அதிகாரம் 01
1 ஆக்காப் இறந்த பின் மோவாப் நாட்டார் இஸ்ராயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
2 ஓக்கோசியாசு சமாரியாவிலிருந்த அரண்மனை மேல்மாடியிலிருந்து சன்னல் வழியாய்க் கீழே விழுந்து, மிகவும் நோயுற்றான். "நீங்கள் அக்கரோனின் தெய்வமாகிய பெயெல்செபூபிடம் சென்று, நான் இந்நோயினின்று நலம் அடைவேனா என அவரை விசாரியுங்கள்" என்று கூறித் தூதுவர் சிலரை அனுப்பினான்.
3 ஆண்டவருடைய தூதரோ தெசுபித்தரான எலியாசோடு உரையாடி, "நீ எழுந்து சமாரிய அரசனின் தூதுவரைச் சந்தித்து: 'இஸ்ராயேலில் கடவுள் இல்லை என்றே நீங்கள் அக்கரோனின் தெய்வமான பெயெல்செபூபிடம் குறிகேட்கப் போகிறீர்கள்?'
4 ஆதலால் ஆண்டவர் திருவுளம்பற்றுவதாவது: 'நீ உன் படுக்கையிலிருந்து எழுந்திராமல் சாகவே சாவாய்' என்பாய்" என்று கூறினார். உடனே எலியாசு புறப்பட்டுப் போனார்.
5 தூதுவர் திரும்பி வந்ததைக் கண்ட ஓக்கோசியாசு அவர்களை நோக்கி, "நீங்கள் ஏன் திரும்பி விட்டீர்கள்?" என்று கேட்டான்.
6 அதற்கு அவர்கள் மறுமொழியாக, "ஒரு மனிதர் எங்களுக்கு எதிர்ப்பட்டார். அவர் எங்களைப் பார்த்து, 'நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், "இதோ ஆண்டவர் சொல்கிறதாவது: இஸ்ராயேலில் கடவுள் இல்லை என்றோ நீர் அக்கரோனின் தெய்வமான பெயெல்செபூபிடம் இப்படி குறிகேட்க அனுப்பினீர்? எனவே, உம் படுக்கையினின்று எழுந்திராமல் சாகவே சாவீர்" என்று அரசனுக்கு உரைப்பீர்கள்' என்றார்" என்றனர்.
7 அரசன் அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு முன்பாக வந்து இவ்வாக்கியத்தைக் கூறிய மனிதன் எப்படிப்பட்டவன் என்று சொல்லுங்கள்" என்று கேட்டான்.
8 அதற்கு அவர்கள், "அவர் மயிர் அடர்ந்த மனிதர். இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்" என்று பதில் உரைத்தனர். அப்போது அரசன், "அவன் தெசுபித்தனான எலியாசு தான்" என்றான்.
9 உடனே அரசன் ஐம்பது வீரருக்குத் தலைவனையும் அவனுக்குக் கீழ் இருந்த ஐம்பது வீரரையும் அவரிடம் அனுப்பினான். அத்தலைவன் சென்று ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாசைக் கண்டு, "கடவுளின் மனிதரே, உடனே இறங்கி வாரும்; இது அரச கட்டளை" என்றான்.
10 எலியாசு அடிப்படைத் தலைவனைப் பார்த்து, "நான் கடவுளின் மனிதனாய் இருந்தால் வானினின்று நெருப்பு வந்து உன்னையும், உன் ஐம்பது போர் வீரரையும் விழுங்கட்டும்" என்று பதில் உரைத்தார். உடனே வானினின்று தீ இறங்கி வந்து அவனையும் அவனோடு இருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
11 ஓக்கோசியாசு இன்னொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரரையும் அனுப்ப, அத்தலைவன் எலியாசைப் பார்த்து "கடவுளின் மனிதரே, அரசனின் கட்டளைப்படி விரைவில் இறங்கி வாரும்" என்றான்.
12 எலியாசு மறுமொழியாக, "நான் கடவுளின் மனிதனாய் இருந்தால் வானினின்று தீ இறங்கி வந்து உன்னையும், உன் ஐம்பது வீரரையும் விழுங்கட்டும்" என்றார். உடனே வானினின்று தீ இறங்கி வந்து அத்தலைவனையும் அவனோடு இருந்த ஐம்பது வீரரையும் சுட்டெரித்தது.
13 ஓக்கோசியாசு மூன்றாம் முறையாக ஐம்பது வீரருக்குத் தலைவனாய் இருந்த ஒரு மனிதனையும், அவனோடு இருந்த ஐம்பது போர் வீரரையும் அனுப்பினான். இவன் எலியாசுக்கு முன்வந்து முழந்தாளிட்டு அவரைப் பார்த்து, "கடவுளின் மனிதரே, எனக்கும் என்னோடு இருக்கும் உம் ஊழியர்களுக்கும் உயிர்ப் பிச்சை தர வேண்டும்.
14 இதோ, வானினின்று நெருப்பு இறங்கி வந்து ஐம்பது வீரர்களுக்குத் தலைவரான இருவரையும், அவரவர் தம் ஐம்பது வீரர்களையும் விழுங்கிற்று. ஆனால் தாங்கள் என் உயிரைக் காத்தருளும்படி மிகவும் வேண்டுகிறேன்" என்று மன்றாடினான்.
15 அதே நேரத்தில் ஆண்டவருடைய தூதர் எலியாசைப் பார்த்து, "நீ அஞ்ச வேண்டாம். அவனோடு இறங்கிப் போ" என்றார். எனவே, எலியாசு எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிப் போனார்.
16 அவர் அரசனை நோக்கி, "நீர் ஆலோசனை கேட்க இஸ்ராயேலில் கடவுளே இல்லாதது போல், அக்கரோனின் தெய்வமான பெயெல்செபூபிடம் குறி கேட்கச் சில மனிதரை அனுப்பினீர். ஆதலின் நீர் படுக்கையினின்று எழுந்திருக்கப் போகிறதில்லை; சாகவே சாவீர்" என்றார்.
17 ஆகையால் ஆண்டவர் எலியாசு வாயிலாகக் கூறிய வாக்கின்படி ஓக்கோசியாசு இறந்தான். மேலும், அவனுக்கு ஒரு மகனும் இல்லாததால், அவனுக்குப்பின் அவன் சகோதரன் யோராம் அரியணை ஏறினான். இது, யூதா நாட்டின் அரசன் யோசபாத்தின் மகன் யோராம் ஆட்சி செலுத்தி வந்த இரண்டாம் ஆண்டில் நடந்தது.
18 ஓக்கோசியாசின் மற்றச் செயல்கள் இஸ்ராயேல் அரசர்களுடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
அதிகாரம் 02
1 ஆண்டவர் எலியாசைச் சூறாவளிக் காற்றால் விண்ணிற்கு எடுத்துக் கொள்ள விழைந்த போது, எலியாசும் எலிசேயும் கல்கலாவினின்று வெளியே சென்று கொண்டிருந்தனர்.
2 எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னைப் பேத்தலுக்கு அனுப்பியிருக்கின்றார். ஆதலின் நீ இங்கேயே இரு" என்றார். எலிசேயு அவரை நோக்கி, "ஆண்டவர் மேலும் உம் உயிரின் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரிய மாட்டேன்" என்று பகன்றார். இங்ஙனம் இருவரும் பேத்தலுக்குப் போனார்கள்.
3 அப்பொழுது பேத்தலில் இருந்த இறைவாக்கினரின் புதல்வர்கள் எலிசேயுவிடம் ஓடிவந்து, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா?" என்று கேட்டனர். அதற்கு அவர், "எனக்குத் தெரியும்; நீங்கள் அமைதியாய் இருங்கள்" என்று கூறினார்.
4 அப்போது எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னை எரிக்கோ வரை அனுப்பியிருக்கிறார். ஆதலின், நீ இங்கேயே இரு " என்றார். அதற்கு அவர் "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என்றார். இங்ஙனம் அவர்கள் இருவரும் எரிக்கோ நகரை அடைந்தனர்.
5 அப்பொழுது அந்நகரிலிருந்த இறைவாக்கினரின் புதல்வர்கள் எலிசேயுவிடம் ஓடிவந்து, "ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப்போகிறார் என்று உமக்குத் தெரியுமா?" என்று அவரைக் கேட்டனர். அதற்கு அவர், "எனக்குத் தெரியும்; நீங்கள் அமைதியாய் இருங்கள்" என்றார்.
6 மீண்டும் எலியாசு எலிசேயுவைப் பார்த்து, "ஆண்டவர் என்னை யோர்தான் நதி வரை அனுப்பி இருக்கின்றார். ஆதலின் நீ இங்கேயே இரு" என்றார். அதற்கு அவர், "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்" என மறுமொழி தந்தார். ஆதலின், இருவரும் ஒன்றாகச் சென்றனர்.
7 இறைவாக்கினரின் புதல்வருள் ஐம்பது பேர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களை நோக்கியவாறு தொலையில் நின்றனர். எலியாசும் எலிசேயாவும் யோர்தான் நதி தீரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
8 அப்பொழுது எலியாசு தம் போர்வையை எடுத்து மடித்து அதைக்கொண்டு நீரையடித்தார். அது இரண்டாகப் பிரிந்தது. இருவரும் கால் நனையாமல் நடந்து நதியைக் கடந்தனர்.
9 அவர்கள் கரையை அடைந்ததும், எலியாசு எலிசேயுவை நோக்கி, "உன்னை விட்டுப் பிரியுமுன் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என நீ விரும்புகிறாய், சொல்" என்று கேட்டார். அதற்கு எலிசேயு, "உமது ஆவி இருமடங்கு என் மேல் இருக்க வேண்டுகிறேன்" என்று பதில் இறுத்தார்.
10 எலியாசு அவரைப் பார்த்து, "நீ கேட்கும் காரியம் மிகவும் அரிதானது. எனினும், உன்னைவிட்டு நான் பிரியும் போது என்னை நீ காண்பாயாகில், நீ கேட்டதை அடைவாய்; என்னைக் காணாவிட்டால், அடைய மாட்டாய்" என்றார்.
11 இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழி நடந்து போகையில், இதோ நெருப்பு மயமான ஒரு தேரும், தீயைப் போன்ற குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்து விட்டன. அன்றியும், எலியாசு சூறாவளியின் மூலம் விண்ணகம் ஏறினார்.
12 எலிசேயுவோ அவரைப் பார்த்த வண்ணம், "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ராயேலின் தேரே! அத்தேரின் சாரதியே!" என்று கதறிக் கொண்டிருந்தார். பிறகு அவரைக் காணவில்லை. உடனே அவர் தம் உடைகளைப் பிடித்து அவற்றை இரண்டாய்க் கிழித்தார்.
13 மேலும், அருகில் விழுந்து கிடந்த எலியாசுடைய போர்வையை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து யோர்தானின் கரை மேல் நின்றார்.
14 எலியாசு தமக்கு விட்டுச் சென்றிருந்த போர்வையைக் கொண்டு நீரை அடிக்க, நீர் இரண்டாய்ப் பிரியவில்லை. அப்போது எலிசேயு, "எலியாசின் கடவுள் இப்போது எங்கு இருக்கிறார்?" என்று சொன்னார். மீண்டும் அவர் நீரை அடிக்க நீர் இரண்டாய்ப் பிரிந்தது. எலிசேயுவும் நதியைக் கடந்து சென்றார்.
15 எரிக்கோவில் நின்று கொண்ருந்த இறைவாக்கினரின் பிள்ளைகள் நிகழ்ந்ததைக் கண்ணுற்ற போது, "எலியாசின் ஆவி எலிசேயு மேல் இறங்கிற்று" என்றனர். அன்றியும், அவர்கள் ஓடிவந்து அவருக்கு முன்பாகத் தரையில் நெடுங்கிடையாய் விழுந்து பணிந்து வணங்கினர். பின்னும் அவரைப் பார்த்து,
16 இதோ உம் குருவைத் தேடிச் செல்ல வல்ல ஐம்பது பேர் உம் அடியார்களுக்குள் இருக்கின்றனர். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் தூக்கி மலைமேலாவது பள்ளத்தாக்கிலாவது போட்டிருக்கக் கூடும் என்றனர். அதற்கு அவர், "அவர்களை அனுப்ப வேண்டாம்" என்றார்.
17 ஆனால், எலிசேயு அவ்வாறு அனுப்பச் சம்மதிக்கும் வரை அவர்கள் அவரை வற்புறுத்திய வண்ணம் இருந்தனர். அப்போது ஐம்பது மனிதரை அனுப்பினார்கள். இவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் காணவில்லை.
18 எனவே, எரிக்கோ நகரில் தங்கியிருந்த எலிசேயுவிடம் அவர்கள் திரும்பி வந்தனர். அவர்களைக் கண்ட அவர், "அனுப்பவேண்டாம் என்று நான் உங்களுக்கு ஏற்கெனவே சொல்லவில்லையா?" என்றார்.
19 அந்நகர மக்கள் எலிசேயுவைப் பார்த்து, "ஐயனே, உமக்குத் தெரிந்திருப்பது போல் இந்நகர் வாழ்வதற்கு நல்ல வசதியாகத் தான் இருக்கிறது. ஆயினும் தண்ணீர் மிக மோசமானதாகவும், நிலம் பலன் தராததுமாக இருக்கின்றனவே!" என்றனர்.
20 அதற்கு அவர், "ஒரு புதுப் பாத்திரத்தைக் கொண்டு வந்து, அதில் கொஞ்சம் உப்பைப் போட்டு வையுங்கள்" என்றார்.
21 அவர்கள் அதைக் கொண்டு வர, எலிசேயு நீரூற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, "இதோ, ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதாவது: 'இத்தண்ணீரை நாம் சுத்தப்படுத்தியுள்ளோம். இனி மேல் இதைப் பயன்படுத்தினால் சாவும் இராது; நிலமும் பலன் தரும்" என்றார்.
22 அது முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசேயு சொன்ன வாக்கின்படியே சுத்தமாய் இருக்கிறது.
23 அங்கிருந்து எலிசேயு பேத்தலுக்குப் போனார். அவர் நடந்து போகும் வழியில் சிறுப்பிள்ளைகள் நகரினின்று வந்து, "மொட்டைத் தலையா! நட; மொட்டைத் தலையா! நட" என ஏளனம் செய்தனர்.
24 எலிசேயு அவர்களைத் திரும்பிப் பார்த்து, ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். அந்நொடியே காட்டிலிருந்து இரு கரடிகள் வெளிப்போந்து அப்பிள்ளைகளின் மேல் பாய்ந்து அவர்களில் நாற்பத்திரண்டு பேரைக் கடித்துக் கொன்றன.
25 பின்பு எலிசேயு கார்மேல் மலைக்குச் சென்றார். அங்கிருந்து சமாரியா திரும்பினார்.
அதிகாரம் 03
1 யூதாவின் அரசன் யோசபாத்தினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆக்காபின் மகன் யோராம் இஸ்ராயேலின் ஆட்சி ஏற்றுப் பன்னிரு ஆண்டுகள் சமாரியாவில் ஆண்டான்.
2 அவன் ஆண்டவர் திருமுன் தீயவனாய் நடந்து வந்த போதிலும், தன் தாய் தந்தையரைப் போல் அவ்வளவு தீயவன் அல்லன். ஏனெனில் அவன் தன் தந்தை செய்து வைத்திருந்த பாவாலின் சிலைகளை அகற்றி விட்டான்.
3 எனினும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் தீய வழியிலேயே அவனும் நிலையாய் நின்றான். அவன் அப்பாவங்களை விலக்கிவிடவில்லை.
4 நிற்க, மோவாப் அரசன் மேசா ஏராளமான கால்நடைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ராயேல் அரசனுக்கு இலட்சம் ஆட்டுக் குட்டிகளையும், இலட்சம் மயிர் கத்தரிக்காத செம்மறிக் கடாக்களையும் செலுத்தி வந்தான்.
5 ஆனால் ஆக்காப் இறந்தபின் அவன் இஸ்ராயேல் அரசனோடு செய்திருந்த உடன்படிக்கையை மீறினான்.
6 ஆகையால் அன்று அரசன் யோராம் சமாரியாவினின்று புறப்பட்டு இஸ்ராயேல் வீரர் அனைவரையும் அணிவகுத்தான்.
7 யூதாவின் அரசன் யோசபாத்திடம், "மோவாபின் அரசன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, அவனுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வாரும்" எனத் தூது அனுப்பினான். யோசபாத் மறுமொழியாக, "உம்மோடு வருகிறேன். எனக்குச் சொந்தமானவன் உமக்கும் சொந்தமானவனே. என் குடிகள் உமக்கும் குடிகளே. எனக்குரிய குதிரைகள் உமக்கும் உரியனவே" என்று சொன்னான்.
8 மேலும், "எவ்வழியே நாம் செல்லலாம்?" எனக்கேட்டான். அதற்கு யோராம், "இதுமேயாவின் பாலைவனம் வழியாகப் போவோம்" எனப் பதில் உரைத்தான்.
9 ஆதலால், இஸ்ராயேல் அரசனும் யூதாவின் அரசனும் ஏதோமின் அரசனும் புறப்பட்டு ஏழுநாள் சுற்றித்திரிந்தனர். படை வீரர்களுக்கும், அவர்களைப் பின்தொடர்ந்த விலங்குகளுக்கும் தண்ணீர் இல்லாமல் போயிற்று.
10 அப்போது இஸ்ராயேலின் அரசன், "அந்தோ! அரசர் நம் மூவரையும் ஆண்டவர் இங்கே ஒன்றாகக் கூட்டி வந்தது, மோவாபியர் கையில் நம்மை ஒப்புவிக்கவே!" என்றான்.
11 அதற்கு யோசபாத், "ஆண்டவரை மன்றாடும்படி ஆண்டவரின் இறைவாக்கினர் இங்கு இல்லையா?" என்று கேட்டான். இஸ்ராயேல் அரசனின் ஊழியர்களில் ஒருவன், "எலியாசின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றிவந்த சாபாத்தின் மகன் எலிசேயு இங்கு இருக்கிறார்" என்றான்.
12 யோசபாத், "ஆண்டவரின் வாக்கு அவர்பால் இருக்கிறது" என்றான். அப்போது இஸ்ராயேல் அரசனும் யூதா அரசனான யோசபாத்தும் ஏதோம் அரசனும் எலிசேயுவிடம் சென்றனர்.
13 எலியேசு இஸ்ராயேல் அரசனைப் பார்த்து, "உமக்கும் எனக்கும் என்ன? உம் தாய் தந்தையரின் இறைவாக்கினரிடம் செல்லும்" என்றார். அப்போது இஸ்ராயேலின் அரசன், "மோவாபியர் கையிலே இம்மூன்று அரசர்களையும் ஒப்புவிக்க ஆண்டவர் அவர்களை இங்கே ஒன்றாகக் கூட்டி வந்ததின் காரணம் என்ன?" என வினவினான்.
14 எலிசேயு அவனைப் பார்த்து, "நான் வழிபட்டுவரும் சேனைகளின் ஆண்டவர் மேல் ஆணை! நான் யூதாவின் அரசன் யோசபாத்துக்கு மரியாதை கொடுத்ததினால் தான் உமக்குச் செவி கொடுத்தேன்; உம்மை ஏறெடுத்தும் பார்த்தேன்.
15 இப்போது யாழிசைஞன் ஒருவனை அழைத்து வாருங்கள்" என்றார். யாழிசைஞன் ஒருவன் வந்து யாழை மீட்டவே ஆண்டவருடைய வல்லமை எலிசேயுவின் மேல் வந்தது.
16 அப்போது அவர் அவர்களை நோக்கி, "வறண்டு போன இந்த வாய்க்கால் நெடுகப் பல பள்ளங்களை வெட்டுங்கள்.
17 ஏனெனில், காற்றையாவது மழையையாவது காணமாட்டீர்கள்; என்றாலும், இதில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்நீரை நீங்களும் உங்கள் வீட்டாரும் விலங்குகளும் பருகுங்கள்' என்று ஆண்டவர் சொல்கிறார்.
18 ஆண்டவருக்கு இது அற்பக் காரியமே. அன்றியும் அவர் மோவாபியரையும் உங்களுக்குக் கையளிப்பார்.
19 அப்போது நீங்கள் அரண் சூழ்ந்த எல்லா நகர்களையும், சிறந்த நகர்கள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்; கனிதரும் மரங்களையெல்லாம் அடியோடு வெட்டிவிடுங்கள்; நீரூற்றுக்களை எல்லாம் அடைத்துவிடுங்கள். செழிப்பான நிலங்களை எல்லாம் கற்களால் நிரப்பிவிடுங்கள்" என்றார்.
20 மறுநாள் காலையில் பலி செலுத்தப்படும் நேரத்தில், இதோ தண்ணீர் ஏதோம் வழியாகப் பாய்ந்துவர நாடெங்கும் தண்ணீர் மயமாய் இருந்தது.
21 மோவாப் நாட்டினர் எல்லாரும் தங்களோடு போர்புரிய அரசர்கள் வருகிறார்கள் எனக் கேள்வியுற்று, அரைக்கச்சையில் வாளைக் கட்டியிருந்தவர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு தங்கள் எல்லைகளைக் காக்க வந்து சேர்ந்தார்கள்.
22 ஒரு நாள் மோவாபியர் அதிகாலையில் எழுந்தபோது தண்ணீரின்மேல் சூரியனின் கதிர்கள் விழ, அது இரத்தம் போல் சிவப்பாயிருக்கக் கண்டனர்.
23 இது வாளின் இரத்தம் அரசர்கள் தமக்குள்ளே சமர் செய்து ஒருவரை ஒருவர் கொன்று போட்டனர் போலும்! மோவாபியரே, இப்போது கொள்ளையிடப் புறப்படுவீர்" என்று அவர்கள் சொல்லிக் கொண்டனர்.
24 எனவே அவர்கள் இஸ்ராயேலின் பாசறைக்குள் நுழைந்தனர். இஸ்ராயேலரோ மோவாபியர்மேல் பாய்ந்து அவர்களை முறியடிக்க, அவர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஆகையால் வெற்றி கொண்ட இஸ்ராயேலர் மோவாபியரைப் பின் தொடர்ந்து அவர்களைக் கொன்று குவித்தனர்.
25 பிறகு நகர்களை அழித்தனர். கற்களை வீசி செழிப்பான நிலங்களை எல்லாம் நிரப்பினர். எல்லா நீரூற்றுக்களையும் அடைத்தனர். செங்கற்சுவர் மட்டும் எஞ்சி நிற்க, கனிதரும் மரங்கள் அனைத்தையும் வெட்டி எறிந்தனர். அன்றியும், கவணில் கைதேர்ந்தோர் நகரை வளைத்துத்தாக்க, சுவர் பெரும்பாலும் இடிபட்டது.
26 எதிரிகள் வாகை சூடினர் என்று மோவாப் அரசன் கண்டபோது வாள் ஏந்தும் எழுநூறு வீரரைச் சேர்த்துக் கொண்டு ஏதோம் அரசனின் படையைத் தாக்க முற்பட்டான்; ஆனால் முடியவில்லை.
27 அப்போது தனக்குப்பின் அரசாள வேண்டிய தன் தலைமகனைப் பிடித்து மதிலின் மேல் அவனைத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்தான். இதனால் இஸ்ராயேலில் கடுஞ்சினம் எழ, அவர்கள் விரைவில் அவனைவிட்டு அகன்று தம் சொந்த நாடு திரும்பினார்.
அதிகாரம் 04
1 அப்போது இறைவாக்கினர் ஒருவரின் மனைவி எலிசேயுவிடம் வந்து கதறி அழுது, "உம் அடியானாகிய என் கணவர் இறந்து விட்டார்; அவர் தெய்வ பயம் உள்ளவர் என உமக்குத் தெரியும். இப்போதோ அவருடைய கடன்காரன் என் இரண்டு மக்களையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக்கொள்ள வந்திருக்கிறான்" என்றாள்.
2 எலிசேயு அவளைப் பார்த்து, "நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய், சொல்" என்றார். அதற்கு அவள், "உம் அடியாளாகிய எனக்கு உடலில் பூசிக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் இருக்கிறது. அதைத் தவிர வேறு ஒன்றும் வீட்டில் இல்லை" என்றாள்.
3 எலிசேயு அவளை நோக்கி, "நீ உன் சுற்றத்தார் எல்லாரிடமும் போய்ப் பல காலிப் பாத்திரங்களைக் கடன் வாங்கி வா.
4 உன் வீட்டில் நுழைந்து, உள்ளே நீயும் உன் பிள்ளைகளும் இருக்கக் கதவைப் பூட்டிக்கொண்டு, முன் கூறிய எல்லாப் பாத்திரங்களிலும் அந்த எண்ணெயை ஊற்று; அவை நிறைந்த பின்னர் அவற்றை நீ எடுத்துக்கொள்" என்றார்.
5 அவள் அவ்விதமே போய் தானும் தன் புதல்வரும் உள்ளிருக்கக் கதவைப் பூட்டிக்கொண்டாள். தன் பிள்ளைகள் பாத்திரங்களை எடுத்துக் கொடுக்க, அவள் அவற்றில் எண்ணெயை ஊற்றினாள்.
6 எல்லாப் பாத்திரங்களும் நிறைந்த பின் அவள் தன் மகனைப் பார்த்து, "இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா" என்றாள். அதற்கு அவன், "வேறு இல்லை" என்றான். எண்ணெயும் நின்று போனது.
7 அவள் கடவுளின் மனிதரிடம் வந்து அதை அறிவித்தாள். அதற்கு அவர், "நீ போய் எண்ணெயை விற்று உன் கடன்காரனுக்குக் கொடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் பிழைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
8 ஒருநாள் எலிசேயு சூனாம் நகர் வழியே செல்ல, அவ்விடத்துச் சீமாட்டி ஒருத்தி சாப்பிடும் படி அவரை வற்புறுத்தினாள். அதன் பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் உணவருந்த அவள் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
9 ஒருநாள் அவள் தன் கணவனை நோக்கி, "நம்மிடம் அடிக்கடி வருகிறவர் ஆண்டவரின் மனிதரும் புனிதருமாய் இருக்கிறார் என்று எனக்கு நன்றாய் விளங்குகிறது.
10 ஆதலால், அவர் நம்மிடம் வரும் போதெல்லாம் அவர் நம்மோடு தங்கும்படி நாம் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் ஒரு படுக்கை, மேசை, நாற்காலி, விளக்குத்தண்டு முதலியன தயார் படுத்தி வைப்போம்" என்றாள்.
11 ஒருநாள் எலிசேயு அவ்வறையில் தங்கி அங்கு ஓய்வெடுத்தார்.
12 பின்பு அவர் தம் ஊழியன் ஜியேசியை நோக்கி, "அந்தச் சூனாமித்தாளைக் கூப்பிடு" என்றார். ஜியேசி அவளை அழைக்க, அவள் இறைவாக்கினர் முன் வந்து நின்றாள்.
