28-ம் நாள் அர்ப்பணம்

துவக்க ஜெபம்:

ஆண்டவரே! உமது பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எங்கள் கிரியைகளுக்கு முன் செல்வீராக. உமது வரப்பிரசாத உதவியால் அவைகளை நீரே முற்றுப்பெறச் செய்வீராக. இதனால் எங்களின் சகல ஜெபங்களும் ஞானக் கிரியைகளும் உம்மால் தொடங்கப்பட்டு உம்மாலேயே முடிவடையக்கடவன. எங்கள் ஆண்டவராகிய சேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென்.

தேவ சம்பந்தமான புண்ணியங்களைக் கேட்டு மன்றாடுவோமாக.

விசுவாசம்: என் சர்வேசுரா சுவாமி! திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.

நம்பிக்கை: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறபடியினால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். ஆமென்.

தேவ சிநேகம்: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் மட்டில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதினாலே எல்லாவற்றிக்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு சிநேகிக்கிறேன். மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்றெல்லாரையும் நேசிக்கிறேன். ஆமென்.

மாதாவுக்குப் பாத்திமா அர்ப்பண ஜெபம்:

எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே! ரஷ்யாவை மனந்திருப்பி உலக மக்களுக்கு சமாதானம் தருவேனென்று பாத்திமாவில் வாக்களித்தீரே. எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால் உமது மாசற்ற இருதயத்துக்கு நேர்ந்த சகல நிந்தை அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக, எங்களுக்கு வருகிற துன்பங்களைப் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம். எங்களை உம்முடைய மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிகிறோம். இவ்வர்ப்பணத்தை அடிக்கடி விசேஷமாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே ஆமென்.

1 அருள் நிறைந்த...

(மாதாவுக்கு நாம் செய்யும் இவ்வர்ப்பணத்தின் அடையாளம் கார்மெல் உத்தரியம் அணிந்திருத்தலாகும். உத்தரிய சாலையில் சேர்ந்து அதை அணிவோமாக)

ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை புதுப்பித்தல்:

நான் என் ஞானஸ்நானத்தில் அனைவருக்கும் கொடுத்த வார்த்தைப்பாடுகளை அவர் முன்பாக புதுப்பித்துக் கொள்கிறேன்.

பசாசையும் அவன் கிரியைகளையும் அவன் ஆரவாரங்களையும் முழு மனதோடு விட்டுவிடுகிறேன். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் ஏசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தாரென்றும் நமக்காகப் பாடுபட்டார் என்றும் விசுவசிக்கிறேன். பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையையும் அர்ச்சிஷ்டவர்களுடைய சமூக பிரயோசனத்தையும் பாவ பொறுத்தலையும், சரீர உத்தானத்தையும், நித்திய சீவியத்தையும் விசுவசிக்கிறேன்.

மாதாவுக்கு அடிமை சாசனம்:

சகல மோட்சவாசிகளுக்கு முன், கடவுளின் கன்னித் தாயான அமலோற்பவ மரியாயே உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக என் சரீரத்தையும் ஆத்துமத்தையும், என் உள் எண்ணங்களையும் ஐம்புலன்களையும் என் எல்லாவற்றையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரியைகளையும் பலன்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்துக்காக உமது பிரியப்படி நீரே முழு உரிமையுடன் என்னை ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென்.

மரியாயின் மாசற்ற இருதயமே என் இரட்சண்யமாயிரும். (மும்முறை)

பரிசுத்த ஆவிக்கு ஜெபம்:

பரிசுத்த ஆவியே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலிருந்து உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே! ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே! பேரின்பரசமுள்ள இளைப்பாற்றியே! பிரயாசத்தில் சுகமே, வெயிலிற் குளிர்ச்சியே. அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே, உம்முடைய விசுவாசிகளின் இருதயத்தின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்ற மில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும். வணங்காததை வணங்கப் பண்ணும். குளிரோடிருக் கிறதைக் குளிர் போக்கும். தவறினதைச் செம்மையாய் நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச ஆனந்தத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி . ஆமென்.

சமுத்திரத்தின் நட்சத்திரமே:

1. சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க! கடவுளின் கருணையுள்ள தாயே! எப்பொழுதும் கன்னிகையே! மோட்சத்தின் இனிய வாசலே வாழ்க!

2. கபிரியேல் தூதன் உரைத்த, மங்கள் வாழ்த்துரையை ஏற்று, ஏவையின் பெயரை மாற்றிய தாயே! சமாதானத்தில் எங்களை நிலை நிறுத்துவீராக.

