நவம்பர் 23

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற இரண்டாம் வழி தர்மமாம்!

தியானம்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் வருவிக்கதக்கதாக தர்மம் செய்தல், எளிதான வழியும், உத்தமமான வகையும், தப்பாத உபாயமுமாம். தர்மஞ் செய்வது செய்தவனுக்கும் உதவும், செய்யப்பட்டவனுக்கும் உதவும். யாருக்காகச் செய்யப்படுமோ அவனுக்கும் உதவும்: தர்மஞ் செய்கிறவன் தான் கொடுத்த பிச்சையினால் பாவப் பொறுத்தலுக்கு வேண்டிய தேவ அநுக்கிரக்கத்தையும், தேவ கிருபையையும், மோட்ச பேரின்பத்தையும் அடைவான். பிச்சை வாங்குகிறவன் பிச்சையினாலே ஆறுதல் அடைந்து பிழைப்பான், சந்தோஷப்பட்டுச் சர்வேசுரனைத் தோத்தரிப்பான், நன்றியறிந்து வேண்டுவான். யாருக்காகச் செய்யப்படுமோ அவன் அதனாலே வருகிற ஆதாயத்தால் தன் கடனைச் செலுத்துவான், தேவ நீதிக்குப் பரிகரிப்பான். மோட்ச பாக்கியத்தை அடைவான் .

இது இப்படி இருக்க , வெகு ஆஸ்திகளைச் சம்பாதிப்பதிலும், தங்கள் காசைக்   குவியலாகச் சேகரிக்கிறதிலும், பிச்சை இடுவது மெத்த நல்லது ஏனெனில் பிச்சையானது சாவிலிருந்து மீட்கும் .பாவங்களைத் தடுக்கும், தேவகிருபையை அடையப்பண்ணும். நித்திய ஜீவியத்தை வருவிக்கும் என்று அதிதூதரான அர்ச் இரபாயேல் இரு தோபியாசுக்கும் அறிவித்தார்.

மேலும் நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்து நாதர்சுவாமி, தரித்திரப்பட்டவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் தர்மத்தை செய்யவேணுமென்றும் தர்மத்தினால் எவ்வளவு பிரயோசனம் உண்டாகுமென்றும், தர்மஞ்செய்கிறவர்களுக்கு மோட்ச பாக்கியம் கொடுக்கப்படுமென்றும் , அநேகமுறை சுவிசேஷத்தில் நிச்சயமாய்ச்சொன்னாரென்று முன் விபரமாய்க் காண்பிக்கப்பட்டுள்ளது .ஆனாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களைப் போல உதவி சகாயம் தேவை உள்ளவர்கள் ஒருவரும் இல்லை .

அதனாலே அவர்களைக் குறித்து பிச்சை தருமம் செய்வது எல்லா தர்மங்களிலும் நல்ல தர்மமாய் இருக்கிறதுமல்லாமல், தண்ணீர் நெருப்பை அவிக்குமாப்போலே இந்தத் தர்மத்தால் அவர்களுடைய வேதனை தணிந்து அவர்கள் தேவநீதிக்குச் செலுத்தவேண்டிய கடன் தீருமென்பது நிச்சயம். அது எப்படியாகுமென்றால் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் செலுத்தவேண்டிய பரிகாரக்கடன் ஒரு கடன்தான். நாம் பிச்சை கொடுக்கும்போது, சேசுகிறிஸ்துநாதர் அதைத் தமக்கே கடனாகக் கொடுத்தாற்போல ஏற்றுக்கொள்ளு கிறாரென்கிறதினாலே, அவர் மறுபடி நமக்குத் தீர்க்க வேண்டிய ஒரு கைம்மாறாயிருக்கும்.

இப்போது சுவாமி நமக்குக் கொடுக்க வேண்டிய இந்தக் கடனை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கைம்மாறாக நாம் ஒப்புக்கொடுப்போமேயானால், அம்மாத்திரத்துக்கு அந்த ஆத்துமாக்களுடய கடன் குறையுமென்று சொல்லவேண்டும். முன் காண்பித்த வண்ணமே எந்தப் புண்ணியத்திலும் எந்தத் தர்மத்திலும் மூன்று பலன் உண்டாயிருக்கிறது. அதாவது பேறுபலனும், மன்றாட்டுப் பலனும், பரிகாரப் பலனுமாம். பேறுபலனை யாருக்கும் கொடுக்கக்கூடாதென்றிருந்தாலும், மன்றாட்டுப்பலனையும் பரிகாரப் பலனையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கொடுக்கலாமென்பது நிச்சயமாகையால், தர்மம் செய்கிறவர்கள் இவ்விரண்டு பலனை அந்த ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் வருமென்றும், அவர்களுடைய வேதனை எவ்வளவு அமருமென்றும், அவர்களுடைய வருத்தங்கள் எவ்வளவு குறையுமென்றும் நன்றாய் நினைத்துக் கொள்ள வேணும்.

