இயேசுவின் திருஇருதயம் பொறுமைக்கு மாதிரிகை.
இயேசுவின் திரு இருதயத்துக்குப் பிரியப்படும்படியாய் இன்று பொறுமை என்கிற புண்ணியத்தை விசேஷ விதமாய் கடைபிடிப்போமாக. இந்தப் புண்ணியமானது எவ்வளவு சம்பாவனைக்குரியதென்றும், நம்முடைய சுபாவத்துக்கு எவ்வளவு வருத்தமானதென்றும் அறிந்த இயேசுக் கிறிஸ்துநாதர் தமது வாழ்நாளில் தம்முடைய வார்த்தைகளினாலும், மாதிரிகையினாலும் அதை கடைபிடித்து நமக்குத் தைரியம் வருவிக்க தம்மாலான முயற்சி செய்தார் தமது பாரமான சிலுவையைப் பொறுமையோடு சுமந்து, அதின் மேல் நமக்காக மரித்து நமது பேரில் வைத்த அன்பை காண்பித்தார்.
திரு இருதயத்துக்கு புகழ்ச்சியாக சில வெளியரங்கமான பக்திமுயற்சிகளை அனுசரிப்பதினாலே அத்திரு இருதயத்தின் மேல் நாம் வெகு பற்றுதல் உள்ளவர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறது பெரிய தவறு. செபம், ஞானவாசகம் முதலிய வெளி அநுசாரங்களெல்லாம் தன்னிலே உத்தமமானவை என்றாலும் திரு இருதயத்தின் மெய்யான பத்தி இவைகளாகமாட்டாது. நாம் மெய்யாகவே ஆண்டவருடைய சீடர்களும் அன்பர்களாக வேண்டுமானால் அவருடைய பரித்தியாகமும் பொறுமையும் நம்மிடத்திலிருக்க வேண்டும்.
அன்பு பற்றுதலோடு தேவசித்தத்துக்கு அமைந்து, நமக்கு வரும் துன்பங்களையும், சிலுவைகளையும் நித்திய சம்பாவனையை எண்ணி திவ்விய இயேசுவுக்காக ஏற்றுக்கொள்ள செய்கிறதே பொறுமை என்கிற புண்ணியம். அது சுபாவமாய் நமது இருதயத்தில் வளரும் தன்மையுள்ளதல்ல. அதற்கு விரோதமாய் நமது சுபாவத்துக்கு இந்தப் புண்ணியம் முற்றும் பிரியமில்லாதது; ஆனால் வெகு சம்பாவனையை விளைவிக்கக்கூடியது. இந்தப் புண்ணியத்தைச் சம்பாதிக்க தாழ்ச்சி, பிறரன்பு, சுய ஒறுத்தல் அவசியம். திவ்விய இயேசு சகலருக்கும் சில இலேசான சிலுவைகளை அனுப்புகிறார். இந்தச் சிலுவைகள் ஏதென்றால் நமக்கு வரும் துன்பங்கள், சோதனைகள், வியாதிகள் சாவு முதலியவை. இச்சிலுவைகளை இயேசுவின் அன்புக்காக ஏற்றுக் கொண்டு அவருடைய பாடுகளோடு ஒன்றித்து ஒப்புக்கொடுப்போமேயாகில் பொறுமையை அனுசரிக்கிறோம்.
நமது சிலுவைகளையும், துன்பங்களையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளும்படி தைரியம் கொடுப்பதற்கு இயேசுகிறிஸ்துவின் திவ்விய மாதிரிகையைப் போல் சக்தியுள்ளது மற்றெதுவுமில்லை. நமது பலவீனத்தை ஏற்கனவே அறிந்த திவ்விய இரட்சகர் பாடுகளின் பாதையில் முன்னடைந்து நமக்கு வழி காண்பித்தார். தமது வெளியரங்க வாழ்வில் பரிசேயர்களுடைய பகையால் இடைவிடாத துன்பம் அனுபவித்தார். அவர்களுடைய நிந்தை அவதூறுகளை மாறாத பொறுமையோடு ஏற்றுக் கொண்டு மிகுந்த அன்போடு அவர்களோடு புழங்கினார். மூன்று வருட காலமாய் திவ்விய இயேசுவின் போதகங்களைக் கேட்டிருந்தும் இன்னும் தங்கள் அறியாமையால் மனித புகழ்ச்சியைத் தேடுவதில் கருத்தாயிருந்த தமது அப்போஸ்தலர்களோடு ஆண்டவர் எவ்வளவோ பொறுமையாயிருக்க வேண்டியிருந்தது! என்றாலும், அவர்களுடைய குற்றங் குறைகளையும் பாராமல், அவர்களோடு மிகுந்த அன்போடு எப்போதும் பேசுகிறார்.