3. குற்றவாளிகளின் பாவ விலங்கை அறுப்பீராக. பாவ இருளில் உள்ளோருக்கு ஒளியருள்வீராக. எங்கள் எல்லா தீமைகளையும் நீக்கி நலன் அனைத்திற்காகவும் மன்றாடுவீராக.

4. தாயென்று உம்மைக் காட்டும் எங்களுக்காக உமது மகவாகப் பிறந்த தேவசுதன் உம் மன்றாட்டின் மூலம் எங்கள் வேண்டுதலை ஏற்பாராக.

5. கன்னியருள் சிறந்த கன்னிகையே! அனைவரிலும் மிக சாந்தமுள்ள அன்னையே! எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவியும்; சாந்தமும் கற்பும் உள்ளவர்களாக்கும்.

6. பழுதற்ற வாழ்வை எங்களுக்குத் தாரும். உமது குமாரன் சேசுவை நாங்கள் கண்டு என்றும் மகிழ்ந்திருக்க எங்கள் பாதையை பத்திரமாய்க் காத்தருள்வீராக.

7. தேவ பிதாவுக்கும், துதி உயர் கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும், திரித்துவரான ஏக கடவுளுக்கும் புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.

மரியாயின் கீதம்: (லூக் 1:47 - 55).

என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது. என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தனது அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார் ஆகையால் இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய கிருபையும் தலைமுறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேல் இருக்கின்றது. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார். தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுடையவர்களைச் சிதறடித்தார். வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார். பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி செல்வர்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். தமது கிருபையை நினைவு கூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார். அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவர் சந்த்தியாருக்கும் அவர் வாக்குத் தத்தம் பண்ணியிருந்தார்.

இம்முதல் வாரத்தில் தினமும் சொல்ல வேண்டிய ஜெபங்கள்

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே கிருபையாயிரும் (2)
சுவாமி கிருபையாயிரும் (2)

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சிஷ்ட தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் சுமாமி.

1. பிதாவிடமிருந்தும் சுதனிடமிருந்தும் புறப்படுகிறவரான பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

2. பிதாவுக்கும் சுதனுக்கும் சரிசமமானவராயிருக்கிற பரிசுத்த ஆவியே, எங்கள் இருதயங்களில் எழுந்தருளி வாரும்.

3. பிதாவின் வாக்குறுதியாக இருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. மோட்ச பிரகாசத்தின் கதிரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சகல நன்மைகளுக்கும் காரணமாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. பரலோக நீரின் சுனையே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. எரித்துப் பட்சிக்கிற நெருப்பாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. பற்றியெரியும் சிநேகமாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. ஞான அபிஷேகமாயிருக்கிறவரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. பரம அன்பினுடையவும் சத்தியத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. ஞானத்தினுடையவும் அறிவினுடையவும் ஆவியே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

12. ஆலோசனையினுடையவும் திடத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. புத்தியினுடையவும் பக்தியினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. தெய்வ பயத்தினுடைய ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. வரப்பிரசாதத்தினுடையவும் ஜெபத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. சமாதானத்தினுடையவும் சாந்தத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி,

17. அடக்கவொடுக்கத்தினுடையவும் மாசற்றதனத்தினுடையவும் ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. உத்தம ஆறுதலான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. எங்களை அர்ச்சிக்கிறவரான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. திருச்சபையை ஆளுகிறவரான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. உந்நத கடவுளின் கொடையாகிய பரிசுத்த ஆவியே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

22. பிரபஞ்சத்தை நிரப்புகிறவரான பரிசுத்த ஆவியே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

23. சர்வேசுரனுடைய பிள்ளைகளின் சுவீகாரமாகிய பரிசுத்த ஆவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. பாவத்தின் மட்டில் பயங்கரத்தை பரிசுத்த ஆவியே எங்களிடம் மூட்டியருளும்.

25. இவ்பூவுலகின் முகத்தை பரிசுத்த ஆவியே வந்து புதுப்பித்தருளும்.

26. எங்களுடைய ஆத்துமங்களிலே பரிசுத்த ஆவியே உம்முடைய ஒளியைப் பொழிந்தருளும்

27. எங்களுடைய இருதயங்களிலே பரிசுத்த ஆவியே உம்முடைய நெறியைப் பதிப்பித்தருளும்.