இது இப்படியிருக்க, நீங்கள் தர்மம் செய்கிறபோதெல்லாம்  அந்தத் தர்மம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்படும்படியாகவும் உங்களுக்கு அதிகமாய்ப் பிரயோசனப்படும்படியாகவும், அந்தத் தர்மங்களை உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துச் செய்யவேண்டியது தான். இப்போது அந்தப் பிச்சை தர்மம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதிகமதிகமாய் உதவும்பொருட்டு அவைகளைத் தகுந்தவிதமாய்ச் செய்யவேணும்.

முதலாவது முன் காண்பித்தவண்ணமே பிச்சை தர்மமும் மற்ற நற்கிரியைகளும் பலித்து நினைத்த பலனை அடைவதற்கு, இஷ்டப்பிரசாதத்தோடு அவைகளைச் செய்திருக்க வேணும். மனுஷனானவன் சாவான பாவத்தோடு செய்த தர்மத்துக்குப் பலன் இல்லாததினாலே , அந்த தர்மம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவ மாட்டாது . எத்தனையோபேர்கள் இந்தப் பரம சத்தியத்தை அறியாமல் தாங்கள் செய்யும் தர்மத்துக்கு யாதொரு பலனைத் தாங்கள் அடையாமல் போவதும் தவிர குறித்த உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவாமல் போகிறது .அதனாலே நீங்கள் யாதோர் தருமத்தைச் செய்ய நினைக்கும்போது செய்த பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபப்பட்டாவது செய்ய வேணும் .

இரண்டாவது :பிச்சை தர்மம் செய்கிற போதெல்லாம் வீண் ஆடம்பரத்தையும் வீண் பெருமையையும் தேடாமல் , சர்வேசுரனைக் குறித்து மாத்திரமே செய்யவேணும். அதேதென்றால்: "நீங்கள் மனிதர் காணும் பொருட்டு அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நற்கிரியைகளைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அல்லாவிட்டால் பரமண்டலங்களிலேயிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் அதற்குரிய வெகுமதியை அடையமாட்டீர்கள்.

ஆகையால் தர்மஞ் செய்கிறபோது கள்ள ஞானிகள் மனிதரால் புகழப்படுவதற்குத் தேவாலயங்களிலும் விதிகளிலும் செய்கிறது போல், உமக்கு முன்னே எக்காளம் ஊதுவிக்க வேண்டாம். அவர்கள் தங்கள் பிரதி பலனை அடைந்தாயிற்றென்று நிச்சயமாய் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோவெனில் தர்மஞ் செய்கையில் உன் தர்மம் மறைவாயிருக்கத்தக்கதாக, உன் வலது கை செய்வதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது. அப்போது மறைவிலே காண்கிற உன் பிதா உனக்கு வெகுமதி அளிப்பார்" என்று சேசு கிறிஸ்து நாதர் தமது திரு வாய் மலர்ந்து அருளிச்செய்தார்.

மூன்றாவது : ஒவ்வொருவன் தன்னுடைய அந்தஸ்துக்கும் ஸ்திதிக்கும் தக்கபடி தர்மஞ் செய்ய வேண்டியதுதான். இவ்விஷயத்திலே பெரிய தோபியாசென்கிறவர் தமது மகனுக்கு சொல்லுகிற சுகிர்த புத்திமதிகளைக் கேளுங்கள் " என் மகனே! உன்னாலே கூடுமான மட்டும் தர்மம் செய்வாயாக உனக்கு ஆஸ்தி மெத்த இருந்தால் அதிகமாகக்  கொடுப்பாயாக; கொஞ்சம் ஆஸ்தியிருந்தால் கொஞ்சமாவது  கொடுப்பாய், ஆனால் இந்தக் கொஞ்சத்தையும் சந்தோஷமாய்க் கொடுப்பாயாக "என்றார்.

