இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 28-ம் தேதி.

இயேசுவின் திரு இருதயம் முகத்தாட்சண்யத்தை விலக்கி நடக்கப் படிப்பிக்கிறது.

முகத்தாட்சண்யம் என்னும் குற்றமானது பிறரால் நமக்கு வரக்கூடிய புகழ்ச்சியையும் பிறருக்கு வருத்தம் வருமோ என்கிற அச்சத்தையும் முன்னிட்டு நமது கடமைகளை அநுசரியாமல் நமது மனச்சாட்சிக்கு முழு விரோதமாய் நடக்கச் செய்கிற பாவமுள்ள கோழைத்தனமாம். இந்தக் குற்றமானது இயேசுவின் திரு இருதய சுபாவத்துக்கு முற்றும் எதிரிடையாயிருக்கிறது. முகத்தாட்சண்யமுள்ள கிறிஸ்துவர்களைப் பற்றி இயேசுக்கிறிஸ்துநாதர் சொல்வதைக் கேள்: "நம்மையும், நமது வார்த்தைகளையும் பற்றி மனுமகனும் தமது மகிமைப்பிரதாபத்தில் எழுந்தருளிவரும்போது வெட்கப்படுவார்" (லூக் 9:26) வேறோரிடத்தில் "எவன் நம்மை மறுதலிப்பானோ அவனை மோட்சத்திலிருக்கிற நமது பிதாவுக்கு முன்னால் நாமும் மறுதலிப்போம்." (மத். 10 : 33)

கிறிஸ்துவர்களுக்குள், விசேஷமாய் இயேசுவின் திரு இருதய முகத்தாட்சண்யத்துக்கு இடமிருக்கக்கூடாது. தாங்கள் சர்வேசுரனுடைய பிள்ளைகள், இயேசுக்கிறிஸ்துவின் சகோதரர்களென்கிற மகத்துவமும் பெருந்தன்மையான எண்ணமும் அவர்களிடமிருக்க வேண்டும் என்றாலும் பிறமத்தவர்கள், அவிசுவாசிகள் தங்கள் பொய் மார்க்கத்தை வெளியரங்கமாய் அநுசரிக்க வெட்கப்படாதிருக்கக் கொள்ள, பரலோக பூலோக அரசரும் நம்மை படைத்தவரும் மீட்பருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் சீஷர்கள் என்று காட்ட அநேகம் கிறிஸ்துவர்கள் பயப்படுகிறதெப்படி? தங்கள் தோழர்களுடைய மனதை முறிக்க அல்லது அவர்களுக்கு தளர்ச்சி வருவிக்கத் துணியாதவர்களை சர்வேசுரனுக்கு மாத்திரம் வருத்தம் வருவிக்கத் துணிகிறதெப்படி? பொய் மதங்களை அநுசரிக்க உதவி செய்யும் சாத்தானுடைய வேலை இது. அதே சாத்தான் தான் உண்மையான தேவனாகிய அளவில்லாத தயை நிரம்பிய ஆண்டவருக்கு ஆராதனை நமஸ்காரம் செய்ய கிறீஸ்துவர்களை எவ்விதத்திலும் தடுக்கப் பிரயாசப்படுகிறது.