28. உம்முடைய சிநேகத்தின் சுவாலையினால் பரிசுத்த ஆவியே எங்களைப் பற்றியெரியச் செய்தருளும்

29. உம்முடைய வரப்பிரசாதப் பொக்கிஷங்களை பரிசுத்த ஆவியே எங்களுக்குத் திறந்தருளும்.

30. நன்றாக ஜெபிப்பதற்கு பரிசுத்த ஆவியே எங்களுக்குப் படிப்பித்தருளும்.

31. உம்முடைய பரலோக ஏவுதல்களினால் பரிசுத்த ஆவியே எங்களை ஒளிர்வித்தருளும்.

32. இரட்சண்யத்தின் பாதையிலே பரிசுத்த ஆவியே எங்களை நடத்தியருளும்.

33. அவசியமாயிருக்கிற ஒரே ஞானத்தை பரிசுத்த ஆவியே எங்களுக்குத் தந்தருளும்.

34. நன்மை செய்யும் பயிற்சியிலே பரிசுத்த ஆவியே எங்களைத் தூண்டியருளும்.

35. எல்லாப் புண்ணியங்களின் பேறு பலன்களையும் பரிசுத்த ஆவியே எங்களுக்குத் தந்தருளும்.

36. நீதியிலே நிலைத்து நீடித்திருக்கும்படி பரிசுத்த ஆவியே எங்களுக்கு உதவியருளும்.

37. எங்களுடைய நித்திய வெகுமானமாக பரிசுத்த ஆவியே நீரே இருப்பீராக.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே உம்முடைய பரிசுத்த ஆவியை எங்களிடம் அனுப்பியருளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே பரிசுத்த ஆவியின் வரங்களை எங்கள் ஆத்துமத்தில்
பொழிந்தருளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே ஞானத்தினுடையவும் பக்தியினுடையவும் ஆவியை எங்களுக்குத் தந்தருளும்.

பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளின் இருதயங்களை நிரப்பும், அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும்.

ஜெபிப்போமாக.
இரக்கமுள்ள பிதாவே! உம்முடைய தெய்வீக ஆவியானவர் எங்களைப் பிரகாசப்படுத்தி பற்றி எரியச் செய்து பரிசுத்தப் படுத்தும்படி எங்களுக்கு அருள்வீராக. இதனால் அவருடைய மோட்ச பனிப் பொழிதலினால் எங்களை ஊடுருவி, நாங்கள் நற்கிரியைகளில் மனமுடையவர்களாகச் செய்தருளும். உம்மோடும் அதே பரிசுத்த ஆவியோடும் இராச்சிய பாரம் செய்கிற எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

சேசுவின் திரு நாமத்தின் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பிதாவின் திருச்சுதனாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

பிதாவின் பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

நித்திய ஒளியின் தூய்மையாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மட்டில்லாத மகிமையுடைத்தான இராஜாவாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

நீதி ஆதித்தனாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

பரிசுத்த கன்னிமரியாயின் குமாரனாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மகா அன்புக்குரிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

ஆச்சரியத்துக்குரிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மிகுந்த வல்லப கடவுளாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

வரப்போகிற பாக்கியங்களுக்குக் காரணமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

பரம ஆலோசனைகளின் திவ்விய தூதனாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மகா சக்தியுடைத்தான சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மகா பொறுமையுள்ள சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மகா சிரவணம் பொருந்திய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மனத்தாழ்ச்சியையும் மதுர குணத்தையும் கொண்டிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

கற்பை நேசிக்கிற சேசுவே எங்கள் அன்பராகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

சமாதான தேவனாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

ஜீவியத்துக்குக் காரணமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

ஆத்துமங்களை இரட்சிக்கிறதிலே மகா வேட்கையுள்ள சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

எங்கள் தேவனாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

எங்களுக்கு அடைக்கலமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

தரித்திரருடைய தகப்பனாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

விசுவாசிகளுடைய பொக்கிஷமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

நல்ல ஆயராயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

உண்மையான பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

நித்திய ஞானமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மட்டில்லாத நன்மைத் தன்மையைக் கொண்டிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

எங்கள் ஜீவியமும் உண்மையும் வழியுமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

சம்மனசுக்களுடைய சந்தோஷமாயிருக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

பிதாப்பிதாக்களுக்கு இராஜாவாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

தீர்க்கதரிசிகளுக்கு ஞானங் கொடுக்கிற சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

அப்போஸ்தலருக்குக் குருவாகிய சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

சுவிசேஷருக்குப் போதகரான சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

வேத சாட்சிகளுக்குத் திடனான சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