நீங்களும் கிறிஸ்துவர்களே !ஆத்துமாக்களைக் குறித்து தர்மம் கொடுக்கும்போது அப்படித்தான் செய்யவேணும். உங்களுக்கு சர்வேசுரன் திரண்ட ஆஸ்திகளை கொடுத்திருப்பாரானால் அதிகமாய்க் கொடுக்கக் கடவீர்கள். ஆஸ்தி கொஞ்ச மாத்திரம் இருக்குமேயானால் நல்ல மனதோடே கொஞ்சமாவது கொடுக்க வேண்டியது. ஏழைகள் நல்ல மனதோடே கொடுக்கிற கொஞ்ச தர்மமானது ஆஸ்தியுள்ளவர்கள் கொடுக்கிற பெருந்தொகையைப் பார்க்கிலும் சர்வேசுரன் சந்நிதியிலே அதிகப் பிரியப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை.

நாலாவது : பிச்சைக்காரருக்கும், இல்லாதவருக்கும் செய்யப்பட்ட தர்மமுமல்லாமல், உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துக் கோவிலுக்கு எண்ணெய், மெழுகுத்திரி, சாம்பிராணி , காணிக்கை முதலானவை கொடுக்கிறது திருச்சபையில் வழங்கின வழக்கமும் ஆத்துமாக்களுக்குப் பிரயோசனமுள்ள நற்கிரியையுமாம்.

ஐந்தாவது: அநேகம் கிறிஸ்துவர்கள் பெண்பிள்ளைகளாவது ஆண்பிள்ளைகளாவது சாகுமுன்னே மரண சாசனத்தைச் செய்தானாலும், வாய்மொழியாய்த் தங்களுடைய சித்தத்தைக் காண்பித்தென்கிலும், தங்களுக்காக சில பூசைகளைப் பண்ணுவிக்கவும் அல்லது சில தர்மங்களைச் செய்யவும் தங்கள் சொந்த ஆஸ்திகளிலிருந்து இன்ன சொத்தை அல்லது இன்ன உடமையை அல்லது இன்ன காரியத்தை செய்யச் சொல்லுவார்களாம். மரித்தவர்களுடைய இந்த கருத்துகளை மகா எச்சரிக்கையோடு நிறைவேற்றவேணுமென்று தேவ கட்டளை உண்டு .

திருச்சபைக் கற்பனை உண்டு . இராஜாங்கத்தாருடைய சட்டமுமுண்டு, சர்வ நியாயமுமுண்டு. இந்த கருத்துக்களை நிறைவேற்றாதவர்கள் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பொருந்தாத பாவங்களைக் கட்டிக்கொள்ளுகிறதுமன்றியே, தங்களுடையவர்களின் ஆத்துமாக்கள் மட்டில் மகா கொடுமையைக் காண்பிக்கிறார்கள் என்பதாகும். அதெப்படியெனில், அப்படிச் செய்கிறவர்கள் மேற்சொன்ன பூசைகளினாலும் தர்மங்களினாலும் அந்த ஆத்துமாக்களுக்கு வரவேண்டிய உதவி சகாயத்தை நிறுத்துகிறார்களல்லவோ?

மீண்டும் இப்பேர்ப்பட்டவர்கள் இறந்தவர்களுடைய கருத்துக்கு விரோதமாய் பூசை தர்மங்களைச் செய்யாமற்போவதால் தங்களுக்குப் பிரயோசனமிருக்குமென்று நினைக்கவேண்டாம். அதனாலே அவர்களுக்கு பொல்லாப்பு, குறைவு, துன்பம் முதலான அநேக ஆக்கினைகள் வருகிறதென்று நிரூபிக்க பல திருஷ்டாந்தங்களும் சரித்திரங்களும் இருக்கின்றன. இது இப்படியிருக்க , நீங்கள் இறந்தவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேணுமென்று அறியக்கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

சர்வ வல்லபமுள்ள சர்வேசுரா ! தேவரீரை வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு எப்போதும் இரங்குவீரென்கிறதினாலே, எங்களுடைய தாழ்மையான மன்றாட்டுகளைக் கிருபையாய் ஏற்றுக் கொள்ளும். உம்முடைய ஊழியரான எங்களுடைய பந்துஜனங்கள் உயிரோடிருக்கும்போது உம்மை விசுவசித்து நம்பி மரித்தார்களென்று நினைத்து அவர்கள் கட்டிக் கொண்ட குற்றமெல்லாம் பொறுத்து உமது பரம இராச்சியத்தில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளவேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

