் நல்லதுதான்! நாங்களும் உங்களோடு சேர்ந்து அரசாள்வோமே!
9 உள்ளபடியே அப்போஸ்தலர்களாகிய எங்களைக் கடவுள் அனைவரிலும் கடையராக்கினார் என நினைக்கிறேன். எல்லாரும் காணக் கொலைகளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் போல் ஆனோம். ஏனெனில் மனிதருக்கும் வானதூதருக்கும் உலகம் அனைத்திற்கும் நாங்கள் வேடிக்கையானோம்.
10 கிறிஸ்துவுக்காக நாங்கள் மடையர்கள், நீங்களோ கிறிஸ்தவ விவேகம் கொண்டவர்கள். நாங்கள் வலுவற்றவர்கள், நீங்களோ வலுமிக்கவர்கள் நீங்கள் மாண்புள்ளவர்கள்,. 'நாங்களோ மதிப்பற்றவர்கள்.
11 இந்நாள் வரை நாங்கள் பசியாயிருக்கிறோம், தாகமாயிருக்கிறோம், ஆடையின்றி இருக்கிறோம், அடிபடுகிறோம். தங்க இடமின்றி இருக்கிறோம். எங்கள் கையால் பாடுபட்டு உழைக்கிறோம்.
12 பிறர் எங்களைப் பழித்துரைக்கும்போது நாங்கள் ஆசி கூறுகிறோம்; எங்களைத் துன்புறுத்தும் போது நாங்கள் பொறுத்துக்கொள்கிறோம்.
13 எங்களைத் தூற்றும்போது நாங்கள் உறவாடுகிறோம். நாங்கள் இவ்வுலகத்தின் குப்பைபோல் ஆனோம். இன்றுவரை அனைவரினும் கழிவடையானோம்.
14 நான் இவற்றை எழுதுவது உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படியன்று, என் அன்புக்குழந்தைகளென உங்களுக்கு அறிவு புகட்டவே.
15 ஏனெனில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு ஆசிரியர் பல்லாயிரம்பேர் இருக்கலாம் ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தியின் வழியாய் நான் தான் உங்களைக் கிறிஸ்து இயேசுவுக்குள் ஈன்றெடுத்தேன்.
16 ஆகவே என்னைப்போல் நடக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
17 இதற்காகவே, தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய என் அன்புக் குழந்தை. கிறிஸ்துவுக்குள் வாழ்வதைப் பற்றிய என் வழி வகைகளை அவர் உங்களுக்கு நினைவுறுத்துவார். அவற்றையே நான் எங்கும் ஒவ்வொரு சபையிலும் போதித்து வருகிறேன்.
18 நான் உங்களிடம் வரமாட்டேனென்று எண்ணிச் சிலர் இறுமாந்து இருக்கின்றனர்.
19 ஆண்டவர் அருள் கூர்ந்தால் விரைவில் உங்களிடம் வருவேன். வந்து, இறுமாப்புக்கொண்டவர்கள் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதையன்று அவர்களிடம் எவ்வளவு வல்லமையுண்டு என்பதைப் பார்க்கப் போகிறேன்.
20 கடவுளின் அரசு பேச்சில் அன்று, வல்லமையில்தான் இருக்கிறது.
21 நான் பிரம்போடு வரவேண்டுமா? அன்போடும் சாந்த உள்ளத்தோடும் வரவேண்டுமா? என்ன வேண்டும்?
அதிகாரம் 05
1 உங்களிடையே கெட்ட நடத்தை இருப்பதாக எங்குமே பேச்சு. ஒருவன் தன் தந்தையின் மனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானாம். இத்தகைய கெட்ட நடத்தை புற இனத்தாரிடையில் கூட இருக்காது
2 இப்படியிருந்ததும் நீங்கள் இறுமாந்திருக்கிறீர்கள். 'மாறாக, துக்கம் கொண்டாடியிருக்க வேண்டும். இச்செயல் செய்தவனை உங்களிடையேயிருந்து அகற்றிவிட்டிருக்க வேண்டும்.
3 ஆனால், என் உடலால் உங்களை விட்டுப் பிரிந்தாலும், உள்ளத்தால் உங்களோடு தான் இருக்கிறேன். உங்களோடிருப்பது போல், நான் அத்தகைய செயல் செய்தவனுக்கு ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் ஏற்கனவே தீர்ப்பிட்டு விட்டேன்.
4 அதாவது நம் ஆண்டவராகிய இயேசுவின் வல்லமையைக் கொண்டவர்களாய் நீங்களும் என் உள்ளமும் கூடிவந்து,
5 அத்தகையவனைச் சாத்தானுக்குக் கையளிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் அவனது ஆன்மா ஆண்டவரின் நாளில் மீட்படையும்படி இவ்வாறு செய்வோம்.
6 நீங்கள் பெருமை பாராட்டுவது முறையன்று. சிறிதளவு புளிப்பு மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்கச் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
7 நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும் படி பழைய புளிப்பு மாவை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் புளியாத அப்பமன்றோ? ஏனெனில், நமது பாஸ்காப் பலி நிறைவேறிவிட்டது. கிறிஸ்துவே அப்பலி.
8 ஆகையால், விழாக் கொண்டாடுவோம். அதில் பழைய புளிப்பு மாவைப் பயன்படுத்தலாகாது. தீயமனம், கெடுமதி என்னும் புளிப்பு மாவை விலக்கி நேர்மை, உண்மை என்னும் புளியாத அப்பத்தையே உண்போம்.
9 காமுகரோடு உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று என் கடிதத்தில் உங்களுக்கு எழுதியிருந்தேன்.
10 உலகத்துக் காமுகர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், சிலை வழிபாட்டினர், இவர்களைக் குறித்து நான் பொதுவாகப் பேசவில்லை. அவர்களை விலக்கவேண்டியிருந்தால் நீங்கள் இவ்வுலகை விட்டே வெளியேற வேண்டியிருக்குமே.
11 நான் எழுதியதோ சகோதரன் என்னும் பெயரை வைத்துக் கொண்டு, காமுகனாகவோ, பேராசைக்காரனாகவோ, சிலை வழி பாட்டினனாகவோ, பழி பேசுபவனாகவோ, குடிகாரனாகவோ, கொள்ளைக்காரனாகவோ, இருக்கின்றவனைக் குறித்துத்தான். இத்தகையவனோடு எவ்வுறவும் வேண்டாம்; அவனோடு உண்ணவும் வேண்டாம்.
12 திருச்சபையைச் சேராதவர்களுக்குத் தீர்ப்பிடுவது என் வேலையா? அவர்களுக்குக் கடவுள் தீர்ப்பிடுவார்,.
13 நீங்கள் தீர்ப்பிடுவது திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கன்றோ? தீயவனை உங்களிடையேயிருந்து களைந்தெறியுங்கள்.
அதிகாரம் 06
1 நீங்கள் ஒருவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும்போது, தீர்ப்புப் பெற இறை மக்களிடம் போகாமல், அவிசுவாசிகளிடம் போகத் துணிவானேன்?
2 இறை மக்கள் இவ்வுலகத்துக்குத் தீர்ப்பிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகமே உங்கள் முன் தீர்ப்புக்காக நிற்க வேண்டியிருக்க, சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லாமல் போய்விட்டதா?
3 வானதூதர்களுக்கும் நாம் தீர்ப்பிடுவோம் என்பதை அறியீர்களோ? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கைக்குரியவற்றைத் தீர்க்கமுடியாதா?
4 அத்தகைய வழக்குகள் இருந்தால் திருச்சபையின் மதிப்பைப் பெறாதவர்களை நடுவர்களாக ஏற்படுத்துவதெப்படி?
5 உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்லுகிறேன். சகோதரர்களுடைய வழக்கில் நடுவனாயிருக்கத்தக்க சான்றோன் உங்களிடையே ஒருவன் கூட இல்லையா?
6 சகோதரன் சகோதரனுக்கு எதிராக வழக்காடுவதா? அதுவும் அவிசுவாசிகள் முன்னிலையிலா?
7 ஒருவன் மீது ஒருவன் வழக்குத் தொடர்வதே உங்களுக்கு ஒரு தோல்வி. அநியாயத்தை நீங்கள் ஏன் தாங்கிக்கொள்ளக் கூடாது? பிறர் உங்கள் பொருளை வஞ்சித்துக் கவர ஏன் விட்டுவிடக் கூடாது? மாறாக நீங்களே அநியாயம் செய்கிறீர்கள்.
8 பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்கிறீர்கள். அதுவும் சகோதரர்களுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.
9 அநியாயம் செய்பவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துபோக வேண்டாம். காமுகர், சிலைவழிபாட்டினர், விபசாரர்,
10 இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், அதற்கு உடன்படுவோர், திருடர், பொருளாசை பிடித்தவர், குடிகாரர், பழி பேசுவோர், கொள்ளைக்காரர் இவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது.
11 இத்தகையோர் உங்களிடையிலும் சிலர் இருந்தனர். ஆயினும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும், நம் கடவுளின் ஆவியாலும் உங்கள் பாவக் கறைகளைக் கழுவிப் போக்கிக் கொண்டீர்கள், பரிசுத்தரானீர்கள், இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டீர்கள்.
12 ' எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு' என்கிறார்கள். - ஆனால் எல்லாமே பயன்தராது. எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எதற்கும் நான் அடிமையாக மாட்டேன்.
13 " உணவு வயிற்றுக்கென்றே உள்ளது; வயிறு உணவுக்கென்று உள்ளது" என்கிறீர்கள். ஆம், கடவுள் இரண்டையும் அழித்துவிடுவார். ஆனால், உடல் காமத்திற்கென்று இல்லை. ஆண்டவருக்கென்று இருக்கிறது. ஆண்டவரும் உடலுக்கே.
14 ஆண்டவரை உயிர்ப்பித்த கடவுள் நம்மையும் தம் வல்லமையால் உயிர்ப்பிப்பார்.
