உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்க வேண்டிய விசேச பக்தியைப் பரவச் செய்ய வேணுமென்று காண்பிக்கிற வகையாவது.
தியானம்.
இந்நாள் மட்டும் தியானங்களினால் கேட்ட புதுமைகளினாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் , உங்களுக்கு அதிக பக்தியும் இரக்கமும் வந்திருப்பதுமல்லாமல் அந்த ஆத்துமாக்களுக்கு உங்களால் இயன்ற மட்டும் உதவிசகாயம் பண்ண உறுதியான பிரதிக்கினை பண்ணியிருப்பீர்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை .ஆயினும் நீங்கள் மாத்திரமே அந்த ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருந்து அவர்களுக்காக பிரயாசைப்படுவது போதுமென்றெண்ணாமல், மற்றவர்களிடத்திலும் இந்த சுகிர்த பக்தி உண்டாகும்படிக்கு தக்க வழி உபாயமெல்லாம் தேடவேண்டியதுதானே. அப்படி உங்களாலே ஏவப்பட்ட மற்றவர்கள் செய்கிற நன்மை யாவும் உங்களுக்கு சொந்தம்போலிருக்குமென்கிறதினாலே அதற்குத் தக்க பலனை அடைவீர்களென்பது தப்பாது.
பக்தியானது நெருப்புக்குச் சமானமென்பார்கள். நெருப்பானது ஒரு க்ஷணத்திலே நிலைக்கொள்ளாமல் தானாய் எரிவதுமன்றியே, தன்னருகே இருக்கிற வஸ்துவிலும் பற்றி தன்னைப்போல் அதையும் நெருப்பாக்கி, காய்ந்ததை எரித்து ஈரத்தை உலர்த்திப் பற்றுவிக்குமல்லவோ? உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியும் அப்படித்தான் இருக்கவேண்டியது. இந்தப் பக்தியுள்ளவன் ஒரு க்ஷணமும் சும்மாயிராமல், சகல மனுஷரிடத்திலும் அந்தப் பக்தி எரியவேணுமென்று விரும்பி, அதற்காக ஆண்டவரை ஓயாமல் மன்றாடுவான்.
அதற்கேற்ற வழிகளை ஆசையோடு தேடுவான், தக்க சமயங்களிலே வேண்டிய புத்திமதிகளைச் சொல்வான், அந்தப் பக்தியினாலே வருகிற எவ்வகைப் பிரயோசனங்களையும் வெளிப்படுத்துவான், அந்த பக்தியை விவரித்துக் காட்டும் புஸ்தகங்களை வாசிக்கப்பண்ணுவான். வியர்த்தமாய்ப் புகைகிற நெருப்பு எதற்கு உதவும்? அது மெய்யான நெருப்பாகுமோ? நெருப்புக்கு நல்ல அனலைக் கொடுத்தால் நானாவித காரியத்துக்கும் உதவுகிறதுமல்லாமல் இரும்பு முதலான உலோகங்களை உருகப் பண்ணும். அப்படிப்போல பிறரிடத்தில் தாவாமல் தன்னிடத்திலேயே நின்றுவிடும் பக்தியை, அர்ச். கிறகோரியார் சொல்லியதுபோல, வீண் பக்தியென்றும், உதவாத பக்தியென்றும் கூற வேணும் ஆனதால் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மெய்யான பக்தியுள்ளவன் அதைப் பரவச்செய்ய எப்போதும் விரும்புவான்.