13 அப்போது எலிசேயு தன் ஊழியனைப் பார்த்து, "நீ அவளோடு பேசி, 'அம்மணி, நீர் எல்லாவற்றிலும் வெகு சிரத்தையோடு எங்களுக்குப் பணிவிடை புரிந்து வந்துள்ளீர்; ஆதலின் நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? அரசரிடத்திலாவது, படைத் தலைவரிடமாவது பரிந்து பேசும்படி ஏதும் உளதா?' என்று கேள்" என்றார். அதற்கு அவள், "என்னுடைய இனத்தாரின் நடுவே நான் அமைதியாய் வாழ்ந்து வருகிறேன்" என்றாள்.
14 மேலும், அவர் ஜியேசியைப் பார்த்து, "நான் அவளுக்கு என்ன செய்யும்படி அவள் விரும்புகிறாள் என்று கேள்" என்றார். அதற்கு ஜியேசி, "கேட்கவும் வேண்டுமோ? அவளுக்குப் பிள்ளையே கிடையாது; அவள் கணவருக்கும் வயதாகி விட்டது" என்றான்.
15 அப்போது எலியேசு அவளைத் தம்மிடம் அழைத்து வர ஜியேசிக்குக் கட்டளையிட்டார். அவளும் வந்து வாயில் முன் நின்றாள்.
16 அப்போது எலியேசு அவளைப் பார்த்து, "நீ உயிரோடு வாழ்ந்து வருவாயாகில், இதே நேரத்தில் இதே வினாடியில் நீ ஒரு மகனைக் கருத்தரிப்பாய்" என்று மொழிந்தார். அதற்கு அவள் "ஐயனே, கடவுளின் மனிதரே! உம்மை மன்றாடுகிறேன். உம் அடியாளிடம் பொய் சொல்ல வேண்டாம்" என்றாள்.
17 அப்பெண்மணி எலிசேயு குறித்த காலத்தில், குறித்த நேரத்தில் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள்.
18 குழந்தை வளர்ந்தான். ஒருநாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றிருந்தான்.
19 அப்போது, தன் தந்தையைப் பார்த்து "எனக்குத் தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது" என்று சொன்னான். அவனோ தன் ஊழியன் ஒருவனைப் பார்த்து, "நீ இவனைத் தூக்கி கொண்டு போய் இவன் தாயிடம் விடு" என்றான்.
20 அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அவன் தாயிடம் விட்டான். அவள் அவனை நண்பகல் வரை மடிமேல் வளர்த்தி வைத்திருந்தாள். அதன் பின் அவன் இறந்தான்.
21 அவளோ கடவுளுடைய மனிதரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினாள்; பின்னர் கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள்.
22 தன் கணவனை அழைத்து, "கடவுளின் மனிதரிடம் நான் போய்வர வேண்டும்; எனவே, என்னோடு உம் வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்" என்று கூறினாள்.
23 அதற்கு அவன், "நீ அவரிடம் போகவேண்டிய காரணம் என்ன? இன்று மாதத்தின் முதல் நாளும் அன்று, ஓய்வு நாளும் அன்று" என்றான். அதற்கு, "நான் போக வேண்டியதிருக்கிறது" என்று பதில் உரைத்தாள்.
24 அவள், கழுதைக்குச் சேணமிட்ட பின் தன் ஊழியனை நோக்கி, "வழியில் எனக்குத் தாமதம் நேரிடாதபடி கழுதையை வேகமாய் ஓட்டிச் செல். மேலும் நான் உனக்குச் சொல்வதை எல்லாம் நீ செய்ய வேண்டும்" என்று ஆணையிட்டாள்.
25 இங்ஙனம் புறப்பட்டு கார்மேல் மலையின் கண் தங்கியிருந்த கடவுளின் மனிதரிடம் வந்தாள். அவள் தன்னை நோக்கி வருவதைக் கண்ணுற்ற அவர், தம் ஊழியன் ஜியேசியை நோக்கி, "இதோ, சூனாமித்தாள் வருகிறாள்.
26 நீ அவளை எதிர்கொண்டுபோய், அவளைப் பார்த்து: 'நீரும் உம் கணவரும் உம் மகனும் நலமாய் இருக்கிறீர்களா?' என்று கேள்" என்றார். அவள் மறுமொழியாக, "நலமுடன் தான் இருக்கிறோம்" என்றாள்.
27 பிறகு அவள் மலையின் மேல் இருந்த கடவுளின் மனிதரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டாள். அவளை அப்புறப்படுத்த ஜியேசி அருகில் வந்த போது, கடவுளின் மனிதர் அவனை நோக்கி, "அவளை விட்டு விடு. ஏனெனில் அவளது உள்ளம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. ஆண்டவர் அதன் காரணத்தை எனக்கு அறிவிக்காமல் மறைத்து வைத்துள்ளார்" என்றார்.
28 அப்போது அவள் அவரை நோக்கி, "ஐயனே, உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? என்னை ஏமாற்ற வேண்டாம் என்று நான் உமக்கு முன்பே சொல்லவில்லையா?" என்றாள்.
29 எலிசேயு ஜியேசியைப் பார்த்து, "நீ உன் கச்சையை இடுப்பிலே கட்டி, என் ஊன்று கோலைக் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டாலும் வணக்கம் செய்யாதே; உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செலுத்தாதே. வீட்டுக்குள்ளே போய் என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை" என்றார்.
30 ஆனால் சிறுவனின் தாய் எலிசேயுவை நோக்கி, "ஆண்டவர் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விடவே மாட்டேன்" என்றாள். ஆதலால் எலிசேயு எழுந்து அவளைப் பின்தொடர்ந்தார்.
31 ஜியேசியோ இவர்களுக்கு முன்பே நடந்து போய் ஊன்று கோலைச் சிறுவனின் முகத்தின் மேல் வைத்திருந்தான். ஆயினும் சிறுவனுக்கு உணர்வுமில்லை, பேச்சுமில்லை என்று கண்டு, திரும்பித் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, "சிறுவன் உயிர் பெறவில்லை" என அறிவித்தான்.
32 எலிசேயு வீட்டினுள் நுழைந்து, இறந்த சிறுவன் தம் படுக்கையின் மேல் கிடக்கக் கண்டார்.
33 அப்பொழுது எலிசேயு சிறுவன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டு, ஆண்டவரை நோக்கி வேண்டினார்.
34 பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும், கண்ணோடு கண்ணும், கைகளோடு கைகளும் வைத்துச் சிறுவன் மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறினது.
35 பின்பு படுக்கையை விட்டு இறங்கி அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின் மேல் ஏறிச் சிறுவன் மீது படுத்துக் கொண்டார். அப்போது குழந்தை ஏழுமுறை கொட்டாவி விட்டுக் கண் திறந்தது.
36 எனவே, எலிசேயு ஜியேசியை அழைத்து, "அந்தச் சூனாமித்தாளை அழைத்துவா" என்றார். அவள் அறையில் நுழைந்த போது எலிசேயு அவளை நோக்கி, "உன் மகனை எடுத்துக்கொண்டு போ" என்றார்.
37 அவள் அவரை அணுகி, அவரது காலடியில் வீழ்ந்து, தரை மட்டும் பணிந்து அவரை வணங்கினாள். பின்பு தன் மகனைக் கூட்டிக்கொண்டு வெளியே போனாள்.
38 எலிசேயு கல்கலாவுக்குத் திரும்பினார். நாட்டில் பஞ்சம் நிலவி வந்தது. இறைவாக்கினரின் பிள்ளைகள் அவரோடு வாழ்ந்து வந்தனர். எலிசேயு தம் ஊழியர்களில் ஒருவனை நோக்கி, "நீ ஒரு பெரிய பானையை எடுத்து இறைவாக்கினரின் பிள்ளைகளுக்குச் சாப்பாடு தயார் செய்" என்றார்.
39 அப்போது அவர்களில் ஒருவன், காட்டுக் கீரை பறிப்பதற்காக வயல் வெளிக்குச் சென்றான். அங்கே காட்டுத் திராட்சை போன்ற ஒருவிதக் கொடியைக் கண்டு, அதினின்று தன் போர்வை நிறையப் பேய்க் குமட்டிக் காய்களைப் பறித்து வந்தான். பின்னர் அவற்றைத் துண்டு துண்டாய் நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்தான். ஏனெனில், அவை என்ன என்று அவனுக்குத் தெரியாது.
40 பின்பு தம் தோழர்களுக்கு அதைச் சாப்பிடப் பரிமாறினர். அவர்கள் அதைச் சுவை பார்த்ததும், "கடவுளின் மனிதரே, இப்பானையில் சாகடிக்கக் கூடிய பொருள் ஏதோ இருக்கிறது" எனக் கூக்குரலிட்டனர். அவர்களால் அதை உண்ண முடியவில்லை.
41 எலிசேயு அவர்களைப் பார்த்து, "கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள்" என்றார். அவர்கள் கொண்டு வரவே, அவர் அம் மாவைப் பானையில் போட்டு, "அவர்கள் உண்ணும்படி இதைப் பரிமாறுங்கள்" என்று சொன்னார். இப்பொழுது அது கசக்கவே இல்லை.
42 பாவால்சலிசா என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் புதுத் தானியத்தில் செய்யப்பட்ட சில அப்பங்களையும், இருபது வாற்கோதுமை உரொட்டிகளையும், ஒரு சாக்குப் புதுத் தானியத்தையும் கடவுளின் மனிதரிடம் கொண்டுவந்தான். எலிசேயு, "இவ்வப்பங்களை மக்களுக்குச் சாப்பிடக்கொடு" என்றார்.
43 அவன் மறுமொழியாக, "நூறு பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றான். அவர் மறுபடியும் ஊழியனை நோக்கி, "மக்களுக்கு இவற்றைச் சாப்பிடக் கொடு. ஏனெனில், 'இவர்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் திருவுளம் பற்றியுள்ளார்" எனக் கூறினார்.
44 எனவே, அவன் அவற்றை அவர்களுக்குப் பரிமாறினான். அவர்களும் உண்டனர். ஆண்டவர் சொல்லியிருந்தபடி மீதியும் இருந்தது.
அதிகாரம் 05
1 சீரியா அரசனின் படைத்தலைவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நாமான் என்று பெயர். அரசன் அவனைப் பெரிய மனிதனாக மதித்துப் போற்றி வந்தான். ஏனெனில் அவனைக் கொண்டு ஆண்டவர் சீரியாவைக் காப்பாற்றியிருந்தார். அவன் ஆற்றல் படைத்தவனும் செல்வனுமாய் இருந்தும், அவனுக்குத் தொழுநோய் கண்டிருந்தது.
2 அப்படியிருக்க, சில கள்ளர்கள் சீரியாவிலிருந்து இஸ்ராயேல் நாட்டில் நுழைந்து அங்கிருந்து ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். இவளோ நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
3 அச்சிறுமி தன் தலைவியை நோக்கி, "என் தலைவர் சமாரியாவில் இருக்கிற இறைவாக்கினரைப் பார்க்கச் சென்றிருந்தால் அவர் இவரது தொழுநோயை நிச்சயமாய்க் குணமாக்கியிருப்பார்" என்றாள்.
4 அதைக் கேட்ட நாமான் அரசனிடம் சென்று, இஸ்ராயேல் நாட்டிலிருந்து வந்திருந்த அச்சிறுமி கூறின அனைத்தையும் அவனுக்குத் தெரிவித்தான்.
5 சீரியாவின் அரசன் அதற்கு மறுமொழியாக, "நீர் அவ்விடம் போகலாம். நான் இஸ்ராயேல் அரசனுக்குக் கடிதம் அனுப்புவேன்" என்றான். நாமான் தன்னோடு பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்து ஆடையணிகளையும் எடுத்துக் கொண்டு பயணமானான்.
6 கடிதத்தை இஸ்ராயேல் அரசனிடம் கொடுத்தான். அதில், "நீர் இக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட உடன் என் ஊழியன் நாமானுக்குக் கண்டுள்ள தொழுநோயினின்று நீர் அவனைக் குணமாக்கும் பொருட்டு அவனை உம்மிடம் அனுப்பியுள்ளேன் என்று அறிந்துகொள்ளும்" என எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ராயேல் அரசன் கடிதத்தைப் படித்த உடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "ஒரு மனிதனைச் சீரியா அரசர் என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்லுகிறாரே; நானென்ன உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் கடவுளா? என்னோடு போரிட அவர் எவ்வாறு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்" என்று கூறினான்.
8 கடவுளின் மனிதர் எலிசேயு இஸ்ராயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியை அறிந்து, அவனிடம் ஆள் அனுப்பி, "நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அம்மனிதன் என்னிடம் வரட்டும். இஸ்ராயேலில் இறைவாக்கினர் உண்டு என அவன் அறியட்டும்" என்று சொல்லச் சொன்னார்.
9 ஆகையால் நாமான் தன் குதிரைகளோடும் தேர்களோடும் எலிசேயுவுடைய வீட்டு வாயிலின் முன் வந்து நின்றான்.
10 எலிசேயு அவனுக்கு ஆள் அனுப்பி, "நீ போய் யோர்தான் நதியில் ஏழு முறை குளித்தால் உன் உடல் நலம் பெறும்; நீயும் தூய்மையாவாய்" என்று சொல்லச் சொன்னார்.
11 அதற்கு நாமான் கோபமுற்று, "இறைவாக்கினர் என் அருகில் வந்து தம் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டி, தொழுநோய் கண்ட இடங்களைக் கையால் தொட்டு எனக்குக் குணம் அளிப்பார் என்று நான் எண்ணியிருந்தேன்.
12 நான் குளித்து உடலைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு, இஸ்ராயேலில் உள்ள ஆறுகள் எல்லாவற்றையும் விட நல்ல தண்ணீரை உடைய தமாஸ்கு நகர நதிகளான ஆபானா, பார்பார் என்ற நதிகள் எங்களுக்கு இல்லையா?" என்று சொல்லிச் சினத்தோடு தான் வந்த வழியே திரும்பிச் சென்றான்.
13 அந்நேரத்தில் அவனுடைய ஊழியர்கள் அவனை அணுகி, "தலைவ, இறைவாக்கினர் இதைவிடப் பெரிய காரியத்தைச் செய்யக் கட்டளையிட்டிருந்தாலும் நீர் அதைக் கட்டாயம் செய்திருப்பீர். அவர், 'குளிக்கப் போம், சுத்தமாவீர்' என்ற போது தாங்கள் எவ்வளவு மரியாதையாய்க் கேட்டுக்கொள்ள வேண்டியவராய் இருக்கிறீர்?" என்றனர்.
14 எனவே, நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் மனிதர் தனக்குக் கட்டளையிட்டிருந்த படி யோர்தான் நதியில் ஏழு முறை குளித்தான். இப்படிச் செய்ததால் அவனது உடல் நலம் பெற்று ஒரு சிறு குழந்தையின் உடலைப்போல் மாறினது; அவனும் முழுதும் தூய்மையானான்.
15 பின்பு அவன் தன் பரிவாரங்களோடு கடவுளின் மனிதரிடம் திரும்பி வந்தான். அவர் முன் நின்று, "இஸ்ராயேலில் கடவுளைத் தவிர வேறு கடவுள் அனைத்துலகிலும் இல்லை என இப்போது நிச்சயமாக அறிந்து கொண்டேன். ஆகையால், அடியேனுடைய காணிக்கைகளைத் தாங்கள் ஏற்க வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்றான்.
16 அதற்கு அவர், "நான் வழிபட்டு வரும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உன்னுடைய காணிக்கைகளில் எதையும் பெற்றுக்கொள்ளேன்" என மறுமொழி கூறினார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் எலிசேயு அதற்கு உடன்படவில்லை.
17 அப்போது நாமான் அவரைப் பார்த்து, "உமது விருப்பப்படியே ஆகட்டும். ஆனால் இரு கோவேறு கழுதைகள் சுமக்கக் கூடிய அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை வேண்டுகிறேன். இனிமேல் உம் அடியான் அன்னிய தேவர்களுக்குத் தகனப்பலிகளையோ வேறு பலிகளையோ ஒருபோதும் செலுத்தப் போவதில்லை. நான் ஆண்டவருக்கு மட்டுமே பலியிடுவேன்.
18 தாங்கள் உம் அடியானுக்காக ஆண்டவரை மன்றாடிக் கேட்க வேண்டிய ஒரு காரியம் மட்டும் உண்டு. அதாவது, என் தலைவன் வழிபடுவதற்காக ரெம்மோன் கோயிலுக்குச் சென்று, என் கையின் மேல் சாய்ந்து கொண்டு அதனைக் கும்பிடுகையில் நானும் அதே இடத்தில் தலை குனிந்தால், ஆண்டவர் என்னை மன்னிக்குமாறு வேண்டுவீர்" என்றான்.
19 அதற்கு எலிசேயு, "நீ அமைதியுடன் சென்று வா" என்று கூற, நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, குறித்த நல்ல காலத்தில் போய்விட்டான்.
20 கடவுளின் மனிதருடைய ஊழியன் ஜியேசி, "என் தலைவர் சீரியனான நாமானை இலவசமாய்க் குணமாக்கி, அவன் கொண்டு வந்த பரிசுகளில் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆண்டவர் மேல் ஆணை! நான் ஓடிப்போய் அவனிடம் ஏதாகிலும் பெற்றுக் கொள்வேன்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
21 இப்படி ஜியேசி நாமான் பின்னே ஓட, நாமான் அவன் ஓடி வருவதைக் கண்டு தன் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், "என்ன, எல்லாம் சரிதானா?" என்று வினவினான்.
22 ஜியேசி, "ஆம். என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, 'இறைவாக்கினரின் மக்களில் இருவர் இப்போதுதான் எபிராயிம் மலையிலிருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியும், இரண்டு உடைகளும் கொடுத்து அனுப்பும்' என்று சொல்லச் சொன்னார்" என்றான்.
23 அதற்கு நாமான், "நீ இரண்டு தாலந்து கொண்டு போவது நலம்" என்று கூறி, அவற்றை ஜியேசி பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினான். பிறகு அவற்றையும் இரண்டு உடைகளையும் இரண்டு சாக்குகளில் போட்டுக் கட்டி, அவற்றைத் தன் ஊழியர்களில் இருவர் மேல் சுமத்தினான். அவர்களும் அவற்றைச் சுமந்து கொண்டு ஜியேசிக்கு முன் சென்றனர்.
24 மாலை வேளையில் வீடுவந்த போது ஜியேசி அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் பத்திரமாக வைத்தான். பின்னர் அம்மனிதர் திரும்பிப் போக விடை கொடுத்து அனுப்பினான். அவர்களும் பிரிந்து சென்றனர்.
25 ஜியேசி தன் தலைவரிடம் வந்து அவர் முன் நின்றான். எலிசேயு அவனைப் பார்த்து, "ஜியேசி, எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். அவன், "உம்முடைய அடியான் ஓரிடத்திற்கும் செல்லவில்லை" என மறுமொழி சொன்னான்.
26 அதற்கு எலிசேயு, "அந்த மனிதன் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்தது எனக்குத் தெரியாதா? ஒலிவத் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும், ஆடு மாடுகளையும், பணிவிடைக்காரர் பணிவிடைக்காரிகளையும் வாங்கிக் கொள்ளும்படி பணத்தைப் பெற்றுக் கொண்டதோடு உடைகளையும் நீ பெற்றுக் கொண்டாய், இல்லையா?
27 அதனால், நாமானுடைய தொழுநோய் உன்னையும் உன் சந்ததியையும் பீடிக்கும்" என்றார். ஜியேசியோ தன் தலைவரை விட்டுப் பிரியு முன்னே வெண்பனி போன்று தொழுநோய் அவன் உடல் எங்கும் கண்டது.
அதிகாரம் 06
1 ஒருநாள் இறைவாக்கினரின் பிள்ளைகள் எலிசேயுவை நோக்கி, "அடியோர் உம்மோடு வாழ்ந்து வரும் இந்த இடம் மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது.
2 எனவே, நாம் யோர்தான் நதிக்குச் சென்று காட்டினின்று மரங்களை வெட்டிக் கொணர்ந்து வீடுகட்டி அவ்விடத்தில் குடியேறுவோம்" என்றனர். அதற்கு அவர், "போங்கள்" என விடை தந்தார்.
3 அவர்களில் ஒருவன், "நீரும் எங்களோடு வாரும்" என அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார்.
4 எனவே, அவரும் அவர்களோடு சென்றார். அவர்கள் யோர்தானுக்கு வந்து அங்கே மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.
5 அவ்வாறு அவர்கள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது, ஒருவனுடைய கோடரி பிடி கழன்று நீரில் விழுந்தது. உடனே, அவன் அப்போது எலிசேயுவை நோக்கி, "ஐயோ, என் குருவே! ஐயையோ, இதனை இரவலாயன்றோ வாங்கி வந்தேன்" எனக் கூக்குரலிட்டான்.
6 அப்போது கடவுளின் மனிதர், "அது எங்கு வீழ்ந்தது?" என்று அவனைக் கேட்டார். அவன், கோடரி விழுந்த இடத்தை அவருக்குக் காட்டினான். உடனே எலிசேயு ஒரு சிறு கட்டையை வெட்டி ஆற்றில் எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கிற்று.
7 பிறகு அவர், "எடுத்துக்கொள்" என்று அவனிடம் கூற, அவனும் கையை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
8 நிற்க, சீரியாவின் அரசன் இஸ்ராயேல் மேல் போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, "இன்னின்ன இடத்தில் பதுங்கியிருப்போம்" என்று சொன்னான்.
9 ஆகையால் கடவுளின் மனிதர் இஸ்ராயேல் அரசனிடம் ஆள் அனுப்பி, "அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், அங்கே சீரியர் பதுங்கியிருக்கின்றனர்" என்று சொல்லச் சொன்னார்.
10 இஸ்ராயேல் அரசன் கடவுளின் மனிதர் குறித்திருந்த இடத்திற்குப் படையை அனுப்பி, அவ்விடத்தைக் தானே முந்திப் பிடித்துக் கொண்டான். இவ்விதம் பல முறை அவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.
11 இதன் பொருட்டுச் சீரியாவின் அரசன் மனம் கலங்கித் தன் ஊழியர்களை வரச் சொல்லி, "இஸ்ராயேல் அரசனுக்கு என்னைக் காட்டிக் கொடுத்தவன் யார் என்று நீங்கள் ஏன் இன்னும் என்னிடம் சொல்லாது இருக்கிறீர்கள்?" என அவர்களைக் கேட்டான்.
12 அதற்கு அலுவலரில் ஒருவன் அவனை நோக்கி, "என் அரசரான தலைவ, அப்படி ஒருவனும் இங்கு இல்லை. ஆனால் இஸ்ராயேலில் இருக்கும் எலிசேயு என்ற இறைவாக்கினர் தாங்கள் ஆலோசனைக் கூடத்தில் சொல்லும் அனைத்தையும் இஸ்ராயேல் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகின்றார்" என்றான்.
13 அரசன் ஊழியர்களை நோக்கி, "நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். பின், நான் ஆட்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்" என்றான். அவர்கள் வந்து, "அரசே, இப்பொழுது எலிசேயு தோத்தானில் இருக்கிறார்" என்று அரசனிடம் தெரிவித்தனர்.
14 ஆதலால் அரசன் அங்குக் குதிரைகளையும் தேர்களையும் வலிமை வாய்ந்த சேவகர்களையும் அனுப்பினான். இவர்கள் இரவே வந்து நகரை முற்றுகையிட்டனர்.
15 கடவுளுடைய மனிதரின் ஊழியன் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும் குதிரைகளும் தேர்களும் நகரை முற்றுகையிட்டிருக்கக் கண்டு, தன் தலைவரிடம் ஒடிவந்து, "ஐயையோ! என்ன செய்வோம்?" எனப் பதறினான்.
16 அதற்கு எலிசேயு, "நீ அஞ்ச வேண்டாம்; அவர்களை விட நம்மிடம் அதிகம் பேர் இருக்கிறார்கள்" என மறுமொழி சொன்னார்.
17 பின்பு எலிசேயு, "ஆண்டவரே, அவன் பார்வை பெறும்படி அவன் கண்களைத் திறந்தருளும்" என்று ஆண்டவரை நோக்கி வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே அவன் கண்களைத் திறந்தார். அதோ மலை எங்கணும் தீ மயமான குதிரைகளும் தேர்களும் எலிசேயுவைச் சூழ்ந்து நிற்கக் கண்டான்.
18 எதிரிகள் அவரை அணுகி வந்தனர். அதைக் கண்டு எலிசேயு ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, இம் மக்கள் எல்லாரையும் குருடராக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசேயுவின் மன்றாட்டுக்கு இரங்கி அவர்களைக் குருடராக்கினார்.
19 அப்போது எலிசேயு அவர்களை நோக்கி, "இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனை நான் உங்களுக்குக் காட்டுவேன்" என்றார். இவ்வாறு அவர் சமாரியாவுக்கு அவர்களை நடத்திச் சென்றார்.
20 அவர்கள் நகருக்குள் நுழைந்த போது, எலிசேயு ஆண்டவரை நோக்கி, "என் ஆண்டவரே, இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே அவர்கள் சமாரியா நகரின் நடுவில் தாங்கள் இருப்பதாகக் கண்டு கொண்டனர்.
21 இவர்களைக் கண்டவுடன் இஸ்ராயேல் அரசன் எலிசேயுவை நோக்கி, "ஐயனே, இவர்களை நான் கொல்லட்டுமா?" என வினவினான்.
22 அதற்கு அவர், "அவர்களைக் கொல்ல வேண்டாம். ஏனெனில், நீர் அவர்களைக் கொல்வதற்கு வாளாலோ அம்புகளாலோ நீர் அவர்களைப் பிடிக்கவில்லை. மாறாக, அவர்கள் உண்டு குடித்துத் தங்கள் தலைவரிடம் திரும்பும்படி நீர் அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடும்" என்றார்.
23 அதைக்கேட்ட அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்து அளித்தான். அவர்களும் உண்டு களித்தனர். பின்னர் அரசன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவரிடம் திரும்பி வந்தனர். ஆனால் அன்று தொட்டு அந்தச் சீரியக் கள்வர்கள் இஸ்ராயேல் நாட்டில் காலெடுத்து வைக்கவில்லை.
24 பின்னர் சீரியா அரசன் பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையும் திரட்டி வந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
25 அப்போது சமாரியாவில் ஒரே பஞ்சம். ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக் காசுக்கு விற்கும் வரையிலும், புறாக்களின் எச்சமோ காபாசு என்ற மரக்காலிலே நான்கில் ஒரு பங்கு ஐந்து வெள்ளிக் காசுக்கு விற்கும் வரையிலும் நகர முற்றுகை நீடித்தது.
26 இஸ்ராயேலின் அரசன் நகர மதில் வழியே சென்று கொண்டிருக்கையில் மாது ஒருத்தி கூக்குரலிட்டு, "என் அரசரான தலைவா, என்னைக் காப்பாற்றும்" என்றாள்.
27 அதற்கு அவன், "ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால், நான் எங்ஙனம் உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தோ ஆலையிலிருந்தோ? சொல்" என்றான். மேலும் அவளை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? சொல்" என்றான்.
