அதிகாரம் 01
1 ஆதிமுதல் இருந்ததை, நாங்கள் கேட்டதை, கண்ணால் பார்த்ததை உங்களுக்கு அறிவிக்கிறோம். அதை நாங்கள் நோக்கினோம். கையால் தொட்டுணர்ந்தோம். நாங்கள் அறிவிப்பது உயிரின் வார்த்தையைப் பற்றியது.
2 அந்த உயிர் வெளிப்படுத்தப்பட்டது; அதனை நாங்கள் கண்டோம், அதற்குச் சான்று பகர்கின்றோம். தந்தையோடு இருந்து, நமக்கு வெளிப்படுத்தப்பட்ட முடிவில்லா வாழ்வுபற்றிய செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
3 நீங்களும் எங்களோடு நட்புறவு கொள்ளும் படி, நாங்கள் பார்த்ததை, நாங்கள் கேட்டதை உங்களுக்கும் தெரிவிக்கிறோம். எங்களுக்குள்ள நட்புறவோ பரம தந்தையோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் உள்ளதாகும்.
4 நம் மகிழ்ச்சி நிறைவுபெற இதனை எழுதுகிறோம்.
5 நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவருள் இருள் என்பதே இல்லை.
6 இருளிலே வாழ்ந்துகொண்டு அவரோடு நமக்கு நட்புறவு உண்டு என்போமானால் நாம் பொய்யர்கள், உண்மைக்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல.
7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.
8 நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை.
9 மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
10 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை.
அதிகாரம் 02
1 என் அன்புக் குழந்தைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டுமென்றே இதை உங்களுக்கு எழுதுகிறேன். ஆனால் ஒருவன் பாவஞ்செய்ய நேர்ந்தாலும், பரம தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே இறைவனுக்கு ஏற்புடையவரான இயேசு கிறிஸ்து.
2 நம் பாவங்களைப்போக்கும் பரிகாரப் பலி அவரே. நம் பாவங்களை மட்டுமன்று, உலகனைத்தின் பாவங்களையும் போக்கும் பரிகாரப் பலி அவரே.
3 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தால் தான் நாம் அவரை அறிந்துள்ளோம் என உறுதி கொள்ளலாம்.
4 'நான் அவரை அறிவேன்' என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யன்; உண்மை என்பது அவனிடம் இல்லை.
5 ஆனால் அவரது வார்த்தையை ஒருவன் கடைப்பிடித்தால், அவனிடம் கடவுளன்பு உண்மையாகவே நிறைவாகியுள்ளது. நாம் அவருள் இருக்கிறோம் என்பது இதனால் உறுதியாகும்.
6 'அவருள் நிலைத்திருக்கிறேன்' எனக் கூறுபவன் அவர் நடந்தது போல நடக்கவேண்டும்.
7 அன்புக்குரியவர்களே, நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளையன்று; ஆதிமுதல் நீங்கள் பெற்றிருந்த பழைய கட்டளையே. நீங்கள் கேட்டுள்ள வார்த்தையே அப்பழைய கட்டளை.
8 இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளைதான். இது புதியது என்பது அவர் வாழ்க்கையில் விளங்கியதுபோல் உங்கள் வாழ்க்கையிலும் விளங்குகிறது. ஏனெனில், இருள் அகன்றுபோகிறது. உண்மையொளி இப்போதே ஒளிர்கின்றது.
9 'நான் ஒளியில் இருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு தன் சகோதரனை வெறுப்பவன் இன்னும் இருளிலேயே இருக்கிறான்.
10 தன் சகோதரனுக்கு அன்புசெய்பவனே ஒளியில் நிலைத்திருக்கிறான். அவனை இடறிவிழச் செய்வது எதுவுமில்லை.
11 தன் சகோதரனை வெறுப்பவனோ இருளிலே இருக்கிறான், இருளிலே நடக்கிறான், தான் செல்வதெங்கே என்றறியான்; இருள் அவன் கண்களைக் குருடாக்கிவிட்டது.
