இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 2-ம் தேதி.

இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 2-ம் தேதி.

திருஇருதயப் பக்தி எதில் அடங்கியிருக்கிறது.

இயேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்து பக்தி செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால் பக்தியில் தவறான எண்ணங்கள் உண்டு. "இயேசுவின் திரு இருதயமே! உம்மை அன்பு செய்கிறேன்" என்று அடிக்கடி சொல்லுவதிலும், நீண்ட செபங்கள் சொல்வதிலும், பாடல்கள் பாடுவதிலும், திருஇருதயப் பீடங்களில் மலர்களை வைத்து தீபங்களை ஏற்றுவதிலும் அடங்கியுள்ளது என சிலர் நினைக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல காரியங்கள் எனினும் இவை திருஇருதய பக்தியின் வெளி அடையாளங்கள் மட்டுமே ஆகும்.

"நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்." (யோ 14:15) 'என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என் மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்." (யோ 14 :21 என்றும் கூறுகிறார் இயேசு.

உண்மையான அன்பு வார்த்தையில் மட்டுமல்ல, செயல்களிலும்தான் முக்கியமானதாய் விளங்குகிறது என்று அனைவரும் அறிந்து கொள்வர்.

என் தந்தையை வெகுவாய் அன்பு செய்கிறேனென்று சொல்லுகிற மகன், தந்தையுடைய கட்டளைகளைப் பரிகசித்து, அவருக்குக் கீழ்ப்படியாமல் தன் நடத்தையால் அவருடைய இதயத்தை வேதனைப்பட செய்வானேயாகில், அவன் தன் தந்தையை உண்மையாகவே அன்புசெய்கிறானென்று சொல்லலாமா?

இயேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்கிறாயா இல்லையா என அறியவேண்டுமா? இதோ, மனது பொருந்தி எந்தப் பாவத்தையும் கட்டிக்கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருக்கிறாயா? தேவனுடையக் கட்டளைகளையும் திருச்சபைக் கட்டளைகளையும் கடைப்பிடிக்கிறாயா? குருக்களுக்கு மரியாதை செய்து கீழ்ப்படிகிறாயா? திருஇருதயத்துக்கு வணக்கமாக தனியாக முயற்சி செய்து உன் தீய விருப்பங்களின் மேல் வெற்றி கொண்டு, சில குறைந்த நிந்தைகளையாகிலும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு சகலருக்கும் பிறரன்பைக் காட்டுகிறாயா? செபம், புத்திமதி மற்றும் உன் நன்மாதிரிகையால் ஆத்துமாக்களை மீட்க முயற்சி செய்கிறாயா? இவை போன்ற முயற்சிகள்தான் இயேசுவின் திரு இருதயத்தை நாம் அன்பு செய்கிறோம் என்பதற்கு அடையாளம். வார்த்தைகளால் மட்டுமல்ல; செயல்களாலும், ஒறுத்தல் முயற்சிகளாலும் விளங்குகிற அன்புதான் இயேசுவின் திருஇருதயத்தின் உண்மையான அன்பு ஆகும்.

இயேசுக்கிறிஸ்து நமக்காக இவ்வுலகத்தில் வந்து பாடுபட்டு நமது அன்பிற்காக தமது 33 வருடங்களும் நிந்தை அவமானங்கள் அனுபவித்து சிலுவையில் வருந்தி பாடுபட்டு தமது இரத்தமெல்லாம் சிந்தி உயிரைக் கொடுத்தார். உலகம் முடியும் மட்டும் நம்மோடுகூட இருக்கவும், நமது ஆன்மாவிற்கு உணவாகவும் நற்கருணையை உண்டாக்கினார்.