அர்ச் அகுஸ்தீன், அர்ச் கிறிசோஸ்தோம், அர்ச். அமிர்தநாதர், அர்ச் கிறகோரியார், அர்ச். பெர்நார்துஸ், அர்ச் பிராஞ்சீஸ்கு சலேஸியார், அர்ச். லிகோரியார், அர்ச். லேயோநார்துாஸ் முதலான பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள் இந்தச் சுகிர்த பக்தியைப் பிறரிடத்தில் பற்றுவிக்கத் தாங்களெழுதின புஸ்தகங்களினாலே வெகு பிரயாசைப்பட்டார்களென்கிறது சரியே. அர்ச். லுயீத்கார்தம்மாள், அர்ச் ஜெர்த்துருத்தம்மாள், அர்ச். தெரேஸ்ம்மாள், அர்ச். பாஸி மரிமதலேனம்மாள், அர்ச். ஜெனுவா கத்தரீனம்மாள். முத்திப்பேறு பெற்ற மரிய மார்கரீத்தம்மாள் முதலான பேர் பெற்ற கன்னியாஸ்திரிகள் பெண்மணிகளாயிருந்தாலும் மேற்சொன்ன பக்தியை மேன்மைப்படுத்தி எங்கும் பரவும்படியாய் முயற்சி பண்ணினார்களாம்.
மீண்டும் சத்திய திருச்சபைக்குத் தலைவர்களான அர்ச் பாப்புமார்கள் அந்த உத்தமமான முறைமை மென்மேலும் வழங்கும்படிக்குத் தங்களுடைய நிருபங்களினால் அடிக்கடி சகலமான கிரிஸ்துவர்களை ஏவினதுமல்லாமல், அதற்கு அநேக ஞான நன்மைகளையும் பலன்களையும் தந்தருளினார்கள். அதல்லாமலும் தெய்வீக சாஸ்திரிகளான ஜேர்சோனியுசென்கிறவரும், சுவாரேசியூசென்கிறவரும் இன்னும் சில சாஸ்திரிகளும், பக்தியுள்ள குருக்களும், தாங்களெழுதின புஸ்தகங்களினாலென்கிலும் செய்த பிரசங்கங்களினாலேயானாலும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைத்த பக்தியானது பலனுள்ளதென்றும், பிரயோசனமுள்ளதென்றும் ஒப்பித்ததுந்தவிர, அதை எவரும் ஆசையோடு அனுசரிக்கவேணுமென்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். அந்நாள் முதலாய் இந்தச்சுகிர்த பக்தியைக் குறித்து எழுதின புஸ்தகங்கள் எத்தனையென்றும், அதற்காக ஸ்தாபித்த விசேஷ சபைகள் எத்தனையென்றும், அதைப் பரவச்செய்ய விரும்புகிறவர்கள் எத்தனையென்றும் சொல்லத்தகும் தன்மையல்ல.
கிறிஸ்துவர்களே ! உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் வைக்கவேண்டிய இந்த விசேஷ பக்தியானது பரவத்தக்கதாக எதையாகிலும் செய்தீர்களோ இல்லையோவென்று பாருங்கள் . இப்போது என்னத்தைச் செய்து கொண்டு வருவீர்கள் ? இனிமேல் என்னத்தைச் செய்ய வேணுமென்று நன்றாய் யோசித்துத் தீர்மானம் பண்ண வேண்டும் . இந்த சுகிர்த பக்தியானது மேன்மேலும் இந்த தமிழ் இராச்சியங்களிலே அதிகமதிகமாய் பரவ உங்களுடைய ஜெபத்தினாலும் உங்களுடைய நடத்தையினாலும் உங்களுடைய பிரயாசத்தினாலும் விரும்புவீர்களேயானால் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் உங்களுக்குப் பிரயோசனமும் வெகுமதியும் கிடைக்கும் என்கிறதற்குச் சந்தேகமில்லை .
இப்போது சொல்லப்போகிற ஐந்து காரியங்களையும் விசேசமாய் அனுசரிக்க வேண்டியது
1-வது : உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாகத் திருச்சபையிலே வழங்கிவருகிற மோட்சவிளக்கு, ஆத்துமாக்களுக்காகப் பிச்சை தர்மம், மரித்தவர்களுக்காகப் பூசைகள், கோவில் வேண்டுதல் முதலான சுகிர்த முறைமைகளை நல்லதென்று விசுவசித்து அங்கீகரிக்கிறது.மல்லாமல், அவைகளை விரோதிக்கிறவர்களைத் தடுத்து மறுக்கவேணும்.