12 அன்புக் குழந்தைகளே, அவர் பெயரின் பொருட்டு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளன; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன்.
13 தந்தையரே, ஆதிமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் தியோனை வென்றுவிட்டீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதுகிறேன்.
14 அன்புப் பிள்ளைகளே, பரம தந்தையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். தந்தையரே, ஆதிமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஆகையால் நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன். இளைஞரே, நீங்கள் வலிமை மிகுந்தவர்கள்; கடவுளின் வாக்கு உங்களுள் நிலைத்து நிற்கிறது. தீயோனை நீங்கள் வென்றுவிட்டீர்கள்; ஆகையால், நான் உங்களுக்கு இவ்வாறு எழுதினேன்.
15 உலகின்மீதும் அதிலுள்ள எதன்மீதும் அன்பு வைக்காதீர்கள். உலகின்மீது ஒருவன் அன்பு வைத்தால், பரம தந்தையின் மீது அவனுக்கு அன்பு இல்லை.
16 ஊனியல்பு இச்சிப்பதும், கண்கள் காண இச்சிப்பதும், செல்வத்தில் செருக்கு கொள்வதுமாகிய இவ்வுலகிற்குரியவையெல்லாம் பரம தந்தையிடமிருந்து வரவில்லை; உலகிலிருந்தே வருகின்றன.
17 உலகமோ மறைந்துபோகிறது; அத்துடன், மனிதன் உலகில் இச்சிக்கும் அனைத்தும் மறைந்துபோகிறது. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவன் என்றும் நிலைத்திருப்பான்.
18 அன்புப் பிள்ளைகளே, இதுவே இறுதிக் காலம்; எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே, இதோ, இப்போதே எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். இது இறுதிக் காலம் என இதனால் நாம் அறிகிறோம்.
19 இவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தனர், உண்மையில் இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர். உண்மையில் நம்மைச் சார்ந்தவர்களாய் இருந்திருப்பின், நம்மோடு நிலைத்திருப்பர். இவர்களுள் யாரும் உண்மையில் நம்மைச் சார்ந்திருக்கவில்லை என்பது தெளிவாகுமாறு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார்கள்.
20 நீங்கள் பரிசுத்தரிடமிருந்து அபிஷுகம் பெற்றிருக்கிறீர்கள்; அதனால் அனைவரும் அறிவு பெற்றிருக்கிறீர்கள்.
21 நீங்கள் உண்மையை அறியவில்லை. என்பதால் நான் இதை உங்களுக்கு எழுதவில்லை; அதை அறிந்திருக்கிறார்கள் என்பதாலும், பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே எழுதினேன்.
22 இயேசு தான் கிறிஸ்து என்பதை எவன் மறுக்கிறானோ அவன் பொய்யன்; அவனே எதிர்க்கிறிஸ்து; பரம தந்தையையும் அவர் மகனையும் அவன் மறுக்கிறான்.
23 மகனை மறுக்கிறவன் எவனும் தந்தையையும் வேண்டாமென்கிறான்; மகனை ஏற்றுக்கொள்பவன் தந்தையையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
24 தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால், தந்தைக்குள்ளும், அவர் மகனுக்குள்ளும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.
25 அவர் நமக்கு வாக்களித்தது முடிவில்லா வாழ்வாகும். அதை அவர் தாமே வாக்களித்தார்.
26 உங்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களைக் குறித்து இதை எழுதினேன்.
27 நீங்களோ அவரிடமிருந்து அபிஷுகம் பெற்றிருக்கிறீர்கள்; அந்த அபிஷுகம் உங்களில் நிலைத் திருக்கிறது; ஆகவே ஒருவரும் உங்களுக்குக் கற்பிக்கத் தேவையில்லை; அவரது அபிஷுகமே உங்களுக்கு எல்லாவற்றைக் குறித்தும் கற்பித்து வருகிறது. உண்மையைத்தான் கற்பித்து வருகிறது, பொய்யையன்று. எனவே, அது உங்களுக்குக் கற்பித்தது போல அவருள் நிலைத்திருங்கள்.
