அதிகாரம் 01
1 யெருசலேமிலும் யூதேய நாட்டிலுமுள்ள யூத சகோதரர் எகிப்து நாட்டிலுள்ள யூத சகோதரருக்கு வாழ்த்துகளும் சமாதானமும் கூறுகிறார்கள்.
2 உங்களுக்கு ஆண்டவர் நன்மை செய்து, தம் உண்மையுள்ள ஊழியரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடன் செய்தருளிய வாக்குறுதியை நினைவு கூர்வாராக.
3 தமக்கு ஊழியம் புரியவும், தம்முடைய திருவுளத்தைத் தாராள இதயத்தோடும் விருப்புடனும் நிறைவேற்றவும் வேண்டிய மனத்தை உங்களெல்லோருக்கும் கடவுள் கொடுத்தருள்வாராக.
4 தம்முடைய கட்டளைகளிலும் சட்டங்களிலும் உங்கள் இதயத்தைத் திறந்து சமாதானம் அளிப்பாராக.
5 உங்கள் மன்றாட்டுகளைக் கேட்டு, உங்கள் மீது அருள் கூர்ந்து, துன்பகாலத்தில் உங்களைக் கைவிடாதிருப்பாராக.
6 இப்போது நாங்களோ இவ்விடத்தில் உங்களுக்காக வேண்டிக்கொண்டு வருகிறோம்.
7 நூற்றறுபத்தொன்பதாம் ஆண்டு தெமெத்திரியுஸ் ஆட்சியில், யாசோன் புனித நாட்டையும் அரசையும் விட்டகன்றது முதல் அந்த ஆண்டுகளில் எங்களுக்கு நேரிட்ட துன்பத்திலும் கொடுமையிலும் யூதராகிய நாங்கள் உங்களுக்கு எழுதினோம்.
8 அவர்கள் கதவை எரித்து விட்டார்கள்; மாசற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். நாங்கள் ஆண்டவரை மன்றாடினோம். எங்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. நாங்கள் பலியும் கோதுமை மாவும் காணிக்கை கொடுத்தோம்; விளக்குகளை ஏற்றினோம்; அப்பங்களைப் படைத்தோம்.
9 ஆதலால், இப்போது நிங்கள் காஸ்லேயு மாதத்தில் கூடாரத் திருநாளைக் கொண்டாடுங்கள்.
10 நூற்றெண்பத்தெட்டாம் ஆண்டு யெருசலேமிலும் யூதேயா நாட்டிலுமுள்ள மக்களும், சங்கத்தாரும் யூதாசும் அரசனான தோலெமேயுசுடைய ஆசிரியரும், அபிஷுகம் பண்ணப் பட்ட குருக்கள் வம்சத்தில் உதித்தவருமான அரிஸ்தோபோலுசுக்கும், எகிப்திலுள்ள யூதருக்கும் வாழ்த்துகளும் நலமும் கூறுகிறார்கள்.
11 பெரும் ஆபத்துகளிளனின்று கடவுளால் காப்பாற்றப்பட்ட நாங்கள் இத்தகைய அரசனை எதிர்த்தும் போர் செய்தமையால் கடவுளுக்கு நன்றியறிந்த வாழ்த்துகளைக் கூறுகிறோம்.
12 எங்களையும் புனித நகரையும் எதிர்த்துப் போர் செய்த அவர்களை அவரல்லவோ பாரசீகத்தினின்று வெளியேறச் செய்தவர்!
13 ஏனென்றால், அவன் பாரசீகத்தில் படைத்தலைவனாய் இருந்த போது, நானேயா என்னும் தேவதையின் குருக்களுடைய சதித்திட்டத்தால் ஏமாற்றப்பட்டுத் திரளான படைகளோடு நானேயா தேவதையின் ஆலயத்தில் மாண்டான்.
14 ஏனென்றால், அவளோடு வாழ்வதற்கும் சீதனம் என்னும் போர்வையின் கீழ் பெருஞ் செல்வம் பெறுவதற்கும் அந்தியோக்கஸ் என்பவனும் அவன் நண்பரும் அவ்விடம் வந்தார்கள்.
15 நானேயாவின் குருக்கள் அச்செல்வத்தினை அவன் முன்பாக வைத்தார்கள். அவன் சிலரோடு ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், ஆலயத்தின் கதவுகளை அடைத்து விட்டார்கள்.
16 அந்தியோக்கஸ் உள்ளே நுழைந்த போது, ஆலயத்தின் இரகசியக் கதவைத் திறந்து, படைத்தலைவனையும் அவனுடன் இருந்தவர்களையும் கற்களால் அடித்துக் கொன்றார்கள்; அவர்களைத் துண்டு துண்டாக்கி, தலைகளை வெட்டி வெளியே எறிந்தார்கள்.
17 அக்கிரமிகளைக் காட்டிக் கொடுத்த கடவுள் எல்லாவற்றிலும் வாழ்த்தப்படக்கடவாராக.
18 காஸ்லேயு மாதம் இருபத்தைந்தாம் நாள் கடவுள் ஆலயத்தைத் தூய்மைப்படுத்த வேண்டியிருப்பதால், உங்களுக்கு அதை அறிவிப்பது அவசியமென்று எண்ணினோம். நீங்களும் உடன்படிக்கைப் பெட்டியின் நாளையும், நெகேமியா கடவுளின் ஆலயத்தைக் கட்டிப் பீடத்தில் பலியிட்ட போது கொடுக்கப்பட்ட நெருப்பின் நாளையும் கொண்டாட வேண்டியிருக்கிறது.
19 ஏனென்றால், நம்முடைய முன்னோர் பாரசீக நாட்டிற்கு இட்டுச் செல்லப்பட்ட போது, கடவுளை ஆராதித்து வந்த குருக்கள் பீடத்தினின்று நெருப்பை எடுத்துக் கணவாயிலிருந்த ஆழமான வறண்ட ஒரு கிணற்றில் அதை ஒளித்து வைத்து, அந்த இடம் எவருக்கும் தெரியாத விதமாய் அதில் அதைக் காப்பாற்றி வந்தார்கள்.
20 பல ஆண்டுகள் சென்ற பிறகு நெகேமியா பாரசீக அரசனால் அனுப்பப்பட கடவுள் விரும்பிய போது, நெருப்பை ஒளித்து வைத்திருந்த குருக்களுடைய பேரப்பிள்ளைகளை அதைத் தேடும்படி அனுப்பினார். அவர்கள் எங்களுக்குச் சொன்னது போல நெருப்பைக் காணாமல் அடர்த்தி மிக்க தண்ணிரைக் கண்டார்கள்.
21 அவர் அத்தண்ணீரை மொண்டு தம்மிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். இடப்பட்ட பலிகளின் மேலும் விறகின் மேலும் அதன் மீது வைக்கப்பட்டவைகளின் மேலும் அந்தத் தண்ணீரைத் தெளிக்கும்படி குரு நெகேமியா கட்டளையிட்டார்.
22 இப்படிச் செய்தவுடனே, முன் மேகத்தில் மறைந்திருந்த சூரியன் ஒளிவிடத் தொடங்கியது; பெருந் தீ பற்றிக் கொண்டது.
23 எல்லாரும் வியப்பு அடைந்தார்கள். பலி எரியும் போது யோனத்தாஸ் தொடங்க, மற்றவர்கள் மறுமொழி சொல்ல, இவ்வகையாய் மன்றாடினார்கள்.
24 நெகேமியா மன்றாடிய வகையாவது: அனைத்தையும் படைத்து, பயங்கரத்துக்குரியவரும் வல்லமையுள்ளவரும் நீதியும் இரக்கமும் உள்ளவருமாகிய ஆண்டவரே, நீர் ஒருவரே நல்ல அரசர்.
25 நீர் ஒருவரே உத்தமர்; நீர் ஒருவரே நீதியுள்ளவர்; எல்லா வல்லமையும் உள்ளவர்; என்றும் இருப்பவர்; நீரே இஸ்ராயேலரைத் தீமைகள் அனைத்தினின்றும் காப்பாற்றுகிறீர். எங்கள் முன்னோரைத் தேர்ந்து கொண்டு, அவர்களைப் புனிதப்படுத்தினீர்.
26 உம்முடைய இஸ்ராயேல் மக்கள் எல்லாருக்காகவும் பலியை ஏற்றுக்கொள்ளும். உம்முடைய உடைமையைக் காப்பாற்றிப் புனிதப் படுத்தியருளும்.
27 சிதறிப்போன எங்கள் மக்களை ஒன்று சேரும். புறவினத்தார்க்கு அடிமைப் பட்டவர்களை மீட்டருளும். அவமதிக்கப்பட்டவர்களையும், வெறுத்துத் தள்ளப்பட்டவர்களையும் கண்ணோக்கும். நீர் எங்கள் கடவுளென்று புறவினத்தார் அறியக்கடவார்கள்.
28 எங்களைத் துன்புறுத்தி, அகந்தையால் அவமதிக்கிறவர்களைத் துன்பத்துக்குள்ளாக்கும்.
29 மோயீசன் சொன்னது போல, புனித இடத்தில் உம்முடைய மக்களை நிலைநிறுத்தும் என்று மன்றாடினார்.
30 குருக்களோ பலி எரியும் வரை இன்னிசை பாடினார்கள்.
31 பலிக்குப்பின் மீதித் தண்ணீரைப் பெரிய கற்களின் மேல் ஊற்றும்படி நெகேமியா கட்டளையிட்டார்.
32 அப்படிச் செய்தவுடனே அவற்றில் நெருப்பு பற்றிக் கொண்டது. ஆனால், பீடத்தினின்று வீசிய ஒளியினால் அது அவிக்கப்பட்டது.
33 இது வெளியான பின், குருக்கள் நெருப்பை ஒளித்து வைத்திருந்த இடத்தில் தண்ணீர் தோன்றியதென்றும், நேகேமியாவும் அவருடன் இருந்தவர்களும் அதைக் கொண்டு பலிகளைத் தூய்மையாக்கினார்களென்றும் பாரசீக மன்னனுக்கு அறிவிக்கப்பட்டது.
34 மன்னன் சிறிது ஆலோசித்தபின், தான் கேட்டவற்றைப் கவனத்தோடு விசாரித்து, நடந்தவற்றைப் பரிசோதிக்கும் படியாக கடவுளுக்கு ஓர் ஆலயத்தைக் கட்டினான்.
35 பரிசோதித்த பிறகு குருக்களுக்குப் பல செல்வங்களையும் வெவ்வேறு வெகுமதிகளையும் தானே கொடுத்தான்.
36 புனிதம் என்று பொருள் கொள்ளும் 'நெப்தார்' என்னும் பெயரை நெகேமியா அந்த இடத்திற்கு இட்டார். பலர் நெப்பி என்றும் அதை அழைக்கிறார்கள்.
அதிகாரம் 02
1 அயல் நாடுகளில் சிறைப்படுத்தப்பட்டோர் முன்பே தங்களுக்குக் கட்டளையிட்டபடி நெருப்பை எடுத்துக் கொண்டு போக இறைவாக்கினரான எரெமியாஸ் ஆணையிட்டதாக அவருடைய நூல்களில் காணப்படுகிறது.
2 ஆண்டவருடைய கட்டளைகளை மறவாதபடிக்கும், பொன், வெள்ளியினால் செய்யப்பட்ட சிலைகளையும், அவைகளின் அணிகளையும் கண்டு மோசம் போகாதபடிக்கும் அவர்களுக்கு அவர் கட்டளை கொடுத்திருந்தார்.
3 இன்னும் வேறு பலவற்றையும் சொல்லி, தங்கள் இதயத்தினின்று கட்டளையை நீக்காமலிருக்க அறிவுரை கூறினார்.
4 இன்னும் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், மோயீசன் ஏறிக் கடவுளுடைய உரிமைப் பாகத்தைக் கண்ட மலையின் மேல் சேர்கிற வரை, தமக்குக் கடவுள் கொடுத்திருந்த உத்தரவின்படி கூடாரத்தையும் பெட்டகத்தையும் தம்முடன் கொண்டு வர வேண்டுமென்று இறைவாக்கினர் கட்டளையிட்டார்.
5 அவ்விடம் வந்தபோது எரெமியாஸ் குகை ஒன்றைக் கண்டார்; கூடாரத்தையும் பெட்டகத்தையும் சாம்பிராணிப் பீடத்தையும் அவ்விடம் கொண்டு வந்து, வாயிலை அடைத்து விட்டார்.
6 அவரைப் பின்பற்றி வந்த சிலர் தாங்களும் அவ்விடத்தைத் தெரிந்துகொள்ள வந்தார்கள்; ஆனால், அதைக் கண்டுகொள்ளக் கூடவில்லை.
7 எரெமியாஸ் அதை அறிந்த போது அவர்களைக் கடிந்து: கடவுள் தம் மக்களை ஒன்று சேர்த்து இரக்கம் காட்டும் வரையில் அந்த இடம் எவருக்கும் தெரியாதிருக்கும்.
8 பின்பு தான் ஆண்டவர் அதை வெளிப்படுத்துவார். அப்பொழுது ஆண்டவருடைய மாட்சிமை வெளிப்படும். மோயீசனுக்குக் காண்பிக்கப்பட்டது போலவும், உன்னத கடவுளுக்கு ஆலயத்தை அர்ப்பணிக்க சாலமோன் மன்றாடிய போது தோன்றியது போலவும் மேகம் இருக்கும், என்றார்.
9 ஏனென்றால், தம் ஞானத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தி (சாலமோன்) ஞானம் நிறைந்தவராய், கடவுள் ஆலயம் அபிஷுகம் செய்யப்பட்டதன் நினைவாகவும், முடிவு பெற்றதன் நினைவாகவும் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.
10 மோயீசன் ஆண்டவரை மன்றாடிய போது விண்ணினின்று நெருப்பு இறங்கிப் பலியை எரித்தது போல, சாலமோன் மன்றாடவே வானத்தினின்று நெருப்பு இறங்கிப் பலியை எரித்தது
11 பாவத்துக்காகக் கொடுக்கப்பட்ட அப்பலி சாப்பிடப்படவில்லை; ஆகவே, எரிக்கப்பட்டது என்று மோயீசன் சொன்னார்.
12 அதுபோலவே (சாலமோனும்) எட்டு நாட்களாக ஆலய அபிஷுகத்தைக் கொண்டாடினார் என்று கூறப்பட்டுள்ளது.
13 நெகேமியாவின் நூல்களிலும் விளக்கங்களிலும் இவை சொல்லப்பட்டிருக்கின்றன. நூல் நிலையம் ஒன்று அமைக்க, அவர் நாடுகளிலிருந்து இறைவாக்கினருடையவும் தாவீதினுடையவும் நூல்களையும், காணிக்கைகளைப் பற்றிய அரசர்களின் கடிதங்களையும் ஒன்று திரட்டினார்.
14 அப்படியே யூதாசும், நாங்கள் புரிந்த போரின் போது தவறிப் போன நூல்களையெல்லாம் ஒன்று சேர்த்தார். அவை இப்போது எங்களிடம் இருக்கின்றன.
15 ஆகையால், அவை உங்களுக்கு வேண்டுமானால், உங்களிடம் அவற்றை எடுத்து வரும்படி சிலரை அனுப்புங்கள்.
16 ஆலயத்தைத் தூய்மைப் படுத்திய நினைவு நாட்களைக் கொண்டாட இருக்கிறபடியால், இவற்றை உங்களுக்கு எழுதினோம்.
17 இந்நாட்களை நீங்களும் கொண்டாடினால் நலம். தம்முடைய மக்களை மீட்டு, சுதந்தரத்தையும் அரசையும் குருத்துவத்தையும் புனிதத்துவத்தையும் எல்லாருக்கும் கொடுத்த கடவுளே
18 கட்டளையில் வாக்குறுதி வழங்கியது போல விரைவில் நம் மேல் இரக்கம் கொள்வாரென்றும், வானத்தின் கீழ் புனித இடத்தில் நம்மைச் சேர்ப்பாரென்றும் நம்புகிறோம்.
19 ஏனென்றால், அவர் பேராபத்துகளினின்று நம்மை மீட்டார்; ஆலயத்தையும் தூய்மைப்படுத்தினார்.
20 யூதாஸ் மக்கபேயுசைப் பற்றியும், அவருடைய சகோதரர்களைப் பற்றியும், கடவுளின் பேராலயத்தைத் தூய்மைப் படுத்தல், பீடத்தின் அபிஷுகம் இவைகளைப் பற்றியும்,
21 இன்னும் மகா அந்தியோக்கஸ், அவன் புதல்வன் யூப்பாத்தோர் இவர்கள் செய்த போரைப் பற்றியும்,
22 சொற்பப் பேராயிருந்தாலும் நாடு முழுமையையும் கைப்பற்றித் தீயோர் கூட்டத்தைத் துரத்தியடித்து யூதருக்காகத் துணிவுடன் போர் புரிந்தவர்களுக்கு விண்ணினின்று வழங்கப்பட்ட சிறந்த உதவிகளைப் பற்றியும் பேசுவோம்.
23 யூதாசும் அவர் சகோதரர்களும் உலக முழுவதிலும் பெயர் பெற்ற கடவுள் ஆலயத்தைத் திரும்ப கைப்பற்றிக் கெண்டார்கள்; நகரை மீட்டார்கள்; புறக்கணிக்கப்பட்ட சட்டங்களை திரும்ப ஏற்படுத்தினார்கள். ஆண்டவரும் தயவாய் அவர்கள் பால் இரக்கம் கொண்டார்.
24 சிரேனே ஊரானான யாசோனால் ஐந்து நூல்களிலே எழுதப்பட்டவற்றை ஒரே நூலில் சுருக்கி எழுத முயன்றோம்.
25 ஏனென்றால், நூல்களின் எண்ணிக்கையினாலும், வரலாற்று நிகழ்ச்சிகளை அறிய விரும்பகிறவர்களுக்கு நிகழ்ச்சிகளின் பெருக்கத்தினாலும் உண்டாகும் வருத்தத்தை நினைவில் கொண்டு,
26 வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்கு மனநிறைவு உண்டாகும்படியும், கவனிப்பவர்களின் மனத்தில் எளிதாய்ப் பதியும்படியும், வாசிப்போர் அனைவருக்கும் பயன் உண்டாகும்படியும், கவனம் எடுத்துக் கொண்டோம்.
27 சுருக்கி எழுதும் இந்த வேலையை ஏற்றுக் கொண்ட எமக்கோ இது எளிதன்று; உண்மையாகவே கவலை மிக்க கடினமான வேலை.
28 ஆயினும், விருந்து அளிப்பவர்கள் விருந்தினருடைய மனத்திற்கு நிறைவு ஏற்படத் தேடுவது போல, பலருடைய நன்மையை முன்னிட்டு மகிழ்வோடு இவ்வேலையை ஏற்றுக் கொண்டோம்.
29 ஒவ்வொரு நிகழ்ச்சியின் உண்மையையும் எழுதியவர்களிடமிருந்து அப்படியே ஏற்றுக் கொண்டு, அவைகளைச் சுருக்கமாய் எழுதவே கவனம் செலுத்துகிறோம்.
30 ஏனென்றால், புது வீட்டைக் கட்டுகிறவன் கட்டடம் முழுமையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது; சித்திரம் எழுதுகிறவனோ அலங்காரத்துக்கு அடுத்தவைகளையே தேடுகிறான்.
31 அது போலவே எம்மையும் கொள்ளுங்கள். ஏனென்றால், வரலாறு எழுதுகிறவனுடைய கடமை நிகழ்ச்சிகளைச் சேர்ப்பதும், ஒழுங்காய்ச் சொல்வதும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தீர ஆராய்வதுமே ஆகும்.
32 வாக்கியத்தைச் சுருக்கிச் சொல்லவும், நீண்ட பேச்சை நீக்கவும்- இது போன்றவைகளைச் செய்யச் சுருக்கி எழுதுகிறவனை விட்டு விட வேண்டும்.
33 ஆகையால், இங்கு வரலாற்றைத் தொடங்குவோம். முகவுரையில் இவ்வளவு சொன்னது போதும். எனென்றால், வரலாற்றைச் சுருக்கி, வரலாற்றுக்கு முன் விரித்துரைப்பது அறிவீனமான காரியம்.
அதிகாரம் 03
1 தலைமைக்குருவான ஓனியாசுடைய பக்தியையும், பாவத்தின் மீது அவர் கொண்ட வெறுப்பையும் முன்னிட்டுப் புனித நகர் சமாதானத்தில் இருந்தது. கட்டளைகளும் நுணு நுணுக்கமாய் அனுசரிக்கப் பட்டன.
2 அரசர்களும் பிரபுக்களும் அவ்விடம் வணக்கத்திற்கு உகந்தது என்று எண்ணினார்கள். ஆதலால், கடவுள் ஆலயத்தை மிகவும் விலையுயர்ந்த காணிக்கைகளால் சிறப்பித்தார்கள்.
3 எப்படியென்றால், ஆசியா அரசனான செலேயுக்கஸ் கூடப் பலிகளை நடத்துவதற்கு உதவியான எல்லாச் செலவுகளையும் தன் வருமானத்தினின்று கொடுத்தான்.
4 கடவுள் ஆலயத்துக்குத் தலைவனாக நியமிக்கப்பட்ட பென்யமீன் கோத்திரத்தானான சீமோன் என்பவனோ தலைமைக்குரு தன்னை எதிர்த்த போதிலும், நகரில் அநீதமான காரியத்தைச் செய்ய முயன்றான்.