15 உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க நான் ஆண்டவரின் உறுப்புகளை எடுத்து வேசியின் உறுப்புகளாகச் செய்யலாமா?
16 ஒருகாலும் செய்யலாகாது. வேசியோடு சேருகிறவன் அவளோடு ஓருடலாகிறான் என நீங்கள் அறியீர்களோ? ஏனெனில், ' இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள் '. என்றுள்ளது.
17 ஆனால் ஆண்டவரோடு சேர்ந்திருப்பவன் அவரோடு ஒரே ஆவி ஆகிறான்.
18 கெட்ட நடத்தையை விட்டு விலகுங்கள். மனிதன் செய்யும் பாவமெல்லாம் உடலுக்குப் புறம்பானாது; ஆனால் கெட்ட நடத்தை சொந்த உடலுக்கே எதிரான பாவம்.
19 உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல,
20 ஏனெனில், நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பெற்றீர்கள். ஆகவே, உங்கள் உடலில் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.
அதிகாரம் 07
1 இப்பொழுது நீங்கள் எழுதிக்கேட்டவற்றைக் குறித்துப் பேசுகிறேன். பெண்ணைத் தொடாமலிருப்பது நன்று.
2 ஆனால் கெட்ட நடத்தை எங்கும் மிகுதியாயிருப்பதால், ஒவ்வொருவனுக்கும் மனைவி இருக்கட்டும். ஒவ்வொருத்திக்கும் கணவன் இருக்கட்டும்.
3 கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யட்டும். அவ்வாறே மனைவியும் கணவனுக்குச் செய்யட்டும்.
4 மனைவிக்குத் தன் உடல்மேல் உரிமையில்லை; கணவனுக்கே அந்த உரிமையுண்டு. அவ்வாறே கணவனுக்கும் தன் உடல் மேல் உரிமையில்லை; மனைவிக்கே அந்த உரிமையுண்டு.
5 ஒருவர்க்கொருவர் செய்யவேண்டிய கடமையை மறுக்காதீர்கள் செபத்தில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலத்திற்கு அக்கடமையைச் செய்யாமலிருக்கலாம். ஆனால், அதற்கு இருவரும் உடன்படவேண்டும். அதன்பின் முன்போல் கூடி வாழுங்கள். இல்லாவிட்டால் தன்னடக்கக் குறையைப் பயன்படுத்தி, சாத்தான் உங்களைச் சோதிப்பான்
6 இதையெல்லாம் நான் கட்டளையாகச் சொல்லவில்லை. உங்கள் நிலைமைக்கு இரங்கியே சொல்லுகிறேன்.
7 எல்லாரும் என்னைப்போல இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். ஆயினும் கடவுள் தரும் தனிப்பட்ட வரத்தை ஒவ்வொருவனும் கொண்டிருக்கிறான் ஒருவனுக்கு ஒருவகையான வரமும், வேறொருவனுக்கு வேறு வகையான வரமும் கிடைக்கிறது.
8 மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்லுவது: நான் இருப்பதுபோல அவர்களும் இருந்துவிடுவதுதான் நல்லது.
9 ஆனால் இச்சையை அடக்க இயலாமற் போனால் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில் காமத்தால் தீய்வதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.
10 மணமானவர்களுக்கு நான் தரும் கட்டளையாவது உண்மையில் இக்கட்டளை என்னுடையதன்று, ஆண்டவருடையதே மனைவி கணவனை விட்டுப் பிரியலாகாது
11 பிரிந்தால் மறுமணம் ஆகாமலே இருக்கவேண்டும் அல்லது கணவனோடு ஒப்புரவாக வேண்டும். கணவனும் மனைவியைக் கைவிடலாகாது.
12 மற்றவர்களுக்கு நான் சொல்லுவது - இது ஆண்டவர் சொன்னதன்று; நான் சொல்லுவது சகோதரன் ஒருவனுக்கு அவிசுவாசியான மனைவி இருந்து அவள் அவனோடு கூடிவாழ உடன்பட்டால், அவன் அவளைக் கைவிடலாகாது.
13 பெண் ஒருத்திக்கு அவிசுவாசியான கணவன் இருந்து, அவன் அவளோடு கூடிவாழ உடன்பட்டால் அவள் கணவனைக் கைவிடக்கூடாது.
14 அவிசுவாசியான கணவன் தன் மனைவியால் புனிதமடைகிறான்; அங்ஙனமே அவிசுவாசியான மனைவி அந்தச் சகோதரனால் புனிதமடைகிறாள்; இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் மாசுபட்டவர்களாய் இருப்பார்கள். இப்பொழுதோ புனிதமாய் இருக்கிறார்கள்.
15 ஆனால் இருவருள் அவிசுவாசியாயிருப்பவர் பிரிந்துபோனால் போகட்டும். இத்தகைய சூழ்நிலையில் சகோதரனோ சகோதரியோ திருமணப் பிணைப்பால் கட்டுப்பட்டவர் அல்லர். அமைதியாக வாழவே கடவுள் உங்களை அழைத்திருக்கிறார்.
16 மாதே, உன் கணவனை நீ மீட்பாயென உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவியை நீ மீட்பாயென உனக்கு எப்படித் தெரியும்?
17 எது எப்படியிருப்பினும், ஆண்டவர் ஒவ்வொருவனுக்கும் பகிர்ந்தளித்த வரத்தின்படியே, கடவுள் ஒவ்வொருவனையும் அழைத்திருக்கும் நிலையின்படியே ஒவ்வொருவனும் நடக்க வேண்டும். எல்லாச் சபைகளிலும் நான் கற்பித்துவரும் ஒழுங்கு முறை இதுவே.
18 கடவுள் அழைத்தபோது ஒருவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தால் அவன் விருத்தசேதனத்தின் அடையாளத்தை நீக்கவேண்டியதில்லை. அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் இருந்தால் அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டியதில்லை.
19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை; கடவுளின் கட்டளைகளைக் கடைப்பித்தல் ஒன்றே தேவை.
20 எந்த நிலையில் ஒருவன் அழைக்கப்பட்டானோ அந்த நிலையிலேயே அவன் இருக்கட்டும்.
21 அழைக்கப்பட்டபோது நீ அடிமை நிலையில் இருந்தாயா? கவலைப்படாதே. ஆயினும், விடுதலைபெற வாய்ப்பிருந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்.
22 ஏனெனில் ஆண்டவருக்குள் வாழும்படி அழைக்கப்பட்ட அடிமை ஆண்டவர் விடுவித்த உரிமைக் குடிமகனாயிருக்கிறான். அழைக்கப்பட உரிமைக் குடிமகனோ கிறிஸ்துவின் அடிமையாயிருக்கிறான்.
23 நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமையாக வேண்டாம்.
24 சகோதரர்களே, ஒருவன் எந்த நிலையில் அழைக்கப்பட்டானோ, அந்த நிலையிலேயே அவன் கடவுள் திருமுன் நிலைத்திருக்கட்டும்.
25 மணமாகாதவர்களைக் குறித்து அண்டவர் அளித்த கட்டளை எதுவுமே எனக்குத் தெரியாது. நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும்படி ஆண்டவரின் இரக்கத்தால் வரம் பெற்றவன் என்ற முறையில் என் கருத்தைச் சொல்லுகிறேன்;
26 அதாவது, மணமாகாத ஒருவன் தான் இருக்கும் நிலையில் இருந்துவிடுவதே நல்லது. இப்போதைய நெருக்கடியை முன்னிட்டே அது நல்லதென எண்ணுகிறேன்.
27 திருமணத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறாயா? மண முறிவைத் தேடாதே. திருமணத்தால் பிணைக்கப்படாமல் இருக்கிறாயா? மணம்செய்யத் தேடாதே.
28 அப்படி நீ மணஞ்செய்து கொண்டாலும், அது பாவமில்லை. அங்ஙனமே கன்னிப் பெண் மணஞ்செய்துகொண்டாலும் அது பாவமில்லை. ஆனால் இவர்களெல்லாரும் இவ்வுலக வாழ்வில் வேதனை அடைவார்கள். இதற்கு நீங்கள் உள்ளாகக் கூடாதென்று இவ்வாறு சொல்லுகிறேன்.
29 சகோதரர்களே, நான் சொல்வது இதுதான்: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவர்களும் மனைவி இல்லாதவர்களைப்போல் இருக்கட்டும்.
30 துயருறுவோர் துயரத்திலேயே ஆழ்ந்தவர்கள் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியிலேயே மயங்கினவர்கள் போலவும் இருத்தலாகாது. பொருளை விலைக்கு வாங்குவோர். அதைத் தமக்கென்றே வைத்துக் கொள்ளாமலும், இவ்வுலகப் பயனைத் துய்ப்போர்,
31 அதிலேயே ஆழ்ந்துவிடாமலும் இருக்கட்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் அமைப்பு கடந்து செல்கிறது.
32 நீங்கள் கவலைக்கு ஆளாகதவர்களாய் இருக்கவேண்டுமென நான் விழைகிறேன். மணமாகாதவன் ஆண்டவர்க்குரியதில் கவலையாய் இருக்கிறான்; அவரை எவ்வாறு மகிழ்விக்கலாம் என்ற நினைவாகவே இருக்கிறான்.
33 மணமானவனோ உலகத்துக்குரியதில் கவலையாய் இருக்கிறான்; மனைவியை எவ்வாறு மகிழ்விக்கலாம். என்ற நினைவாகவே இருக்கிறான். இவ்வாறு பிளவுபட்டதொரு நிலையில் அவன் இருக்கிறான்.
34 மணமாகாதவளும் கன்னிப்பெண்ணும் ஆண்டவர்க்குரியதிலேயே கவலையாய் இருக்கிறார்கள்; உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தராய் இருக்கவேண்டுமென்பதே அவர்கள் நோக்கம். மணமானவளோ உலகத்திற்குரியதில் கவலையாய் இருக்கிறாள்; கணவனை எவ்வாறு மகிழ்விக்கலாம் என்ற நினைவாகவே இருக்கிறாள்.