28 ஆகவே, அன்புக் குழந்தைகளே, அவர் வெளிப்படும்போது நாம் நம்பிக்கையோடிருக்கவும், அவரது வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும், அவருள் நிலைத்திருங்கள்.
29 இறைவன் நீதியுள்ளவர் என நீங்கள் அறிவீர்களாகில், நீதியைக் கடைப்பிடிப்பவன் எவனும் அவரிடமிருந்து பிறந்தவன் என ஒப்புக் கொள்ளுங்கள்.
அதிகாரம் 03
1 பரம தந்தை நம்மிடம் காட்டிய அன்பு எவ்வளவு என்று பாருங்கள்! நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம். அவருடைய மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான், நாம் எத்தன்மையரென்பதையும் அது அறிந்துகொள்வதில்லை.
2 அன்புக்குரியவர்களே, இப்போது நாம் கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் வெளிப்படும்போது, அவரைப்போலவே நாமும் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
3 அவர்மேல் இந்த நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பதுபோலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக் கொள்வான்.
4 பாவஞ்செய்கிற எவனும் திருச்சட்டத்தை மீறுகிறான். ஏனெனில் திருச்சட்டத்தை மீறுதலே பாவம்
5 பாவங்களைப் போக்குவதற்காகவே அவர் தோன்றினார் என்று உங்களுக்குத் தெரியும். அவரிடமோ பாவமென்பது இல்லை.
6 அவருள் நிலைத்திருக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை; பாவத்தின் வாழும் எவனும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.
7 அன்புக் குழந்தைகளே, எவனும் உங்களை ஏமாற்ற இடங்கொடாதீர்கள். இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்பவனே கிறிஸ்து இறைவனுக்கு எற்புடையவராய் இருப்பதுபோல, தானும் ஏற்புடையவனாய் இருக்கிறான்.
8 பாவஞ்செய்பவன் அலகையைச் சார்ந்தவன்; ஏனெனில் அலகை ஆதிமுதல் பாவஞ்செய்துகொண்டு வருகிறது. இவ்வலகையின் செயல்களைத் தொலைக்கவே கடவுளின் மகன் தோன்றினார்.
9 கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவஞ்செய்வதில்லை; ஏனெனில் அவர் இட்ட வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது. அவன் பாவத்தில் வாழமுடியாது; ஏனெனில் அவன் கடவுளிடமிருந்து பிறந்திருக்கிறான்.
10 இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்யாதவனும், தன் சகோதரனுக்கு அன்பு செய்யாதவனும் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். இதனின்று, கடவுளின் மக்கள் யாரென்றும் அலகையின் மக்கள் யாரென்றும் புலப்படும்.
11 தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர்க்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
12 காயீனைப்போல் இராதீர்கள்; தீயோனைச் சார்ந்த அவன் தன் தம்பியைக் கொன்றான். ஏன் அவனைக் கொன்றான்? அவனுடைய செயல்கள் தீயனவாகவும், அவன் தம்பியின் செயல்கள் நல்லனவாகவும் இருந்தன.
13 சகோதரர்களே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் வியப்புறவேண்டாம்.
14 சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்துவந்துள்ளோம்; நாம் நம் சகோதர்களுக்கு அன்புசெய்வதால் அதை அறிகிறோம். அன்பு செய்யாதவன் சாவில் நிலைகொள்ளுகிறான்.
15 தன் சகோரதனை வெறுக்கிற எவனும் கொலைகாரன். கொலைகாரன் எவனிடத்திலும் முடிவில்லா வாழ்வு நிலைத்திருப்பதில்லை; இது உங்களுக்குத் தெரியும்.
16 கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; இதனால் அன்பு இன்னதென்று அறிந்தோம். ஆகவே நாமும் நம்முடைய சகோதரர்களுக்காக நம் உயிரைக் கொடுக்கவேண்டும்.