28 அதற்கு அவள், "இதோ இந்தப் பெண் என்னை நோக்கி, 'இன்று நாம் சாப்பிடும்படி உன் மகனைக் கொடு; நாளை என் மகனைச் சாப்பிடலாம்' என்றாள்.
29 நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம்; மறுநாள், 'நாம் சாப்பிடும்படி, உன் மகனைக்கொடு' என்றேன். அவளோ தன் மகனை ஒளித்து விட்டாள்" என்று சொன்னாள்.
30 அரசன் இதைக் கேட்டவுனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நகர மதில் வழியாகச் சென்றான். அவன் தன் உடலின் மேல் மயிர் ஆடை ஒன்றை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.
31 அரசன் சபதம் கூறி, "இன்றைய பொழுதுக்குள்ளே நான் சாபாத்தின் மகன் எலிசேயுவின் தலையை வெட்டாது போனால், கடவுள் எனக்கு என்ன தீமை செய்தாலும் செய்யட்டும்" என்றான்.
32 எலிசேயுவோ தம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். மூப்பரும் அவரோடு அமர்ந்திருந்தனர். எனவே, அரசன் தனக்கு முன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அவன் வருவதற்குள் எலிசேயு தம்மோடு இருந்த பெரியோர்களைப் பார்த்து, "கொலை பாதகனின் மகன் என் தலையை வெட்டும்படி ஒருவனை அனுப்பியிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமே. எனவே, எச்சரிக்கையாயிருங்கள். அவன் வரும் போது கதவை அடைத்து அவனை உள்ளே விடாதீர்கள். ஏனெனில் அவனுடைய தலைவன் அவனைப் பின் தொடர்ந்து வருகிறான். இதோ, அவனது காலடிச் சத்தமும் கேட்கிறது" என்றார்.
33 எலிசேயு இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அரசன் அவரிடம் அனுப்பியிருந்த அந்த மனிதன் எதிரே வந்தான். வந்து, "ஆண்டவர் இவ்வளவு பெரிய துன்பத்தை அனுப்பியிருக்கிறாரே! இதனினும் பெரிய துன்பத்தை அவர் எனக்கு இனி அனுப்பவும் கூடுமோ?" என்றான்.
அதிகாரம் 07
1 அப்போது எலிசேயு, "ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவர் சொல்வதாவது: நாளை இதே நேரத்தில் சமாரியா நகர் வாயிலிலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சீக்கலுக்கு விற்கப்படும். இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சீக்கலுக்கு விற்கப்படும்" என்று கூறினார்.
2 அரசனுக்குப் பக்கபலமாய் இருந்து வந்த படைத்தலைவர்களில் ஒருவன் கடவுளின் மனிதரை நோக்கி, "ஆண்டவர் வானினின்று தானியத்தைத் திரளாகப் பொழிந்தாலும் நீர் கூறுவது நடக்குமா?" எனக் கேட்டான். அதற்கு எலிசேயு "நீர் அதை உமது கண்ணாரக் காண்பீர்; ஆனால் அதில் கொஞ்சமாவது நீர் உண்ண மாட்டீர்" என்றார்.
3 நிற்க, நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளர்கள் இருந்தனர். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, "சாவை எதிர்பார்த்துக் கொண்டு நாம் இங்கு இருப்பது ஏன்?
4 நாம் நகருக்குள் சென்றால் பஞ்சத்தால் மடிவோம். இங்கேயே இருந்தாலும் நாம் சாகவேண்டியது தான். ஆதலால் சீரியர் பாசறைக்குள் தஞ்சம் அடைவோம், வாருங்கள்; அவர்கள் நமக்கு இரக்கம் காட்டினால் நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொல்லக் கருதினாலோ எங்கும் சாவுதான், செத்துப்போவோம்" என்று பேசிக் கொண்டனர்.
5 மாலை வேளையில் அவர்கள் சீரியரின் பாசறைக்கு வந்தனர். பாசறையின் முன் பகுதிக்கு அவர்கள் வந்த போது, அங்கே ஒருவரும் இல்லை.
6 ஏனெனில், ஆண்டவர் சீரியர் பாசறையில் குதிரைகளும் தேர்களும் பெரும் படையும் திரண்டு வருவது போன்ற பெரும் சத்தம் கேட்கும்படி செய்திருந்தார். சீரியர் இதைக் கேட்டு ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ! இஸ்ராயேல் அரசன் தனக்குத் துணையாக ஏத்தையர் அரசனையும், எகிப்தியர் அரசனையும் அழைத்துக் கொண்டு நம்மீது படையெடுத்து வருகிறான்" எனச் சொல்லிக் கொண்டு,
7 பதறி எழுந்து கூடாரங்களையும் குதிரைகளையும் கழுதைகளையும் பாசறையிலேயே விட்டு விட்டு, உயிர் தப்பினால் போதும் என்று எண்ணி, இரவோடு இரவாய் ஓட்டம் பிடித்திருந்தனர்.
8 ஆகவே, மேற்சொன்ன தொழுநோயாளர்கள் பாசறையின் முன் பகுதியில் இருந்த ஒரு கூடாரத்தில் நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும், அங்கிருந்த பொன், வெள்ளி, ஆடை முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்து வைத்த பின், மறுபடியும் வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து, அங்கே தென்பட்டவற்றையும் கொள்ளையிட்டு அவ்வாறே ஒளித்து வைத்தனர்.
9 பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி, "நாம் செய்வது சரியன்று; ஏனெனில், இன்று நமக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. நாளைக் காலை வரை இதை வெளியிடாது மௌனமாய் இருந்தால் நாம் குற்றவாளிகளாக மதிக்கப்படுவோம். வாருங்கள், நாம் போய் அரச அவையில் இதை அறிவிப்போம்" என்று சொன்னார்கள்.
10 அவர்கள் நகர வாயிலை அடைந்ததும், "நாங்கள் சீரியருடைய பாசறைக்குள் சென்றோம். அங்குக் கட்டியிருந்த குதிரைகளையும் கழுதைகளையும் கூடாரங்களையும் தவிர ஒரு மனிதனைக்கூட நாங்கள் காணவில்லை" என வாயிற் காவலரிடம் தெரிவித்தனர்.
11 இதைக் கேட்ட வாயிற் காவலர் அரண்மனைக்குள் சென்று அங்கு இருந்தோரிடம் இதை அறிவித்தனர்.
12 அரசன் அந்த இரவிலேயே எழுந்து தன் ஊழியர்களை நோக்கி, "சீரியர் நமக்கு எதிராகச் செய்ய நினைத்த சதியைக் கேளுங்கள். நாம் பசியால் வருந்துவதை அறிந்து அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, 'இஸ்ராயேலர் நகரிலிருந்து வெளியே வருவார்கள். அப்போது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக் கொண்டு நகரினுள் நுழையலாம்' என்று எண்ணி, வயல் வெளிகளில் ஒளிந்திருக்கிறார்கள் போலும்" என்றான்.
13 அவனுடைய ஊழியரில் ஒருவன் அரசனை நோக்கி, "நகரில் ஐந்து குதிரைகள் தாம் எஞ்சியுள்ளன. (ஏனெனில் இஸ்ராயேலருக்குச் சொந்தமான மற்றக் குதிரைகள் எல்லாம் அழிந்து விட்டன). அவற்றைத் தயார்படுத்தி ஒற்றரை அனுப்பலாம்" என்று யோசனை கூறினான்.
14 ஆகையால் இரண்டு குதிரைகள் கொண்டு வரப்பட்டன. அரசன் இருவரைச் சீரியர் பாசறைக்கு அனுப்பி, "போய்ப் பார்த்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.
15 அவர்களோ சீரியரைத் தேடி யோர்தான் நதி வரை போனார்கள். சீரியர் பீதியுற்று ஒடின போது எறிந்து விட்ட உடைகளும் ஆயுதங்களும் வழி நெடுகக் கிடக்கக் கண்டு, திரும்பி வந்து அரசனிடம் தெரிவித்தனர்.
16 உடனே மக்கள் நகரைவிட்டு வெளியே வந்து சீரியர் பாசறையைக் கொள்ளையிட்டனர். ஆகவே, ஆண்டவரின் வாக்குப்படி முதல்தரக் கோதுமை மாவு சீக்கலுக்கு ஒரு மரக்காலும், வாற்கோதுமை சீக்கலுக்கு இரண்டு மரக்காலுமாக விற்கப்பட்டன.
17 அரசன் வழக்கம்போல் தனக்குப் பக்கபலமாய் இருந்து வந்த படைத் தலைவனை நகர் வாயிலில் காவலுக்கு வைத்திருந்தான். மக்கள் திரள்திரளாய் நகர வாயிலுக்கு வரவே, நெருக்கடியில் அவன் மிதிப்பட்டு உயிர் நீத்தான். இவ்வாறு அரசன் கடவுளின் மனிதரைப் பார்க்க வந்த போது, இவர் அவனுக்குச் சொல்லியிருந்தபடியே நடைபெற்றது.
18 இங்ஙனம், "நாளை இந்நேரம் ஒரு சீக்கலுக்கு வாற்கோதுமை இரண்டு மரக்காலும் கோதுமை மாவு ஒரு மரக்காலும் விற்கப்படும்" என்று கடவுளின் மனிதர் அரசனிடம் கூறியிருந்த வாக்கும் நிறைவேறியது.
19 அந்தப் படைத்தலைவன் கடவுளின் மனிதரை நோக்கி, "ஆண்டவர் வானினின்று தானியத்தைத் திரளாகப் பொழிந்தாலும் நீர் கூறுவது நிறைவேறாது" என்று சொல்லியிருந்தான். அதற்குக் கடவுளின் மனிதர் "நீர் அதை கண்ணாரக் காண்பீர்; ஆனால் அதில் கொஞ்சமாவது உண்ணமாட்டீர்" என்று கூறியிருந்தார்.
20 இவ்வாறு இறைவாக்கினர் முன்னறிவித்தபடியே அவனுக்கு நிகழ்ந்தது; அதாவது, அவன் நகர வாயிலில் மக்கள் காலால் மிதிபட்டு இறந்தான்.
அதிகாரம் 08
1 எலிசேயு ஒரு பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுத்திருந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, "நீயும் உன் குடும்பத்தாரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான ஓர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், ஆண்டவர் நாட்டில் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது ஏழாண்டு வரை நீடிக்கும்" என்று சொன்னார்.
2 அவளோ கடவுளின் மனிதர் கூறியபடி தன் வீட்டாரோடு சென்று பிலிஸ்தியர் நாட்டில் நீண்ட நாள் வாழ்ந்து வந்தாள்.
3 ஏழு ஆண்டுகள் கடந்தபின், அந்தப் பெண் பிலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தன் வீடும் நிலங்களும் தனக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிட வந்தாள்.
4 அரசனும் கடவுளின் மனிதருக்கு ஊழியம் செய்து வந்த ஜியேசியோடு பேசி, "எலிசேயு புரிந்துள்ள அரும் பெரும் செயல்களை எல்லாம் எனக்கு விவரித்துச் சொல்" எனக் கேட்டான்.
5 அதற்கு ஜியேசி, இறந்த ஒருவனுக்கு எலிசேயு உயிர் கொடுத்திருந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறினான். அப்போது உயிர் பெற்ற சிறுவனின் தாய் அரசன் முன் வந்து, தன் வீட்டையும் நிலங்களையும் தனக்குத் திரும்பித் தரவேண்டும் என்று அரசனிடம் முறையிட்டாள். அப்போது ஜியேசி, "என் தலைவராகிய அரசே, இதோ! அந்த பெண்; இவளுடைய மகனுக்குத் தான் எலிசேயு உயிர் கொடுத்தார்" என்றான்.
6 அரசன் அதைப்பற்றி அவளை வினவ, அவள் நடந்ததை எல்லாம் விரிவாக எடுத்துரைத்தாள். அப்பொழுது அரசன் ஓர் அண்ணகனை அழைத்து, "நீ அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திரும்பக்கொடு; அதோடு அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு" என்று கட்டளையிட்டான்.
7 எலிசேயு தமாஸ்கு நகருக்கு வந்தார். அப்போது சீரியாவின் அரசன் பெனாதாத் நோயுற்றிருந்தான். "கடவுளின் மனிதர் இங்கு வந்திருக்கிறார்" என்று யாரோ அவனுக்கு அறிவித்தனர்.
8 அதனால் அரசன் அசாயேலைப் பார்த்து, "நீ பரிசில்களை எடுத்துக் கொண்டு கடவுளின் மனிதரிடம் போய், 'நான் நோயினின்று நலம் பெறுவேனா?' என்று, அவர் மூலம் ஆண்டவரை விசாரித்துக் கேட்பாயாக" என்றான்.
9 ஆகையால் அசாயேல் தமாஸ்கு நகரிலுள்ள விலையுயர்ந்த எல்லாவிதப் பரிசில்களையும் நாற்பது ஒட்டகங்கள் மேல் ஏற்றிக் கொண்டு எலிசேயுவிடம் வந்தான். அவர் முன் வந்து நின்று அவரை நோக்கி, 'எனது நோயினின்று நான் நலம் பெறுவேனா?' என உம்மிடம் கேட்டு வரச் சீரியாவின் அரசரும் உமது அடியானுமான பெனாதார் உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார்" என்றான்.
10 எலிசேயு மறுமொழியாக, "நீ போய் 'நீர் நலமடைவீர்; ஆயினும் நிச்சயம் அவர் சாவார் என்று ஆண்டவர் எனக்குத் தெரிவித்துள்ளார் என்று அவரிடம் சொல்" என்றார்.
11 அன்றியும் கடவுளின் மனிதர் அவனோடு நின்றார். மனம் கலங்க, முகம் சிவக்க அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
12 அசாயேல் அவரைப் பார்த்து, "தாங்கள் இவ்வாறு அழுவது- ஏன்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீ இஸ்ராயேல் மக்களுக்குச் செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன். அவர்களின் சிறந்த நகர்களைத் தீக்கு இரையாக்குவாய்; இளைஞரை வாளுக்கு இரையாக்குவாய்; சிறு குழந்தைகளைத் தரையில் அறைந்து கொல்லுவாய்; கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய் என்று எனக்குத் தெரியும்" என்றார்.
13 அசாயேல் அவரை நோக்கி, "இவ்வளவு பெரும் காரியத்தைச் செய்ய உம் அடியானாகிய நாயேன் எம்மாத்திரம்?" எனக் கேட்டான். அதற்கு எலிசேயு, "நீ சீரியாவின் அரசனாய் இருப்பாய் என்று ஆண்டவர் எனக்கு அறிவித்திருக்கின்றார்" என மொழிந்தார்.
14 அசாயேல் எலிசேயுவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவரைக் காண வந்தான். அரசன் அவனைப் பார்த்து, "எலிசேயு உன்னிடம் என்ன சொன்னார்?" என்று கேட்டான். அதற்கு அசாயேல், "நீர் நலமடைவீர் என எனக்குச் சொன்னார்" என்றான்.
15 மறுநாள் அசாயேல் ஒரு போர்வையை எடுத்து நீரில் தோய்த்து அரசனுடைய முகத்தை மூட, அவன் இறந்தான். அசாயேல் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
16 இஸ்ராயேல் அரசன் ஆக்காபின் மகன் யோராமுடைய ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில், யூதாவின் அரசன் யோசபாத்தின் இருபத்திரண்டாம் ஆண்டில், யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனாகப் பதவி ஏற்றான்.
17 இவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரியணை ஏறி எட்டு ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி புரிந்தான்.
18 அவன் ஆக்காபுடைய வீட்டாரைப் போல் இஸ்ராயேல் அரசர்களைப் பின்பற்றியே நடந்தான். ஏனெனில், இவனுடைய மனைவி ஆக்காபின் மகளே. ஆண்டவர் திருமுன் அவன் பாவம் புரிந்தான்.
19 ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு, யூதா மக்களை அழிக்கவில்லை. ஏனெனில், அவர் தாவீதுக்கும் அவருடைய புதல்வர்களுக்கும் ஓர் ஒளி விளக்கைக் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்.
20 அவனது காலத்தில் இதுமேயர் யூதா அரசருக்கு அடிபணிய மறுத்துத் தங்களுக்கென ஓர் அரசனை ஏற்படுத்திக் கொண்டனர்.
21 ஆனால் யோராம் அரசன் செயீரா என்ற ஊருக்குத் தன் எல்லாத் தேர்களோடும் வந்தான். இரவில் வந்து தன்னைச் சூழ்ந்திருந்த இதுமேயர்களையும் தேர்ப்படைத் தலைவர்களையும் வெட்டி வீழ்த்தினான். மக்களோ தங்கள் கூடாரங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.
22 அன்று முதல் இதுமேயர் யூதா அதிகாரத்திற்கு உட்படாது விலகியே நின்றனர். அதே வேளையில் லோப்னா நகரத்தாரும் யூதாவை விட்டு விலகிப்போனார்கள்.
23 யோராம் அரசனின் மற்றச் செயல்கள் எல்லாம் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
24 யோராம் அரசன் தன் முன்னோரோடு துயில் கொண்டான். தாவீது நகரில் அவர்களோடு புதைக்கப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஒக்கோசியாசு அரியணை ஏறினான்.
25 இஸ்ராயேலின் அரசனான ஆக்காபின் மகன் யோராமினுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், யூதா அரசனான யோராமின் மகன் ஒக்கோசியாசு அரசாளத் தொடங்கினான்.
26 தன் இருபத்திரண்டாம் வயதில் அரியணை ஏறிய ஒக்கோசியாசு யெருசலேமில் ஓராண்டு ஆட்சி செலுத்தினான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியா. இவள் யூதா அரசன் அம்ரியின் மகள்.
27 அவன் ஆக்காபின் குடும்பத்தாரைப் பின்பற்றி ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அவன் ஆக்காபின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு மருமகனாய் இருந்ததால் அவர்களைப் போலவே அவனும் தீயவழியில் நடந்து வந்தான்.
28 அன்றியும், சீரியாவின் அரசன் அசாயேலுக்கு எதிராய்ப் போரிட, ஆக்காபின் மகன் யோராமோடு காலாதிலுள்ள இராமோத் நகருக்குப் போனான். அங்கு யோராம் சீரியர் கையில் காயம் அடைந்தான்.
29 இவன் சீரியாவின் அரசன் அசாயேலோடு இராமோத்தில் போரிடுகையில், சீரியரால் காயப்படுத்தப்பட்டதால், சிகிச்சை பெறும்படி ஜெஸ்ராயேலுக்கு வந்தான். ஆக்காபின் மகன் யோராம் ஜெஸ்ராயேலில் நோயுற்றிருந்ததால் அவனைப் பார்த்து வரும் பொருட்டு யூதாவின் அரசன் யோராமின் மகன் ஒக்கோசியாசு அங்குச் சென்றான்.
அதிகாரம் 09
1 அப்போது இறைவாக்கினர் எலிசேயு, இறைவாக்கினரின் பிள்ளைகளில் ஒருவனை அழைத்து, "உன் இடையை வரிந்துகட்டி, கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு காலாதிலுள்ள இராமோத் நகருக்குப் போ.
2 அங்குச் சென்றதும் நம்சி மகன் யோசபாத்தின் புதல்வன் ஏகுவைக் காண்பாய். அவனை அணுகி, அவனுடைய சகோதரரின் நடுவினின்று அவனைத் தனியே அழைத்து அவனோடு ஓர் அறைக்குள் செல்.
3 அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து, அவனை நோக்கி, 'ஆண்டவர் சொல்கிறதாவது: உன்னை நாம் இஸ்ராயேலின் அரசனாக அபிஷுகம் செய்தோம்' என்று சொல்லி, அவன் தலை மேல் எண்ணெயை ஊற்றுவாய். ஊற்றினவுடனே கதவைத் திறந்து அங்கே நில்லாது ஓடிவிடி" என்றார்.
4 ஆதலின் இறைவாக்கினரின் சீடனான அவ்இளைஞன் காலாதிலுள்ள இராமோத் நகருக்கு உடனே புறப்பட்டான்.
5 அங்கே படைத்தலைவர்கள் அமர்ந்திருக்கக் கண்டு, "இளவரசே, உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்" என்றான். அதற்கு ஏகு, "யாரிடம் பேசவேண்டும்?" எனக் கேட்டான். அதற்கு அவன், "இளவரசே, உம்மிடந்தான்" என விடை பகன்றான்.
6 ஏகு எழுந்து ஓர் அறைக்குள் நுழைந்தான். இளைஞனோ அவனது தலையின்மேல் எண்ணெயை ஊற்றி, "இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் சொல்வதாவது: 'ஆண்டவரின் மக்களாகிய இஸ்ராயேலுக்கு உன்னை அரசனாக அபிஷுகம் செய்தோம்.
7 உன் அரசன் ஆக்காபின் வீட்டாரை அழித்துப் போடுவாயாக. இங்ஙனம் எசாபேல் என்பவளின் கையால் சிந்தப்பட்ட இறைவாக்கினரின் இரத்தத்திற்கும், ஆண்டவரின் எல்லா ஊழியர்களது இரத்தத்திற்கும் நாம் பழி வாங்குவோம்.
8 ஆக்காபு குலத்தவரை அழிப்போம். ஆக்காபின் வீட்டிலுள்ள சிறு பிள்ளைகள் முதல் இன்னும் பிறவாத சிசுக்களையும் இப்பொழுது பிறந்த குழந்தைகளையும் அழித்துப் போடுவோம்.
9 இந்த ஆக்காபு குடும்பத்தை நாபாத் மகன் எரோபோவாமின் வீட்டைப் போலும், ஆகியா மகன் பாவாசா வீட்டைப் போலும் ஒழித்துக் கட்டுவோம்.
10 எசாபேலை ஜெஸ்ராயேல் வயல் வெளியில் நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க ஒருவரும் இருக்க மாட்டார்' " என்று கூறிக் கதவைத் திறந்து ஓட்டம் பிடித்தான்.
11 பின்பு ஏகு தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனைப் பார்த்து, "நல்ல செய்தி தானா? அந்தக் கிறுக்கன் உம்மிடம் என்ன சொல்ல வந்தான்?" என்றனர். அதற்கு அவன், "அவன் யார் என்றும் அவன் சொன்னது என்ன என்றும் உங்களுக்குத் தெரியுமே" என்றான்.
12 அவர்கள் அதற்கு, "உண்மையில் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீரே சொல்லும்" என்றனர். அப்போது ஏகு அவர்களை நோக்கி, "அவன் பல காரியங்களைப்பற்றி எனக்குச் சொன்ன பின்பு, 'ஆண்டவர் சொல்வதாவது: இஸ்ராயேலின் மீது உன்னை அரசனாக அபிஷுகம் செய்தோம்' எனச் சொன்னான்" என்று கூறினான்.
13 இதைக் கேட்டவுடன், அவர்கள் அனைவரும் விரைந்து தத்தம் போர்வையை எடுத்து, நீதியிருக்கைப் போன்று அவற்றை ஏகுவின் பாதத்தின் கீழ் பரப்பி வைத்தனர். எக்காளம் ஊதி, "ஏகுவே நம் அரசர்" என்று ஆர்ப்பரித்தனர்.
14 நம்சிக்குப் பிறந்த யோசபாத்தினுடைய மகன் ஏகு, யோராமுக்கு எதிராகச் சதி செய்தான். யோராம் சீரியாவின் அரசன் அசாயேலுக்கு எதிராக இஸ்ராயேலின் எல்லாச் சேனைகளோடும் காலாதிலுள்ள இராமோத் நகரை முற்றுகையிட்டிருந்தான்.
15 இப்படிச் சீரியாவின் அரசன் அசாயேலுக்கு எதிராகப் போர் செய்கையில், யோராம் சீரியர் கையில் காயம் அடைந்து, சிகிச்சை பெற ஜெஸ்ராயேலுக்கு வந்திருந்தான். ஏகு தன் வீரர்களைப் பார்த்து, "நகரிலிருந்து யாராவது வெளியே போனால், ஜெஸ்ராயேலுக்குப் போய் செய்தி சொல்லுவர். எனவே, எவரும் நகரினின்று தப்பி ஓடாதவாறு கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டான்.
16 அவனோ ஜெஸ்ராயேலுக்குப் புறப்பட்டுச் சென்றான். ஏனெனில் யோராம் அங்கு நோயுற்றிருந்தான்; யூதா அரசன் ஒக்கோசியாசும் அவனைப் பார்த்து விட்டுப் போகும்படி அங்குச் சென்றிருந்தான்.
17 ஜெஸ்ராயேல் கோபுரத்தின் மேல் நின்று கொண்டிருந்த காவலன், தன் மனிதரோடு ஏகு வருவதைக் கண்டு, "அதோ ஒரு பெரிய கூட்டம் வருகிறது" என்றான். அதற்கு யோராம், "வருகிறவர்களுக்கு எதிராக ஒருவனைத் தேரில் அனுப்பி, அவர்களைப் பார்த்து, 'நீங்கள் சமாதான நோக்கோடு வருகிறீர்களா?' என்று கேட்கச் சொல்" என்றான்.
18 அவ்விதமே ஒருவன் தேரில் ஏறி ஏகுக்கு எதிர்கொண்டு போய்" "சமாதான நோக்கோடு வருகிறீர்களா?' என்று அரசர் கேட்கச் சொன்னார் " என்றான். அதற்கு ஏகு, "சமாதானத்திற்கும் உனக்கும் என்ன உறவு? நீ முன்னே நில்லாது என்பின்னே வரக்கடவாய்" என்றான். அந்நேரத்தில் காவலன், "தூதன் அவர்களிடம் சென்றான்; ஆனால் இன்னும் திரும்பவில்லை" என்று அறிவித்தான்.
19 யோராம் குதிரைகள் பூட்டிய வேறொரு தேரில் மற்றொருவனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, "சமாதானந்தானா?' என அரசர் கேட்கிறார்" என்றான். அதற்கு ஏகு, "சமாதானத்துக்கும் உனக்கும் என்ன உறவு? நீ முன்னே நில்லாது, என் பின்னே வரக்கடவாய்" என்றான்.
20 காவலன், "இரண்டாவது தேர்வீரன் அவர்களிடம் போனான். ஆனால் திரும்பவேயில்லை. வருகிறவனோ நம்சி மகன் ஏகுவாய் இருக்க வேண்டும். ஏனெனில் அவனைப் போல வெகு துரிதமாய் வருகின்றான்" என்றான்.
21 யோராம், "தேரில் குதிரைகளைப் பூட்டுங்கள்" என்று கட்டளையிட்டான். குதிரைகள் பூட்டப்படவே, இஸ்ராயேல் அரசன் யோராமும், யூதா அரசன் ஒக்கோசியாசும் தத்தம் தேரில் புறப்பட்டு ஏகுக்கு எதிரே போய், ஜெஸ்ராயேல் ஊரானான நாபோத்தின் வயலில் அவனைச் சந்தித்தனர்.