ஓர்நாள் ஒரு குருவானவர் முகத்தாட்சண்யத்துக்கு விரோதமாய் ஓர் கண்டிப்பான பிரசங்கஞ் செய்து, கிறீஸ்துவனுக்கும் மரியாதையுள்ள எந்த மனிதனுக்கும் இந்தக் குற்றம் எவ்வளவு தகாததென்று தெளிவாய் எடுத்துக்காட்டினார். பிரசங்கம் முடிந்ததும் குருவானவரிடம் ஓர் ஆள் வந்தார். அவர் ஒரு தளகர்த்தர். சுவாமியாரை நோக்கி, "சுவாமி, நானும் இந்தப் பிரசங்கத்தைக் கேட்டேன். கோழைகள் பேரில் எனக்குப் பிரியமில்லை. நான் என்னைத்தானே ஒரு தைரியசாலியென்றும், மரியாதையுள்ளவனென்றும் எண்ணிவந்தேன். ஆனால் நீங்கள் இன்று செய்த பிரசங்கத்தில், முகத்தாட்சண்யத்தாலும் மனிதர்கள் பயத்தாலும் கிறீஸ்துவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றாத எவனும் ஒரு பெரிய கோழை என்று விளக்கிக் காட்டினீர்கள். இது ஒரு போர் வீரனாகிய எனக்குப் பெரிய அவமானம். தயவு செய்து எனக்குப் பாவசங்கீர்த்தனம் கொடுங்கள். இன்று உங்களுக்கு என் உறுதிமொழி கொடுக்கிறேன். இதுவரை நான் கோழையாய் இருந்ததற்குப் பதிலாய் இனி இயேசுக்கிறிஸ்துவின் பிரமாணிக்கமுள்ள போர்வீரனாயிருப்பேன்" என்றார். சொன்ன வார்த்தை மாறவில்லை. கடைசிவரை தேவ ஊழியத் தில் பிரமாணிக்கமாய் நடந்து சகலருக்கும் நன்மாதிரிகையாயிருந்தார்.

தாங்கள் பக்தியுள்ளவர்களாய் நடந்தால் மற்றவர்கள் தங்களை மதிக்கமாட்டார்கள் என்று முகத்தாட்சண்யமுள்ள கிறிஸ்துவர்கள் பயப்படுகிறார்கள். இது ஒரு பெரிய மோசம். அதற்கு விரோதமாய் நீ உன் வேதத்தின் கடமைகளை உறுதியாயும் தைரியத்தோடும் கடைபிடிக்கறதை பிறமதத்தினரும், கெட்ட கிறிஸ்துவர்களும் பார்க்கும் போது உன் விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு தங்கள் உள்ளத்தில் நீ மற்றவர்களைவிட நல்லவனென்று மதிப்பார்கள்.

முகத்தாட்சண்யம் என்கிற துர்க்குணத்தை ஜெயித்து நமது கடமைகளை உறுதியோடு நிறைவேற்றுவதற்கான சக்தி தரக்கூடியது இயேசுக்கிறிஸ்துவின் மாதிரிகையைப் போல் எதுவுமில்லை. தமது வெளியரங்க வாழ்வில் தமது எதிரிகள் தம்மை நிந்தித்துப் பயமுறுத்தினாலும், தமது பிதாவின் வேதத்தை அவர் போதியாமல் விட்டவரல்ல. நீ தேவ குமாரனாகிய கிறிஸ்துவா என்று நியாயாதிபதி கேட்டபோது தமது சத்துருக்களுக்கு முன்பாக: ஆம், நாம் தேவகுமாரன் தான் என்று மறுமொழி சொன்னார். இப்படி அவர் தெளிவாய் பேசுவதினால் தமது பேரில் கொண்ட பகை அதிகரிக்குமென்று கண்டிருந்தாலும், வெகு தைரியத்தோடு தாம் யூதர்களுக்கும், இவ்வுலகத்துக்கும் அரசரென்று பகிரங்கமாய்க் கூறுகிறார். ஏரோது அரசர் அவரை நிந்தித்து, தூஷணித்த சமயத்தில் அந்த அரசரின் பரிவாரத்துக்கு முன் திவ்விய இயேசு உறுதியாயும் அசையாமலும் இருக்கிறார். சிலுவையில் தொங்கும்போது முதலாய் தமது பரம் பிதாவைப் புகழ்ந்து பாராட்டி அவருடைய சித்தத்துக்கும் ஊழியத்துக்கும் பிரமாணிக்கராயிருந்து தமது உயிரைக் கையளிக்கிறார்.

மரியன்னையின் நன்மாதிரிகையையும் சற்றே கவனிப்போம். தமது திவ்விய குமாரன் இயேசுக்கிறிஸ்துவோடு கல்வாரி மலைக்குப் போக தேவதாய் வெட்கப்படவுமில்லை, பயப்படவுமில்லை. சிலுவையின் பக்கத்தில் தமது திருக்குமாரன் அருகே அவரை வாதித்துக் கொலைப்படுத்தினவர்களைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டு என் திவ்விய குமாரனுடைய சிலுவையருகிலிருக்கவும், அவருக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்யவும் பயப்படாதேயுங்கள். உங்கள் வாழ்நாளில் துன்ப வேதனைகள் வந்தால் அவைகள் உங்களுக்கு அழியாத சம்பாவனையையும், நித்திய மகிமையையும் வருவிக்கும் என்று திருவுளம் பற்றுவது போல் காணப்படுகிறாள்.

