உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி : திருச்சபையின் பலன்களை அடையலாமென்று மேலும் எடுத்துக்காட்டும் விளக்கமாவது.
தியானம்.
திருச்சபையினுடைய பலன்களைப் பெறுவது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிசகாயம் பண்ன எளிதுமாய், நித்தியமுமாய், விசேஷமுமாய் இருக்கிற வழியாகையால், இந்தப் பலன்களைக் குறித்து இன்று தினத்தில் இன்னும் தியானிக்கக்கடவோம். பலனுள்ள ஜெபங்கள் கணக்கிலடங்காமலிருக்கிறதினாலே அவைகள் எல்லாவற்றையும் விவரித்துக் காண்பிக்க முடியாது. அப்பேர்ப்பட்ட ஜெபங்களைத் தக்க பிரகாரமாய்ச் செபித்தால், அவைகளுக்குண்டான பலன்களைப் பெற்றுக் கொள்ளலாமென்பது சரியே.
அந்தப் பற்பல ஜெபங்களையல்லாமல் பலனுள்ள முறைமைகளும் அநேகமுண்டு; பலனுள்ள சபைகளும் அநேகமுண்டு பலனுள்ள ஜெபமாலைகளும் அநேகமுண்டு. பலனுள்ள நற்கிருத்தியங்களும் அநேகமுண்டு. இவையெல்லாம் மிகவும் நல்லதாயினும் வெகு பிரயோசனமுள்ளதாயினும் இவைகளை இவ்விடத்தில் முற்றிலும் வெளிப்படுத்துவது கூடாத காரியமென்கிறதினாலே, விசேஷமானவைகளை மாத்திரமே காட்டுவோம்.
முதலாவது : பலனுள்ள முறைமைகள் அநேகமுண்டென்று அறிவோம். அதாவது தியானம் பண்ணுதல். ஞான ஒடுக்கம் செய்தல், நவநாள் ஜெபங்களை அனுசரித்தல், தேவமாதாவினுடையவும், சூசையப்பருடையவும் வணக்க மாதத்தைக் கொண்டாடுதல், சிலுவைப்பாதை ஜெபித்தல் இது முதலானவைகளேயாம். இந்த சுகிர்த முறைமைகளுக்குள்ளே சிலுவைப்பாதையானது அதிக பலனுள்ளதாகையால், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதனாலே அதிக உதவி சகாயம் கிடைக்குமென்கிறதற்குச் சந்தேகமில்லை. சிலுவைப்பாதை ஜெபிக்கிற தேவ பக்தியும், தேவ சிநேகமும், பாவத்தின் பேரிலே மெய்யான மனஸ்தாபமும், சேசுநாதருடைய திவ்விய இருதயத்தின் பேரில் உருக்கமான பற்றுதலும், இது முதலான சுகிர்த நன்மைகளும் பெறுவிக்கிறதற்கு எவ்வளவு நல்லவழியென்று இப்போது காண்பிக்கத் தேவையில்லை . ஆனால் சிலுவைப் பாதை மூலமாய் அடையக் கூடுமான ஞானப் பலன்களையும் , உன்னதமான நன்மைகளையும் எளிதாய்ப் பெற்றுக் கொள்ளலாமென்று ஒப்புவிக்கவேண்டியதான காரியந்தான் .
சிலுவைப்பாதையை மூன்று வகையாய்க் செபிக்கக்கூடும். முதலாவது சிலுவைப்பாதையின் 14 ஸ்தலங்கள்: தக்கவிதமாய் ஸ்தாபிக்கப்பட்ட கோவில்களிலே பிரசித்தமாய் அந்தச் சுகிர்த முறைமை நடக்கும்போது 14 ஸ்தலங்களிலும் சொல்லப்படுகிற தியானங்களையும் ஜெபங்களையும் கூடயிருந்து ஜெபிக்கிறது முதல் வகையாம். இரண்டாவது: மேற்சொன்ன கோவில்களிலே ஒவ்வொருவர் தனித் தனியேயானாலும், இரண்டு மூன்று பேர் கூடியாகிலும் 14 ஸ்தலங்களையும் ஒழுங்காய்ச் சேவித்து கர்த்தர் பாடுபட்ட துன்பங்களைச் சற்றே தியானித்து சில ஜெபங்களைச் செபிக்கிறது இரண்டாம் வகையாம்.