தமது திருப்பாடுகளின்போது இயேசுக்கிறிஸ்துநாதர் நிந்தை அவமானங்களையும், வேதனைகளையும் சாவையும் மிகுந்த பொறுமையோடு அனுபவிக்கிறார். இந்த நேரத்தில் தம்மையும் தமது பாடுகளையும் மறந்து, தமது விரோதிகளையும், நல்ல திருடனையும், அப்போஸ்தலர்களையும், தமது திரு மாதாவையும் நினைத்து, சகலருக்கும் அன்பைக் காண்பித்து, ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லித் தமக்குத் துரோகம் செய்தவர்களையும் மன்னிக்கிறார்.
இதோ நமது திவ்விய மாதிரிகையைப் பாருங்கள்! நமது சோதனை நேரத்தில், துன்பவேளையில் இயேசுவின் திரு இருதயத்தின் பக்கமாய் நமது இருதயத்தை உயர்த்தக்கடவோம். நாம் வருத்தப்படுகிறதைக் கவனியாமல் திவ்விய இயேசு நமது அன்புக்காக எவ்வளவு வருத்தப்படுகிறாரென்று கவனிக்கக்கடவோம். இந்த நினைவே நமது துன்பங்களையெல்லாம் இன்பமாக மாற்றும்.
திவ்விய இயேசுவின் உணர்ச்சியையும், மாதிரிகையையும் தங்களிடத்திலும் விளைவிக்க புனிதர்கள் தங்களாலான பிரயாசப்பட்டார்கள். வேதனையால் அமிழ்ந்தின் புனித லித்வீனம்மாள் தேவசித்தத்துக்குச் சந்தோஷமாய் அமைந்து, என் இயேசுவே! நீர் எனக்காக அனுபவித்த துன்பங்களுக்கு முன்பாக நான் அநுபவிக்கிறது வெகு குறைவு என்று சொல்லிக் கொண்டு வருவாள்.
புனித ஜெர்த்துருத்தம்மாள் ஆண்டவரை நோக்கி அவருடைய திரு இருதயத்துக்குப் பிரியப்பட்ட தான் செய்யக்கூடியது எது என்று கேட்கையில், திவ்விய இயேசு, மகளே, நாம் உனக்கு அனுப்புகிற வேதனைகளை அமைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுகிறதைவிட நமக்கு அதிக பிரியமானது ஒன்றுமில்லை என்று திருவுளம் பற்றினார். ஓர் புண் 600ரியவானை நோக்கி ஓர்நாள் நமது ஆண்டவர், "நமது இருதயத்துக்குப் பிரியமானவர்களுக்கு நாம் மூன்று விதமான உதவி புரிகிறோம். அதாவது பாவத்தை விலக்குதல், நற்கிருத்தியங்களைச் செய்தல், நமக்காக வேதனைப்படுதல். இம்மூன்றில் கடைசியானது மற்ற இரண்டிலும் அதிமேலானது" என்றார். இயேசுவின் அன்புக்காக மிகவும் வேதனை அநுபவித்த புனித தெரேசம்மாள் தன் மரணத்துக்குப்பின் ஒர் சகோதரிக்குத் தன்னைக் காண்பித்து, "நான் மோட்சத்தில் அனுபவிக்கிற பெரிய பாக்கியத்துக்குக் காரணம் நான் செய்த நற்செயல்கள் மாத்திரமல்ல; ஆனால் நமது ஆண்டவருடைய அன்பினிமித்தம் அமைந்த மனதோடும் சந்தோஷத்தோடும் நான் ஏற்றுக்கொண்ட சிலுவைகளே அம்மாத்திரம் பாக்கியத்துக்கு விசேஷ காரணம்" என்றாள்.
புனிதர்கள் இவ்வுலகில் சிலுவையின் நடுவில் சர்வேசுரனை அன்பு செய்கிறார்கள் மறுமையில் பாக்கியத்தின் நடுவில் அவரை அன்பு செய்கிறார்கள்.
மிகுந்த அவமானம் நிறைந்து தூற்றப்பட்ட ஓர் நல்ல கிறிஸ்துவன் ஆண்டவரை நோக்கி முறைப்படும்போது அவனுடைய மாசற்ற தனத்தை அறிந்த திவ்விய இயேசு அவனைப்பார்த்து, "மகனே, நீ மாசற்றவனென்று சொல்லுகிறாய், சரி. ஆனால் நாம் என்ன செய்தோம்? நம்மை ஏன் குற்றம் சாட்டவேண்டும், சிலுவையிலறைய வேண்டும்," என்று சொன்னார். உடனே அந்த நல்ல கிறிஸ்துவனுடைய ஆத்துமம் ஆறுதலும் தைரியமுமடைந்தது. இயேசுசபை துறவி ஒருவர் தன் கடைசி வேளையில் இராப்பகலாய் வெகு வாதைப்பட்டார். சகோதரே, வியாதியினிமித்தம் இராப்பகல் தூக்கமின்றி வெகு வருத்தப்படுகிறீரா என்று பிறர் அவரைக் கேட்கையில், துறவி " இல்லை இல்லை, வேதனைப்பட்ட நமது ஆண்டவர் இப்போது மோட்சத்தில் மட்டில்லாப் பாக்கியம் அனுபவிக்கிறார். இதை நினைக்க நினைக்க எனக்கு வெகு ஆறுதலாயிருக்கிறதோடுகூட என் இருதயத்தை நம்பிக்கையாலும் சந்தோஷத்தாலும் நிரம்புகிறது" என்றார்.
