உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற ஐந்தாம் வழி திவ்விய பூசையாம்.
தியானம்.
முன் செய்த தியானங்களில் ஜெப வேண்டுதலும் , பிச்சை தர்மமும், தவக்கிரியைகளும், திருச்சபையின் பலன்களும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம்பண்ணுகிற நல்ல வழிகளாமென்று காண்பிக்கப்பட்டது.இவைகளெல்லாம் பிரயோசனமுள்ளதாய் இருந்தாலும் , இவை மனுஷனாலே செய்யப்படுகிற நற்கிரியைகள் ஆகையால் இவைகளுக்கு அளவுமுண்டு , குறைவுமுண்டு . உன்னத திவ்விய பூசை அப்படியல்லவே . திவ்விய பூசையானது மட்டுமின்றி குறைவுமின்றி சர்வ வல்லபமுள்ள தேவ கிரியையாம். அதெப்படியென்றால் திருச்சபையில் நடந்துவரும் திவ்விய பூசையும், சேசு கிறிஸ்துநாதர் சுவாமி சிலுவையில் செலுத்தின திவ்விய பலியும் ஒன்றுதானென்று சொல்லவேண்டியதல்லாமல் வேறல்ல. சிலுவையில் நிறைவேறின திவ்விய பலியானது சேசுநாதரல்லவோ? திவ்விய பூசையில் தேவ பலியாக நிற்பவர் அவர்தாமே.
சிலுவையிலே பலியை நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த திவ்விய குரு சேசுநாதர்தாமே, இதிலேயும் பிரதான குருவாக திவ்விய பூசையை முடிப்பவர் அவர்தாமே .சிலுவையிலே அவர் தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார் . திவ்விய பூசையிலே தம்மை குருக்களுடைய கையால் ஒப்புக் கொடுக்கிறார் . சிலுவையிலே மெய்யாக மரித்தார் , திவ்விய பூசையிலே ஞானவிதமாக அவர் மரிக்கிறார் . ஆனால் அதிலேயும் இதிலேயும் ஒப்புக் கொடுக்கிற பலி ஒன்றுதான் .அதிலேயும் இதிலேயும் அந்த தேவ பலியை ஒப்புக்கொடுக்கிறவர் ஒருவர்தான். இதனால், சேசுநாதர்சுவாமி தம்மைச் சிலுவையிலே ஒப்புக் கொடுத்து பலியானது மட்டில்லாத பலனுள்ளதாகையால் அப்படித் தான் திவ்விய பூசையானது மட்டில்லாத பலனுள்ளதென்பது சத்திய விசுவாசமாம்.
திவ்விய பூசையின் பலன் சர்வலோக பாவத்தைப் போக்க வல்லதாயிருக்கிறதுமல்லாமல், இன்னும் அநேக கோடானகோடி உலகத்தின் பாவங்களைப் போக்கவும் வல்லதாயிருக்கிறது. இத்தனை வல்லபமுள்ள பூசை ஒரு நாளிலும் ஓரிடத்திலும் ஒருநேரத்திலுமாத்திரம் ஒப்புக் கொடுக்கப்படாமல், எந்நாளும் எவ்விடத்திலும் எந்நேரமுந்தானே செலுத்தப்படச் சர்வேசுரன் திருவுளமானார். இப்படிப்பட்ட பூசை உலகத்தில் இல்லாவிட்டால், இப்போது உலகத்தில் நடந்துவரும் அக்கிரமத்தால் உலகமெல்லாம் வெந்தழிந்து சர்வ சங்காரமாகியிருக்குமென்றுதான் சொல்ல வேண்டும். அநீதம் நிறைந்த இந்த உலகத்தின் பேரில் சர்வேசுரனுக்கு வரும் கோபத்தை இந்தப் பலி ஒன்றே அமர்த்தி தயை வருவிக்கிறது.
