இயேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
தாமே தெரிந்து கொண்ட அரியணையில் நம் இயேசு வீற்றிருக்கிறார் . தம் உயிரைப் பலியாகக் கொடுத்து சரீரத்தின் சாவின் மேலும் அதைவிட பயங்கரமான ஆத்தும சாவான - அருளையும் ஞான உயிரையும் மக்களிடமிருந்து பறிக்கும் - பாவத்தின் மேலும் வெற்றி கண்டார். வான மேகத்தைப் போல் கருணையை எங்கும் பொழிகிறார் . தம் தாயையும் தம் நேச சீடரையும் தானம் செய்தார். கடவுளே தம்மைக் கை விட்டது போலக் கலங்கினார் . எனினும் தன்னல சிந்தனையின் நிழல் முதலாய் இன்றி மக்கள் மேல் தன் அன்பைக் கொட்டுகிறார். தம்மை வாதித்தவர்களுக்கு மன்னிப்பை மன்றாடுகிறார் . தன்னை நினைத்தருளச் சொன்ன நல்ல கள்ளனுக்கு பரகதியின் பாக்கியத்தைப் பரிமாறுகிறார் . பாவத்திற்காக மனிதன் கொடுக்க வேண்டிய கடனை , கடவுளுக்குத் தம் அன்பின் மிகுதியால் அளிக்கிறார் .
கிறிஸ்து கடவுள் ; தேவ ஆள் தான் நமக்காக மரித்தவர் ; கிறிஸ்து மனிதன் ; மனிதனுக்காக தம் மனுஷ சுபாவத்தில் மரித்தார். சிலுவையில் ஒரு புதிய மனுஷீகம் , ஒரு புது சிருஷ்டிப்பு பிறந்ததென்றார் சின்னப்பர் . நாம் அதனுடைய அவயவங்களாகி தேவ சுபாவத்தில் பங்காளியாகிறோம் என்றார் அர்ச் இராயப்பர்
மனுக்குலத்துக்காக ஞான சீவியம் ஆதாமுக்கு அளிக்கப்பட்டது . இறைவனுடைய சித்தத்தைப் புறக்கணித்து தன் இஷ்டத்தை பெரிதாய்க் கருதி நித்திய பாக்கியத்துக்கு பதில் - ஒரு வினாடி சுகத்திற்காக இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் - அதை அவன் இழந்தான்
கிறிஸ்துநாதர் ஞான வாழ்வை மனுக்குலத்திற்குத் திரும்பப் பெற்றார். இறைவனுடைய சித்தத்திற்கு மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்தார் . மனிதனுக்கு நித்திய பாக்கியத்தைச் சம்பாதிக்க வாதனையை தெரிந்து கொண்டார்
ஆதாம் பாவம் செய்த பின் தான் ஆடையின்றி இருப்பதாக உணர்ந்து ஓர் ஆடையைத் தயாரித்துக் கொண்டான் . கிறிஸ்து நாதரோ தம் ஆடையைக் களையவும் மனித கௌரவத்தையே இழக்கவும் அட்ட தரித்திரத்தை சூடவும் தெரிந்து கொண்டார்
"நீங்கள் கடவுளைப் போலாவீர்கள் " என்ற சோதிப்போனை ஆதாம் நம்பினான் ; கடவுளைப் போலறிய ஆசித்தான் ; கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தான் . கிறிஸ்துநாதர் இறைவனுக்கு கீழ்ப்படிந்ததால் நாம் கடவுளைப் போலாக - தேவ சுபாவத்தில் பங்கு பெற நமக்கு ஆற்றலை அளித்தார்
ஏவை ஆதாமைப் பாவத்திற்கு சோதித்து அவன் வீழ்ச்சிக்கு - மனுக்குல வீழ்ச்சிக்குக் காரணமானாள். நம்மாண்டவளோ உலகின் ஈடேற்றத்திற்கு தம் மகனை உலகிற்கு அளித்தார் . ஈடேற்ற அலுவலில் பங்கு பெற்ற சிலுவையினடியில் நின்றார். மனுக்குலம் இன்பத்தின் பூங்காவில் பிறந்தது ;ஆதாமின் விலாவிலிருந்து வந்த ஏவை அதன் தாய் . கடவுளின் தாயாகிய மாமரி அவருடைய மகனின் புத்துயிரோடு வாழும் சீவியர்கள் யாவருக்கும் தாய் . கிறிஸ்துவின் ஞான சரீரம் , சிலுவையில் வாதனைப் பெருக்கில் தொங்கிய கிறிஸ்துவின் ஈட்டியால் திறக்கப்பட்ட விலாவிலிருந்து பிறந்தது ; மாமரி அதன் தாய் .
