தேவமாதாவின் பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையின் பேரில்!
அன்னை நமது தேவைகளையெல்லாம் அறிகிறார்கள்.
தேவமாதா மோட்சத்தில் நிகரில்லாத சந்தோஷ மகிமை அடைந்திருந்தாலும், சகல நிர்ப்பாக்கியமும் நிறைந்த இவ்வுலகில் இருக்கிற தம்முடைய பிள்ளைகளை மறந்து போகாமல் இரக்கமும் அன்புமுள்ள தாயைப்போல் நம்மை நோக்கி தம்முடைய திருக்கண்களைத் திருப்பி, நமது தேவைகளை அறிந்து, நம்மைக் கெடுக்கத் திரியும் பொல்லாத பசாசின் தந்திரங்களை அறிந்து, நாம் இடுகிற அபய சத்தங்களைக் கேட்டு, நம்முடைய மன்றாட்டுக்கு இரங்கி, நம்மை மிகுந்த அன்புடன் ஆதரித்து வருகிறார்கள் இந்தப் பரம நாயகி நம்மைப் போல் இந்த கண்ணீர்க் கணவாயில் இருந்தபோது, நாம் படுகிற வருத்தங்களைத் தாமும் அனுபவித்து, நாம் படுகிற துயரங்களைத் தாமும் அனுபவித்து, நாம் படுகிற துன்பங்களைப் பட்டுணர்ந்திருந்தார்கள். தம்முடைய பிள்ளைகளாகிற நம்முடைய சகலவித கஸ்திகளுக்கும் இரங்கி உதவி செய்வார்களென்று நாம் நினைத்து தேவமாதாவினிடத்தில் முழுதும் நம்பிக்கை வைத்து நம்முடைய நல்ல உபகாரியாக அன்னையை கேட்டு தயாளத்தின் இராக்கினியாயிருக்க, மன்றாடி நம்முடைய ஆதரவாகவும் அடைக்கலமாகவும் தேற்றரவாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்படி மன்றாடக்கடவோம்.
அன்னை சர்வேசுரனிடத்தில் சர்வ வல்லபமுள்ளவளா யிருக்கிறார்கள்.
முத்திப்பேறு பெற்ற ஆத்துமாக்கள் மோட்சத்தில் அடைந்த வல்லபம் அவர்கள் இப்பூமியில் இருக்கும் பொழுது செய்த புண்ணியங்களுக்கு ஏற்ற அளவாய் இருக்கும். ஆகையால் பரிசுத்த கன்னிகை எல்லா புண்ணியங்களுடைய மாதிரிகையாய் இறையருளின் உன்னத முடியை அடைந்திருப்பதால், சர்வேசுரனிடத்தில் பெற்றுக் கொண்ட வல்லபத்துக்கு அளவே இல்லை. நூல் ஆசிரியர்கள் எழுதியிருக்கும் வண்ணம் இயேசுக் கிறிஸ்துநாதர் எல்லா வரப் பிரசாதங்களுக்கும் காரணமாய் இருக்கிறதினால், இந்த வரப் பிரசாதங்களை நம்மில் பொழிய வருகிற வாய்க்காலாக தேவமாதாவை ஏற்படுத்தியிருக்கிறார் இயேசுக்கிறிஸ்துநாதர் தமது நேச அன்னையின் மேல் வைத்த அன்பு மிகுதியினால் அன்னையின் மன்றாட்டைப் புறக்கணியாமல், ஏதெதை கேட்பார்களோ அதைக் கொடுப்பாரென்பதற்குச் சந்தேகமில்லை. புனித தமியானுஸ் என்பவர் கூறுவது போல பரலோகத்திலும், பூலோகத்திலும் தேவமாதாவுக்கு மட்டில்லாத வல்லபம் கொடுக்கப்பட்டு மீட்பருடைய சிம்மாசனத்தருகில் அடிமையைப்போல் இராமல் ஆண்டவளாய் நிற்கிறார்களென்பதில் சந்தேகமில்லை. நாமும் திருச்சபையுடன் தேவமாதாவைத் தயாளத்தின் இராக்கினியாகவும், மனிதரின் உறுதி நம்பிக்கையாகவும் வாழ்த்தி நம்மைத் தமது அடைக்கலத்தில் வைத்து எப்பொழுதும் காப்பாற்றுமாறு அன்னையை மன்றாடக்கடவோம்.
அன்னை மனிதர் பேரில் மிகவும் அன்பாயிருக்கிறார்கள்.