மட்டில்லாத பலனுள்ள இந்த திவ்விய பூசையை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக ஒப்புக் கொடுக்கலாமென்பது சத்தியம் வழுவாத திருச்சபையினுடைய பூர்வீக காலத்தில் இருந்து இந்த நாள் மட்டும் இடைவிடாத வழக்கமானதால், திவ்விய பூசையினாலே அந்த ஆத்துமாக்களுக்கு எவ்வளவு உதவி சகாயம் வருமென்று சொல்லத்தகும் தன்மையல்ல. உள்ளபடி யோசனை பண்ணினால் வேதசாட்சிகள் பட்ட சகல வேதனைகளிலும், பெரிய தபோதனர் நடத்தின தவங்களிலும், தர்மவான்கள் கொடுத்த தர்மங்களிலும், திவ்விய பலியானது அதிக மேலானதும், அதிக பலனுள்ளதும், அதிக பிரயோசனமுள்ளதுமாய் இருக்கிறதென்கிறதினாலே அதெல்லாவற்றையும்விட ஒரு பூசையினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு அதிக சகாயம் அதிக உதவியும் வருமென்கிறது சரியே.
அதல்லாமலும் சேசுகிறீஸ்துநாதர் சுவாமி தானே பிரதான குருவாக திவ்விய பூசையை ஒப்புக்கொடுக்கிறாரென்பதைப்பற்றி அதனுடைய பலன் அவராலே வருகிறதல்லாமல், பூசையைச் செய்கிற குருவினாலேயானாலும், பூசையைச் செய்விக்கிறவராலே என்கிலும் வராது. அதனாலே அந்தப் பலன் எப்போதும் மட்டுமின்றிக் குறைவுமின்றி அளவற்றதாயிருக்கிறதென்று சொல்ல வேண்டியதாகும்.
இது இப்படியிருக்க, தங்களுடையவர்களின் ஆத்துமாக்களுக்குப் பூரணமான ஆறுதலையும் சரியான இளைப்பாற்றியையும் நித்திய பேரின்பத்தையும் சீக்கிரத்தில் வருவிக்க விரும்புகிறவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக அடிக்கடி திவ்விய பூசையை ஒப்புக்கொடுக்கச் செய்வார்களாம். எவனொருவன் செத்தநாளிலேதானே அவனுடைய ஆத்துமத்துக்காகத் திவ்விய பூசையைப் பண்ணுவிக்கிறது மல்லாமல், பின்பு அவன் செத்த மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும், முப்பதாம் நாளிலும் திவ்விய பூசையைப் பண்ணுவிக்கிறது திருச்சபையின் சுகிர்த வழக்கமாம். மேலும் வருஷாந்தர நாளிலும் அப்படிச் செய்வது பக்தியுள்ளவர்கள் அநுசரிக்கிற முறைமையாம்.
கிறிஸ்துவர்களே! உங்களுடையவர்களின் ஆத்துமாக்களை மெய்யாகவே நேசிப்பீர்களேயானால் திருச்சபையினுடைய இந்த மேன்மையான வழக்கத்தின்படியே செய்வீர்களாக. அந்தோ ! எத்தனையோ பேர்கள் ஒரு முறை திவ்வியபூசை பண்ணுவித்தபிற்பாடு மரித்தவர்களின் மட்டில் தங்களுடைய கடனெல்லாம் தீர்ந்தாற்போல அவர்களை மறந்துபோய் வேறொன்றும் செய்யாது போகிறார்கள்.
திவ்விய பூசையின் விசேஷ பலன் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குக் கிடைக்கும்படிக்கு திவ்விய பூசையை பண்ணுவிக்கிறது அவ்வளவு நன்மையாயிருந்தாலும் பொதுப்பட அதற்குச் செய்யவேண்டிய செலவு கொடுக்கிறது எளிதான காரியமல்ல. ஆயினும் திவ்விய பூசையைப் பக்தியோடு காண்கிறவர்களுக்கு ஓர் மகாப் பலன் வருகிறதினாலே அடிக்கடி திவ்விய பூசை காண்கிறது பெரிய புண்ணியமாயிருக்கிறதுமல்லாமல், அதினாலே வரும் பலனை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அந்த ஆத்துமாக்களுக்கு வெகு ஆறுதலாயிருக்கும்.