5 ஆனால், ஓனியாசை வெல்லக் கூடாமையால், செலேசீரியா பெனிசியா நாடுகளில் அக்காலத்தில் படைத்தலைவனாய் இருந்த தார்சேயின் புதல்வன் அப்பொல்லோனியுசிடத்தில் வந்து,
6 யெருசலேமில் பணம் நிறைந்த கருவூலம் இருக்கிறது என்றும், திரண்ட பொதுப்பணம் ஏராளமாக உண்டு என்றும், அவை பலியிடும் காரியத்துக்குத் தேவையில்லை என்றும், அவை முழுவதும் அரசனுடைய கையில் விழக்கூடும் என்றும் அறிவித்தான்.
7 பணத்தைப் பற்றித் தான் கேட்டவைகளை அப்பொல்லோனியுஸ் அரசனிடம் தெரிவித்த போது, அவன் தன் செயலனான எலியோதோருசை அழைத்து, மேற்சொல்லிய பணத்தை எடுத்து வரும்படி கட்டளை கொடுத்து அனுப்பினான்.
8 உடனே எலியோதோரூஸ் செலேசீரியா, பெனிசியா நகரங்களைப் பார்க்கச் செல்பவன் போலத் தோன்றினாலும் உண்மையில் அரசனுடைய கருத்தை நிறைவேற்றுவதற்கே புறப்பட்டான்.
9 ஆனால், அவன் யெருசலேம் வந்து, நகரத்தில் தலைமைக்குருவால் மரியாதையாய் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, பணம் இருக்கிறதென்று தனக்குச் சொல்லப்பட்ட செய்தியை அறிவித்தான்; தான் வந்த கருத்தையும் வெளிப்படுத்தினான்: உண்மையாகவே பணம் உண்டோ என்றும் கேட்டான்.
10 அப்போது தலைமைக்குரு: அவை பொதுப்பணம் என்றும், விதவைகளுடையவும் அனாதைப் பிள்ளைகளுடையவும் பொருள் என்றும் தெரியப்படுத்தினார்.
11 மேலும், தீயவனான சீமோனால் சொல்லப் பட்டவைகளில் சில, மாண்பு மிக்க இர்க்கானுஸ் தோபியாசுக்குச் சொந்தம் என்றும், வெள்ளியில் நாற்பது தாலேந்துகளும், பொன்னில் இருநூறு தாலேந்துகளும் மட்டுமே இருக்கின்றன என்றும்,
12 வணக்கத்தையும் புனிதத்துவத்தையும் முன்னிட்டுப் பூமியெங்கும் மதிக்கப்படும் இடத்திலும், கடவுள் ஆலயத்திலும் நம்பிக்கை வைத்தவர்களை ஒருபோதும் மோசம் செய்யக் கூடாது என்றும் சொன்னார்.
13 ஆனால் எலியோதோருஸ், அரசனால் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைப்படி, பொருட்கள் அனைத்தும் அரசனிடம் கொண்டு போகப் படவேண்டும் என்றும் சொன்னான்.
14 ஆதலால், இவைகளை நிறைவேற்ற ஒருநாளை நியமித்து எலியோதோருஸ் கடவுள் ஆலயத்துள் புகுந்தான். நகர் முழுவதும் உண்டான பயம் சிறிதன்று.
15 குருக்கள் தங்கள் குருத்துவ ஆடைகளோடு பீடத்துக்கு முன்பாக நெடுங்கிடையாய் விழுந்து, பொதுப்பணத்தில் பங்குள்ளவர்களுக்கு அதைக் காப்பாற்றிக் கொடுக்கும்படி, பொதுபணத்தைப் பற்றிய சட்டத்தை ஏற்படுத்தியவரான விண்ணில் இருப்பவரை வேண்டிக் கொண்டார்கள்.
16 அப்போது தலைமைக்குருவின் தோற்றம் பார்ப்பதற்கு இதயத்தைப் புண்படுத்துவதாய் இருந்தது. ஏனென்றால், அவர் முகமும் நிறமாற்றமும் அவரது ஆன்மாவிலுள்ள துயரத்தை வெளிப்படுத்தின.
17 ஏனென்றால், பயமும் உடல் நடுக்கமும் அம்மனிதரை ஆட்கொண்டிருந்தன. அவரைப் பார்த்தவர்களுக்கு அவர் இதயத்தில் உறைந்து கிடந்த நோவை அவை தெளிவாகக் காட்டின.
18 மக்களும் வீடுகளினின்று கும்பல் கும்பலாய் ஓடிவந்தார்கள்; கடவுள் ஆலயம் அவமதிக்கப்படப் போவதைக் கண்டு வெளிப்படையாய் மன்றாடினார்கள்.
19 பெண்கள் தோள் வரைக்கும் தவச் சட்டைகளை அணிந்து கொண்டு தெருக்களில் கூடினார்கள். அடைபட்டிருந்த கன்னியர்களில் சிலர் ஓனியாசிடம் ஓடினார்கள்; சிலர் சுற்று மதிலுக்கு ஓடினார்கள்; சிலர் பலகணிகள் வழியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
20 எல்லாரும் விண்ணை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாடினார்கள்.
21 கலக்கமுற்றிருந்த கும்பலினுடையவும், பெரிதும் வருத்தமடைந்திருந்த தலைமைக் குருவினுடையவும் ஏக்கம் மிகவும் துயரத்துக்குரியதாய் இருந்தது.
22 தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டவை ஒப்புவித்தவர்களுக்காக முழுமையும் காப்பாற்றப்படும்படிக்கு எல்லாம் வல்ல கடவுளை அவர்கள் மன்றாடினார்கள்.
23 எலியோதோருசோவென்றால் தான் சொல்லியதை நிறைவேற்ற, தானே தன் ஊழியரோடு கருவூலம் இருந்த இடத்திற்கு வந்தான்.
24 ஆனால், தமது மாட்சியின் அடையாளத்தை வெளிக்காட்ட எல்லாம் வல்ல கடவுள் திருவுளங்கொண்டார். ஆதலால், அவனுக்குக் கீழ்ப்படியத் துணிந்தவர்கள் எல்லாரும் கடவுளுடைய வலிமையால் விழத்தாட்டப்பட்டார்கள். பயமும் கலக்கமும் அவர்களை ஆட்கொண்டன.
25 பயங்கரத்துக்குரிய ஒருவர் ஒரு குதிரை மேல் தோன்றினார். அவர் விலையயுர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார். குதிரை தன் முன்னங்கால்களினால் எலியோதோருசை வலிமையுடன் உதைத்தது. அதன் மேல் இருந்தவரோ பொன்னாயுதங்கள் வைத்திருப்பதாகத் தோன்றினார்.
26 வலிமையை அணியாகக் கொண்டு, மாட்சியால் உயர்ந்து, அழகான ஆடைகள் அணிந்திருந்த வேறு இரு இளைஞர்களும் தோன்றினார்கள். அவர்கள் அவனை வளைத்து இருபுறத்திலும் நின்று கொண்டு, விடாமல் அடித்துக் காயப்படுத்தினார்கள்.
27 திடீரென எலியோதோருஸ் தரையில் விழுந்தான். காரிருள் அவனைச் சூழ்ந்தது. அவனைத் தூக்கி ஒரு நாற்காலியில் வைத்து வெளியே கொண்டு சென்றார்கள்.
28 முன் சொல்லிய கருவூலத்தில் பல காலாட்களோடும் ஏவல்களோடும் புகுந்த அவன் ஒருவருடைய உதவியும் இல்லாமல் வெளியே கொண்டு போகப்பட்டான். இதில் கடவுளின் வல்லமை வெளிப்படையாய்த் தெரிந்தது.
29 கடவுளின் வல்லமையால் அவன் பேச்சில்லாமலும், யாதொரு நம்பிக்கையும் உதவியுமில்லாமலும் கிடந்தான்.
30 அவர்களோ ஆண்டவரைப் போற்றினார்கள். ஏனென்றால், அவர் தமது இடத்தை மாட்சிப்படுத்தினார். சிறிது நேரத்துக்கு முன் பயத்தாலும் கலக்கத்தாலும் நிறைந்திருந்த கடவுள் ஆலயம், எல்லாம் வல்ல ஆண்டவர் தோன்றவே, அக்களிப்பாலும் அகமகிழ்வாலும் நிரப்பப்பட்டது.
31 அப்போது எலியோதோருசுடைய நண்பரில் சிலர் குற்றுயிராய்க் கிடந்த அவனுக்கு உன்னத கடவுள் உயிர்க் கொடுக்கும்படி, ஓனியாஸ் உடனே மன்றாடவேண்டும் என அவரைக் கேட்டுக் கொண்டார்கள்.
32 யூதரால் எலியோதோருசுக்குத் தீமை செய்யப்பட்டதென்று அரசன் ஐயுறுவானென்று தலைமைக் குரு எண்ணி, அவன் உடல் நலம் பெற (ஆரோக்கிய) பலி ஒப்புக்கொடுத்தார்.
33 தலைமைக்குரு மன்றாடிய போது, அதே இளைஞர்கள் முன் போலேவே ஆடை அணிந்து கொண்டு எலியோதோருசுக்குத் தம்மைக் காண்பித்து: ஓனியாஸ் குருவுக்கு நன்றிகூறு; ஏனென்றால், அவரை முன்னிட்டு ஆண்டவர் உனக்கு உயிரளித்தார்.
34 கடவுளால் தண்டிக்கப்பட்ட நீயோ கடவுளுடைய மாட்சியையும் வலிமையையும் எல்லாருக்கும் தெரியப்படுத்து என்று சொல்லி, மறைந்து போனார்கள்.
35 எவியோதோருஸ் கடவுளுக்குக் காணிக்கை ஒப்புக்கொடுத்து, தனக்கு உயிர்கொடுத்தவருக்குப் பெரிய வாக்குறுதிகளைச் செய்து, ஓனியாசுக்கும் நன்றிசெலுத்தி, தன் படையைக் கூட்டிக் கொண்டு அரசனிடம் திரும்பினான்.
36 தன் கண்கள் கண்ட கடவுளுடைய அரும்பெரும் செயல்களைப் பற்றி அனைவருக்கும் சான்று பகர்ந்தான்.
37 யெருசலேமுக்கு மறுபடியும் அனுப்புவதற்கு எவன் தகுதியானவனென்று, அரசன் எலியோதோருசைக் கேட்டபோது, அவன்:
38 உமக்கு யாரேனும் பகைவன் இருந்தால், அல்லது உமது அரசைக் கைப்பற்றத் தேடுகிறவன் யாரேனும் இருந்தால், அவனை அவ்விடம் அனுப்பும். அவன் அடிபட்டுத் தப்பி வருவானேயாகில், அவனை நீர் திரும்ப ஏற்றுக் கொள்வீர். ஏனென்றால், அவ்விடத்தில் உண்மையாகவே கடவுளின் வல்லமை விளங்குகின்றது.
39 ஏனென்றால், விண்ணில் வாழ்கிறவரே அவ்விடத்தைச் சந்நிப்பவரும், அதற்கு உதவி செய்கிறவருமாய் இருக்கிறார். அவ்விடத்தில் தீமை செய்ய வருகிறவர்களைத் தண்டித்து அழித்தொழிக்கிறார் என்றான்.
40 இவ்வாறு தான் எலியோதோருசுக்கும் நடந்தது; கருவூலம் காப்பாற்றப்பட்டது.
அதிகாரம் 04
1 பணத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் கோள் சொன்ன சீமோன், ஓனியாசே எலியோதோருசை இப்படிச் செய்வதற்குத் தூண்டினார் என்றும், அவரே தீமைகளைத் தூண்டியவர் என்றும் அவரைப் பற்றி அவதூறு பேசினான்.
2 நகரைப் காப்பாற்றுகிறவரும், மக்களுக்குக் காவலரும், கடவுளுடைய கட்டளையை நுணுக்கமாய் அனுசரிக்கிறவருமாய் இருந்த அவரை, நாட்டைக் காட்டிக்கொடுக்கிறவர் என்று சொல்லத் துணிந்தான்.
3 இப்பகை எவ்வளவு மிஞ்சிப் போனதென்றால், சீமோனுடைய நண்பரில் சிலர் கொலை முதலாய்ச் செய்தார்கள்.
4 இவ்வித சச்சரவுகளினால் உண்டான ஆபத்தும், செலேசீரியாவிலும் பெனிசியாவிலும் படைத்தலைவனாய் இருந்த அப்பொல்லோனியுசுடைய மதியீனமும் சீமோனுடைய கெடுகுணத்தை அதிகரிக்கக் கூடுமென்று ஓனியாஸ் எண்ணி, அரசனிடம் போனார்.
5 நகரத்தாரைக் குற்றம் சாட்டுவதற்கன்று; மாறாக எல்லாருடையவும் பொது நன்மையை முன்னிட்டுப் போனார்.
6 ஏனென்றால், அரசனின் அதிகாரம் இல்லாமல் காரியங்களைச் சீர்ப்படுத்துவதும், சீமோன் தன் மூடத்தனத்தை விட்டுவிடச் செய்வதும் கூடாத காரியமென்று கண்டார்.
7 ஆனால், செலேயுக்கஸ் மரணத்துக்குப் பின் மகா பெரியவன் என்று சொல்லப்பட்ட அந்தியோக்கஸ் ஆட்சியை ஏற்ற போது, ஓனியாசின் சகோதரன் யாசோன் என்பவன் தலைமைக்குருத்துவத்தை கைக்கொள்ள முயற்சி செய்தான்.
8 அரசனிடம் போய், முந்நூற்றறுபது வெள்ளித் தாலேந்துகளும், மற்ற வருமானங்களிலிருந்து எண்பது தாலேந்துகளும் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தான்.
9 மேலும், உடற் பயிற்சிக்கூடம் ஒன்றும் இளைஞர் குழு ஒன்றும் அமைக்கத் தனக்கு அதிகாரம் கொடுக்கப் படுவதோடு கூட, யெருசலேமில் இருப்பவர்கள் அந்தியோக்கியரென ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்னும் நூற்றைம்பது தாலேந்துகள் கொடுப்பதாகவும் வாக்குக் கொடுத்தான்.
10 அதற்கு அரசன் இசைய, யாசோன் அதிகாரத்தைக் கைப்பற்றி, உடனே தன் குலத்தார் புறவினத்தாருடைய வழக்கங்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய ஆரம்பித்தான்.
11 உரோமையரோடு நட்பும் சமாதானமும் செய்யப் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட எயுபோலேமுசின் தந்தை அருளப்பனை முன்னிட்டு, யூதருக்கு இரங்கி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உரிமைகளை யாசோன் அழித்து விட்டு, நகரத்தாருடைய ஒழுங்கு முறைகளை நீக்கி, தீய ஏற்பாடுகளைச் செய்தான்.
12 ஏனென்றால், கோட்டை அருகிலேயே உடற் பயிற்சிக் கூடத்தை ஏற்படுத்தவும், இளைஞர் குழுவிலிருந்து நற்குணமுள்ளோரை வேசியர் இல்லங்களில் வைக்கவும் துணிந்தான்.
13 குருவல்லாத தீயவனானன யாசோனின் அருவருக்கத் தக்கதும் கேள்விப்படாததுமான தீச்செயல்களால் உண்டான புறவினத்தாருடையவும் அன்னியருடையவும் சேர்க்கையின் பலன் துவக்க நிலையிலே மட்டும் நின்று விடவில்லை; மாறாக வளர்ச்சியும் அடைந்திருந்தது.
14 குருக்கள் முதலாய்ப் பீடத்தின் வேலைகளின் கவனம் வைக்காமல், கடவுள் ஆலயத்தைப் புறக்கணித்தும் பலி கொடுக்காமலும், மற்போர்களில் கலந்து விளையாடவும், அநீதப் பந்தயம் வைத்துச் சில்லு விளையாடவும் முனைந்திருந்தனர்.
15 சிலர் தாயகப் பெருமைகளை அவமதித்து, கிரேக்கருடைய மகிமைகளை மிகப் பெரியவையென்று எண்ணினார்கள்.
16 அவைகளை அடைவதற்காக ஆபத்து நிறைந்த சச்சரவுகளில் ஈடுபட்டனர்; புறவினத்தாரின் வழக்கங்களைக் கண்டு பாவித்தனர்; தங்கள் பகைவர்களும் கொலைகாரர்களுமாய் இருந்த அவர்களுக்கு அனைத்திலும் நிகராய் இருக்க விரும்பினார்கள்.
17 ஆனால் கடவுளின் கட்டளைகளை மீறுபவன் தண்டனை பெறாமல் இருக்க முடியாது. இதை வருங்காலம் எண்பிக்கும்.
18 ஐந்தாண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் திருநாள் தீர் நகரில் கொண்டாடப்பட்ட போது அரசனும் இருந்தான்;
19 அப்பொழுது தீயொழுக்கம் நிறைந்த யாசோன் எர்க்குலேசிற்குப் பலிசெலுத்த முந்நூறு வெள்ளித் திராக்மா என்ற நாணயங்களைக் கொடுத்து, தீயவரை யெருசலேமிலிருந்து அனுப்பினான். ஆனால், அவைகளைக் கொண்டு போனவர்களே, பலிகளுக்காக அவைகளைச் செலவிடுவது சரியல்ல என்றும், வேறு செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள்.
20 அவைகளை அனுப்பினவனால் அவை எர்க்குலேசின் பலிக்காகக் கொடுக்கப்பட்டன; கொண்டு போனவர்களாலே கப்பல்களின் வேலைக்குக் கொடுக்கப்பட்டன.
21 தோலெமேயுஸ் பிலோமேத்தார் அரசனாக முடி சூடுவதை முன்னிட்டு, மினெஸ்தேயின் புதல்வன் அப்பொல்லோனியுஸ் எகிப்துக்கு அனப்பப்பட்ட போது, அவன் (பிலோமேத்தோர்) தன் அரச காரியங்களில் தன்னை அன்னியனாக வைத்திருப்பதை அந்தியோக்கஸ் அறிந்து கொண்டு, தன்னுடைய நலத்தை நாடி அங்கிருந்து புறப்பட்டு யோப்பா வந்து, அவ்விடமிருந்து யெருசலேம் சேர்ந்தான்.
22 யாசோனாலும் நகரத்தாலும் வரவேற்கப்பட்ட, தீவட்டிகள் ஒளிர, புகழுரை ஒலிக்க உட்புகுந்தான்; அவ்விடமிருந்து தன் படையோடு பெனிசியாவுக்குத் திரும்பினான்
23 மூன்றாண்டுகளுக்குப் பிறகு யாசோன் மேற்சொன்ன சீமோனின் சகோதரன் மெனேலாவுசை அரசனுக்குப் பணம் கொண்டு போகும்படியும், முக்கியமான காரியங்களைப் பற்றி மறுமொழி கேட்டு வரும்படியும் அனுப்பினான்.
24 ஆனால் அவன் அரசனுடைய அதிகாரத்தைப் புகழ்ந்ததன் மூலம் அவனுடைய தயவை அடைந்து, தலைமைக்குருத்துவத்தைத் தானே கைப்பற்றிக் கொண்டு, யாசோன் கொடுத்ததற்கு மேல் முந்நூறு வெள்ளித் தாலேந்துகள் கொடுத்தான்.
25 அவன் அரசனுடைய கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு, குருத்துவத்திற்குத் தகுதியற்றவனாய் வந்தான்; ஆனால், கொடியவனுடைய மனமும் காட்டு மிருகத்தினுடைய கோபமும் கொண்டவனாய் வந்தான்.
26 தன் சொந்த சகோதரனையே மோசம் செய்த யாசோனும் மோசம் செய்யப்பட்டு நாட்டினின்று துரத்தப் பட்டதனால் அம்மோனித்தரிடம் ஓடிப்போனான்.
27 மெனேலாவுஸ் அதிகாரம் பெற்றான்; ஆனால், கோட்டைக்குத் தலைவனான சோஸ்திராத்துஸ், அரசனுக்கு மெனேலாவுஸ் வாக்குக் கொடுத்திருந்த பணத்தைக் கேட்ட போது, அவன் ஒன்றும் செய்யவில்லை.
28 ஏனென்றால், வரிகளை வாங்குவதும் சோஸ்திராத்துசினுடைய வேலை. ஆதலால், இருவரும் அரனிடம் அழைக்கப்பட்டார்கள்.
29 மெனேலாவுஸ் குருத்துவத்தினின்று நீக்கப்பட்டான். அவனுக்குப் பின் அவன் சகோதரன் லிசிமாக்கஸ் அப்பதவிக்கு வந்தான். சோஸ்திராத்து சோசீப்பிருக்கு அனுப்பப்பட்டான்.
30 இவ்வாறு இருக்கையில், தார்சு நாட்டினரும் மால்லோத்தாரும் தங்களையே அரசனுடைய வைப்பாட்டி அந்தியோக்கத்திக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதைக் கண்டு கலகம் செய்ய முற்பட்டார்கள்.
31 அரசன் தன் தோழரில் ஒருவனான அந்திரோனிக்கஸ் என்பவனைத் தனக்குப் பதிலாய் விட்டுவிட்டு, அவர்களைச் சமாதானப்படுத்த விரைவாய் வந்தான்.
32 அதுவே ஏற்ற காலமென்று மெனேலாவுஸ் எண்ணி, சில பொற்பாத்திரங்களைக் கடவுள் ஆலயத்தினின்று திருடி அந்திரோனிக்கஸ் என்பவனுக்குக் கொடுத்தான்; மற்றவற்றைத் தீர் நகரத்திலும் அடுத்த நகரங்களிலும் விற்று விட்டான்.
33 இது மெய்யென்று ஓனியாஸ் அறிந்த போது, தாப்னேயை அடுத்த அந்தியோக்கியாவில் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு மெனேலாவுசைக் கண்டித்தார்.
34 ஆதலால், மேனேலாவுஸ் அந்திரோனிக்கஸ் என்பவனிடம் சென்று, ஓனியாசைக் கொலை செய்யும்படி கேட்டான். அவன் ஓனியாசிடம் வந்து, (அவர் ஐயப்பட்ட போதிலும்) சத்தியம் செய்து கொடுத்து, ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வரச் செய்து, நீதிக்கு அஞ்சாமல் உடனே அவரைக் கொன்றான்.