இயேசுவின் மரணம் அவர் மெய்யாகவே மனிதன் என்று உறுதிப்படுத்துகிறது . அவரது தெய்வீகத்திற்கும் சாட்சி . தாம் தேவ குமாரன் என்ற சத்தியத்தை நிலை நிறுத்தியதால் மரித்தார் - அப்பொழுது நடந்த புதுமைகளும் சேர்ந்து அவர் தேவன் என்று கூறுகின்றன . மனிதர்களின் ஆத்துமத்தை ஈடேற்றவல்லவா இயேசு உயிர்விட்டார் ? இயேசுவின் சாவு , ஆத்துமத்தின் விலை மகா உயர்ந்தது என்று பறை சாற்றுகிறது
இயேசுவின் மரணம் பாவத்தின் கனத்தையும் , இறைவனின் நீதியையும் , பாவப் பரிகாரத்தையும் காட்டுகிறது . இயேசுவின் பாடுகள் யாவும் முதல் தொடங்கி கடைசி மட்டும் இச்சத்தியங்களை நிலை நாட்டுகின்றன
எல்லா வரப்பிரசாதத்திற்கும் ஒவ்வொரு தேவ திரவிய அனுமானத்தின் வழியாக நமக்கு வரும் அருளுக்கு இயேசுவின் பாடுகள் ஊற்று . தம் பாடுகளில் இயேசு எல்லா அருளையும் சம்பாதித்தார்.
சிலுவையில் பாடும் சாவும் , முதல் பூசை . இன்று திவ்விய பூசைக்குப் போகும்போது கல்வாரியின் காட்சியை காணப் போகிறோம் என்று நினைப்போமாக . குருவானவர் தேவ நற்கருணையை எழுந்தேற்றம் செய்யும்போது , கீறிக்கிழித்த இயேசுவின் உடலை , எலும்புக் கூட்டைக் காண்கிறோம் . குருவானவர் பாத்திரத்தை உயர்த்தும் போது அப்பாத்திரத்தில் என்ன இருக்கிறது ? இயேசுவின் சிரசிலிருந்தும் , தேகத்திலிருந்தும், விலாக் காயத்திலிருந்தும் ஓடி விழுந்த திரு ரத்தம் அங்குள்ளது . உலகத்தையே மீட்க வல்லது . இறைவனுக்கு சரியான ஆராதனையையும் , மெய்யான மகிழ்ச்சியையும் கொடுப்பது .
சரிதை
இயேசு சபையின் பெரிய அறிஞர் , தர்க்கத்திலும் வேதத்திலும் நிகரற்ற அறிஞர் சூவாரஸ் சுவாமிகள் . அந்த அறிஞர் 'அருள் நிறைந்த மரியே ' செபத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார் தெரியுமா ? " ஒரு முறை 'அருள் நிறைந்த மரியே ' என்று சொல்லி முடிக்கும் பலனுக்கு ஈடாகத் தன் கல்வியையும் அறிவையும் முழுவதும் கொடுத்துவிடுவேன் " என்றார் .அவ்வாறாகில் ஒரு முழுச் செபமாலையைப் பற்றி என்ன சொல்லுவார் ?