வரலாறு
இயேசுசபைக் குருவான செப்பாரி குருவானவர் ஒரு பெரிய கலாசாலைக்கு தலைவராக நியமிக்கப்பட்டபோது இந்தப் பொறுப்பான உத்தியோகத் தினிமித்தம் வெகுவாய் அஞ்சி மனத்தத்தளிப்பாயிருக்கும் நேரத்தில் தாம் புண்ணிய வழியில் நடத்திவந்த பாவி மதலேனம்மாளிடம் அதை அறிவித்து, தேவ சித்தம் ஏதென்று தெளிவிக்க ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொள்ளக் கேட்டார். புனிதை, புனிதரை நோக்கி, "திவ்விய இயேசு தமது சிலுவையைத் தாமே ஏற்றுக்கொண்டது போல், நீரும் இந்த உத்தியோகத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது ஆண்டவர் சித்தம். திவ்விய இரட்சகர் சிலுவையின் மேல் எவ்வளவு அமைந்த மனதோடு இருந்தாரோ அப்படியே நீரும் இருக்கவேண்டும். பாடுபடுதல், தமது பிதாவை அன்பு செய்து, மகிமைப்படுத்துதல் ஆகிய இவைகளை மாத்திரம் ஆண்டவர் சிலுவையில் தேடினது போல் நீரும் அவைகளை மாத்திரமே தேடவேண்டும்" என்றாள்.
இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் ஆண்டவருடையவும், புனிதர்களுடையவும், மாதிரிகையையும் உணர்ச்சியையும் பின்பற்றப் பிராயசப்படுவார்கள். புனிதர்கள் நம்மைவிட நல்ல சுபாவத்தைக் கொண்டிருந்தார்களென்றும், அவர்களுக்குப் பொறுமை என்னும் புண்ணியம் மிக எளிதாயிருந்த தென்றும் நினைக்கக்கூடாது. நம்மைப் போலவே புனிதர்களும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பொறுமை முதலிய மற்றப் புண்ணியங்களை கடைபிடிக்க மிக அக்கறையும் சுய ஒறுத்தலும் அவசரமாயிருந்தது. தங்களுக்கு வரும் வேதனைகள் சோதனைகளை அநுபவித்து பிறருடைய குற்றங் குறைகளை சகிக்க தங்கள் ஆசாபாசங்களை அடக்கவேண்டியிருந்தது. ஆனால் அவர்களுடைய உயிருள்ள விசுவாசமும் தேவ அன்பும் தங்களை ஜெயிக்கவும், தங்களுடைய துன்பங்களைப் பொறுமையோடு அநுபவிக்கவும் உதவியாயிருந்தன.
ஆதலால் இனிமேலாக நாமும் திவ்விய இயேசுவைப் போல் நமது சிலுவைகளை அமைந்த மனதோடும் அன்போடும் ஏற்றுக் கொள்வோமாக. திரு இருதயத்தின் கருத்துக்களோடு நமது கருத்தையும் ஒன்றித்து, தேவ தோத்திரத்துக்காவும், திருச்சபைக்காகவும், நம்முடைய ஆத்தும் மீட்புக்காகவும், நமது சிலுவைகளையும் அவைகளால் நமக்கு வரும் பலன்களையும் ஒப்புக்கொடுப்போமாக.
புனித மாக்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம்.
என் சரீரமானது எவ்வளவுக்கு வேதனைப்படுகிறதோ அவ்வளவுக்கு வேதனைப்படுகிற என் இயேசுவோடு ஒன்றித்துச் சந்தோஷம் அடைகிறது. சிலுவையில் மரித்த என் இயேசுவின் உத்தம சாயலாகவேண்டுமென்கிற ஆசையேயொழிய வேறு ஆசை எனக்கில்லை .
மனவல்லய ஜெபம்!
இயேசுவின் மதுரமான திரு இருதயமே! உம்மை நான் அதிகமதிகமாய் சிநேகிக்க அனுக்கிரகம் செய்தருளும். (300 நாட் பலன்)
சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்
“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே! தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்? தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்? சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்? ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே! தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே! தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான். ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர் வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.
சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி. உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
ஆமென்.
1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.