கடைசியிலே திவ்வியநற்கருணையைப் பக்தி விசுவாசத் தோடு அடிக்கடி வாங்கினால் அதனால் வரும் ஞான பிரயோசனத்தையும் பலவீனத்தையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுக்கலாம். அந்த ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிறதற்கு அதுவே ஓர் உத்தம வழியாம். அதெப்படியென்றால் சற்குருவான சேசுநாதர் பாடுபட்டு மரித்துத் தம்முடைய திவ்விய இரத்தத்தினாலே அடைந்த பேறுபலன்களை ஏழு தேவதிரவிய அநுமானங்களின் வழியாக நமக்கு அளிக்கச் சித்தமானார். ஆயினும் மற்ற தேவதிரவிய அனுமானங்களெல்லாம் அந்தப் பேறுபலன்களை பங்குப்பங்காய்த் தந்து, தேவநற்கருணை மாத்திரமே எல்லா நன்மைகளின் ஊறணியும் காரணமுமாயிருக்கிற சேசு கிறிஸ்துநாதரை முழுமையும் நமக்குத் தந்து, அவருடனே ஞான நன்மைகளையெல்லாம் அடையப் பண்ணுகிறது. துளிதுளியாய்த் தண்ணீர் இறைத்து வயலுக்குப் பாய்ச்சுகிறதிலும் மடை திறந்து சம்பூரணமாய்ப் பாயப்பண்ணுகிறது உத்தமம் என்கிறதைப்போலேயும், காசு காசாய்த் திரவியம் சம்பாதிக்கிறதை விடப் பெரும் பொக்கிஷத்தைக் கைக்கொள்ளுகிறது மேன்மையென்கிறதைப்போலேயும், ஞானப் பயிரான புண்ணியங்களை விளைவிக்கவும், மோட்ச திரவியங்களான பிரசாதங்களை அடையவும், தவதானதர்மமென்னும் சுகிர்த கிரியைகளைச் செய்வதிலும் தக்க பக்தியோடு தேவநற்கருணையை வாங்குவது மேலான வழியாமே.
உயிரோடு இருக்கிறவர்களுக்குத் திவ்விய நற்கருணையை அடிக்கடி வாங்குகிறது அவ்வளவு பிரயோசனமுள்ளதாயிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்கிற கருத்தோடே வாங்கினால் அந்த ஆத்துமாக்களுக்கு வருகிற உதவி சகாயம் எவ்வளவெனச் சொல்லி முடியுமோ? அதனாலே தம்பிமார்களே! உங்களுக்கு ஞானப்பிரயோசனமாகவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதலாகவும் அடிக்கடி தக்க பக்தி விசுவாசத்தோடு திவ்விய நற்கருணை வாங்கப் பிரியப்படக்கடவீர்களாக,
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே எனக்கு ஆதரவாயிரும்.
செபம்
எங்கள் ஜீவியமும் எழுந்தேற்றமுமாய் இருக்கிற சேசுவே ! இவ்வுலகத்தை விட்டுப் பிரிகிற போது உமது திருச்சரீரத்தையும் திரு இரத்தத்தையும் எங்களுக்கு அன்னபானமாகக் கொடுத்துவைத்தீரே. இப்படிப்பட்ட உமது அளவில்லாத தயவைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குத் தயைப்பண்ணும். விசேஷமாய் ஆறுதலற்றவர்கள் பேரில் அதிகமாய் இரக்கங் காண்பித்து யாவரையும் நித்திய ஜீவிய ஊற்றுகளாயிருக்கிற உம்முடைய இராச்சியத்திலே கொண்டுபோய் உம்மோடு ஒரு பந்தியிலிருந்து திவ்விய அமிர்தங்களை அநுபவிக்கும்படிக் கிருபை செய்தருள உம்மைப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தோழாம் தேதியில் செய்ய வேண் டிய நற்கிரியையாவது:
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசை செய்விக்கிறது அல்லது பூசை காண்கிறது.
புதுமை
கொலோனியாவென்ற மாநகரில் அர்ச். சாமிநாதர் உண்டுபண்ணின சபையைச் சேர்ந்த பக்தியுள்ள இரண்டு வாலிபச் சந்நியாசிகள் மேலான சாஸ்திரங்களைப் படித்துக்கொண்டிருந்தார்கள். இருவரிடத்திலும் நல்ல குணமும், இடைவிடா பக்தியின் பேரில் ஆசையும், படிப்பில் சுறுசுறுப்பும் இருந்தபடியினாலே இவர்களுக்குள்ளே உத்தம நேசம் இருந்தது. தங்களுக்குள்ளே யார் முதலில் சாவானோ அவனுடைய ஆத்துமத்துக்காக வேறொருவன் ஒருவருஷமளவாகத் திங்கட்கிழமைதோறும் ஒரு பூசையும், வெள்ளிக் கிழமைதோறும் ஒரு பூசையும் செய்வோமென்று தங்களுக்குள்ளே உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். படித்தபிற்பாடு குருபட்டம் வாங்கி இருவரும் பிரிந்து தேவ ஊழியத்துக்காக வெவ்வேறே இடத்துக்கு உழைக்கப் போனார்கள்.