35 அதைக் குறித்து யூதர் மட்டுமல்ல, புறவினத்தாருங் கூடக் கோபங்கொண்டார்கள். அவ்வளவு பெரிய மனிதர் அநியாயமாகக் கொலையுண்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
36 சிலிசியா நாட்டினின்று திரும்பி வந்த அரசனைப் போய்க்கண்டு, அந்தியோக்கியாவில் உள்ள யூதர்களும் கிரேக்கரும் ஓனியாஸ் அநியாயமாகக் கொலையுண்டதைப் பற்றி முறையிட்டார்கள்.
37 ஓனியாசைப் பற்றி அந்தியோக்கஸ் மனங்கலங்கி வருத்தமுற்று, இறந்தவருடைய நன்னடத்தையையும் அடக்கவொடுக்கத்தையும் நினைத்துக் கண்ணீர் சொரிந்தான்.
38 மிகுந்த கோபம் கொண்டு, அந்திரோனிக்கஸ் என்பவரிடமிருந்து அவனது அரசவுடையை உரிந்து விட்டு, நகர் முழுமையும் அவனைச் சுற்றி நடத்தி வரும்படி கட்டளையிட்டான்; ஆண்டவர் அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க, ஓனியாசை அநியாயமாய்க் கொன்ற இடத்திலேயே கடவுளைப் பழித்த அவனுடைய உயிரை வாங்கும்படி செய்தான்.
39 மெனேலாவுசின் தூண்டுதலினால் லிசிமாக்கஸ் பற்பல தெய்வ துரோகச் செயல்களை கடவுள் ஆலயத்தில் செய்தான். அவன் ஏராளமான பொன்னைக் கொண்டு போன பிறகு, அவையெல்லாம் வெளியாகவே, திரளான கூட்டம் லிசிமாக்கஸ் என்பவனுக்கு எதிராய்க் கூடியது.
40 கடுங்கோபம் கொண்டு கும்பல் எழும்பவே, லிசிமாக்கஸ் ஆயுதந்தாங்கிய மூவாயிரம் தீயோரைக்கொண்டு கொடுமை செய்யத் துவங்கினான். வயதிலும் தீய பழக்கத்திலும் முதிர்ந்த திரான்னுஸ் என்பவன் இவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.
41 ஆனால், மக்களோ லிசிமாக்கஸ் என்பவனின் முயற்சியைக் கண்டு கொண்டு, சிலர் கற்களையும், சிலர் பெருந்தடிகளையும் எடுத்துக் கொண்டார்கள்; சிலர் லிசிமாக்கஸ் மீது சாம்பலை எறிந்தார்கள்.
42 பலர் காயப்பட்டனர்; சிலர் கீழே விழுந்தார்கள்; எல்லாரும் ஓடிப்போனார்கள். கடவுளைப் பழித்த அவனையும் கருவூலத்தின் அருகில் கொன்றார்கள்.
43 ஆதலால், அவர்கள் இவைகளைப் பற்றி மெனேலாவுசைக் குற்றம் சாட்டினார்கள்.
44 அரசன் தீர் நகர் வந்த போது, பெரியோரில் மூன்று பேரை அனுப்பி இதனை அறிவித்தார்கள்.
45 மெனேலாவுஸ் தான் தண்டனைக்கு உள்ளாகப் போவதைக் கண்டு, அரசனுக்குச் சமாதானம் கூறி ஏராளமான பணம் கொடுப்பதாகத் தோலெமேயுசுக்கு வாக்குக்கொடுத்தான்.
46 ஆதலால், குளிர்ச்சியை நாடி முற்றத்தில் இருந்த அரசனைத் தோலெமேயுஸ் தேடிப்போய், அவன் தீர்மானத்தை மாற்றும்படி செய்தான்.
47 அரசன் எல்லாத் தீங்கிற்கும் காரணமான மெனேலாவுசைக் குற்றங்களினின்று மன்னித்தான்; தங்கள் நியாயத்தைச் சீத்தியரிடமே வழக்குரைத்திருந்தாலும் குற்றமற்றவர்களெனத் தீர்ப்புப் பெறக்கூடுமான இரங்கற்குரிய இவர்களை மரண தண்டனைக்குத் தீர்ப்பிட்டான்.
48 நகரத்துக்காகவும் மக்களுக்காகவும் புனித பாத்திரங்களுக்காகவும் நியாயம் தேடினவர்கள் அநியாய தண்டனைக்கு உள்ளானார்கள்.
49 அதுபற்றித் தீர் நகரத்தாரும் கோபம் கொண்டு, அவர்களைச் சிறப்புடன் அடக்கம் செய்தார்கள்.
50 அதிகாரம் செலுத்துகின்றவர்களுடைய பேராசையினால் மெனேலாவுஸ் அதிகாரத்தில் நிலைக்கொண்டான்; தன் நகரத்தாருக்குத் தீங்கு விளைவிக்கும் தீய குணத்திலும் வளர்ந்தான்.
அதிகாரம் 05
1 அந்நாட்களிலே அந்தியோக்கஸ் இரண்டாம் முறை எகிப்து நாடு போக ஆயத்தமானான்.
2 ஆனால், யெருசலேம் நகரம் முழுமையும் நாற்பது நாட்களாகப் பொற்சரிகை ஆடை அணிந்து, ஈட்டிகளைக் கையில் ஏந்தியவர்களாய்க் குதிரை வீரர் போலக் குதிரைகளின் மேல் விண்ணில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்கள் காணப்பட்டார்கள்.
3 குதிரைகள் வரிசைவரிசையாய் நின்றன; ஒன்றையொன்று எதிர்த்து ஓடின; கைகலந்து சண்டைகள் நடந்தன; கேடயங்கள் அசைந்தன; தலைச் சீராய் அணிந்து, உருவிய வாளுடன் பலர் தோன்றினார்கள். எறியப்பட்ட அம்புகளும், ஒளிரும் பொன்னாயுதங்களும், எல்லாவித இரும்புக் கவசங்களும் காணப்பட்டன.
4 ஆதலால், எல்லாரும் இவ்வசதியங்கள் நன்மையாக மாறவேண்டுமென்று மன்றாடினார்கள்.
5 ஆனால், அந்தியோக்கஸ் இறந்தானென்று ஒரு பொய் வதந்தி எங்கும் பரவியபோது, யாசோன் ஆயிரம் பேருக்குக் குறையாமல் கூட்டி வந்து நகரைத் திடீரென்று தாக்கினான். நகரத்தார் மதில்களுக்கு ஓடினார்கள், கடைசியில் நகரம் பிடிபட்டது. மெனேலாவுஸ் கோட்டைக்குள் ஓடிப்போனான்.
6 யாசோன் தன் நகரத்தாரைக் காப்பாற்ற நினையாமல் யாவரையும் கொலை செய்தான். உறவுமுறையாருக்கு எதிராய்க் கொண்ட வெற்றி பெரும் தீமை என்று அவன எண்ணவில்லை; தன் நகரத்தாரையல்ல, பகைவரையே வெற்றி கொள்வதாக அவன் எண்ணினான்.
7 ஆயினும், அவன் அதிகாரத்தை அடையவில்லை; தன் தீய எண்ணங்களின் முடிவாக அவமானத்தையே அடைந்தான்; திரும்பவும் அம்மோனித்தர் நாட்டிற்கு ஓட்டம் பிடித்தான்
8 கடைசியாய், அராபிய நாட்டுக் கொடுங்கோல் அரசனான அரேதாவால் பிடிபட்டுக் கொல்லப்படப் போகையில், ஒரு நகரினின்று மற்றொரு நகர் ஓடி எல்லாராலும் பகைக்கப்பட்டு, சட்டங்களை மீறுகிறவன் போல வெறுக்கப்பட்டு, தன் நாட்டினுடையவும் தன் நகரத்தாருடையவும் பகைவனாய் எகிப்து நாட்டிற்குத் துரத்தப்பட்டான்.
9 இவ்வாறு பலரை அவர்கள் நாட்டினின்று துரத்திய பின், உறவு முறை கொண்டாடி வாழலாமென்று லாசேதேமோனியாவில் அடைக்கலம் புகுந்த அவன் அன்னிய நாட்டிலே மாண்டான்.
10 அடக்கம் செய்யாமல் பலரை எறிந்தவன், அழுவாரில்லாமல், அடக்கமில்லாமல் எறியப்பட்டான்; அன்னிய நாட்டிலேயே அடக்கமுமில்லாமல், தன் நாட்டிலே கல்லறையும் அற்றுப் போனான்.
11 இவ்வாறு இருக்கையில், யூத மக்கள் சமாதான உடன்படிக்கையை விட்டு விடுவார்களென்று அரசன் ஐயமுற்றான். ஆதலால், மிகவும் கோபம் கொண்டு எகிப்தினின்று புறப்பட்டு வந்து நகரத்தைப் படைகளைக் கொண்டு பிடித்தான்.
12 ஒருவரையும் விடாமல், காண்பவர்கள் எல்லாரையும் கொல்லவும், வீடுகளில் நுழைந்து அனைவரையும் அழித்தொழிக்கவும் தன் வீரருக்குக் கட்டளையிட்டான்.
13 ஆதலால், இளைஞரும் முதியோரும் வெட்டுண்டார்கள்; பெண்களும் குழந்தைகளும் அழிந்தார்கள்; கன்னியரும் சிறுவரும் கொலையுண்டார்கள்.
14 ஆக, மூன்று நாட்களுக்குள்ளாக எண்பத்து மூவாயிரம் பேர் கொலையுண்டார்கள்; நாற்பதினாயிரம் பேர் சிறைப்படுத்தப் பட்டார்கள்; அத்தொகைக்குக் குறைவில்லாமல் பலர் விற்கப்பட்டார்கள்.
15 இதுவும் போதாமல், கட்டளைகளுக்கும் தன் நாட்டிற்கும் துரோகம் செய்த மெனேலாவுஸ் கூட்டிச் செல்ல, பூவுலகெங்கும் புனித மிக்க கடவுள் ஆலயத்துள்ளும் அவன் புகத்துணிந்தான்.
16 வேறு அரசர்களாலும் நகரங்களாலும் அவ்விடத்தின் அலங்காரத்திற்காகவும் மகிமைக்காகவும் கொடுக்கப்பட்ட புனித பாத்திரங்களைக் கறைபடிந்த தன் கைகளால் மரியாதையின்றி எடுத்தான்; அவற்றைத் தீட்டுப் படுத்தினான்
17 அந்தியோக்கஸ் அறிவு கெட்டுப் போனமையால், நகரத்தாருடைய பாவங்களின் பொருட்டுக் கடவுள் சிறிது காலம் கோபம் கொண்டாரென்று எண்ணவில்லை; அதனால் தான் அவ்விடத்துக்கும் அவமானம் உண்டானதென்று நினைக்கவில்லை.
18 ஏனென்றால், அவர்கள் பற்பல அக்கிரமங்களைச் செய்யாதிருந்திருந்தால், செல்வத்தைக் கொள்ளையடிக்கச் செலேயுக்கசால் அனுப்பப்பட்ட எலியோதோருசைப் போல, இவனும் வந்தவுடனே தன் செருக்கை முன்னிட்டு அடிப்பட்டுத் துரத்தப்பட்டும் இருப்பான்.
19 ஆனால், உண்மையாகவே இடத்தை முன்னிட்டன்று- ஆனால் மக்களை முன்னிட்டுத் தான் இடத்துக்கும் அவமானம் வந்ததென்று அவன் நினைக்கவில்லை.
20 ஆதலால், மக்களுடைய தண்டனைக்கு இடமும் பங்காளியானது; பிறகு சம்பாவனைகளுக்கும் பங்காளியாகும். எல்லாம் வல்ல கடவுளுடைய கோபத்தினால் அது கைவிடப் பட்டது; திரும்பவும் உன்னத ஆண்டவருடைய மன்னிப்பினால் மகிமையோடு உயர்த்தப்படும்.
21 கடவுள் ஆலயத்திலிருந்து அந்தியோக்கஸ் ஆயிரத்தெண்ணுறு தாலேந்துகள் எடுத்துக் கொண்டு விரைவாய் அந்தியோக்கியாவுக்குத் திரும்பிப் போனான்; அவனது மனம் செருக்குற்றதால் அகந்தை கொண்டு தரையில் கப்பற் பயணம் செய்யவும், கடலில் நடந்து செல்லவும் முடியும் என்று எண்ணினான்.
22 மக்களை வதைப்பதற்கு அவன் தலைவர்களை ஏற்படுத்தினான். தன்னை நியமித்தவனை விடக் கொடுமையுள்ளவனும் பிரிஜிய இனத்தானுமான பிலிப்பு என்பவன் யெருசலேமில் தலைவனானான்.
23 காரிசீம் மக்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகத் துன்பம் கொடுக்க அந்திரோனிக்கஸ் என்பவனையும் மெனேலாவுசையும் நியமித்தான்.
24 யூதர் மீது இன்னும் தனக்குக் கோபம் அதிகரித்தமையால் மிகக் கொடியவனான அப்பொல்லோனியுஸ் என்ற தலைவனை இருபத்தீராயிரம் படைவீரரோடு அனுப்பி, வயது வந்தவர்களையெல்லாம் கொல்லவும், பெண்களையும், இளைஞரையும் விற்றுவிடவும் கட்டளையிட்டான்.
25 அவன் யெருசலேம் வந்து, சமாதானமாய் வந்தவன் போலக் காட்டிக் கொண்டு, புனித ஓய்வுநாள் வரை அமைதியாய் இருந்தான். அப்போது, யூதர்கள் இளைப்பாறியிருக்கையில் தன்னவர்கள் ஆயுதங்கள் எடுக்கக் கட்டளையிட்டான்.
26 வேடிக்கை பார்க்க வந்தவர்கள் எல்லாரையும் கொன்றான்; ஆயுதம் ஏந்தியவர்களோடு நகரம் முழுமையும் சுற்றித் திரிந்து திரளான மக்களைக் கொலை செய்தான்.
27 ஒன்பது பேருடன் யூதாஸ் மக்கபேயுஸ் பாலைவனத்துக்குச் சென்றிருந்தார். அவ்விடத்தில் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் (நகரத்தில் இருந்து) தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதபடிக்கு, மலைகளில் மிருகங்கள் நடுவே சுற்றித் திரிந்து, கீரையை உணவாகத் தின்று தங்கியிருந்தார்கள்.
அதிகாரம் 06
1 சிறிது காலத்திற்குப் பிறகு, தங்கள் நாட்டினுடையவும் கடவுளுடையவும் கட்டளைகளை விட்டுவிடும்படி யூதரைக் கட்டாயப்படுத்த அந்தியோக்கிய நகரத்தானான ஒரு முதியவனை அரசன் அனுப்பினான்.
2 யெருசலேமில் இருந்த கடவுள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தவும், அதற்கு யூப்பித்தர் ஒலிம்பியஸ் ஆலயம் என்று பெயரிடவும், காரீசிம் வாழ்ந்தவர்கள் இருந்தது போல, காரீசிம் ஆலயத்தையும் 'குடிவந்த யூப்பித்தர் ஆலயம்' என்று பெயரிடவும் அனுப்பியிருந்தான்.
3 அப்போது அனைவருக்கும் எல்லாவிதமான கொடுந்துன்பங்களும் உண்டாயின.
4 ஏனென்றால், புறவினத்தாருடைய தீய நடத்தையாலும் விருந்துகளாலும் கடவுள் ஆலயம் நிறைந்திருந்தது. விலைமகளிரைச் சேர்ந்த மனிதர் அங்கு நிறைந்திருந்தார்கள். புனித இடங்களில் பெண்கள் வலிய நுழைந்தார்கள்; (பலிக்கு) ஏற்காத பொருட்களை உள்ளே கொண்டு போனார்கள்.
5 கட்டளைகளால் விலக்கப்பட்ட (பலிப்) பொருட்களால் பீடமும் நிறைந்திருந்தது.
6 அவர்கள் ஓய்வு நாட்களைக் கடைபிடிக்கவில்லை. தம் தந்தையார் கொண்டாடிய திரு நாட்களைக் கொண்டாடவில்லை. தான் யூதனென்று முதலாய் எவனும் ஏற்றுக் கொள்ளவுமில்லை.
7 அரசன் பிறந்த நாளில் அவர்கள் கட்டாயத்தோடு பலிசெலுத்தக் கூட்டிக் கொண்டு போகப்பட்டார்கள்; பாக்கஸ் திருநாள் கொண்டாடப்படுகையில், லியேர் கொடியாலான முடியணிந்து பாக்கசைச் சுற்றிவரக் கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.
8 அருகிலிருந்த புறவினத்தாரின் நகரங்களிலும் யூதர் அவ்விதமே பலியிடும்படியாய்க் கட்டாயப் படுத்தப்பட வேண்டுமென்று தோலெமேயர் தூண்டுதலால் கட்டளை பிறந்தது.
9 புறவினத்தாரின் வழக்கங்களை அனுசரிக்க மனமில்லாதவர்களைக் கொல்ல வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் இரங்கற்குரிய காட்சிகளே எங்கும் காணப்பட்டன.
10 ஏனென்றால், இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். பிள்ளைகளை அவர்கள் மார்பில் தொங்க விட்டு, வெளிப்படையாய் நகரத்தைச் சுற்றி அவர்களைக் கொண்டு வந்த பிறகு, மதில்களின் மேலிருந்து அவர்களைத் தள்ளிக் கொன்றார்கள்.
11 அருகிலிருந்த குகைகளுக்குப் போய் மறைவாய் ஓய்வு நாளை அனுசரித்த சிலர், பிலிப்பு என்பவனிடம் காட்டிக் கொடுக்கப் பட்டபோது, (ஓய்வு நாளைப் பற்றிய) மறைக்கட்டளையை அனுசரித்து, தங்கள் கைகளைக் கொண்டு தங்களுக்கே உதவி செய்து கொள்ள அஞ்சியிருந்தமையால் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள்.
12 இத்தகைய துன்பங்களைப் பற்றி உள்ளத்தில் சோர்வடையாதபடிக்கு இப்புத்தகத்தை வாசிக்கிறவர்களை மன்றாடுகிறேன். ஆனால், நடந்தவையெல்லாம் நம்முடைய மக்களின் அழிவுக்கல்ல, தண்டனைக்காக மட்டுமே நடந்தனவென்று கொள்ளுங்கள்.
13 ஏனென்றால், பாவிகளை அவர்களுடைய எண்ணப்படி நீண்ட நாள் செயல்பட விடாது, அவர்களை உடனே பழிவாங்குவது (கடவுளின்) இரக்கப் பெருக்கத்தின் அடையாளமாய் இருக்கின்றது.
14 ஏனென்றால், மற்ற இனத்தாரைப் பொறுத்த மட்டில், ஆண்டவர் அவர்களைத் தண்டிக்கும் பொருட்டு அவர்கள் தங்கள் பாவங்களின் முழு அளவை எட்டும் வரையில் பொறுமையாய்க் காத்திருக்கிறார்;
15 ஆனால், அவர் நம்மோடு அவ்வாறு நடந்து கொள்வதில்லை. நம் பாவங்கள் தம் முழு அளவை அடைந்த பின் கடைசியில் நம்மைப் பழிவாங்கலாமென்று ஆண்டவர் காத்திருப்பதில்லை.
16 ஆகையால், நம் மீது இரக்கம் காட்ட ஒருபோதும் தவறுவதில்லை; துன்பங்களால் தண்டித்தாலும், தம்முடைய மக்களைக் கைவிடுவதில்லை.
17 வாசகர்களின் கவனத்திற்கே இவ்வார்த்தைகளைக் கூறுகிறோம். இப்போது, வரவாற்று நிகழ்ச்சிகளைக் கூறுவோம்.
18 ஆதலால், மறைநூலறிஞருள் முதன்மையானவர்களில் ஒருவரான எலெயாசார் வயதில் தளர்ந்தவர்; முக அழகு உள்ளவர். அவருடைய வாயைத்திறந்து பன்றி இறைச்சியை உண்ணும்படி அவரைக் கட்டாயப் படுத்தினார்கள்.
19 ஆனால், அவர் நிந்தைக்குரிய வாழ்வை விட மாட்சி நிறைந்த மரணத்தைத் தேடி,
20 வேதனைப்பட வலியச் சென்றார். தாம் எவ்வளவு பாடுபட வேண்டுமென்று அறிந்து, பொறுமையாய் ஏற்று, விலக்கப்பட்டவைகளுக்கு வாழ வேண்டுமெனும் ஆசையினால் இணங்காமலிருக்கத் தீர்மானித்துக் கொண்டார்.
21 அருகில் நின்றவர்கள் அவர் மீது தாங்கள் ஏற்கனவே கொண்டிருந்த நட்பால் அவர் மீது தவறான முறையில் இரக்கம் கொண்டு, அவரைத் தனியே அழைத்துத் தாங்கள் அவர் உண்ணக்கூடிய இறைச்சியைக் கொண்டு வருவதாகவும், அவரும் அரசன் கட்டளைப்படி பலியிடப்பட்ட இறைச்சியை உண்பது போல நடிக்கும்படியும் சொன்னார்கள்.
22 இப்படிச் செய்வாராகில் மரணத்தினின்று காப்பாற்றப்படுவாரென்று கூறி, அவர் மீது அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பால் மனிதத் தன்மையுடன் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
23 ஆனால், அவர் தமது வயதுக்கும் முதுமைக்கும் தகுந்த மேன்மையையும், நரைத்தலையினால் இயல்பாக வரும் மாண்பையும், சிறுவயது முதல் தமது நல்வாழ்க்கையின் செய்கைகளையும், புனிதமானதும் கடவுளால் உண்டானதுமான கட்டளையின் ஏற்பாடுகளையும் எண்ணத்தொடங்கி, தாம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு மனம் கொண்டிருப்பதாக உடனே மறுமொழி சொன்னார்.