22 யோராம் ஏகுவைக் கண்டு, "ஏகு, சமாதான நோக்குடன்தான் வருகிறீரா?" எனக் கேட்டான். அதற்கு அவன், "உன் தாய் எசாபேலின் வேசித்தனமும் மாயவித்தையும் இவ்வளவு பெருகியிருக்கச் சாமாதானம் இருக்கவும் கூடுமோ?" என்று மறுமொழி கூறினான்.
23 யோராம் உடனே கடிவாளத்தைத் திருப்பி ஒக்கோசியாசைப் பார்த்து, "ஒக்கோசியாசு, இதுவும் ஒரு சதியே" என்று சொல்லி ஓட்டம் பிடித்தான்.
24 அந்நேரத்தில் ஏகு கையால் வில்லை வளைத்து யோராமின் தோள்கள் நடுவே எய்தான். அம்பு இதயத்தை ஊடுருவ, யோராம் தேரிலிருந்து கீழே விழுந்து மடிந்தான்.
25 ஏகு படைத்தலைவன் பதாசரை நோக்கி, "அவனைத் தூக்கி ஜெஸ்ராயேல் ஊரானான நாபோத்தின் வயலில் எறிந்துவிடு. ஏனெனில் நாம் இருவரும் தேரில் இவனுடைய தந்தை ஆக்காபைத் தொடர்ந்த போது, அவனுக்கு இக்கதி நேரிடும் என ஆண்டவர் கூறியது என் நினைவிற்கு வருகிறது.
26 அதாவது: ' நேற்று நம் திருமுன் நீ சிந்தின நாபோத்தின் இரத்தத்திற்கும், அவனுடைய பிள்ளைகளின் இரத்தத்திற்கும், அதே வயலில் நாம் உன்னைப் பழி வாங்காது விடோம் ' என்று ஆண்டவர் கூறியிருந்தார். ஆதலால் இப்போது ஆண்டவரின் வாக்குப்படி, நீ அவனைத் தூக்கி அந்த வயலில் எறிந்துவிடு" என்றான்.
27 யூதா அரசன் ஒக்கோசியாசு இதைக்கண்டு நந்தவனம் வழியாக ஓட்டம் பிடித்தான். அதை அறிந்த ஏகு அவனைப் பின்தொடர்ந்து தன் படைவீரர்களைப் பார்த்து, "இவனையும் இவனது தேரிலேயே கொன்று விடுங்கள்" என்றான். அவர்களும் எபிளாவாம் அருகே இருந்த கவேருக்குப் போகும் வழியில் அவனை வெட்டினார்கள். அவனோ மகேதோ வரை ஓடி அங்கு இறந்தான்.
28 அப்போது அவனுடைய ஊழியர்கள் அவனைத் தூக்கி அவனது தேரில் வைத்து யெருசலேமுக்குக் கொண்டு போய், தாவீது நகரில் அவனை அவனுடைய முன்னோரோடு அடக்கம் செய்தார்கள்.
29 ஆக்காபின் மகன் யோராம் அரியணை ஏறின பதினோராம் ஆண்டில் ஒக்கோசியாசு யூதாவின் அரசன் ஆனான்.
30 பின் ஏகு ஜெஸ்ராயேலுக்கு வந்து சேர்ந்தான். அப்போது அவன் வந்த செய்தியை அறிந்த எசாபேல் தன் கண்களுக்கு மையிட்டு, தலையை அலங்கரித்துச் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.
31 ஏகு நகரவாயில் வழியாக வருவதைக்கண்டு, "தன் தலைவனைக் கொன்ற சம்பிரிக்கு அமைதி கிட்டுமா?" என்றாள்.
32 ஏகு தலை நிமிர்ந்து சன்னலைப் பார்த்து, "யார் அது?" என்றான். உடனே இரண்டு மூன்று அண்ணகர் தலை குனிந்து அவனை வணங்கினர்.
33 ஏகு அவர்களை நோக்கி, "அவளைக் கீழே தள்ளிவிடுங்கள்" என்றான். அவர்கள் அவளைக் கீழே தள்ள, அவளது இரத்தம் சுவரை நனைத்தது. அன்றியும் அவள் குதிரைகளின் கால்களினால் மிதிக்கப்பட்டாள்.
34 ஏகு உண்டு குடிக்க உள்ளே வந்து, "நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்து அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசனின் மகள்" என்றான்.
35 அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்ற போது, அவளுடைய தலையும் கால்களும், கைகளில் பாதியுமட்டும் அங்குக் கிடக்கக் கண்டனர்.
36 எனவே திரும்பி வந்து ஏகுக்கு அதை அறிவித்தனர். அதைக் கேட்டு அவன், "ஆண்டவர் தம் ஊழியனும் தெசுபித்தனுமான எலியாசின் மூலமாய் ' எசாபேலுடைய ஊனை நாய்கள் ஜெஸ்ராயேல் வயலிலே தின்னும்.
37 அவளுடைய பிணம் ஜெஸ்ராயேல் நிலங்களின் மீது எருபோன்று கிடக்கும். அதைக் கண்ணுறும் யாவரும், "அந்த எசாபேல் இவள் தானா?" என்பார்கள் ' என்று முன்பே சொல்லியிருந்தார் அன்றோ?" என்றான்.
அதிகாரம் 10
1 ஆக்காபிற்கு சமாரியாவில் எழுபது புதல்வர்கள் இருந்தனர். ஆதலால் ஏகு சமாரியாவிலுள்ள நகரப் பெரியோர்களுக்கும் மூப்பர்களுக்கும், ஆக்காபின் புதல்வர்களை வளர்த்து வந்தவர்களுக்கும் கடிதம் அனுப்பினான்.
2 அவன் அதில் எழுதியிருந்ததாவது: "உங்கள் தலைவரின் புதல்வர்களையாவது, தேர்களையாவது, குதிரைகளையாவது, அரண் உள்ள நகர்களையாவது, படைக்கலன்களையாவது கைக்கொண்டிருக்கிற நீங்கள் இக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட உடனே,
3 உங்கள் தலைவரின் புதல்வரில் நல்லவனும் உங்கள் மனத்திற்குப் பிடித்தவனுமான ஒருவனைத் தேர்ந்து கொண்டு, அவனுடைய தந்தையின் அரியணையில் அவனை ஏற்றி, உங்கள் தலைவரின் வீட்டைக் காப்பாற்ற நீங்கள் போரிடக் கடவீர்களாக" என்பதே.
4 இதை வாசித்து அவர்கள் மிகவும் பீதியுற்று, "ஏகுவை எதிர்த்து நிற்க இரண்டு அரசர்களாலும் முடியவில்லை. பின் நாம் அவனை எங்ஙனம் எதிர்த்து நிற்கக் கூடும்?" என்றனர்.
5 பின்பு அரண்மனை மேற்பார்வையாளரும், நகரப் பெரியோர்களும், மூப்பர்களும் ஆக்காபின் புதல்வர்களை வளர்த்து வந்தவர்களும் ஏகுக்கு ஆள் அனுப்பி, "நாங்கள் உம் அடிமைகள். நீர் கட்டளையிடுவதை எல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கின்றோம். எங்களுக்கென ஓர் அரசனை நாங்களே ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். உமது விருப்பப்படியே செய்யும்" எனத் தெரிவித்தனர்.
6 ஏகு மறுபடியும், "நீங்கள் என் அடிமைகளாய் இருந்து எனக்குக் கீழ்ப்படிய விரும்பின், உங்கள் தலைவருடைய புதல்வர்களின் தலைகளைக் கொய்து நாளை இதே நேரத்தில் என்னிடம் ஜெஸ்ராயேலுக்குக் கொண்டு வாருங்கள்" எனக் கடிதம் எழுதி அவர்களுக்கு அனுப்பி வைத்தான். அப்பொழுது அரச புதல்வர் எழுபது பேரும் நகரப் பெரியோரோடு வளர்ந்து வந்தனர்.
7 கடிதம் கிடைத்தவுடனே அவர்கள் அரச புதல்வர்களைப் பிடித்து எழுபது பேரையும் கொன்று, அவர்களின் தலைகளைக் கூடைகளில் வைத்து அரசனிடம் ஜெஸ்ராயேலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
8 தூதுவன் ஒருவன் ஏகுவிடம் ஓடிவந்து, "அரசபுதல்வர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்" என அறிவித்தான். அதற்கு அவன், "நாளைப் பொழுது புலரும் வரை அவற்றை நகர வாயிலின் இருபுறத்திலும் இரண்டு குவியலாக வையுங்கள்" எனச் சொன்னான்.
9 மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவன் வெளியே வந்து மக்கள் அனைவரின் முன்னிலையில் நின்று கொண்டு, "நீங்கள் நீதிமான்கள்; என் தலைவனுக்கு எதிராய்ச் சதி செய்து அவனைக் கொன்றவன் நான் தான் என்றாலும், இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?
10 ஆக்காபின் சந்ததிக்கு விரோதமாய் ஆண்டவர் சொன்னவற்றில் ஒன்றேனும் நிறைவேறாமல் போனதில்லை என்றும், ஆண்டவர் தம் அடியான் எலியாசின் மூலம் கூறின அனைத்தையும் அவரே நிறைவேற்றினார் என்றும் அறிந்து கொள்ளுங்கள்" என்றான்.
11 பின்னர் ஜெஸ்ராயேலில் இருந்த ஆக்காப் வீட்டாருள் எஞ்சியிருந்த அனைவரையும் அவைப் பெரியோரையும் அவனுடைய நண்பர்களையும், குருக்களையும் கொன்று குவித்தான். அவனைச் சேர்ந்தவர்களில் ஒருவனைக் கூட உயிரோடு விட்டுவைக்கவில்லை.
12 பின்பு அவன் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான். வரும் வழியில் இடையர்களின் குடிசை ஒன்றை அடைந்தான்.
13 அப்போது யூதா அரசன் ஒக்கோசியாசின் சகோதரர் அங்கு இருக்கக் கண்டான். ஏகு அவர்களை நோக்கி, "நீங்கள் யார்?" என அவர்களைக் கேட்டான். அவர்கள், "நாங்கள் ஒக்கோசியாசின் சகோதரர்; அரசரின் புதல்வர்களையும் அரசியின் புதல்வர்களையும் கண்டு அவர்களுக்கு எங்கள் மரியாதையைச் செலுத்த வந்துள்ளோம்" என்று மறுமொழி கூறினர்.
14 ஏகு, "இவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான். அவர்களும் உயிரோடு இவர்களைப் பிடித்துக் குடிசையின் அருகில் இருந்த ஒரு குழியில் வெட்டிக் கொன்றார்கள். அந்த நாற்பத்திரண்டு பேர்களில் ஒருவனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
15 ஏகு அவ்விடமிருந்து புறப்பட்டுப் போகும் போது தனக்கு எதிரே வழியில் வந்துகொண்டிருந்த ரேக்காவின் மகன் யோனதாபைக் கண்டு அவனை வாழ்த்தினான். "என் இதயம் உன்மட்டில் பிரமாணிக்கமாய் இருக்கிறது போல் உன் இதயமும் என்மட்டில் இருக்கின்றதா?" என அவனைக் கேட்டான். அதற்கு யோனதாப், "ஆம்" எனப் பதிலுரைத்தான். அதற்கு ஏகு, "அப்படியானால் கைகொடு" என்றான். அவன் கை கொடுக்க, ஏகு அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு,
16 அவனை நோக்கி, "நீ என்னோடு வா; ஆண்டவர்பால் நான் கொண்டிருக்கும் ஆர்வத்தைப் பார்" என்றான்.
17 அங்ஙனம் சொல்லி அவனைத் தன் தேரில் ஏற்றி, சமாரியாவுக்குக் கொண்டு வந்தான். அங்கே ஆண்டவர் எலியாசு மூலம் சொல்லியிருந்தபடி, ஏகு ஆக்காபின் வீட்டாரில் ஒருவனையும் விட்டு வைக்காது எல்லோரையும் கொன்று குவித்தான்.
18 அன்றியும் ஏகு, மக்கள் அனைவரையும் கூட்டி வரச் செய்து அவர்களை நோக்கி, "ஆக்காப் பாவாலுக்குச் சிறிதளவே வழிபாடு செய்து வந்தான்; நானோ அதிகம் செய்வேன்.
19 இப்போது பாவாலின் தீர்க்கதரிசிகள், பணிவிடைக்காரர், குருக்கள் ஆகிய அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்; அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது; ஏனெனில், நான் பாவாலுக்கு ஒரு மகத்தான பலி செய்ய வேண்டியிருக்கிறது. வராதவர் கொல்லப்படுவர்" என்றான். பாவாலை வழிபடும் அனைவரையும் அழிக்க எண்ணியே ஏகு இச்சூழ்ச்சி செய்திருந்தான்.
20 பாவாலுக்கு விழா எடுங்கள்" என்று கூறினான்.
21 ஏகு இஸ்ராயேல் நாடு எங்கணும் ஆட்களை அனுப்பிப் பாவாலின் அடியார்கள் அனைவரையும் வரவழைத்தான். அவர்கள் எல்லாரும் தவறாது வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒன்றாய்ப் பாவாலின் கோவிலில் நுழைந்தனர். கோயில் முழுவதும் மக்களால் நிறைந்திருந்தது.
22 ஏகு ஆடையணிகளை வைத்திருப்பவர்களை நோக்கி, "பாவாலின் பக்தர்கள் அனைவர்க்கும் உடைகளைக் கொண்டு வந்து கொடுங்கள்" என்றான். அவர்களும் உடைகளைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தனர்.
23 ஏகும் ரெக்காபின் மகன் யோனதாபும் பாவாலின் ஆலயத்தில் நுழைந்து பாவால் பக்தர்களை நோக்கி, "உங்களோடு ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள். இங்கே பாவாலின் அடியார்கள் மட்டுமே இருக்க வேண்டும்" என்றனர்.
24 பிறகு அவர்கள் பலிப் பொருட்களையும், தகனப் பலிகளையும் செலுத்தக் கோவிலுக்குள் நுழைந்தனர். ஆனால் ஏகு ஏற்கெனவே எண்பது சேவகர்களைக் கோயிலுக்கு வெளியே தயாராயிருக்கும்படி சொல்லி, அவர்களை நோக்கி, "நான் உங்கள் கையில் அளிக்கப் போகிற மனிதர்களில் எவனையாவது நீங்கள் தப்பியோடவிட்டால், அவனுயிருக்குப் பதிலாக உங்கள் உயிரை வாங்குவேன்" என்று கட்டளையிட்டிருந்தான்.
25 தகனப்பலி முடிந்ததும் ஏகு தன் படைவீரர்களையும், படைத்தலைவர்களையும் பார்த்து, "நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பியோட விடாமல் எல்லாரையும் வெட்டிக் கொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான். அதன்படியே படைத்தலைவர்களும் படைவீரரும் உள்ளே நுழைந்து, அங்கு இருந்தோரை வாளுக்கு இரையாக்கி அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்தனர். அன்றியும் நகரிலிருந்து பாவால் கோயிலுக்குப் போய்,
26 அங்கிருந்த பாவால் சிலையை எடுத்து ஆலயத்திற்கு வெளியே கொண்டு வந்து உடைத்து எரித்தனர்.
27 அன்றியும், பாவால் கோயிலை இடித்து, அவ்விடத்தை ஒதுங்கும் இடமாக ஆக்கிவிட்டனர்.
28 இங்ஙனம் ஏகு பாவாலின் வழிபாடு இஸ்ராயேலில் இல்லாதபடி செய்தான்.
29 ஆயினும் அவன் இஸ்ராயேலரைப் பாவத்திற்கு ஆளாக்கியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழியினின்று விலகினதுமில்லை; பேத்தலிலும் தானிலும் இருந்த பொற்கன்றுகளைக் கைவிட்டதுமில்லை.
30 பின்பு ஆண்டவர் ஏகுவைப் பார்த்து, "நேரியதும் எமக்கு உகந்ததுமானவற்றைக் கருத்துடன் செய்து முடித்ததாலும், ஆக்காபின் வீட்டுக்கு எதிராக நாம் கருதினவற்றை எல்லாம் நிறைவேற்றியதாலும் உன் புதல்வர் இஸ்ராயேலின் அரியணையில் நான்காம் தலைமுறைவரை வீற்றிருப்பர்" என்றார்.
31 ஆயினும் ஏகு இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருடைய சட்டத்தைத் தன் முழு இதயத்தோடும் கடைப்பிடிக்கவில்லை. இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய எரோபோவாமின் பாவ வழியினின்றும் விலகினானில்லை.
32 அக்காலத்தில் ஆண்டவர் இஸ்ராயேலரின்மீது மனம் சலிப்புற்றார். அசாயேல் இஸ்ராயேல் நாடு எங்கணும் வாழ்ந்து வந்த மக்களைக் கொன்று குவித்தான்.
33 அதாவது யோர்தான் நதி முதல் அதற்குக் கிழக்கே இருந்த காலாத், காத், ரூபன், மனாசே முதலிய நாடுகளையும், ஆர்னோன் நதி தீரத்தில் அமைந்திருந்த அரோயர் முதல் காலாத், பாசான் நாடுகளையும் அழித்தான்.
34 ஏகுவின் மற்றச் செயல்களும், அவனுடைய வீரச்செயல்களும் இஸ்ராயேல் அரசர்களது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
35 ஏகு தன் முன்னோரோடு துயிலுற்றான். சமாரியா நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோவக்காசு அவனுக்குப்பின் அரசன் ஆனான்.
36 ஏகு சமாரியாவில் இஸ்ராயேலரின் மீது இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
அதிகாரம் 11
1 ஒக்கோசியாசின் தாய் அத்தாலி தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு அரச குலத்தார் அனைவரையும் கொன்று குவிக்கத் தொடங்கினாள்.
2 யோராம் அரசனின் மகளும் ஒக்கோசியாசின் சகோதரியுமான யோசபா, கொல்லப்பட இருந்த அரச புதல்வரில் ஒருவனான ஒக்கோசியாசின் மகன் யோவாசையும், அவனுடைய தாதியையும் பள்ளியறையினின்று இரகசியமாய்க் கூட்டிச் சென்று அத்தாலியாளுக்குத் தெரியாத இடத்தில் ஒளித்து வைத்து அவனது உயிரைக் காப்பாற்றினாள்.
3 யோவாசு ஆறு ஆண்டுகள் தன் தாதியோடு கோயிலில் தலைமறைவாய் இருந்தான். அப்பொழுதெல்லாம் அத்தாலியே நாட்டை ஆண்டு வந்தாள்.
4 ஏழாம் ஆண்டிலோ, யோயியாதா நூற்றுவர் தலைவர்களையும் வீரர்களையும் வரவழைத்து, ஆண்டவரின் ஆலயத்திற்குள் கூட்டிச் சென்று அவர்களோடு உடன்படிக்கை செய்தார். பின், கோயிலில் அவர்களை ஆணையிடச் செய்து, அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டி,
5 என் கட்டளைப்படி, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்களில் மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் ஓய்வு நாளில் வந்து அரசனின் அரண்மனையைக் காக்க வேண்டும்.
6 மேலும் மூன்றில் ஒரு பங்கினர் சூர் என்ற வாயிலில் இருக்க வேண்டும். எஞ்சிய வீரர்கள் கேடயம் தாங்குவோர் தங்குமிடத்திற்குப் பின்னேயுள்ள வாயிலிலிருந்து கொண்டு மெசாவின் வீட்டைப் பாதுகாக்கவேண்டும்.
7 உங்களில் ஓய்வு நாளிலே அலுவல் புரிவோரில் இரண்டு பங்கு வீரர்கள் அரசனைச் சூழ்ந்து நிற்பதோடு கோயிலையும் காவல் புரியவேண்டும்.
8 நீங்கள் கையில் ஆயுதம் தாங்கி அவரைக் காப்பதோடு, யாராவது கோயிலின் முற்றத்தில் நுழைந்தால் அவர்களை உடனே கொன்று விட வேண்டும். அரசர் வெளியே வந்தாலும், உள்ளே போனாலும் அவர் கூடவே நீங்கள் இருக்க வேண்டும்" எனக் கட்டளையிட்டார்.
9 குரு யோயியாதா கட்டளையிட்டபடி நூற்றுவர் தலைவர் நடந்துகொண்டனர். ஓய்வு நாளில் தத்தம் முறைப்படி வந்து போய்க்கொண்டிருக்கிற தங்கள் வீரர்கள் அனைவரையும் அவரவர் கூட்டிக் கொண்டு குரு யோயியாதாவிடம் வந்தனர்.
10 அவர் ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டி முதலிய ஆயுதங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
11 அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தாங்கியவராய் கோயிலின் வலப்புறம் தொடங்கிப் பீடத்தின் இடப்புறம் வரை ஆலயத்தில் அரசனைச் சூழ்ந்து நின்றனர்.
12 யோயியாதா இளவரசனை வெளியே கூட்டிவந்து அவனது தலையின் மேல் முடியை வைத்து, கையில் திருச்சட்ட நூலை அளித்தார்; இவ்வாறு அவனை அரசனாக அபிஷுகம் செய்தனர். பிறகு எல்லாரும், "அரசர் வாழ்க!" என்று சொல்லிக் கைதட்டினர்.
13 அப்பொழுது மக்கள் ஓடிவரும் ஓசையை அத்தாலி கேட்டு, ஆண்டவரின் ஆலயத்தில் கூடி நின்ற மக்களிடம் வந்தாள்.
14 அப்போது வழக்கம்போல் அரசன் அரியணையில் வீற்றிருப்பதையும், அவன் அருகில் பாடகர்களும் எக்காளம் ஊதுபவர்களும் நிற்பதையும், எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்ட அவள் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "சதி, சதி!" என்று கூக்குரலிட்டாள்.
15 யோயியாதா நூற்றுவர் தலைவரான படைத் தலைவர்களை நோக்கி, "இவளைக் கோயில் வளாகத்துக்கு வெளியே கொண்டு போங்கள். எவனாவது இவளைப் பின்பற்றுவானானால், அவன் வாளுக்கிரையாவான்" எனக் கட்டளையிட்டார். ஏற்கெனவே, "ஆண்டவரின் ஆலயத்திற்குள் அவளைக் கொல்லலாகாது" என்று சொல்லியிருந்தார். படைத் தலைவர்கள் அவளைப் பிடித்து,
16 அரண்மனைக்கு அருகே 'குதிரைகளின் வாயில்' என்ற சாலையிலே அவளை இழுத்துக் கொண்டுபோய் அங்கு அவளைக் கொன்றனர்.
17 பின்பு யோயியாதா தாங்கள் ஆண்டவரின் மக்ககளாய் இருப்பதாக, அரசனும் மக்களும் ஆண்டவரோடும், மக்களும் அரசனும் தங்களுக்குள்ளேயும் உடன்படிக்கை செய்யச் செய்தார்.
18 அப்போது நாட்டின் மக்கள் எல்லாம் பாவாலின் கோயிலில் நுழைந்து, பீடங்களை இடித்துச் சிலைகளைச் சுக்கு நூறாய் உடைத்தெறிந்தனர். பாவாலின் பூசாரி மாத்தானையும் பீடத்திற்கு முன்பாகக் கொலைசெய்தனர். பிறகு குரு ஆண்டவரின் ஆலயத்திலும் காவலரை நிறுத்தி வைத்தார்.
19 அன்றியும் அவர் நூற்றுவர் தலைவரையும், மக்கள் அனைவருடன் கெரேத், பெலேத் என்ற படைகளையும் சேர்த்து, அரசனை ஆண்டவரின் ஆலயத்தினின்று அழைத்துக் கொண்டு, 'கேடயம் தாங்குவோரின்' வாயில் வழியாக அரண்மனைக்கு வந்தார். அங்கு அரசன் தன் அரியணையில் அமர்ந்தான்.
20 நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். நகரில் அமைதி நிலவிற்று. அத்தாலி என்பவளோ அரசனின் அரண்மனை அருகே வாளுக்கு இரையானாள்.
21 யோவாசு அரியணை ஏறுகையில் அவனுக்கு வயது ஏழு.
அதிகாரம் 12
1 ஏகு ஆட்சி புரிந்த ஏழாம் ஆண்டில் யோவாசு அரியணை ஏறி யெருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெத்சாபே ஊராளாகிய அவனுடைய தாயின் பெயர் சேபியா.
2 குரு யோயியாதா யோவாசுக்கு அறிவுரை கூறி வந்த நாளெல்லாம் அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான்.
3 ஆயினும் (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அங்கே பலியிட்டுக் கொண்டும் தூபங்காட்டிக் கொண்டும் இருந்தனர்.
4 யோவாசு குருக்களை நோக்கி, "வழிப்போக்கர்கள் ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகிற பணத்தையும், ஒருவனுடைய மீட்புக்காகக் கொடுக்கப்படுகிற பணத்தையும், மக்கள் தமது விருப்பப்படி கொண்டு வருகிற பணத்தையும்,
5 குருக்கள் தத்தம் வரிசைப்படி பெற்று அவற்றைக் கொண்டு தேவைப்பட்ட இடங்களையெல்லாம் பழுது பார்ப்பார்களாக" என்றான்.
6 ஆயினும் யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டு வரை குருக்கள் ஆலயத்தைப் பழுது பார்க்கவில்லை.
7 எனவே யோவாசு அரசன் பெரிய குருவையும் குருக்களையும் வரவழைத்து, அவர்களைப் பார்த்து, "நீங்கள் ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கிறதில்லை? நீங்கள் வரிசைப்படி பெற்று வந்த பணத்தை இனி மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது. அதை ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காகச் செலுத்துங்கள்" என்றான்.
8 அதுமுதல் குருக்கள் மக்களின் கையினின்று பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஆலயத்தைப் பழுது பார்க்கவும் தடை விதிக்கப்பட்டது.
9 பெரிய குரு யோயியாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, அதை ஆலயத்தில் நுழைபவர்கட்கு வலப்பக்கமாகப் பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காத்து வந்த குருக்கள் ஆண்டவரின் ஆலயத்துக்கு வரும் பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.
10 அப்பணப் பெட்டியில் அதிகம் பணம் சேர்ந்து விட்டது என்று கண்டால், அரசனுடைய கணக்கனும் பெரிய குருவும் வந்து ஆலயத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொட்டி எண்ணுவார்கள்.
11 எண்ணி முடிந்த பின் அதை ஆலயத்துக் கொத்தர்களின் தலைவர்களிடம் ஒப்படைப்பர். அப்பணம் ஆலயத்தைப் பழுது பார்க்கும் கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும்,
12 கல் வெட்டுபவர்களுக்கும், மரங்களையும் பொளிந்த கற்களையும் வாங்குவதற்கும், இவ்வாறாக ஆலயத்தைப் பழுது பார்த்து முடிக்க ஆகும் எல்லாச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
13 ஆயினும் அது ஆலயத்திற்குத் தேவையான பாத்திரங்கள், முட்கரண்டிகள், தூபக்கலசங்கள், எக்காளங்கள், பொன், வெள்ளிக் கிண்ணங்கள் முதலியவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படவில்லை.