நான் உன் பகைவன் என்று வைத்துக் கொள் ; தினந்தோறும் நான் உனக்கு 150 விலையுயர்ந்த மாணிக்கக் கற்களைக் கொடுக்கிறேன் ; நீ என்னை மன்னிக்க மாட்டாயா ? என்னை உன் நண்பனாகப் பாவித்து உன்னாலான கொடைகள் யாவற்றையும் கொடுப்பாயல்லவா ? அவ்வாறாகில் நம் மோட்ச மாதாவைப் பற்றி அதைவிடக் குறையாய்ச் சொல்லலாமா ? நாம் ஒவ்வொரு நாளும் ஐம்பது மணி செபமாலையோ நூற்றைம்பது மணி செபமாலையோ சொல்லி ஒப்புக் கொடுப்போமேயாகில் அவ்வரசி நமக்கு என்ன தான் கொடுக்கமாட்டார் ? வரப்பிரசாத செல்வத்தையும் மோட்ச மகிமையையும் பெற வேண்டுமேயாகில் , கன்னித் தாய்க்கு வாழ்த்துதல் கூறு , மங்களம் சொல் , அவரை மகிமைப்படுத்து . நீ செய்து ஒப்புக் கொடுக்கும் ஒவ்வொரு செபமாலையும் விலையுயர்ந்த பதினைந்து நவமணிக்கு மேலாம் . உலகில் இருக்கும் எல்லாச் செல்வத்தையும் விட இவைகள் மேல் தான் அவருக்குப் பிரியம்
மாமரி சிநேகம் நிறைந்த நம் தாய் . அவர் அகில உலக அரசி; வானுலக இராக்கினி ; இவ்வுலகில் எந்த அரசியும் எவரையும் நேசித்ததை விட , எல்லா அரசிகளும் அன்னையும் நேசிப்பதை விட , நம் மோட்ச அன்னை நம்மை அதிகம் நேசிக்கிறார் . ஏனெனில் தேவ தாயின் ஞான சிநேகம் எல்லா மக்களுடையவும் சம்மனசுக்களுடையவும் இயற்கை நேசத்தை விடப் பெரிதென அர்ச் அகுஸ்தீன் கூறுகிறார் .
இயேசுநாதர் பொன் காசுகளை எண்ணிக் கொண்டிருப்பதை அர்ச் ஜெர்துருத்தம்மாள் காட்சியில் கண்டார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று துணிவுடன் கேட்டார் . " நீ சொல்லிய அருள் நிறைந்த மரியாயே " என்னும் செபத்தின் கணக்கை எண்ணிக் கொண்டிருக்கிறேன் . மோட்சத்திற்குப் போகும் கட்டணத்தை இப்பணத்தைக் கொண்டு தான் செலுத்த முடியும் " என்று பதில் அளித்தார் ஆண்டவர்
செபமாலையின் மேல் அதிக பக்தியுள்ள ஒரு கன்னிகை செத்தபின் ஒரு கன்னிகாஸ்திரிக்குக் காட்சி கொடுத்துச் சொல்லுவாள் " நான் திரும்பவும் உடலோடு கூடி உலகத்திற்குச் சென்று - ஆத்திரம் அவசரமாகவானாலும் - திரும்பவும் ஒரு முறை 'அருள் நிறைந்த மரியே ' என்ற செபம் சொல்லி , அதன் விலையுயர்ந்த பலனை அடையக் கூடுமானால் , நான் என் கடைசி நோயில் அனுபவித்த வாதனைகள் யாவற்றையும் திரும்ப அனுபவிக்கத் தயங்க மாட்டேன் "
செபம்.
சிலுவையில் பாடுபட்ட நாதரே ! உமது கரங்களில் எங்கள் கரங்களை வைத்து சிலுவையோடு சேர்த்து ஆணி அறையும் . அந்த கனத்த இரும்பை நாங்கள் எடுத்து ஏந்த செய்தருளும் . உமது பாதங்களில் எங்கள் பாதங்களை வைத்து சிலுவையோடு இணைத்து அறைந்தருளும் . அப்போது அவைகள் உம்மை விட்டு விலகி அலையா ; எங்கள் வாக்குத்தத்தங்களும் வார்த்தைப்பாடுகளும் ஆணிகளைப் போல் இறுக்கமாகப் பிடிக்கட்டும் . எங்கள் பாவங்களின் பாரமோ மகா கனம். கடைசி நாளில் எங்கள் பலவீனமும் மகா பெரியது . ஆதலால் ஆணிகளைப் பெயர்த்துக் கொண்டு நாங்கள் நழுவி உம்மிடமிருந்து பிரிந்து போகாமல் உமது ஈடேற்ற அன்பில் உம்மோடு ஒன்றித்திருக்கக் கிருபை செய்யும் திவ்விய இயேசுவே
செபமாலை நாயகியே , உமது செபமாலையை எங்களை விட்டு அகலாமல் எவ்விதம் இறுக்கிப் பிடித்திருக்கிறோமோ , அதே போல பாடுபட்ட இயேசுவின் உடலையும் உள்ளத்தையும் நாங்கள் இறுகத் தழுவி ஒன்றித்துப் போயிருக்க உம் திருமகனை மன்றாடும் . செபமாலை இராக்கினியே வாழ்க.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அக்டோபர் 20
Posted by
Christopher