ஸ்துதியருடைய பிரகாசமான சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

விரத்தருடைய துப்புரவான சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

சகல அர்ச்சிஷ்டவர்களுக்கும் முடியான சேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

சகல பாவங்களிலே நின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கோபத்திலே நின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசின் தந்திரங்களிலே நின்று எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

மோக ஆசையிலே நின்று எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

நித்திய மரணத்திலே நின்று எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீர் தருகிற தர்ம சிந்தனைகளை அசட்டை பண்ணுகிற துர்க்குணத்திலே நின்று எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய பிறப்பைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய குழந்தைப் பருவத்தைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய விருத்த சேதனத்தைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய திவ்விய நடத்தையைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய பிரயாசத்தையும் பிரயாணங்களையும் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய கலக்கத்தையும் இரத்த வியர்வையையும் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய சிலுவையையும், பாடுகளையும் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய மரணத்தையும் அடக்கத்தையும் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய ஆச்சரியமான ஆரோகணத்தைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேவரீருடைய சந்தோஷத்தையும் மகிமையையும் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவியின் ஆகமனத்தைப் பார்த்து எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

நடுத்தீர்க்கிற ஞானியே எங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சேசுவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சேசுவே எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.

ஜெபிப்போமாக.
எங்கள் திவ்ய இரட்சகரும் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறிஸ்துவே! எங்கள் ஆத்துமத்தையும், சரீரத்தையும், புத்திமனது நினைவையும் எங்களுக்குண்டான சகலத்தையும், உமக்குக் காணிக்கையாக வைக்கிறோம். நாங்கள் எங்கள் சிந்தனை வாக்கு கிரியைகளினாலே முழுவதும் உம்மை நேசிக்கவும், ஸ்துதிக்கவும் உமது திவ்விய நேசத்தின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எளியவும் தயை செய்தருளும் சுவாமி. எங்களுக்கு இதுவே போதும். பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலகருமாயிருக்கிற ஆண்டவரே! ஆமென்.

இம்மூன்றாம் வாரம் முழுவதும் சேசுகிறிஸ்துவின் அறிவில் வளருவதற்கு உதவியாக "மரியாயின் மீது உண்மை பக்தி" என்ற புத்தகம் எண்கள் : 60, 61, 62, 63, 64, 65, 66, 67ஐ வாசிக்கவும்.

சேசுகிறிஸ்துவிடம் மன்றாட்டு.

("மரியாயின் இரகசியம்" எண் 66)

ஓ மிகவும் மதுரமுள்ள சேசுவே! புனித அடிமைத்தனமென்கிற பக்தி முயற்சி வழியாக உம்முடைய திரு மாதாவுக்கு என்னைக் கொடுத்து, அந்த அன்னை உமது மகத்துவத்தின் முன்பாக எனக்காகப் பரிந்து பேசுகிறவர்களாயிருக்கவும், என்னுடைய மிகப்பெரும் பரிதாபமான நிலையில் என்னிடம் குறைவாயிருப்பதையெல்லாம் நிறைவு செய்யவும், எனக்கு நீர் அளித்த வரப்பிரசாதத்திற்காக என்னுடைய நன்றியுணர்வை உமது முன்னிலையில் தெரிவிக்க எனக்கு அருள்வீராக! அந்தோ என் ஆண்டவரே! நான் எவ்வளவு சீர்கெட்ட நிலையில் இருக்கிறேனென்றால், இந்த அன்புள்ள தாய் இல்லாதிருந்தால் நான் சந்தேகமற இழக்கப்பட்டிருப்பேன். ஆம் ஆண்டவரே! உமது முன்பாக எங்கும் இத்தாய் மாமரி எனக்குக் தேவையாயிருக்கிறார்கள்.

உம்முடைய நீதியுள்ள கோபத்தை அமர்த்துவதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். ஏனென்றால் உம்மை நான் எவ்வளவோ அடிக்கடி நோகச் செய்திருக்கிறேன். இன்னும் ஒவ்வொரு நாளும் உம்மை நோகச் செய்து வருகிறேன்.

நான் அடையத் தகுதியுள்ளவனாயிருக்கிற உம்முடைய நீதியின் நித்திய தண்டனைகளிலிருந்து என்னைக் காப்பாற்று வதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் உம்மை நோக்கிப் பார்ப்பதற்கும் உம்முடன் பேசுவதற்கும் உம்மிடம் மன்றாடுவதற்கும் உம்மை அணுகுவதற்கும் உம்மைப் பிரியப்படுத்துவதற்கும் அவர்கள் தேவைப்படுகிறார்கள்.

