அதிகாரம் 01
1 என் அன்பு மகன் தீமோத்தேயுவுக்கு, கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்குள்ள வாழ்வைப்பற்றிய வாக்குறுதியை அறிவிப்பதற்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக அனுப்பப்பட்ட சின்னப்பன் யான் எழுதுவது:
2 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உமக்கு அருளும் இரக்கமும் சமாதானமும் உண்டாகுக!
3 அல்லும் பகலும் என் செபங்களில் உம்மை இடையறாது குறிப்பிட்டு, முன்னையோர் செய்ததுபோலவே குற்றமற்ற மனச்சாட்சியோடு நான் வழிபடும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
4 அன்று நீர் சிந்தின கண்ணீரை நினைவில் கொண்டு உம்மை மீண்டும் காண விழைகின்றேன். அப்போது என் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பும்.
5 உம்மிடத்திலுள்ள நேர்மையான விசுவாசத்தை நினைவிற்கொண்டு வருகிறேன். இத்தகைய விசுவாசம் முதலில் உம் பாட்டி லோவிசாள், உம் தாய் ஐனிக்கேயாள் இவர்கள் உள்ளங்களில் குடி கொண்டிருந்தது. அதே விசுவாசம் உம் உள்ளத்திலும் இருக்கிறதென உறுதியாக நம்புகிறேன்.
6 உம்மீது என் கைகளை விரித்தால் கடவுளின் வரம் உமக்குள் வந்துள்ளது. அதை நீர் தீயெனப் பற்றியெரியச் செய்ய வேண்டுமென்று உமக்கு நினைவுறுத்துகிறேன்.
7 கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார்.
8 ஆதலின் ஆண்டவரைப்பற்றிச் சாட்சியம் கூற வெட்கப் படாதீர். அவருடைய கைதியான என்னைக் குறித்தும் வெட்கப்படாதீர். கடவுளின் வல்லமை பெற்று நற்செய்திக்காக என்னோடு துன்புறத் தயங்காதீர்.
9 கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை; தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது;
10 இக்காலத்தில் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசு உலகுக்குப் பிரசன்னமானதால் வெளிப்படையாயிற்று. அவர் சாவை அழித்து சாவே அறியா வாழ்வை நற்செய்தியின் வழியாய் ஒளிரச் செய்தார்.
11 நானோ இந்த நற்செய்தியின் தூதனாகவும் அப்போஸ்தலனாகவும் போதகனாகவும் ஏற்படுத்தப்பெற்றேன்.
12 இதன் பொருட்டே நான் இத்துன்பங்களுக்கு உள்ளானேன் ஆனால், வெட்கப்படவில்லை, யாரை நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். அவர் என்னிடம் ஒப்படைத்ததை அந்த இறுதி நாள் வரை பாதுகாக்க அவர் வல்லவரென்று நான் உறுதியாய் நம்புகிறேன்.
13 கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்திலும் அன்பிலும் வாழ்பவராய் என்னிடமிருந்து நீர் கேட்டறிந்த நலமிக்க வார்த்தைகளை வாழ்க்கைச் சட்டமாகக் கொண்டிரும்.
14 நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியின் உதவியினால் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நற்போதனையைப் பாதுகாப்பீராக.
15 பிகெல்லு, எர்மொகேனேயு உட்பட ஆசியாவிலுள்ள அனைவரும் என்னைக் கைவிட்டனர் என்பது உமக்குத் தெரியும்.
16 ஒனேசிப்போருவின் குடும்பத்தின் மேல் ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில், அவர் துன்பங்களில் எனக்கு அடிக்கடி ஆறுதலளித்தார்; விலங்கிடப்பட்ட என்னைக் குறித்து வெட்கப் படவில்லை.
17 அவர் உரோமைக்கு வந்தபொழுது அக்கறையோடு என்னைத் தேடிக்கண்டு பிடித்தார்.
18 இறுதி நாள் வரும்போது ஆண்டவரிடம் அவர் இரக்கத்தைக் கண்டடையுமாறு ஆண்டவர் அருள்வாராக. எபேசுவிலும் அவர் ஆற்றிய அரும்பணிகள் உமக்கு நன்றாகத் தெரியும்.
அதிகாரம் 02
1 எனவே, என் மகனே, நீர் கிறிஸ்து இயேசுவிலுள்ள அருளினால் உறுதிகொள்வீராக.