14 ஆலயத்தைப் புதுப்பிக்கும் அலுவலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மட்டுமே அப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.
15 கூலியாட்களுக்குக் கொடுக்கும்படி பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கப் பட வில்லை. இவர்கள் கபடில்லாமல் உண்மையுடன் செலவிட்டு வந்தார்கள்.
16 குற்றத்திற்கும் பாவத்திற்கும் பரிகாரமாகக் கொடுக்கப்படும் பணம் ஆலயக் கருவூலத்தில் சேர்க்கப் படவில்லை. ஏனெனில், அது குருக்களுக்குச் சேரவேண்டியதாயிருந்தது.
17 சீரியா நாட்டு அரசன் அசாயேல் கேத் நகரோடு போரிட்டு அதைப் பிடித்தான். பின்பு அங்கிருந்து அவன் யெருசலேமைப் பிடிக்கப் புறப்பட்டு வந்தான்.
18 ஆதலால் யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோராகிய யோசபாத், யோராம், ஒக்கோசியாசு என்ற யூத அரசர்களாலும், தன்னாலும் ஆண்டவருக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்த யாவற்றையும், ஆலயத்துக் கருவூலங்களிலிருந்தும் அரண்மனையிலிருந்தும் கிடைத்த எல்லாப் பணத்தையும் எடுத்துச் சீரியாவின் அரசன் அசாயேலுக்கு அனுப்பி வைத்தான். அவனும் யெருசலேமை விட்டுத் திரும்பிப் போனான்.
19 யோவாசு அரசனின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசர்களுடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
20 யோவாசின் பணியாளர்கள் அவனுக்கு எதிராய் எழுந்து, தங்களுக்குள் சதிசெய்து, செல்லா என்ற இறக்கத்திலிருந்த மெல்லோ அரண்மனையில் அவனைக் கொன்றனர்.
21 அவனைக் கொன்றவர்கள் செமகாத்தின் மகன் யோசக்காரும், சோமரின் மகன் யோசபாத் என்ற அவனுடைய ஊழியனுமாகும். இறந்துபோன அவனைத் தாவீதின் நகரில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகே அடக்கம் செய்தனர். அவனுக்குப்பின் அவனுடைய மகன் அமாசியாசு அரியணை ஏறினான்.
அதிகாரம் 13
1 யூதா அரசன் ஒக்கோசியாசின் மகன் யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டில், ஏகுவின் மகன் யோவக்காசு சமாரியாவில் இஸ்ராயேலைப் பதினேழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
2 அவன் ஆண்டவர் திருமுன் தீயவற்றைச் செய்து வந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழி நின்று, அவற்றை விட்டு விலகாது நடந்து வந்தான்.
3 ஆகையால் ஆண்டவர் இஸ்ராயேலின் மேல் கோபம் கொண்டு அவர்களைச் சீரிய அரசன் அசாயேலின் கையிலும், அசாயேலின் மகன் பெனாதாத்தின் கையிலும் ஒப்படைத்தார்.
4 ஆனால் யோவக்காசு ஆண்டவரை இரந்து மன்றாடவே, ஆண்டவரும் அவனுக்குச் செவிசாய்த்தார். சீரியாவின் அரசன் இஸ்ராயேலருக்கு இழைத்த துன்பத்தால் அவர்கள் மிகவும் அவதிப்படுவதைக் கண்டு, ஆண்டவர் மனம் இரங்கினார்.
5 இஸ்ராயேலுக்கு ஒரு மீட்பரைக் கொடுக்க, இஸ்ராயேலர் சீரியருடைய கைகளினின்று விடுபட்டனர். இஸ்ராயேல் மக்கள் முன் போல் தங்கள் கூடாரங்களில் குடியிருந்தனர்.
6 ஆயினும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய எரோபோவாமின் வீட்டாருடைய பாவங்களை விட்டு விலகாது, அவன் காட்டிய வழியிலேயே நடந்து வந்தனர். சமாரியாவில் (விக்கிரக ஆராதனைக்கென அமைக்கப்பட்டிருந்த) தோப்பும் அழிக்கப்படவில்லை.
7 யோவக்காசுக்கு அவன் குடிகளில் ஐம்பது குதிரை வீரரும் பத்துத் தேர்களும் பதினாயிரம் காலாட் படையினருமே மீதியாயிருந்தனர். ஏனெனில் சீரியா நாட்டு அரசன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்தின் தூசி போல் ஆக்கியிருந்தான்.
8 யோவக்காசின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும், அவனது பேராற்றலும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
9 யோவாக்காசு தன் முன்னோரோடு துயில் கொண்டான். சமாரியாவில் அவனைப் புதைத்தனர். அவனுடைய மகன் யோவாசு அவனுக்குப் பின் அரசாண்டான்.
10 யூதாவின் அரசன் யோவாசு அரசனான முப்பத்தேழாம் ஆண்டில், யோவக்காசின் மகன் யோவாசு சமாரியாவில் இஸ்ராயேலுக்கு அரசனாகிப் பதினாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
11 அவன் ஆண்டவர் திருமுன் தீமையானதைச் செய்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய எரோபோவாமின் பாவ வழியினின்று விலகாது அதிலேயே நடந்து வந்தான்.
12 யோவாசின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவனது வீரமும், யூதா அரசன் அமாசியாசோடு அவன் போரிட்ட விதமும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
13 யோவாசு தன் முன்னோரோடு துயில் கொண்டபின், அவனுடைய மகன் எரோபோவாம் அவனது அரியணையில் ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ராயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.
14 நிற்க, எலிசேயுவுக்கு இறுதி நோய் வந்துற்றது. அப்போது, இஸ்ராயேல் அரசன் யோவாசு அவரிடம் சென்று, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ராயேலின் தேரே! அதன் சாரதியே!" என்று அவருக்கு முன்பாக நின்று கதறி அழுதான்.
15 எலிசேயு அவனைப் பார்த்து, "எனக்கு ஒரு வில்லையும் அம்புகளையும் கொண்டு வாரும்" என்றார். இஸ்ராயேல் அரசன் ஒரு வில்லையும் அம்புகளையும் கொண்டு வந்தான்.
16 எலிசேயு அப்போது அரசனை நோக்கி, "உமது கையை இந்த வில்லின் மேல் வையும்" என்றார். அவன் தன் கையை வில்லின் மேல் வைக்க எலிசேயு தம் கைகளை அரசனின் கைகளின் மேல் வைத்து,
17 அவனைப் பார்த்து, "கீழ்த்திசையை நோக்கியிருக்கிற சன்னலைத் திறவும்" என்றான். அவன் அதைத் திறந்தவுடன் எலிசேயு, "ஓர் அம்பை எய்யும்" என்றான். அவனும் அவ்வாறே எய்தான். எலிசேயு, "அது ஆண்டவருடைய மீட்பின் அம்பு. சீரியரிடமிருந்து விடுதலைபெறும் மீட்பின் அம்பு. நீர் ஆபேக்கில் சீரியரை முறியடிப்பீர்" என்றார்.
18 மறுபடியும், "அம்புகளைக் கையில் எடும்" என்றார். அவற்றை அவன் எடுக்கவே, மறுபடியும் எலிசேயு "தரையில் அம்பை எய்யும்" என்றார். அவன் மூன்று முறை எய்து விட்டு நின்றான்.
19 ஆண்டவரின் மனிதர் அவன் மேல் கோபம் கொண்டவராய், "நீர் ஐந்து, ஆறு முறை எய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் சீரியரை முற்றும் கொன்றழித்திருப்பீர். இப்போதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பீர்" என்றார்.
20 இதன் பின் எலிசேயு இறந்தார். அவரை அடக்கம் செய்தனர். அதே ஆண்டில் மோவாப் நாட்டிலிருந்து கொள்ளைக் கூட்டத்தினர் நாட்டில் நுழைந்தனர்.
21 அப்போது ஒரு மனிதனைப் புதைக்கச் சென்று கொண்டிருந்த சில இஸ்ராயேலர் அக்கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டு, பிணத்தை எலிசேயுவின் கல்லறையிலே போட்டனர். அப்பிணம் எலிசேயுவின் எலும்புகளின் மேல் பட்டவுடனே அம்மனிதன் உயிர்த்து எழுந்தான்.
22 யோவக்காசின் காலத்தில் சீரியாவின் அரசன் அசாயேல் இஸ்ராயேலைத் துன்புறுத்தி வந்தான்.
23 ஆண்டவர் அவர்கள் மேல் மனம் இரங்கி ஆபிரகாம், ஈசாக், யாக்கோப் என்பாரோடு தான் செய்திருந்த உடன்படிக்கையின் பொருட்டு அவர்களை நினைவு கூர்ந்தார். ஆதலால் அவர் இன்று வரை அவர்களை அழிக்கவும் இல்லை, அவர்களை முற்றும் தள்ளிவிடவும் இல்லை.
24 மேலும், சீரியாவின் அரசன் அசாயேல் இறந்துபட, அவனுடைய மகன் பெனாதாத் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
25 யோவக்காசின் மகன் யோவாசு அசாயேலோடு போரிட்டு, தன் தந்தை யோவக்காசின் கையினின்று அவன் பிடித்திருந்த நகர்களை எல்லாம் அவனுடைய மகன் பெனாதாதின் கையினின்று திரும்பக் கைப்பற்றி, அவனை மூன்று முறையும் முறியடித்தான். ஆதலால் பெனாதாத் இஸ்ரயேலின் நகர்களை அவனுக்குத் திருப்பிக் கொடுக்க நேர்ந்தது.
அதிகாரம் 14
1 இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறினான்.
2 அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். யெருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவன் தாயின் பெயர் யோவாதான்.
3 அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையானதையே செய்து வந்தான். ஆயினும், தன் தந்தை தாவீது போல் அல்லன்; தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் தானும் செய்தான்.
4 (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப் பெற்றிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை; மக்கள் இன்னும் அங்கே பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
5 ஆட்சி தன் கைக்கு வந்தவுடன் அரசனாய் இருந்த தன் தந்தையைக் கொலை செய்த ஊழியர்களைக் கொன்று போட்டான்.
6 பிள்ளைகள் செய்த பாவத்துக்காகத் தந்தையர் சாக வேண்டாம்; தந்தையர் செய்த பாவத்துக்காகப் பிள்ளைகள் உயிரிழக்க வேண்டாம். அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் சாகக்கடவான்" என ஆண்டவர் கட்டளையிட்டபடி மோயீசனின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளது. அதன்படி அமாசியாசு தன் தந்தையைக் கொன்றவர்களுடைய பிள்ளைகளைக் கொன்று போடவில்லை.
7 அவன் உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் இதுமேயரை முறியடித்து, கற்கோட்டையைப் போரிட்டுப் பிடித்து, அதற்கு இது வரை வழங்கி வருகிற எக்தேயெல் என்ற பெயரை இட்டான்.
8 அப்போது அமாசியாசு இஸ்ராயேலின் அரசன் ஏகுவின் மகன் யோவக்காசுக்குப் பிறந்தவனாகிய யோவாசிடம் ஆள் அனுப்பி, "வாரும், போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்" என்று சொல்லச் சொன்னான்.
9 அதற்கு இஸ்ராயேல் அரசன் யோவாசு, யூதாவின் அரசன் அமாசியாசிடம் தூதரை அனுப்பி, "லீபானிலுள்ள நெருஞ்சிச் செடி லீபானிலிருக்கும் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, ' என் மகனுக்கு உன் மகளை மனைவியாகத் தரவேண்டும் ' என்றதாம்! ஆனால் அந்த லீபான் காட்டு விலங்குகள் அந்த வழியே போகையில், நெருஞ்சிச் செடியைக் காலால் மிதித்துப் போட்டனவாம்!
10 நீர் இதுமேயரை முறியடித்ததினால் செருக்குற்றுள்ளீர் போலும். நீர் பெற்ற புகழுடன் உம் வீட்டிலேயே இரும். நீரும் உம்மோடு யூதாவும் வீழ்ச்சியுறும்படி தீமையைத் தேடிக்கொள்வானேன்?" எனச் சொல்லச் சொன்னான்.
11 அதற்கு அமாசியாசு செவிகொடுக்கவில்லை. எனவே இஸ்ராயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். இவனும் யூதா அரசன் அமாசியாசும் யூதாவின் நகர் பெத்சாமேசின் அருகே ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
12 யூதாவின் மக்கள் இஸ்ராயேலருக்கு முன் தோற்றுத் தத்தம் கூடாரங்களுக்கு ஓடிப்போயினர்.
13 இஸ்ராயேல் அரசன் யோவாசு, பெத்சாமேசில் ஒக்கோசியாசுக்குப் பிறந்த யோவாசின் மகனும் யூதாவின் அரசனுமான அமாசியாசைச் சிறைப்பிடித்து, யெருசலேமுக்குக் கொண்டு சென்றான். யெருசலேமின் மதிற்சுவரில் எபிராயீம் வாயில் முதல் மூலை வாயில் வரை நானூறு முழ நீளம் இடித்துத் தள்ளிவிட்டு,
14 ஆண்டவருடைய ஆலயத்திலும் அரசனுடைய கருவூலத்திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையுமே எடுத்துக் கொண்டு, சிலரைப் பிணையாளராகவும் பிடித்துக் கொண்டு சமாரியவுக்குத் திரும்பிச் சென்றான்.
15 யோவாசின் மற்றச் செயல்களும், யூதா அரசன் அமாசியாசுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலும் இஸ்ராயேல் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
16 யோவாசு தன் முன்னோரோடு துயில் கொண்ட பின், சமாரியாவில் இஸ்ராயேல் அரசருடைய கல்லறையில் புதைக்கப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் எரோபோவாம் அரசன் ஆனான்.
17 இஸ்ராயேல் அரசன் யோவக்காசின் மகன் யோவாசு மாண்டபின், யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு பதினைந்து ஆண்டுகள் உயிரோடு இருந்தான்.
18 அமாசியாசின் மற்றச் செயல்கள் யூதா அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
19 யெருசலேமில் சிலர் அவனுக்கு எதிராகச் சதி செய்தனர். எனவே அவன் லாக்கீசு நகருக்கு ஓடிப்போனான். சதி செய்தவர்கள் அவனைப் பிடிக்க லாக்கீசுக்கு ஆள் அனுப்பி அவனை அங்குக் கொலை செய்தனர்.
20 பின் அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து தாவீதின் நகரில் அவனுடைய முன்னோரின் கல்லறையில் அவனைப் புதைத்தனர்.
21 யூதா மக்கள் எல்லாரும் அப்பொழுது பதினாறு வயதினனாய் இருந்த அசாரியாசைத் தேர்ந்தெடுத்து, அவனை அவன் தந்தை அமாசியாசுக்குப் பதிலாக அரசனாக்கினர்.
22 அரசன் தன் முன்னோரோடு துயில் கொண்டபின், இவன் எலாத் நகரைக் கட்டி, அதைத் திரும்ப யூதா அரசுடன் இணைத்துக் கொண்டான்.
23 யூதாவின் அரசன் யோவாசின் மகன் அமாசியாசு அரியணை ஏறிய பதினைந்தாம் ஆண்டில், இஸ்ராயேல் அரசன் யோவாசின் மகன் எரோபோவாம் சமாரியாவில் அரசுகட்டில் ஏறி, நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
24 இவன் ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவங்களில் ஒன்றையும் அவன் விட்டுவைக்கவில்லை.
25 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் ஒபேரில் அமைந்திருந்த கேத் ஊரானாகிய தம் அடியானும் அமாத்தியின் புதல்வனுமாகிய யோனாசு என்ற இறைவாக்கினர் மூலம் கூறியபடி, எரோபோவாம் ஏமாத் முதல் பாலைவனக் கடல் வரை இஸ்ராயேலின் எல்லைகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்.
26 ஆண்டவர் இஸ்ராயேலர் பட்ட மிதமிஞ்சிய துன்பத்தையும், சிறையில் அடைப்பட்டவர்களும், மக்களில் கடைப்பட்டவர்களும் முதலாய் எல்லோருமே துன்புறுவதையும், அவர்களுக்கு உதவி செய்பவர் ஒருவரும் இல்லாதிருந்ததையும் கண்ணுற்றார்.
27 இஸ்ராயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவோம்" என்று ஆண்டவர் சொல்லவில்லை; ஆனால் யோவாசின் மகன் எரோபோவாமின் மூலம் அவர்களை மீட்டார்.
28 எரோபோவாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், போரில் அவன் காட்டிய வீரமும், யூதா நாட்டுடன் இருந்த தமாஸ்து, ஏமாத் நகர்களையும் இஸ்ராயேல் நாட்டுடன் மீண்டும் இணைத்துக் கொண்ட விதமும் இஸ்ராயேல் அரசர்களது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
29 எரோபோவாம் தன் முன்னோரான இஸ்ராயேல் அரசர்களோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் சக்கரியாசு அரசாண்டான்.
அதிகாரம் 15
1 இஸ்ராயேலின் அரசன் எரோபோவாமின் ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில், யூதாவின் அரசன் அமாசியாசின் மகன் அசாரியாசு அரியணை ஏறினான்.
2 அப்பொழுது அவனுக்கு வயது பதினாறு. யெருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். யெருசலேம் நகரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் எக்கேலியா.
3 அவன் தன் தந்தை அமாசியாசு செய்தபடி ஆண்டவர் திருவுளத்தையே நிறைவேற்றி வந்தான்.
4 ஆயினும் (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அங்கே பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.
5 இதனால் ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்தார். அவன் தன் இறுதி நாள் வரை தொழுநோய்ப்பட்டு, தனியே ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தான். அரசனின் மகன் யோவாத்தான் அரண்மனையில் அதிகாரியாய் இருந்து நாட்டு மக்களுக்கு நீதி வழங்கினான்.
6 அசாரியாசின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் யூதாவின் அரசரது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
7 அசாரியாசு தன் முன்னோரோடு துயில் கொள்ள, அவனைத் தாவீதின் நகரில், அவனுடைய முன்னோருக்கு அருகே அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோவாத்தான் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
8 யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில் எரோபோவாமின் மகன் சக்கரியாசு சமாரியாவில் இஸ்ராயேலை ஆறுமாதம் ஆண்டான்.
9 இவனும் தன் முன்னோர்கள் செய்தது போல் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து வந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமுடைய பாவ வழிகளை விட்டு அவன் விலகவில்லை.
10 ஜாபேசின் மகன் செல்லும் அவனுக்கு எதிராய்ச் சதி செய்து அவனை வெளிப்படையாய்க் கொன்று விட்டு, ஆட்சியைக் கைப்பற்றினான்.
11 சக்கரியாசின் மற்றச் செயல்கள் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
12 உன் புதல்வர் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருப்பர்" என்று ஆண்டவர் ஏகுவுக்குக் கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.
13 யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஜாபேசின் மகன் செல்லும் அரசன் ஆனான். ஆனால் சமாரியாவில் அவன் ஒரு மாதந்தான் ஆட்சி புரிந்தான்.
14 காதின் மகன் மனோகேம் தேர்சாவிலிருந்து புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்து, ஜாபேசின் மகன் செல்லுமைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பதிலாக அரியணை ஏறினான்.
15 செல்லுமினுடைய மற்ற எல்லாச் செயல்களும் அவன் செய்த சதியும் இஸ்ராயேல் மன்னர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
16 அக்காலத்தில் மனோகேம் தாப்சா நகரை அழித்துவிட்டு, தேர்சா முதல் அதன் எல்லைகள் வரையுள்ள குடிகளையும் கொன்றான். அன்றியும் கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.
17 யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் காதின் மகன் மனோகேம் இஸ்ராயேலின் அரசனாகி சமாரியாவில் பத்து ஆண்டுகள் அரசாண்டான்.
18 ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அன்றியும் தன் வாழ்நாள் முழுதும் இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளைவிட்டு அவன் விலகினானில்லை.
19 அசீரியாவின் அரசன் பூல் இஸ்ராயேல் நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்போது மனாகேம் பூலின் உதவியால் தன் ஆட்சி நிலைபெறும் பொருட்டு, ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளிக்காசுகள் கொடுத்தான்.
20 மனோகேம் இப்பணத்தை இஸ்ராயேலிலுள்ள வலியோர், செல்வந்தர் முதலியவர்களிடமிருந்து வசூல் செய்திருந்தான். ஆள் ஒன்றுக்கு ஐம்பது சீக்கல் வெள்ளி வீதம் அசீரியா அரசனுக்குக் கொடுக்கும்படி பணித்தான். எனவே அசீரியா அரசன் நாட்டில் சிறிதும் தாமதியாது திரும்பிவிட்டான்.
21 மனாகேமின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் இஸ்ராயேல் அரசருடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
22 மனாகேம் தன் முன்னோரோடு துயில் கொண்டான். அவனுடைய மகன் பசேயா அவனுக்குப்பின் அரசனானான்.
23 யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் ஐம்பதாம் ஆண்டில் மனாகேமின் மகன் பசேயா இஸ்ராயேலுக்கு அரசனாகி சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி புரிந்தான்.
24 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளைவிட்டு அவன் விலகவில்லை.
25 ரொமேலியாவின் மகனும், படைத்தலைவனுமான பாசே அவனுக்கு எதிராகச் சதி செய்து தன்னோடு இருந்த ஐம்பது காலாத்தியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோபுரத்திற்கு வந்து, அக்கோப், அரியே ஆகியவர்களின் முன் அரசனைக் கொன்றுவிட்டு அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
26 பசேயாவின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் எழுதப் பட்டுள்ளன.
27 யூதாவின் அரசன் அசாரியாசினுடைய ஆட்சியின் ஐம்பத்திரண்டாம் ஆண்டில் ரொமேலியாவின் மகன் பாசே இஸ்ராயேலுக்கு அரசனாகி இருபது ஆண்டுகள் அரசாண்டான்.
28 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அன்றியும் அவன் இஸ்ராயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நாபாத்தின் மகன் எரோபோவாமின் பாவ வழிகளை விட்டு விலகவில்லை.
29 இஸ்ராயேல் அரசன் பாசேயுடைய ஆட்சி காலத்தில், அசீரியரின் அரசன் தெகிளாத்-பலசார் இஸ்ராயேல் நாட்டின் மீது படையெடுத்து வந்து அயியோனையும், மவாக்காவிலுள்ள அபேல் என்ற இடத்தையும், ஜானோயே, கேதஸ், அசோர், காலாத், கலிலேயா ஆகிய இடங்களையும், நெப்தலி நாடு முழுவதையும் பிடித்ததுமன்றி, அந்நாட்டுக் குடிகளையும் சிறைப்பிடித்து அசீரியா நாட்டிற்குக் கொண்டு போனான்.
30 ஏலாவின் மகன் ஒசேயோ ரொமேலியாவின் மகன் பாசேயுக்கு எதிராகச் சதி செய்து, பதுங்கியிருந்து கொண்டு அவனைத் தாக்கிக் கொன்று போட்டான். ஒசியாசின் மகன் யோவாத்தாமின் ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அவனுக்குப்பின் இவன் அரியணை ஏறினான்.
31 பாசேயின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் வரையப் பட்டுள்ளன.
32 இஸ்ராயேலின் அரசனும் ரொமேலியாவின் மகனுமான பாசேயினுடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசன் ஒசியாசின் மகன் யோவாத்தான் தன் ஆட்சியைத் தொடங்கினான்.
33 அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. இவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சாதோக்கின் மகளான அவன் தாயின் பெயர் எருசா.
34 அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து கொண்டு, தன் தந்தை ஒசியாசு காட்டிய வழியைப் பின்பற்றினான்.
35 ஆயினும் (விக்கிரக ஆராதனைக்கென அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளின் மேல் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். ஆலயத்தின் உயர்ந்த வாயிலைக் கட்டியவன் இவனே.
36 யோவாத்தாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும் யூதாவின் அரசருடைய நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
37 அந்நாட்களில் ஆண்டவர் சீரியாவின் அரசன் ரசீனையும் ரொமேலியாவின் மகன் பாசேயையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார்.
38 யோவாத்தாம் தன் முன்னோரோடு துயில் கொள்ள, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் ஆக்காசு அவனுக்குப் பின் அரசன் ஆனான்.
அதிகாரம் 16
1 ரொமேலியாவின் மகன் பாசேயினுடைய ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோவாத்தாமின் மகன் ஆக்காசு அரியணை ஏறினான்.
2 அரசனான போது அவனுக்கு இருபது வயது; அவன் யெருசலேமில் பதினாறு ஆண்டுகள் அரசோச்சினான். அவன் தன் தந்தையான தாவீதைப்போல், தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நல்லவனாய் நடந்து கொள்ளவில்லை.
3 இஸ்ராயேல் அரசர்கள் நடந்த வழியிலேயே தானும் நடந்து, ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை முன்னிட்டு அழித்திருந்த புறவினத்தாரின் இழிவான பழக்க வழக்கத்தின் படியே தன் மகனைத் தீயில் நடக்கச் செய்து பொய்த்தேவர்கட்கு அவனைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
4 மேலும் மேடுகளிலும், குன்றுகளின் மேலும், தழை அடர்ந்த மரங்களுக்குக் கீழும் பலியிட்டுக் கொண்டு வந்தான். தூப வழிபாடும் நடத்தி வந்தான்.
5 அப்போது சீரியா நாட்டின் அரசன் ரசீனும், இஸ்ராயேலின் அரசனும் ரொமேலியாவின் மகனுமான பாசேயும் யெருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தனர். அவர்கள் ஆக்காசைத் தாக்கிய போதிலும் அவனை வெல்ல முடியாது போயினர்.
6 அப்போது சீரியாவின் அரசன் ரசீன், ஐலாவைச் சீரியாவோடு சேர்த்துக் கொண்டு அங்கு வாழ்ந்து வந்த யூதரை வெளியேற்றினான். இதுமேயர் ஐலாவுக்கு வந்து இன்றுவரை அங்கே குடியேறியிருக்கின்றனர்.
7 ஆக்காசு அசீரியாவின் அரசன் தெகிளாத்-பலசாரிடம் தூது அனுப்பி, "நான் உம் ஊழியனும் மகனுமாயிருக்கிறேன். நீர் இங்கு வந்து எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்யும் சீரியாவின் அரசனிடமிருந்தும் இஸ்ராயேல் அரசனிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டுகிறேன்" என்று சொன்னான்.
8 மேலும் ஆண்டவருடைய ஆலயத்திலும் அரண்மனைக் கருவூலத்திலும் அகப்பட்ட பொன்னையும் வெள்ளியையும் சேர்த்து அசீரிய அரசனுக்கு அவற்றைப் பரிசாக அனுப்பி வைத்தான்.
9 அசீரிய அரசன் அவனது விருப்பத்திற்கு இசைந்து, தமாஸ்கு நகரில் நுழைந்து, அதை அழித்து விட்டு, அதன் குடிகளைச் சிறைப்படுத்திச் சீரோனுக்குக் கொண்டு போனான். அன்றியும் ரசீனையும் கொன்றான்.
