செபமாலையும் அர்ச் சூசையப்பரும்!
பிரிக்க முடியாத மூன்று ஆட்களின் பெயர்களை பரிசுத்த ஆவியே வேதத்தில் எழுதி இருக்கிறார் . சேசு மேரி சூசை . காலா காலமும் இம்மூன்று நாமங்களும் முழங்கும் . தேவ தாயே செபமாலையைக் கொடுத்து தம் தேவ மகனின் உண்மையான சித்திரத்தை அதில் வரைந்திருக்கும் போது சூசையப்பரின் பேரும் அதில் கலக்காமல் இருக்க முடியுமா? ஒரு விதத்தில் சூசையப்பரின் இரகசிய சரிதை தான் செபமாலை என்றே சொல்லி விடலாம் . மனிதாவதாரத்திலும் ஈடேற்றத்திலும் சூசையப்பருக்குள்ள தொடர்பு என்னவென்று செபமாலையில் அறிய வருவோம் . திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி தானே ? அதில் சூசையப்பரைக் காணாமல் இருக்க முடியுமா ?
பரிசுத்த தமத்திருத்துவம் உலகத்தைப் படைத்து அதற்குத் தலைமை பூண்டு விளங்குவது போல , வேறொரு திரித்துவம் அதை ஈடேற்றுவதில் இறங்கியது . மனிதருடைய ஈடேற்றத்தில் முதல் பாகம் - முக்கிய பாகம் - இயேசுவுக்குத்தான் .அடுத்தபடியில் இரட்சகரின் தாயாகிய கன்னிமரியைக் காண்கிறோம் . இவர்கள் இருவரையும் விட்டு சூசையப்பரைப் பிரிக்க முடியுமோ? கடவுளுடைய அன்பாலும் இரக்கத்தாலும் கிறிஸ்து மேலும் மாமரியின் மேலும் இவருக்குச் செல்வாக்கை ஆண்டவர் அளித்துள்ளார் . நாசரேத்தின் திரித்துவமாகிய இம்மூவரும் கன்னிமை பூண்டவர்கள் . ஆதலால் சந்தோசத்திலும் துக்கத்திலும் இவர்கள் அதிகம் நெருங்கி நின்றனர்
இயேசுவும் மாறியும் சூசையப்பருக்குச் சொந்தம் , பத்தினி பத்தாவுக்குச் சொந்தம் அல்லவா ? இவருடைய கற்பின் நிமித்தம் , அவர்களுடைய தாம்பத்திய உறவு , ஞான உறவு அதிகம் நெருங்கிய உறவு , இயேசுவும் சூசையப்பரின் சொத்து தானே ? புனித பிரான்சிஸ் சலேசியார் சொன்ன உவமை எவ்வளவு இன்பகரமான பொருத்தமுள்ளது. ஒரு தோட்டத்திற்குள் ஒரு புறா வித்தொன்றைப் போட அது பெரிய மரமாகிப் பழுக்குமேயாகில் - தோட்டக்காரன் விதைக்காவிடினும் - அம்மரம் தோட்டக்காரனுடைய சொத்து . ஏனெனில் தோட்டம் அவனுக்குச் சொந்தம் . அதே போல் கன்னிமரி சூசையப்பரின் மெய்யான பத்தினியானபடியால் கன்னி மரியிடம் உற்பவித்த கனியாகிய இயேசுவும் சூசையப்பருக்குச் சொந்தம்
இந்த நெருங்கிய ஐக்கியத்தினால் தான் கடவுள் புனித சூசையப்பருக்கு மகத்தான அருட்கொடைகளை அளித்திருந்தார் . முதல் நாளில் இருந்து வந்த மரபை உறுதிப்படுத்தி புனித பொன்வாய் அருளப்பர் சொல்லுவார் . புனித சூசையப்பர் பிறக்கும் முன்னரே ஜென்ம பாவத்தில் இருந்து கழுவப் பெற்றார். தேவ தாய்க்கு அடுத்தபடியில் புனித சூசையப்பர் வரப்பிரசாதத்தின் ஊற்றாகிய இயேசுவோடு அதிகமதிகம் நெருங்கி இருந்த படியினால் பெரும் கிருபைகளைப் பெற்றார் . குழந்தை இயேசுவை தன் கரத்தில் ஏந்திச் சென்ற போதும் அவருக்குக் கன்னி முத்தம் அளித்த போதும் எவ்வளவு அன்னியோன்னிய ஆத்தும ஒற்றுமை பலித்திருக்கும் . சூசையப்பரிடத்தில் காண முடியாத புண்ணியம் இல்லை என்றே சொல்லலாம்
