நவம்பர் 1

சாவுக்குப் பின் மூன்று ஸ்தலம் உண்டென்று காண்பிக்கும் பொது விளக்கமாவது.

தியானம் 

மனுஷர் எல்லாரும் சாகிறது நிச்சயம் . ஒவ்வொருவன் ஒரு முறை மாத்திரம் சாகிரதொழிய இரண்டு மூன்று முறை மரிப்பாரில்லை . சாவுக்குப் பின் தீர்வை நடக்கும் என்பது உறுதியான சத்தியமாகையால் இந்தத் தீர்வைக்குத் தப்பிப் போக வழி காணோம் . இந்தத் தீர்வையிலே சர்வ நீதியுள்ள சர்வேசுரன் ஒவ்வொருவன் புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் சம்பாவனையாவது ஆக்கினையாவது கட்டளை இடுவாரென்கிறதற்குச் சந்தேகம் இல்லை. சில புண்ணியாத்துமாக்கள் முழுமையும் பரிசுத்தராய் இஷ்டப் பிரசாதத்தோடே மரணத்தை அடைந்து விக்கினம் ஏதுமின்றி உடனே அளவில்லாத பேரின்ப பாக்கியம் நிறைந்த நித்திய மோட்சத்தில் என்றென்றைக்கும் வாழப் போவார்களாமே.

இஷ்டப்பிரசாதமில்லாமலும் மனந்திரும்பாமலும் சாவான பாவத்தோடு சாகிற பாவிகள் நித்திய நரகத்திற்குத் தள்ளுண்டு அவியாத நெருப்பிலே ஊழி ஊழிக்காலம் வெந்து சொல்லிலும் நினைவிலும் அடங்காத வேதனைகளை அனுபவிக்கப் போவார்கள் . அப்படி என்றென்றைக்கும் நிலை நிற்கும் மோட்சமென்றும் நரகமென்றும் இரண்டு ஸ்தலமுண்டு . ஆயினும் அநேகம் பேர்கள் நரகத்தை வருவிக்கும் சாவான பாவமில்லாமல் செத்தாலும் அவர்களுக்குச் சொற்பப் பாவங்கள் இருக்கிறதினால்  ஆனாலும் , மன்னிக்கப்பட்ட தங்கள் சாவான பாவத்திற்கு சரியான பரிகாரம் அவர்கள் பண்ணாதிருக்கிறதிலென்கிலும் அவர்கள் எங்கே போவார்கள் என்றால் , சாவான பாவத்தோடே செத்த துர்மனப் பாவிகளின் இருப்பிடமாகிய நித்திய நரகத்துக்குப் போகாமலும் ,எவ்வித பாவக் குற்றமுமின்றி பழுதுமின்றி கறையுமின்றி முற்றும் பரிசுத்தமுள்ள ஆத்துமாக்களின் இராச்சியமாகிற மோட்சத்தில் உடனே பிரவேசிக்காமலும் ஒரு நாடு ஸ்தலத்துக்கு அனுப்பப்படுவார்களாமே. இந்த ஸ்தலத்தில் தாங்கள் செய்த அற்பப்பாவங்களுக்காக தண்டனையும் பட்டு , பொறுக்கப்பட்ட சாவான பாவங்களுக்கு வேண்டிய பரிகாரமும் செலுத்தி திவ்விய நீதியின் கட்டளைப்படியே உத்தரிப்பார்கள் . அப்படி சரியான விதமாய் உத்தரித்த பிற்பாடு இந்த ஆத்துமாக்கள் மோட்ச பேரின்பத்தைச் சுதந்தரித்து மற்ற மோட்ச வாசிகளுடனே என்றென்றைக்கும் வாழ்வார்கள் என்பது பரம சத்தியமாமே .