17 இவ்வுலக செல்வங்களை உடையவன் ஒருவன், தன் சகோதரன் வறுமையுற்றிருப்பதைக் கண்டு. மனமிரங்காவிடில், அவனுள் கடவுளன்பு நிலைத்திருக்கிறதென்று எவ்வாறு சொல் முடியும்?
18 அன்புக் குழந்தைகளே, நம் அன்பு சொல்லிலும் பேச்சிலும் இராமல், செயலில் விளங்கும் உண்மையான அன்பாய் இருக்கட்டும்.
19 இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என்றறிவதோடு, அவர்முன் நம் மனச்சான்றை அமைதிப்படுத்த முடியும்.
20 ஏனெனில், நம் மனச்சான்று நம்மைக் கண்டனம் செய்தால், நம் மனச்சான்றை விடக் கடவுள் மேலானவர், அனைத்தையும் அறிபவர் என்பதை நினைவில் கொள்வோம்.
21 அன்புக்குரியவர்களே, நம் மனச்சான்று நம்மைக் கண்டனம் செய்யாதிருந்தால், கடவுள் முன் நாம் நம்பிக்கையோடு நிற்க முடியும்.
22 அப்போதுதான் நாம் கேட்பதையெல்லாம் அவரிடமிருந்து பெறுவோம். ஏனெனில், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குகந்ததைச் செய்கிறோம்.
23 நாம் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவின் பெயர்மீது விசுவாசம் வைத்து, அவர் தந்த கட்டளைப்படி ஒருவர்க்கொருவர் அன்பு செய்ய வேண்டும்; இதுவே அவரது கட்டளை.
24 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவன் அவருள் நிலைத்திருக்கிறான்; அவரும் அவனுள் நிலைத்திருக்கிறார்; அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய ஆவியினால் அறிகிறோம்.
அதிகாரம் 04
1 அன்புக்குரியவர்களே, தேவ ஆவியின் ஏவுதல் தமக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள். அந்த ஏவுதல் கடவுளிடமிருந்துதான் வருகிறதா என்பதைச் சோதித்தறியுங்கள். ஏனெனில், போலித் தீர்க்கதரிசிகள் பலர் உலகெங்கும் பரவியுள்ளனர்.
2 கடவுளது ஆவியின் ஏவுதலை நீங்கள் இவ்வாறு அறியக்கூடும்; ஊன் உருவில் வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஏவுதல் எல்லாமே கடவுளிடமிருந்து வருகிறது.
3 இயேசுவை மறுக்கச் செய்யும் எந்த ஏவுதலும் கடவுளிடமிருந்து வருவதன்று; எதிர்க் கிறிஸ்துவை ஏவும் ஆவியே அது. எதிர்க் கிறிஸ்து வருகிறானென்று கேள்விப்பட்டீர்களே, இதோ அவன் இப்போதே உலகில் இருக்கிறான்.
4 அன்புக் குழந்தைகளே, நீங்களோ கடவுளைச் சார்ந்தவர்கள்; நீங்கள் அந்தப் போலித் தீர்க்கதரிசிகளை வென்றுவிட்டீர்கள்; ஏனெனில், உலகில் இருக்கும் அவனைவிட உங்களுள் இருப்பவர் மேலானவர்.
5 ஆதனால், அவர்கள் பேசுவதும் உலகைச் சார்ந்ததே. உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.
6 நாமோ கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிபவன் நமக்குச் செவிசாய்க்கிறான். கடவுளைச் சார்ந்திராதவன் நமக்குச் செவிசாய்ப்பதில்லை இதனின்று, உண்மையின் ஆவி எது, ஏமாற்றும் ஆவி எது என்று அறியக்கூடும்.
7 அன்புக்குரியவர்களே, நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்வோமாக. ஏனெனில், அன்பு கடவுளிடமிருந்து வருகிறது; அன்பு செய்பவன் எவனும் கடவுளிடமிருந்து பிறந்துள்ளான்; அவனே கடவுளை அறிவான்.
8 அன்பு செய்யாதவனோ கடவுளை அறிவதில்லை. ஏனெனில், அன்பே கடவுள்.