35 நான் இதைச் சொல்வது உங்களைக் கட்டுப்படுத்துவதற்கன்று, உங்கள் நன்மைக்கே; எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் மனச்சிதைவின்றி நீங்கள் ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவும் வேண்டுமென்றே நான் இதைச் சொல்லுகிறேன்.
36 தனக்கு மண உறுதி செய்யப்பட்ட ஒருத்தியோடு ஒருவன் கன்னிமையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தபின், அவளிடம் தான் தகாதமுறையில் நடந்துகொள்வதாக அவனுக்குத் தோன்றலாம். ஆசையின் மேலீட்டால் மணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தால் தன் விருப்பம்போல் செய்யட்டும்; அவர்கள் மணம் செய்து கொள்ளட்டும். அதுபாவம் இல்லை.
37 ஆனால், தன் எண்ணத்தில் நிலையாய் இருந்து, எவ்விதக் கட்டாயத்திற்கும் உட்படாமல், தன் சொந்த விருப்பத்தின்படி செய்ய ஆற்றல் உள்ள ஒருவன், தனக்கு மண உறுதி செய்யப்பட்ட கன்னியை அந்நிலையிலேயே வைத்திருக்க முடிவு செய்தால் அவன் நல்லதே செய்கிறான்.
38 ஆகவே மண உறுதி செய்யப்பட்ட கன்னியை ஒருவன் மணஞ்செய்து கொள்வது நன்றே; மணஞ்செய்து கொள்ளாமலிருப்பதோ அதனினும் நன்று.
39 கணவன் உயிரோடிருக்கும்வரை மனைவி அவனுடன் பிணைக்கப் பட்டிருக்கிறாள் கணவன் இறந்தால், தான் விரும்பும் ஒருவனை மணந்துகொள்ள உரிமை பெறுகிறாள். ஆனால் அவன் கிறிஸ்தவனாய் இருக்க வேண்டும்,
40 ஆயினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்வாள். என் கருத்து இதுவே. என்னிடத்திலும் கடவுளின் ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.
அதிகாரம் 08
1 இனி, தெய்வங்களின் சிலைகளுக்குப் படைத்த பொருளைக் குறித்துச் சொல்ல வேண்டியது: ' நம் எல்லோருக்கும் அறிவுண்டு ' என்கிறீர்கள். சரி, தெரியும் ஆனால் அறிவு இறுமாப்பையே உண்டாக்கும்; அன்பு தான் ஞான வளர்ச்சி தரும்.
2 தனக்கு அறிவு உண்டு என நினைக்கிறவன் அறியவேண்டிய முறையில் எதையும் இன்னும் அறிந்து கொள்ளாதவன்.
3 ஆனால் கடவுளிடம் ஒருவனுக்கு அன்பிருந்தால், அவனை அவர் அறிந்திடுவார்.
4 இனி, சிலைகளுக்குப் படைத்த பொருளைக் குறித்து நீங்கள் அறியவேண்டியது: தெய்வத்தின் சிலையென்பது ஒன்றுமே இல்லை, ஒரே கடவுளைத் தவிர வேறில்லை. இது நமக்குத் தெரிந்ததே.
5 கடவுளர் எனக் கருதப்படுவோர் வானத்திலும் வையத்திலும் பலர் இருக்கலாம்; இத்தகைய கடவுளர் பலரும், ஆண்டவர்கள் பலரும் இருந்தே வருகிறார்கள்.
6 நமக்கோ கடவுள் ஒருவரே; அவர் பரம தந்தை; அவரிடம் இருந்தே எல்லாம் வந்தன; அவருக்காகவே நாம் இருக்கிறோம்; ஆண்டவரும் ஒருவர் தான்; அவரே இயேசு கிறிஸ்து; அவராலேயே எல்லாம் உண்டாயின; நாமும் அவராலேயே உண்டானோம்.
7 ஆனால் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. இது வரையில் இருந்து வந்த சிலை வழிபாட்டுப் பழக்கத்தால், படைக்கப்பட்ட உணவைத் தெய்வத்திற்கு அர்ப்பணித்ததாகக் கருதி உண்போரும் சிலர் உள்ளனர். அவர்களுடைய மனச்சான்று வலுவற்றிருப்பதால் மாசுபடுகிறது.
8 நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுள் முன் கொண்டுபோய்ச் சேர்க்கமுடியாது. உண்ணாவிடில் நமக்குக் குறைவுமில்லை, உண்டால் நமக்கு நிறைவுமில்லை,
9 ஆயினும் உங்களுக்கு இருக்கும் இந்தச் செயலுரிமை வலிமையற்றவர்களுக்கு ஒருவேளை இடைஞ்சலாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
10 எனெனில், அறிவு உண்டென்று சொல்லும் நீ சிலைவழிபாட்டுக் கோயிலில் பந்தியமர்வதை வலிமையற்ற மனச்சான்றுள்ள ஒருவன் கண்டால் அவனும் படையலை உண்ணத் துணிவு கொள்வான் அன்றோ?
11 இங்ஙனம் உனக்குள்ள அறிவால், வலிமையற்றவன் அழிந்து போகிறான்; அவன் உன் சகோதரன் அல்லனோ? அவனுக்காகக் கிறிஸ்து உயிர் துறந்தாரல்லரோ?
12 இவ்வாறு நீங்கள் சகோதரர்களுடைய வலிமையற்ற மனச்சான்றைக் காயப்படுத்தி, அவர்களுக்கு எதிராகப் பாவஞ்செய்தால், கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவஞ் செய்கிறீர்கள்.
13 ஆகையால், நான் உண்ணும் உணவு என் சகோதரனுக்கு இடறலாயிருக்குமாயின், சகோதரனுக்கு இடறல் ஆகாதபடி நான் ஒரு போதும் புலால் உண்ணவே மாட்டேன்.
அதிகாரம் 09
1 விருப்பம்போல் செய்ய எனக்கு உரிமை இல்லையா? நான் அப்போஸ்தலன் அல்லனோ? நம் ஆண்டவராகிய இயேசுவை நான் காண வில்லையா? ஆண்டவருக்குள் நீங்கள் வாழும் முறை என் உழைப்பின் பயனன்றோ?
2 மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாய் இராவிடினும், உங்களுக்காகவது நான் அப்போஸ்தலனே. ஏனெனில், என் அப்போஸ்தலப் பணிக்கு நீங்களே ஆண்டவருக்குள் அத்தாட்சியாய் இருக்கிறீர்கள்.
3 இதைக் குறித்து என்னிடம் கேள்வி கேட்போருக்கு நான் கூறும் மறுப்பு இதுவே:
4 உங்களிடம் இருந்து உணவும் பானமும் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா?
5 மற்ற அப்போஸ்தலர்களும், ஆண்டவரின், சகோதரர்களும், கேபாவும் செய்வதுபோல ஒரு கிறிஸ்தவ மனைவியை எங்களோடு அழைத்துக்கொண்டு போக எங்களுக்கு உரிமை இல்லையா?
6 அல்லது பிழைப்புக்காக உழைக்காமலிருக்க எனக்கும் பர்னாவுக்கும் மட்டுந்தானா உரிமையில்லை?
7 எவனாவது தன் சொந்த செலவில் போர் வீரனாய் உழைப்பானா? திராட்சைத் தோட்டம் வைப்பவன் எவனாவது அதன் கனியை உண்ணாதிருப்பானா? ஆடு மாடு மேய்ப்பவன் எவனாவது அவற்றின் பாலைப் பருகாதிருப்பானா?
8 நான் இவ்வாறு குறிப்பிடுவது மனிதர் வழக்கமட்டுமன்று, திருச்சட்டமும் இதையே சாற்ற வில்லையா?
9 மோயீசனது சட்டத்தில், 'போரடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே' என எழுதியிருக்கிறது. மாடுகளைப் பற்றிக் கடவுளுக்குக் கவலையா? எங்களுக்காகவே இதைச் சொல்லுகிறார் என்பதில் ஐயமென்ன? எங்களுக்காகவே இது எழுதியுள்ளது
10 அதாவது உழுகிறவன் நம்பிக்கையோடு உழவேண்டும், போரடிக்கிறவன் பலனில் பங்கு கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடு வேலை செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
11 உங்களுக்கென ஆவிக்குரிய நன்மைகளை விதைத்தபின் உடலுக்கு வேண்டியதை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றுக்கொண்டால், அது மிகையாகுமோ?
12 மற்றவர்களுக்கு உங்கள்மேல் இந்த உரிமையிருந்தால், அவர்களைவிட எங்களுக்கு அதிக உரிமையில்லையா? ஆயினும் இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை; மாறாக, கிறிஸ்துவின் நற்செய்திக்கு எங்களால் எந்தத் தடையும் ஏற்படாதபடி எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளுகிறோம்.
13 கோயிலில் பணியாற்றுவோர் கோயில் காணிக்கையிலிருந்தே உணவு பெறுவர்; பீடத்தில் ஊழியஞ் செய்வோர் பீடத்துப் பலிப்பொருளில் பங்குகொள்வர்.
14 இது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறே, நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியாலேயே பிழைப்பு கிடைக்க வேண்டுமென்று ஆண்டவர் கட்டளையிட்டார்.
15 நானோ இவ்வுரிமைகளில் ஒன்றையேனும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவ்வுரிமைகள் எனக்கு வேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. இப்படி உரிமை பாராட்டுவதை விடச் சாவதே எனக்கு நலம்,.
16 நான் பாராட்டக்கூடிய பெருமையை யாரும் வெறுமையாக்க விடமாட்டேன். நற்செய்தியை அறிவிப்பதுகூட நான் பெருமைப் படுவதற்குரியதன்று, அது என்மேல் சுமத்தப்பட்ட கடமையே. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ! எனக்குக் கேடு;
17 நானாகவே இந்த வேலையை மேற்கொண்டிருந்தால், அதற்குத் தக்க ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் அது என்மேல் சுமத்தப்பட்டதாயிருப்பதால், கண்காணிப்பாளன் என என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலையே செய்கிறேன்.