2-வது: உத்தரிக்கிற ஆத்துமாக்களின் திருவிழாவையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதத்தையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்குத் திருச்சபையில் ஒப்புக் கொடுக்கிப்பட்ட வருஷாந்திர ஐம்பத்திரண்டு திங்கட்கிழமைகளையும் அநுசரிப்பதுமன்றியே தினந்தோறும் கூடியமட்டும் சில ஜெபங்களைப் பண்ணவும், கொஞ்சம் தர்மம் செய்யவும் பிரியப்படக்கடவீர்கள்.
3 -வது : உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து அடிக்கடி உரையாட வேண்டியதுமல்லாமல், இந்தக் சுகிர்த பக்தி பரவும்படி சின்ன சவேரியார் என்று பேர்பெற்ற ரொஸ்சி அடிகளார் செய்த ஐம்பத்திரண்டு திங்கட்கிழமைப் பிரசங்கப் புஸ்தகத்தையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதமென்னும் இந்த புஸ்தகத்தையும், இவை போன்ற மற்ற சுகிர்த புஸ்தகங்களையும் வாசிக்கப்பண்ண வேணும்.
4 -வது :உங்களுடைய உறவின் முறையாரும், சிநேகிதரும், அறிமுகமானவர்களும் தங்களைச்சேர்ந்த ஆத்துமாக்களுக்காக உதவிசகாயம் செய்தார்களோ இல்லையோவென்று அவர்களை விசாரிக்கவேணும்
5-வது : போன தியானத்தில் வெளிப்படுத்தப்பட்ட உச்சித நேர்ச்சிக் காணிக்கையைச் செய்யும்படிக்குப் பக்தியுள்ளவர்களைத் தூண்டிவிடவேண்டும்.
கிறிஸ்துவர்களே! நல்ல கிறிஸ்துவன் எவனோ அவன் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியாய் இருப்பானென்றும், உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் பக்தியுள்ளவன் எவனோ, அவன் இந்தச் சுகிர்த பக்தி எங்கும் பரவும்படியாய்ப் பிரயாசைப்படுவானென்றும் இந்த தியானத்தினால் நீங்கள் அறிந்திருப்பீர்களென்பது நிச்சயம். ஆகையால் நீங்களும் அப்படியே செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லயச் செபம்.
அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.
செபம்
எங்கள் இருதயத்துக்கு ஆனந்தமான இயேசுவே ! மோட்சவாசிகள் காண விரும்புகிற உமது திருமுகம் துஷ்டரால் மூடிமறைக்கப்படவும், உமிழ்நீரால் அசுத்தப்படவும், கையால் அடிக்கப்படவும் திருவுளமானிரே, இப்படிப்பட்ட மனோவாக்குக்கெட்டாத வேதனை அநுபவித்த உம்முடைய திரு முகத்தைப் பார்த்து மரித்த கிறிஸ்துவர்களுடைய ஆத்துமங்களுக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி, ஆமென்.
இருபத்தொன்பதாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:
இன்று அல்லது அடுத்த சனிக்கிழமை நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுகிறது.
புதுமை
ஒரு சிங்காரத் தோப்பில் நல்ல புஷ்பமும் காய்கனியும் இருக்கிறாற்போல, சத்திய திருச்சபையில் எவ்வித புண்ணியங்களும் தர்மங்களும் உண்டாயிருக்கிறதென்பது சரியே. இராஜாக்கள் தரிக்கிற தங்கக் கிரீடத்தில் வயிரக்கற்களும், முத்துரத்தினங்களும் பிரகாசிப்பதுபோல, சேசுநாதருடைய கிரீடமான திருச்சபையில் பல சபைகள் துலங்குகின்றன. வியாதியஸ்தரை மகா பட்ச கவனத்தோடு விசாரிக்கும் பல சபைகளும் உண்டு. தாய் தகப்பனில்லாத பிள்ளைகளைச் சேர்த்து காப்பாற்றி வளர்க்கும் பல சபைகளுமுண்டு. தள்ளாத முதியோரை சலியாத பொறுமையோடும் தளராத அன்போடும் பராமரிக்கும் பல சபைகளுமுண்டு. புறமதத்தாருக்குள்ளேயும் துலுக்கருக்குள்ளேயும் சிறைப்பட்ட கிறிஸ்துவர்களை மீட்டிரட்சிக்கும் பல சபைகளுமிருந்தது. உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ண வேணுமென்று எல்லாச் சபைகளிலும் ஒரு பொதுப் பிரமானக்கட்டளை இருந்ததே தவிர, மற்றப்படி இந்தச் சுகிர்த கருத்துக்காக முன் காலங்களிலே யாதொரு விசேஷ சபையும் ஸ்தாபித்திருக்கக்காணோம்.