இருவரும் அநேக வருஷமாய் எல்லா புண்ணியங்களையும் செய்து மகா கிருத்தியங்களையும் பண்ணின பிற்பாடு இருவரில் ஒருவர் முந்தி இறந்தார். வேறொருவர் இந்த செய்தியை அறிந்து அவருடைய ஆத்துமத்துக்காக அநேக ஜெபங்களைப் பொழிந்து தவங்களை நடத்தித் திரளான கண்ணீர் விட்டதேயன்றி. திவ்விய பூசையை மறந்துபோனார். ஒருநாள் அவர் தியானத்திலிருக்கும்போது இறந்தவருடைய ஆத்துமம் அவருக்குக் காணப்பட்டு என்னை மறந்து போனீரோ? எனக்காக செய்யவேண்டிய பூசைகளை செய்யாதிருப்பது ஏன்? என்றது. அதற்கு அவர் மறுமொழியாக பூசை பண்ணவில்லையென்பது மெய்தான். ஆயினும் உமக்காக என்னால் ஆனமட்டும் ஜெபமும் தவமும் பண்ணினேனே என்றார். அதற்கு மறுமொழியாக அந்த ஆத்துமம் எனது பிரியமுள்ள சகோதரரே, அப்படிச் சொல்லாதேயும், ஜெபமும், தவமும் நான் படுகிற அவதிக்குப் போதாதே,என்னைச் சுட்டெரிக்கும் நெருப்பை அவிக்கச் சேசுக் கிறிஸ்துநாதருடைய திவ்விய இரத்தந்தான் வேணும், நான் அநுபவிக்கிற அகோரமான வேதனைகளிலிருந்து திவ்விய பூசை மாத்திரமே என்னை இரட்சிக்க வல்லதாயிருக்கிறது. அதனாலே முன்னே நாம் இருவரும் உடன்படிக்கை செய்தது போல எனக்காக நீர் திவ்விய பூசையை ஒப்புக் கொடுப்பீராக என்றது. செய்வேனென்று இவர் சொல்லவே. வந்த ஆத்துமம் மறைந்துபோனது.
மறுநாள் காலையில் அந்த சந்நியாசியாரும் மடத்திலுள்ள மற்ற குருக்களும் அந்த ஆத்துமத்துக்காகத் திவ்விய பூசை செய்தார்களாம். அப்படிச் சிலநாள் திவ்விய பூசை செய்தபிற்பாடு மேற்சொன்ன ஆத்துமம் மகா மகிமையோடும், சந்தோஷத்தோடும் திரும்பி வந்து இந்த சந்நியாசியாருக்குக் காணப்பட்டு, என் பிரமாணிக்கமுள்ள சிநேகிதரே! எனக்காகச் செய்யப்பட்ட திவ்விய பூசையின் வல்லபத்தினால் என் உத்தரிப்பு முடிந்தது. இப்போது பரம கடவுளான சர்வேசுரனை மோட்சத்திலே பிரத்தியட்சமாய்த் தரிசிக்கப் போகிறேன். அதிலே உம்மை மறவாமல் உமக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லி மறைந்து போனது.
1793-ம் ஆண்டு பிரான்சு இராச்சியத்தில் ஒரு பலத்த கலாபம் நடந்தது. ஆஸ்தியுள்ள ஒரு மனுஷன் பாரீஸ் நகரத்துக்கு வந்து அங்கே எவ்வித அக்கிரமங்களையும் செய்து மற்ற குழப்பக்காரரோடு சேர்ந்து குற்றமில்லாத திரளான ஜனங்களை வெட்ட உத்தரவு பண்ணினான். ஒரு இராத்திரி ஒர் ஆற்றின் பாலத்தின் மேல் அவன் போகும்போது குழப்பக்காரர் இரண்டு பேர் அவனுக்கு எதிரே வந்து மகா கோபத்தைக் காட்டி இப்போது உன்னைக் குத்துவோமோ? அல்லது ஆற்றிலே தள்ளுவோமோ? இவ்விரண்டில் உமக்கு எது தேவை தெரிந்து கொள் என்றார்கள். அப்போது ஒருவருமில்லாத நடுச்சாம நேரமாயிருந்ததினாலே தப்பித்துக்கொள்ளுகிறதற்கு சமயமில்லையென்று கண்டு, என்னை ஆற்றிலே தள்ளுங்களென்றான். என்றவுடனே அவனை வெள்ளப் பெருக்காய் ஓடுகிற ஆற்றிலே தள்ளிப்போட்டார்கள்.