2 சாட்சிகள் பலர் முன்னிலையில் நீர் என்னிடமிருந்து கேட்டறிந்த போதனையை மற்றவர்களுக்குப் போதிக்கக் கூடியவர்களும் நம்பிக்கைக்குரியவர்களுமான ஆட்களிடம் ஒப்படையும்.
3 கிறிஸ்து இயேசுவின் நல்ல வீரனைப்போல் நீரும் துன்பத்தில் பங்குக் கொள்ளும்.
4 படையில் சேர்ந்துகொண்ட எவனும் அன்றாட வாழ்க்கை அலுவல்களில் ஈடுபடுவதில்லை தன்னை அதில் சேர்த்துக்கொண்ட தலைவனுக்கு உகந்தவனாய் இருக்கவேண்டுமென்றோ?
5 மேலும், பந்தய விளையாட்டுகளில் கலந்துகொள்பவன் ஒழுங்குகளைப் பின்பற்றினாலன்றி வெற்றி வாகையைச் சூட மாட்டான்.
6 விளைச்சலின் பலனை முதன்முதல் பெற வேண்டியவன் பாடுபட்டு உழைக்கும் குடியானவனே.
7 நான் சொல்லுகிறதை எண்ணிப்பாரும். இதையெல்லாம் நீர் நன்றாயுணர ஆண்டவர் உமக்கு அருள் செய்வார்.
8 இயேசு கிறிஸ்துவை நினைவில் வையும். அவர் தாவீதின் மரபில் தோன்றி, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
9 இதுவே நான் கூறும் நற்செய்தி. இந்த நற்செய்தியின் பொருட்டே நான் குற்றவாளியைப் போல விலங்கிடப்படும் அளவுக்குத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளுடைய வார்த்தைக்கு விலங்கெதுவுமில்லை.
10 தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பையும் முடிவில்லா மகிமையையும் பெறவேண்டுமென்று அவர்களுக்காக நான் இவையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்.
11 உண்மையான வார்த்தை இது. 'அவரோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.
12 நிலைத்து நின்றால், அவரோடு அரசாள்வோம். நாம் அவரை மறுதலித்தால். அவரும் நம்மை மறுதலிப்பார்.
13 நாம் அவருக்கு உண்மையாயில்லாவிடினும், அவரது வாக்குறுதி பொய்க்காது; அவர் தம்மையே மறுதலிக்க முடியாது.'
14 இவற்றை அவர்களுக்கு நினைவூட்டும், வெறும் சொற்களைப்பற்றிச் சண்டையிடுவதை நிறுத்தும்படி கடவுள் முன்னிலையிலும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளும். அப்படிச் சண்டையிடுவது பயனற்றது. அதைக் கேட்போருக்கும் அது கேட்டையே விளைவிக்கும்.
15 கடவுளால் ஏற்கப்படத்தக்கவராய் விளங்கவும். நாணித் தலைகுணியவேண்டிய செயலில் ஈடுபடாத வேலையாளாய் இருக்கவும், நெறிபிறழாது உண்மையின் வார்த்தையைப் போதிப்பவராய் இருக்கவும் முயற்சி செய்யும்.
16 இலௌகீக வீண் பேச்சை விலக்கும். அப்படிப் பேசுபவர்கள் அவபக்தியில் மேன்மேலும் ஆழ்ந்து போவார்கள்.
17 அவர்களுடைய பேச்சு புற்று நோயெனப் புரையோடிப் பரவும். இமெனேயுவும் பிலேத்தும் இத்தகையவர்கள்.
18 உயிர்த்தெழுதல் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டு இவர்கள் உண்மையை விட்டுவிலகி, சிலருடைய விசுவாசத்தையே தகர்த்துவிடுகிறார்கள்.
19 ஆயினும், கடவுளிட்ட உறுதியான அடித்தளம் நிலையாய் நிற்கிறது. அதன்மேல் 'ஆண்டவர் தம்மவரை அறிவார்' என்றும், 'ஆண்டவருடைய பெயரை உச்சரிப்பவன் எவனும் அநீதியினின்று விலகி நிற்பானாக' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
20 ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்கள் வெள்ளிப்பாத்திரங்கள் மட்டுமா உள்ளன? மரப்பாத்திரங்களும் மட் பாத்திரங்களும் உள்ளன அல்லவா? சிலவற்றை மதிப்புயர்ந்தவையாகவும், சிலவற்றை மதிப்பற்றவையாகவும், கருதுகிறோம்.