18 ஆகவே,. எனக்குரிய ஊதியம் எது? நற்செய்தியை நான் அறிவிக்கும்போது அந்த நற்செய்தி எனக்குத் தரும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளாமல், உங்களுக்கு எச்செலவுமின்றி, அந்நற்செய்தியை வழங்குவதே எனக்குரிய ஊதியம்.
19 இவ்வாறாக, நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும், மிகுதியான மக்களை வசமாக்க என்னையே எல்லார்க்கும் அடிமையாக்கினேன்.
20 யூதர்களை வசமாக்க, யூதருக்கு யூதனைப்போல் ஆனேன். யூத சட்டத்திற்குட்பட்டவர்களை வசமாக்க, நான் அதற்கு உட்படாதவனாயிருந்தும், அச்சட்டத்திற்குட்பட்டவர்களுக்கு அவர்களைப்போல் ஆனேன்.
21 திருச்சட்டத்தை அறியாதவர்களை வசமாக்க, அவர்களுக்காகச் சட்டம் அறியாதவனைப் போல் ஆனேன். நானோ கடவுளின் சட்டத்தை அறியாதவன் அல்லேன். 'கிறிஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டவனே.
22 வலிமையற்றவர்களை வசமாக்க, வலிமையற்றவர்களுக்கு வலிமையற்றவன் ஆனேன். எப்படியேனும் ஒரு சிலரையாவது மீட்க, எல்லார்க்கும் எல்லாம் ஆனேன்.
23 நற்செய்தியின் பலனில், பங்குபெறவேண்டி நற்செய்திக்காகவே இவையெல்லாம் செய்கிறேன்.
24 பந்தயத் திடலில் ஓட வந்திருப்போர் எல்லாரும் ஓடினாலும், பரிசு பெறுபவன் ஒருவனே என்பது உங்களுக்குத் தெரியாதா? பரிசு பெறுவதற்காக நீங்களும் அவர்களைப் போல் ஓடுங்கள்.
25 பந்தயத்தில் போட்டியிடுகிறவர்கள் எல்லாரும் தங்களை எல்லாவகையிலும் ஒடுக்குகிறார்கள்; அவர்கள் அழிவுறும் வெற்றிவாகை பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள். நாமோ அழியாத வெற்றிவாகை அடைவதற்காக இப்படிச் செய்கிறோம்.
26 ஆகையால் நான் ஓடுவது குறிக்கோள் இல்லாமல், அன்று நான் மற்போர் புரிவது காற்றில் குத்துபவன்போல் அன்று.
27 பிறருக்கு நற்செய்தி அறிவித்தபின், நானே தகுதியற்றவன் என நீக்கப்படாதவாறு என் உடலை ஒறுத்து அடிமைப்படுத்துகிறேன்.
அதிகாரம் 10
1 சகோதரர்களே, உங்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்; நம் முன்னோர் அனைவரும் மேகத்தின் கீழ் நடந்தனர்; அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.
2 மோயீசனோடு உறவு விளைத்த ஞானஸ்நானம் ஒன்றை அவர்கள் அனைவரும் இவ்வாறு அம்மேகத்திலும் கடலிலும் பெற்றனர்.
3 இயற்கைக்கு மேற்பட்ட அதே உணவை அனைவரும் உண்டனர்.
4 இயற்கைக்கு மேற்பட்ட அதே பானத்தை அனைவரும் பருகினர். 'தங்களைப் பின் தொடர்ந்த பாறையிலிருந்து பானம் பருகி வந்தனர். அப்பாறையோ இயற்கைக்கு மேற்பட்டது; அது கிறிஸ்துவே என்க.
5 ஆயினும் அவர்களுள் பெரும்பாலோர் மேல் கடவுள் பிரியம் கொள்ளவில்லை; அவர்கள் பிணங்கள் பாலை நிலமெங்கும் சிதறிக்கிடந்தன.
6 அவர்கள் தீயன இச்சித்ததுபோல் நாமும் இச்சிக்கலாகாது எனக் காட்டவே இவை நமக்கு முன் அடையாளமாய் நிகழ்ந்தன.
7 அவர்களுள் சிலர் சிலைவழிபாட்டினர் ஆனது போல நீங்களும் ஆகாதீர்கள். அவர்களைக் குறித்துத்தான், ' மக்கள் உண்ணவும் குடிக்கவும் அமர்ந்தார்கள்; களியாட்டம் நடத்த எழுந்தார்கள் ' என்று எழுதியிருக்கிறது.
8 அவர்களுள் சிலர் வேசித்தனத்தில் ஈடுபட்டு ஒரே நாளில் இருபத்துமூவாயிரம் பேர் மடிந்தனர்; அவர்களைப் போல் நாமும் வேசித்தனத்தில் ஈடுபடலாகாது.
9 அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்துப் பாம்புகளால் அழிந்துபோயினர்; அவர்களைப்போல் நாமும் ஆண்டவரைச் சோதிக்கலாகாது.
10 அவர்களுள் சிலர் முணுமுணுத்து அழிவு விளைவிக்கும் தேவதூதனால் மாண்டனர்; அவர்களைப் போல் நீங்களும் முணுமுணுக்காதீர்கள்.
11 அவர்களுக்கு நிகழ்ந்த இவையெல்லாம் ஒரு முன்னடையாளம். இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு அறிவு புகட்டும் படிப்பினையாக இவை எழுதப்பட்டன.
12 ஆகையால், நிலையாய் நிற்பதாக நினைக்கிறவனுக்கு எச்சரிக்கை, அவன் நிலைகுலைந்து போகலாம்.
13 மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைத் தாங்கிக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழி செய்வார்.
14 ஆகையால், என் அன்புக்குரியவர்களே, சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.
15 உங்களை விவேகிகள் என்று மதித்துப் பேசுகிறேன்; நான் சொல்லப்போவதைக் குறித்து நீங்களே ஆய்ந்து முடிவு செய்யுங்கள்.
16 திருக்கிண்ணத்தை ஏந்தி நாம் இறைபுகழ் கூறுகிறோமே; அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அன்றோ? நாம் அப்பத்தைப் பிட்கிறோமே; அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அன்றோ?
17 அப்பம் ஒன்றே; ஆதலால், நாம் பலராயினும் ஒரே உடலாய் உள்ளோம்; ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குபெறுகிறோம்.
18 பழைய இஸ்ராயேல் மக்களைப் பாருங்கள்; பலிப்பொருளை உண்பவர்கள் பலிப்பீடத்தோடு உறவுக்கொள்கிறார்கள் அல்லரோ
19 இப்படி நான் சொல்லும்போது, சிலைகளுக்குப் படைத்ததையோ, சிலையையோ பொருட்படுத்த வேண்டுமென்பதா என் கருத்து? இல்லை.
20 சிலைகளுக்குப் படைப்பவர்கள் பலியிடுவது கடவுளுக்கு அன்று, பேய்களுக்கே என்பது தான் கருத்து. நீங்கள் இவ்வாறு பேய்களோடு உறவு கொண்டவர்களாவதை நான் விரும்பேன்.
21 நீங்கள் ஆண்டவரின் கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் பருக இயலாது. ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குபெற இயலாது.
22 ஆண்டவருக்குச் சினமூட்ட நினைப்பதா? அவரைவிட நாம் ஆற்றல் மிக்கவர்களோ?
23 ' எதையும் செய்ய உரிமையுண்டு' என்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயன் தராது. எதையும் செய்ய உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எல்லாமே ஞானவளர்ச்சி தராது.
24 யாரும் தன்னலத்தை நாடலாகாது; அனைவரும் பிறர் நலத்தையே நாடவேண்டும்.
25 கடையில் விற்கிற இறைச்சி எதையும் வாங்கி உண்ணலாம்; கேள்வி கேட்டு, மனச்சாட்சியைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
26 ஏனெனில், ' மண்ணுலகும் அதிலுள்ளதனைத்தும் ஆண்டவருடையதே'.
27 புறச் சமயத்தான் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, நீங்கள் அதற்குப் போக விரும்பினால், பரிமாறுவது எதுவாயினும் உண்ணுங்கள்; கேள்வி கேட்டு மனச்சாட்சியைக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
28 ஆனால் யாராவது, ' இது படையல்' என்று உங்களுக்குச் சொன்னால், அவ்வாறு குறிப்பிட்டவனை முன்னிட்டும் மனச்சாட்சியின் பொருட்டும் அதை உண்ணாதீர்கள்.
29 நான் குறிப்பிடுவது உங்கள் மனச்சாட்சியன்று, மற்றவனுடைய மனச்சாட்சியே. ' என் செயலுரிமை மற்றவனுடைய மனச்சாட்சிக்கு ஏன் கட்டுப்படவேண்டும்?
30 நான் நன்றிக்கூறி எதையேனும் உண்டால், அவ்வாறு நன்றிகூறி உண்கிற உணவைப்பற்றி நான் பழிச்சொல்லுக்கு ஆளாவானேன் ' என்று ஒருவன் கேட்கலாம்.
31 நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாம் கடவுளின் மகிமைக்கெனச் செய்யுங்கள்.
32 யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடைஞ்சலாய் இராதீர்கள்.
33 நானும் அவ்வாறே அனைத்திலும் அனைவருக்கும் உகந்தவனாய் இருக்க முயலுகிறேன். எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.
அதிகாரம் 11
1 நான் கிறிஸ்துவைப்போல் நடக்கிறவாறே நீங்களும் என்னைப்போல் நடந்துகொள்ளுங்கள்.
2 எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களிடம் கையளித்ததையெல்லாம் கையளித்தவாறே நீங்கள் கடைபிடித்து வருவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
3 ஆனால் நீங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆணுக்குக் தலையாய் இருப்பவர் கிறிஸ்து பெண்ணுக்குத் தலையாய் இருப்பவன் ஆண், கிறிஸ்துவுக்குத் தலையாய் இருப்பவர் கடவுள்.