அவன் அலைகளுக்குள்ளே அமிழ்ந்துச் சாகப்போகிற நேரத்தில், சர்வேசுரனுடைய மட்டுக்கடந்த கிருபையால் மனந்திரும்பி தன் இருதயத்தில் பிரார்த்தித்ததாவது ஒ சர்வேசுரா! நான் ஜீவித்த பிரகாரத்துக்கு நரகமே எனக்கு கதியேயல்லாமல் வேறல்ல. ஆனாலும் என் பேரில் இரக்கமாயிரும், கர்த்தாவே இரக்கமாயிரும்" என்றவுடனே அவன் அலைகளோடே உருண்டு புரண்டு இறந்தான். கரைகாணாத கருணா சமுத்திரமான கிருபைநிறைந்த சர்வேசுரன் அந்த துரோகியை மன்னித்து அவன் ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகத் தீர்வையிட்டார்.
அந்த மனுஷனுக்கு பக்தியுள்ள ஒரு மகள் மாத்திரம் இருந்தாள். தன் தகப்பன் நிச்சயமாகவே நரகத்துக்குப் போயிருப்பானென்று அவள் நினைத்து துக்க மிகுதியினாலே பாஸ் பட்டனத்தைவிட்டு வேறே தேசத்துக்குப் போய் அங்கே ஓயாமல் அழுது கொண்டிருந்தாள் . அநேகம் வருஷத்துக்குப் பிற்பாடு தேவ உத்தாரத்தின்படியே அந்த மனுஷனுடைய ஆத்துமம் தன் மகளுக்குத் தரிசனையாகி , தனக்கு மரண வேளையிலே சம்பவித்ததெல்லாம் அறிவித்து , நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலே பொறுக்கமுடியாத வேதனைகளை அனுபவிக்கிறேன் என்கிறதினாலே எனக்காக அநேக பூசைகளைச் செய்விக்க வேண்டுமென்று சொல்லி மறைந்து போனது .
அந்த பக்தியுள்ள மகளானவள் யாதொரு தாமதமின்றி, குருவானவரிடத்தில் வந்து நீரும் சுற்றமிருக்கிற எல்லாக் குருக்களும் என்னுடைய கருத்துக்காக நான் போதுமென்று சொல்லுமளவும் தினந்தோறும் திவ்வியபூசை செய்யவேணுமென்று கேட்டாள். அவள் கேட்டுக் கொண்டபடி ஒரு மாதத்துக்கதிகம் அநேகம் குருக்கள் திவ்விய பூசை பண்ணின பிறகு அந்த மனுஷனுடைய ஆத்துமம் தன் மகளுக்குத் திரும்பக் காணப்பட்டு என் மகளே!
என்னுடைய உத்தரிப்புக்காலம் முடிந்தது, இதோ மோட்சத்துக்குப் போகிறேன் என்று சொல்லி மறைந்து போனது. அப்போது அந்த பக்தியுள்ள மகள் சந்தோஷப்பட்டுக் குருவானவரிடத்தில் நடந்ததெல்லாம் வெளிப்படுத்தினாள்.
கிறிஸ்துவர்களே! இவ்விரண்டு சுகிர்த புதுமைகளினாலே திவ்விய பூசையானது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறதென்று அறிய வேண்டியதுமல்லாமல், மனுஷனானவன் எவ்வளவு அவலமான சாவாய்ச் சாகிறது போலே காண்பித்தாலும், அவனுடைய ஈடேற்றத்தின்பேரில் அவநம்பிக்கையாய் இருக்கக்கூடாது. அதனால் உங்களாலே கூடுமானமட்டும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அடிக்கடி திவ்விய பூசை ஒப்புக்கொடுக்கச் செய்ய வேணுமென்று அறியக் கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
நவம்பர் 27
Posted by
Christopher