எவ்வித பாக்கியத்தாலும் நிரம்பிய இந்தக் கன்னிகை தமது திருவுதரத்தில் உலக இரட்சகரைத் தரித்தவுடனே இந்தப் பரம இரட்சகர் நம்மீது வைத்த மட்டற்ற நேசத்தை, அன்னையை ஏற்றுக்கொண்டு நம்முடைய காரியங்களெல்லாம் தம்முடையதாய் இருக்கிறதுபோல பாவித்துக் கொள்ளுகிறார்கள் இயேசுக்கிறிஸ்துநாதர் சிலுவையடியில் நின்ற தம்முடைய திருத்தாயை நமக்குத் தாயாகக் கையளிக்கும் பொழுது, அன்னையின் திருஇருதயத்தில் பற்றி எரிந்த அன்பானது அதிகமதிகமாய் வளர்ந்ததென்பதில் சந்தேகமில்லை. அப்போது மனுமக்களைக் குறித்து வந்த தயவும் அன்பும் கவலையும் எவ்வளவென்று ஒருவராலும் சொல்லி முடியாதிருந்தாலும் தாம் பெற்று வளர்த்த பிள்ளையை மிகவும் அன்புள்ள தாயானவள் அளவின்றி அணைத்து நேசிக்கிறதைப் பார்க்க தமது ஞானப் பிள்ளைகளாகக் கொடுக்கப்பட்ட மனுமக்களை அதிக பட்சத்தோடு தேவமாதா அணைத்துக் காப்பாற்றி நேசித்துக் கொண்டு வருகிறார்கள். இப்போது இந்தப் பரமநாயகி தேவசிநேகத்தின் சுவாலையான மோட்சத்தில் வாழ்ந்திருந்த போதிலும் அவர்கள் தம்முடைய பிள்ளைகளின் பேரில் வைத்த அன்பானது அதிகரித்ததேயொழிய கொஞ்சமேனும் குறையவில்லை. மோட்சத்தின் இராக்கினியான எங்களுடைய தாயாரே! உம்முடைய பிள்ளைகளான நாங்கள் இவ்வுலகில் வருத்தப்படுகிறதையும் எண்ணிக்கையில்லாத ஆபத்துக்களில் அகப்பட்டிருக்கிறதையும் கண்டு நாங்கள் அனைவரும் உம்மிடத்தில் சேரும் பொருட்டு கிருபை செய்தருளும்.
செபம்.
அகில உலகையும் உண்டாக்கி ஆண்டு வருகிற ஆண்டவருடைய தாயாரே! புத்தியுடைத்தான சகல படைப்புகளிலும் யோக்கியமுள்ளவர்களே, அநேகர் துர்க்குணத்தினாலும் துஷ்டப்பேயின் சோதனையினாலும் உம்மைச் சிநேகியாமலும் சேவியாமலும் அறியாமலும் இருக்கிறார்கள். நானும் அவர்களைப்போல் உம்மை இந்நாள் மட்டும் தக்க பயபக்தியோடு வணங்காதிருந்தேன். ஆனால் வான் வீட்டில் கோடான கோடி சம்மனசுகளும் மோட்சவாசிகளும் உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து வாழ்த்துகிறார்கள். பூமியிலோவென்றால் எண்ணிக்கையற்ற புண்ணிய ஆத்துமாக்கள் உம்மை மகா நேசத்துடன் வணங்கி ஸ்துதித்து புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். அத்தகைய சிநேகப் பற்றுதல் என் இருதயத்திலே பற்றி எரிந்து நான் உம்மிடத்தில் மனிதரெல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து எல்லாரும் உம்மை சிநேகிக்கும்படி செய்யக்கூடுமாகில் எவ்வளவோ பெரிய பாக்கியம்! ஓ! தாயாரே, நீர் சர்வ தயாபர சர்வேசுரனுக்கு உகந்தவர்களாயிருக்கும்போது அற்பப் புழுவாயிருக்கிற நான் உம்மை சிநேகியாமல் போகிறதென்ன? பரிசுத்த தாயாரே, என் வாயும் என் நாக்கும் பேச்சில்லாமல் போனாலும் என் கையானது திமிரடைந்து என் விரல் இரண்டாய்ப் பிளந்து போனாலும் உம்மை ஒருக்காலும் சிநேகியாமலும் வணங்காமலும் இருக்கமாட்டேன். பேரின்ப இராச்சியத்தில் சகலமான வானோர்களும் உம்மை வாழ்த்துகிறதினால் அவ்விடத்தில் நான் சேருமளவும் உம்மை இவ்வுலகில் இடைவிடாமல் நேசித்துக் கொண்டு வருவேன்.
இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
மோட்ச இராக்கினியே! நான் உம்மிடத்தில் சேருமளவும் என்னைக் கைவிடாதேயும்.
இருபத்தி ஒன்பதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :
உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்களுக்காகப் திருப்பலி செய்விக்கிறது. அல்லது ஐம்பத்து மூன்று செபம் செய்கிறது.
புதுமை!