இருபத்து மூன்றாம் தேதி செய்ய வேண்டிய நற்கிரியையாவது 

ஆத்துமாக்களைக் குறித்து பிச்சை கொடுக்கிறது

புதுமை 

ஜெர்மானிய தேசத்தில் உள்ள வூல்தான்ற மடத்துக்கு ராபான்மோருஸ் என்கிறவர் அதிசிரேஷ்டராய் இருந்தார். அதற்கப்பால் மாயாஞ்சி பட்டணத்துக்கு அதிமேற்றிராணியார் ஆனார் . அவர் மடத்துக்கு சிரேஷ்டராய் இருக்கும்போது பிச்சைக்காரருக்கு ஏராளமாய் தர்மம் செய்ய வேணுமென்று மடத்து விசாரணைக் காரியக்காரனுக்கு கட்டளையிட்டிருந்தார். ஏதேலாரென்ற  இந்த விசாரணைக்காரன் கஞ்சத்தனத்தினாலே கொடுக்க வேண்டிய தர்மங்களைக் குறைப்பான் .

மேலும், சிரேஷ்டரானவர் மடத்துச் சந்நியாசிகளில் யாதாமொருவர் சாகிறபோது முப்பது நாளளவும் செத்துப் போனவர் வழக்கமாய்ச் சாப்பிடும் சாப்பாடுகளைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்க கட்டளையிட்டிருந்தார். அதையும் விசாரணைக்காரன் நிறுத்துவான். 830-ம் ஆண்டில் ஒரு சந்நியாசியார் இறந்து போகவே சிரேஷ்டரானவர் அவருடைய ஆத்துமத்தைக் குறித்து வழக்கத்தின்படியே முப்பதுநாள் அவருடைய சாப்பாட்டைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்கவேணுமென்று கண்டிப்பாய் விசாரனைக்காரனுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படிச் சிரேஷ்டர் கற்பித்திருந்தாலும் கஞ்சத்தனமுள்ள காரியஸ்தன் ஒன்றும் செய்யவில்லை. இப்படி அவன் பிச்சைக்காரருக்குக் கொடுக்கவேண்டிய தர்மத்தையும், அந்த தர்மத்தால் ஆத்துமாக்களுக்கு வரவேண்டிய சகாயத்தையும் அநியாயமாய் நிறுத்திக்கொண்டிருந்தான்.

ஒரு இராத்திரி இந்த விசாரிப்புக்காரன் சந்நியாசிகள் கூடுகிற ஒரு பெரிய அறையிலே ஒரு லாந்தர் வெளிச்சத்தைக் கையிலே பிடித்துப்போகையில் அந்த அறையிலேயே புதிதாய் இறந்த சந்நியாசியாரும் அவருக்கு முன்னமே இறந்த வேறு சில சந்நியாசிமாரும் கூடி உட்கார்ந்து ஆலோசனை பண்ணிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். அதைக் கண்டு பயந்து வெருண்டு தலைமயிர் சிலுசிலுத்து யாதொன்றையும் பேசக்கூடாமல் நிற்கும்போது காணப்பட்ட சந்நியாசிகளில் சிலர் அவனருகே வந்து அவனுடைய மேல்வஸ்திரங்களைக் கழற்றி அவனைச் சாட்டைகளால் அகோரமாய் அடித்து, " கெட்டவனே, உன்னுடைய கஞ்சத்தனத்துக்கு இதுவே பரிசு. மூன்று நாள் கழித்து நீயும் செத்துப்போய் இதுக்கதிகமாய் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவாய். எங்களுக்கு வரவேண்டிய உதவி சகாயங்களை உன்னுடைய கஞ்சத்தனத்தினாலே நிறுத்தினாயே, உன்னுடைய ஆத்துமத்துக்கும் அப்படியே செய்யப்படும்"  என்று சொல்லி காணப்பட்டவர்கள் மறைந்துபோனார்கள். விசாரணைக்காரனோவென்றால் பட்ட அடியினாலே கனகாயப்பட்டு, சர்வாங்கமும் நொந்து, மூர்ச்சையாய் விழுந்து கிடந்தான்

