அர்ச். வின்ஸென்ட் - வேதசாட்சி (கி.பி. 304).
இவர் ஸ்பெயின் தேசத்தில் பிறந்து கல்வியில் தேர்ச்சியடைந்தபின் 6-ம் பட்டம் பெற்று, மேற்றிராணியாரின் உத்தரவின் பேரில் பிரசங்கஞ் செய்து வந்தார்.
வேதக் கலாபனையில் இவரும், இவருடைய மேற்றிராணியாரும் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். நடுவனுடைய உத்தரவின்படி, இருவரும் குரூரமாய் உபாதிக்கப்பட்டும் வேதத்தை மறுதலியாததினால், மேற்றிராணியார் நாடுகடத்தப்பட்டும், வின்ஸென்ட் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
வின்ஸென்டை கொடூரமாய் உபாதித்தபின் கொலைஞர் அவரைக் கீழே கிடத்தி அவர் கை, கால்களைக் கட்டியிருந்த கயிறுகளில் கம்பிகளை மாட்டியிழுத்தபோது, அவர் கைகால் மூட்டுகள் பிசகி, வெகுவாக வேதனைப்பட்டார்.
பிறகு அவர்கள் அவரை கொடூரமாய் அடித்ததினால் சரீரம் முழுவதும் காயமாகி இரத்தம் வெள்ளமாகத் தரையில் ஓடியது. மேலும் அவரை ஒரு இரும்பு கட்டிலில் கிடத்தி அடியில் நெருப்பு மூட்டியபோது, அவர் சற்றேனும் அஞ்சாமல் வேதத்தில் தைரியமாயிருப்பதை அதிகாரி கண்டு, அவரை அதிகக் கடுமையாய் உபாதிக்கும் கருத்துடன் அவருடைய காயங்கள் ஆறும் வரையில் அவரைச் சிறையில் அடைத்தான்.
அங்கு காணப்பட்ட அதிசயப் பிரகாசத்தைக் கண்ட காவல் சேவகன் உடனே மனந்திரும்பினான். கிறிஸ்தவர்கள் வேதசாட்சியை சந்தித்து அவருடைய இரத்தத்தை வஸ்திரங்களில் நனைத்து பக்தியோடு கொண்டுபோனார்கள். அர்ச். வின்ஸென்ட் சிறையில் உயிர் விட்டு மோட்சம் போய் சேர்ந்தார்.
யோசனை
நமக்கு வரும் துன்ப துயரத்தால் மனம் கலங்காமல் ஜெபத்தால் தேவ உதவியைத் தேடுவோமானால், அவை நமக்கு நித்திய சம்பாவனையைப் பெற வைக்கும்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். அனஸ்தாசியுஸ், வே.