4 செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தன் தலையை மூடிக்கொள்ளும் ஆண் எவனும் தன் தலையை இழிவுபடுத்துகிறான்.
5 ஆனால் செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தலைக்கு முக்காடிடாத பெண் எவளும் தன் தலையை இழிவுபடுத்துகிறாள். அது அவள் தலையை மழித்துவிட்டதுபோலாகும்.
6 பெண்கள் முக்காடிடவில்லையானால், கூந்தலை வெட்டிவிடட்டும். கூந்தலை வெட்டிவிடுவதோ, மழித்துவிடுவதோ பெண்ணுக்கு இழிவு என்றால் தலைக்கு முக்காடிட்டுக்கொள்ளட்டும்.
7 ஆண்மகன் தலையை மூடிக்கொள்ளலாகாது. ஏனெனில், அவன் கடவுளின் சாயலும், அவரது மாட்சியின் எதிரொளியும் ஆவான்.
8 பெண்ணோ ஆணின் மாட்சிக்கு எதிரொளி. ஏனெனில், பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை; ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்.
9 மேலும் பெண்ணுக்காக ஆண் உண்டாக்கப்படவில்லை; ஆணுக்காகத்தான் பெண் உண்டாக்கப்பட்டவள்.
10 ஆகையால் வானதூதர்களை முன்னிட்டு, பெண் தன் தலையின் மேல் பெண்மைக்குரிய பெருமையின் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்,.
11 ஆயினும் கிறிஸ்துவ ஒழுங்கு முறையில் பெண் இனம் இன்றி, ஆண் இனம் இல்லை. ஆண் இனம் இன்றிப் பெண் இனம் இல்லை.
12 ஏனெனில், ஆணிடமிருந்து பெண் தோன்றியவாறே பெண்ணின் வழியாய் ஆணும் தோன்றுகிறான்; ஆனால் யாவும் கடவுளிடமிருந்து தான் வருகின்றன.
13 முக்காடின்றிக் கடவுளை நோக்கிச் செபித்தல் பெண்ணுக்கு அழகா? நீங்களே சொல்லுங்கள்.
14 ஆண் நீண்ட முடி வளர்ப்பது அவனுக்கு இழிவு என்றும், பெண் கூந்தலை வளர்ப்பது அவளுக்குப் பெருமை என்றும் இயற்கையே உங்களுக்குக் கற்பிக்க வில்லையா?
15 ஏனெனில் கூந்தல் அவளுக்குப் போர்வைப்போல் அமைந்துள்ளது.
16 இதைப்பற்றி வாக்குவாதம் செய்ய நினைப்பவனுக்கு நான் சொல்வது: அத்தகைய வழக்கம் எங்கள் நடுவிலும் இல்லை; கடவுளின் எந்தச் சபையிலும் இல்லை.
17 இந்த அறிவுரைகளை நான் கூறும்போது வேறொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்; அது உங்களுக்குப் பெருமை தராது. நீங்கள் ஒன்று கூடும்போது உங்களுக்கு நன்மையை விடத் தீமையே விளைகிறது.
18 முதலாவதாக, நீங்கள் சபையில் கூடும்போது உங்கள் நடுவில் பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அந்தச் செய்தியை நம்புகிறேன்.
19 உங்கள் நடுவில் பிரிவினைகள் உண்டாகத் தான் செய்யும். அதனால் உங்களுள் தகுதியுடையோர் யாரனெத் தெரியவரும்-.
20 இனி, நீங்கள் ஒன்றாகக் கூடி உண்பது ஆண்டவரின் விருந்தன்று, உங்கள் சொந்த விருந்தே.
21 ஏனெனில், நீங்கள் உண்ணும்போது, ஒவ்வொருவனும் உண்பதற்கு முந்திக்கொள்வதால் ஒருவன் பசியாய் இருக்கிறான். வேறொருவன் குடிவெறி கொள்கிறான்.
22 உண்டு குடிக்க உங்களுக்கு வீடு இல்லையா? அல்லது இல்லாதவர்களை நாணச்செய்து கடவுளின் சபையை இழிவுபடுத்துகிறீர்களா? என்ன சொல்வது உங்களைப் புகழ்வதா? இதில் உங்களை எப்படிப் புகழ்வது?
23 ஏனெனில், நான் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டது இதுவே - அதையே நான் உங்களுக்குக் கையளித்தேன் அதாவது, ஆண்டவராகிய இயேசு, தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து, நன்றி கூறி அதைப் பிட்டு:
24 ' இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.
25 அவ்வாறே உணவு அருந்திய பின் கிண்ணத்தையும் எடுத்து ' இக்கிண்ணம் எனது இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை. இதைப் பருகும் போதெல்லாம் என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார்.
26 எனவே, நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவர் வரும் வரையில் அவரது மரணத்தை அறிக்கையிடுகிறீர்கள்.
27 ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறாள்.
28 ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.
29 ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான்.
30 ஆதலால்தான் உங்களிடையே நலிந்தவரும் நோயுற்றவரும் பலர் உள்ளனர்; மற்றும் பலர் இறந்து போகின்றனர்.
31 நம்மை நாமே தீர்ப்புக்குட்படுத்திக் கொண்டால், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோம்.
32 அப்படியே ஆண்டவரின் தீர்ப்புக்குள்ளானாலும், அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார் என்பதே கருத்து. இவ்வுலகத்தோடு நாமும் அழிவுத்தீர்ப்பை அடையாதிருக்கவே அவ்வாறு செய்கிறார்.
33 எனவே, என் சகோதரர்களே, உண்பதற்கு நீங்கள் ஒன்று கூடும்போது, ஒருவர் ஒருவருக்காகத் காத்திருங்கள்.
34 பசிக்கு உண்பதானால் வீட்டிலேயே உண்ணுங்கள்; அப்போது, நீங்கள் கூடிவருவது தண்டனைத் தீர்ப்புக்கு உரியதாய் இராது. மற்றதெல்லாம் நான் வரும்போது ஒழுங்குபடுத்துகிறேன்.
அதிகாரம் 12
1 சகோதரர்களே, ஆவிக்குரிய வரங்களைப் பற்றி நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்.
2 நீங்கள் புறச் சமயத்தினராய் இருந்தபோது உங்களுக்கு உண்டான ஏவுதல் எல்லாம் ஊமைச் சிலைகள்பால் தான் உங்களை ஈர்த்தது. இது உங்களுக்குத் தெரிந்ததே அன்றோ?
3 ஆதலால் உங்களுக்கு நான் அறிவிப்பது: கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் பேசும் போது, ' இயேசுவுக்குச் சாபம்' என்று யாரும் சொல்லுவதில்லை. அப்படியே பரிசுத்த ஆவியின் ஏவுதலாலன்றி ' இயேசு ஆண்டவர் ' என்று யாரும் சொல்லமுடியாது.
4 வரங்கள் பலவகை; ஆவியானவரோ ஒருவர்தான்.
5 திருப்பணிகள் பலவகை; ஆண்டவரோ ஒருவர் தான்.
6 ஆற்றல் மிக்க செயல்கள் பல வகை; கடவுளோ ஒருவர் தான். அவரே அனைத்தையும் அனைவரிலும் செயலாற்றுகிறார்.
7 ஆவியானவரின் செயல் வெளிப்படும் ஆற்றல் அவனவனுக்கு அருளப்படுவது பொது நன்மைக்காகவே.
8 ஒருவனுக்கு ஆவியின் வழியாக ஞானம் நிறைந்த பேச்சு அருளப்படுகிறது. மற்றவனுக்கு அறிவு செறிந்த பேச்சு அளிக்கப்படுவது அதே ஆவியின் ஆற்றலால்தான்.
9 வேறொருவனுக்கு விசுவாசம் அருளப்படுவது அதே ஆவியால்தான். பிறிதொருவனுக்கு நோய்களைக் குணமாக்கும் வரம் கிடைப்பது அவ்வொரே ஆவியால் தான்.
10 ஒருவனுக்குப் புதுமை செய்யும் ஆற்றலும், இன்னொருவனுக்கு இறைவாக்கு வரமும், வேறொருவனுக்கு ஆவிகளைத் தேர்ந்து தெளியும் திறனும் வேறொருவனுக்குப் பல்வகைப் பரவசப் பேச்சும், பிறிதொருவனுக்கு அதை விளக்கும் திறனும் கிடைக்கின்றன.
11 இவற்றையெல்லாம தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்துச் செயலாற்றுகிறவர் அந்த ஒரே ஆவிதான்.
12 உடல் ஒன்று, உறுப்புகள் பல; உடலின் உறுப்புகள் பலவகையாயினும், ஒரே உடலாய் உள்ளன; கிறிஸ்துவும் அவ்வாறே என்க.
13 ஏனெனில், யூதர் அல்லது கிரேக்கர், அடிமைகள் அல்லது உரிமைக்குடிகள் யாராயினும் நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோம்; ஒரே ஆவியால் தாகந்தணியப் பெற்றோம்.
14 உடல் ஒரே உறுப்பன்று; பல உறுப்புகளால் ஆனது.
15 நான் கையல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று கால் சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா?
16 'நான் கண்ணல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று காது சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா?
17 முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?
18 ஆனால், கடவுள் ஒவ்வொரு உறுப்பையும் தாம் விரும்பியவாறு உடலில் அமைத்தார்.
19 அவையெல்லாம் ஒரே உறுப்பாய் இருப்பின், உடல் என்பது ஒன்று இருக்குமா?
20 உண்மையில் உறுப்புகள் பல உள்ளன; உடலோ ஒன்றுதான்.
21 கண் கையைப் பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை" என்றோ, தலை கால்களைப் பார்த்து, "நீங்கள் எனக்குத் தேவையில்லை" என்றோ சொல்ல இயலாது.