9 தம் ஒரே பேறான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது.
10 நாம் கடவுளுக்கு அன்பு செய்ததில் அன்று அவரே நமக்கு அன்பு செய்து, நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தம் மகனை அனுப்பியதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
11 அன்புக்குரியவர்களே, கடவுள் நமக்கு இவ்வாறு அன்பு செய்தார் எனில், நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்தல் வேண்டும்.
12 கடவுளை எவனும் ஒருபோதும் கண்டதில்லை. ஆனால், நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்தால், கடவுள் நம்முள் நிலைத்திருக்கிறார். அவரது அன்பு நம்மிடம் நிறைவுற்றிருக்கிறது.
13 தம் ஆவியில் அவர் நமக்குப் பங்கு தந்தமையால், நாம் அவருள் நிலைத்திருக்கிறோம் எனவும், அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் எனவும் அறிகிறோம்.
14 தந்தை தம் மகனை உலகின் மீட்பராக அனுப்பினாரென்று கண்டோம்; அதற்குச் சான்று பகர்கின்றோம்.
15 இயேசு கடவுளின் மகன் என ஏற்றுக்கொள்பவன் எவனோ அவனுள் கடவுள் நிலைத்திருக்கிறார்; அவனும் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான்.
16 இங்ஙனம், கடவுள் நம்மீதுகொண்ட அன்பை அறியலானோம்; அந்த அன்பை விசுவசித்தோம். அன்பே கடவுள்; அன்பில் நிலைத்திருப்பவன் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான். கடவுளும் அவனுள் நிலைத்திருக்கிறார்.
17 தீர்ப்பு நாளில் நாம் நம்பிக்கையோடிருப்போம் என எதிர்பார்ப்பதில் அன்பின் நிறைவு நம்மிடம் விளங்குகிறது. இவ்வுலகிலேயே நாம் அவரைப்போல் இருப்பதால் அந்த நம்பிக்கை நமக்குண்டு.
18 அன்பில் அச்சத்துக்கிடமில்லை; நிறை அன்பு அச்சத்தை அகற்றும்; ஏனெனில் அச்சம் கொள்பவன் தண்டனையை எதிர் பார்க்கிறான். அச்சம்கொள்பவனோ அன்பில் நிறைவு பெறவில்லை.
19 அவரே நமக்கு முதலில் அன்பு செய்ததால், நாமும் அன்பு செய்வோமாக.
20 'நான் கடவுளுக்கு அன்பு செய்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு, ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன். ஏனெனில், கண்ணால் கண்ட சகோதரனுக்கு அன்பு செய்யாதவன், தான் கண்டிராத கடவுளுக்கு அன்பு செய்ய இயலாது.
21 கடவுளுக்கு அன்பு செய்பவன், தன் சகோதரனுக்கும் அன்பு செய்ய வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை.
அதிகாரம் 05
1 இயேசு தான் கிறிஸ்து என்று விசுவசிக்கும் எவனுக்கும் கடவுளே தந்தை. தந்தைக்கு அன்பு செய்பவன், தந்தை பெற்ற மகனுக்கும் அன்பு செய்கிறான்.
2 நாம் கடவுளுக்கு அன்பு செய்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளுடைய மக்களுக்கும் அன்பு செய்கிறோம். என்பது தெளிவாகிறது.
3 அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே கடவுள் அன்பு. அவருடைய கட்டளைகள் நமக்குச் சுமையல்ல.
4 ஏனெனில், கடவுளிடமிருந்து பிறந்தவன் எவனும் உலகை வெல்கிறான். உலகைத் தோற்கடித்து நாம் அடைந்த வெற்றி நம் விசுவாசமே.
5 உலகை வெல்பவன் யார்? இயேசு, கடவுளின் மகன் என்று விசுவசிப்பவனே.
