நவம்பர் 25

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்.

தியானம்.

கடன்பட்ட மனுஷனொருவன் தன் கடனைச்செலுத்த ஒரு தர்மவானுடைய பொக்கிஷத்திலேயிருந்து தேவையான பணங்களை எடுக்கக்கூடுமேயானால் தன் கடனைச் செலுத்தாமலிருப்பானோ? அவன் அப்போது தன் கடனைச் செலுத்தாதிருந்தால் அவனுக்கு மதியீனனென்றும், பைத்தியக்காரனென்றும் பேறுண்டாகுமல்லவோ? மனுஷனானவன் தான் செய்த பாவங்களினால் தேவ நீதிக்குக் கடனாளியாய்ப் போனானென்பது நிச்சயம். இந்தக் கடனைச் செலுத்துகிறது மகா கடினமும் பிரயாசமுமாயிருக்கிறதினாலே அது அநேகமாய் அவனால் தீர்க்கக்கூடாத காரியமாயிருக்கும். ஆயினும் இந்தக் கடனைச் செலுத்த திருச்சபையினுடைய பலன்களடங்கிய வற்றாத பொக்கிஷத்திலிருந்து நமக்கு வேண்டியமட்டும் எடுக்கக்கூடும். மீண்டும் குறையாத இந்த பொக்கிஷத்திலிருந்து உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாகத் தேவையான பலன்களை எடுத்துக் கொள்ளலாமென்பது விசுவாச சத்தியமாம்.

அதெப்படியாகுமென்றால், அர்ச் திருச்சபை, ஆண்டவர் தமக்குக் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு சேசுநாதருடைய அளவில்லாத புண்ணிய பலன்களையும். அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பலன்களையும் மனுஷருக்குக் கைம்மாறாகப் பரிமாறிக்கொடுக்கிறதாமே அதைக்கொண்டு மனுஷனானவன் தன் கடனைத் தீர்க்கலாம். உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணலாம் . மெய்யான சர்வேசுரனான சேசுக்கிறிஸ்து நாதர் சகல உலகங்களை மீட்டிரட்சிக்க தம்முடைய திவ்விய இரத்தத்தின் ஒரு துளி மாத்திரம் போதுமென்பது தப்பாத சத்தியமாம்.

ஆனால் நம்முடைய பரமநாதர் படாத பாடுபட்டு, நிந்தை வதையெல்லாம் அனுபவித்து, தம்முடைய பிராணனையும் தந்து, தமது திவ்விய இரத்தமுழுமையும் சிந்தத் திருவுளமானதினாலே, இவ்வுலக இரட்சிப்பு சம்பூரணமாய் நிறைவேறினதுமல்லாமல் அவருடைய புண்ணியபலன்கள் அளவில்லாதவிதமாய் மிஞ்சிவிட்டதென்பது உண்மை. மேலும் மாசில்லாத தேவமாதாவானவள் செய்த புண்ணியங்களுக்குக் கணக்கில்லை. மீளவும் பிதாப்பிதாவாகிய அர்ச் சூசையப்பரும், அப்போஸ்தலர்களும், வேதசாட்சிகளும், தபோதனரும் முதலிய கணக்கில்லாத அர்ச்சியசிஷ்டவர்களும், தாங்கள் செய்த ஜெபதப தான் தர்மம் தவக்கிரியைகளினாலே தாங்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன்களைத் தீர்த்ததுமல்லாமல் இந்த நற்கிரியைகளினால் வந்த பலன்கள் மீதியாயினதென்றும் சொல்லவேண்டியது.