மூன்றாவது சிலுவைப் பாதை ஸ்தாபிக்கப்படாத இடங்களிலும் அல்லது ஸ்தாபிக்கப்பட்ட இடங்களிலே யாதோர் வியாதி விக்கினத்தை முன்னிட்டுக் கோயிலுக்குப் போகக்கூடாத காலங்களிலும் அதிகாரம்பெற்ற குருவினாலே விசேஷமாய் மந்தரிக்கப்பட்ட பாடுபட்ட சுருபத்தைக் கையிலே ஏந்திக் கொண்டு 14 ஸ்தலங்களுக்குப் பதிலாய் பரமண்டல மந்திரமும் பிரியதத்த மந்திரமும், 14 அர்ச் திரித்து தோத்திர மந்திரமும் வேண்டிக்கொண்டு சேசு கிறிஸ்து நாதருடைய ஐந்து திருக்காயங்களைக் குறித்து 5 பரமண்டல மந்திரமும் 5 பிரியதத்த மந்திரமும், 5 அர்ச் திரித்துவ தோத்திர மந்திரமும் ஜெபித்துக் கடைசியில் அர்ச் பாப்பானவருடைய சுகிர்த கருத்துகள் நிறைவேற பரமண்டல மந்திரமும், பிரியதத்தமந்திரமும், 1 திரித்துவ மந்திரமும் ஜெபித்துப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறதே மூன்றாம் வகையாம். சிலுவைப்பாதையின் பலன்களை அடைய மந்திரிக்கப்பட்ட பாடுபட்ட சுருபத்தை மற்றவர்களுக்கு விற்கவும் கொடுக்கவும் கூடாதாகையால் மேற்சொல்லிய பலன்களை அடைய அந்தச் சுருபத்தை உடையவருக்கு மாத்திரம் உதவுமல்லாமல் மற்றப்படியல்ல.
இந்தப் பலன்களை எளிதாய் அடையவும், கர்த்தர் பாடுபட்ட வர்த்தமானங்களைத் தியானிக்கவும், சில புஸ்தங்களிலே அந்தச் செபங்கள் அடங்கியிருப்பதால், அவைகளை ஒழுங்காய் அனுசரிப்பது உத்தமமாமே. ஆயினும், பலன்களை அடைய அவ்வளவு விரிவான ஜெபங்களைச் செய்ய அவசியமில்லாமையால், மேற்சொன்ன சுருக்கமான மூன்று வகையால் அதன் பலன்களை யெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்.
முன் சொன்ன ஞான நன்மைகளையும், பற்பலபலன் களையும் அடைவதற்கு, சிலுவைப்பாதை ஜெபிக்கிறவன் இஷ்டப்பிரசாதத்தோடே இருக்கவேண்டியதல்லாமல், பாவசங்கீர்த்தனம் பண்ணவும், நன்மை வாங்கவும், மற்ற ஜெபங்களைச் செபிக்கவும் அவசியமில்லையென்று அறியக்கடவீர்கள். மீண்டும் சிலுவைப்பாதைப் பலன்களை எளிதாய்ப் பெறத்தக்கதாக இப்போது சொன்ன வண்ணமே பக்தியுள்ளவர்களெல்லாரும் விசேஷ விதமாய் மந்திரிக்கப் பட்ட பாடுபட்ட சுருபத்தை வாங்கி வைத்திருக்கவேணும்.