22 அதுமட்டுமன்று; வலுவற்றவையாய்த் தோன்றும் உறுப்புகளே மிகத் தேவையானவை;
23 மதிப்புக் குறைவானவை என நாம் கருதும் உடலுறுப்புகளுக்கே மிகுதியான மதிப்பளித்துக் காக்கிறோம்; இழிவான உறுப்புகளே மிகுந்த மரியாதை பெறுகின்றன.
24 மாண்புள்ளவற்றுக்கு அது தேவையில்லை; உடலை உருவாக்கியபோது கடவுள் மதிப்பில்லாதவற்றுக்குச் சிறப்பான மதிப்புத் தந்தார்.
25 உடலில் பிளவு ஏற்படாமல் ஒவ்வொன்றும் மற்ற உறுப்புகள்மேல் அக்கறை காட்டவேண்டும் என்றே இப்படிச் செய்தார்.
26 உறுப்பு ஒன்று துன்புற்றால், எல்லா உறுப்புகளும் அதனுடன் சேர்ந்து துன்புறும்; உறுப்பு ஒன்று மாண்புற்றால், எல்லா உறுப்புகளும் சேர்ந்து இன்புறும்.
27 நீங்களோ கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு.
28 அவ்வாறே, திருச்சபையிலும் கடவுள், முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது இறைவாக்கினரையும், மூன்றாவது போதகரையும் எற்படுத்தினார்; பின்னர் புதுமை செய்யும் ஆற்றல், பின்பு நோய்களைக் குணமாக்கும் வரம், பிறர் சேவை, ஆளும் வரம், பல்வகைப் பரவசப் பேச்சு இவையுள்ளன.
29 அனைவருமா அப்போஸ்தலர்? எல்லாருமா இறைவாக்கினர்?
30 யாவரும் போதகரோ? எல்லாரும் நோய்களைக் குணமாக்கும் வரமுடையவரோ? எல்லாருமா பரவசப் பேச்சு பேசுகிறார்கள்? எல்லாருமா விளக்கம் சொல்லுகிறார்கள்?
31 ஆனால், நீங்கள் ஆர்வமாய்த் தேடவேண்டியது மேலான வரங்களையே. அனைத்திலும் சிறந்த நெறியை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன்.
அதிகாரம் 13
1 மண்ணோர் மொழிகளிலும் விண்ணோர் மொழிகளிலும் நான் பேசினும். அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் ஆனேன்.
2 இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும் மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்தாலும் அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும் மலைகளைப் பெயர்த்தகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும் அன்பு எனக்கு இல்லையேல், நான் ஒன்றுமில்லை.
3 எனக்குள்ளதெல்லாம் நான் வாரி வழங்கினும் எரிப்பதற்கு என் உடலைக் கையளித்தாலும் அன்பு எனக்கு இல்லையேல், எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
4 அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது. அன்பு அழுக்காறு கொள்ளாது. பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது,
5 இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, சீற்றத்திற்கு இடந்தராது, வர்மம் வைக்காது.
6 அநீதியைக் கண்டு மகிழ்வுறாது; உண்மையைக் கண்டு உளம் மகிழும்.
7 அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்; பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை; நம்பிக்கையில் தளர்வதில்லை; அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்,
8 அன்புக்கு என்றும் முடிவு இராது; இறைவாக்கு வரம் எது இருந்தாலும், அது ஒருநாள் இல்லமாற்போகும்; பரவசப் பேச்சு வரம் இருந்தால், அதுவும் முற்றுப்பெறும்; அறிவு வரம் இருந்தால், அதுவும் ஒருநாள் இல்லாமற் போகும்.
9 ஏனெனில், நமது அறிவு குறைவுள்ளது; நாம் உரைக்கும் இறைவாக்கும் குறைவுள்ளது;
10 நிறைவுள்ளது தோன்றும்பொழுது குறைவுள்ளது மறைந்துவிடும்.
11 நான் குழந்தையாய் இருந்தபோது, குழந்தையின் பேச்சு குழந்தையின் மனநிலை குழந்தையின் எண்ணம் கொண்டிருந்தேன். நான் பெரியவனாய் வளர்ந்த பின்னர், குழந்தைக்குரியதைக் களைந்துவிட்டேன்.
12 இப்பொழுது கண்ணாடியில் மங்கலாகக் காண்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்க் காண்போம். இப்பொழுது அரை குறையாய் அறிகிறேன்; அப்பொழுது கடவுள் என்னை அறிவதுபோல் நானும் அறிவேன்.
13 எனவே, விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன; இவற்றுள் தலைசிறந்தது அன்பே.
அதிகாரம் 14
1 அன்பை நாடுங்கள்; அதன் பின் ஆவிக்குரிய வரங்களை ஆவலோடு தேடலாம்; சிறப்பாக இறைவாக்கு வரத்தை விரும்புங்கள்.
2 எனெனில், பரவசப் பேச்சுப் பேசுகிறவன் மனிதர்களிடம் பேசுவதில்லை; கடவுளிடமே பேசுகிறான்; அவன் பேசுவதை யாருமே புரிந்து கொள்வதில்லை; ஆவியின் ஏவுதலால் மறைபொருள்களையே பேசுகிறான்.
3 இறைவாக்கு உரைப்பவனோ மனிதர்களிடம் பேசுகிறான்; அவன் உரைப்பது ஞான வளர்ச்சி தருகிறது; ஊக்கம் ஊட்டுகிறது; ஆறுதல் அளிக்கிறது.
4 பரவசப் பேச்சுப் பேசுபவன் தான் மட்டும் ஞான வளர்ச்சி பெறுகிறான்; ஆனால், இறைவாக்கு உரைப்போன் திருச்சபை ஞான வளர்ச்சிப் பெறச் செய்கிறான்.
5 நீங்கள் எல்லாரும் பரவசப் பேச்சுத் தாராளமாய்ப் பேசலாம்; ஆனால், அதைவிட நீங்கள் இறைவாக்கு உரைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பரவசப் பேச்சுப் பேசுகிறவன் திருச்சபை ஞான வளர்ச்சியடையும் படி விளக்கமும் கூறினாலொழிய அவனைவிட இறைவாக்குரைப்பவனே மேலானவன்.
6 சகோதரர்களே, நான் உங்களிடம் வந்து,. உங்களுக்குத் திருவெளிப்பாடு, ஞான அறிவு, இறைவாக்கு, போதனை இவற்றில் ஒன்றையேனும் எடுத்துச் சொல்லாமல் பரவசப்பேச்சு மட்டும் பேசினால், உங்களுக்குப் பயன் என்ன?
7 குழல் அல்லது யாழ் போன்ற உயிரற்ற இசைக்கருவிகளை எடுத்துக் கொள்வோம் அவை வேறுபட்ட ஓசையை எழுப்பாவிடில், குழலோசையையும் யாழிசையும் அறிவதெப்படி?
8 அவ்வாறே, எக்காளம் தெளிவாக முழங்காவிடில், போர் முனைக்கு எவன் ஆயத்தப்படுத்திக் கொள்வான்?
9 அவ்வாறே நீங்களும் பரவசப் பேச்சுப் பேசும்போது தெளிவாகப் பேசாவிட்டால், நீங்கள் சொல்வது விளங்குவதெப்படி? உங்கள் பேச்சு காற்றோடு போய் விடும்.
10 உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருக்கலாம்; அவற்றுள் பொருள் தராதது ஒன்றேனுமில்லை.
11 பேச்சொலியின் பொருள் எனக்கு விளங்காது இருந்தால், பேசுகிறவனுக்கு நான் அந்நியனாயிருப்பான்.
12 ஆதலால் ஆவிக்குரிய வரங்களை ஆர்வமாய்த் தேடும் நீங்கள் திருச்சபைக்கு ஞான வளர்ச்சி தரும் வரங்களில் மேன்மையடைய முயலுங்கள்.
13 எனவே, பரவசப் பேச்சுப் பேசுபவன் விளக்கம் கூறும் திறனைப்பெறச் செபிக்க வேண்டும்.
14 ஏனெனில், நான் பரவசப் பேச்சில் செபம் செய்தால், என் ஆவி எனக்குள் செபம் செய்யும், என் மனமோ பயன் பெறாது.
15 அப்படியானால் செய்யவேண்டியதென்ன? ஆவியாலும் செபிக்கவேண்டும், மனத்தாலும் செபிக்க வேண்டும். ஆவியாலும் புகழ்பாட வேண்டும், மனத்தாலும் புகழ் பாடவேண்டும்.
16 இல்லையேல், நீ ஆவியால் இறைபுகழ் கூறும்போது, சபையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் உனது நன்றிச் செபத்திற்கு எவ்வாறு ' ஆமென் ' எனச் சொல்லுவார்கள்? நீ பேசுவது அவர்களுக்குப் புரியவில்லையே!
17 நீ நன்றாகத் தான் நன்றி கூறுகிறாய்; ஆனாலும் மற்றவனுக்கு அதனால் ஞான வளர்ச்சி இல்லையே!
18 கடவுள் அருளால் உங்கள் அனைவரையும்விட மேலாக நான் பரவசப் பேச்சுப் பேசுகிறேன்.
19 ஆனாலும் நான் சபையிலே பேசினால் பரவசப் பேச்சில் பத்தாயிரம் சொற்கள் பேசுவதைவிட , மற்றவர்களுக்குக் கற்பிக்க அறிவுத் தெளிவோடு நாலைந்து சொல் மட்டுமே பேசுவதை விரும்புவேன்
20 சகோதரர்களே, அறிவுத் திறனில் குழந்தைகளாய் இராதீர்கள்; தீமையிலே குழந்தைகளாயும், அறிவுத் திறனில் முதிர்ந்தவர்களாயும் இருங்கள்.