இயேசு சபையை நிறுவி அதை அனேக, ஆண்டளவாக நடத்தி வந்த, புனித இஞ்ஞாசியார் தேவமாதாவினத்தில் அதிக பக்தி நம்பிக்கை வைத்திருந்ததுமன்றி, தாம் நடத்தி வந்த சபையில் சேருகிறவர்கள் எல்லாரும் அந்த ஆண்டவளை உள்ளம் நிறைந்த நேசத்துடன் வணங்குமாறு கற்பித்திருக்கிறார். அவர் தேவமாதாவின் விசேஷ கிருபையினால் மனந்திரும்பி தம்மை முழுதும் இயேசு கிறிஸ்துநாதருக்கும் தேவமாதாவுக்கும் ஒப்புக்கொடுத்தார். ஓர் நாள் இரவில் பரிசுத்த கன்னிகை தம்முடைய திருக்கையில் குழந்தையான இயேசுக்கிறிஸ்துநாதரை ஏந்திக்கொண்டு தம்மை அவருக்குக் காண்பித்த பொழுது புனித இஞ்ஞாசியார் தேவமாதாவின் மகிமை பெருமையையும் குளிர்ந்த ஒளியையும் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து இவ்வுலக சுகபோகத்தை வெறுத்து புண்ணியத்தின் ஞான பேரானந்தத்தை மாத்திரமே தேட வேண்டுமென்று உறுதியான மனதை அடைந்தார். அந்நாள் துவங்கி அவர் சாகுமளவும் தேவமாதாவின் அனுக்கிரகத்தினால் கற்புக்கு விரோதமான ஓர் அற்ப நினைவு முதலாய் நினைக்கவில்லை.
கொஞ்ச காலத்துக்குப் பிற்பாடு உலக செல்வங்கள் அனைத்தையும் தாம் தொடங்கப்போகும் தவ தர்மக் கிரிகைகளைத் தமது திரு மாதாவான தேவ அன்னையின் அடைக்கலத்தில் வைக்குமாறு மோன்சேராத்துஸ் என்னும் மோட்ச இராக்கினியின் பெயரால் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்று அதில் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்து சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும் தம்மை முழுதும் ஒப்புக் கொடுத்து, தாம் அன்று முதல் உலக மன்னர்களுக்கு இனி ஊழியம் செய்யாமல் பரிசுத்த கன்னிகையின் சபையில் பெயர் கொடுத்து ஆண்டவருடைய ஞான யுத்தங்களை மட்டுமே செய்யத் தீர்மானித்திருப்பதன் அடையாளமாகத் தாம் இராணுவத்தில் வைத்திருந்த போர்க் கருவியை பரமநாயகியின் பீடத்தில் காணிக்கையாக வைத்து அந்தத் திருப்பீடத்தண்டையில் ஓர் இரவு முழுதும் செபம் செய்து அதிகாலையில் திவ்விய நற்கருணை வாங்கித் தாம் அணிந்திருந்த நேர்த்தியான ஆடைகளை ஏழை ஒருவனுக்கு அளித்து சாதாரண உடை உடுத்தி மன்ரேசாவென்னும் பட்டணத்திற்கு ஓரமாயிருக்கிற ஓர் பயங்கரமான குகையில் ஒளிந்துகொண்டார். அதில் கடின தவம் செய்து துன்பங்கள் பல மேற்கொண்டு தூய தமத்திரித்துவத்தையும் இயேசுகிறிஸ்து நாதரையும் அவருடைய திருமாதாவையும் பன்முறை காட்சி கண்டு, மிகவும் சுகிர்தமான தம்முடைய ஞானத் தியானங்களடங்கிய புத்தகங்களை எழுதி நாலைந்து ஆண்டுகளுக்குப்பிறகு பாரீஸ் நகரில் கல்வி சாஸ்திரத்தில் தேர்ந்த சில சீடர்களைத் தம்மிடத்தில் சேர்த்து மோன்மார்த் என்னும் தேவமாதாவின் கோவிலிலேயே இயேசு சபையின் முதல் அஸ்திவாரம் இட்டார். பின்பு உரோமாபுரிக்குச் சென்று தமது சபைக்கு அர்ச். பாப்பானவருடைய அனுமதியைப் பெற்று தேவமாதாவின் அடைக்கலத்தில் இச்சபையை முழுவதும் வைக்கத்தக்கதாக புனித சின்னப்பர் கோவிலிலிருக்கும் அற்புதமான தேவமாதாவின் பீடத்தில் தாமே தமது சீடர்களோடு பெரிய வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார்.
அதற்குப்பிறகு சர்வஜீவ தயாபர சர்வேசுரனுடைய கிருபாகடாட்சத்தினாலும் எவ்வித கிருபையையும் உடைத்தான பரிசுத்த கன்னிகையின் உதவியினாலும் இயேசுசபை மென்மேலும் எங்கும் பரப்பி இச்சபையில் சேர்ந்துள்ள குருக்கள் அனைவரும் நன்றியறிந்த மனதோடு தங்களுடைய இராக்கினியான தேவமாதாவுக்குத்தக்க வணக்கத்தைச் செலுத்திக் கொண்டு வருகிறதுமன்றி இப்பரிசுத்த கன்னிகையின் வணக்கத்தைத் திருச்சபை முறையின்படியே எங்கும் பிரசித்தம் பண்ணப் பிரயாசைப்படுகிறார்கள்.
கிறிஸ்தவர்களே! புனித இஞ்ஞாசியாரைப்போல் உங்களையும் உங்களைச் சேர்ந்த எல்லாரையும் தேவமாதாவின் அடைக்கலத்தில் வைக்கக்கடவீர்களாக.