10 ஆக்காசு அசீரிய அரசனாகிய தெகிளாத் - பலசாரைச் சந்திக்கத் தமாஸ்கு நகருக்குச் சென்றான். தமாஸ்கு நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்ணுற்ற அரசன் ஆக்காசு எல்லா வேலைப் பாட்டுடனும் கூடிய அதன் மாதிரி ஒன்றை ஊரியா என்ற குருவுக்கு அனுப்பி வைத்தான்.
11 அரசன் ஆக்காசு தமாஸ்கு நகரிலிருந்து இட்டிருந்த கட்டளையின்படி, குரு ஊரியா ஒரு பீடத்தைக் கட்டித் தமாஸ்கு நகரினின்று அரசன் ஆக்காசு வந்து சேர்வதற்குள் அதை முடித்தார்.
12 அரசன் தமாஸ்கு நகரிலிருந்து வந்த போது அந்தப் பீடத்தைப் பார்த்து அதற்கு வழிபாடு செய்தான். பிறகு அதன் அருகில் சென்று தகனப் பலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தினான்.
13 மேலும் பானப் பலியையும் செலுத்தித்தான் செலுத்திய சமாதானப் பலிகளின் இரத்தத்தைத் தெளித்தான்.
14 அன்றியும் அவன் ஆண்டவர் திருமுன் இருந்த பித்தளைப் பலி பீடத்தை அங்கிருந்து அகற்றி ஆலயத்தின் முன்னிருந்தும், அதற்குக் குறிக்கப்பட்டிருந்த நடுப்பீடத்திலிருந்தும் எடுத்து வந்து அதனைத் தன் பலிபீடத்தின் அருகில் வடப்புறமாய் வைத்தான்.
15 பிறகு அரசன் ஆக்காசு குரு ஊரியாவை நோக்கி, "(நான் கட்டச் சொல்லிய) பெரிய பீடத்தின் மேல் நீர் காலையில் தகனப் பலியையும் மாலையில் காணிக்கைப் பலியையும், அரசனின் தகனப்பலி காணிக்கைப் பலிகளையும், எல்லா மக்களின் தகனப் பலிகளையும், காணிக்கைப் பலிகளையும் பானப் பலிகளையும் செலுத்தி, தகனப் பலியாகவோ காணிக்கைப் பலியாகவோ செலுத்தப்பட்ட விலங்குகளின் இரத்தத்தை எல்லாம் அதன்மேல் தெளிப்பீராக. பித்தளைப் பீடமோ தற்போது அப்படியே இருக்கட்டும். பிற்பாடு என் விருப்பப்படி செய்யலாம்" என்று கட்டளையிட்டான்.
16 அரசன் ஆக்காசு கட்டளையிட்ட அனைத்தையும் குரு ஊரியா செய்தார்.
17 மேலும் அரசன் ஆக்காசு சித்திர வேலைப்பாடுள்ள தாங்கிகளையும், அவற்றின் மேல் இருந்த கொப்பரைகளையும், வெண்கலக் காளைகளின் மேல் இருந்த கடல் தொட்டியையும் இறக்கிக் கற்களால் பாவப்பட்ட தளத்தில் வைத்தான்.
18 ஓய்வு நாளில் அரசன் ஆலயத்தில் நுழையும் பொருட்டுத் தான் கட்டியிருந்த முசாக் என்ற மண்டபத்தையும், வெளியிலிருந்து நுழையும் வாயிலையும் அசீரிய அரசனின் பொருட்டு ஆண்டவருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.
19 ஆக்காசு செய்த மற்றச் செயல்கள் யூதாவின் அரசரது நடபடி நூலில் வரையப்பட்டுள்ளன.
20 ஆக்காசு தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் தாவீதின் நகரில் தன் முன்னோருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் எசெக்கியாசு அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
அதிகாரம் 17
1 யூதாவின் அரசன் ஆக்காசினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசே அரசனாகிச் சமாரியாவில் இஸ்ராயேலை ஒன்பது ஆண்டுகள் ஆண்டு வந்தான்.
2 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். ஆயினும் தனக்கு முன் வாழ்ந்திருந்த இஸ்ராயேலின் அரசர்களைப் போல் செய்யவில்லை.
3 சீரிய அரசன் சல்மனாசார் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வர, ஓசே அவனுக்கு அடியானாகிக் கப்பம் செலுத்தி வந்தான்.
4 ஓசே ஆண்டுதோறும் அசீரிய அரசனுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை இனிச் செலுத்தாதிருக்கத் துணிந்து எகிப்திய அரசன் சுவாவிடம் ஆள் அனுப்பிக் கலகம் செய்ய விழைந்தான். அசீரிய அரசன் இதை அறிந்து, ஓசேயை முற்றுகையிட்டுப் பிடித்துச் சிறையில் வைத்தான்.
5 பின் சல்மனாசார் இஸ்ராயேல் நாடெங்கும் தன் படையுடன் சுற்றி வந்து, சமாரியாவைத் தாக்கி, அதை மூன்று ஆண்டுகளாக முற்றுகையிட்டான்.
6 ஓசேயின் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில் அசீரிய அரசன் சமாரியாவைப் பிடித்து, இஸ்ராயேலரை அசீரியா நாட்டிற்குச் சிறைப்பிடித்துக் கொண்டு போய், கோசான் நதியோரத்திலுள்ள மேது நாட்டின் நகர்களான ஆலாயிலும் காபோரிலும் அவர்களைக் குடியேறக் கட்டளையிட்டான்.
7 இஸ்ராயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும், அந்நாட்டு அரசன் பாரவோனின் ஆதிக்கத்தினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து பிற தெய்வங்களைத் தொழுது வந்தனர்.
8 மேலும் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களின் பொருட்டு அழித்திருந்த புறவினத்தாரின் இழிவான பழக்க வழக்கங்களின்படி நடந்து வந்தனர். இதனாலேயே இவை நிகழ்ந்தன.
9 இஸ்ராயேல் மக்கள் தாகாதனவற்றைச் செய்து தங்கள் கடவுளான அவரை மனம் நோகச் செய்ததுமன்றி, காவலர் காவல்புரியும் கோபுரங்கள் முதல் அரண் சூழ்ந்த நகர் வரை, ஊர்களெங்கும் (விக்கிரக ஆராதனைக்காக) தங்களுக்கு மேடுகளைக் கட்டினர்.
10 மேலும் உயர்ந்த எல்லாக் குன்றுகளின் மேலும், தழை அடர்ந்த மரங்களுக்குக் கீழும் சிலைகளையும் தோப்புகளையும் அமைத்துக் கொண்டனர்.
11 ஆண்டவர் அவர்கட்கு முன்பாக அந்நாட்டைவிட்டு வெளியேற்றியிருந்த புறவினத்தாரின் வழக்கப்படி அப்பீடங்களின் மேல் தூபமிட்டுத் தீயன பல புரிந்து ஆண்டவருக்குக் கோபமூட்டினர்.
12 செய்யக்கூடாது என்று ஆண்டவர் தங்களுக்கு விலக்கியிருந்த மிகவும் அருவருப்பான சிலைகளைச் செய்து அவை முன் பணிந்து தொழுது வந்தனர்.
13 ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர்கள் மூலமாயும் இஸ்ராயேலிலும் யூதாவிலும், "நீங்கள் இத் தகாத வழிகளை விட்டு மனம் திரும்புங்கள். நாம் உங்கள் முன்னோருக்கு அளித்ததும், நம் அடியார்களாகிய இறைவாக்கினரை அனுப்பிச் சொன்னதுமான முறையின் படி நம் கற்பனைகளையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு நடங்கள்" என்று திட்டவட்டமாய் எச்சரித்துக் கொண்டிருந்தார்.
14 ஆனால் அவர்கள் அதற்குச் செவி கொடுத்ததேயில்லை. ஆண்டவரான கடவுளுக்கு அடிபணிய மனமில்லாத தங்கள் முன்னோரைப்போல் தாங்களும் வணங்காக் கழுத்தினர் ஆயினர்.
15 மேலும் ஆண்டவரின் சட்டங்களையும், தங்கள் முன்னோரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கைகளையும், தங்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்தனர். வீணான வழிகளைப் பின்பற்றி வீணராகி, தங்களைச் சுற்றிலுமிருந்த இனத்தாரைப் பின்பற்றி ஆண்டவர் கட்டளையிட்டு விலக்கியிருந்தவற்றையே செய்து வந்தனர்.
16 தங்கள் கடவுளான ஆண்டவருடைய எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர். இரண்டு கன்றுக் குட்டிகளைச் செய்து அவற்றிற்குச் சோலைகளை அமைத்து, விண்மீன்கள் அனைத்தையும் தொழுது, பாவாலுக்கு ஊழியம் செய்தனர்.
17 தங்கள் புதல்வர்களையும் புதல்விகளையும் தீயில் நடக்கச் செய்து அவர்களைப் பாவாலுக்குக் காணிக்கை ஆக்கினர். குறிகேட்டும் சகுனம் பார்த்தும் இன்னும் பல தீயவழிகளில் நடந்தும் வந்ததினால் ஆண்டவருக்குக் கோபமுண்டாக்கினர்.
18 ஆகையால் ஆண்டவர் இஸ்ராயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தன் திருமுன் நின்றும் தள்ளி விட்டார். யூதா கோத்திரத்தார் மட்டுமே இன்னும் எஞ்சியிருந்தனர்.
19 யூதா கோத்திரத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை. இஸ்ராயேல் மக்கள் நடந்து வந்த தவறான வழியிலேயே தாங்களும் நடந்து வந்தனர்.
20 எனவே ஆண்டவர் இஸ்ராயேல் சந்ததியார் அனைவரையும் கைவிட்டு அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்திக் கொள்ளைக்காரரின் கையில் அவர்களை ஒப்படைத்து, அவர்களைத் தமது திருமுன் நின்று தள்ளிவிட்டார்.
21 இஸ்ராயேல் தாவீது வம்சத்தை விட்டுப் பிரிந்து, நாபாத்தின் மகன் எரோபோவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்ட காலம் முதல் இது நடந்து வந்தது. ஏனெனில், எரோபோவாம் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து அவர்களைப் பெரிய பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான்.
22 இவ்வாறு எரோபோவாம் செய்திருந்த எல்லாப் பாவ வழிகளிலும் இஸ்ராயேல் மக்கள் நடந்து,
23 ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாகச் சொல்லியிருந்தபடி அவர்களைத் தமது திருமுன் நின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவவழிகளை விட்டு விலகவில்லை. இஸ்ராயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்குக் கொண்டு போகப்பட்டு இன்று வரை அங்கே இருக்கிறார்கள்.
24 அசீரிய அரசன், பாபிலோன், கூத்தா, ஆவா, ஏமாத், செபார்வாயிம் முதலிய நாடுகளிலிருந்து மனிதரை அழைத்து வந்து, அவர்களை இஸ்ராயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியாவின் நகர்களில் குடியேறச் செய்தான். அவர்களும் சமாரியாவைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு அதன் நகர்களில் குடியேறினார்கள்.
25 அவர்கள் அங்கு ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே ஆண்டவர் அவர்களுக்குள் சிங்கங்களை ஏவி விட, அவை அவர்களைக் கொன்று போட்டன.
26 அப்பொழுது மக்கள் அசீரிய அரசனுக்குச் செய்தி அனுப்பி, "அரசே, தங்களால் இங்கிருந்து அனுப்பப்பட்டுச் சமாரியாவின் நகர்களில் குடியேறின இனத்தார் அந்த நாட்டின் கடவுளுடைய கட்டளைகளை அறிந்து நடக்கவில்லை; எனவே ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை அனுப்பினார். அம்மக்கள் அந்த நாட்டுக் கடவுளின் கட்டளைகளை அறியாது நடந்ததால், சிங்கங்கள் அவர்களைக் கொன்றுபோடுகின்றன" என்று அறிவித்தார்கள்.
27 அதற்கு அசீரிய அரசன், "நீங்கள் சிறைப்பிடித்துக் கொண்டு வந்த குருக்களில் ஒருவனைச் சமாரியாவுக்குக் கூட்டிப் போங்கள். அவன் அங்கே வந்து அவர்களுடன் தங்கியிருந்து, நம் மக்களுக்கு அந்த நாட்டுக் கடவுளின் கட்டளைகளைக் கற்பிக்கட்டும்" என்று கட்டளையிட்டான்.
28 அவ்வாறே சமாரியாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டுவரப்பட்டவர்களில் ஒரு குரு பேத்தலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவரை எங்ஙனம் வழிபடுவதென்று மக்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்.
29 ஆனால் ஒவ்வோர் இனத்தாரும் தத்தம் தெய்வங்களைச் செய்து கொண்டு, தாங்கள் குடியேறிய நகர்களில் சமாரியர் முன்பு அமைத்திருந்த மேடைக் கோயில்களில் அவற்றை வைத்தனர்.
30 பாபிலோனியர் சொகோத்--பெனோத் என்ற சிலையையும், கூத்தேயிலிருந்து வந்த மக்கள் நெர்கேல் சிலையையும், ஏமாத் மக்கள் அசிமா என்ற சிலையையும்,
31 ஏவையர் நேபகாசையும் தார்தாகையும் தங்களுக்குச் செய்து கொண்டனர். செபர்வாயிம் என்ற நாட்டிலிருந்து வந்தவர்களோ தங்கள் நாட்டுத் தெய்வங்களாகிய அதிராமெலேக்குக்கும் அனாமெலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பிலிட்டுப் (பலியிட்டு) வந்தனர்.
32 எனினும் இதனுடன் அவர்கள் ஆண்டவரையும் வழிபட்டு வந்தனர். மேடைக் கோயில்களில் தங்களுக்குள் கீழ்குலத்தவரைக் குருக்களாக ஏற்படுத்தினார்கள்.
33 அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்த போதிலும், தங்கள் சொந்த நாட்டு வழக்கப்படி தங்கள் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்து வந்தனர்.
34 அவர்கள் இன்று வரை தாங்கள் முன் கடைப்பிடித்து வந்த முறைகளின் படியே வாழ்ந்து வருகின்றனர். ஆண்டவர் பேரில் அவர்களுக்கு அச்சமுமில்லை; மேலும் ஆண்டவரால் இஸ்ராயேல் என்று அழைக்கப் பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட சடங்கு முறைகளையும், நீதி முறைகளையும் சட்டங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்கிறதுமில்லை.
35 இஸ்ராயேலரோடு ஆண்டவர் உடன்படிக்கை செய்து அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: "அன்னிய தெய்வங்களுக்கு அஞ்சவும் வேண்டாம்; அவர்களை வணங்கி வழிபடவும் வேண்டாம்; அவர்களுக்குப் பலியிடவும் வேண்டாம்.
36 உங்களைப் பெரும் ஆற்றலினாலும் தோள் வலிமையினாலும் எகிப்து நாட்டிலிருந்து மீட்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி, அவரையே வழிபட்டு, அவருக்கே பலியிடுங்கள்.
37 அவர் உங்களுக்கு எழுதிக் கொடுத்த சடங்கு முறைகளையும் நீதி முறைகளையும் சட்டங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்து வந்தால், நீங்கள் அன்னிய தெய்வங்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை.
38 நாம் உங்களோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அன்னிய தெய்வங்களை வழிபடாமலும்,
39 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்."
40 ஆயினும் அவர்கள் அதற்குச் செவி கொடாமல் முன் போலவே நடந்து வந்தனர்.
41 ஆகவே இவ்வினத்தார் ஆண்டவருக்கு அஞ்சியிருந்த போதிலும் தங்கள் சிலைகளுக்கும் வழிபாடு செய்து வந்தனர். அவர்களுடைய மக்களும் பேரப்பிள்ளைகளும் தங்கள் முன்னோர்களைப் போலவே இன்று வரை செய்து வருகின்றனர்.
அதிகாரம் 18
1 இஸ்ராயேலின் அரசனான ஏலாவின் மகன் ஓசேயினுடைய ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், ஆக்காசின் மகன் எசேக்கியாசு அரியணை ஏறினான்.
2 அப்பொழுது அவனுக்கு வயது இருபத்தைந்து. யெருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். சக்கரியாசின் மகளாகிய அவன் தாயின் பெயர் ஆபி.
3 அவன் தன் தந்தை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.
4 (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழித்து, சிலைகளை உடைத்து, அவற்றிற்கென அமைக்கப்படிருந்த சோலைகளையும் அழித்து, மோயீசனால் செய்து வைக்கப்பட்ட பித்தளைப் பாம்பையும் உடைத்தெறிந்தான். ஏனெனில், இஸ்ராயேல் மக்கள் அன்று வரை அதற்குத் தூப வழிபாடு செய்து வந்தனர். அது நோயஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது.
5 அவன் தன் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் மேல் முழு நம்பிக்கை வைத்தான். ஆதலால் அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும் அவனைப் போல் ஒருவனும் இல்லை.
6 அவன் ஆண்டவரையே சார்ந்து அவர் வழிகளினின்று விலகாமல், அவர் மோயீசனுக்கு இட்ட கட்டளைகளைப் பின்பற்றி வந்தான்.
7 ஆதலால் ஆண்டவரும் அவனோடு இருந்தார். அவன் தான் எடுத்துக்கொண்ட காரியங்கள் யாவற்றிலும் ஞானத்துடன் நடந்து கொள்வான். அசீரிய அரசனுக்குப் பணிந்திராமல் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
8 மேலும் பிலிஸ்தியரைக் காசாம் வரை துரத்தி, காவலர் காவல் புரியும் கோபுரங்கள் முதல் அரண் சூழ்ந்த நகர்கள் வரை அவர்களுடைய எல்லைகள் அனைத்தையும் அழித்தான்.
9 இஸ்ராயேலின் அரசனும் ஏலாவின் மகனுமாகிய ஓசேயுடைய ஆட்சியின் ஏழாவது ஆண்டில், அதாவது எசேக்கியாசு அரசனுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டில், அசீரிய அரசன் சல்மனாசார் சமாரியாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டு, பிடித்தான்;
10 அதைப் பிடிக்க மூன்று ஆண்டுகள் ஆயின. அரசன் எசேக்கியாசின் ஆட்சியினது ஆறாம் ஆண்டில், அதாவது இஸ்ராயேல் அரசன் ஓசேயுடைய ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில் இது நடந்தது.
11 அசீரிய அரசன் இஸ்ராயேலரைச் சிறைப்பிடித்து அசீரியாவுக்குக் கொண்டுபோய்க் கோசான் நதியோரமாயிருந்த மேதர்களுடைய நகர்களாகிய ஆலாயிலும் காபோரிலும் அவர்களைக் குடியேற்றினான்.
12 ஏனெனில், இஸ்ராயேலர் தங்கள் ஆண்டவரான கடவுளின் குரலுக்குச் செவிமடுக்காமல், அவரது உடன்படிக்கையை மீறி, ஆண்டவரின் ஊழியன் மோயீசன் இட்ட கட்டளைகள் யாவற்றையும் கடைப்பிடியாது அவற்றைப் புறக்கணித்தனர்.
13 எசேக்கியாசு ஆண்ட பதினான்காம் ஆண்டில், அசீரிய அரசன் செனாக்கெரிப் யூதாவிலிருந்த அரண் சூழ்ந்த நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுப் பிடித்தான்.
14 அப்போது யூதாவின் அரசன் எசேக்கியாசு லாக்கீசிலிருந்த அசீரிய அரசனிடம் தூதுவரை அனுப்பி, "நான் குற்றம் செய்தேன். எனவே என் நாட்டை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் என்மீது சுமத்துவதை எல்லாம் நான் செய்யத் தயார்" என்றான். அப்படியே அசீரிய அரசன் யூதாவின் அரசன் எசேக்கியாசை முந்நூறு தாலந்து வெள்ளியும், முப்பது தாலந்து பொன்னும் செலுத்தக் கட்டளையிட்டான்.
15 எசேக்கியாசு ஆண்டவருடைய ஆலயத்திலும், அரசனுடைய அரண்மனைக் கருவூலங்களிலுமிருந்து கிடைத்த எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.
16 மேலும், எசேக்கியாசு ஆண்டவரின் ஆலயக் கதவுகளின் நிலைகளிலே தான் பதித்திருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவற்றையும் அசீரிய அரசனுக்குக் கொடுத்தான்.
17 ஆயினும் அசீரிய அரசன் லாக்கீசிலிருந்து தர்த்தானையும் ரப்சாரிசையும் ரப்சாசேசையும் பெரும் படையுடன் யெருசலேமுக்கு எசேக்கியாசு அரசனிடம் அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு யெருசலேமுக்கு வந்து வண்ணாரத்துறை வழியருகிலுள்ள மேல்குளத்து வாய்க்கால் அருகே வந்து நின்றனர்.
18 அரசனை அழைத்தனர். அப்பொழுது அரண்மனையின் மேலதிகாரியும் எல்கியாசின் மகனுமாகிய எலியாக்கிமும் எழுத்தனான சொப்னாவும், அரசனுடைய பதிவாளனும் அசாபின் மகனுமாகிய யோவாகேயும் அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டனர்.
19 ரப்சாசேசு என்பவன் இவர்களைப் பார்த்து, "நீங்கள் எசேக்கியாசுக்குச் சொல்லவேண்டியதாவது: ' அசீரியப் பேரரசன் சொல்வதாவது: நீர் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கையின் பொருள் என்ன?
20 என்னோடு போரிடத் திட்டமிட்டுள்ளீரோ? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறீர்?
21 எகிப்து நாட்டை நம்பியிருக்கின்றீரோ? அது நெரிந்த நாணலேயன்றி வேறன்று. நெரிந்த நாணலின் மேல் ஒருவன் சாய்ந்தால் அது உடைந்து அவனது கையில் குத்தி ஊடுருவி விடுமன்றோ? எகிப்தின் அரசன் பாரவோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே இருப்பான்.
22 நீர் ஒரு வேளை, "எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" என்று சொல்லலாம். ஆனால், அவருடைய மேடுகளையும், பலிபீடங்களையும் எசேக்கியாசு அழித்து, யூதா மக்களையும் யெருசலேம் மக்களையும் பார்த்து, ' நீங்கள் யெருசலேமிலிருக்கும் இப்பீடத்தின் முன் பணியக்கடவீர்கள் ' எனக் கட்டளையிடவில்லையா?
23 இப்போது என் தலைவராகிய அசீரிய அரசரை எதிர்த்து வாருங்கள்; நான் உங்களுக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுக்கிறேன்; அவற்றிற்குத் தேவையான குதிரை வீரர்களாவது உம்மிடம் இருக்கின்றனரா?
24 நீர் என் தலைவரின் ஊழியர்களில் மிகவும் கடையனான ஓர் ஆளுநன் முன் எங்ஙனம் எதிர்த்து நிற்க முடியும்? தேர்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தையா நம்பியிருக்கிறீர்?
25 ஆண்டவரது திருவுளத்தினால்லவா நான் இந்நாட்டை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, "நீ போய் அந்நாட்டை அழித்துப்போடு" என்று கூறினார்' என்பதாம்" என்றான்.
26 அப்போது எல்கியாசின் மகன் எலியாக்கிமும் சொப்னாவும் யோவாகேயும் ரப்சாசேசை நோக்கி, "உம் ஊழியராகிய எங்களோடு சீரிய மொழியில் பேசும்; அது எங்களுக்குத் தெரியும். யூதா மொழியில் பேசவேண்டாம்; ஏனெனில் நகர் மதிலின் மேல் இருக்கிற மக்கள் இதைக் கேட்டு விடுவார்கள்" என்றனர்.
27 அதற்கு ரப்சாசேசு, "என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவனோடும் உங்களோடும் இவ்வாறு பேசவா? இல்லை. உங்களோடு தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிற்சுவரில் இருக்கிற மனிதரிடம் பேசவே என்னை அனுப்பினார்" என்றான்.
28 இதன்பின் ரப்சாசேசு எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில், "மாவேந்தரான அசீரிய அரசர் சொல்வதைக் கேளுங்கள்.
29 அவர் சொல்கிறதாவது: எசேக்கியாசால் ஏமாற்றம் அடையாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவன் ஆற்றலற்றவன்.
30 அவன், 'ஆண்டவர் நம்மை உறுதியாய் மீட்டுக் காப்பார். இந்நகர் அசீரிய அரசனின் கையில் ஒப்படைக்கப்படமாட்டாது' என்று கூறி நீங்கள் ஆண்டவரை நம்பச் செய்வான்.
31 எசேக்கியாசினுடைய சொல்லுக்கு நீங்கள் காது கொடாதீர்கள். இதோ அசீரிய அரசர் சொல்கிறதாவது: நீங்கள் உங்கள் நன்மையை மனத்திற் கொண்டு என்னிடம் தஞ்சம் அடையுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தம் சொந்தத் திராட்சைக் கொடியின் பழத்தையும், சொந்த அத்திமரத்தின் பழத்தையும் உண்டு, தம் சொந்தக் கிணற்றின் நீரைக் குடிப்பார்கள்.
32 பின், நான் வந்து உங்கள் நாட்டைப் போல் நிலவளமும், திராட்சை இரசமும், நிறைய உணவும், திராட்சைத் தோட்டங்களும் ஒலிவ மரங்களும் எண்ணெயும் தேனும் மிகுந்த நாடாகிய மற்றொரு நாட்டுக்கு உங்களைக் கொண்டு போவேன். நீங்கள் மடியாமல் வாழ்வீர்கள். 'ஆண்டவர் நம்மைக் காப்பார்' என்று கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கும் எசேக்கியாசுக்குச் செவி கொடாதீர்கள்.
33 எந்த ஒரு நாட்டின் தெய்வங்களும் தங்கள் நாட்டை அசீரிய அரசரிடமிருந்து மீட்டதுண்டா?
34 ஏமாத், அர்பாத் நகர்களின் தெய்வங்கள் எங்கே? சபர்வாயிம், ஆனா, ஆவா ஆகியவற்றின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கையினின்று மீட்டார்களா?
35 அத்தனை நாடுகளின் தெய்வங்களில் தங்கள் நாட்டை என் கையினின்று மீட்டவர் யார்? அப்படி இருக்கையில் உங்கள் ஆண்டவர் யெருசலேமை என் கையினின்று மீட்பாரோ? என்பதாம்" என்றான்.
36 ஆனால் மக்கள் அவனுக்கு ஒரு பதிலும் பகராது மௌனமாய் இருந்தனர். ஏனெனில் அவனுக்கு ஒரு பதிலும் கூற வேண்டாம் என்று அரசன் கட்டளையிட்டிருந்தான்.
37 பின்பு அரண்மனை மேலதிகாரியும் எல்கியாசின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான சொப்னாவும், அரசனின் பதிவாளனும் அசாபின் மகனுமான யோவாகேயும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அரசன் எசேக்கியாசிடம் திரும்பி வந்து, ரப்சாசேசு கூறியவற்றை அவனுக்குத் தெரிவித்தனர்.
அதிகாரம் 19
1 எசேக்கியாசு அரசன் ரப்சாசேசு சொன்னவற்றைக் கேட்ட போது, தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கோணி உடுத்தி ஆண்டவருடைய ஆலயத்தில் நுழைந்தான்.