இரண்டாவது: பலனுள்ள சபைகளும் அநேகமுண்டு. சேசுகிறீஸ்துநாதருடைய திரு இருதய சபையும், தேவமாதாவின் சபையும், தேவமாதாவினுடைய திரு இருதயத்தின் சிரேஷ்ட சபையும், வியாகுலமாதா சபையும், நன்மரன சபையும் இது முதலான பல சபைகளாம். அர்ச் பிராஞ்சீஸ்கு சலேஸியார் சொன்னதாவது 'நான் எல்லாச் சபைகளிலும் பிரவேசிக்கிறேன்; ஏனெனில், எப்பக்கத்திலும் ஞானப் பிரயோசனம் ஏதாகிலும் எனக்குக் கிடைக்கும்' என்பார். அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும், பொதுப்பட்ட அநேக சபைகளில் பிரவேசிக்கிறது அவ்வளவு நல்லதல்ல. ஒவ்வொருவர் தனக்கு இஷ்டமான ஒன்று, இரண்டு சபைகளில் பிரவேசித்து அதனுடைய கட்டளைகளை அனுசரித்தால் அது போதுமென்று எண்ணத்தகும்.
அந்தந்தச் சபையில் அநேகம் ஞானப்பிரயோசனம் இருப்பதுந் தவிர, சபையாருக்குள் அந்நியோன்னிய நேசமும், அந்நியோன்னிய உதவியும். அந்நியோன்னிய ஆதரவும், இது முதலான பொதுவான புண்ணிய பலன்களும் உண்டாயிருக்கிறதாமே அநேகம் சபைகளில் பிரவேசிக்கிறது நல்லதல்லவென்றாலும், எல்லோருக்கும் நன்மரணம் வேண்டியதாகையால், நன்மரணத்தைப் பெறுவிக்கும் நன் மரண சபையில் எல்லோரும் பிரவேசித்தால் உத்தமந்தானே. நன்மரண சபையாருக்கு அநேக பலன்களும், ஞான நன்மைகளும் இருப்பதுந் தவிர, செத்த சபையாருடைய ஆத்துமங்களுக்காகப் பூசைகளைச் செய்விக்கவும், ஜெபங்களைப் பொழியவும் தர்மங்களைக் கொடுக்கவும் வேணுமென்பது இச்சபையின் கட்டளையாம். இதெல்லாம் நன்மரண ஆயத்தம் என்னும் சிறு புத்தகத்தில் விவரமாய்க் காணலாம்.
மூன்றாவது பலனுள்ள உத்தரீயங்களும் அநேகமுண்டு. கர்மேலென்ற தேவமாதாவின் உத்தரீயமும், வியாகுல மாதாவின் உத்தரீயமும், ஜென்மபாவமில்லாத உற்பவித்த தேவமாதாவின் நீல உத்தரீயமும், சேசுகிறீஸ்துநாதருடைய திருப்பாடுகளின் சிவப்பு உத்தரீயமும் இது முதலியவைகளேயாம். இப்போது நாம் சபைகளைக் குறித்துச் சொன்னது உத்தரியங்களுக்குச் செல்லுமென்கிறதினாலே, ஒவ்வொருவன் அநேக உத்தரியங்களைத் தரித்துக் கொள்ளாமல், ஒன்று இரண்டு தரித்தால் போதுமென்று எண்ணத்தகும்.
கர்மேலென்ற தேவமாதாவின் திரு உத்தரீயத்தைத் தரித்து சில விசேஷ காரியங்களை செலுத்துகிறவர்கள் அநேக நாள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறதில்லையென்றும், தேவமாதாவினுடைய உறுதியான வாக்கியமானதால், எல்லாரும் இந்த உத்தரீயத்தை தரித்துப் பக்தியோடே வைத்திருக்க வேண்டியதுதானே. மற்ற உத்தரியங்களுக்குள்ளே ஜென்மபாவமில்லாமல் உற்பவித்த தேவ மாதாவின் நீல உத்தரீயம் அதிக பலனுள்ளது. இந்த உத்தரீயத்தைத் தரித்திருக்கிறவர்கள் அர்ச். திரித்துவத்துக்குத் தோத்திரமாகவும், ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் அர்ச். பாப்புவின் கருத்துகள் நிறைவேறவும், 6- பர, 6- பிரி, 6- திரி மந்திரமும் வேண்டிக்கொள்ளுகிறபோதெல்லாம் அதிக பரிபூரண பலன்களை அடைவார்களென்பது நிச்சயந்தான். அதற்குச் சாவான பாவமின்றி இஷ்டப்பிரசாதத்தோடே இருக்க வேண்டியதல்லாதே பாவிசங்கிர்த்தனம் பண்ணவும், திவ்விய நற்கருணை வாங்கவும், மற்ற ஜெபங்களை ஜெபிக்கவும் அவசியமில்லை. இந்தப் பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம் என்கிறதினாலே, அந்த ஆத்துமாக்கள் எவ்வளவு உதவிசகாயம் அடைவார்களென்று அறிந்து, உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவர்கள் இந்த உத்தரீயத்தைத் தரிக்காமலிருப்பார்களோ?