இயேசு நமது மட்டில் காண்பித்த இந்த அன்பை உணர்ந்துதான் புனிதர்கள் நமது ஆண்டவரைப் பின்பற்றினார்கள். ஸ்மர்னா நகரத்து ஆயராகிய புனித இஞ்ஞாசியாரை மதத்திற்காக உயிரைவிட உரோமா புரிக்குக் கூட்டிக் கொண்டுபோகும் போது அவர் தமது கிறிஸ்தவர் களுக்கு எழுதியது: "நான் கிறிஸ்துவுக்காக என் உயிரை விடப் போவதை உங்களுக்கு அறிவிக்க நான் மிகுந்த பாக்கியம் பெற்றவன், என்னை சுட்டெரிக்கலாம், சிலுவையில் அறையலாம் அல்லது விலங்குகளுக்கு இரையாக்கலாம் பரவாயில்லை. இவைகளையெல்லாம் ஆண்டவருக்காக மிக சந்தோஷமாய் அனுபவிப்பேன். இவை என்னை, என் உயிரும் அன்புமாகிய கிறிஸ்துவிடம்" கொண்டு சேர்க்கும்.

இதுவே திருத்தூதர்களிடத்திலும், வேதசாட்சிகளிடத்திலும், புனிதர்களிடத்திலும் விளங்கிய உன்னதமான பற்றுதல். இப்போதுகூட எத்தனையோ மத போதகர்கள், தங்கள் தாய் தந்தையர், சுற்றத்தார், நண்பர்கள், சொந்த நாடு முதலானவைகளை விட்டு மிகத் தொலைவான வேறு நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவர்களை மீட்கவும், பிற மதத்தினருக்குப் போதிக்கவும் வருந்தி உழைத்து, தங்கள் வாழ்நாட்களை செலவழிக்கிறார்கள். இதற்குக் காரணம், இயேசுவின் அன்புக்கும் அவருடைய திரு இரத்தத்தால் மீட்டு இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களின் அன்புக்குமேயன்றி வேறல்ல.

கிறிஸ்தவ நாடுகளிலுள்ள மருத்துவமனைகளைப் பாருங்கள். அங்கே தங்கள் சொத்து, சுகம், விருப்பங்கள் அனைத்தையும் கடவுளுக்காக வெறுத்து ஒதுக்கிவிட்ட கன்னியர்கள், துறவியர்கள் தாங்கள் ஒருபோதும் கண்டிராத நோயாளிகளுக்கு அக்கரையுடன் பணிவிடை செய்து வருவதைக் காண்பீர்கள். இச்செயலைச் செய்ய தூண்டுவது இயேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே. இன்னும் புண்ணியவான்களாகிய சில கிறிஸ்தவர்கள், தங்கள் நன்மாதிரிகை யாலும், தாராள குணத்தினாலும், மற்ற கிறிஸ்தவர்களுக்கு முன்னுதா ரணமாக நடக்கவும், தங்கள் சகோதரருடைய முன்னேற்றத்துக்காக உழைத்து துன்பப்பட வேண்டிய பிரமாணிக்கத்தையும், தளராத ஊக்கத்தையும் அவர்கள் இதயத்தில் தூண்டி வளர்ப்பது இயேசுவின் பேரில் அவர்கள் வைத்த அன்பே. எடுத்துக்காட்டாக அன்னைத் தெரசாவின் தீவிர செயல்கள்.