2 மேலும், அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும் எழுத்தன் சொப்னாவையும் குருக்களின் முதியவரையும் கோணி உடுக்கச் செய்து, ஆமோசு மகன் இசயாசு என்னும் இறைவாக்கினரிடம் அனுப்பினான்.
3 அவர்கள் அவரை நோக்கி, "இதோ எசேக்கியாசு உமக்குச் சொல்வதாவது: ' இன்று துன்பமும் கண்டனமும் தேவதூஷணமும் மலிந்துள்ளன; பேறுகாலத்தை அடைந்துள்ள தாய் பிள்ளையைப் பெற்றெடுக்க வலுவற்றிருக்கிறாள்.
4 என்றும் வாழும் இறைவனைப் பழித்து இகழும் படி அசீரிய அரசனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட ரப்சாசேசு சொன்னவற்றை எல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார் என்பதற்கு ஐயமில்லை. அப்பழிச் சொற்களை அவர் கட்டாயம் கேட்டிருப்பார். ஆகையால் நீர் இன்னும் எஞ்சியிருக்கும் மக்களுக்காக ஆண்டவரை மன்றாடும்' என்பதாம்" என்றனர்.
5 எசேக்கியாசு அரசனின் ஊழியர்கள் இசயாசிடம் வந்து இதைக் கூறினர்.
6 இசயாசு அவர்களை நோக்கி, "உங்கள் தலைவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியதாவது: 'அசீரிய அரசனுடைய ஊழியர்களின் பழிச்சொல் கேட்டு நீர் அஞ்ச வேண்டாம்.
7 இதோ, நாம் அவனுக்கு ஒரு வான தூதரை அனுப்புவோம். அவன் அந்தச் செய்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிப் போவான். அவனது நாட்டில் நாம் அவனை வாளால் வெட்டி வீழ்த்துவோம் என்று ஆண்டவர் சொல்கிறார்' என்பதாம்" என்றார்.
8 அசீரிய அரசன் லாக்கீசை விட்டுப் புறப்பட்டான் என்று ரப்சாசேசு கேள்விப்பட்டுத் திரும்பிச் செல்ல, அங்கே அவன் லொப்னாவின் மேல் போர் தொடுத்துள்ளதைக் கண்டான்.
9 பின் எத்தியோப்பிய அரசன் தாராக்கா தனக்கு எதிரியாய்ப் படைதிரட்டி வருகிறான் என்று அறிந்து அவ்வரசனை எதிர்த்துப் போகுமுன், திரும்பவும் எசேக்கியாசிடம் தூதுவரை அனுப்பி,
10 நீங்கள் போய் யூதா அரசன் எசேக்கியாசுக்குச் சொல்லவேண்டியதாவது: ' உம் கடவுளை நம்பி ஏமாற்றம் அடையாதீர். யெருசலேம் அசீரிய அரசனின் கையில் பிடிபடாது என்று நீர் எண்ணவும் வேண்டாம்.
11 அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் அழித்து நிர்மூலமாக்கியதை நீர் அறிவீர். நீர் மட்டும் தப்பிவிட முடியுமோ?
12 என் முன்னோர் அழித்து விட்ட கோசான், ஆரான், ரெசேப், தெலாசாரில் வாழ்ந்து வந்த ஏதனின் மக்கள் முதலியோரை அவரவரின் தெய்வங்கள் மீட்டனரோ?
13 எமாத் அரசன் எங்கே? அர்பாத் அரசனின் கதி என்ன? செபர்வாயிம், ஆனா, ஆவா என்ற நகர்களின் அரசரும் எங்கே? என்பதாம்" என்று சொல்லுவித்தான்.
14 எசேக்கியாசு தூதுவர்களின் கையிலிருந்த ஓலையை வாங்கி வாசித்த பின்பு, ஆலயத்திற்குச் சென்று ஆண்டவர் திருமுன் அவ்வோலையை விரித்து வைத்தான்.
15 மேலும் ஆண்டவரை நோக்கி, "கெருபீம்களின் மேல் வீற்றிருக்கும் ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, நீர் இவ்வுலகத்து அரசர்களுக்கெல்லாம் கடவுளாய் இருக்கின்றீர். இவ்விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே.
16 ஆண்டவரே, செவிசாய்த்து என் வேண்டுதலைக் கேளும். உம் திருக்கண்களை என் மீது திருப்பியருளும். என்றும் வாழும் ஆண்டவரை எங்கள் முன்பாகப் பழித்துரைக்கும்படி சொல்லியனுப்பிய செனாகெரிபின் வார்த்தைகளைக் கேளும்.
17 ஆண்டவரே, அசீரிய அரசர்கள் எல்லாம் மக்களையும் அவர்கள் நாடுகளையும் அழித்து,
18 அவர்களின் தெய்வங்களையும் நெருப்பிலிட்டனர். அவை உண்மைக் கடவுளல்ல, மனிதன் வனைந்த கைவேலையான மரமும் கல்லுமே. எனவே தான் அவர்கள் அவற்றை அழிக்க முடிந்தது.
19 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உலக நாடுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்; நீர் ஒருவரே ஆண்டவர் என்று அறியும் பொருட்டு, அவனுடைய கையினின்று எங்களைக் காப்பீராக" என்று வேண்டினான்.
20 அப்பொழுது ஆமோசின் மகன் இசயாசு எசேக்கியாசிடம் ஆள் அனுப்பிச் சொன்னதாவது: "இதோ, இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லதாவது: 'அசீரிய அரசன் செனாக்கெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டோம். '
21 அவனைக் குறித்து ஆண்டவர் சொல்கிறதாவது: 'சீயோனின் மகளான கன்னிப் பெண் உன்னை இகழ்ந்தாள்; உன்னை எள்ளி நகையாடினாள். யெருசலேமின் மகள் பின் நின்று உன்னைப் பரிகசித்தாள்.
22 நீ யாரைப் பழித்தாய்? யாரை இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்ப் பேசினாய்? யாருக்கு எதிராய் உன் கண்களைச் செருக்குடன் ஏறெடுத்துப் பார்த்தாய்? இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எதிராக அல்லவா?
23 நீர் உன் ஊழியர் மூலம் ஆண்டவரைப் பழித்து, " எண்ணற்ற என் தேர்களோடு நான் லீபான் மலையின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும், அங்கு நின்ற உயர்ந்த சப்பீன் மரங்களையும் வெட்டினேன். அதன் கடைக்கோடி வரை சென்றேன். கார்மேலைச் சார்ந்த காடுகளையும் அழித்துவிட்டேன்.
24 பிறநாடுகளின் நீரைப் பருகினேன். தேக்கி வைக்கப்பட்ட நீரை என் உள்ளங் கால்களினால் வற்றிடச் செய்தேன்" என்று சொன்னாய்.
25 நாம் ஆதி முதல் செய்து வந்துள்ளவற்றை நீ கேட்டதில்லையோ? பழங்காலம் தொட்டே நாம் திட்டமிட்டோம்; அதை இக்காலத்தில் நிறைவு செய்தோம்: அதாவது, போர் வீரர் நிறைந்தவையும் அரண் சூழ்ந்தவையுமான நகர்கள் பாழான குன்று போல் ஆயின.
26 அவற்றின் குடிகள் கைவன்மை இழந்து, நடுநடுங்கிக் கலங்கினர். வயல்வெளியில் வளரும் புல்போலவும், கூரைகளில் முளைத்து ஓங்கி வளருமுன்னே பட்டுப்போகும் பூண்டு போலவும் ஆயினர்.
27 உன் வீட்டையும், உன் நடவடிக்கைகளையும், நீ நடக்கும் வழியையும், நமக்கு எதிராக நீ கொண்ட கோபத்தையும் நாம் முன்பே அறிவோம்.
28 நீ நம்மேல் கொண்ட பகைமையால் பித்தனானாய். உன் ஆணவம் நம் செவிகளுக்கு எட்டியது. எனவே உன் மூக்கில் ஒரு வளையத்தையும், உன் வாயில் ஒரு கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைக் கொண்டு போவோம்.
29 எசேக்கியாசே, உனக்கு இது அடையாளமாக இருப்பதாக. அதாவது: இவ்வாண்டில் உனக்குக் கிடைப்பதையும், அடுத்த ஆண்டில் தானாய் விளைவதையும் உண்பாய். மூன்றாம் ஆண்டிலோ நீ பயிரிட்டு அறுவடை செய்து, திராட்சைத் தோட்டங்களையும் நட்டு அவற்றின் பழங்களை உண்பாய்.
30 யூதா வம்சத்தாரில் எஞ்சியவை எல்லாம் ஆழமாக வேரூன்றி மேலே பலன் அளிக்கும்.
31 ஏனெனில் எஞ்சியோர் யெருசலேமிலிருந்து வெளியேறுவர்; உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று அளப்பெரிய அன்பே இவற்றை எல்லாம் செய்து முடிக்கும்.
32 ஆதலால் ஆண்டவர் அசீரியா வேந்தனைக் குறித்துச் சொல்கிறதாவது: இந்நகரில் அவன் காலடி வைக்கப் போவதில்லை. அதன் மேல் அம்பும் எய்யமாட்டான். ஒரு கேடயமாவது அதனுள் வராது. அதைச் சுற்றி முற்றுகையிட மாட்டான்.
33 அவன் வந்த வழியே திரும்பிப் போவான். இந்நகருக்குள் நுழையவே மாட்டான். இந்நகரை நாம் பாதுகாப்போம்.
34 வாக்குறுதியின் பொருட்டும், நம் ஊழியன் தாவீதின் பொருட்டும் நாம் இந்நகரை மீட்போம் என்கிறார் ஆண்டவர்" என்பதாம்.
35 அன்றிரவில் நிகழ்ந்ததாவது: ஆண்டவருடைய தூதர் வந்து அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேரைக் கொன்று குவித்தார். அசீரிய அரசன் செனாக்கெரிப் விடியற் காலையில் எழுந்த போது, அங்கு மடிந்து கிடந்த பிணங்களைக் கண்டு, உடனே அவன் அங்கிருந்து திரும்பிச் சென்றான்.
36 திரும்பிச் சென்று அவன் நினிவே நகரில் தங்கி இருந்தான்.
37 தன் தெய்வமாகிய நெஸ்ரோக்கின் கோயிலில் அவன் வழிபாடு செய்து கொண்டிருக்கையில், அவனுடைய புதல்வர்களாகிய அதிராமெலக்கும் சராசாரும் அவனை வாளால் வெட்டி விட்டு, அர்மேனியா நாட்டிற்கு ஓடிப்போயினர். அவனுடைய மகன் அசர்காதோன் அவனுக்குப் பின் அரசன் ஆனான்.
அதிகாரம் 20
1 அந்நாட்களில் எசேக்கியாசு நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தான். ஆமோசின் மகனும் இறைவாக்கினருமான இசயாசு அவனிடம் வந்து, "நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில், நீர் இனிப் பிழைக்க மாட்டீர், இறந்து போவீர் என்று ஆண்டவர் சொல்கிறார்" என்றார்.
2 எசேக்கியாசு சுவர்ப்பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரை நோக்கி,
3 ஆண்டவரே, நான் உம் திருமுன் மாசற்ற உள்ளத்துடன் உண்மையின் வழியில் நடந்து வந்ததையும், உம் திருவுளத்திற்கு உகந்ததையே செய்து வந்துள்ளதையும் நினைத்தருளும்" என்று வேண்டினான். பின்பு அதிகமாய்க் கண்ணீர் விட்டு அழுதான்.
4 இசயாசு முன்மண்டபத்தின் பாதியைக் கடப்பதற்குள் ஆண்டவர் அவருடன் பேசி,
5 நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாசை நோக்கி, உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: உன் மன்றாட்டைக் கேட்டோம்; கண்ணீரையும் கண்டோம். இதோ உன்னைக் குணப்படுத்தினோம். மூன்று நாட்களில் நீ ஆண்டவரின் ஆலயத்துக்குப் போவாய்.
6 உன்னை இன்னும் பதினைந்து ஆண்டுகள் வாழச் செய்வோம். அதுவுமின்றி, உன்னையும் இந்நகரையும் அசீரிய அரசனின் கையினின்று மீட்டு, நம் வாக்குறுதியின் பொருட்டும். நம் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்போம்' எனச் சொல்" என்றார்.
7 இசயாசு ஓர் அத்திப் பழக் குலையைக் கொண்டுவரச் சொன்னார். அவர்களும் அதைக் கொண்டு வந்து அவனது கொப்புளத்தின் மேல் வைக்கவே அவன் குணமடைந்தான்.
8 எசேக்கியாசு இசயாசை நோக்கி, "ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்று நாட்களில் நான் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கும் ஆண்டவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்?" என்று கேட்டிருந்தான்.
9 அதற்கு இசயாசு, "ஆண்டவர் தாம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது சூரிய நிழல் பத்துக் கோடுகள் முன்போக வேண்டுமா அல்லது அதே அளவு பின்போக வேண்டுமா? நீர் விரும்புவது என்ன?" என்று கேட்டார்.
10 அதற்கு எசேக்கியாசு, "நிழல் பத்துக் கோடுகள் முன்போகிறது எளிது; அப்படி வேண்டாம். நிழல் பத்துக் கோடுகள் பின் திரும்பிப்போக வேண்டும்" என்றான்.
11 அப்போது இறைவாக்கினர் இசயாசு ஆண்டவரை மன்றாடி, ஆக்காசினுடைய சூரியக் கடியாரத்தில் பத்துக் கோடுகள் முன்போயிருந்த நிழலானது பத்துக் கோடுகள் பின்னே வரச் செய்தார்.
12 அக்காலத்தில் பாபிலோனியரின் அரசன் பலாதானின் மகன் பெரோதாக் பலாதான் எசேக்கியாசுக்குக் கடிதங்களையும் காணிக்கைகளையும் அனுப்பி வைத்தான். ஏனெனில் எசேக்கியாசு நோயுற்றிருந்ததை அறிந்திருந்தான்.
13 தூதர்களின் வருகையினால் எசேக்கியாசு மகிழ்வுற்று, தன் நறுமணப்பொருள் கூடத்தையும், பொன்னையும், வெள்ளியையும், பலவகைப் பரிமளப் பொருட்களையும், தைல வகைகளையும், படைக்கலக் கூடத்தையும், தன் கருவூலங்களில் இருந்த யாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன் நாட்டிலும் இருந்தவற்றில் அவன் அவர்களுக்குக் காண்பியாதது ஒன்றுமில்லை.
14 இறைவாக்கினர் இசயாசு எசேக்கியாசு அரசனிடம் வந்து, "அம்மனிதர்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தவர்கள்?" என்று கேட்டார். அதற்கு எசேக்கியாசு, "வெகு தூரத்திலிருக்கும் பாபிலோன் நகரிலிருந்து வந்திருக்கின்றார்கள்" என்று மறுமொழி தந்தான்.
15 அப்போது இசயாசு, "உம் அரண்மனையில் எதைப்பார்த்தனர்" என்று கேட்டார். அதற்கு எசேக்கியாசு, "அரண்மனையில் உள்ள அனைத்தையுமே பார்த்தனர். என் கருவூலங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றுமே இல்லை" என்றான்.
16 அப்பொழுது இசயாசு, "ஆண்டவர் சொல்வதைக் கேளும்:
17 இதோ நாட்கள் வரும். அப்போது உனது அரண்மனைப் பொருட்கள் முழுவதும், உன் முன்னோர் இன்று வரை சேகரித்து வைத்துள்ள யாவும், ஒன்றும் விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.
18 மேலும், உமது வாரிசாய் நீர் பெற்றெடுக்கும் புதல்வரில் சிலர் சிறைப்படுத்தப்பட்டு பாபிலோன் அரசனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பீர்' என்பதாம்" என்று சொன்னார்.
19 அப்பொழுது எசேக்கியாசு இசயாசை நோக்கி, "ஆண்டவர் பெயரால் நீர் சொன்னது எல்லாம் சரியே. என் வாழ்நாட்களிலாவது உண்மையும் அமைதியும் நிலவட்டும்" என்றான்.
20 எசேக்கியாசின் மற்றச் செயல்களும், அவனது பேராற்றலும், அவன் ஒரு குளத்தை வெட்டி வாய்க்கால் கட்டித் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததுமாகிய அனைத்தும் யூதா அரசருடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
21 எசேக்கியாசு தன் முன்னோரோடு துயிலடைந்த பின் அவனுடைய மகன் மனாசே அரியணை ஏறினான்.
அதிகாரம் 21
1 மனாசே அரசனான போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் யெருசலேம் நகரில் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் ஆப்சிபா.
2 அவன், ஆண்டவர் இஸ்ராயேல் மக்களின் பொருட்டு அழித்திருந்த புறவினத்தாரின் இழிவான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு, ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான்.
3 அவனுடைய தந்தை எசேக்கியாசு அழித்துவிட்ட மேடுகளைத் திரும்பவும் ஏற்படுத்தினான். பாவாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான். இஸ்ராயேல் அரசன் ஆக்காசு செய்ததுபோல் சிலைச் சோலைகளையும் ஏற்படுத்தினான். விண்மீன்களை எல்லாம் வழிபட்டு அவற்றிற்கு ஊழியம் செய்து வந்தான்.
4 'யெருசலேமில் நமது பெயர் விளங்கச்செய்வோம்' என்று ஆண்டவர் தம் ஆலயத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அவ்வாலயத்தில் மனாசே பீடங்களை எழுப்பினான்.
5 ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் விண் சக்திகளுக்கு எல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
6 மேலும் தன் மகனைத் தீயைக் கடக்கச் செய்து, குறிபார்த்துச் சகுனங்களையும் கடைப்பிடித்து வந்தான். ஆண்டவர் திருமுன் பாவம் செய்து, அவர் கோபத்தை மூட்டக் குறி கூறுபவர்களையும் சகுனம் பார்ப்பவர்களையும் ஏராளம் ஏற்படுத்தினான்.
7 இவ்வாலயத்திலும், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து நாம் தேர்ந்துகொண்ட நகரான யெருசலேமிலும் நமது பெயர் என்றென்றும் விளங்கச் செய்வோம்' என்று தமது ஆலயத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் சொல்லியிருந்தார். அதே ஆலயத்தில் மனாசே தான் சோலையில் செய்து வைத்திருந்த சிலை ஒன்றையும் அங்கே நிறுவினான்.
8 நாம் அவர்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும், நம் அடியான் மோயீசன் அளித்த சட்ட முறையின் படி இஸ்ராயேலர் கடைப்பிடித்து வந்தால் நாம் இனி அவர்களை அவர்தம் முன்னோருக்கு நாம் கொடுத்த நாட்டை விட்டு அலைய விடுவதில்லை' என்று சொல்லியிருந்தார் ஆண்டவர்.
9 அவர்கள் அதற்குச் செவிமடுக்கவில்லை. மனாசேயால் தவறான வழியிலே நடத்தப்பட்டு வந்த இஸ்ராயேல் மக்கள் தங்கள் முன்னிலையில் ஆண்டவர் அழித்திருந்த புறவினத்தாரை விட அதிகத் தீமை புரிந்து வந்தனர்.
10 ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:
11 யூதாவின் அரசன் மனாசே தனக்கு முன்னிருந்த அமோறையர் செய்துவந்த அனைத்தையும்விடக் கேடான இந்த இழிசெயல்களைச் செய்தான். மேலும், தனது தூய்மையற்ற நடத்தையால் யூதாவைப் பாவத்திற்கு ஆளாக்கினான்.
12 எனவே இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: இதோ நாம் யெருசலேமின்மேலும் யூதாவின்மேலும் கேடுகள் வரச் செய்வோம். அவை எவ்வளவு அஞ்சத்தக்கவை என்றால், அவற்றைக் கேட்பவருடைய இரு காதுகளும் விடவிடத்துப்போகும்.
13 சமாரியாவுக்கு விரோதமாய் நான் பிடித்த அளவு நூலையும், ஆக்காபின் வீட்டிற்கு விரோதமாய் நான் பிடித்த தூக்கு நூலையும் யெருசலேமுக்கு விரோதமாகவும் பிடிப்பேன். ஒருவன் வட்டிலைத் துடைத்துக் கவிழ்த்து வைக்கிறது போல் நான் யெருசலேமைத் துடைத்துக் கவிழ்த்து விடுவேன். மட்ட நூலையும், ஆக்காப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்போம். ஒருவன் தான் எழுதும் பலகையைத் துடைப்பது போல் நாம் யெருசலேமைத் துடைத்து விடுவோம். துடைத்த பின் நமது எழுது கோலைக் கொண்டு அதன் முகத்தைக் குத்திக் கிறுக்கி விடுவோம்.
14 அவர்கள் தங்கள் முன்னோர் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் நம் திருமுன் பாவங்கள் பல புரிந்து நமது கோபத்தை மூட்டி வந்திருக்கின்றனர். எனவே நம் சொந்த மக்களுள், நமது உரிமைப் பொருளில் எஞ்சியிருப்போரைக் கைநெகிழ்ந்து, அவர் தம் பகைவரின் கையில் அவர்களை ஒப்படைப்போம்.
15 அப்போது அவர்கள் தங்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பார்கள்" என்பதாம்.
16 ஆண்டவர் திருமுன் யூதா மக்கள் தீயன புரியும்படி செய்து அவர்களைப் பாவத்திற்கு ஆளாக்கிய பாவம் தவிர, யெருசலேம் நகர் முழுவதும் நிரம்பும் அளவிற்கு மனாசே மாசற்றவரின் குருதியைச் சிந்தினான்.
17 மனாசேயின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் புரிந்த பாவமும் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டிருக்கின்றன.
18 மனாசே தன் முன்னோரோடு துயில் கொள்ள, ஓசா தோட்டமாகிய அவனது அரண்மனைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் ஆமோன் அரசன் ஆனான்.
19 ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு. அவன் ஈராண்டுகள் யெருசலேமில் அரசோச்சினான். அவனுடைய தாயின் பெயர் மெச்சாலேமெத். இவள் எத்தபாவைச் சேர்ந்த காருசுவின் மகள்.
20 அவன் தன் தந்தை மனாசேயைப்போலவே ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான்.
21 தன் தந்தை காட்டிய வழியிலெல்லாம் தானும் நடந்தான். தன் தந்தை வழிபட்டு வந்த அருவருப்பான சிலைகளை அவனும் வழிபட்டு வந்தான்.
22 தன் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்தான். ஆண்டவர் காட்டிய வழியே நடக்கவில்லை.
23 ஆமோனுடைய ஊழியர் அரசனுக்கு எதிராகச் சதி செய்து அவனை அரண்மனையிலேயே கொலை செய்தனர்.
24 ஆனால் மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சதி செய்தவர்களை எல்லாம் கொன்று விட்டு அவனுடைய மகன் யோசியாசை அவனுக்குப் பதிலாக மன்னனாக்கினர்.
25 ஆமோனின் மற்றச் செயல்கள் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
26 ஓசாவின் தோட்டத்திலுள்ள அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனுடைய மகன் யோசியாசு அவனுக்குப் பின் அரசோச்சினான்.
அதிகாரம் 22
1 யோசியாசு அரியணை ஏறிய போது அவனுக்கு எட்டு வயது. முப்பத்தொன்று ஆண்டுகள் அவன் யெருசலேமில் அரசாண்டான். பேசகாத் ஊரினனான அதாயாவின் மகள் இதிதா இவனுடைய தாய்.
2 அவன் ஆண்டவர் விரும்பியதையே செய்தான். தன் தந்தை தாவீது நடந்து காட்டிய எல்லா வழிகளிலும் வலப்புறமோ இடப்புறமோ சாயாது நடந்தான்.
3 தனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் யோசியாசு, ஆலயத்தின் கணக்கனும் மெச்சுலாமின் மகன் அசுலியாவின் மகனுமான சாபானை அழைத்து,
4 நீ பெரிய குரு எல்கியாசிடம் சென்று, 'ஆலயத்தின் உபயோகத்திற்காக மக்களிடமிருந்து வாயிற்காப்போர் பெற்றுக்கொண்ட பணத்தையெல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும்.
5 பின் ஆலயத்தை மேற்பார்ப்பவரிடம் அதைக் கொடுக்க, அவர்கள் அதை ஆலயத்தைப் பழுது பார்க்கும் தச்சர்களுக்கும் கொத்தர்களுக்கும்,
6 சுவர் வெடிப்புகளைப் பழுது பார்ப்பவருக்கும் கொடுக்கட்டும். தேவைக்கேற்ப அவர்கள் கருங்கற்களையும் மரங்களையும் விலைக்கு வாங்கிக் கொள்ளட்டும்.
7 பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். அதை அவர்கள் தங்களிடம் வைத்துக்கொண்டு உண்மையுடன் செலவிட வேண்டும்' என்று சொல்வாய்" என்றான்.
8 பெரிய குரு எல்கியாசு கணக்கனான சாபானை நோக்கி, "ஆலயத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லி, அந்நூலைச் சாபானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.
9 பின் கணக்கன் சாபான் அரசனிடம் வந்து தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஆணையைப்பற்றிக் கூறி, "அரசே, உம் அடியார்கள் ஆலயத்தில் கிடைத்த பணத்தைச் சேகரித்து அதை வேலையாட்களுக்குக் கொடுக்கும்படி ஆலயத்தை மேற்பார்ப்பவரிடம் கொடுத்தனர்" என்று சொன்னான்.
10 மேலும், "குரு எல்கியாசு என்னிடம் ஒரு நூல் கொடுத்துள்ளார்" என்று கூறி, சாபான் அதை அரசனுக்கு முன் படித்துக் காட்டினான்.
11 அரசன் ஆண்டவருடைய சட்ட நூலின் வாக்கியங்களைக் கேட்டதும் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான்.
12 பின் குரு எல்கியாசையும், சாபானின் மகன் அயிக்காமையும், மிக்காவின் மகன் அக்கோபோரையும், கணக்கன் சாபானையும், அரசனின் ஊழியன் அசாயியாசையும் நோக்கி,
13 நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட நூலில் எழுதியுள்ளதன்படி, என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் யூதாவின் மக்கள் எல்லாரையும் பற்றியும் ஆண்டவர் திருவுளம் என்ன என்று விசாரியுங்கள். ஏனெனில் அந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் முன்னோர் செவி கொடுக்கவும் இல்லை; அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவர் நம்மேல் மிகுந்த கோபம் கொண்டுள்ளார்" என்றார்.
14 குரு எல்கியாசும் அயிக்காமும். அக்கோபோரும் சாபானும் அசாயியாசும் ஒல்தாம் என்ற இறைவாக்கினளிடம் சென்று அவளைக் கண்டு பேசினார்கள். இவள் யெருசலேமில் இரண்டாம் தெருவில் குடியிருந்தவனும் ஆலய ஆடைகளை மேற்பார்த்து வந்தவனுமான ஆரவாசின் மகன் தேக்குவாவின் புதல்வன் செல்லோமின் மனைவி.
