அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் - மடாதிபதி, மேற்., வேதசாட்சி (கி.பி. 407)
இவர் அந்தியோக்கியா நகரில் 344-ம் வருடம் பிறந்து, சிறு வயதில் கல்வி சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்து சகலராலும் புகழப்பட்டார். இவர் சபாப் பிரசங்கியாகி சிறந்த பேச்சாளராக சிறப்புடன் பிரசங்கித்ததினால் கிறிசோஸ்தோம் அதாவது “பொன் வாயோன்” என்னும் சிறப்பு பெயர் பெற்றார்.
தமக்குக் கிடைத்துவந்த பெயரையும் புகழையும் விட்டொழித்து, ஆறு வருஷ காலம் மவுன ஏகாந்தியாய் வனசஞ்சாரம் செய்து, உத்தமதனத்தை அடைந்த பின் குருப்பட்டம் பெற்று, பிறகு கொன்ஸ்தாந்திநோப்பிள் நகருக்கு மேற்றிராணியார் ஆனார்.
இவர் தம் வாக்கு சாதுரியமான பிரசங்கங்களால் அநேக மக்களை மனந்திருப்பினார். சகலருக்கும் நாள்தோறும் திவ்விய பலிபூசை காணும்படி புத்திமதி சொன்னார். பெருமை பாராட்டிக்கொண்டு வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் அணியும் ஸ்திரீகளைக் கண்டித்தார்.
ஏழைகள்மேல் அதிக இரக்கம் காட்டி, தமது கையில் பணமில்லாதபோது தமது வீட்டிலுள்ள பாத்திர பண்டங்களை விற்று அவர்களுக்கு உதவி புரிவார். இவர் முகத்தாட்சண்யமின்றிப் பாவிகளைத் தமது பிரசங்கத்தால் கண்டித்தபடியால், துஷ்ட மந்திரிகளின் துர் ஆலோசனைப்படி சக்கரவர்த்தி அருளப்பரை நாடுகடத்தி விட்டான்.
அன்றிரவே பயங்கரமான பூகம்பம் உண்டானதால் அருளப்பர் மறுபடியும் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டார். ஆனால் சில காலத்திற்குபின் அவருடைய விரோதிகளின் முயற்சியால் அவர் மறுபடியும் நாடுகடத்தப்பட்டு, பிரயாணத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் வழியில் நோய்வாய்ப்பட்டு, கடைசி தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று உயிர் துறந்து மோட்சம் சேர்ந்தார்.
யோசனை
நாள்தோறும் திவ்விய பலிபூசை காண முயற்சிப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஜுலியான, மே.
அர்ச். மாரியுஸ், ம.