சூரிய பிரகாசம் ஒரு கண்ணாடியில் பாய அவ்வொளி அக்கண்ணாடியில் இருந்து பிரதிபலிக்குமேயாகில் இரண்டும் ஒரே பிரகாசமாகத்தான் விளங்கும் . அது போல சூசையப்பர் நேர் முகமாக எல்லா ஞானத்தையும் இயேசுவிடம் இருந்து பெறாவிடினும் தேவதாயிடமிருந்து பெற்றார். அவர் உள்ளத்தில் ஞானப் பிரகாசத்தை ஊற்றியவர் இயேசு . ஆதலால் சூசையப்பரின் உள்ளம் இயேசுவின் புண்ணியங்களால் பிரகாசிக்கிறது
இதனால் தான் தேவ இரகசியங்கள் முழுவதிலும் சூசையப்பரைக் காண்கிறோம் . இயேசுவின் பகிரங்க வாழ்க்கைக்கு முன்னர் இயேசு மேரி கரத்தில் சூசையப்பர் தன் உயிரைக் கொடுத்தார் என்பது ஐதீகம் . இயேசுநாதர் உயிர் விட்டவுடன் பாதாளம் சென்று பரகதியின் பாக்கியத்தை அங்கு உள்ளோருக்கு அளித்தார் . சூசையப்பருக்கு என்ன பாக்கியம், என்ன மகிழ்ச்சி ! இயேசு அவர்களைத் தம் கல்லறைக்கு அழைத்து வந்து உத்தானத்திற்கு முன் தம் காயங்களைக் காட்டியபோது புனித சூசையப்பர் எவ்வளவு தூரம் இயேசுவின் பாடுகளை உணர்ந்து அவைகளோடு ஒன்றித்துப் போயிருப்பார் . தேவ தாய்க்கு காட்சி கொடுத்த உயிர்த்த இயேசு தம் கைத்தாதைக்கும் தம் மகிமையைக் காட்டாமல் இருப்பாரோ ? மோட்ச ஆரோகணத்தின் போது தன் கைத்தாதையையும் தானே இயேசு அழைத்துக் கொண்டு போனார் . திருச்சபைக்குப் பாதுகாவலராக இருக்க வேண்டிய சூசையப்பர் , திருச்சபை பிறந்த சமயம் - பரிசுத்த ஆவியானவர் இறங்கின சமயம் - அங்கில்லாமலா இருந்திருப்பார் ? புனித சூசையப்பர் செபமாலையின் தேவ இரகசியங்கள் முழுதும் தோன்றுகிறார் என்றே சொல்லலாம்
திருச்சபை மனிதாவதாரத்தின் தொடர்ச்சி . அதே போல் ஒவ்வொரு கிறிஸ்துவக் குடும்பமும் திருக்குடும்பத்தின் தொடர்ச்சி . திருக்குடும்பத்தில் அவரது அலுவல் எத்தகையதோ அதே அலுவல் அவருக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு . உலக காரியத்திலும் - பழைய ஏற்பாட்டு சூசையைப் போல - ஞானக் காரியத்திலும் ஒவ்வொரு குடும்பத்திற்கு உதவி செய்கிறார்
குழந்தை இயேசுவை வளர்த்த சூசையப்பருக்கு குழந்தைகள் மேல் அன்பு. அதே போல் தொழிலாளர்களுக்கும் , கண்ணியர்களுக்கும், துன்பப்படுவோருக்கும் அகதிகளுக்கும் அவர் அன்பர் . உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கும் அவர் நண்பர் . பாதாளத்தில் இருந்த போது மோட்ச பாக்கியம் இல்லாத குறையை - மோட்சம் போன பின்பு கண்டுபிடித்திருப்பார் அல்லவா?
16 ம் நூற்றாண்டில் ஒரு குருவானவர் சொல்லுவார் :" தேவதாயின் பிரமாநிக்கமுள்ள தாசர்கலே , தேவ தாயின் செபமாலையைச் சொல்லும்போது அதன் முடிவில் அவர் பத்தாவாகிய சூசையப்பரைக் கண்டு ஒரு சிறு செபம் சொல்லுவது கஷ்டம் என்று எண்ணாதீர்கள் .இச்சிறு காணிக்கை கடவுளுக்கு மகாப் பிரியமாயிருக்கும் ; வானத்தையும் பூமியையும் மகிழ்விக்கும் ; இயேசுவின் கைத்தாதைக்குச் சாற்றும் துதியை கண்டு மோட்ச வாசிகள் அக்களிப்பார்கள் . இதனால் புனித சூசையப்பரின் மன்றாட்டால் வானுலக கிருபைகள் பூமியின் மேல் பொழியும் . 1889 ம் ஆண்டு 13ம் சிங்கராயர் பகிரங்கமாக , செபமாலை சொன்னபின் சூசையப்புக்கு ஒரு சிறு செபம் சொல்லச் சொன்னார் . அதை அவரே இயற்றினார் . செபமாலை முடிந்த பின் புனித சூசையப்பரிடம் திரும்பும்படி புனித பத்தாம் பத்தினாதரும் கேட்டுக் கொண்டார்
13 ஆம் சிங்கராயர் அர்ச் சூசையப்பர் பேரில் செய்த செபம்.