திருப்பாடுகளின் போது அப்போஸ்தலர்கள் ஆண்டவரை விட்டு ஓடிப்போனார்கள். ஆனால் தூய ஆவியை அடைந்ததும் அவர்கள் எந்த வாதைக்கும் பின் தாங்கினவர்களல்ல; ஒருவருக்கும் பயப்படவுமில்லை. தேவ மகிமையை அச்சமின்றி உச்சரித்து, திவ்விய வேதத்தைப் போதித்து உழைத்து வாதைப்பட்டு மரணமடைகிறார்கள்.

அப்போஸ்தலர்களுடைய வீரத்தத்துவமான மாதிரிகைகளை வேத சாட்சிகள் பின்பற்றி நடந்தார்கள். அரசர்கள், சக்கரவத்திகளுக்கு முன்பாக தங்கள் கொடுமைகளின் நடுவில் தாங்கள் சேசுக்கிறிஸ்துவின் சீடர்களென்று சகலரும் அறிய உற்சாகமாய் வெளியிட்டுத் தங்கள் பிராணனை அவருக்காகக் கொடுத்தார்கள். ஸ்துதியர்கள், அருட்சகோதரிகள், சகல புனிதர்கள் தீய மனிதர்களால் தங்களுக்கு வந்த நிந்தை அவமானங்களைக் கவனியாமல் திவ்விய இயேசுவின் ஊழியத்தில் கடைசிவரை நிலைத்திருந்து, இப்போது என்றென்றைக்கும் மோட்ச பாக்கியம் பெற்று மகிமையில் வீற்றிருக்கிறார்கள்.

வரலாறு

திருச்சபையின் வெகு வாதைப்படுத்தின் வேத விரோதியாகிய ஜூலியன் என்ற கொடுங்கோலன் பின்வரும் காரியம் ஒன்றை அறியும் பொருட்டு தன் தேவதைக்குப் பலியிட்டுக் கேட்டான். ஆனால் விக்கிரகம் ஒரு மருமொழியும் சொல்லவில்லை. அங்கேயிருந்த பூசாரி, நம்முடைய தெய்வம் சக்தியற்று மெளனமாயிருக்கிறது. மெய்யாகவே இந்தக் கூடத்தில் ஒரு கிறீஸ்துவனிருக்கிறான், அதற்குச் சந்தேகமில்லையென்று கூறினான். சக்ரவர்த்தி கோபங்கொண்டு, அவ்வளவு துணிவாய் இங்கே வந்து நமது தேவனை நிந்திக்கிற கிறீஸ்துவன் யார்? அவன் உடனே எழுந்திருந்து நமது முன்னுக்கு வரட்டும் என்று வெகு ஆத்திரமாய்ப் பேசினான். சக்ரவர்த்தி வாய்மூடாமுன்னே ஓர் போர்ச்சேவகன் உடனே எழுந்து யாவருக்கும் முன்பாக வந்து, என் ஆண்டவர் பேரால் உன் தேவனை வெட்கப்படுத்துகிற கிறிஸ்துவன் நான்தான். அரசர்க்கரசராகிய இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதே என் மகிமை என்று யாவரும் அறியச் சொன்னான். கிறீஸ்துவனுக்குரிய தைரியமும் வல்லமையும் இம்மாத்திமாவென்று கொடுங்கோலன் ஆச்சரியப்பட்டு, மனதிலே அச்சமுற்று மெளனமாய்த் தன் அரண்மனை போய்ச் சேர்ந்தான்.