21 ' வேற்று மொழியினர் வாயிலாகவும் வேற்றினத்தார் வாய்ச்சொல்லாலும் இந்த மக்களிடம் பேசுவேன். அப்பொழுதும் அவர்கள் எனக்குச் செவி கொடுக்க மாட்டார்கள் என்கிறார் ஆண்டவர் ' என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.
22 ஆகவே பரவசப் பேச்சு விசுவாசிகளுக்கன்று, அவிசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது. இறைவாக்கோ அவிசுவாசிகளுக்கன்று, விசுவாசிகளுக்கே அடையாளமாய் உள்ளது.
23 அப்படியிருக்க, முழுச்சபையும் ஒன்றாகக் கூடும்பொழுது, எல்லாரும் பரவசப் பேச்சுப் பேசினால், அங்கே வரும் பொதுமக்களோ அவிசுவாசிகளோ உங்களைப் பைத்தியக்காரர் என்று சொல்ல மாட்டார்களா?
24 ஆனால் எல்லாரும் இறைவாக்கு உரைக்கும்போது, அவிசுவாசியோ, பொதுமக்களுள் ஒருவனோ அங்கே வந்தால், அனைவரும் கூறுவது, அவனுடைய மனச்சாட்சியின் நிலையை எடுத்துக்காட்டி, அவனைத் தீர்ப்புக்கு உட்படுத்துகிறது.
25 அவனது உள்ளத்தில் மறைந்திருப்பது வெளிப்படும். அப்பொழுது அவன் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுது, ' உண்மையாகவே கடவுள் உங்களிடையில் உள்ளார் ' என அறிக்கையிடுவான்.
26 அப்படியானால், சகோதரர்களே, என்ன முடிவு செய்வது? நீங்கள் கூடிவரும்பொழுது. உங்களுள் ஒருவன் புகழ் பாடுவதாகவோ, போதனை செய்வதாகவோ, திருவெளிப்பாடு உரைப்பதாகவோ, பரவசப் பேச்சுப் பேசுவதாகவோ, விளக்கம் கூறுவதாகவோ இருந்தால், எல்லாம் ஞானவளர்ச்சி தர நடை பெறட்டும்.
27 பரவசப் பேச்சுப் பேசுவதாயிருந்தால், இருவர் பேசலாம்; மிஞ்சினால் மூவர் பேசலாம். ஆயினும் ஒருவர் பின் ஒருவராகப் பேசவேண்டும்; ஒருவன் விளக்கம் கூறட்டும்.
28 விளக்கம் கூறுபவன் இல்லாவிட்டால், அவர்கள் சபையில் பேசாதிருக்கட்டும்; தனக்குள் கடவுளோடு உரையாடட்டும்.
29 இறை வாக்கினரோ இருவர் அல்லது மூவர் பேசலாம்; மற்றவர்கள் அவர்கள் பேசுவதைத் தேர்ந்து தெளியட்டும்.
30 சபையில் அமைந்திருக்கும் ஒருவனுக்குத் திருவெளிப்பாடு அருளப்பட்டால் முன்னர் பேசிக்கொண்டிருந்தவன் நிறுத்திக்கொள்ளட்டும்.
31 நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்குரைக்கலாம்; அப்போதுதான் எல்லாரும் கற்றுக் கொள்ளவும், ஊக்கம் பெறவும் இயலும்.
32 இறைவாக்கினர் தாங்கள் பெற்ற ஏவுதலை அடக்கிக் கொள்ள முடியும்.
33 ஏனெனில் கடவுள் குழப்பத்தின் கடவுளல்லர், அமைதியின் கடவுளே. இறை மக்களின் எல்லாச் சபைகளிலும் நடப்பதுபோல், சபையில் பெண்கள் பேசாதிருக்க வேண்டும்..
34 பேச அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்க வேண்டும். திருச்சட்டமும் அவ்வாறே கூறுகிறது.
35 அவர்கள் ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால் வீட்டிலே தங்கள் கணவரைக் கேட்டுக்கொள்ளட்டும். ஏனெனில் சபையில் பேசுவது பெண்களுக்கு அழகன்று.
36 கடவுளின் வாக்கு உங்களிடமிருந்தா வெளிப்பட்டது?
37 உங்களிடம் மட்டுமா வந்தது? ஒருவன் தான் இறைவாக்கினன் என்றோ, ஆவியின் ஏவுதல் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது ஆண்டவருடைய கட்டளை என அவன் ஒத்துக்கொள்வானாக.
38 இதை எவனாவது ஏற்காவிடில், நீங்களும் அவனை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
39 ஆகையால் சகோதரர்களே, இறைவாக்குரைப்பதையே ஆர்வமாய்த் தேடுங்கள்; பரவசப் பேச்சுப் பேசுவதையும் தடுக்காதீர்கள்.
40 ஆனால் எல்லாம் பாங்கான முறையில் ஒழுங்காக நடைபெறவேண்டும்.
அதிகாரம் 15
1 சகோதரர்களே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன்; நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
2 நான் உங்களுக்கு நற்செய்தியாக அறிவித்த வாக்கை நீங்கள் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருந்தால், அதனாலேயே மீட்படைவீர்கள்; இல்லையேல் நீங்கள் விசுவசித்தது வீண் என்று சொல்ல வேண்டியிருக்கும்.
3 ஏனெனில், நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானதாக உங்களுக்குக் கையளித்ததும் எதுவெனில், மறைநூலில் உள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.
4 அடக்கம் செய்யப்பட்டு, மறைநூலில் உள்ளபடியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
5 கோபுவுக்கும் பின்னர் பன்னிருவர்க்கும் தோன்றினார்.
6 பின்பு ஒரே சமயத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்களுக்குத் தோன்றினார் அவர்களுள் பலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர்; ஒரு சிலர் இறந்து போயினர்.
7 பின்னர் யாகப்பருக்கும், அடுத்து அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார்.,
8 எல்லாருக்கும் கடைசியாக, காலாந்தப்பிய பிறவி போன்ற எனக்கும் தோன்றினார்.
9 நானோ அப்போஸ்தலர்களுள் மிகச் சிறியன்; கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்திய நான் அப்போஸ்தலன் என்னும் பெயர்பெறத் தகுதியற்றவன்.
10 ஆயினும் நான் இப்பொழுது இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால் தான்; அவர் எனக்குத் தந்த அருளோ வீணாய்ப் போகவில்லை; அவர்கள் அனைவரையும் விட நான் மிகுதியாகவே உழைத்தேன் -- ஆனால் உழைத்தவன் நானல்லேன், என்னோடு இருக்கும் இறையருள்தான் உழைத்தது --
11 நானோ அவர்களோ யார் போதித்தாலும் நாங்கள் அறிவிப்பது இதுவே; நீங்கள் விசுவசித்ததும் இதுவே.
12 இனி, கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என அறிவிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்ப்பதில்லை என உங்களுள் சிலர் சொல்வெதப்படி?
13 இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை.
14 கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், எங்கள் தூதுரை பொருளற்றதே, உங்கள் விசுவாசமும் பொருளற்றதே.
15 நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சாட்சி சொல்பவர் ஆவோம். ஏனெனில், இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்பது உண்மையானால், கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தார் என்று நாங்கள் சொன்னபோது கடவுள் பெயரால் பொய்ச் சாட்சி சொன்னவர்கள் ஆனோம்.
16 ஏனெனில், இறந்தவர்கள் உயிர்த்தெழுவதில்லை யென்றால் கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை.
17 கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றாலோ உங்கள் விசுவாசம் வீணானதே. நீங்கள் இன்னும் பாவ நிலையிலேயே இருக்கிறீர்கள்.
18 அப்படியானால், கிறிஸ்துவுக்குள் துஞ்சியவர்களும் அழிந்துவிட்டனர்.
19 இம்மை வாழ்வுக்காக மட்டும் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தவர்களாயிருந்தால், எல்லாரையும் விட நாம் இரங்குவதற்குரியவர் ஆவோம்.
20 ஆனால் உள்ளபடி,. இறந்தோரிடமிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; துஞ்சினோரின் முதற் கனி அவரே.
21 மனிதன் வழியாய்ச் சாவு உண்டானது போல, மனிதன் வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் உண்டு.
22 ஆதாமில் அனைவரும் இறந்ததுபோல கிறிஸ்துவில் எல்லாரும் உயிர்பெறுவர்.,
23 அதை ஒவ்வொருவனும் குறிப்பிட்ட வரிசையின்படி பெறுவான். முதற்கனியாகக் கிறிஸ்து உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் அவருடைய வருகையின்போது உயிர்பெறுவார்.
24 அதன் பின்னர் முடிவு வரும்; அப்போது, தலைமை ஏற்போர், ஆட்சி புரிவோர், வலிமை மிக்கோர் அனைவரையும் அவர் தகர்த்துவிட்டுக் கடவுளும் தந்தையுமானவரிடம் அரசை ஒப்படைப்பார்.
25 பகைவர் அனைவரையும் அவரது கால்மணை ஆக்கும்வரை அவர் அரசாள வேண்டியிருக்கிறது.
26 இறுதிப் பகைவனாகத் தகர்க்கப்படுவது சாவு.
27 ' அனைத்தையும் அவருக்கு அடிப்பணியச் செய்தார் ' என்றுள்ளதன்றோ? 'அனைத்தும் அடிபணிந்துள்ளன ' என்று சொல்லும்போது அனைத்தையும் அவருக்கு அடிபணியச் செய்த இறைவன் அடிபணியவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
28 அனைத்தும் அவருக்கு அடிபணிந்திருக்கும்போது, கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்படி, மகனும் அனைத்தையும் தமக்குப் பணிச்செய்த இறைவனுக்குத் தாமே அடிபணிவார்.
29 மேலும் இறந்தவர்களுக்காகச் சிலர் ஞானஸ்நானம் பெறுகிறார்களே, உயிர்த்தெழுதல் இல்லையென்றால் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தவர்கள் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவானேன்?
30 நாங்கள் கூட எந்நேரமும் ஆபத்துகளுக்கு உள்ளாவதேன் ?