24 ஏனென்றால்: பாசாங்கு செய்வது நம்முடைய வயதுக்குத் தகுதியன்று. இளைஞரில் பலர் தொண்ணுறு வயதுள்ள எலெயாசார் அன்னியருடைய நெறிக்குப் போய்விட்டார் என்று நினைப்பார்கள்.
25 என்னுடைய பாசாங்கை முன்னிட்டும், அழிந்துபோகும் குறுகிய வாழ்வை முன்னிட்டும், அவர்கள் மோசம்போவார்கள். இதனால் என் முதுமையில் குற்றமும் அவமானமுமே என்னைச் சாரும்.
26 ஏனென்றால், மனிதர்களுடைய வேதனைகளினின்று நான் இப்பொழுது விடுவிக்கப்பட்ட போதிலும், உயிரோடு இருந்தாலும் இறந்தாலும் எல்லாம் வல்லவருடைய கையினின்று நான் தப்பிக் கொள்ளமாட்டேன்.
27 ஆதலால், துணிவுடன் உயிரை விடுவதால் நான் முதுமைக்கு உகந்தவனாகத் தோன்றுவேன்.
28 நான் சுறுசுறுப்பான மனத்தோடு முதன்மையானவைகளும் புனிதமானவைகளுமான கட்டளைகளுக்காகத் தயக்கமின்றி நேர்மையான மரணம் அடைந்தால், இளைஞருக்கு நான் நன்மாதிரியாய் இருப்பேன் என்றார் இவையெல்லாம் சொன்ன பிறகு, துன்புறுத்தப்படுவதற்கு உடனே இழுத்துக் கொண்டு போகப்பட்டார்.
29 அவரைக் கூட்டிக்கொண்டு போனவர்கள் முதலில் சாந்தமுள்ளவர்களாய் இருந்த போதிலும், அவர் அகந்தையாய்ப் பேசினாரென்று எண்ணிக் கோபமடைந்தார்கள்.
30 ஆனால், அவர் அடிப்பட்டுக் காயமுற்ற போது: ஆண்டவரே மரணத்தினின்று நான் மீட்கப்படக் கூடுமானாலும், நான் இக்கொடிய உடலின் பாடுகளை ஏற்றுக்கொள்கிறேன். உமக்குப் பயந்து இவைகளை மனமகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். உமது புனித ஞானத்தினால் இவை யாவையும் நீர் அறிவீர் என்றார்.
31 அவர் இவ்வாறு உயிர் விட்டார். இளைஞருக்கு மட்டுமன்று, மக்கள் அனைவருக்கும் புண்ணியத்தினுடையவும் துணிவினுடையவும் மாதிரியைத் தம்முடைய மரணத்தின் நினைவாக விட்டுச் சென்றார்.
அதிகாரம் 07
1 அந்நாட்களில் ஏழு பிள்ளைகள் தங்கள் தாயோடு பிடிபட்டு, சாட்டைகளாலும் கயிறுகளாலும் அடிக்கப்பட்டு, கட்டளைக்கு எதிராய்ப் பன்றி இறைச்சி உண்ண மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
2 அவர்களில் முதல்வன்: உனக்கு என்ன வேண்டும்? எங்களிடமிருந்து என்ன அறிந்துகொள்ள விரும்புகிறாய்? எங்கள் முன்னோருக்குக் கொடுக்கப் பட்ட கடவுளின் கட்டளைகளை மீறுவதை விட நாங்கள் சாகத் துணிந்திருக்கிறோம் என்றான்.
3 ஆதலால், அரசன் கடுங்கோபம் கொண்டு, பித்தளை அண்டாக்களையும் சூளைகளையும் சுட வைக்கும்படி கட்டளையிட்டான்; அவை சூடு ஏறியவுடன், முதலில் பேசினவனுடைய நாக்கை அறுக்கும்படி கட்டளையிட்டான்;
4 அவனுடைய தலையின் தோலை உரித்து, கை கால்களின் நுனியை, அவன் தாய்க்கும் சகோதரருக்கும் முன்பாக, வெட்டும்படி செய்தான்.
5 இவைகளினால் ஒன்றுக்கும் உதவாத நிலையை அடைந்த அவனை நெருப்பின் ஓரமாய்க் கொண்டு போகக் கட்டளையிட்டு, அவனுக்கு மூச்சியிருக்கும் போதே அவனை அண்டாவில் இட்டு வாட்டும்படி சொன்னான். அவன் இவ்வாறு நீண்ட நேரம் வேதனைப்படும் போது, மற்றவர்கள் தங்கள் தாயோடு துணிவுடன் சாவதற்குத் தங்களைத் திடப்படுத்திக் கொண்டிருந்தார்கள்: ஆண்டவராகிய கடவுள் உண்மையைக் காண்பார்.
6 மோயீசன் மக்களுக்கு எதிராகச் சான்று கூறிப் பாடிய தம் சங்கீதத்தில் 'தம்முடைய ஊழியர்களுக்கு ஆறுதல் அளிப்பார்' என்று கூறியது போல, எங்களுக்கும் அவர் ஆறுதல் அளிப்பார் என்று கூறிக் கொண்டார்கள்.
7 முந்தினவன் இவ்வாறு இறந்த பிறகு மற்றொருவனைக் கொடுமைப்படுத்தும்படி கூட்டி வந்தார்கள். அவனது தலையின் தோலை மயிரோடு உரித்த பிறகு, அவன் உடல் முழுவதும் உறுப்புகள் ஒவ்வொன்றையும் வதைப்பதற்கு முன் (பன்றி இறைச்சியை) உண்பானா என்று கேட்டார்கள்.
8 ஆனால், அவன் தன் முன்னோரைப் போன்று: நான் உண்ண மாட்டேன் என்றான். ஆதலால், அவனும் இரண்டாவதாக முந்தினவன் பட்ட பாடுகளைப் பட்டான்.
9 உயிர் பிரியப் போகும் வேளையில் அவன் அரசனை நோக்கி: நீ மிக அக்கிரமமாய் இவ்வாழ்வுலகத்தில் எங்களைக் கொல்கிறாய். உலக அரசரோ, தம் கட்டளைகளுக்காக நாங்கள் இறப்பதால், நித்திய வாழ்விற்கு எங்களை உயிருடன் எழுப்புவார் என்றான்.
10 இதன் பிறகு மூன்றாமவனைக் கொடுமைப் படுத்திளார்கள். அவர்கள் அவனைக் கேட்டபடி அவனும் தன் நாக்கையும் கைகளையும் துணிவுடன் நீட்டினான்.
11 அவன் நம்பிக்கையோடு அவர்களிடம்: வானத்தினின்று இவை எனக்குக் கிடைத்தன. ஆனால், கடவுளுடைய கட்டளைகளுக்காக இப்போது இவற்றை நான் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால், அவரிடமிருந்து மறுபடியும் அவற்றை அடைவேனென்று நம்பியிருக்கிறேன் என்று கூறினான்.
12 அப்போது மன்னனும் அவனோடு இருந்தவர்களும், அவ்விளைஞன் வேதனைகளை ஒரு பொருட்டாகக் கொள்ளாததால், அவன் துணிவைக் கண்டு வியப்புற்றார்கள்.
13 அவனும் இவ்வாறு இறந்த பிறகு, நான்காமவனையும் அவ்வண்ணமே துன்புறுத்தினார்கள்.
14 அவன் சாகப்போகுந்தருணத்தில்: மனிதரால் கொலைசெய்யப்பட்டவர்கள் கடவுளால் திரும்பவும் உயிர்ப்பிக்கப்படுவார்களென்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கலாம். நீயோ வாழ்விற்கு மறுபடியும் உயிர்க்கப் போவதில்லை என்று கூறினான்.
15 ஐந்தாமவனைக் கூட்டிவந்து, அவனையும் வதைத்தார்கள்.
16 அவன் அரசனை நோக்கி: நீ அழிவுள்ளவனாயிருந்தும் மனிதருக்குள்ளாக உனக்கு அதிகாரம் இருப்பதனால், நீ விரும்பியதைச் செய்கிறாய். எங்களுடைய குலம் கடவுளால் கைவிடப்பட்டதென்று நினையாதே.
17 சிறிது பொறு; அவருடைய மிக்க வல்லமையால் உன்னையும் உன் தலைமுறைகளையும் எவ்விதமாய் வதைப்பாரென்று காண்பாய் என்று சொன்னான்.
18 அவனுக்குப் பிறகு ஆறாமவனைக் கூட்டி வந்தார்கள். அவன் உயிர் விடப்போகையில்: நீ வீணில் மோசம் போகாதே. நாங்களோ எங்கள் கடவுளுக்கு எதிராய்ப் பாவங்களைக் கட்டிக் கொண்டமையால், இத்தகைய பாடுகளை எங்களுக்காவே படுகிறோம். அவர் எங்களிடத்தில் வியப்பிற்குரியன செய்தார்.
19 கடவுளுக்கு எதிராக நீ போராட முயல்வதனால், உனக்குத் தண்டனை வராதென்று நீ எண்ணாதே என்றான்.
20 சொல்லற்கரிய வியப்பை உண்டாக்கும் (இவர்களின்) தாய் நல்லவர்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதற்கு உகந்தவள்; ஒரே நாளில் தன் ஏழு பிள்ளைகளும் கொலையுண்டதைப் பார்த்துக் கொண்டிருந்த இவள் கடவுள் மீது தனக்கு உண்டான நம்பிக்கையை முன்னிட்டு இவையனைத்தையும் நல்ல மனத்தோடு ஏற்றுக் கொண்டாள்.
21 ஞானம் நிறைந்தவளாய், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் தாய்மொழியில் துணிவுடன் அறிவுரை சொன்னாள்; பெண் பிள்ளையின் பற்றுதலோடு ஆண் பிள்ளையின் திடத்தையும் சேர்த்தாள்.
22 அவள் அவர்களை நோக்கி: நீங்கள் என் வயிற்றில் எப்படித் தோன்றினீர்களென்று நான் அறியேன். ஏனென்றால், உங்களுக்கு ஆவியையும் ஆன்மாவையும் உயிரையும் கொடுத்தது நான் அல்ல; உங்கள் உறுப்புகளை ஒன்று சேர்த்ததும் நான் அல்ல.
23 ஆனால் உலகத்தைப் படைத்தவர் தாமே அவையெல்லாம் செய்தவர். அவரே மனிதனை உருவாக்கியவர். அனைத்திற்கும் முதற் காரணம் அவரே. அவருடைய கட்டளைகளை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே துன்பத்திற்குள்ளாக்குவதால், திரும்பவும் அவர் உங்களுக்கு ஆவியையும் உயிரையும் கொடுப்பார் எனக் கூறினாள்.
24 அந்தியோக்கஸ் தான் நிந்திக்கப்படுவதாக எண்ணினான்; தான் சொல்லிய அவமானங்களெல்லாம் வீணானதைக் கண்டான்; எல்லாருக்கும் இளையவன் எஞ்சியிருந்ததைக் கண்டு, அவனை வார்த்தைகாளால் மட்டும் தூண்டிநின்றானல்லன்; மாறாக, அவனைச் செல்வமுள்ளவனும் பேறுபெற்றவனும் ஆக்கி, அவனை நாட்டுச் சட்டங்களினின்று விடுவித்துத் தன் நண்பனாகக் கொள்வதாகவும், அவனுக்குத் தேவையான பொருட்களைக் கொடுப்பதாகவும் ஆணையிட்டு உறுதிமொழிக் கூறினான்.
25 ஆனால், இளையவன் அவைகளுக்கு இணங்காததால், அரசன் தாயை வரவழைத்து, அவ்விளைஞனுக்கு அறிவுரை சொல்லும்படி அவளைத் தூண்டினான்.
26 ஆனால், அவன் அவளைப் பன்முறை ஏவிய பிறகே தன் புதல்வனுக்குப் புத்தி சொல்வதாக அவள் வாக்குறுதி கொடுத்தாள்.
27 ஆதலால், அவள் அவன் பக்கமாய்க் குனிந்து, கொடுங்கோலனைப் பொருட்படுத்தாமல், தன் சொந்த மொழியில்: என் மகனே, உன்னை ஒன்பதுமாதம் என் வயிற்றில் சுமந்தேன்; மூன்றாண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயதுவரைக்கும் உன்னைக் காப்பாற்றினேன். ஆதலால், நீ என் மீது இரக்கமாய் இரு.
28 மகனே, விண்ணையும் மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் பார். இவை யாவற்றையும், மனித குலத்தையும் கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்கினாரென்று கண்டறிவாய்.
29 இவ்வண்ணம், இக்கொலைகாரனுக்கு நீ அஞ்சாதிருப்பாய். ஆனால், உன் சகோதரருக்கு உகந்த பங்காளியாகி, உன் சகோதரரோடு கடவுள் இரக்கத்தில் நான் உன்னை ஏற்றுக் கொள்ளும்படி, நீ மரணத்தை ஏற்றுக் கொள்வாய் என்று கூறினாள்.
30 இவ்வாறு அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இளைஞன்: யாருக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அரசனுடைய கட்டளைக்கு நான் கீழ்ப்படியேன்; மோயீசனால் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைக்குத் தான் கீழ்ப்படிவேன்.
31 எபிரேயருடைய துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாய் இருக்கிற நீயோ கடவுளுடைய கைக்குத் தப்பிக் கொள்ள மாட்டாய்.
32 நாங்களோ எங்கள் பாவங்களுக்காக இவைகளைப் படுகிறோம்.
33 எங்களைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் எங்கள் ஆண்டவராகிய கடவுள் எங்கள் மீது சற்றே சினம் கொண்டிருக்கிறார்; ஆனால், அவர் தம் ஊழியரோடு திரும்பவும் சமாதானமாவார்.
34 ஆனால், நீயோ, கயவனே, எல்லா மனிதரிலும் கொடியவனே, அவருடைய ஊழியர் மேல் கோப வெறிகொண்டு, வீண் நம்பிக்கையால் வீணே செருக்குக் கொள்ளாதே.
35 ஏனென்றால், எல்லாம் வல்ல கடவுளும், அனைத்தையும் பார்க்கிறவருமாகிய அவருடைய தீர்ப்பிற்கு நீ இன்னும் தப்பிக் கொள்ளவில்லை.
36 ஏனென்றால் என் சகோதரர் சொற்பப் பாடுபட்ட பிறகு நிந்திய வாழ்வின் உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். நீயோ உன் அகந்தைக்குத் தகுதியான தண்டனைகளைக் கடவுளின் தீர்ப்பினால் அனுபவிப்பாய்.
37 நானோ என் சகோதரரைப் போல் என் உயிரையும் உடலையும் நாட்டின் கட்டளைகளுக்காகக் கொடுக்கிறேன். எங்கள் இனத்தாருக்கு விரைவில் தயவு காண்பிக்கும்படிக்கும், அவர் ஒருவரே கடவுளென்று வேதனைகளாலும் அடிகளாலும் நீயே ஒத்துக் கொள்ளும்படி செய்வதற்கும் கடவுளை மன்றாடுகிறேன்.
38 எங்கள் குலம் முழுமையிலும் நியாயமாய் நிறைந்துள்ள எல்லாம் வல்லவருடைய கோபம் என்னோடும் என் சகோதரரோடும் நின்று போகும் என்றான்.
39 அப்போது, அரசன் கோப வெறிக்கொண்டு, தன்னை நிந்தித்ததைப் பொறுக்க மாட்டாதவனாய், அவனை எல்லாரையும் விடக் கொடுமையாய் வதைத்தான்.
40 ஆண்டவரை அனைத்திலும் நம்பி அவனும் மாசற்றவனாய் இறந்தான்.
41 பிள்ளைகளுக்குப் பிறகு தாயும் கொலை செய்யப்பட்டாள்.
42 ஆகவே, பலிகளைப் பற்றியும் கொடிய வாதைகளைப் பற்றியும் வேண்டிய அளவு சொல்லி விட்டோம்.
அதிகாரம் 08
1 யூதாஸ் மக்கபேயுசும் அவருடன் இருந்தவர்களும் யாருக்கும் தெரியாமல் கோட்டைக்குள் நுழைந்து, உறவினரையும் நண்பரையும் அழைத்து, யூத நெறியில் இருந்தவர்களையும் தம்முடன் இணைத்து ஆறாயிரம் பேரைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு போனார்கள்.
2 எல்லாராலும் துன்புறுத்தப்பட்ட மக்களின் மேல் கண்ணோக்கும்படியாகவும், அக்கிரமிகளால் தீட்டுப்படுத்தப் பட்ட ஆலயத்தின் மீது இரக்கம் கொள்ளவும்,
3 விரைவில் தரைமட்டமாக்கப்படும் நகரத்தின் அழிவின் மேல் தயவு கூரவும், தம்மை நோக்கி முறையிடும் இரத்தத்தின் குரலுக்குச் செவிமடுக்கவும்,
4 மாசற்ற குழந்தைகளின் அநியாய மரணத்தையும், அவருடைய பெயருக்குச் செய்யப்பட்ட நிந்தைகளையும் நினைவு கூரவும், தீமைகளின் மீது கோபம் கொள்ளவும் ஆண்டவரை மன்றாடினார்கள்.
5 ஆதலால், மக்கபேயுஸ் திரளான படைகளைச் சேர்க்க, புறவினத்தாரால் அவரை எதிர்த்து நிற்க முடியவில்லை. ஏனென்றால், ஆண்டவருடைய கோபம் இரக்கமாக மாறிற்று.
6 யூதாஸ் திடீரென்று கோட்டைகளிலும் நகரங்களிலும் புகுந்து, அவைகளைக் கொளுத்தி விட்டார்; தகுதியான இடங்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு, பகைவருக்குப் பற்பல துன்பங்களை வருவித்தார்.
7 சிறப்பாக, இரவு வேளைகளில் இவ்வாறு பகைவர்களைத் தாக்கினார். அவருடைய வலிமையின் புகழ் எங்கும் பரவிற்று.
8 பிலிப்பு என்பவன், மக்கபேயுஸ் சிறிது சிறிதாய் முன்னேறுவதையும், அவர் தம் காரியங்களில் அடிக்கடி வெற்றி பெறுவதையும் கண்டு, தனக்கு உதவி செய்யும்படி செலெசீரியா, பெனிசியா நாடுகளின் படைத் தலைவனான தோலெமேயுசுக்கு எழுதினான்.
9 ஆதலால், அவன் தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவனான பாத்திரோகிளசின் புதல்வனான நிக்கானோரை அனுப்பினான். யூத இனம் முழுவதையும் அழிப்பதற்காகப் பல இனத்தாரைச் சேர்ந்த இருபதினாயிரம் போர் வீரரையும், சிறந்த வீரனும் போர்க்காரியங்களில் மிக்க அனுபவமுள்ளவனுமான கோர்ஜியாவையும் அவனுடன் சேர்த்து அனுப்பினான்.
10 உரோமையருக்கு அரசன் கப்பமாகக் கொடுக்க வேண்டிய இரண்டாயிரம் தாலேந்துகளை, யூத அடிமைகளை விற்றுச் செலுத்தி விடுவதாக நிக்கானோர் தீர்மானித்துக் கொண்டான்.
11 எல்லாம் வல்லவர் தன்னைப் பழிவாங்குவார் என்பதை அறியாமல், தாலேந்து ஒன்றுக்குத் தொண்ணுறு அடிமைகளைத் தான் கொடுப்பதாக வாக்களித்து, யூத அடிமைகளை வாங்க வரும்படி கடலோர நகரங்களுக்கு உடனே சொல்லி அனுப்பினான்.
12 நிக்கானோரின் வருகையை அறிந்தவுடனே, யூதாஸ் தம்முடன் இருந்த யூதருக்கு அதை அறிவித்தார்.
13 அவர்களில் சிலர் கடவுளுடைய நீதியின் மேல் நம்பிக்கையற்று, பயந்து ஓட்டம் பிடித்தார்கள்.
14 வேறு சிலரோ தங்களிடம் மீதியாய் இருந்தவைகளை விற்று விட்டு தங்களிடம் வருவதற்கு முன்பே தங்களை விற்று விட்ட கொடியவனான நிக்கானோரிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி அதே நேரத்தில் ஆண்டவரை வேண்டினார்கள்.
15 தங்களை முன்னிட்டு அல்லாவிடினும், தங்கன் முன்னோருடன் செய்த உடன்படிக்கையை முன்னிட்டும், அவருடைய பெருமை மிக்க புனித பெயரை தாங்கள் வேண்டிக் கொண்டதை முன்னிட்டும் தங்களைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.
16 மக்கபேயுஸ் தம்முடன் இருந்த ஏழாயிரம் பேரையும் அழைத்து, பகைவரோடு சமாதானமாகாதபடிக்கும், தங்கள் மீது அநியாயமாய்ப் படையெடுத்து வரும் பகைவர் கூட்டத்திற்கு அஞ்சாமால் அவர்களைத் துணிவுடன் எதிர்த்துப் போர்புரியும்படிக்கும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
17 அவர்களால் புனித இடத்துக்குச் செய்யப் பட்டிருந்த நிந்தையையும், நகரத்துக்கு உண்டான அவமானத்தையும், முன்னோருடைய சட்ட திட்டங்கள் மீறப்பட்டதையும் தங்கள் கண்முன் வைத்திருக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
18 மேலும்: அவர்கள் தங்கள் ஆயுதங்கள் மீதும் துணிவின் மீதும் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். நாமோவென்றால், நம்மேல் வருகிறவர்களையும் உலகம் முழுவதையும் ஓர் இமைப்பொழுதிலே அழிக்கக் கூடிய எல்லாம் வல்ல ஆண்டவர் மீது நமது நம்பிக்கையை வைத்திருக்கிறோம் என்று கூறினார்.