இப்படியே சேசுநாதருடைய விலைமதிப்பற்ற புண்ணிய பலன்களும், அர்ச். தேவமாதாவாவின் எண்ணிறந்த உத்தம புண்ணியங்களும், மற்ற சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பரிகாரப் பலன்களும், தேவ கிருபையினாலே திருச்சபைக்குச் சொந்தப் பொக்கிஷமாயிற்று. நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் தாம் ஸ்தாபித்த ஏழு தேவதிரவிய அநுமானங்கள் வழியாய்த் தம்முடைய அளவற்ற பலன்களை நமக்கு அளிக்குமாப்போல, திருச்சபையானது தனக்கு முன்சொன்ன பொக்கிஷத்தி லிருக்கும் ஞானத் திரவியங்களை நமக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறதாமே.

இந்த பலன்களின்மூலமாய்ச் சுகிர்த முறைமை எவ்வித பலத்த நியாயங்களிலும் ஊன்றியிருக்கிறபடியினாலும், இதற்கு விரோதமாய்ப் பதிதர் பிதற்றுகிற தூஷணங்கள் எல்லாம் முழு அநியாயமும் சுத்த அபத்தமுமாய் இருக்கிறதென்று எல்லாருக்கும் விளங்குமே பக்தியுள்ள கிறிஸ்துவர்களோவென்றால், ஆண்டவரான சுவாமி நமக்குச் செய்தருளிய உபகாரங்களுக்குள்ளே இது பெரிய உபகாரமென்றெண்ணி அதற்காக அவருக்குத் தோத்திரம் பண்ணுவார்களல்லாமல் பல பலன்களை அடையவும் விரும்புவார்களாமே.

கிறிஸ்துவர்களே ! திருச்சபை அளித்த பலன்களினாலே உங்களுக்கு ஞான பிரயோசனம் அதிகமதிகமாய் வரும்படியாகச் சொல்லப்போகிறதைக் கவனித்துக் கேளுங்கள்.

முதலாவது பரிபூரணப்பலன் தனிப்பலன் ஆகிய இவ்விரண்டு வகைப் பலனுண்டு . பரிபூரணப்பலன் ஏதென்றால், பாவத்தால் வருகிற அநித்திய ஆக்கினையை முழுவதும் நிவாரணமாக்குகிற பலனாம். எவனொருவன் அந்தப் பூரண பலனை முழுமையும் அடைவானேயானால், பரிசுத்தனாகி மோட்சத்தை அடைவதற்குப் பாத்திரவானாய் இருப்பான் . ஆனால் பரிபூரண பலனை அடைவது சிரமமும் அருமையுமாம். ஏனென்றால் அதற்குத் தக்க தேவசிநேகமும், உண்மையான மனஸ்தாபமும், சொற்ப பாவங்களின்மேலே முதலாய் முற்றும் வெறுப்பும் வேணுமென்கிறதினாலே இவையெல்லாம் கொண்டிருக்கிறது எளிதான காரியமல்ல. ஆனாலும் அதை முழுவதும் அடையாமற்போனாலும் அதில் ஒரு பங்காவது அடைவது தப்பாது.

தனிப்பலனோவென்றால் பாவத்துக்கு வரவேண்டிய அநித்திய ஆக்கினையில் சிலநாட்களை அல்லது சில காலத்தை மாத்திரம் நிவாரணமாக்குகிற பலனாம். ஆகையால் நாற்பதுநாள், நூறுநாள், ஏழுவருஷம், பத்துவருஷப் பலன்கள் முதலியவை தனிப்பலன்களெனப்படும். இந்தத் தனிப்பலன்களால் பூர்வீக திருச்சபையில் அந்தந்தப் பாவத் துக்கு வழங்கின ஆக்கினையில் அத்தனைநாள் அல்லது அத்தனை காலம் உத்தரிப்பு குறையும், அல்லது உத்தரிக்கிற ஸ்தலத்திலே செய்யவேண்டிய பரிகாரம் மாத்திரம் தணியும்.