அர்ச் சூசையப்பரே ! எங்களுடைய துன்ப துயரங்களில் உம்முடைய சரணமாக ஓடி வந்தோம் . உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின் உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறோம் . தேவ தாயாரான அமலோற்பவ கன்னி மரியாளின் பேரில் நீர் வைத்திருக்கிற அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து , அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளி எங்கள் தேவைகளிலே உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடுகிறோம் . திருக்குடும்பத்தைக் காத்து நடத்திய காவலனே ! இயேசுக்கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும் . அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே ! சகல பாவ மாசுகளிநின்றும் எங்களை தற்காத்தருளும்
வல்லமை பொருந்திய காவலனே , எங்கள் சத்துருக்களோடு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும் . மரண ஆபத்திலிருந்து திவ்விய பாலனை அன்று மீட்டு இரட்சித்தது போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் இருந்தும் இக்கட்டு இடையூறுகளில் இருந்தும் திருச்சபையைப் பாதுகாத்தருளும் . உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரியைப் பின்பற்றி பரிச்த்தமாய் சீவித்து பக்தியை மறித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும் ஆமென்
சரிதை.
அர்ச் பெல்லார்மின் இயேசு சபையைச் சேர்ந்த துறவி . பக்திமான் . புனித ஞானப்பிரகாசியாருக்கு ஆத்தும குருவானவராக இருந்து அர்ச்சியசிஷ்டதனத்தின் கொடுமுடிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தவர் . மெய் இயல் , இறை இயல் இவற்றில் சிறந்த அறிவாளி . பிரசங்கத்தில் வல்லுநர் . வேதத்தைப் பற்றி அவர் எழுதிய நூல்களைக் கண்டாலே நமக்கு அச்சம் ; உள்ளத்தை உருக்கி எடுக்கும் பக்தி நூல்களையும் எழுதியவர்
அவருக்கு சிறுவயதிலிருந்தே தேவ தாயின் மேல் மிகுந்த பக்தி . சிறு பையனாக இருக்கும்போதே சக மாணவன் ஒருவனோடு தெரு வழியே போகும்போது தேவ தாயின் மந்திர மாலையையும் ,செபமாலையையும் சொல்லிக் கொண்டே நடப்பார் . உயிருள்ளவரையில் ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்ல தவறியதில்லை . மகாக் கடினமான உழைப்பில் ஈடுபட்டிருந்த இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்க ஏற்படுத்திய சங்கத்தில் வந்த சாட்சி ஒருவர் சொல்லுவார் " செபமாலை சொல்ல இவர் தவறியதே இல்லை . அதைச் சொல்லும் போதே கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் " செபமாலையை நாளொன்றுக்கு ஒரு முறை தான் இவர் சொல்லி வந்தார் என்று கருதலாகாது . செபமாலை தான் இவருக்கு சதா தோழன் . படிப்பினால் களைப்புற்றிருக்கும் போது வெறும் தலையுடன் (குளிர் நாடுகளில் தலையை மூடாமல் இருப்பது பெரும் வாதனை ) செபமாலை சொல்லுவார் . காப்புவா நகரப் பேராயராக இருந்த போது அடிக்கடி செய்ய நேரிட்ட பயணங்களில் வண்டிக்குள் நுழைந்த உடனே செபமாலையைக் கையில் எடுத்துக் கொள்ளுவார்