19 தங்கள் முன்னோருக்குச் செய்யப்பட்ட உதவிகளைப் பற்றியும், சென்னாக்கெரிபு என்பவன் காலத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர் அழிந்தார்களெறும்,
20 பபிலோனியாவில் கலாத்தியருக்கு எதிராய்த் தாங்கள் செய்த போரில் அவர்களுக்கு உதவியாய் வந்திருந்த மசேதோனியர் தத்தளித்து ஓடிப்போக அவர்கள் ஆறாயிரம் பேர் மட்டும் விண்ணினின்று தங்களுக்கு அளிக்கப் பட்ட உதவியைக் கொண்டு இலட்சத்து இருபதினாயிரம் பேர்களைக் கொன்றார்களென்றும், இவைகளை முன்னிட்டு அவர்கள் பற்பல நன்மைகளைப் பெற்றார்களென்றும் அவர்களுக்கு நினைப்பூட்டினார்.
21 இவ் வார்த்தைகளால் அவர்கள் துணிவு பெற்று, கட்டளைகளுக்காகவும் நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கத் தயாராய் இருந்தார்கள்.
22 அவர் தம் சகோதர் சீமோன், சூசை, யோனத்தாஸ் என்பவர்களைப் படைத்தலைவர்களாக நியமித்து, ஒவ்வொருவனுக்கும் ஆயிரத்தைநூறு வீரர்களைக் கொடுத்தார்.
23 அதன் பிறகு எஸ்ரா என்பவரால் புனித நூல் வாசிக்கப்பட, கடவுள் உதவியின் அடையானம் கொடுக்கப்பட்ட பிறகு நிக்கானோரை எதிர்க்கத் தாமே படைத்தலைவனாய்ப் படைகளை நடத்திப்போனார்.
24 எல்லாம் வல்ல கடவுளைத் தங்களுக்கு உதவிசெய்பவராகக் கொண்டு, ஒன்பதாயிரம் பேர்களுக்கு அதிகமாகக் கொன்றார்கள்; நிக்கானோருடைய படையில் பெரும் பகுதியினரைக் காயப் படுத்தித் திறனவற்றவர்களாக்கி, ஓட விரட்டினார்கள்.
25 தங்களை (அடிமைகளாக) வாங்க வந்தவர்களுடைய பணத்தையும் பறித்துக் கொண்டு, அவர்களையும் வெகுதூரம் துரத்திக் கொண்டு ஓடினார்கள்.
26 ஆனால், நேரமில்லாமையால் திரும்பினார்கள். ஏனென்றால், அது ஓய்வுநாளுக்கு முந்திய நாளாய் இருந்தது. ஆதலால், பின்தொடர்ந்து போவதை விட்டு விட்டார்கள்.
27 அவர்களுடைய ஆயுதங்களையும் பொருட்களையும் சேர்த்து வைத்து விட்டு, ஓய்வு நாளை அனுசரித்து, அன்று தங்களைக் காப்பாற்றித் தங்கள் மீது இரக்கம் காட்டத் தொடங்கிய ஆண்டவரைப் போற்றினார்கள்.
28 சேர்த்து வைத்தப் பொருட்களை, ஓய்வு நாளுக்குப் பிறகு, வலிமை குன்றியவர்களுக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்; மிதியானவைகளைத் தாங்களே தம்மவர்களோடு வைத்துக் கொண்டார்கள்.
29 இவைகளுக்குப் பின் எல்லாரும் ஒருமிக்க செபித்து, தம்முடைய ஊழியரோடு என்றென்றைக்கும் உறவாகும்படி இரக்கமுள்ள ஆண்டவரை மன்றாடினார்கள்.
30 அவர்கள் திமோத்தேயுஸ், பாக்கீது என்பவர்களோடு தங்களுக்கு எதிராய்ப் போர் செய்தவர்களில் இருபதினாயிரம் பேர்களுக்கு மேல் கொன்றார்கள்; வலிமை மிக்க கோட்டைகளைப் பிடித்தார்கள்; கொள்ளையடித்த பற்பல பொருட்களை வலிமை குன்றியவர்களுக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும், இன்னும் முதியவர்களுக்கும் சம அளவில் கொடுத்தார்கள்.
31 அவர்களுடைய ஆயுதங்களைக் கவனத்தோடு சேர்த்து, எல்லாவற்றையும் தகுந்த இடங்களில் பத்திரப்படுத்தி, மீதியான பொருட்களை யெருசலேம் கொண்டு போனார்கள்.
32 திமோத்தேயுசோடு இருந்து யூதர்களுக்குப் பல தொல்லைகள் வருவித்த கயவனான பிலார்ககெஸ் என்பவனைக் கொன்றார்கள்.
33 மேலும், யெருசலேமில் நன்றிப் புகழ் புரியும் போது, புனித இடத்தின் கதவுகளைக் கொளுத்தி விட்ட கலிஸ்தெனெஸ் என்பவன் ஒரு வீட்டுக்குள்ளே ஓடி ஒளிந்த போது, அவன் செய்த தீச்செயல்களுக்கு ஏற்ப அவனை நெருப்புக்கு இரையாக்கினார்கள்.
34 யூதரை (அடிமைகளாக) விலைக்குவாங்க ஆயிரம் வணிகரைக் கூட்டி வந்த பெரும் துரோகியான நிக்கானோரோ,
35 தன்னால் கீழானவராகக் கருதப்பட்டவர்களுடைய வல்லமை மிக்கக் கடவுளால் தாழ்த்தப் பட்டு, அலங்கார ஆடையைக் களைந்தெறிந்து விட்டு மத்திய நாடுகள் வழியாய்த் தப்பி ஓடி, தன் படையின் அழிவினால் பெரிதும் அவமானமடைந்து தனியாய் அந்தியோக்கியா நகரம் வந்து சேர்ந்தான்.
36 யெருசலேம் மக்களை அடிமைகளாக விற்று உரோமையருக்குக் கப்பம் செலுத்தி விடுவதாக வாக்குறுதி வழங்கிய அவன், கடவுளை யூதர் தங்கள் காவலராகக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவரால் ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளை அவர்கள் பின்பற்றுவதனால் அவர்கள் தேற்கடிக்கப்பட மாட்டார்கள் என்றும் இப்போது வெளிப்படையாய் அறிவித்தான்.
அதிகாரம் 09
1 அந்நாட்களில் அந்தியோக்கஸ் பாரசீகத்தினின்று அவமானத்தோடு திரும்பிவந்தான்.
2 ஏனென்றால், அவன் பெர்சேப்போலிஸ் என்னும் நகரத்தில் புகுந்து, ஆலயத்தைக் கொள்ளையடிக்கவும், நகரத்தாரைக் கொடுமைப்படுத்தவும் முனைந்த போது, திரளான மக்கள் ஆயுதங்களோடு எதிர் வந்து அவனை ஓடவிரட்டினார்கள். ஆதலால், அந்தியோக்கஸ் துரத்தப்பட்டு வெட்கத்தோடு திரும்பி வந்தான்.
3 அவன் எக்பத்தானா அருகே வந்த போது நிக்கானோருக்கும் திமோத்தேயுசுக்கும் நிகழ்ந்தவற்றை அறிந்து கொண்டான்.
4 ஆதலால், கடும் கோபம் கொண்டு, தன்னைத் துரத்தியடித்தவர்களால் தனக்கு உண்டான அவமானத்தை யூதர் மேல் திருப்பலாமென்று எண்ணினான். ஆகையால், தன் தேரை ஓட்டும் படி கட்டளையிட்டு, (ஒருவிடத்திலும்) தங்காமல் பயணம் செய்தான். கடவுளின் தீர்ப்பும் அவனைத் தீவிரித்தது. ஏனென்றால், அவன் யெருசலேம் வந்து சேர்வதாகவும், அதை யூதருடைய கல்லறையாக்கி விடுவதாகவும் அகந்தையாய்ப் பேசினான்.
5 ஆனால், அனைத்தையும் அறியும் இஸ்ராயேலின் ஆண்டவரான கடவுள், குணப்படுத்த முடியாததும் கண்ணுக்குக் காணப்படாததுமான நோயினால் அவனை வதைத்தார். ஏனென்றால், அவன் இவ்வார்த்தைகளைச் சொன்னவுடன், குடல்களில் தாங்க முடியாத நோவும் பொறுக்க முடியாத வயிற்று வலியும் அவனுக்கு உண்டாயின.
6 இப்படி அவனுக்கு நேர்ந்தது முறையே: ஏனென்றால், அவன் பற்பல, புது வகையான கொடுமைகளால் பலருடைய குடல்களை வதைத்திருந்தான்; இப்பொழுதும் தன் கொடுங்குணத்தை விட்டவனல்லன்.
7 மாறாக, அகந்தை நிறைந்து, யூதர் மேல் கோபவெறி கொண்டு பயணத்தை விரைவாக்கக் கட்டளையிட்ட போது, செல்லும் வேகத்தால், தேரினின்று அவன் விழ நேரிட்டது. விழுந்த பொழுது நன்றாக அடிப்பட்டதனால், அவன் உறுப்புகள் வேதனைக்கு உள்ளாயின.
8 மனித இயல்புக்கு மேலான அகந்தையால் நிரப்பப்பட்டு, கடலின் அலைகளுக்குக் கட்டளையிடுகிறவனென்றும், உயர்ந்த மலைகளைத் தராசில் நிறுக்கிறவனென்றும் தன்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த அவன், இப்போது தரையில் வீழ்த்தப்பட்டு, தன்னிலும் உயர்ந்த கடவுளின் வெளிப்படையான வல்லமைக்குச் சாட்சியாக ஒரு கட்டிலில் வைத்துத் தூக்கிக் கொண்டு போகப்பட்டான்.
9 மேலும், அக் கொடிய பாவியின் உடலினின்று புழுக்கள் புறப்பட்டன. உயிரோடிருக்கும் போதே வேதனையால் அவன் தசைகள் அழுகி விழுந்தன. அவனிடமிருந்து புறப்பட்ட கொடிய நாற்றத்தை அவன் படைவீரர்களால் பொறுக்க முடியவில்லை.
10 சற்று முன்னே விண்மீன்களைத் தான் தொடமுடியும் என்று நினைத்துக் கொண்டிருந்த அவனை, பொறுக்க முடியாத நாற்றத்தால், எவனும் தூக்கிப் போக முடியவில்லை.
11 ஆதலால், கடவுளின் தண்டனையாலும், தான் படும் வேதனைகள் வினாடிக்கு வினாடி அதிகரித்ததாலும் அவன் அறிவு பெற்று, தனது அகந்தையினின்று விலகித் தன்னைத் தான் உணரும் நிலைக்குக் கொண்டு வரப் பட்டான்.
12 தானே தன் நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் போன போது, அவன்: கடவுளுக்கு அடங்கியிருப்பதே முறை; அழியக்கூடிய மனிதன் தன்னைக் கடவுளுக்குச் சமமானவனென்று எண்ணத்தகாது என்று கூறினான்.
13 பின்னர் இக் கயவன் ஆண்டவரை மன்றாடினான். ஆனால், அவருடைய இரக்கத்தை அவன் பெறவில்லை.
14 நகரத்தைத் தரைமட்டமாக்கி அதை இறந்தோரின் கல்லலறையாக்க வேண்டுமென்று விரைந்து வந்தவன், இப்போது அதைத் தன்னுரிமையில் விட்டு விட விரும்புகிறான்.
15 யூதர்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முதலாய்த் தகுதியுள்ளவரல்ல என்று எண்ணி, அவர்களைத் துண்டித்துப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் எறிந்து விடுவதாகவும், குழந்தைகளையும் கொல்வதாகவும் சொல்லியிருந்தவன், இப்போது அந்த யூதர்களையே அத்தேனியருக்குச் சமமானவர்களாக்குவதாக வாக்குறுதி கொடுக்கிறான்.
16 தான் முன் கொள்ளையடித்த புனித ஆலயத்தை விலையுயர்ந்த அணிகளால் அலங்கரிப்பதாகவும், புனித பாத்திரங்களை அதிகரிப்பதாகவும், தன் வருமானங்களினின்று பலிகளுக்கான செலவுகளைக் கொடுப்பதாகவும்,
17 மேலும், தானே யூதனாய் மாறுவதாகவும், உலகெங்கும் சென்று கடவுளின் வல்லமையை வெளிப்படையாய் அறிவிக்கப் போவதாகவும் வாக்குறுதி கொடுக்கிறான்.
18 ஆயினும், அவன் துன்பங்கள் நீங்கவில்லை. ஏனென்றால், கடவுளுடைய நீதியான தீர்ப்பு அவன் மேல் இருந்தது; ஆதலால், அவன் அவநம்பிக்கை கொண்டு, மன்றாடும் வகையில் யூதருக்குக் கடிதம் ஒன்று எழுதினான்.
19 அரசனும் பிரபுவுமான அந்தியோக்கஸ் மிக மேன்மை தங்கிய நகர மக்களாகிய யூதருக்கு வாழ்த்துகள் பல கூறி, உங்களுடைய நலத்தையும் மகிழ்வையும் கோருகிறேன்.
20 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நலமாயிருந்து, உங்கள் எண்ணப்படியே அனைத்தும் நிகழுமாகில், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
21 நான் நோயினால் அவதியுற்ற போதிலும், உங்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். பாரசீக நாடுகளினின்று நான் திரும்புகையில் கொடிய நோயால் பீடிக்கப்பட்டேன். எனவே, பொதுநன்மைக்காகக் கவலை எடுத்துக் கொள்வது அவசியமென்று எண்ணினேன்.
22 நான் அவநம்பிக்கை படுவதில்லை; நோயினின்று தப்பிக் கொள்வேனென்று எனக்கு அதிக நம்பிக்கை உண்டு.
23 என் தந்தை மலை நாடுகளில் தம் படையை நடத்திய போது, தம் ஆட்சியைத் தமக்குப் பின் யார் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று காண்பித்தார்.
24 ஏனென்றால், ஏதேனும் மாறுபாடு நடந்தாலும், அல்லது தொல்லைகள் ஏற்பட்டு அறிவிக்கப்பட்டாலும், தம் ஆட்சிக் காரியங்களை ஏற்று நடத்தும் அதிகாரம் யாருக்கு விடப்பட்டிருக்கிறதென்று, அரசின் குடிகள் தெரிந்து கொண்டு கலங்காதிருக்கும் வண்ணம் இவ்வாறு செய்தார்.
25 அவர் இவ்வாறு செய்ததை மனத்தில் கொண்டும், இன்னும் அடுத்த நாடுகளில் வலிமையுள்ளோர் சிலர் தக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களென்பதை அறிந்தும், நான் மலை நாடுகளுக்கு வந்த போது உங்களில் பலரிடம் நான் ஏற்றிக் கூறிய என் மகன் அந்தியோக்கஸ் என்பவனை அரசனாக நியமித்தேன். அவனுக்கும் இவ்வாறு எழுதியுள்ளேன்.
26 ஆதலால், பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்களுக்கு நான் செய்த நன்மைகளை நீங்கள் நினைத்து, ஒவ்வொருவரும் எனக்கும் என் புதல்வனுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்கும் படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
27 ஏனென்றால், அவன் என் கொள்கையைப் பின்பற்றி அன்போடும் பண்போடும் நடந்து கொள்வானென்றும், உங்களுக்குப் பொது மனிதனாக இருப்பானென்றும் நம்புகிறேன் என்று எழுதினான்.
28 ஆனால், கொலைகாரனும் கடவுனைப் பழித்தவனுமான அவன் கடினமாய் வதைக்கப்பட்டு, மற்றவர்களைத் தான் நடத்தினது போலவே, மலைகளில் அன்னியனாகப் பரிதாபமாய் மரணம் அடைந்து தன் முடிவை எய்தினான்.
29 அவனுடன் பாலுண்டு வளர்ந்தவனான பிலிப்பு என்பவன் அவன் உடலைக் கொண்டு போனான். ஆனால், அந்தியோக்கஸ் என்பவனின் புதல்வனுக்கு அஞ்சி, அவன் தொலெமேயுஸ் பிலோமேத்தோரிடம் எகிப்து நாட்டிற்கு ஓடிப்போனான்.
அதிகாரம் 10
1 மக்கபேயுசையும் அவருடன் இருந்தவர்களையும் ஆண்டவர் காப்பாற்றவே, அவர்கள் கடவுள் ஆலயத்தையும் நகரத்தையும் திரும்ப அடைந்தார்கள்.
2 மைதானங்களில் அன்னியர் அமைந்திருந்த பீடங்களையும் கோயில்களையும் அவர்கள் இடித்து விட்டார்கள்.
3 கடவுளின் ஆலயம் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு வேறொரு பீடத்தைச் செய்தார்கள்; நெருப்புக் கற்களினின்று நெருப்பு உண்டாக்கி, இரண்டாண்டுகளுக்குப் பிறகு பலிகளை ஒப்புக் கொடுத்தார்கள்; சாம்பிராணியும் விளக்குகளும், பலிக்குத் தேவையான அப்பங்களும் வைத்தார்கள்.
4 இவை யாவும் செய்த பிறகு தரையில் நெடுங்கிடையாய் விழுந்து, இனி மேல் தாங்கள் இவ்விதத் துன்பங்களில் அகப்படாதபடிக்கும், ஆனால் தாங்கள் பாவம் செய்யும் போது அவராலேயே இரக்கத்தோடு தண்டிக்கப்படும் படியாகவும், கொடியவரும் கடவுளைப் பழிப்பவருமான மனிதருக்குத் தாங்கள் கையளிக்கப்படாதபடிக்கும் ஆண்டவரை மன்றாடினார்கள்.
5 கடவுள் ஆலயம் அன்னியரால் தீட்டுப்படுத்தப் பட்ட காஸ்லேயு மாதத்தின் இருபத்தைந்தாம் நாளிலேயே அது தூய்மைப்படுத்தப் பெற்றது.
6 முன்பு மலைகளிலும் குகைகளிலும் மிருகங்களைப் போல வாழ்ந்த போது, கூடாரத் திருவிழாவைக் கொண்டாடியதை நினைத்துக் கொண்டு, அத்திருவிழாவை அவர்கள் எட்டு நாட்களாக மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.
7 எனவே, தம்முடைய இடத்தைத் தூய்மைப் படுத்தும்படி தயவு செய்தவருக்குத் தழைகளால் அலங்கரிக்கப்பட்ட கழிகளையும் பச்சைக்கிளைகளையும் குருத்துகளையும் எடுத்து வந்தார்கள்.
8 ஆண்டுதோறும் அந்நாட்களைக் கொண்டாட, யூத இனம் முழுமைக்கும் பொதுவான கட்டளையும் உத்தரவும் பிறப்பித்தார்கள்.
9 மகா அந்தியோக்கஸ் என்று அழைக்கப்பட்ட அவ்வரசனுடைய மரணம் இவ்வாறு இருந்தது.
10 இப்போது பாவியான அந்தியோக்கஸ் புதல்வன் எயுபாத்தோர் காலத்தில் நடந்தவற்றையும், போர்களில் நிகழ்ந்த துன்பங்களையும் சுருக்கமாய்ச் சொல்வோம்.
11 ஏனென்றால், இவன் ஆட்சியை ஏற்றுக் கொண்ட போது, பெனிசியா, சீரியா நாடுகளின் படைத் தலைவனான லிசியாஸ் என்பவனை ஆட்சிக் காரியங்களின் தலைவனாக நியமித்தான்.
12 யூதருக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை முன்னிட்டு, அவர்களை நீதியாய் நடத்தவும் அவர்களோடு சமாதானமாய் வாழவும் மாசேர் என்று அழைக்கப்பட்ட தோலெமேயுஸ் தீர்மானித்தான்.
13 இதைப்பற்றி எயுபாத்தோரிடம் நண்பரால் குற்றம் சாட்டப்பட்டமையாலும், பிலோமேத்தோர் தன்னிடம் ஒப்புவித்திருந்த சீப்புருஸ் நாட்டை விட்டு விட்டமையாலும், மகா அந்தியோக்கஸ் என்பவனோடு சேர்ந்து கொண்டு பிலோமேத்தோரிடமிருந்து அகன்று போனமையாலும் தான் துரோகி என்று அழைக்கப் படுவதைக் கேள்விப் பட்டமையால், அவன் நஞ்சுண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.
14 கோர்ஜியாஸ் என்பவன் அவ்விடங்களில் தலைவனாய் இருந்த போது அன்னியரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அடிக்கடி யூதரோடு போர் செய்தான்.
15 தகுதியான கோட்டைகளை வசப்படுத்தியிருந்த யூதரோ யெருசலேமினின்று துரத்தப்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு எதிர்த்துச் சண்டையிட முயன்றார்கள்.
16 மக்கபேயுசுடன் இருந்தவர்கள் ஆண்டவர் தங்களுக்குத் துணைவராயிருக்க மன்றாடி, இதுமேயருடைய கோட்டைகளைத் தாக்கினார்கள்.
17 மிக்க வீரத்தோடு போர்செய்து கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார்கள்; எதிர்ப்பட்டவர்களைக் கொன்றார்கள்; இருபதினாயிரம் பேர்களுக்குக் குறையாமல் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
18 எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்த வலிமை மிக்க இரண்டு கோபுரங்களுக்குச் சிலர் ஓடின போது, சீமோன், சூசை, சக்கேயுஸ் என்பவர்களையும்,
19 அவர்களுடன் இருந்த பலரையும் வேண்டிய அளவு விட்டு விட்டு, மக்கபேயுஸ் தாம் அதிகமாகத் தேவைப்பட்ட போர்களுக்காகப் புறப்பட்டார்.