31 ஆம் நாடோறும் நான் மரண வாயிலில் நிற்கிறேன். சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உங்களைக் குறித்து நான் கொண்டிருக்கிற பெருமையின்மேல் ஆணையாக இதைச் சொல்லுகிறேன்.
32 எபேசு நகரில் கொடிய விலங்குகளோடு நான் போராடினேனே, அதை நான் மனித நோக்கத்திற்காகச் செய்திருந்தால், அதனால் எனக்கு என்ன பயன்? இறந்தோர் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், ' உண்போம், குடிப்போம்; நாளைக்கு மடிவோம். '
33 ஏமாந்து போக வேண்டாம்; ' தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் '
34 மயக்கம் தெளிந்து, நீதியோடு ஒழுகி, பாவத்தை விட்டு விலகுங்கள். உங்களுள் சிலர் கடவுளை அறியாதவர் போல் இருக்கின்றனர்; உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.
35 ஆயினும், ' இறந்தோர் எப்படி உயிர்த்தெழுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள் ?' என்று ஒருவன் கேட்கலாம்.
36 அறிவிலியே, நீ விதைப்பது மடிந்தாலொழிய, புத்துயிர் பெறாது;
37 முளைக்கபோகும் உருவத்தில் நீ அதை விதைக்கவில்லை; வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோ நீ விதைக்கிறாய்.
38 கடவுளோ தமது விருப்பம்போல் அதற்கு உருவம் தருகிறார்; ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவத்தையே தருகிறார்.
39 எல்லா ஊனும் ஒரே ஊனன்று; மனிதரின் ஊன் வேறு, விலங்குகளின் ஊன் வேறு, மீன்களின் ஊன் வேறு
40 விண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு, மண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு, மண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு.
41 கதிரோனின் சுடர் வேறு, நிலவின் சுடர் வேறு, விண்மீன்களின் சுடர் வேறு. சுடரில் விண்மீனுக்கு விண்மீன் வேறுபடுகிறது.
42 இவ்வாறே, இறந்தோர் உயிர்த்தெழுதலும் இருக்கும். விதைக்கபடுவது அழிவுக்குரியது, உயிர்த்தெழுவதோ அழியாதது.
43 விதைக்கப்படுவது இழிவானது, உயிர்த்தெழுவதோ மாட்சிமைக்குரியது. விதைக்கப்படுவது வலுவற்றது. உயிர்த்தெழுவதோ வலிமையுள்ளது,.
44 விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல்.
45 மனித உயிர் கொண்ட உடல் உள்ளதுபோல, தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலும் உள்ளது. மறைநூலில் உள்ளபடி முதல் மனிதனாகிய ஆதாம் மனித உயிருள்ளவன் ஆனான்.
46 கடைசி ஆதாமோ உயிர் தரும் ஆவியானார். முதலில் உண்டானது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்டதன்று, மனித உயிர்கொண்டது தான்; தேவ ஆவிக்குரியது பிந்தியதே.
47 முதல் மனிதன் மண்ணிலிருந்து வந்தான். அவன் மண்ணைச் சார்ந்தவன். இரண்டாம் மனிதனோ விண்ணிலிருந்து வந்தார்.
48 மண்ணைச் சார்ந்த அவன் எப்படியோ, அப்படியே மண்ணைச் சார்ந்த யாவரும் உள்ளனர்; விண்ணைச் சார்ந்த இவர் எப்படியோ, அப்படியோ விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
49 ஆகவே, மண்ணைச் சார்ந்தவனின் சாயலைத் தாங்கியிருந்தது போல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் தாங்கியிருப்போம்.
50 சகோதரர்களே, நான் சொல்வது இதுவே; ஊனும் இரத்தமும் கடவுளின் அரசை உரிமையாகப் பெற முடியாது; அழிவுள்ளது அழியாமையை உரிமையாகப் பெறாது.
51 இதோ உங்களுக்கு மறைபொருளானது ஒன்று சொல்லப்போகிறேன்; நாம் அனைவருமே சாகமாட்டோம்; ஆனால் அனைவருமே வேற்றுரு பெறுவோம்.
52 ஒரு நொடியில், கண்ணிமைப் பொழுதில், கடைசி எக்காளம் முழங்க இது நடைபெறும். ஆம், எக்காளம் முழங்கும்; அப்பொழுது இறந்தோர் அழிவில்லாதவர்களாய் உயிர்த்தெழுவர்; நாமும் வேற்றுரு பெறுவோம்.
53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்துகொள்ள வேண்டும்; சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்துகொள்ள வேண்டும்.
54 அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையையும், சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையையும் அணிந்துகொள்ளும் பொழுது, எழுதியுள்ள இவ்வாக்கு நிறைவேறும்:
55 ' சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?'
56 பாவமே சாவின் கொடுக்கு; பாவத்திற்கு வலிமை தருவது சட்டம்.
57 ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நமக்கு இந்த வெற்றிதரும் கடவுளுக்கு நன்றி.
58 ஆகையால், என் அன்பார்ந்த சகோதரர்களே, உறுதியாய் இருங்கள், நிலை பெயராதீர்கள். உங்கள் உழைப்பு ஆண்டவருக்குள் வீணாவதில்லை என்பதை அறிந்து, ஆண்டவரின் வேலையைச் செய்வதில் சிறந்து விளங்குங்கள்.
அதிகாரம் 16
1 இறைமக்களுக்காகச் செய்யப்படும் தண்டலைக் குறித்து உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது: கலாத்திய நாட்டுச் சபைகளுக்கு நான் தந்த திட்டத்தை நீங்களும் பின்பற்றுங்கள்.
2 ஞாயிறுதோறும் உங்களுள் ஒவ்வொருவனும் தனது வரவுக்கேற்றவாறு சேமித்து வைக்கட்டும்; நான் வந்த பிறகு தண்டல் செய்யத் தொடங்க வேண்டாம்.
3 நான் வரும்போது நீங்கள் யாரைத் தகுதியுள்ளவர்கள் எனக் குறிப்பிடுவீர்களோ அவர்களிடம் அறிமுகக் கடிதம் கொடுத்து, உங்கள் நன்கொடையை யெருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
4 நானே அதை நேரில் எடுத்துச்செல்வது தக்கது என்று தோன்றினால், அவர்கள் என்னோடு வரட்டும்.
5 மக்கெதோனியா வழியாகப் பயணம் செய்ய எண்ணியிருக்கிறேன். அந்த நாட்டைக் கடந்தபின், உங்களிடம் வருவேன்.
6 ஒருவேளை நான் உங்களோடு தங்கலாம். குளிர்காலத்தை அங்கே கழிக்கவும் நேரலாம்; இவ்வாறு நான் போகுமிடத்திற்கெல்லாம் நீங்களே என்னை வழியனுப்புவீர்கள்.
7 போகிற போக்கில் உங்களைப் பார்த்துவிட்டுப் போக எனக்கு மனமில்லை. ஆண்டவர் திருவுளங்கொண்டால், உங்களோடு சிறிது காலம் தங்கியிருப்பேன்.
8 பெந்தெகொஸ்தே திருநாள் வரை எபேசு நகரில் தங்கியிருப்பேன்.
9 பயன் நிறைந்த பணியாற்ற நல்ல வாய்ப்பு அங்கே இருக்கிறது; பகைவரும் பலர் இல்லாமலில்லை.
10 தீமோத்தேயு வந்தால், உங்களால் அவருக்கு எவ்விதக் கவலையும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் அவரும் என்னைப்போல் ஆண்டவரின் வேலையைத்தான் செய்கிறார்.
11 யாரும் அவரை இழிவாக எண்ணக் கூடாது; அவர் அங்கிருந்து என்னிடம் திரும்பி வரும்போது அன்போடு அனுப்பிவையுங்கள்; நானும் சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.
12 நம் அப்பொல்லோவைப்பற்றிக் கேட்டீர்களே, அவர் சகோதரர்களுடன் உங்களிடம் வரும்படி மிகவும் கேட்டுக்கொண்டேன்; ஆனால் இப்பொழுது வர அவருக்கு மனமே இல்லை; வாய்ப்புக் கிடைக்கும்பொழுது வருவார்.
13 விழித்திருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கள், ஆண்மையுடன் நடந்துகொள்ளுங்கள்,
14 மன வலிமை காட்டுங்கள்,. உங்கள் வாழ்வு அன்பு மயமாய் அமையட்டும்.
15 சகோதரர்களே, இன்னுமொரு வேண்டுகோள்: ஸ்தேபனாவின் வீட்டாரை நீங்கள் அறிவீர்கள்,. அவர்கள் தாம் அக்காயா நாட்டின் முதற்கனி; இறைமக்களுக்குப் பணிபுரியத் தங்களையே கையளித்தனர்.
16 இத்துணை நல்லவர்களையும் இன்னும் அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் எல்லாரையும் உங்கள் தலைவர்களென மதியுங்கள்.
17 ஸ்தேபனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோர் வந்தது எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கில்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.
18 என் உள்ளத்தையும் உங்கள் உள்ளத்தையும் கூடக் குளிரச்செய்தார்கள்; இத்தகைய நன்மக்களைப் பாராட்டுங்கள்.
19 ஆசிய நாட்டுச் சபைகள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன; ஆக்கிலாவும் பிரிஸ்காளும், இவர்களது வீட்டில் கூடுகின்ற சபையினரும் ஆண்டவருக்குள் உங்களுக்கு வாழ்த்துப் பல கூறுகிறார்கள். சகோதரர் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்;
20 நீங்களும் பரிசுத்த முத்தங்கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
21 இவ்வாழ்த்து சின்னப்பனாகிய நான் என் கைப்பட எழுதியது.
22 ஆண்டவரை நேசிக்காதவன் சபிக்கப்படுக. ' மாரனாதா, ' ஆண்டவரே வருக.
23 ஆண்டவராகிய இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
24 கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் அனைவருக்கும் என் அன்பு.