இரண்டாவது பரிபூரண பலனையாவது தனிப்பலனையாவது தனக்கே பெறவேணுமானால் சாவான பாவமின்றி இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணுமென்கிறது நிச்சயம். பரிபூரண பலன்களை அடைந்து மற்றவர்களுக்கு ஒப்புக் கொடுக்கவேனுமானாலும் அப்போது கூட சாவான பாவமில்லாமல் இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணும். இவர்களுக்குத் தனிப்பலனை ஒப்புக்கொடுக்கிறதற்கு இஷ்டப்பிரசாதம் அவசரமில்லாதிருந்தாலும் அதுவும் இருந்தால் மெத்த நல்லது.

மூன்றாவது எந்தெந்தப் பலன்களை அடையவேணுமென்றாலும் அதற்கு கற்பிக்கப்பட்டதெல்லாம் தப்பாமல் அநுசரிக்கவேண்டியது. பரிபூரண பலனைப்பெறுவதற்குப் பாவசங்கீர்த்தனம் பண்ணவும், நன்மை வாங்கவும், அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்களைக் குறித்து வேண்டிக்கொள்ளவும் கற்பித்திருக்கிறதே வழக்கம்.

நாலாவது எந்தெந்தப் பலன்களையும் அடைய வேண்டுமானால் அதைப் பெற வேணுமென்கிற கருத்து வேண்டியதுமல்லாமல் , அதற்குக் கற்பித்த சுகிர்த முயற்சிகளையும் நிறைவேற்றுவது அவசியம் . கருத்து மட்டும் இருந்தால் , பக்தியுள்ள கிறிஸ்தவனானவன் தினந்தோறும் செய்யும் செபங்களினாலும் நற்கிரியைகளினாலும் அநேகம் பலன்களைப்பெற்றுக்கொள்ளலாமே. அநேகம்பேர் இவைகளையெல்லாம் நினைக்காதிருக்கிறதினாலே, தங்களுடைய கையில் வந்த அநேக ஞானப் பலன்களை இழந்துபோகிறார்கள் ஆனதினாலே இந்த ஜெபத்தை அல்லது நற்கிரியையைச் செய்யும் போது அவைகளுக்குக் குறிப்பிட்ட பலனைப் பெற வேணுமென்கிற கருத்தில்லாதிருந்தாலும், தினந்தோறும் காலையில் அந்தக் கருத்தை சற்றாகிலும் புதுப்பிக்கவேணும்.

அதெப்படி என்றால்: இன்றைக்குப் பெறக்கூடுமான பலன்களையெல்லாம் அடையவேணுமென்று விரும்புகிறேன்; இவையெல்லாம் என் பாவப்பரிகாரத்துக்காக அல்லது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக்கொடுக்கிறேன் என்று வாயினாலேயாவது மனசிலேயாவது வேண்டிக் கொள்ளவேணும், அப்படிச் செய்வது பலன்களை அடையப் போதுமென்று சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.

ஐந்தாவது பொதுப்பட பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கலாமென்பது திருச்சபையினுடைய உத்தரவுதான். ஆயினும் அந்தந்தப் பலன்களைப் பொதுவிலே சகல ஆத்துமாக்களுக்கு அல்லது குறிப்பாக அந்தந்த ஆத்துமத்துக்குச் செலுத்தவேனுமானால் அந்த கருத்துத்தானிருக்கவேண்டியது.

ஆறாவது திருச்சபையில் எண்ணிக்கைக்குள்ளடங்காத பலன்கள் உண்டாயிருக்கிறதென்பது சத்தியந்தான். ஆயினும் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பக்திக்கும் அந்தஸ்துக்கும் தக்கப்படி சிலதுகளைத் தெரிந்துக் கொண்டு அவைகளைச் தாழ்ச்சியுடன் அடையப் பிரயாசைப்படக்கடவார்கள்.