மேற்சொன்ன இந்த ஆத்துமாக்கள் சுத்திகரமாகிற ஸ்தலம் உத்தரிக்கிற ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது . இவ்வண்ணமே செத்த ஆத்துமாக்களுக்கு மூன்று ஸ்தலம் உண்டென்று சத்திய திருச்சபை போதித்துக் கொண்டு வருகிறதுமல்லாமல் அது புத்தியுள்ள எந்த மனுஷனுக்கும் காணப்படுகிற நியாயமுமாம் . மூர்க்கரான பாவிகளுக்கு நரகமும் , முற்றும் பரிசுத்த ஆத்துமாக்களுக்கு மோட்சமும் , இன்னம் உத்தரிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலமும் உண்டென்று விசுவசித்து சொல்லக்கடவோம். நித்திய நரகத்தில் நித்தியாக்கினை அனுபவிக்கிரவர்களுக்கு மனுஷராலே ஒரு அற்ப ஆறுதலும் உதவியும் பரிச்சேதமும் வரப்போகிறதில்லை. பேரின்ப வீட்டில் வாழும் மோட்ச வாசிகளை வாழ்த்திப் புகழ்ந்து ஸ்துதித்து அவர்கள் நமக்காக சர்வேசுரநிடத்தில் மன்றாடும்படிக்கு அவர்களை வேண்டிக் கொள்ளுகிறதே உத்தம வேத முறையாம் . உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிற ஆத்துமாக்களுடைய வேதனைகளை நம்முடைய ஜெப தவ தர்மத்தினாலும் , திருச்சபையின் வேண்டுதலினாலும் , விசேசமாய் திவ்விய பூசையின் பலியினாலும் அமர்த்தி குறைக்கக்கூடுமென்று சகலமான கிறிஸ்துவர்கள் அக்காலத்திலும் விசுவசித்து அனுசரித்த சத்திய வேதமென்று சொல்லக் கடவோம்

கிறிஸ்துவர்களே ! மோட்ச நரகம் உத்தரிக்கிற ஸ்தலமென்னும் இம்மூன்று ஸ்தலங்களை அடிக்கடி நினைத்து தியானித்தால் , அநேக ஞான பிரயோசனம் வரும் என்கிறதினாலே இவைகளை ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும் . நரகத்தையும் , நரகத்தின் அவியாத நெருப்பையும் , ஊழியுள்ள கால வேதனைகளையும் , பொறுக்க முடியாத பசி தாகத்தையும் ஒருபோதும் முடியாத நித்தியத்தையும் கவனித்து தியானித்தால் அதற்கு பயப்படாமலும் , அதற்கு வழியாயிருக்கிற சாவான பாவத்துக்கு அஞ்சாமலும் இருக்கக் கூடுமோ ?

மோட்சமானது எவ்வித நன்மை பாக்கியமுள்ள ஸ்தலமென்றும் இந்த சர்வ பாக்கியம் ஒருபோதும் முடிவு பெற போவதில்லை என்றும் அதிலே தனக்கு சிம்மாசனம் ஸ்தாபித்து இருக்கிறதென்றும் நன்றாய் நினைத்து உறுதியாய் விசுவசித்து அடிக்கடி தியானிக்கிற மனுஷன் அதற்கு ஆசைப்படுவானல்லோ?

உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைக்கிரவனுக்கும் அப்படியே அநேகம் நன்மைகள் வருமென்கிறது தப்பானது . அவன் அதில் படப்போகிற வேதனைகளுக்கு தப்பும்படியாகத் தன்னாலே ஆனமட்டும் சொற்பப்பாவங்களை விலக்குவான். தான் கட்டிக் கொண்ட சாவான பாவங்களுக்கு பாவ சங்கீர்த்தனத்தின் வழியாய் மன்னிப்பை அடைந்திருந்தாலும் அவைகளுக்குப் பரிகாரமாக தவக்கிரியைகளை அனுசரிப்பான் . மீண்டும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்க செபங்களையும் தர்மங்களையும் செய்வான் . திவ்விய பூசையைக் காண்பான் , அல்லது ஒப்புக் கொடுக்கப் பண்ணுவான் . அப்படி இம்மூன்று ஸ்தலங்களை நினைக்கிறவனுக்கு அநேக சுகிர்த நன்மைகள் வருமென்று அறியக் கடவீர்களாக.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம் 

சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்.

செபம்.

நித்திய பிதாவாகிய சர்வேசுரா ! உம்மிடத்தில் வாழும் சகலமான மோட்சவாசிகளை நாங்கள் புகழ்ந்து வணங்கி ச்துதிக்கும் பொழுது அவர்களுடைய உதவிகளை நாங்கள் பெற்றுக் கொள்ள கிருபை கூர்ந்தருளும் . எங்களுடைய காலங்களுக்கு மெய்யான சமாதானத்தையும் தந்து உமது திருச்சபையில் இருந்து எல்லாப் பொல்லாப்புகளையும் நீக்கி உமது ஊழியத்தில் எங்களுடையவும் சகல கிறிஸ்தவர்களுடையவும் மனோவாக்கு கிரியை யாவற்றையும் ஸ்திரப்படுத்தி எங்களுடைய உபகாரிகளுக்கு மோட்ச நன்மைகளையும் கொடுத்து மரித்த சகல விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்கு நித்திய இளைப்பற்றியையும் தந்தருள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

முதல் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை.