ஆனால் ஏறக்குறைய சில வருஷங்களுக்கு முந்திப் பிரான்சு இராஜதானிப் பட்டணமான பாரிஸ் மாநகரில் சர்வேசுரனுடைய விசேஷ ஏவலினாலே உதவிச் சபையெனப்பட்ட ஒரு கன்னியாஸ்திரிகளுடைய சபை ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சபையிலே சேர்ந்த பக்தியுள்ள கன்னியாதிரிகள் தாங்கள் ஜெபிக்கும் ஜெபமும், நடத்தும் தவமும், அநுபவிக்கும் வருத்தமும், செய்யும் நற்கிரியை யுமெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக முழுதும் ஒப்புக்கொடுக்கிறார்கள்.
இவர்கள், மற்றக் கன்னியாஸ்திரிகளைப் போல, தரித்திரம், கீழ்ப்படிதல், விரத்தத்துவம் ஆகிய இம்மூன்று பெரிய வார்த்தைப்பாடுகளைக் கொடுக்கிறதுமல்லாமல், நாலாம் வார்த்தைப்பாடாக, தங்களுடைய ஜெய தப தான தர்மத்தினாலே தங்களுக்கு இவ்வுலகத்தில் வரக்கூடிய பரிகாரப்பலனெல்லாவற்றையும், இறந்தபின் தங்களுக்காக நடத்தப்படும் ஜெபதப தருமங்கள், திவ்விய பூசைகளினால் தங்களுக்கு வரக்கூடிய பரிகாரப்பலன் யாவற்றையும், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நேர்ந்து ஒப்புக்கொடுக்கிறார்கள். மேலும், இந்தப் பக்தியுள்ள கன்னியாஸ்திரிகள் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக அநேக விசேஷ ஜெபங்களைப் பண்ணுகிறதும் தவிர, சில நல்ல தர்மக்கிரியைகளையும் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் தினந்தினம் இரவும் பகலும் அந்த ஆத்துமாக்களின்பேரில் தங்களுடைய அன்பு நேசம் பக்தி இரக்கமெல்லாம் வைத்திருக்கிறதினாலே இடையின்றி. ஒய்வின்றி, சலிப்பின்றி இவர்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாக வேண்டிய வழி உபாயமெல்லாம் தேடிக் கொண்டு வருவார்களாம். இதுவுமல்லாமல் ஸ்திரி பூமான்களான பக்தியுள்ள மற்ற கிறிஸ்துவர்களைத் தங்களுடன் சேர்ப்பித்து அவரவர்கள் தங்களுடைய அந்தஸ்துக்குத் தக்கது உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவும்படிக்குச் செய்வார்கள்.
இந்தச் சுகிர்த சபையை அநேக மேற்றிராணிமார்கள் அங்கீகரித்ததுமன்றியே அப்போது திருச்சபையை மகிமையாய் ஆண்டுவந்த 9-ம் பத்திநாதர் என்னும் அர்ச் பாப்பானவர் இந்தச்சபைக்கு ஒரு விசேஷ ஆசீர்வாதத்தைத் தந்தருள சித்தமானார்.
கிறிஸ்துவர்களே ! இதெல்லாவற்றையும் கேட்ட நீங்களும் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் விசேஷ பக்தி வைக்கவேணுமென்று அறியக்கடவீர்களாக.
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
நவம்பர் 29
Posted by
Christopher