1618 ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி புனித இராயப்பர் பேராலயத்தில் நர்கருனைச் சுற்றுப் பிரகாரம் எல்லாம் முடிந்தது . தன் நம்பரிடம் சொல்லுவார் . "சுற்றுப் பிரகாரம் முழுதும் மூன்று முறை 50 மணிச் செபம் செய்ய நேரம் இருந்தது " . நண்பர் அவரைக் கேட்டார் " நீங்கள் செபமாலையை எப்படிச் சொல்லுகிறீர்கள் ?" " பத்துக்கும் பத்துக்கும் இடையில் கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லுகிறேன் (இந்தச் சம்பிரதாய முறை அப்போதுவழக்கில் இல்லை ) ஒவ்வொரு பத்தும் முடிந்த பின் அவ்வந்த தேவ இரகசியத்திற்கு ஏற்ப ஒரு சிறு செபம் சொல்லுகிறேன் .அதன் பின் அடுத்த தேவ இரகசியத்தைப் பற்றி சற்றே தியானிக்கிறேன் " பின் வெகு அழுத்தமாய்ச் சொன்னார் " அருள் நிறைந்த மரியே என்ற சம்மனசின் மங்கலத்தை நிறுத்தி நிறுத்திச் சொல்லுகிறேன் . இம்மூன்று செபமாலைக்குத் தான் சுற்றுப் பிரகாரத்தில் நேரம் இருந்தது . வேறொரு வார்த்தைக்கு நேரமில்லை "
இவர் இவ்வளவு கவனமாய்ச் செபமாலை சொல்லி வந்ததால் தான் இவருக்கு செபமாலை சொல்லுவது அதிகக் களைப்பை ஏற்ப்படுத்தியது என்று அவரைத் தெரிந்தவர்கள் எண்ணி இருந்தனர் . இவர் மரிக்கும் முன் வியாதியாய் இருந்த காலை இவரை அறிந்திருந்த வைத்தியர் மந்திர மாலையையும் செபமாலையையும் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டார் . அவருக்கோ செபமாலை சொல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது .அதலால் சிறிது நாள் சென்று சிறிது நேரம் மட்டும் செபமாலை சொல்ல வைத்தியர் அனுமதித்தார் . தேவ தாய்க்கும் அவர் மகனுக்கும் அதிக பிரியத்தைக் கொடுக்கக்கூடியதும் புண்ணியத்தில் வளரப் பெரிதும் உதவக்கூடியதுமான வழி தினந்தோறும் தவறாமல் செபமாலை சொல்லி வருவதாம் என்பார் இந்தப் புனிதர் .
செபம்.
செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாதாவே ! எல்லா நாடுகளுக்கும் அரசியே , ஒரு பக்கம் எங்களைப் பயம் பிடித்திருந்தாலும் மறுபக்கம் உமது ஆதரவை நம்பி நிற்கிறோம் . நாஸ்திக நாச வலை கிழிந்து படுமென்றும் , தெய்வத்தை எண்ணாத சக்திகள் அனைத்தும் அழிந்து படும் என்றும் நீர் சொல்லாவிடில் நம்புவது எங்களுக்கு எளிதாய் இருந்திராது . ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லும் நாடு மனந்திரும்பும் என்ற உமது மதுர வாக்கு எல்லா நாடுகளுக்கும் அமைதியை அளிக்கிறது
வீடற்ற குழந்தைகளையும் நாடற்ற அகதிகளையும் எங்கள் எண்ணம் நாடுகிறது . இன்னும் கொலைகள் நிற்கவில்லையே . தேசத்தை விழுங்க அழிவு சக்தியின் சூழ்ச்சிகளை பல நாடுகள் அறியாமலோ ,பயத்தினால் எடுத்துக் காட்டத் துணியாமலோ பெரும் ஆபத்தில் விழும் தருவாயில் இருக்கின்றனவே , அழிந்த வித்திலிருந்து அழகான பூச்செடிகள் மலர்வது போல , நாசத்திற்குப் பின்னும் நீர் நாடுகளை எழுப்பக் கூடும் . எனினும் தாயே , வேத விரோதிகளின் கொடுமைகளை நினைக்கக் குலை நடுங்குகிறதே . உம பத்தாவாகிய புனித சூசையப்பரும் நீரும் கொலைகார ஏரோதன் கையிலிருந்து இயேசு குழந்தையைக் காப்பாற்றியதை நினைவு கூர்ந்து சீக்கிரம் அழிவு சக்திகளைப் பூண்டோடு அழித்து உலகில் அமைதியை நிலைநாட்டும் தாயே . எங்கள் மக்கள் உமது குரலுக்குச் செவி சாய்க்கவில்லையே, தங்கள் பாவ நாட்டங்களை விட்டு விட்டு உமது திருமகன் பாதம் சேரவில்லையே . உமது செபமாலையைப் பலர் செபித்தாலும் பக்தியாய்ச் செபிக்கிறார்களா? எங்கள் உள்ளத்தை முதன் முதல் சீர்ப்படுத்தி உலகிற்கு சீக்கிரம் அமைதியைக் கொண்டு வாரும் , அம்மா , செபமாலை மாதாவே!
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அக்டோபர் 28
Posted by
Christopher