என்னுடைய ஆத்துமத்தையும் பிறருடைய ஆத்துமங்களையும் இரட்சிப்பதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள்.

சுருக்கத்தில் நான் எப்பொழுதும் உம்முடைய பரிசுத்த சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் எல்லாவற்றிலும் உம்முடைய அதிமிக மகிமையைத் தேடுவதற்கும் அவர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆ! தேவரீர் எனக்குக் காட்டியருளிய இந்த இரக்கத்தை உலகமெங்கும் என்னால் பறைசாற்றக் கூடுமாயிராதா! மாமரி இல்லாதிருந்தால் நான் இதற்குள் தண்டனை தீர்ப்படைந்திருப்பேன் என்று இந்த உலகம் முழுவதும் அறிந்து விடாதா! இந்த உபகாரத்துக்குத் தகுந்த நன்றியறிதலை என்னால் செலுத்தக் கூடுமாயிராதா!

"இருந்தால் நான் அறைசாற்றக் கதை இரக்கத்தை மாமரி எனக்குள் இருக்கிறார்கள். எப்படிப்பட்ட பொக்கிஷம்! எத்தகைய ஆறுதல்! அப்படியானால் நான் அவர்களுடையவனாக இருக்கமாட்டேனா? அது எப்பேர்ப்பட்ட நன்றி கெட்டதனம்! என் அன்புள்ள இரட்சகரே! இப்படி ஒரு துர்ப்பாக்கியம் எனக்கு நேரிடுவதை விட எனக்கு மரணத்தை அனுப்பும். ஏனென்றால் மாமரியின் அடிமையாய் இல்லாதிருப்பதை விட நான் இறந்து போகிறேன்.

சிலுவையடியில் நின்ற அருளப்பருடன் அத்தாயை என் எல்லாமாக ஆயிரந்தடவை எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆயிரந்தடவை என்னை அவர்களுக்குக் கொடுத்துள்ளேன். ஆனால் அன்புள்ள சேசுவே இன்னும் நான் நீர் விரும்புகிறபடி இதைச் செய்யாதிருந்தால், இப்பொழுது தேவரீர் விரும்புகிறபடி நான் அதைச் செய்கிறேன். இந்த அரசுரிமை கொண்ட இராக்கினிக்கு என் ஆத்துமத்திலாவது சரீரத்திலாவது எதுவும் இன்னும் சொந்தமாகாதிருக்க நீர் காண்பீரானால், அதை என்னிடமிருந்து எடுத்து தூரமாய்ப் போக்கிடும் படி உம்மை மன்றாடுகிறேன். ஏனென்றால் என்னிடத்தில் மரியாயிக்குச் சொந்தமில்லாத எதுவும் உமக்குத் தகுதியற்றதாயிருக்கிறது.

மரியாயில் வாசஞ்செய்யும் சேசுவே (ஜெபம்)

ஓ! மரியாயில் வாசஞ்செய்யும் சேசுவே! உம்முடைய ஊழியரிடத்திலே வாசஞ்செய்ய வாரும்! உம்முடைய அர்ச்சிஷ்ட தன்மையிலும் உம்முடைய வல்லமையின் நிறைவிலும் உம்முடைய புண்ணியங்களின் உண்மையிலும் உம்முடைய நடத்தையின் உத்தமதானத்திலும் உம்முடைய பரம இரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் பிதாவின் மகிமைக்காக உம்முடைய பரிசுத்த ஆவியில் எவ்வித எதிர்ச்சக்தியையும் அடக்கியருளும். ஆமென்.

இங்கே தரப்பட்டுள்ள வாசகங்களை வாசிப்பது மட்டும் போதாது. ஒவ்வொரு வாக்கியத்தையும் தியானிக்க வேண்டும். அவற்றில் வைக்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கும்படி மாதாவிடம் மன்றாட வேண்டும்.

மத்தேயு சுவிஷேசம் 26:1. 26-29 36 - 46.