நடுச்சாமத்திலே , மற்ற சந்நியாசிமார்கள் தேவ சங்கீதங்கள் பாட அந்த அறையிலே தான் கூடுகிறபோது விசாரிப்புக்காரன் பிரேதம் போலக் கிடக்கிறது கண்டு மிகவும் அதிசயப்பட்டார்கள் . கொஞ்ச நேரத்துக்குப் பிற்பாடு அவனுக்கு புத்தி தெளிந்து பேச்சு திரும்பி வந்து சொன்னதாவது :" என் சரீர வேதனைக்கு பரிகாரம் வேண்டாம் என் ஆத்துமத்துக்குத்தான் பரிகாரம் வேணும். அதிசிரேஷ்டரைச் சீக்கிரமாய் வரப்பண்ணுங்கள் " என்றான். அதிசிரேஷ்டர் வந்தவுடனே காரியஸ்தனானவன் தான் கஞ்சத்தனத்தினாலே செய்த பாவம் எவ்வளவென்றும், தான் அடிப்பட்டது எப்படியென்றும், தான் மூன்று நாளுக்குள்ளாகச் சாகப்போகிறதையும் விவரித்த பிற்பாடு தனக்குப் பாவசங்கீர்த்தனமும், அவஸ்தைப்பூசுதலும் அவஸ்தை நன்மையும் தரவேணுமென்று கேட்டான். இவையெல்லாம் பெற்றபின்பு மூன்றாம் நாள் மகா பக்தி மனஸ்தாபத்தோடு இறந்தான் .

இவனுடைய ஆத்துமத்தைக் குறித்து மடத்திலே பூசை நடந்ததுமல்லாமல் வழக்கத்தின்படியே முப்பதுநாளும் இவனுடைய சாப்பாட்டைப் பிச்சைக்காரருக்குக் கொடுத்தார்கள். முப்பதாம் நாளில் செத்த காரியஸ்தனானவன் அவலகடினமான ரூபத்தோடு வெகு வருத்தப்படுகிற பிரகாரமாய் அதிசிரேஷ்டருக்குத் தரிசனையாகிச் சொன்னதாவது "என் தகப்பனாரே எனக்காக மடத்தில் செய்யப்பட்ட ஜெபதருமங்களினாலே எனக்குக் கொஞ்சம் ஆறுதல் வந்தது மெய்தான். ஆனால் என் கஞ்சத்தனத்தினாலே அந்த உத்தரிக்கிறஸ்தலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆத்துமாக்கள் யாவும் மோட்சத்துக்குப் போனபிற்பாடு மாத்திரமே நான் போவேன். அதற்குள்ளாக என்னைச் குறித்துச் செய்யப்படும் ஜெப தானதர்மம் தேவநீதியின் படியே அவர்களுக்கு உதவுகிறதேயொழிய எனக்கு
உதவுகிறதில்லை. எனக்கு அவ்வளவு பட்சங்காண்பித்த தகப்பனாரே , என்னைக் கைவிடாதேயும், அதிகமதிகமாய் என்னைக்குறித்துத் தர்மம் செய்யவேணும். இப்படிச் செய்வீ ரேயானால் என்னாலே நிறுத்தப்பட்ட ஆத்துமாக்களும் நானும் மீட்கப்படுவோம் " என்று சொல்லி மறைந்தான்.

அப்படியே சிரேஷ்டரானவர் மறுபடியும் முப்பது நாள் ஏராளமாய்த் தர்மம் கொடுக்கப்பண்ணினார். அப்போது காரியஸ்தனுடைய ஆத்துமம் அத்தியந்த சந்தோஷத்தோடும் மகா பிரதாபத்தோடும் சிரேஷ்டருக்குக் காணப்பட்டு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ணி, " உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவோம்" என்று சொல்லி மோட்சத்துக்கு எழுந்தருளிப்போனான்.

கிறிஸ்துவர்களே ! இந்த சுகிர்த புதுமையை ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு அதிக  ஞானப் பிரயோசனம் வருமே. முதலாவது: ஆத்துமாக்களைக் குறித்து செய்யவேண்டியதைச் செய்யாமலிருக்கிறது பெரிய பாவமென்று காணப்படுவதுமல்லாமல், அது ஆத்துமாக்களுக்கு பெரிய கொடுமையுமாயிருக்கிறது. இரண்டாவது ஆத்துமாக்களின் பேரில் இரக்கமில்லாதவன் தானும் இரக்கமடையாமல் தன் கடனெல்லாம் தீருமளவும் உத்தரிப்பான். மூன்றாவது: மேற்சொன்ன மடத்துச் சந்நியாசிமார்கள் ஆத்துமாக்களுக்கு ஆறுதலாக ஏராளமாய்த் தர்மம் செய்ததுபோல, நீங்களும் கஞ்சத்தனமின்றி உங்களாலே கூடியமட்டும் தர்மம் கொடுக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.