அதிப்படியிருந்தாலும் தேவ கிருபையால் ஆத்தும ஈடேற்றத்துக்கும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் மீட்புக்கும் அவ்வளவு பெரியதும் எளியதுமான இந்த உதவியை அசட்டை பண்ணாமல் மகா சுறுசுறுப்போடு கூடுமான பலன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது. மகா மகிமையோடு பிரான்சு இராச்சியத்தை ஆண்டுக்கொண்டு வந்தவருமாய், அநேகம் போர்ச்சண்டைகளில் வெற்றி யடைந்தவருமாய், எவ்வித புண்ணியங்களையும் அனுசரித்துக் கொண்டு வந்தவருமாயிருந்த அர்ச், ஞானப்பிரகாச இராஜாவானவர் தம்முடைய மரண சாசனத்தில் தமக்குப் பதிலாய் இராச்சியபாரத்தைச் செய்யப்போகிற தமது மகனுக்கு சொன்னதாவது "என் மகனே திருச்சபையினுடைய பலன்களை அடைய நினைப்பாயாக " என்று எழுதினாராமே.

கிறிஸ்துவர்களே !நீங்களும் இந்தச் சுகிர்த வாக்கியத்தை நினைத்துத் திருச்சபையினுடைய பலன்களை ஆசையோடு பெற வேணுமென்று அறியக்கடவீர்களாக -

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.

அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.

செபம் 

மதுரமான சேசுவே ! உத்தரிக்கிற ஸ்தலத்திலே உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களையும் மீட்டிரட்சிக்க தேவரீர் மனுஷனாகிப் படாத பாடெல்லாம் பட்டு கடினமான மரணத்தை அடைந்தீரென்று கிருபையாய் நினைத்தருளும் இனிய சேசுவே, அந்த ஆத்துமாக்களுடைய அபயக் குரலை கேட்டருளும். அவர்கள் சிந்துகிற கண்ணீரைப் பாரும். உம்முடைய திரு மரணத்தின் பலன்களைப் பார்த்து அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரக் கடன்களைப் பொறுத்தருளும் . இன்பம் நிறைந்த சேசுவே ! தேவரீருடைய திரு ரத்தமானது அந்த ஆத்துமாக்கள் பேரில் விழுந்து அவர்களுடைய அகோர வேதனைகளை அமர்த்த வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

இருபத்தைந்தாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது 

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஏதேனும் ஒரு பலனுள்ள செபத்தை செபிக்கிறது

புதுமை 

அர்ச். ஐந்துகாயப் பிரான்சிஸ்கு சபையைச் சேர்ந்த முத்திப்பேறு பெற்ற பேர்த்தோல்தூஸ் என்பவர் ஒரு சமயத்தில் தர்மம் செய்யவேணுமென்றும், அதற்கு வெகு பிரயோசனம் இருக்கிறதென்றும் ஒரு நல்ல பிரசங்கத்தைச் செய்திருக்கிறார். அர்ச் பாப்பானவர் தமக்கு அளித்த உத்தரவுப்படிக்கு இந்த பிரசங்கத்தைக் கேட்டவர்களுக்குப் பத்துநாட் பலன் கொடுத்திருந்தாராம். பிரசங்கத்துக்குப் பிற்பாடு தரித்திரப்பட்ட ஒரு பெண்மணி தன்னுடைய நிர்ப்பாக்கியத்தை அவருக்கு வெளிப்படுத்தி எனக்கு கொஞ்சம் தர்மம் கொடுக்கவேண்டும் என்று மன்றாடினாள்.

தரித்திரனாகச் சீவிப்பேனென்று வார்த்தைப் பாடு கொடுத்த குருசுவாமியினிடத்திலே பணமுமில்லை, காசுமில்லை. அதனாலே அவளைப்பார்த்து "தங்கையே என்னிடம் ஒன்றுமில்லையென்று உனக்குத் தெரியுமே. ஆனால் என் பிரசங்கத்தைக் கேட்டவர்களுக்குப் பத்துநாட் பலன் கொடுத்தேன். ஆஸ்திக்காரனான இன்னானிடத்திலே போய் நீ அடைந்த பத்துநாட்பலனை அவனுக்குக் கொடுத்துக் கைம்மாறாக பணம் பெற்றுக் கொள்" என்று அவளை அனுப்பினார்.