6 இந்த இயேசு கிறிஸ்து நீராலும் இரத்தத்தாலும் வந்தவர். நீரோடு மட்டுமன்று, நீரோடும் இரத்தத்தோடும் வந்தார். இதற்குத் தேவ ஆவியே சாட்சி; ஏனெனில், தேவ ஆவி உண்மையானவர்.
7 ஆகவே, தேவ ஆவி, நீர், இரத்தம் ஆகிய மூன்று சாட்சிகள் உள்ளன;
8 இம் மூன்றின் நோக்கமும் ஒன்றே.
9 நாம் மனிதரின் சாட்சியத்தை ஏற்கிறோமே. கடவுளின் சாட்சியம் அதைவிட மேலானதன்றோ? இந்த மூன்றும் கடவுள் தந்த சாட்சியமே. தம் மகனைப்பற்றி அவர் தந்த சாட்சியமே இது.
10 கடவுளின் மகன் மீது விசுவாசம் கொள்பவன் இந்தச் சாட்சியத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறான். கடவுளை விசுவசியாதவன் அவரைப் பொய்யனாக்குகிறான். ஏனெனில், கடவுள் தம் மகனைப்பற்றித் தந்த சாட்சியத்தை அவன் விசுவசிக்கவில்லை.
11 கடவுள் நமக்கு முடிவில்லா வாழ்வைத் தந்தார்; இவ்வாழ்வு அவர் மகனுள் இருக்கிறது; இதுவே அவர் தரும் சாட்சியம்.
12 யாரிடம் இறைமகன் இருக்கிறாரோ, அவனுக்கு வாழ்வு உண்டு; யாரிடம் கடவுள் மகன் இல்லையோ அவனுக்கு வாழ்வு இல்லை.
13 கடவுளுடைய மகனின் பெயர்மீது விசுவாசம் வைத்துள்ள உங்களுக்கு முடிவில்லா வாழ்வு உண்டு என்பதை நீங்கள் அறியவே இதையெல்லாம் எழுதினேன்.
14 நாம் இறைவனிடம் கேட்பது அவரது திருவுளத்திற்கேற்றதாய் இருந்தால், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இந்த நம்பிக்கையுடன் நாம் அவர் முன் நிற்க முடியும்.
15 நாம் கேட்கும்போதெல்லாம் அவர் செவிசாய்க்கிறார். என்ற உறுதி நமக்கிருந்தால், அவரிடம் கேட்டதனைத்தும் கிடைத்துவிட்டது என்ற உறுதியும் இருக்கும்.
16 இறுதிச்சாவை வருவிக்காத பாவம் ஒன்றைச் சகோதரன் செய்வதை ஒருவன் கண்டால், அவனுக்காக வேண்டுவானாக; இறைவன் அவனுக்கு வாழ்வளிப்பார். இறுதிச்சாவை வருவிக்காத பாவத்தைச் செய்பவர்களைப் பற்றியே நான் சொல்லுகிறேன். இறுதிச்சாவை வருவிக்கும் பாவம் ஒன்றுண்டு; வேண்டுதல் செய்யும்படி நான் சொல்வது அதைப்பற்றியன்று.
17 தீய செயலனைத்தும் பாவம்; ஆயினும், இறுதிச்சாவை வருவிக்காத பாவமும் உண்டு.
18 கடவுளிடமிருந்து பிறக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை; கடவுளிடமிருந்து பிறந்தவர் அவனைக் காப்பாற்றுகிறார்; தீயோன் அவனைத் தீண்டுவதில்லை; இது நமக்குத் தெரியும்.
19 நாம் கடவுளைச் சார்ந்தவர்கள், ஆனால் உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது; இதுவும் நமக்குத் தெரியும்.
20 கடவுளின் மகன் வந்தார்; உண்மை இறைவனை அறியும் ஆற்றலை நமக்குத் தந்தார்; இதுவும் நமக்குத் தெரியும். அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம் உண்மை இறைவனுக்குள் இருக்கிறோம்; இவரே உண்மைக் கடவுள். இவரே முடிவில்லா வாழ்வு.
21 அன்புக் குழந்தைகளே, பொய்த் தேவர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.