சுறுசுறுப்பும் பிரமாணிக்கமுமுள்ள கிறிஸ்துவனுடைய மகிமையும் வல்லமையும் எவ்வளவென்று பார். இயேசுக்கிறிஸ்துவை தான் பின்பற்றுகிறேனென்று எவ்வளவு துணிவோடு சொல்லுகிறான். இயேசுவின் திரு இருதய சிநேகிதர்கள் இந்த உத்தம் மாதிரிகையைப் பின்பற்றி சத்திய வேதத்தைப் பகிரங்கமாய் அனுசரிக்க அஞ்சாதிருப்பார்களாக. நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகள் அவருடைய தெய்வீக அரச வம்சத்தின் அங்கத்தினர்கள். நாம் நம்முடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமில்லாத சில மனிதர்களுக்குப் பயந்து, அவர்களுடைய அடிமைகளாக மாறாதிருப்போமாக. முகத்தாட்சண்யம் நம்மைத் தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமற்றவர்களாய் ஆக்கும் பட்சத்தில் இயேசுக்கிறிஸ்துநாதர் தமது பிதாவின் சமுகத்தில் நம்மைப் பார்த்துச் சொல்லும் வாக்கியத்தைக் கேள் : நீ நமது சீடனல்ல, நமது நிமித்தம் நீ வெட்கப்பட்டாய். நாமும் உன்னிமித்தம் வெட்கப்படுகிறோம். நீ நமது சீடனாயிருக்க அபாத்திரவான் என்பார்.

உன் வார்த்தையிலும், கிரிகையிலும், தனித்தும், மற்றவர்கள் முன்பாகவும், நல்ல கிறீஸ்துவனுக்குரிய விதமாய் நடந்து உன் அன்பை இயேசுவின் திரு இருதயத்துக்குக் காட்டக் கடவாய். நீ பேசும் போதும் வேலை செய்யும்போதும், எங்கேயிருந்தாலும், எல்லா இடங்களிலும் உன் திவ்விய வேதத்தை அனுசரிக்கப் பயப்படாமல், அப்போஸ்தலர்கள் பாவனையாய் வாழ்ந்து புனித சின்னப்பரோடு சுவிசேஷத்தைப் பற்றி நான் வெட்கப்படமாட்டேன் (உரோ. 1:16) என்று உறுதியாய்ச் சொல். உனக்கு முன்பாக எவரும் நமது வேதத்தைத் தூஷணித்தால், திருச்சபைக்கு விரோதமாய்ப் பேசினால், குருக்களை நிந்தித்தால், நீ தைரியமாய் அவர்களை எதிர்த்துப் போராடி, கிறிஸ்துநாதருடைய போர்வீரன் என்கிற பெயருக்கும், திருஇருதய அன்பன் என்கிற பெயருக்கும் பாத்திரவான் என்று காண்பி. கடைசியாய்ப் பாவதோஷமில்லாத வாழ்வால் யாவருக்கும் நன்மாதிரிகையாயிருந்து இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய திவ்விய இருதயத்துக்கும் உகந்த தைரியமுள்ள சீடனாகவும் ஞானவேகமுள்ள அப்போஸ்தலனாகவும் நடந்து, நமது வேதத்தின் மகிமையையும் பரிசுத்ததனத்தையும் பிரபல்யப்படுத்தக் கடவாய்.
புனித மார்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம் படைக்கப்பட்ட பொருட்களிடம் நீ எதிர்பார்த்ததை அடையாததாகக் கண்டால் சர்வேசுரன் உன்னைச் சிநேகிக்கிறார் என்று நினைத்துக்கொள். அழிவுக்குரியவைகளோடு நீ பந்தனமாகாமல் அவரோடு மாத்திரம் பந்தனமாகும் படி விரும்புகிறார். அவரை அன்பு செய்கிறதும், அவருக்கு முழுதும் சொந்தமாயிருக்கிறதும் எவ்வளவு இனிமையானதென்று நாம் கண்டுபிடிக்கக் கூடுமேயாகில் மற்றெந்த அன்பை பரிகசித்து அவரை மாத்திரம் நமது வார்த்தையாலும், செயலால் அன்பு செய்வோம். சகலத்தையும் விட்டு விட்டு இயேசுவின் திரு இருதயத்தில் சகலத்தையும் கண்டடைவாய். இந்த கொடையை அடையும்படி ஒரு பர். அரு. பிதா. சொல்வோமாக.

மனவல்லிய ஜெபம்

இயேசுவின் திரு இருதயமே, உமது இராச்சியம் வருக

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.