கல்லறைகளைச் சந்தித்து அதில் அடக்கப்பட்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக 5 பர 5 பிரி 5 முறை திரித்துவ மந்திரமும் வேண்டிக் கொள்ளுகிறது

புதுமை.

அர்ச் சாமிநாதர் உண்டு பண்ணின சபையிலே பேர்த்திரந்தூஸ் என்றும் ஆசீர்வாதப்பரென்றும் புண்ணியாத்துமாக்களான இரண்டு சந்நியாசிகள் இருந்தார்கள். பாவிகள் மனந்திரும்ப வேண்டிக் கொள்ளுகிறதோ அல்லது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதோ இவ்விரண்டு புண்ணியங்களில் எது பெரிய புண்ணியமென்று இந்த சந்நியாசிகளுக்குள்ளே ஒரு நாள் தர்க்கமுண்டானது . அதெப்படியென்றால் : நிர்பாக்கியரான பாவிகளின் பேரில் வெகு தயவாயிருக்கிற பேர்த்திரந்தூஸ்  என்பவர் அவர்களுக்குப் புத்தி வர அடிக்கடி திவ்விய பூசை பண்ணி செபங்களை செபித்து கடின தவக்கிரியைகளை நடத்தி அதுதான் உத்தமம் என்று சொல்லுகிறதற்கு அவர் காண்பிக்கும் நியாயங்களாவன: "இந்தப் பாவிகள் எப்போதும் நரகத்துக்குப் போக ஏதுவாக இருக்கிறார்கள் அல்லவோ ? இந்த ஆத்துமாக்களைக் கெடுக்க பசாசுகள் எவ்வளவு தந்திர உபாயங்களையும் சோதனை யுத்தங்களையும் செய்கிறதென்று தெரியாதோ ? இந்த ஆத்துமாக்களை மீட்டு இரட்சிக்க சுதநாகிய சர்வேசுரன் மோட்சத்திலிருந்து இறங்கி மனுஷனாகிப் படாத பாடு பட்டு சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து தம்முடைய திரு ரத்தத்தைச் சிந்தினாரல்லோ ? சேசுநாதர் சுவாமி அவ்வளவு மதித்த ஆத்துமாக்களை கெட்டுப் போக விடுகிறதே பெரிய நிர்பாக்கியமல்லாமல் திவ்விய இரட்சகர் சிந்தின விலைமதிப்பற்ற ரத்தத்தை வியர்த்தமாக்குகிறது தேவ துரோகமென்று தோன்றாதோ ? உத்தரிக்கிற ஆத்துமாக்களோ வென்றால் அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறது மெய்தான் . ஆயினும் அவர்களுடைய ஈடேற்றம் நிச்சயமாகையால் , அவர்கள் நரகத்துக்குப் போக ஏதுமில்லை , வழியுமில்லை அச்சமுமில்லை . அவர்கள் சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள ஆத்துமாக்கள்  ஆகையால் அவர்களுடைய கடன் தீர்ந்த உடனே அவர்கள் மோட்சத்திற்குப் போகிறது தப்பாது . பாவிகளோவென்றால் அவர்கள் தங்கள் பாவங்களை விடாதிருப்பார்களேயாகில் அவியாத நரகத்துக்குப் போவது குன்றாத சத்தியமாமே . அதிப்படிஇருக்கையில் இந்தப் பாவிகள் மனந்திரும்ப பிரயாசைப்படுவதே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது உத்தமம் என்று பொர்திரென்தூஸ் என்பவர் சாதித்துச் சொல்லுவார்.