20 சீமோனுடன் இருந்தவர்கள் பண ஆசையினால் தூண்டப்பட்டு, கோபுரங்களில் இருந்த சிலரால் கைவசப்படுத்தப்பட்டார்கள்; எழுபதினாயிரம் திராக்மா நாணயங்களைப் பெற்றுக் கொண்டு, சிலரைத் தப்பி ஓடும் படி விட்டு விட்டார்கள்.
21 நடந்தது மக்கபேயுசுக்கு அறிவிக்கப்படவே, அவர் மக்களில் முக்கியமானவர்களைக் கூட்டி, பகைவர்களைத் தப்பி ஓடச்செய்து, பணத்துக்காகத் தங்கள் சகோதரர்களை விற்றார்களென்று அவர்கள் மேல் குற்றம் சாட்டினார்.
22 இவ்வாறு துரோகிகளாக மாறியவர்களைக் கொன்றார்; உடனே இரு கோபுரங்களையும் பிடித்துக்கொண்டார்.
23 ஆயுதங்களினாலும் கைகளினாலும் அனைத்திலும் வெற்றி கண்டு, இரண்டு கோட்டைகளிலும் இருபதினாயிரம் பேர்களுக்கு அதிகமாய்க் கொன்றார்.
24 முன்பு யூதரால், முறியடிக்கப்பட்ட திமோத்தேயுஸ் என்பவன் அன்னியர்களின் சேனைகளைச் சேர்த்து, ஆசியாவின் குதிரைப் படைகளுடன், யூதேயா நாட்டை ஆயுதங்களால் பிடித்துக் கொள்பவன் போல வந்தான்.
25 மக்கபேயுசும் அவருடன் இருந்தவர்களும் அவன் நெருங்கி வந்த போது தலையில் மண்ணைத் தூவிக் கொண்டும், இடையில் தவச்சட்டை தரித்துக் கொண்டும், ஆண்டவரை மன்றாடினார்கள்.
26 பீடத்தடியில் நெடுங்கிடையாக விழுந்து, தங்கள் மீது தயவாய் இருக்கவும், தங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருக்கவும், கட்டளை சொல்வது போன்று பகைவரைப் பகைக்கவும் வேண்டிக் கொண்டார்கள்.
27 இவ்வாறு மன்றாடின பிறகு, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நகரத்திலிருந்து நெடுந்தூரம் சென்று, பகைவர்களின் அருகில் வந்து தங்கினார்கள்.
28 சூரியன் உதயமான போது இரு திறத்தாரும் போர்தொடுத்தார்கள். இவர்கள் தங்கள் வலிமையோடு, வெற்றிக்கும் அனுகூலத்துக்கும் உறைவிடமான ஆண்டவரை உறுதியாய் நம்பினார்கள்; அவர்களோ தம் திறனையே படைத்தலைவனாக நம்பினார்கள்.
29 சண்டை வலுத்த போது விண்ணில் ஒளி பொருந்திய ஐந்து வீரர் பொற்கடிவாளம் பூட்டிய குதிரைகள் மேல் இருந்து யூதர்களை நடத்துகிறவர்களாகப் பகைவருக்குத் தோன்றினார்கள்.
30 அவர்களில் இருவர் மக்கபேயுசைத் தங்கள் நடுவில் வைத்துக் கொண்டு, ஆயுதங்களால் தடுத்து அவருக்கு ஆபத்து நேராதபடி காப்பாற்றினார்கள். பகைவர் மீதோ அம்புகளையும் எரிபடைகளையும் ஏவ, அதனால் அவர்கள் கண் குருடாகி மயங்கிக் கலக்கமுற்று விழுந்தார்கள்.
31 இருபதினாயிரத்து ஐந்நூறு பேரும், அறுநூறு குதிரை வீரரும் கொல்லப்பட்டார்கள்.
32 திமோத்தேயுசோ, கேரேயாஸ் என்பவன் கீழ் இருந்த வலுப்படுத்தப்பட்ட கோட்டையாகிய காசாராவுக்கு ஓடிப்போனான்.
33 மக்கபேயுசும் அவருடன் இருந்தவர்களும் மகிழ்ச்சி கொண்டு, கோட்டையை நான்கு நாட்களாக முற்றுகையிட்டார்கள்.
34 ஆனால், உள்ளேயிருந்தவர்கள் கோட்டையின் வலிமையை நம்பி, இழிவான வார்த்தைகளைக் கூறிப் பழித்துக் கொண்டிருந்தார்கள்.
35 ஆனால், ஐந்தாம் நாள் உதயமான போது, மக்கபேயுசுடன் இருந்தவர்களில் இருபது வாலிபர் கடவுளைப் பழித்ததை முன்னிட்டு மனங் குமுறித் துணிவுடன் மதிலை அணுகி சீற்றமுள்ள மனத்தோடு அதன் மேல் ஏறினார்கள்.
36 மற்றவர்களும் அவ்விதமாகவே ஏறி, கோபுரங்களையும் வாயில்களையும் கொளுத்தவும், (கடவுளைப்) பழித்தவர்களை உயிரோடு சுட்டெரிக்கவும் தொடங்கினார்கள்.
37 இரண்டு நாள் வரையிலும் அயராது கோட்டையைக் கொள்ளையடித்து, ஒளிந்து கொண்டிருந்த திமோத்தேயுசை ஓரிடத்தில் கண்டு கொன்று விட்டார்கள். அவன் சகோதரன் கேரேயாசையும் அப்பொல்லோபானசையும் கொன்றார்கள்.
38 இதன் பின் இஸ்ராயேலிடையே பெரியன புரிந்து அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த ஆண்டவரை இன்னிசைகளாலும் வாழ்த்துகளாலும் போற்றினார்கள்.
அதிகாரம் 11
1 ஆனால், சிறிது காலம் சென்ற பின், அரசனுடைய அமைச்சனும் உறவினனும் செயலனுமான லிசியாஸ் என்பவன் நடந்த காரியங்களைப் பற்றிப் பெரிதும் வருத்தமுற்று,
2 எண்பதாயிரம் காலாட் படைகளையும், எல்லாக் குதிரைப் படைகளையும் சேர்த்துக் கொண்டு யூதரை எதிர்க்க வந்தான்; அவர்களுடைய நகரைப் பிடித்து, அதைப் புறவினத்தாருடைய உறைவிடமாக்குவதென்றும்,
3 புறவினத்தாருடைய கோயில்களைப்போலக் கடவுளின் ஆலயத்தையும் பணம் திரட்டுவதற்காக வைத்திருப்பதென்றும், ஆண்டு தோறும் குருத்துவப் பதவியை விற்பதென்றும் எண்ணி வந்தான்.
4 கடவுளுடைய வல்லமையை அவன் ஒருபோதும் நினைத்தவனல்லன். ஆனால், தன் மனத்தில் அகந்தை கொண்டு, திரளான காலாட்படை வீரரிலும், ஆயிரக்கணக்கான குதிரை வீரரிலும், எண்பது யானைகளிலும் தன் நம்பிக்கையை வைத்திருந்தான்.
5 அவன் யூதேயா நாட்டில் புகுந்து, யெருசலேமுக்கு ஐந்து மைல் தூரத்தில் குறுகிய பள்ளத்தாக்கில் இருந்த பெத்சூரா நகரை நெருங்கி, அந்தக் கோட்டையைத் தாக்கினான்.
6 மக்கபேயுசும் அவருடன் இருந்தவர்களும் கோட்டைகள் தாக்கப்படுவதை அறிந்து, அழுது கண்ணீர் சிந்நி, இஸ்ராயேலின் மீட்புக்காகத் தம் நல்ல தூதரை அனுப்பும் படியாக எல்லாரும் சேர்ந்து ஆண்டவரை மன்றாடினார்கள்.
7 மக்கபேயுஸ் தாமே முதலில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மற்றவர்களும் தம்முடன் ஆபத்துக்குத் துணியவும், தங்கள் சகோதரருக்கு உதவி புரியவும் தூண்டினார்.
8 அவர்களும் அவரைப்போலத் தயக்கமின்றி நடந்து போக, வெண்ணாடை அணிந்து பொன்னாயுதங்களுடன் ஈட்டியை ஓங்கிக் கொண்டு யெருசலேமில் தங்களுக்கு முன் சென்ற ஒரு குதிரை வீரன் காணப்பட்டான்.
9 அப்போது எல்லாரும் இரக்கமுள்ள ஆண்டவரைப் போற்றி மனத்திடம் கொண்டார்கள்; மனிதரை மட்டுமல்ல, கொடிய மிருகங்களையும் இரும்புச் சுவர்களையும் துளைத்து (எதிர்க்கத்) துணிந்தார்கள்.
10 விண்ணினின்று தங்களுக்கு உதவி செய்பவரும், தங்கள் மேல் இரக்கம் கொண்டவருமான ஆண்டவர் தங்களோடு இருந்தபடியால் மிகத் துணிவுடன் போனார்கள்.
11 சிங்கங்களைப் போலப் பகைவர் மேல் வேகமாய்ப் பாய்ந்து, அவர்கள் காலாட்களில் பதினோராயிரம் பேர்களையும், குதிரை வீரரில் ஆயிரத்தறுநூறு பேர்களையும் விழத்தாட்டினார்கள்.
12 எல்லாரும் ஓட்டம் பிடிக்கும் படி செய்தார்கள். அவர்களில் பலர் காயப்பட்ட ஆயுதமற்றவராய் ஓடினார்கள். லிசியாசோ வெகு வெட்கத்தோடு ஓடித் தப்பித்துக் கொண்டான்.
13 ஆனால், அவன் அறிவுள்ளவனானதால், தனக்கு நேரிட்ட குறையை நினைத்து, எல்லாம் வல்ல கடவுளின் உதவியை நம்பின எபிரேயரைத் தான் வெல்ல முடியாது என்று கண்டு பிடித்து, அவர்களிடம் தூதர்களை அனுப்பி,
14 நியாயமானவற்றிற்கெல்லாம் தான் இணங்குவதாகவும், அரசனை அவர்களின் நண்பனாக்க வற்புறுத்துவதாகவும் வாக்குறுதி செய்தான்.
15 பொதுநன்மையை நாடி, லிசியாசின் வேண்டுதல்களுக்கு மக்கபேயுஸ் இசைந்தார். யூதரைப் பற்றி லிசியாசுக்கு மக்கபேயுஸ் எழுதின யாவையும் அரசன் நிறைவேற்றினான்.
16 ஏனென்றால், இவ்விதம் லிசியாஸ் யூதருக்குக் கடிதம் எழுதினான்: லிசியாஸ் யூதமக்களுக்கு வாழ்த்துகள் கூறுகிறேன்.
17 உங்களால் அனுப்பப்பட்ட அருளப்பனும் அபேசலோமும் கடிதத்தைக் கொடுத்து, அதில் அடங்கியவைகளை நான் நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.
18 அரசருக்கு அறிவிக்கக் கூடுமானதெல்லாம் தெரிவித்தேன். அவர் தம்மால் கூடுமானவைகளை அளித்தார்.
19 ஆதலால், நீங்கள் உடன்படிக்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தால், இனி மேல் நான் உங்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவேன்.
20 மற்றக் காரியங்களைப் பற்றியோ, அவர்களிடமும் என்னால் அனுப்பப் பட்டிருக்கிறவர்களிடமும் வார்த்தை மூலமாய்ச் சொல்லி, உங்களிடம் பேசும்படி உத்தரவு இட்டிருக்கிறேன்.
21 உங்கள் நலம் நாடுகிறேன். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு, தியோஸ்கோர் மாதம், இருபத்து நான்காம் நாள் (கொடுக்கப்பட்டது).
22 அரசனுடைய கடிதம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: அந்தியோக்கஸ் அரசர் சகோதரன் லிசியாசுக்கு வாழ்த்துகள் கூறுகிறோம்;
23 நம் தந்தை தேவர்களிடம் சேர்ந்த பிறகு, நமது அரசாட்சிக்கு உட்பட்டவர்களைக் கலகமில்லாமல் நடத்தவும், அவர்களுடைய காரியங்களில் கவலை எடுத்துக் கொள்ளவும் விரும்புகிறோம்.
24 யூதர் நம் தந்தை காலத்தில் கிரேக்கருடைய வழக்கத்துக்கு மாற்றப்பட இசையாமல், தங்கள் வழக்கங்களையே கைக்கொள்ள விரும்புகிறார்களென்றும், ஆதலால் தங்கள் உரிமைகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று மன்றாடுகிறார்களென்றும் கேள்விப்பட்டோம்.
25 இவ்வினத்தாரும் சமாதானமாய் இருக்க நாம் விரும்பி, தீர்மானித்து, தங்கள் முன்னோருடைய வழக்கப் படியே அவர்கள் நடப்பதற்கு அவர்களுடைய கடவுள் ஆலயத்தை அவர்களுக்குத் திரும்பக் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
26 அவர்கள் நம்முடைய முடிவை அறிந்து மகிழ்வுடன் இருக்கவும், தங்கள் நன்மையைக் கவனிக்கவும் நீ அவர்களிடம் தூதர்களை அனுப்பி உதவி செய்வது நலம்
27 யூதருக்கு அரசன் எழுதியிருந்த கடிதமாவது: அந்தியோக்கஸ் அரசர் யூத சங்கத்துக்கும் மற்ற யூதருக்கும் வாழ்த்துகள்.
28 நீங்கள் நலமுடன் இருப்பதையே நாம் விரும்புகிறோம். நாமும் நலமுடன் இருக்கிறோம்.
29 நம்மிடம் இருக்கும் உங்கள் இனத்தவருடன் நீங்கள் வந்து சேர விரும்புவதாக மெனேலாவுஸ் நம்மிடம் தெரிவித்தான்.
30 சாந்திக்கஸ் மாதம் முப்பதாம் நாள் வரை திரும்பி வருகிறவர்களுக்கு நாம் பாதுகாப்பும் உதவியும் வழங்குகிறோம்.
31 யூதர்கள் முன்போலத் தங்கள் விருப்பப்படியே உண்ணவும், கட்டளைகளைக் கடைபிடிக்கவும் உத்தரவளிக்கிறோம். அறியாமையால் ஒருவன் செய்த யாதொன்றிற்காகவும் எவனும் அவனை எவ்விதத்திலேனும் தொந்தரவுசெய்ய மாட்டான்.
32 உங்களிடம் பேசும்படி மெனேலாவுசை அனுப்பியிருக்கிறோம்.
33 உங்கள் நலம் நாடுகிறோம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு, சாந்திக்கஸ் மாதம், பதினைந்தாம் நாள் (கொடுக்கப்பட்டது ).
34 உரோமையரும் பின்வருமாறு எழுதியனுப்பினார்கள்: உரோமையருடைய பிரதிநிதிகளாகிய குயிந்துஸ் மேம்மியுசும், தித்துஸ் மனிலியுசும், யூத மக்களுக்கு வாழ்த்துகள்.
35 அரசருடைய உறவினனாகிய லிசியாஸ் உங்களுக்குக் கொடுத்தவைகளை நாங்களும் கொடுக்கிறோம்.
36 அரசரிடம் அறிவிக்க அவன் தீர்மானித்தவைகளை உங்களுக்குள்ளாக விரைவில் யோசித்து, நாங்களும் உங்களுக்கு வேண்டிய முறையிலேயே தீர்மானிக்க உடனே யாரையேனும் அனுப்புங்கள். ஏனென்றால், நாங்களும் அந்தியோக்கியா போகிறோம்.
37 ஆகையால், உங்கள் கருத்தை நாங்களும் அறிந்து கொள்ள உடனே பதில் எழுதுங்கள்.
38 உங்கள் நலம் நாடுகிறோம். நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு, சாந்திக்கஸ் மாதம், பதினைந்தாம் நாள் (கொடுக்கப்பட்டது ).
அதிகாரம் 12
1 இந்த உடன்படிக்கைகள் செய்யப்பட்ட பிறகு லிசியாஸ் அரசனிடம் சென்றான். யூதரோ தங்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டார்கள்.
2 ஆனால், முன்பே ஓடிப்போனவர்களான திமோத்தேயுஸ், ஜென்னேயுஸ் புதல்வன் அப்பொல்லோனியுஸ், இன்னும் எரோணிமுஸ், தேமோபோன், சிப்ருஸ் நாட்டு ஆளுநனான நிக்கோனோர் ஆகியோர் அவர்களை அமைதியிலும் சமாதானத்திலும் இருக்க விட்டாரல்லர்.
3 யோப்பா நகரத்தார் ஒரு மாபெரும் துரோகம் புரிந்தனர். தங்களுக்குள் யாதொரு பகையுமில்லாதவர்கள் போல, தாங்கள் தயார் செய்திருந்த படகுகளில் தங்களோடு வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை அவர்கள் மனைவி மக்களோடு ஏறும் படி கேட்டுக் கொண்டார்கள்.
4 இவ்வேற்பாடு நகர மக்கள் அனைவரின் இசைவுடன் செய்யப்பட்டது. யூதரும் சமாதானத்தின் பொருட்டு அதற்குச் சம்மதித்து, யாதொரு ஐயப்பாடும் கொள்ளவில்லை. ஆழத்திற்குச் சென்ற போது நகரத்தார், இருநூறு பேர்களுக்குக் குறையாமல் அவர்களைத் தண்ணீரில் அமிழ்த்தி விட்டார்கள்.
5 தம் இனத்தாருக்குச் செய்யப்பட்ட இக்கொடுமையை யூதாஸ் கேள்விப்பட்டபோது, தம்முடன் இருந்தவர்களுக்குக் கட்டளை கொடுத்து, நேர்மையான நீதிபதியாகிய கடவுளை மன்றாடி,
6 தம் சகோதரருடைய கொலைஞரை எதிர்த்து வந்து, இரவுவேளையில் துறைமுகத்தைக் கொளுத்தி, படகுகளைச் சுட்டெரித்து, நெருப்புக்குத் தப்பி ஓடினவர்களை வாளுக்கு இரையாக்கினார்.
7 இவ்வாறு செய்த பிறகு, அவர் திரும்பி வந்து யோப்பா நகரத்தார் அனைவரையும் அழித்து விடுவதாகத் திட்டமிட்டுப் போய்விட்டார்.
8 ஆனால், தங்களோடு வாழ்ந்து வந்த யூதருக்கும் அவ்விதமே செய்ய யாம்னியாவில் இருந்தவர்களும் எண்ணம் கொண்டார்களென்று அவர் அறிந்த போது,
9 இரவுவேளையில் யாம்னியா நகரத்தாரிடம் சென்று, துறைமுகத்தையும் கப்பல்களையும் கொளுத்தி விட்டார். அந்த வெளிச்சம் இருநூற்று நாற்பது பர்லாங்கு தூரத்திலிருந்த யெருசலேமில் காணப்பட்டது.
10 அவர் அவ்விடமிருந்து புறப்பட்டு ஒன்பது பர்லாங்கு போய்த் திமோத்தேயுசை எதிர்க்கச் செல்கையில், ஐயாயிரம் காலாட் படையினரும், ஐந்நூறு குதிரை வீரரும் கொண்ட அராபியர் அவரோடு போர் செய்தார்கள்.
11 சண்டை வலுத்து, கடவுள் உதவியால் அவருக்கு வெற்றி ஏற்பட்டபோது, வெல்லப்பட்டு மீதியாய் இருந்த அராபியர்கள், தாங்கள் மேய்ச்சலுக்கு இடம் கொடுப்பதாகவும் மற்றக் காரியங்களில் உதவுவதாகவும் வாக்குறுதி கொடுத்து, தங்களுடன் நட்புறவு கொள்ளும்படி யூதாசைக் கேட்டுக் கொண்டார்கள்.
12 பல காரியங்களில் உதவியாய் இருப்பார்களென்று யூதாஸ் எண்ணி, அவர்களோடு சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டார். உடன்படிக்கை செய்யப்பட்ட பிறகு அவர்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.
13 பாலங்களாலும் மதில்களாலும் சூழப்பட்டுப் பல இனத்தார் கலந்து வாழ்ந்து வந்த காஸ்பின் என்னும் பெயர் கொண்ட வலிமை மிக்க ஒரு நகரத்தையும் அவர் தாக்கினார்.
14 உள்ளியிருந்தவர்கள் மதில்களின் வலிமையையும், சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் நம்பி, (தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில்) கவனமில்லாமல் இருந்து, யூதாசை நிந்தித்து, கடவுளைப் பழித்துத் தகாதவைகளைப் பேசினார்கள்.
15 யோசுவா காலத்தில் இடிக்கும் ஆயுதங்களும் பொறிகளும் இல்லாமல் யெரிக்கோ நகரத்தை விழச்செய்த உன்னதராகிய உலக அரசரை மன்றாடி, மக்கபேயுஸ் சுவர்களைக் கடுமையாகத் தாக்கினார்.
16 ஆண்டவருடைய திருவுளத்தால் நகர் பிடிபட்டபோது எண்ணிலிடங்காத பேர்களைக் கொன்றார். அடுத்து இருந்த இரண்டு பர்லாங்கு அகலமுள்ள குளம் கொலையுண்டோரின் இரத்தத்தால் நிறைந்தது போலத் தோன்றியது.
17 அவர்கள் அவ்விடமிருந்து எழுநூற்றைம்பது பர்லாங்கு நடந்து, துபியானர் எனப்பட்ட யூதரிடம் காராக்காவில் வந்து சேர்ந்தார்கள்.
18 ஆயினும், அவ்விடங்களில் திமோத்தேயுசைக் காண முடியவில்லை. திமோத்தேயுஸ் யாதொரு காரியமும் முடிக்காமல், ஓர் இடத்தில் மட்டும் வலிமை மிக்க சேனைகளை வைத்து விட்டுத் திரும்பிப் போய் விட்டான்.