நாலாவது : பலனுள்ள ஜெபமாலைகளும் அநேகமுண்டு. 153 மணி அல்லது 53-மணி ஜெபமாலையும், வியாகுல மாதாவின் ஜெபமாலையும், சேசுகிறிஸ்துநாதருடைய திரு இரத்தத்தின் ஜெபமாலையும், அவருடைய திரு இருதய ஜெபமாலையும் இது முதலானவைகளேயாம். இந்த ஜெபமாலையெல்லாம் பலனும் பிரயோஜனமுள்ளதாயினும் அவர்களை ஒருமித்து ஜெபிக்கிறது சிரமமான காரியந்தான்.ஆனதால் இந்த ஜெபமாலைகளை அந்தந்த விசேஷ சமயத்தில் வேண்டிக்கொள்ளலாமேயல்லாமல், 53-மணி ஜெபமாலையை மாத்திரம் கூடுமானமட்டும் தினந்தோறும் ஜெபிக்கவேணும். இந்த ஜெபமாலைக்குப் பலவகைப் பலன்கள் உண்டாயிருக்கலாம்.
அர்ச் விரிச்சித்தம்மாள் பேர்கொண்ட பலன்கள் விசேஷமாய் திரளான பலன்களாகையால், அதற்கு தகுந்த அதிகாரம் பெற்ற குருவினிடத்திலிருந்து 53-மணி ஜெபமாலையை ஜெபிக்கிறார்கள் . அதில் வருகிற அப்போஸ்தலர்களுடைய மந்திரத்துக்கும், அந்தந்த பரமண்டல மந்திரத்துக்கும், அந்தந்த பிரியதத்த மந்திரத்துக்கும், நூறுநாட்பலன் பெற்றுக்கொள்வார்கள் அதல்லாமல் வருஷமுடிவில் அநேக பரிபூரண பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வளவு பலனுளள ஜெப மாலையை வேண்டிக் கொள்ளுகிறதே நமக்கு எவ்வளவோ பிரயோஜனமும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எவ்வளவோ உதவிசகாயமும் வருவிக்குமென்று அறிந்து அந்த ஜெபமாலையை அடிக்கடி ஜெபிப்பது நல்லதென்று அறியக்கடவீர்கள்.
ஐந்தாவது பலனுள்ள நற்கிருத்தியங்களும் அநேகமுண்டு. ஞான உபதேசம் போதித்தலும், கேட்டலும், வியாதிஸ்தரையும் சிறைப்பட்டவர்களையும் சந்தித்தலும், சேசுமரியேசூசை என்கிற திருக்குடும்பத்தைக் குறித்து மூன்று பிச்சைக்காரருக்குச் சாப்பாடு கொடுத்தலும், அந்நிய தேசங்களில் சத்திய வேதத்தைப் பரப்புதலாக்குகிற சபையுடைய கடமை முயற்சிகளும், திருப்பாலத்துவ சபையின் முயற்சிகளும் இது முதலியவைகளேயாம். இந்த நற்கிருத்தியங்களுக்குண்டான பலன்களை அடையவேணுமென்று விரும்பினால், இந்த நற்கிருத்தியங்களைச் செய்யும் போது பெற்றுக்கொள்ளலாம். இந்த பலன்களையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குச் செல்லுமென்று அறியக்கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே எனக்காதரவாயிரும்..