அதற்கு ஆசீர்வாதப்பர் எனப்பட்ட சந்நியாசியானவர் சொன்னதாவது :"இப்போது விவரித்த நியாயங்களின்படியே பாவிகள் மனந்திரும்ப பிரயாசைப்படுவது நல்லதாயினும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக முயற்சி செய்கிறது அதிக நன்மை . அதேதெனில்: ஒருத்தனுக்கு சௌக்கியமும் பெலனும் இருந்தாலும் அவன் சோம்பல் மிகுதியினால் யாதொரு வேலையும் செய்ய மனமின்றி இருக்கிறான் . வேறொருவன் வியாதியினிமித்தம் கால் சுருங்கிக் கை வழங்காமல் சர்வாங்கத்திலும் நொந்து வருத்தப்படுகிறான் . எவனுக்குப் பிச்சை தருகிறது தகும் என்பார்கள்  ? தன் குற்றமின்றி சரியாய் வேலையும் செய்யக்கூடாத திராணியற்றவனுக்குக் கொடுக்க வேண்டுமல்லோ ? அப்படியானால் பாவிகள் வேண்டுமென்று தங்களுடைய துர்புத்தியினாலே கேட்டுப்போகிறதல்லாமல் மனதிருந்தால் திரும்புவார்களே ? உத்தரிக்கிற ஆத்துமாக்களோவெனில் தங்களுக்குத் தாங்களே யாதொரு உதவியும் செய்யக் கூடாமல் வருத்தப்படுகிறார்கள் அல்லவோ ? மேலும் இராஜாவுக்குப் பெரும் துரோகியை ஒருவன் இருக்கிறான் . வேறே ஒருவன் இராஜாவுக்குப் பிரியமான சிநேகிதனாய் இருக்கிறான் . .இராஜாவின் கிருபையை அடைய , துரோகிக்கு அல்லது சிநேகிதனுக்கு உதவி பண்ண வேண்டும் என்று எல்லோரும் சொல்லுவார்கள் அல்லவோ ? அப்படியானால் பாவிகளுக்கு உதவி பண்ணுகிறதிலும் சர்வேசுரனுக்கு உகந்த சிநேகிதராய் இருக்கிற உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி செய்கிறது உத்தமம் என்பதில் சந்தேகத்துக்கு இடமுண்டோ ? என்று விவரித்தார்.

ஆனாலும் பேர்த்திரந்தூஸ் என்பவர் இந்த நியாங்களுக்கு இணங்காது போனார் .அடுத்த இராத்திரி அவர் நடுச்சாமத்தில் எழுந்திருந்து தனது சபை வழக்கப்படியே தேவ சங்கீதங்களைப் பாட கோவிலுக்குப் போகையில் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து தேவ சித்தத்தினால் வந்த ஓர் ஆத்துமத்தைக் கண்டார் . அந்த ஆத்துமம் சுமக்க கூடாத ஒரு பாரமான சுமையை சுமக்கிற பிரகாரமாய் இளைத்துக் களைத்து சோர்ந்து மிகவும் வருத்தப்பட்டு இந்த சந்நியாசியிடம் வந்து இந்தக் கடின சுமையை அவரது தோளின் மேல் வைத்ததாமே .சந்நியாசரானவர் அதைத் தாங்க மாட்டாமல் கீழே விழுந்து அதிக வருத்தத்தினாலே சாகிறார் போல் கிடந்து, இதெல்லாம் தேவ செய்கையினால் சம்பவித்ததென்று நிச்சயித்து இனிமேல் எப்போதும் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக எப்போதும் முயற்சி பண்ணுவேனென்று பிரார்த்தித்துக் கொண்டார் . அப்போது காணப்பட்ட ஆத்துமம் மறைந்து போனது . அவரோவென்றால் அதிகாலமே திவ்விய பூசையை ஆத்துமாக்களுக்குச் செய்ததுமல்லாமல் தாம் ஜீவித்த நாளெல்லாம் தாம் பண்ணின ஜெப தப தானக் கிரியை யாவற்றையும் அந்த ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுத்து வந்தார்.

இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! பாவிகள் மனந்திரும்பும்படியாய் வேண்டிக் கொள்ளுகிறது பெரிய புண்ணியம் அல்ல என்று நினைக்க வேண்டாம் . ஆனால் அப்படி அவர்களுக்காக பிரயாசைப்படுகிறது நன்மையையும் கடனும் தேவசித்தமுமாய் இருந்தாலும் , உத்தரிக்கிற ஆத்துமாக்களை ஒருபோதும் மறவாமல் அவர்களுடைய அவதிகளைக் குறைக்க முயற்சி பண்ணுகிறது பெரிய தர்மமும் பிரயோசனமுள்ள முறையும் சர்வேசுரனுக்குப் பிரியமான நற்கிரியையுமாமென்று அறியக் கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது.

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.