19 மக்கபேயுசின் படைத்தவைர்களாய் இருந்த தோசித்தேயுஸ், சோசிப்பாத்தர் என்பவர்கள் திமோத்தேயுசால் கோட்டையில் விடப்பட்டிருந்த பதினாயிரம் பேர்களைக் கொன்றார்கள்.
20 மக்கபேயுஸ் தம் ஆறாயிரம் வீரர்களை அணியணியாக வகுத்துக் கொண்டு, இலட்சத்து இருபதினாயிரம் காலாட்களும் இரண்டாயிரத்தைநூறு குதிரை வீரரும் சேர்த்து வைத்திருந்த திமோத்தேயுஸ் மீது படையெடுத்துப் போனார்.
21 திமோத்தேயுஸ் யூதாசின் வருகையை அறிந்து, பெண்களையும் பிள்ளைகளையும் மற்றப் பொருட்களையும் கார்னியோன் என்ற கோட்டைக்கு அனுப்பி விட்டான். ஏனென்றால், அந்த இடம் பாதைகளின் ஒடுக்கத்தால் பிடிபடக் கூடாததும், நெருங்குவதற்கு அரிதானதுமாய் இருந்தது.
22 யூதாசின் சேனை முதலில் காணப்பட்ட போதே, அனைத்தையும் காணும் கடவுள் (அவர்களோடு) இருந்ததால் பகைவர்களின் மனத்தில் பயம் தோன்றவே, ஒருவரொருவரை விட்டு ஓட்டம் பிடித்தார்கள்; தம்மவர்களாலேயே விழத்தாட்டப்பட்டார்கள்;
23 யூதாஸ் வேகமாய்ப் பகைவரைப் பின்தொடர்ந்து, தண்டிக்கும் வகையில் அவர்களில் முப்பதினாயிரம் பேர்களைக் கொன்றார்.
24 தோசித்தேயுஸ், சோசிப்பாத்தர் இவர்களிடம் திமோத்தேயுஸ் அகப்பட்டான்; ஆனால், யூதரில் பலருடைய தந்தையரும் சகோதரரும் தன்னிடம் இருந்த படியால், தன் சாவினால் அவர்கள் தங்கள் பாதுகாப்பின் நன்மையை இழக்க நேரிடும் என்ற காரணம் காட்டி, தன்னை உயிரோடு விட்டு விட வேண்டுமென்று கெஞ்சி மன்றாடினான்.
25 தான் ஒப்புக்கொண்டபடி அவர்களை விட்டு விடுவதாக அவன் உறுதியான வாக்குக் கொடுத்த பிறகு, அவர்கள் தங்கள் சகோதரருடைய பாதுகாப்பை முன்னிட்டு அவனுக்கு யாதொரு பொல்லாப்பும் செய்யாமல் விட்டு விட்டார்கள்.
26 யூதாசோ கார்னியோன் சென்று, அவ்விடத்தில் இருபத்தையாயிரம் பேர்களைக் கொன்றார்.
27 இவர்களில் சிலர் ஓடிப்போன பிறகும், பலரைக் கொன்ற பிறகும், பல இனத்தார் சேர்ந்து வாழ்ந்த வலிமை மிக்க எப்ரோன் நகருக்குப் படைகளை நடத்தினார். வீரமிக்க இளைஞர் மதில் ஓரமாய் நின்று கொண்டு துணிவுடன் எதித்தார்கள். அந்நகரில் பலவகைப் பொறிகளும் அம்புகளும் மிகுதியாக இருந்தன.
28 தமது வல்லமையினால் பகைவர்களின் வலிமையை ஒடுக்கிய எல்லாம் வல்லவரை மன்றாடின பிறகு, அவர்கள் நகரத்தைப் பிடித்தார்கள்; அதில் இருந்தவர்களில் இருபத்தையாயிரம் பேர்களைக் கொன்றார்கள்.
29 அவர்கள் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு யெருசலேமுக்கு அறுபது பர்லாங்கு தூரமுள்ள சீத்தியருடைய நகரம் சென்றார்கள்.
30 சீத்தாப்போலியாவில் இருந்த யூதர் தாங்கள் அந்நகரத்தாரால் அன்புடன் நடத்தப்பட்டதாகவும், துன்ப காலத்தில் முதலாய்த் தங்கள் பால் கண்ணியமாய் நடந்து கொண்டார்களென்றும் அவர்களுக்காகப் பரிந்து பேசினமையால்,
31 அவர்களுக்கு நன்றி வார்த்தைகளைச் சொல்லி, இனி மேலும் தங்கள் இனத்தார் மேல் அன்புடனிருக்கும் படி கேட்டுக் கொண்டு, பெரியவாரத் திருநாள் நெருங்கியமையால் யெருசலேம் வந்தார்கள்.
32 ஐம்பதாம் திருநாளுக்குப் பிறகு அவர்கள் இதுமேயா நாட்டுத் தலைவனாகிய கோர்ஜியாசுக்கு எதிராகச் சென்றார்கள்.
33 மூவாயிரம் காலாட்களோடும், நானூறு குதிரைவீரரோடும் யூதாஸ் புறப்பட்டார்.
34 கைகலந்து போர் செய்யவே, யூதரில் சிலர் கொலையுண்டார்கள்.
35 பாசேனோரைச் சேர்ந்தவர்களில் தோசித்தேயுஸ் எனும் வீரம் செறிந்த ஒரு குதிரை வீரன் கோர்ஜியாசைப் பிடித்துக் கொண்டான். அவனை உயிரோடு பிடிக்க முயன்ற போது, திராசியரில் ஒரு குதிரை வீரன் அவன் மேல் பாய்ந்து அவன் தோளை வெட்டினான். ஆதலால், கோர்ஜியாஸ் தப்பி மாரேசாவுக்கு ஓடினான்.
36 எஸ்திரிசுடன் இருந்தவர்கள் நீண்ட நேரம் போர் செய்து களைப்புற்றிருந்ததால், போரில் துணைவரும் தலைவருமாயிருக்க ஆண்டவரை யூதாஸ் மன்றாடினார்.
37 தம் தாய்மொழியில் ஆரம்பித்து, இன்னிசைகளை உரத்த குரலில் பாடி, கோர்ஜியாசின் படைகள் ஓட்டம் பிடிக்கும் படி செய்தார்.
38 பின்பு யூதாஸ் தம் படைகளைச் சேர்த்துக் கொண்டு ஓதோல்லா நகர் சேர்ந்தார், ஏழாம் நாள் வந்த போது அவர்கள் வழக்கப்படி தங்களையே தூய்மைப்படுத்திக் கொண்டு அவ்விடத்தில் ஓய்வு நாளைக் கொண்டாடினார்கள்.
39 போரில் மாண்டவர்களுடைய பிணங்களை எடுத்து, அவர்களுடைய தந்தையரோடு அவர்கள் முன்னோரின் கல்லறைகளில் வைக்கும்படி மறுநாள் யூதாஸ் தம்முடையவர்களோடு வந்தார்.
40 ஆனால், கொலையுண்டவர்களுடைய ஆடைகளுக்குள் கட்டளையினால் யூதருக்கு விலக்கப்பட்டிருந்ததும், யாம்னியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதுமான சிலைகளின் சின்னங்களைக் கண்டார்கள். ஆதலால், இதனால் தான் அவர்கள் போரில் விழுந்ததார்களென்று அனைவருக்கும் தெரிய வந்தது.
41 ஆகையால், மறைவான பொருளை வெளிப்படுத்தின ஆண்டவருடைய நீதித்தீர்ப்பை எல்லாரும் வாழ்த்தினார்கள்.
42 அன்றியும், ஆண்டவரை மன்றாடத் தொடங்கி, செய்த குற்றத்தை மறந்துவிடும்படி அவரை வேண்டிக் கொண்டார்கள். கொலையுண்டவர்களின் பாவங்களை முன்னிட்டு நிகழ்ந்தவைகளைக் கண்ணால் கண்ட மக்களை நோக்கி, பாவத்தினின்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும்படி அவர்களுக்கு வீரமிக்க யூதாஸ் அறிவுரை கூறினார்.
43 உயிர்த்தெழுதலை நன்றாகவும் பக்தியோடும் நினைவுகூர்ந்து, பணம் தண்டி, பன்னீராயிரம் வெள்ளித் திராக்மாக்களை இறந்தவர்களுடைய பாவங்களுக்காகப் பலி ஒப்புக்கொடுக்கும்படி யெருசலேமுக்கு அனுப்பினார்.
44 (ஏனென்றால், இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்பதை அவர் நம்பியிருந்தாலன்றி, மற்றபடி அவர் செய்தது தேவையற்றதும், இறந்தோருக்காக மன்றாடுவது வீணானதுமாய் இருக்கும்).
45 அன்றியும், விசவாசத்தோடு இறந்தவர்கள் இரக்கத்தைப் பெறுவார்களென்றும் அவர் எண்ணியிருந்தார்.
46 ஆதலால், பாவங்களினின்று மீட்கப்படும் படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுமுள்ள எண்ணமாய் இருக்கின்றது.
அதிகாரம் 13
1 நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு அந்தியோக்கஸ் எயுபாத்தோர் பெரும் படையோடு யூதோவுக்கு எதிராய் வருவதாகவும்,
2 அவனுடன் அவன் அமைச்சனும் செயலனுமான லிசியாஸ் இலட்சத்துப் பதினாயிரம் காலாட்களோடும், ஐயாயிரம் குதிரை வீரரோடும், இருபத்திரண்டு யானைகளோடும், வீச்சு வாள்கள் நிறைந்த முந்நூறு தேர்களோடும் வருவதாகவும் யூதாஸ் கேள்விப்பட்டார்.
3 அவர்களுடன் மெனேலாவுசும் சேர்ந்து கொண்டான்; தன் நாட்டின் நலனை முன்னிட்டன்று, ஆனால், தான் தலைவனாக்கப்படலாம் என்ற நம்பிக்கையினாலேயே கபடமாய் அந்தியோக்கசை மன்றாடினான்.
4 ஆனால், அரசர்க்கரசர் அந்தப் பாவியின் மீது அந்தியோக்கசின் கோபத்தைத் தூண்டி விட்டார். லிசியாசும் இவனே எல்லாத் தீமைகளுக்கும் காரணமென்று அரசனிடம் சொல்ல, அவன் அவ்விடத்து வழக்கம் போல் அவனைப் பிடித்து அவ்விடத்திலேயே கொலை செய்யக் கட்டளையிட்டான்.
5 அவ்விடத்தில் சாம்பல் குவியல்களால் சூழப்பட்ட ஐம்பது முழ உயரமுள்ள ஒரு கோபுரமும் உண்டு. அதைச் சுற்றிலும் பள்ளமாக இருந்தது.
6 கடவுளைப் பழித்த மெனேலாவுசை அவ்விடத்தினின்று சாம்பலில் தள்ளி விடும்படி அரசன் கட்டளையிட்டான். எல்லாருமே சேர்ந்து அவனைச் சாவுக்குத் தள்ளி விட்டார்கள்,
7 (கடவுள்) கட்டளையை மீறியவன் இத்தகைய கட்டளையால் சாகும்படி நேரிட்டது. மெனேலாவுஸ் அடக்கம் செய்யப் படவில்லை.
8 இது முற்றிலும் முறையே. ஏனென்றால் புனித நெருப்பும் புனித சாம்பலும் இருக்கும் கடவுளுடைய பீடத்திற்கு எதிராகப் பல பாவங்களைக் கட்டிக்கொண்ட அவன் சாம்பல் மரணத்துக்கே தீர்ப்பிடப்பட்டான்.
9 ஆயினும், அரசன் தன் தந்தையை விடக் கொடுமையுள்ளவனாகத் தன்னை யூதருக்குக் காண்பிக்க, தன் மனத்தில் கோபங்கொண்டு வந்தான்.
10 இதை அறிந்த யூதாஸ், எப்போதும் போல் இப்போதும் தங்களுக்கு உதவி புரிய ஆண்டவரை இரவும் பகலும் மன்றாட மக்களுக்குக் கட்டளையிட்டார்.
11 கட்டளையும் நாடும் கடவுள் ஆலயமும் தங்களிடமிருந்து எடுபட்டுப் போகுமென்று அவர்கள் அஞ்சினார்கள். சிறிது காலம் சமாதானத்தில் வாழ்ந்த மக்கள் திரும்பவும் கடவுளைப் பழிக்கும் நாட்டவர்களுக்கு அடிமைகளாகுமாறு விடாதபடி, மன்றாடக் கட்டளையிட்டார்.
12 எல்லாரும் அவ்வாறே செய்து, மூன்று நாள் வரையிலும் இடைவிடாமல் நெடுங்கிடையாக விழுந்து, அழுகையிலும் நோன்பிலும் ஆண்டவருடைய இரக்கத்தை மன்றாடின பிறகு, போருக்குக் தயாராகும்படி யூதாஸ் அவர்களைத் தூண்டினார்.
13 அவர் மூத்தோரோடு கலந்து, அரசன் யூதேயா நாட்டிற்குள் தன் படைகளை நடத்தி நகரைப் பிடித்துக் கொள்வதற்கு முன்பே, தாமே புறப்பட்டுப் போகவும், முடிவை ஆண்டவரின் தீர்ப்பிற்கு விட்டு விடவும் தீர்மானித்தார்.
14 ஆகையால் உலகத்தை உருவாக்கிய கடவுளிடம் அனைத்தையும் ஒப்படைத்து, தம்முடன் இருந்தவர்கள் துணிவுடன் போர் புரிந்து, சாகுமட்டும் தங்கள் கட்டளைக்கும் கடவுளின் ஆலயத்துக்கும் நகரத்துக்கும் நாட்டிற்கும் நகரத்தாருக்கும் உறுதியாக நிற்க வேண்டுமென்று திடஞ் சொல்லி, மோதின் நகருக்கு அருகில் பாளையம் இறங்கினார்.
15 வெற்றியின் கடவுள் என்ற அடையாளத்தைத் தம் மக்களுக்குக் கொடுத்து, வீரமிக்க இளைஞரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இரவில் அரசனின் கூடாரத்தைத் தாக்கி, பாளையத்தில் நாலாயிரம் பேர்களையும் யானைகளில் பெரிதானவற்றையும் அதன்மேல் இருந்தவர்களையும் கொன்றார்.
16 மிக்க பயத்தையும் கலக்கத்தையும் பாளையத்தில் உண்டாக்கித் தாங்கள் விரும்பியபடி நிறைவேற்றி விட்டுப் போய் விட்டார்கள்.
17 இது ஆண்டவரின் உதவியால் பொழுது விடியும் போது நடந்தது.
18 ஆனால், அரசன் யூதருடைய துணிவைக் கண்டு கொண்டமையால், தந்திரத்தால் வலிமை மிக்க அரண்களைப் பிடிக்க முயன்றான்.
19 யூதருடைய வலிமை பொருந்திய கோட்டையாகிய பெத்சூராவைத் தாக்கிப் படையெடுத்துப் போனான். ஆனால், துரத்தியடிக்கப்பட்டான்; பெரும் சேதத்தோடு தோல்வியடைந்தான்.
20 நகருக்குள் இருந்தவர்களுக்குத் தேவையான பொருட்களை யூதாஸ் அனுப்பினார்.
21 யூதர் படையிலிருந்த ரோதோக்கஸ் என்னும் ஒருவன் பகைவர்களுக்கு இரகசியங்களை அறிவித்தான். அவன் விசாரிக்கப்பட்ட பிறகு பிடித்து அடைக்கப்பட்டான்.
22 திரும்பவும் அரசன் பெத்சூராவில் இருந்தவர்களுடன் கலந்து பேசி, உடன்படிக்கை செய்து கொடுத்தான்; அவர்களுடைய உடன்படிக்கையை ஒப்புக்கொண்டான்; திரும்பிப் போனான்.
23 அவன் யூதாசோடும் போர்புரிந்து தோல்வியடைந்தான்; அந்தியோக்கியாவில் காரியங்களைக் கவனிக்க தான் விட்டுவந்த பிலிப்பு என்பவன் கலகம் செய்வதாகக் கேள்விப்பட்டு, மனத்தில் கலக்கமுற்று யூதர்களை மன்றாடி, அவர்களுக்குத் தன்னைத் தாழ்த்தி, நீதியாய்த் தோன்றுவன எல்லாவற்றிற்கும் தான் இணங்குவதாக ஆணையிட்டுக் கூறினான்; சமாதானமாகிப் பலி ஒப்புக்கொடுத்தான்; கடவுள் ஆலயத்தை மகிமைப்படுத்தினான்; காணிக்கைகளும் கொடுத்தான்.
24 மக்கபேயுசைத் தழுவிக் கொண்டான். தோலெமாயிதா முதல் ஜெர்ரேனா நாடு வரையிலும் அவரைப் படைத்தலைவராகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினான்.
25 அவன் தோலெமாயிதாவுக்கு வந்த போது, தோலெமேயர் அச்சமாதான உடன்படிக்கையை விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ளவில்லை; ஏனென்றால், சிலவேளை உடன்படிக்கை மீறப்படுமென்று கோபம் கொண்டார்கள்.
26 அப்போது லிசியாஸ் மேடையின் மேல் ஏறி நியாயத்தை விளக்கி மக்களை அமர்த்தினான்; பின் அந்தியோக்கியா திரும்பினான். அரசனுடைய படையெடுப்பும் திரும்புதலும் இவ்வாறு முடிவு பெற்றன.
அதிகாரம் 14
1 ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, செலேயுக்கஸ் புதல்வன் தெமேத்திரியுஸ் வலிமை மிக்க சேனைகளோடும் கப்பல்களோடும் திரிப்பொலிஸ் துறைமுகத்தின் வழியாக வந்து முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டதாக யூதாசும் அவருடன் இருந்தவர்களும் கேள்விப்பட்டார்கள்.
2 அந்தியோக்கஸ் என்பவனுக்கும் அவன் படைத்தலைவன் லிசியாசுக்கும் எதிராகப் பெரிய நாடுகளை அவன் பிடித்துக் கொண்டானென்றும் அறிந்தார்கள்.
3 முன் தலைமைக்குருவாய் இருந்தும், மனம் பொருந்தித் துன்ப காலங்களில் தன்னையே தீட்டுப் படுத்திக் கொண்ட ஆல்சிமுஸ் தனக்கு மீட்பு எவ்வகையிலும் இல்லை என்றும், தான் பீடத்தண்டை வருவது கூடாதென்றும் எண்ணி,
4 நூற்றைம்பதாம் ஆண்டு தெமெத்திரியுஸ் மன்னனிடம் சென்று, பொன்முடியையும் குருத்தையும், கடவுள் ஆலயத்தில் இருந்தனவாக எண்ணப்பட்ட ( ஒலிவக் ) கிளைகளையும் அவனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். அன்று அவன் யாதொன்றும் சொல்லவில்லை.
5 தெமெத்திரியுசினால், ஆலோசனைச் சங்கத்துக்கு அவன் அழைக்கப்பட்டு, யூதர்கள் எவற்றை நம்பி இருக்கின்றார்கள், அவர்களுடைய திட்டங்கள் யாவை என்று தான் கேட்கப்பட்ட போது, தன் மூடத்தனத்துக்குத் தகுந்த வாய்ப்பு அகப்பட்டதென்று எண்ணி, அவன் மறு மொழியாக:
6 யூதரில் யூதாஸ் மக்கபேயுசிற்கு உட்பட்டிருக்கும் அஸ்தியேர் என்பவர்கள் தாம் போரை நீடிக்கச் செய்கிறார்கள்; கலகம் மூட்டுகிறார்கள்; நாட்டின் அமைதியைக் குலைக்கிறார்கள்.
7 எனவே, என் முன்னோருடைய மகிமையாகிய தலைமைக்குருத்துவம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டு நான் இவ்விடம் வந்தேன்.
8 முதலில் அரசரின் நலம் நாடியும், பின் நகரத்தாருடைய நன்மையை நாடியும் வந்தேன். ஏனென்றால், நான் முன்குறிப்பிட்டவர்களுடைய தீய குணத்தால், எங்கள் இனத்தார் எல்லாரும் படும் துன்பம் கொஞ்சமன்று.
9 அரசே, நீர் இவை யாவையும் அறிந்து, எங்கும் விளங்கும் உமது கருணைக்கு ஏற்றவாறு எங்கள் நாட்டின் மீதும் எங்கள் இனத்தார் மீதும் கண்ணோக்கியருளும்.
10 ஏனென்றால், யூதாஸ் உயிரோடிருக்கும் வரை நாட்டில் அமைதிச் சூழ்நிலை உருவாதல் இயலாது என்று கூறினான்.
11 அவன் இவ்வாறு பேசிய பிறகு, அவனுடைய மற்ற நண்பர்களும் யூதாசின் பகைவர்களாய் இருந்ததால் தெமெத்திரியுசுக்குக் கோபமூட்டினார்கள்.
12 ஆதலால், அவன் உடனே யானைப் படைகளின் தலைவனான நிக்கானோரை யூதயோவுக்கு அனுப்பினான்.
13 யூதாசைப் பிடிக்க வேண்டுமென்றும், அவருடன் இருந்தவர்களைச் சிதறடிக்க வேண்டுமென்றும், ஆல்சிமுசைக் கடவுளின் பேராலயத்தின் தலைமைக் குருவாக நியமிக்க வேண்டுமென்றும் கட்டளை கொடுத்தான்.
14 அப்போது யூதருக்குப் பயந்து யூதேயாவினின்று ஓடிப்போன இனத்தார் கூட்டம் கூட்டமாய் நிக்கானோரோடு சேர்ந்து கொண்டனர். ஏனென்றால், யூதருக்கு நேரும் கொடுமைகளும் கொலைகளும் தங்களின் வெற்றி என்று அவர்கள் எண்ணினார்கள்.