சேசுநாதர் இந்த வாக்கியங்களையெல்லாம் சொல்லி முடித்த பின்பு சம்பவித்ததேதெனில், அப்படியே அவர்கள் அசனம் பண்ணிக் கொண்டிருக்கையில், சேசுநாதர் அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து பிட்டுத் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்து: இதை வாங்கிப் புசியுங்கள். இது என் சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து தோத்திரம் சொல்லி, அதை அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் செய்யுங்கள், ஏனெனில் இது பாவங்களின் பொறுத்தலின் நிமித்தம், அநேகருக்காகச் சிந்தப்படும் புதிய உடன்படிக்கையின் என் இரத்தமாய் இருக்கின்றது. இது முதல், இனி என் பிதாவின் இராச்சியத்திலே உங்களோடு கூட நவமான திராட்சைப் பழ இரசத்தை நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும், இதை நான் பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பின்பு சேசுநாதர் அவர்களோடு கூட ஜெத்சேமணி என்னப்பட்ட பூங்காவனத்துக்கு வந்து, தம்முடைய சீஷர்களை நோக்கி, நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்த்திருங்கள் என்று சொல்லி, இராயப்பரையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் அழைத்துக் கொண்டு போய், துயரப்படவும், ஆயாசப்படவும் தொடங்கினார். மேலும் அவர்களைப் பார்த்து என் ஆத்துமம் மரணமட்டும் துக்கமாய் இருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, என்னோடு கூட விழித்திருங்கள் என்றார். பிறகு அவர் சற்று அப்பால் போய் முகம் குப்புற விழுந்து : என் பிதாவே! கூடுமாகில் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது. ஆகிலும் என் மனதின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகட்டும் என்று சொல்லி வேண்டிக் கொண்டார்.

பின்னும் அவர் தம்முடைய சீஷர்களிடத்திற்கு வந்து, அவர்கள் நித்திரை செய்கிறதைக் கண்டு, இராயப்பரை நோக்கி: இப்படி ஒரு மணி நேரம் என்னோடு கூட விழித்திருக்க உங்களாலே கூடாமல் போயிற்றே? நீங்கள் சோதனைக்குப் படாதபடிக்கு விழித்திருந்து, ஜெபம் செய்யுங்கள். மனமானது வேகமுள்ளதுதான். மாம்சமோ துர்ப்பலமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாம் முறை போய்; என் பிதாவே! இந்தப் பாத்திரத்தை நான் உட்கொண்டாலொழிய, இது அகன்று போகக் கூடாதாகில், உமது சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று சொல்லி வேண்டிக் கொண்டார். பின்பு அவர் திரும்பி வந்தபோது, அவர்கள் நித்திரை செய்கிறதைக் கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கம் கொண்டிருந்தன. ஆதலால் அவர்களைவிட்டு அவர் மறுபடியும் போய், அந்த வாக்கியத்தைத்தானே சொல்லி மூன்றாம் முறையும் வேண்டிக் கொண்டார். பின்னும், அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இப்போது நித்திரை செய்து இளைப்பாறுங்கள் என்றார்.

முடிவு ஜெபங்கள்:

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சாரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்வதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாய் இருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். ஆமென்.

ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் மன்றாட்டு:

கிறிஸ்துவின் ஆத்துமமே , என்னைப் புனிதப்படுத்தும்.
மரியாயின் மாசற்ற இருதயமே, எனக்கு உதவும்.

கிறிஸ்துவின் திருவுடலே, என்னைக் காப்பாற்றும்.
என் ஆன்மாவின் அன்னையே, என்னை மனந்திருப்பும்.

கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை மகிழ்வியும்.
மரியாயின் துயரங்களே, என்னை ஊடுருவும்.

கிறிஸ்துவிலாவிலிருந்து வழியும் திருநீரே. என்னைக் கழுவும்.
மரியாயின் கண்ணிரே , என்னைத் தூய்மையாக்கும்.

கிறிஸ்துவின் பாடுகளே, என்னை ஆறுதல் படுத்தும்.
மரியாயின் தனிமையே, என்னை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடும்.

ஓ! என் நல்ல இயேசுவே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒ! மரியாயின் மென்மையே, என்னைக் கண்ணோக்கும்.

ஓ! இயேசுவே, உமது திருக்காயங்களில் என்னை மறைத்துக் கொள்ளும்.
ஓ! மரியே உமது ஆன்மாவின் ஆழத்தில், என்னை பற்றி எரியச் செய்யும்.

ஓ! இயேசுவே, தீமையிலிருந்து என்னை தப்புவியும்.
ஒ! மரியே நான் சாகும்போது, என்னை உம் அன்புகரத்தில் தாங்கிக் கொள்ளும்.

ஓ! இயேசுவே, உமது சம்மனசுக்கள் புனிதர்களுடைய குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளும்.
ஒ! மரியே விண்ணகத்தில் உம்மைக் கண்டடைய எனக்குக் கட்டளையிடும்.

ஆமென்.