செபம்
கருணாம்பார சர்வேசுரா ! எங்களுடைய முன்னோர்களும், எங்களுடைய சகோதரரும், இவ்வுலகத்தில் இருக்கும்போது சத்திய விசுவாசத்திலே நிலையாய் இருந்தார்களென்று கிருபையாய் நினைத்து, அவர்களுடைய ஆத்துமத்துக்கு தயை பொழியும். அவர்களுடைய கட்டுகளை அவிழ்த்து, கடன்களைப் பொறுத்து, பாவங்களை மன்னித்து. பிரதாபமுள்ள உம்முடைய இராச்சியத்துக்கு அவர்களை வரப்பண்ணவேணுமென்று தேவரிரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தாறாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பலனுள்ள யாதோர் நற்கிருத்தியத்தைச் செய்கிறது
புதுமை
நெயாப்பொலியென்ற இராச்சியத்தில் நல்ல கோத்திரத்தில் பிறந்த ஒரு துரைசானி இருந்தாள். கர்மேலென்னும் சபையைச் சேர்ந்த குருசுவாமியார் ஒருவர் உத்தரீயத்தைக் குறித்து செய்த பிரசங்கத்தைக் கேட்டு அந்தத் துரைசானி உத்தரீயத்தைப் பெற்றதுந் தவிர, அதற்குப் பிறகு தேவமாதாவின் பேரில் அதிகப் பக்தியாய் இருந்தாள். தனக்கு நன் மரணம் வரவும், உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அதிசீக்கிரத்திலே மீட்கப்படவும் விரும்பி, உத்தரீயத்துக்கடுத்த விசேஷ கடமையெல்லாம் அநுசரித்துக்கொண்டு வந்தாள்.
தக்க விதமாய் உத்தரீயத்தைத் தரித்தவர்களுடைய ஆத்துமங்களைப் பரலோக இராக்கினியான தேவமாதா சனிக்கிழமை மரிக்கச் சகாயம்பண்ணவேணுமென்று வேண்டிக்கொண்டிருந்தாள். சில வருஷத்துக்குப் பிற்பாடு அவள் வியாதியாய் விழுந்து, அந்த வியாதியினாலே தான் சாகப்போகிறதாயும், அடுத்த சனிக்கிழமை தனக்கு சாவு வரப்போகிறதென்றும் முன்னறிவித்தாளாம். அந்தப் பிரகாரமே அவள் பட்ட வருத்தமெல்லாம் மகா பொறுமையோடு சகித்த பிற்பாடு சனிக்கிழமை தானே இறந்தாள்.
இறந்தவளுடைய மகள், தன் தாய் இறந்ததினிமித்தம் அதிக துக்கப்பட்டுக்கொண்டிருக்கையிலே மகாத்துமாவான குரு சுவாமியார் ஒருவர் இறந்தவர்களுடைய ஆத்துமம் மோட்சத்துக்குப் போனதாக தெய்வச் செயலால் அறிந்து, அவள் மகளிடத்திலே வந்து சொன்னதாவது" பக்தியுள்ள மகளே! அழவேண்டாம் உன்னுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேணும். இவ்வுலகத்தில் உன்னுடைய தாய் இறந்திருந்தாலும், அவளே உனக்குப் பரலோகத்தில் ஆதரவாயிருப்பாள்.
என்னத்தினாலேயென்றால், இன்றுதானே தேவமாதாவின் கிருபையால் அவளுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு மோட்ச பேரின்ப இராச்சியத்தில் பிரவேசித்ததென்று உனக்கு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். ஆனதால் சந்தோஷப்பட்டு பிரதாபமுள்ள கன்னிகையான தேவமாதாவுக்குத் தோத்திரம் சொல்லுவாயாக" என்றார்.
கிறிஸ்துவர்களே! இப்போது சொன்ன புதுமையினாலே பக்தியோடு தரித்திருக்கிற திரு உத்தரீயத்தால் வருகிற ஞானபிரயோசனங்களைக் கண்டு நீங்களும் பக்தி விசுவாசத்தோடு திரு உத்தரீயத்தைத் தரித்துக்கொள்ள வேணுமென்று அறியக்கடவீர்களாக,
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
நவம்பர் 26
Posted by
Christopher