15 நிக்கானோருடைய வருகையையும், புறவினத்தார் ஒன்று கூடினதையும் யூதர் கேள்விப்பட்ட போது மண்ணைத் தங்கள் தலை மேல் போட்டுக் கொண்டு, தம் மக்களை உருவாக்கியவரும் தமது உடைமையை வெளி அடையாளங்களால் பாதுகாத்தவருமான கடவுள் என்றும் தங்களைக் காப்பாற்றும்படி மன்றாடினார்கள்.
16 தலைவன் கட்டளையிட்டவுடனே அவர்கள் புறப்பட்டு, தெஸ்சாவு கோட்டைக்கு வந்தார்கள்.
17 யூதாசின் சகோதரன் சீமோன் நிக்கானோரை எதிர்த்துப் போனான்; ஆனால், திடீரெனப் பகைவர்களைக் காணவே பயமடைந்தான்.
18 அவ்வாறே, தங்கள் நாட்டுக்காகப் புரிந்த போர்களில் யூதாசின் வீரர் கொண்டிருந்த வீரத்தையும் மனத்துணிவையும் கேள்வியுற்ற நிக்கானோரும் போர்தொடுக்கப் பயந்தான்.
19 ஆதலால், அவனுடன் நட்பு உடன்படிக்கை செய்துகொள்ள போசிதோனியுஸ், தேயோதோசியுஸ், மத்தியாஸ் என்பவர்களை அனுப்பினான்.
20 இவைகளைப் பற்றி நீண்ட நேரம் ஆலோசித்து, படைத்தலைவனே படைகளுக்கு அறிவித்த போது, எல்லாரும் ஒருமனப்பட்டு நட்புறவிற்கு இசைந்தார்கள்.
21 தலைவர்கள் இரகசியமாய்த் தங்களுக்குள்ளாகப் பேசுவதற்கு ஒரு நாளைக் குறிப்பிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் இருக்கை அமைக்கப்பட்டது.
22 பகைவர்களால் திடீரென்று தீமை ஏதேனும் நடவாதபடிக்கு ஆயுதம் தாங்கியவர்கள் தக்க இடங்களில் இருக்கவேண்டுமென்று யூதாஸ் கட்டளையிட்டார். பிறகு தகுந்த முறையிலே கூடிப்பேசினார்.
23 நிக்கானோர் யெருசலேமில் தங்கியிருந்தான்; யாதொரு தீங்கும் செய்யவில்லை; சேர்க்கப்பட்ட கூட்டங்களையெல்லாம் அனுப்பி விட்டான்.
24 யூதாசுக்கு எப்போதும் அன்பு செய்து, அவர் மீது பற்றுக் கொண்டான்.
25 அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும், மக்களைப் பெற வேண்டுமென்றும், கேட்டுக் கொண்டான். யூதாஸ் திருமணம் செய்து கொண்டார்; அமைதியாக எல்லாரையும் போல வாழ்ந்து வந்தார்.
26 அவர்களிடையே இருந்த நட்புறவையும் உடன்படிக்கைகளையும் ஆல்சிமுஸ் கண்டு, தெமெத்திரியுசிடம் வந்து, நிக்கானோர் அரசுக்கு எதிரான காரியங்களுக்கு இசைந்தானென்றும், அரச துரோகியான யூதாசைத் தனக்குப் பின் தலைவனாக நியமித்தானென்றும் சொன்னான்.
27 ஆதலால், அரசன் கோபம் கொண்டு, அவனுடைய கொடிய பொய்க் குற்றச்சாட்டுகளால் அதிக ஆத்திரம் அடைந்து, சமாதான உடன்படிக்கையைப் பற்றித் தான் மிகவும் மனவருத்தப்படுவதாகவும், ஆயினும் கூடிய விரைவில் மக்கபேயுசுக்கு விலங்கிட்டு அந்தியோக்கியாவுக்கு அனுப்பக் கட்டளையிடுவதாகவும் நிக்கானோருக்கு எழுதினான்.
28 நிக்கானோர் இவற்றை அறிந்து மனம் நொந்து, தனக்கு யாதொரு தீங்கும் செய்யாத ஒரு மனிதனோடு தான் செய்து கொண்டவை வீணாய்ப் போவதைக் கண்டு பெரிதும் துன்பம் அடைந்தான்.
29 ஆனால், அரசனை எதிர்க்க முடியாதவனாகையால், அவன் கட்டளையை நிறைவேற்றத் தக்க நேரத்தை எதிர் நோக்கி இருந்தான்.
30 நிக்கானோர் தன்னுடன் அதிகக் கண்டிப்பாய் நடந்து கொள்வதையும், வழக்கமாய்ச் சந்திக்கையில் அதிகக் கோபமுள்ளவனாயிருப்பதையும் மக்கபேயுஸ் கண்டு, இந்தக் கடுமை நன்மைக்கன்று என்று கண்டு, தம்முடையவர்களில் சிலரைச் சேர்த்துக் கொண்டு, நிக்கானோரிடமிருந்து விலகி ஒளிந்து இருந்தார்.
31 மக்கபேயுஸ் தன்னிடமிருந்து விலகிச் செல்வதை நிக்கனோர் அறிந்து, குருக்கள் வழக்கமான பலிகளை ஒப்புக்கொடுக்கையில், மிகவும் உயர்ந்ததும் புனித மிக்கதுமான கடவுள் ஆலயத்துக்கு வந்து, யூதாசைத் தன்னிடம் கையளிக்கும்படி கட்டளையிட்டான்.
32 தேடப்பட்ட மக்கபேயுஸ் எவ்விடம் இருக்கிறாரென்பதைத் தாங்கள் அறிந்திலரென்று அவர்கள் ஆணையிட்டுச் சொன்ன போது, அவன் கடவுள் ஆலயத்தை நோக்கி, தன் கையை நீட்டி,
33 ஆணையிட்டு: யூதாசை விலங்கிட்டு நீங்கள் என் கையில் கெடாமல் போனால், இந்தக் கடவுளின் ஆலயத்தைத் தரைமட்டமாக்குவேன்; பீடத்தை இடித்து விடுவேன்; இவ்வாலயத்தைத் தந்தை லிபேருக்கு அபிஷுகம் செய்வேன், என்று சொல்லிப் போய் விட்டான்.
34 குருக்களோ விண்ணை நோக்கித் தங்கள் கரங்களை விரித்து, தங்கள் இனத்தாரை எப்போதும் காத்து வந்தவரை நோக்கி:
35 யாருடைய உதவியுமின்றி அனைத்தையும் நடத்த வல்ல ஆண்டவரே, உம்முடைய உறைவிடமாக இந்த ஆலயத்தை எங்களுக்குக் கொடுக்கத் திருவுளமானீர்.
36 புனிதமானவரே, புனிதர்கெல்லாம் ஆண்டவரே, சிறிது காலத்துக்கு முன்பு தூய்மைப்படுத்தப்பட்ட இந்த உறைவிடம் தீட்டுப்படாமல் என்றென்றும் காப்பாற்றும் என்று மன்றாடினார்கள்.
37 தன்னுடைய பற்றுதலை முன்னிட்டு யூதருடைய தந்தை எனப்பட்டவனும், நகரத்தாரின் அன்புக்கு உகந்தவனும், மாண்புமிக்கவனும் யெருசலேமிலுள்ள முதியோரில் ஒருவனுமான ராசியாஸ் நிக்கானோரிடம் குற்றம் சாட்டப்பட்டான்.
38 இவன் பிறரோடு உறவாடித் தன்னையே தீட்டுப்படுத்திக் கொள்ளாமல், யூத மறையின் படி நீண்ட காலமாய்த் தூய்மையைக் காப்பாற்றி அதில் நிலைப்பதற்காக உடலையும் உயிரையும் கொடுக்கத் தயாராய் இருந்தான்.
39 நிக்கானோர் யூதர் மீது தனக்கிருந்த பகையைக் காண்பிக்க விரும்பி, அவனைப் பிடிக்க ஐந்நூறு வீரரை அனுப்பினான்.
40 ஏனென்றால், அம்மனிதனைத் தன்வயப்படுத்திக் கொண்டால் யூதருக்கு அதிகத் தீமைகள் செய்யலாமென்று நினைத்திருந்தான்.
41 அவ்வீரர் அவன் வீட்டில் புகவும், கதவை உடைக்கவும், கொளுத்தி விடவும் முயலுகையில், தான் பிடிபடப் போகும் நேரத்தில் அவன் கத்தியால் தன்னைக் குத்திக் கொண்டான்.
42 ஏனென்றால், பாவிகளுக்கு அடிமைப்படுவதையும், தன் பிறப்புக்குத் தகாத நிந்தைக்கு உட்படுவதையும் விடச் சாவதை மேலானதாகத் தேர்ந்து கொண்டான்.
43 ஆனால், அவசரத்தில் சரியாய்க் குத்திக் கொள்ளாததால், வீரர் கதவுகள் வழியாக ஓடி வந்த போது துணிவாய்ச் சுவருக்கு ஓடி, மக்கள் கூட்டத்தின் மேல் பயமின்றிக் குதித்தான்.
44 அவன் விழுவதைக் கண்டு அவர்கள் விரைவாய் விலக, அவன் தலை கீழாய் விழுந்தான்.
45 இன்னும் மூச்சு இருக்கையில் அவன் திடங்கொண்டு திரும்பவும் எழுந்து, இரத்தம் வெள்ளமாய் ஓட, பெரிய காயங்களால் வருந்திய போதிலும் ஓட்டமாய்க் கூட்டத்தைக் கடந்தான்.
46 ஓர் உயர்ந்த கற்பாறையின் மேல் நின்று கொண்டு, இரத்தமெல்லாம் இழந்த பிறகு தன் குடல்களைப் பிடுங்கி, இரு கைகளாலும் கூட்டத்தின் மீது எறிந்து, தனக்கு அவைகளைத் திரும்பவும் கொடுக்கும் படி உயிருக்கும் ஆவிக்கும் ஆண்டவரானவரை மன்றாடினான். இவ்வாறு அவன் உயிர் விட்டான்.
அதிகாரம் 15
1 யூதாஸ் சமாரியா நாட்டில் இருக்கிறாரென்று நிக்கானோர் அறிந்த போது, தன் வலிமை அனைத்தையும் கூட்டி ஓய்வு நாளில் அவரைத் தாக்க எண்ணினான்.
2 ஆனால், கட்டாயத்தால் அவனைப் பின் தொடர்ந்த யூதர் அவனை நோக்கி: விலங்கைப் போன்றும் காட்டுமிராண்டியைப் போலவும் இவ்வாறு செய்யாதேயும்; ஆனால், புனித நாளை மகிமைப் படுத்தும்; எல்லாரையும் பார்க்கிறவரை வணங்கும் என்றார்கள்.
3 ஓய்வுநாளை அனுசரிக்கக் கட்டளையிட்டவரும் வல்லமையுள்ளவருமான அவர் விண்ணில் இருக்கின்றாரோ என்று அந்தப் பாவி கேட்டான்.
4 ஏழாம் நாளை அனுசரிக்கக் கட்டளையிட்ட வல்லமையுள்ளவரும் வாழ்பவருமான ஆண்டவர் விண்ணில் இருக்கிறார் என்று அவர்கள் மறுமொழி சொன்னார்கள்.
5 ஆனால், அவனோ: ஆயுதங்களை எடுக்கவும், அரச காரியங்களை நிறைவேற்றவும் கட்டளையிடுகிற நான் பூமியில் வல்லமையுள்ளவனாய் இருக்கிறேன் என்றான். ஆயினும், தன் கருத்துப்படி அவனால் செய்ய முடியவில்லை.
6 நிக்கானோர் மிக்க அகந்தையால் செருக்குக் கொண்டு, யூதாசை வென்று, அதன் நினைவாக வெற்றிச் சின்னம் ஒன்று எழுப்ப எண்ணியிருந்தான்.
7 மக்கபேயுசோ கடவுள் உதவி செய்வாரென்று எப்போதும் முழு உறுதியோடு நம்பியிருந்தார்.
8 அன்னியருடைய வருகையைப் பற்றி அஞ்சாதிருக்கவும், ஆனால், விண்ணினின்று தங்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை நினைத்துக் கொள்ளவும், இப்போதும் எல்லாம் வல்லவரால் தங்களுக்கு வெற்றி உண்டாகுமென்று நம்பவும் தம்முடையவர்களுக்கு அவர் துணிவூட்டினார்.
9 கட்டளையையும் இறைவாக்கினர்களையும் பற்றிப் பேசி, முன்னவர்கள் செய்த போர்களை நினைப்பூட்டி அவர்களை ஊக்குவித்தார்.
10 இவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்தி, அதே நேரத்தில் அன்னியருடைய பொய்மையையும், அவர்கள் ஆணை தவறுவதையும் காண்பித்தார்.
11 அனைவரையும் கேடயம், ஈட்டி என்னும் ஆயுதங்களினால் அல்ல, ஆனால் ஊக்கமூட்டும் சொற்களாலும் அறிவுரைகளாலும் போருக்கு ஆயத்தப் படுத்தினார். நம்பத் தகுந்த தன் கனவையும் வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தார்.
12 அவர் கண்ட காட்சி என்னவென்றால்: நற்குணம் இரக்க சிந்தையும் பொருத்தி, பார்வைக்கு அடக்கவொடுக்கமும், நடத்தையில் நேர்மையும், பேச்சில் திறமையும், சிறு வயது முதல் புண்ணியங்களில் பழக்கமும் ஆகிய குணங்களுள்ள தலைமைக்குருவான ஓனியாஸ் என்பவர் கைகளை நீட்டி யூதமக்கள் அனைவருக்காகவும் மன்றாடினார்.
13 பிறகு வயதிலும் மாட்சியிலும் வியப்பிற்குரியவரும் வணக்கத்திற்குரியவருமான வேறொருவரும் தோன்றினார்.
14 ஓனியாஸ் மறுமொழியாக: இவரே சகோதரருடையவும் இஸ்ராயேல் மக்களுடையவும் நண்பர்; மக்களுக்காவும் புனித நகரத்துக்காகவும் வேண்டிக்கொள்ளும் இவர் கடவுளின் இறைவாக்கினராகிய எரெமியாஸ் என்பவர் என்றார்.
15 அப்பொழுது எரெமியாஸ் வலக்கையை நீட்டிப் பொன் வாளை யூதாசுக்குக் கொடுத்து:
16 கடவுளின் கொடையாக இப்புனித வாளைப் பெற்றுக்கொள்; என்னுடைய இஸ்ராயேல் மக்களின் பகைவரைச் சிதறடிப்பாய் என்று கூறினார்.
17 வீரத்தைத் தூண்டக்கூடியனவும், இளைஞருடைய மனத்தை உற்சாகப்படுத்தக் கூடியனவுமான யூதாசின் இவ்வார்த்தைகளால் திடம் கொண்டு, புனித நகரும் கடவுள் ஆலயமும் ஆபத்தில் அகப்பட்டிருந்தமையால், காரியங்கள் தங்களுக்கு அனுகூலமாவதற்காக வீரத்தோடு எதிர்த்துப் போர் செய்ய எல்லாரும் தீர்மானித்தார்கள்.
18 தங்கள் மனைவி மக்களையும் சகோதரரையும் உறவினரையும் பற்றி அவர்கள் அவ்வளவு கவலைப் பட்டவர்களல்லர். கடவுள் ஆலயத்தினுடைய புனிதத் தன்மைக்காக அவர்களுக்கு உண்டாயிருந்த பயமே மிகப் பெரிதும் முதன்மையானதுமாய் இருந்தது.
19 நகரில் இருந்தவர்கள் போர் செய்யப் போவோர் மீது கொண்ட கவலை சொற்பமானதன்று.
20 போரின் முடிவு எப்படியாகுமென்று எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள். பகைவர்கள் ஏற்கனவே வந்து நின்றிருந்தார்கள். படை அணி அணியாய் நிறுத்தப்பட்டிருந்தது. யானைகளோடு குதிரை வீரரும் தகுந்த இடத்தில் நின்றிருந்தார்கள்.
21 அப்போது மக்கபேயுஸ் பகைவர் படைத்திரளின் வருகையையும், பற்பல ஆயுதங்களையும், யானைகளின் வெறியையும் கண்டு, விண்ணை நோக்கித் தம் கைகளை நீட்டி, ஆயுதங்களின் வலிமைக்குத் தக்காற் போலல்லாது தமது விருப்பத்தின்படியே தமக்கு உகந்தவர்களுக்கு வெற்றியைக் கொடுத்து அற்புதங்களைச் செய்யும் ஆண்டவரை மன்றாடினார்:
22 யூதேயாவின் அரசனான எசேக்கியாஸ் காலத்தில் உம் வானதூதரை அனுப்பிச் சென்னாக்கெரிப் பாளையத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர்களைக் கொலை செய்த ஆண்டவரே,
23 விண்ணுலகின் அரசரே, இத்தருணத்திலும் உமது வலக்கையின் மகத்துவத்தால் பயமும் நடுக்கமும் வருவித்து,
24 உம் புனித மக்களுக்கு எதிராய்க் கடவுளைப் பழித்து வருகிறவர்கள் பயப்படும் படியாய் உம்முடைய நல்ல வானதூதரை எங்களுக்கு முன்பாய் அனுப்பும் என்று மன்றாடினார்.
25 நிக்கானோரும் அவனுடன் இருந்தவர் எக்காளங்களோடும் இன்னிசை முழக்கத்தோடும் நெருங்கி வந்தார்கள்.
26 யூதாசும் அவருடன் இருந்தவர்களும் கடவுளை மன்றாடிச் செபங்களோடு போரைத் தொடங்கினார்கள்.
27 கைகளால் போர் செய்தும் இதயத்தில் ஆண்டவரை வேண்டிக் கொண்டிருந்தமையால், ஆண்டவர் தங்களுடன் இருந்ததனால் பெரிதும் மகிழ்ந்து முப்பத்தையாயிரம் பேர்களுக்குக் குறையாமல் விழத்தாட்டினார்கள்.
28 போர் முடிந்து அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பும் போது, நிக்கானோர் தன் ஆயுதங்களோடு விழுந்து மடிந்தானென்று அறிந்தார்கள்.
29 ஆதலால், உரத்த குரலில் கூவி, பெரும் கூச்சல் எழுப்பி எல்லாம் வல்ல ஆண்டவரைத் தங்கள் தாய் மொழியில் வாழ்த்தினார்கள்.
30 அனைத்திலும் நகரத்தாருக்காக உடலையும் உயிரையும் கொடுக்க ஆயத்தமாயிருந்த யூதாஸ் நிக்கானோருடைய தலையையும், தோளோடு வெட்டப்பட்ட கையையும் யெருசலேம் கொண்டுப்போகக் கட்டளையிட்டார்.
31 அவர் அவ்விடம் வந்து சேர்ந்த போது, பீடத்தண்டையில் தம் இனத்தாரையும் குருக்களையும் கூப்பிட்டு, கோட்டையில் இருந்தவர்களையும் அழைத்தார்.
32 நிக்கானோருடைய தலையையும், எல்லாம் வல்ல கடவுளின் புனித ஆலயத்துக்கு எதிராக நீட்டிப் பெருமை பாராட்டிக் கொடுஞ் செயல் புரிந்த கையையும் காட்டினார்.
33 கடவுளைப் பழித்த நிக்கானோரின் அறுபட்ட நாக்கைத் துண்டு துண்டாய் வெட்டிப் பறவைகளுக்குப் போடும்படி கட்டளையிட்டார்; அந்த அறிவு கெட்டவனுடைய கையைக் கடவுள் ஆலயத்துக்கு எதிரில் தொங்க விடும்படி செய்தார்.
34 ஆதலால், அனைவரும் விண்ணின் ஆண்டவரை வாழ்த்தி, தமது இருப்பிடத்தைத் தீட்டுப்படாமல் காப்பாற்றினவர் போற்றப்படுவாராக என்றார்கள்.
35 கடவுள் உதவியின் அடையாளம் தெளிவாய்க் காணப்படத் தக்கதாக, அவர் நிக்கானோருடைய தலையைக் கோட்டையின் உச்சியில் தொங்க வைத்தார்.
36 ஆதலால், எல்லாரும் ஒரே மனதாய் அந்நாளை யாதொரு ஆடம்பரமில்லாமல் ஒருபோதும் கழிய விடுவதில்லையென்று தீர்மானித்தார்கள்.
37 சீரியா மொழியில் மர்தோக்கேயுசின் நாளுக்கு முந்தின நாள் என்று சொல்லப்பட்ட ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாளில் விழாக் கொண்டாடத் தீர்மானித்தார்கள்.
38 நிக்கானோருக்கு இவை நேர்ந்த பிறகு, அக்காலம் முதல் நகரம் எபிரேயருக்குச் சொந்தமாயிற்று. நானும் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு வரலாற்றை முடித்து விடுகிறேன்.
39 நான் சொல்லியவை சரியாயும் வரலாற்றுக்குச் சரியொத்ததாயும் இருக்குமேயானால், அதையே நானும் விரும்பினேன். குறைகள் உண்டெனில், மன்னித்துக் கொள்க.
40 ஏனென்றால், முந்திரிப் பழ இரசத்தை எப்போதும் குடிப்பது, அல்லது தண்ணீரை எப்போதும் குடிப்பது விருப்பமற்றதாய் இருக்கின்றது. ஆனால், அவற்றைக் கலந்து குடிப்பது இன்பம் தரும். அது போலவே, வாசகம் எப்போதும் நுணுக்கமாயிருந்தால் வாசிப்பவர்களுக்கு விருப்பம் தராது. எனவே, இது முடிவு பெற்றது.