நமது ஆண்டவரை உண்மையாகவே அன்பு செய்கிறோமென்று காட்ட நாம் இப்போது என்ன செய்கிறோம்? இனி என்ன செய்யப்போகிறோம்? இரண்டாம் முறையாக இயேசு அவரிடம் "யோவானின் மகன் சீமோனே நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா? என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! என்றார். இயேசு அவரிடம், என் ஆடுகளை மேய் என்றார்" (யோ 21:16. பேதுருவிடம், "சீமோனே நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டது போல் நம்மிடமும் கேட்டால் நாமும் சீமோன் பேதுருவைப்போல ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா " (யோ 21:17) என்று பதில் சொல்லுவோமா? பேதுருவைப் போன்று நாமும் இயேசுவின் திரு இருதயத்திற்கு நமது அன்பைக் காண்பிக்க வேண்டுமானால் நம்முடைய வாழ்வு உண்மையான கிறிஸ்தவனுக்குரிய உத்தம வாழ்வாகவும், இயேசுவின் திரு இருதயத்திற்கு விருப்பமான வாழ்வாகவும் இருக்கவேண்டும். இவ்வுலக தீய நாட்டங்களை விலக்கித்தள்ள வேண்டும். கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதிலும், இயேசுவின் திரு இருதயத்திற்கு உகந்த புண்ணியங்களாகிய தாழ்ச்சி, பிறரன்பை கடைப்பிடிப்பதிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
நமது இருதயத்தில் திருஇருதய அன்பும், பாவ நாட்டமும் ஒன்றாகக் குடியிருக்க முடியாதென்பதை மறந்துப் போகக் கூடாது. நமது விருப்பு வெறுப்புகளை இயேசுவின் திரு இருதய அன்பிற்காக வெறுத்து வெற்றி கொண்டு புனிதர்களைப் போல் திருஇருதயத்தோடு என்றும் நிலைத்திருக்க தீர்மானிப்போம்.

புனித மார்கரீத் மரியா சொல்வதைக் கேளுங்கள்: நமது இதயம் எவ்வளவு சிறிதாக இருக்கிறதென்றால் அதில் இரண்டு அன்பு இருக்க இடமில்லை. தேவனுடைய அன்புக்காக மட்டும் நமது இதயம் படைக்கப்பட்டிருப்பதால் அந்த இதயத்தில் வேறு அன்பும் நுழைவதால் அதற்கு சமாதானமே கிடையாது.

வரலாறு.
மதுரை மிஷன் மத போதகர்களின் நிருபங்களில் பின்வரும் வரலாற்றைக் காணலாம்.

ஒரு கிராமத்தினருகில் உள்ள காட்டில் வாழ்ந்த ஒரு கொடிய புலி கடவுள் நம்பிக்கையற்ற பலரை அடித்துக் கொன்றுவிட்டது. ஒருநாள் ஒரு கிறிஸ்தவன் காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தான். அவனைக் கண்ட புலியானது அவன் மீது பாய்ந்தது. கிறிஸ்தவன் மிகவும் பயந்து நடுங்கி, இயேசுவின் திருஇருதயமே என்று அலறினான். கொடிய புலி அவனை ஒரே தூக்காய்த் தூக்கி தன் குகைக்குக் கொண்டுச் செல்கையில் புலியிடம் மாட்டிய கிறிஸ்தவன் முன்னிலும் அதிக சத்தத்தோடு, "இயேசுவின் திருஇதயமே! என்னைக் காப்பாற்றும்" என்று திரும்பத் திரும்பக் கத்தினான். இரக்கம் நிறைந்த இயேசுவின் திரு இருதயம் அவன் அழுகைக் குரலைக் கேட்டு மனமிரங்கியது. தீடீரென அப்புலி மனமாற்றமடைந்து மனிதனை அப்படியேப் போட்டுவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது. புலியிடமிருந்து தப்பிய கிறிஸ்தவன் இயேசுவின் திருஇருதயத்திற்கு நன்றி கூறினான். இந்நிகழ்ச்சியை தன் பங்கு குருவிடம் கூறினான். இருவரும் இரக்கமும் அன்பும் நிறைந்த இயேசுவின் திருஇருதயத்திற்கு நன்றி கூறி புகழ்ந்தனர்.

நாம் சோதனைகளால் துன்புறும்போது இயேசுவின் திரு இருதயத்தை துணைக்கு அழைப்போமாக! தீய ஆவியின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெற இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி மன்றாடுவோமாக!

இப்படி செய்யும்போது இயேசு நம்மை சகல தீங்குகளிலிருந்துக் காப்பாற்றி அவருடைய தூய அன்பில் நம்மை வைத்து ஆதரித்து நித்திய வான்வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

செபம் :
இயேசுவின் மதுரமான திரு இருதயமே, என் சிநேகமாயிரும்.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.