15 ஒல்தாம் அவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: என்னிடம் உங்களை அனுப்பிய மனிதனிடம் நீங்கள் சொல்ல வேண்டியதாவது:
16 யூதாவின் அரசன் வாசித்த அந்தச் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ளவை எல்லாம் நிறைவேறும். இதோ நாம் இந்நகருக்கும் அதன் குடிகளுக்கும் அந்நூலில் கூறப்பட்டுள்ள துன்பங்கள் வரச் செய்வோம்.
17 ஏனெனில் அவர்கள் நம்மைப் புறக்கணித்து விட்டுப் பிற தெய்வங்களுக்குப் பலி செலுத்தி, தங்கள் நடத்தையால் நமக்குக் கோபமுண்டாக்கினர். எனவே நாம் இவ்விடத்தின் மேல் கொண்ட வெறுப்பு நெருப்பாய்ப் பற்றி எரியும்; அது அவிக்கப்படாது.'
18 ஆண்டவரிடம் (அவர் திருவுளம் என்ன என்று) விசாரிப்பதற்கு உங்களை அனுப்பிய யூதா அரசனிடம் நீங்கள் சொல்ல வேண்டியதாவது: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: நீ அந்நூலில் கூறப்பட்டுள்ளதைக் கேட்டதினாலும்,
19 இவ்விடத்திற்கும் இதன் குடிகளுக்கும் எதிராக, இவர்கள் சபிக்கப்பட்டவர்களாயும் அச்சத்திற்கு உரியவர்களாயும் இருப்பர் என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தினதனாலும், உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நம் கண்முன் அழுததனாலும் நாமும் உன் வேண்டுதலுக்குச் செவி கொடுத்தோம்.
20 ஆதலால் இந்நகரின்மேல் நாம் வருவிக்க இருக்கும் தீமைகளை எல்லாம் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் முன்னோர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்போம். நீ உள அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்' என்பதாம்" என்றாள்.
அதிகாரம் 23
1 அவள் சொன்னதை அவர்கள் அரசனுக்கு அறிவித்தனர். அவன் அழைப்புக்கிணங்கி யூதாவிலும் யெருசலேமிலுமுள்ள பெரியோர்கள் யாவரும் அவனிடம் வந்து கூடினர்.
2 அப்பொழுது அரசனும் யூதா மனிதர் அனைவரும் யெருசலேம் குடிகள் அனைவரும் குருக்களும் இறைவாக்கினர்களும், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆண்டவரின் ஆலயத்திற்கு வந்தனர். அரசனோ ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் கேட்கும்படி படித்தான்.
3 அரசன் படியில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவர் கட்டளைகளையும் சட்டங்களையும் சடங்குமுறைகளையும் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் உடன்படிக்கையாக எழுதப்பட்டிருந்த அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்து கொண்டான். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.
4 அப்போது அரசன் பாவாலின் வழிபாட்டிற்காகவும் சிலைச்சோலைகளிலும் விண்சக்திகளுக்கு வழிபாடு செய்யவும் பயன்படுத்தப்பட்ட எல்லாப் பாத்திரங்களையும் ஆலயத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி, பெரிய குரு எல்கியாசுக்கும் இரண்டாம் நிலைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டான். அப்பாத்திரங்களை யெருசலேமுக்கு வெளியே கெதிரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்து, சாம்பலைப் பேத்தலுக்குக் கொண்டு சென்றான்.
5 அத்தோடு யூதாவின் நகர்களிலும் யெருசலேமைச் சுற்றியும் அமைக்கப்பட்டிருந்த மேடுகளின் மேல் பலியிட யூதா அரசர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த குருக்களைக் கொன்றான். மேலும் பாவாலுக்கும், சூரிய, சந்திரனுக்கும், பன்னிரு விண்மீன்களுக்கும், விண் சக்திகள் யாவற்றிற்கும் வழிபாடு செய்து வந்தவர்களையும் அழித்தான்.
6 சிலைச்சோலையினின்று எடுக்கப்பெற்று ஆண்டவரின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையையும் யெருசலேமுக்குப் புறம்பே கெதிரோன் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு சென்றான். அங்கே அதைச் சுட்டெரித்து சாம்பலாக்கி, அச்சாம்பலைக் கீழ்குல மக்களின் கல்லறைகளின் மேல் எறியப் பணித்தான்.
7 அன்றியும் ஆண்டவரின் ஆலயத்திலே பெண் தன்மையுள்ள ஆடவரின் விடுதிகள் இருந்தன. அங்கே பெண்கள் சிலைச்சோலைகட்குத் தேவையான துணிகளை நெய்து வருவார்கள். அரசன் அவ்விடுதிகளையும் தரைமட்டமாக்கினான்.
8 இன்னும் யூதாவின் நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் வரவழைத்து, காபா முதல் பெத்சபே வரையிலும் குருக்கள் பலியிட்டு வந்த எல்லா மேடுகளையும் மாசுபடுத்தினான். நகர வாயிலுக்கு இடப்புறம் நகர்த்தலைவனான யோசுவாவின் வீட்டு வாயிலின் அருகே இருந்த பீடங்களையும் இடித்தான்.
9 மேடுகளின் குருக்கள் யெருசலேமில் இருந்த ஆலயத்துப் பலிபீடத்தை நாடி வராது, தங்கள் சகோதரரோடு புளியாத அப்பங்களையே உண்டு வந்தனர்.
10 மெல்லோக் சிலைக்கு நேர்ச்சையாக ஒருவரும் தம் மகனையோ மகளையோ தீயைக் கடக்கச் செய்யாதபடி, என்னோமின் மகனின் பள்ளத்தாக்கிலிருக்கும் தொபேத் என்ற இடத்தை மாசுபடுத்தினான்.
11 மேலும் யோசியாசு அரசன் ஆண்டவரின் ஆலய வாயிலருகில், பாரூரிம் ஊரானாகிய நாத்தான் மெலேக் என்ற அண்ணகனின் வீட்டையடுத்து, யூதா அரசர்களால் சூரியனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைகளை அப்புறப்படுத்தினான். சூரியனின் தேர்களையோ நெருப்பிலிட்டான்.
12 மேலும் யூதா அரசர்களால் ஆக்காசின் மேல் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், மனாசேயால் ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும் அரசன் இடித்து, அவற்றின் இடித்த துண்டுகளை அங்கிருந்து எடுத்துக் கெதிரோன் ஆற்றில் கொட்டினான்.
13 யெருசலேமில் குற்றத்தின் குன்று எனப்பட்ட மலைக்கு வலப்புறத்தில் இஸ்ராயேலின் அரசன் சாலமோன் சீதோனியரின் தெய்வமான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் பாவப் பொருளான காமோசுக்கும், அம்மோன் புதல்வரின் இழிபொருளான மெல்கோமுக்குக் கட்டி எழுப்பியிருந்த மேடுகளையும் அரசன் மாசு படுத்தினான்.
14 அன்றியும் அவன் அவற்றின் சிலைகளை உடைத்து, சிலைச்சோலைகளை அழித்து, அவ்விடங்களை மனிதரின் எலும்புகளால் நிரப்பினான்.
15 தவிர, இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாம் பேத்தலில் எழுப்பியிருந்த மேடுகளையும் பலிபீடத்தையும் அழித்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி, சிலைச்சோலையையும் தீக்கிரையாக்கினான்.
16 யோசியாசு திரும்பிப் பார்த்தபோது அங்கு மலையின் மேல் கல்லறைகள் இருக்கக் கண்டான். ஆட்களை அனுப்பி, அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வந்து, முன்பு கடவுளின் மனிதர் கூறியிருந்த ஆண்டவரின் சொற்படி அவற்றை அங்கிருந்த பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து அதை மாசுபடுத்தினான்.
17 பின்பு அவன், "அதோ, அங்குத் தெரியும் கல்லறை யாருடையது?" என்று கேட்டான். அந்நகர மக்கள், "அது யூதா நாட்டைச் சேர்ந்த ஒரு கடவுளின் மனிதருடைய கல்லறை. நீர் பேத்தலின் பலிபீடத்திற்கு இப்படி எல்லாம் செய்வீர் என்று முன்னறிவித்தவர் அவர்தான்" என்றனர்.
18 அதற்கு அவன், "இருக்கட்டும்; அவருடைய எலும்புகளை ஒருவனும் எடுக்க வேண்டாம்" என்றான். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியாவைச் சேர்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் விட்டு வைத்தனர்.
19 ஆண்டவருக்குக் கோபமுண்டாகும்படி இஸ்ராயேலின் அரசர்கள் சமாரியா நகர்களிலே மேடுகளில் கட்டியிருந்த (சிலைக்) கோவில்களை எல்லாம் யோசியாசு இடித்து, பேத்தலில் செய்தவாறே அவைகட்கும் செய்தான்.
20 அங்கு இருந்த மேடுகளில் பலியிட்டு வந்த குருக்களை எல்லாம் கொன்று போட்டு, அப்பீடங்களின் மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தான். இவற்றின் பின் யெருசலேமுக்குத் திரும்பினான்.
21 பிறகு யோசியாசு மக்கள் எல்லாரையும் பார்த்து, "இவ்வுடன்படிக்கை நூலில் வரையப்பட்டுள்ளது போல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாய்ப் பாஸ்காத் திருவிழாக் கொண்டாடுங்கள்" என்று கட்டளையிட்டான்.
22 யோசியாசினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக யெருசலேமில் பாஸ்கா கொண்டாடப்பட்டது.
23 இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்த நீதிபதிகளின் நாள் முதல், யூதா அரசர் காலத்திலும் இஸ்ராயேல் அரசர் காலத்திலும் அத்துணைச் சிறப்பான பாஸ்காத் திருவிழா நடந்ததில்லை.
24 குரு எல்கியாசு ஆலயத்தில் கண்டெடுத்த நூலில் எழுதப்பட்டிருந்த சட்டத்தை நிறைவேற்றும்படி, யோசியாசு யூதா நாட்டிலும் யெருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும் சிலைகளையும் தூய்மையற்றவைகளையும் அருவருப்பானவற்றையும் அழித்தொழித்தான்.
25 அவனைப்போல் தன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும் மோயீசனின் நீதி நூலிற்கேற்ப ஆண்டவரிடம் திரும்பி வந்தவர் இதற்கு முன் இருந்ததுமில்லை; இனி இருக்கப் போவதுமில்லை.
26 எனினும் மனாசே செய்து வந்த தீய செயல்களால் ஆண்டவர் யூதாவுக்கெதிராய்க் கடும் கோபமுற்றிருந்தார். அந்தக் கோபம் இன்னும் தணியவில்லை.
27 எனவே ஆண்டவர், "நாம் இஸ்ராயேலைப் போல் யூதாவையும் நமது முன் நின்றுத் தள்ளி விடுவோம். நாம் தேர்ந்து கொண்ட யெருசலேம் நகரையும், நமது பெயர் இங்கு விளங்கும் என்று நாம் கூறின ஆலயத்தையும் உதறித் தள்ளுவோம்" என்றார்.
28 யோசியாசின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
29 அவன் ஆட்சி காலத்தில் எகிப்து நாட்டின் அரசன் பாரவோன் நெக்காவோ அசீரிய அரசனுக்கு எதிராகப் படைதிரட்டி, யூபிரட்டீசு நதியை வந்தடைந்தான். அப்பொழுது யோசியாசு அரசன் அவனைத் தாக்க வந்தான். பாரவோன் மகேதோவில் அவனோடு போர் செய்து அவனைக் கொன்றான்.
30 அவனுடைய ஊழியர் அவனுடைய சடலத்தை மகேதோவிலிருந்து யெருசலேமுக்குக் கொண்டு சென்று அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்தனர். பிறகு நாட்டு மக்கள் யோசியாசின் மகன் யோவக்காசைத் தேர்ந்து கொண்டு, அபிஷுகம் செய்து அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை அரசனாக நியமித்தார்கள்.
31 யோவக்காசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்தி மூன்று. யெருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் அமித்தாள். இவள் லொப்னா என்ற ஊரைச் சேர்ந்த எரேமியா என்பவனுடைய மகள்.
32 யோவக்காசு தன் முன்னோர்கள் செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான்.
33 அவன் யெருசலேமில் அரசாளாதபடி பாரவோன் நெக்காவோ அவனைப் பிடித்து, எமாத் நாட்டிலிருக்கும் ரெபிளாவில் சிறையில் வைத்தான். அன்றியும் யூதா நாடு தனக்கு நூறு தாலந்து வெள்ளியையும், ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் செலுத்தக் கட்டளையிட்டான்.
34 பாரவோன் நெக்காவோ யோசியாசின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதில் அரசனாக ஏற்படுத்தி, அவனது பெயரை யோவாக்கிம் என்று மாற்றினான். பின்னர் யோவக்காசை எகிப்துக்குக் கொண்டு சென்றான். அவன் அங்கேயே இறந்து போனான்.
35 மேற்சொன்ன வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் விதித்த கட்டளைப்படி செலுத்த எண்ணி, யோவாக்கிம் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். மேலும் மக்களிடமிருந்து அவரவர் வசதிக்கு ஏற்ப வெள்ளியும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி அதைப் பாரவோனுக்குச் செலுத்தினான்.
36 அரசனான போது யோவாக்கிமுக்கு வயது இருபத்தைந்து, பதினொன்று ஆண்டுகள் அவன் யெருசலேமில் அரசாண்டான். அவன் தாயின் பெயர் எசபிதா. இவள் ரூமா என்ற ஊரைச் சேர்ந்த பாதாயியா என்பவனின் மகள். யோவாக்கிம் தம் முன்னோர் செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான்.
அதிகாரம் 24
1 யோவாக்கிமின் ஆட்சி காலத்தில் பபிலோன் அரசன் நபுக்கொதொனோசோர் யூதாவின் மேல் போர் தொடுத்தான். (அதில் தோற்று) யோவாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்குப் பணிந்திருந்தான். பின்பு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
2 ஆண்டவர் கல்தேயாவினின்றும் சீரியாவினின்றும் மோவாபினின்றும் அம்மோன் மக்களினின்றும் கொள்ளைக்காரர்களை அவன் மீது ஏவி விட்டார். அவர் தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்குப்படி யூதாவை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.
3 மனாசே செய்திருந்த எல்லாப் பாவங்களின் காரணமாக யூதாவைத் தம் திருமுன் நின்றும் தள்ளி விடுவதாக ஆண்டவர் யூதாவுக்கு எதிராய்ச் சொல்லியிருந்த வாக்கின்படியே இது நிகழ்ந்தது.
4 மேலும் அவன் சிந்திய குற்றமற்ற குருதிக்காகவும், யெருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதினாலும் ஆண்டவர் மன்னிப்பளிக்க மனம் இரங்கவில்லை.
5 யோவாக்கிமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. இவற்றின்பின் யோவாக்கிம் தன் முன்னோரோடு துயில் கொண்டான்.
6 அவன் மகன் யோவாக்கின் அவனுக்குப் பின் அரசன் ஆனான்.
7 எகிப்திய அரசன் இதன்பின் தன் நாட்டிலிருந்து வெளிவரவேயில்லை. ஏனெனில், எகிப்திய நதி முதல் யூபிரட்டிசு நதி வரை எகிப்திய அரசன் கைவசம் இருந்த நாட்டையெல்லாம் பபிலோனிய அரசன் பிடித்திருந்தான்.
8 யோவாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. யெருசலேமில் மூன்று மாதம் அவன் அரசாண்டான். அவன் தாயின் பெயர் நோகெஸ்தா. இவள் யெருசலேமைச் சேர்ந்த எல்நாத்தான் என்பவனுடைய மகள்.
9 யோவாக்கின் தன் தந்தை செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான்.
10 அக்காலத்தில் பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோரின் படைவீரர் யெருசலேம் நகர் மேல் போர் தொடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர்.
11 பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோர் தன் மக்களோடு நகரைப் பிடிக்க வந்தான்.
12 அப்போது யூதாவின் அரசன் யோவாக்கினும் அவன் தாயும் அவன் ஊழியர்களும் பெருமக்களும் அண்ணகர்களும் பபிலோன் அரசனிடம் சரணடைந்தனர். பபிலோனின் அரசனும் அவனை ஏற்றுக்கொண்டான். இது நபுக்கொதொனோசோருடைய ஆட்சியின் எட்டாம் ஆண்டில் நிகழ்ந்தது.
13 பின்பு அவன் ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களையெல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் சொன்ன வாக்கின்படி ஆலயத்தில் இஸ்ராயேலின் அரசன் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன் பாத்திரங்களையும் உடைத்தெறிந்தான்.
14 மேலும் யெருசலேம் நகர மக்கள் அனைவரையும், நகரப் பெருமக்கள், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்கள், சிற்பக் கலைஞர், கொல்லர் ஆகியோரையும் சிறைப்பிடித்துப் பபிலோன் நகருக்குக் கொண்டு சென்றான். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மட்டும் தங்கள் ஊரில் விடப்பட்டனர்.
15 இதுவுமன்றி, அவன் யோவாக்கினையும், அவன் தாயையும் மனைவியரையும் அண்ணகர்களையும் பபிலோனுக்குச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றான். நாட்டின் நீதிபதிகளையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டு போனான்.
16 மேலும், உடல் வலிமையுள்ள ஏழாயிரம் பேரையும், சிற்பக் கலைஞரும் கொல்லருமாகிய ஆயிரம் பேரையும், ஆற்றல் மிக்கவர்களையும், போர் வீரர்களையும் அவன் சிறைப்படுத்திப் பபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
17 யோவாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிற்றப்பன் மாத்தானியாசை அரசனாக்கி அவனுக்கு செதேசியாசு என்ற மறு பெயரை இட்டான்.
18 செதேசியாசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் யெருசலேமில் பதினொன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் அமித்தாள். இவள் லொப்னா என்ற ஊரைச் சேர்ந்த ஏரேமியாசினுடைய மகள்.
19 யோவாக்கின் செய்தபடியே செதேசியாசும் ஆண்டவர் திருமுன் பாவம் செய்தான்.
20 யெருசலேமையும் யூதாவையும் தமது திருமுன் நின்று தள்ளிவிடும் அளவிற்கு ஆண்டவர் அவற்றின் மேல் கோபம் கொண்டிருந்தார். செதேசியாசு பபிலோனிய அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
அதிகாரம் 25
1 செதேசியாசினுடைய ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில் பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோர் தன் படையனைத்துடனும் யெருசலேமுக்குப் படையெடுத்து வந்து அதை முற்றுகையிட்டு அதைச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டினான்.
2 அவ்வாறே செதேசியாசு அரசனுடைய ஆட்சியின் பதினோராம் ஆண்டின் நான்காம் மாதத்தின் ஒன்பதாம் நாள்வரை நகர் முற்றுகையிடப்பட்டு, கொத்தளங்களால் சூழப்பட்டிருந்தது.
3 இதனால் நகரில் பஞ்சம் நிலவிற்று. நாட்டு மக்களுக்கு உணவு இல்லை.
4 அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு செய்யப்பட்டது. கல்தேயர்கள் நகரைச் சுற்றியிருக்க, படைவீரர்கள் எல்லாரும் அரசனின் தோட்டத்தினருகே உள்ள இரண்டு மதில்களுக்கும் நடுவிலுள்ள வாசலின் வழியாய்த் தப்பியோடினர். அரசன் செதேசியாசோ பாலைவனத்திற்குச் செல்லும் வழியே தப்பியோடினான்.
5 கல்தேயரின் படையினர் அரசனைப் பின்தொடர்ந்து எரிக்கோ நகரின் சமவெளியில் அவனைப் பிடித்தனர். அவனோடு இருந்த போர்வீரர் அனைவரும் அவனைத் தனியே விட்டுவிட்டுச் சிதறியோடி விட்டனர்.
6 அவர்கள் அரசனைப் பிடித்து, ரெப்ளாத்தாவில் தங்கியிருந்த பபிலோனிய அரசனிடம் கூட்டி வந்தனர். அவன் செதேசியாசுக்கு எதிராய்த் தீர்ப்பிட்டான்.
7 செதேசியாசின் புதல்வர்களை அவனது கண் முன்னே வெட்டினான்; மேலும் அவன் இரு கண்களையும் பிடுங்கிய பின், விலங்கிட்டு அவனைப் பபிலோன் நகருக்குக் கொண்டு சென்றான்.
8 பிறகு நபுக்கொதொனோசோருடைய ஆட்சியின் பத்தொன்பதாம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஏழாம் நாளில் பபிலோனிய அரசனின் ஊழியனும் படைத்தலைவனுமான நபுசர்தான் யெருசலேமுக்கு வந்தான்.
9 ஆண்டவரின் ஆலயத்தையும் அரச அரண்மனையையும் யெருசலேமில் உள்ள கட்டடங்களையும், எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்.
10 அப்படைத்தலைவனுடன் வந்திருந்த கல்தேயரின் படையினர் எல்லாரும் யெருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்து வீழ்த்தினர்.
11 நகரில் எஞ்சியிருந்த மக்களையும் ஒளித்து ஓடிப் பபிலோனிய அரசனிடம் சரணடைந்திருந்தவர்களையும் மற்றச் சாதாரண மக்களையும் படைத்தலைவன் நபுசர்தான் கைதிகளாகக் கொண்டு போனான்.
12 திராட்சைச் தோட்டக்காரர், உழவர் போன்ற ஏழை எளியோரை அவன் அங்கேயே விட்டு வைத்தான்.
13 கல்தேயர்கள் ஆலயத்திலிருந்த பித்தளைத் தூண்களையும், பித்தளைக் கடலையும், அதன் தாங்கிகளையும் உடைத்து அவற்றின் பித்தளை முழுவதையும் பபிலோனுக்குக் கொண்டு போனார்கள்.
14 செப்புப் பானைகளையும் அகப்பைகளையும் முட்கரண்டி, கிண்ணங்களையும், கலயங்களையும், ஆலயத்தில் பயன்படும் ஏனைய பித்தளைப் பாத்திரங்களையும் கூட எடுத்துச் சென்றனர்.
15 மேலும், படைத்தலைவன் பொன்னாலும் வெள்ளியாலுமான தூபக்கலசங்களையும் கோப்பைகளையும், பொன், வெள்ளியாலான பொருட்கள் எல்லாவற்றையுமே எடுத்துச் சென்றான்.
16 சாலமோன் ஆண்டவரின் ஆலயத்தில் செய்து வைத்திருந்த இரண்டு தூண்களையும், ஒரு கடலையும் அதன் தாங்கிகளையும் கொண்டு போனான். அவன் எடுத்துச் சென்ற எல்லாப் பாத்திரங்களையும் செய்யப் பயன்பட்டிருந்த பித்தளையின் நிறை இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாது.
17 ஒவ்வொரு தூணும் பதினெட்டு முழ உயரமுடையது. பித்தளையாலான அதன் மேற்பாகம் மூன்று முழ உயரமுடையது. அத்தூணின் மேற்பாகத்தில் மாதுளம் பழம் போன்ற வேலைப்பாடுகள் கொண்ட வலையும் இருந்தது. அவை எல்லாம் பித்தளையால் செய்யப்பட்டவை. இரண்டாம் தூணிலும் அவ்விதமான சித்திர வேலைப்பாடுகள் இருந்தன.
18 அன்றியும், படைத்தலைவன் தலைமைக் குரு சராயியாசையும் உதவிக் குரு செப்போனியாசையும் மூன்று வாயிற் காவலர்களையும் கொண்டு சென்றான்.
19 மேலும், போர்வீரர்கட்குத் தலைவனாயிருந்த அண்ணகன் ஒருவனையும், அரசனின் உற்ற நண்பர்களுள் நகரில் அகப்பட்ட ஐந்து பேரையும், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களைப் போருக்குப் பழக்கிவந்த படைத்தலைவன் சோபேரையும், நகரிலிருந்த சாதாரண மக்களில் அறுபது பேரையும் சிறைப்பிடித்துச் சென்றான்.
20 படைத்தலைவன் நபுசர்தான் அவர்களைப் பிடித்து ரெபிளாத்தாவில் தங்கியிருந்த பபிலோனிய அரசனிடம் கொண்டு போனான்.
21 அவர்களைப் பபிலோனிய அரசன் எமாத் நாட்டிலிருக்கும் ரெபிளாத்தா என்னுமிடத்தில் வெட்டிக் கொன்றான். யூதா மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.
22 மேலும் பபிலோனிய அரசன் நபுக்கொதொனோசோர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கொதோலியாசைத் தலைவனாக நியமித்தான். இவன் சாபானின் மகனான அகிக்காமின் புதல்வன்.
23 பபிலோனிய அரசன் கொதோலியாசைத் தலைவனாக ஏற்படுத்திய செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் அறிந்தபோது, நாத்தானியாசின் மகன் இஸ்மாயேல், தாரேயின் மகன் யோவான், நெத்தோபாத் ஊரானான தானேயு, மேத்தின் மகன் சராயியா, மவாக்காத்தியின் மகன் எசோனியாசு ஆகியோர் தத்தம் ஆட்களோடு மாஸ்பாவிலிருந்த கொதோலியாசைப் பார்க்க வந்தனர்.
24 கொதோலியாசு அவர்களையும் அவர்களின் ஆட்களையும் நோக்கி, "கல்தேயருக்கு ஊழியம் செய்ய நீங்கள் அஞ்ச வேண்டாம். நாட்டில் இருந்து கொண்டே பபிலோனிய அரசனுக்கு ஊழியம் செய்யுங்கள்; அதுவே உங்களுக்கு நல்லது" என்று ஆணையிட்டுச் சொன்னான்.
25 ஏழுமாதம் சென்று அரச குலத்தில் பிறந்த எலிசாமாவின் மகன் நாத்தானியாசின் புதல்வன் இஸ்மாயேல், பத்து மனிதருடன் மாஸ்பாவுக்கு வந்தான். அவர்கள் கொதோலியாசையும் அவனோடிருந்த யூதரையும் கல்தேயரையும் வெட்டிக் கொன்றனர்.
26 அப்பொழுது மக்கள் யாவரும், பெரியவரும் சிறியவரும், கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத் தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.
27 யூதாவின் அரசன் யோவாக்கின் நாடு கடத்தப்பட்ட முப்பத்தேழாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் நாள், பபிலோனிய அரசன் எவில்மெரோதக் அரியணை ஏறின அதே ஆண்டில், யூதாவின் அரசன் யோவாக்கினைச் சிறையிலிருந்து விடுவித்தான்.
28 அவனோடு இரக்கத்துடன் உரையாடி, அவனுக்குப் பபிலோனிலிருந்த மற்ற அரசர்களுக்கு மேல் அதிகாரம் வழங்கினான். அவன் சிறையில் அணிந்திருந்த ஆடைகளை மாற்றச் செய்தான்.
29 அன்றுமுதல் தான் சாகும்வரை யோவாக்கின் அரச பந்தியிலேயே அமர்ந்து உணவருந்தி வந்தான்.
30 யோவாக்கின் தன் வாழ்நாளெல்லாம் அரச கட்டளைப்படி தனக்குத் தேவையானவற்றை நாளும் தடையின்றிப் பெற்று வந்தான்.