இந்த ஆஸ்திக்காரன் தேவ காரியங்களிலே வெகு அசட்டையுள்ளவனாயிருந்தாலும் தரித்திரப்பட்ட இந்தப் பெண்மணி துணிந்து அவனிடத்திலே போனாள். 'இந்த பத்து நாட் பலனுக்குப் பதிலாய் எனக்கு என்னத்தைக் கொடுப்பீர் 'என்று இவள் அவனிடத்திலே கேட்க ஆஸ்திக்காரன் 'உனக்கு என்ன வேணுமென்று ' விசாரித்தான்.

ஆண்டவரை நம்பி இந்தப் புண்ணியவதி மறுமொழியாக 'இந்த பத்துநாட் பலனையும் தாரசிலே வைத்து எவ்வளவு கனமாயிருக்குமோ அவ்வளவு பணம் எனக்கு கொடுப்பீராக 'என்றாள். இவன் அதற்குச் சிரித்து, 'அப்படியே ஆகட்டும். உன்னுடைய பத்து நாட் பலனை ஒரு சீட்டிலே எழுது' என்றான். அப்படி, அவள் எழுதினபின் தராசின் ஒரு தட்டிலே அந்தச் சீட்டை வைத்து வேறொரு தட்டிலே ஒரு வெள்ளிப் பணத்தை வைத்தான், அப்படி வைத்தாலும் இன்னும் சீட்டு அதிக பாரமாயிருந்ததினாலே, ஐந்து பணம் பத்துப்பணம், இருபதுபணம், ஐம்பது பணம் வரைக்கும் போட்டாலும், இன்னமும் அந்தச் சீட்டுக்குப் பற்றாததினாலே, வெகுவாய்ப் பிரமித்து ஆச்சரியப்பட்டான்.

அதனாலே அந்தப்பெண்மணிக்குத் தேவையானதெல்லாம் சந்தோஷமாய்க் கொடுத்ததுமல்லாமல், திருச்சபை அளிக்கிற பலன்களுடைய விலைமதிப்பை அவன் அறிந்து மனந்திரும்பி நல்ல கிறிஸ்துவனாக நடந்தான்.

அமெரிக்கா தேசத்திலுள்ள கீத்தோவென்ற பட்டணத்தில் அர்ச் மரியன்னம்மாள் வசித்து வந்தாள். அவள் எவ்வித புண் ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டுத் தூய கன்னியாஸ்திரியாய் நடந்ததினாலே, அவளுக்கு லிலி புஷ்பம் என்ற பேர் கொடுக்கப்பட்டது. அவள் ஒருநாள் தியானத்திலிருக்கும்போது பரவசமாகி, ஒரு பெரிய விஸ்தாரமான இடத்தில் அகலமான ஒரு மேசை ஸ்தாபித்திருக்கிறதையும், அதன்மேல் வெள்ளி தங்கத்தால் செய்த பல பொருட்களும் முத்து மாணிக்கங்களும் வயிரம் முதலான கற்களும் பரப்பியிருக்கிறதையும் கண்டாளாம். இவை எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் இவள் பார்க்கும்போது, யாவருக்கும் வைக்கப்பட்ட பொக்கிஷம் இதுவே தேவையுள்ளவர்கள் இதிலிருந்து மனதின்படியே எடுத்துக் கொள்ளலாம். இந்த திரவியங்கள் திருச்சபையினுடைய பற்பலபலன்களைக் காண்பிக்கின்றன என்ற சத்தம் அவளுக்குக் கேட்கப்பட்டது .

கிறிஸ்துவர்களே! உங்களுக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷங்களை வைத்திருக்க உங்களுக்கும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கும் தேவையானதெல்லாம் அதிலிருந்து எடுக்காமலிருப்பதெப்படி? நீங்கள் ஞானமற்றவராயிருந்து ஆத்துமாக்களுக்கு வேண்டிய உதவி சகாயம்பண்ணாதிருந்தால், அது உங்களுடைய குற்றமென்றே அறியக் கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.