21 மேற்சொன்ன குற்றங்களை நீக்கி, ஒருவன் தன்னை மாசில்லாமல் காத்துக்கொண்டால் மதிப்புயர்ந்த பரிசுத்த பாத்திரம் ஆவான். தன் தலைவனுக்குப் பயனுள்ளவனும் எத்தகைய நற்பணியும் புரியத் தக்கவனுமாயிருப்பான்.
22 இளமைக்குரிய இச்சைகளைத் தவிர்த்து விடும். நீதி, விசுவாசம், அன்பு இவற்றைத் தேடும். தூய உள்ளத்தோடு ஆண்டவரைத் தொழுவாருடன் சமாதானத்தை நாடும், அறிவில்லா மூட ஆராய்ச்சிகளைத் தள்ளி விடும்.
23 இவை பூசல்களைத் தான் விளைவிக்குமென நீர் அறிவீரன்றோ?
24 ஆண்டவருடைய ஊழியன் பூசல் விளைவிப்பவனாய் இருத்தல் ஆகாது. எல்லாருக்கும் இனியவனாகவும், போதிக்க வல்லவனாகவும், துன்பத்தில் பொறுமையுள்ளவனாகவும் இருக்கவேண்டும்.
25 தன்னை எதிர்ப்பவர்களைச் சாந்தத்தோடு கடிந்து கொள்ளவேண்டும், ஏனெனில், கடவுள் அவர்களுக்கு மனந்திரும்பும் அருளைத் தந்து அவர்கள் உண்மையைக் காணச் செய்யக் கூடும்.
26 பேயின் வலையில் சிக்குண்டு அதன் விருப்பத்திற்கு அடிமைகளாயிருந்த அவர்கள் இவ்வாறு தெளிவடைந்து அவ்வலையினின்று விடுதலை பெறக்கூடும்.
அதிகாரம் 03
1 மேலும் இதைத் தெரிந்துகொள்ளும்: இறுதி நாட்கள் பொல்லாத காலமாயிருக்கும்.
2 அப்போது மக்கள் தன்னலப்பிரியர், பொருளாசை பிடித்தவர், வீம்புக்காரர், செருக்குடையவர், பழித்துப்பேசுபவர், பெற்றோருக்கு அடங்காதவர், நன்றி கொன்றவர், இறைவனைப் புறகணிப்பவர்,
3 பரிவில்லாதவர், தீராப் பகையினர், புரணி பேசுபவர், தன்னடக்கமற்றவர், கொடியவர், நல்லதை வெறுப்பவர்,
4 நம்பிக்கைத் துரோகிகள், மூர்க்கர், இறுமாப்புடையவர் என்று இவ்வாறெல்லாம் இருப்பர். அவர்கள் கடவுளை நாடுவதைவிடச் சிற்றின்பங்களையே மிகுதியாய் நாடுவர்.
5 பக்தியின் வெளித் தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் அதன் உள்ளாற்றலைப் பொருட்படுத்த மாட்டார்கள்.இவர்களுடன் சேராதீர்.
6 இத்தகையவர்களுள் சிலர் பிறர் வீடுகளில் புகுந்து மதிகெட்ட பெண்களை வயப்படுத்துகிறார்கள். இப்பெண்களோ பாவங்களால் மூழ்கடிக்கப்பட்டு, பல்வேறு இச்சைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
7 இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டேயிருந்தாலும் உண்மையைக் கண்டுணர்வதில்லை.
8 யன்னேயும் யம்பிரேயும் மோயீசனை எதிர்த்து நின்றதுபோல் மேற்சொன்னவர்களும் உண்மையை எதிர்த்து நிற்கிறார்கள். சீரழிந்த மதிகொண்டவர்கள் இவர்கள். விசுவாசத்தைப் பொறுத்த மட்டில் பயனற்றவர்கள்.
9 இவர்கள் போக்கு நீண்ட நாள் நீடிக்காது. மோயீசனை எதிர்த்தவர்களின் மதிகேடு வெளியானதுபோல் இவர்களுடைய மதிகேடும் எல்லாருக்கும் வெளியாகும்.
10 நீரோ, என் போதனை, நடத்தை, குறிக்கோள், விசுவாசம், பொறுமை, அன்பு, மனவுறுதி, ஆகிய இவற்றில் என்னைப் பின்பற்றினீர்.
11 அந்தியோக்கியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய இடங்களில் நான் துன்புறுத்தப்பட்டபோது என் பாடுகளிலும் என்னைப் பின்பற்றினீர். எத்தனையோ துன்பங்களுக்கு உள்ளானேன். ஆனால் ஆண்டவர் அவை அனைத்தினின்றும் என்னை விடுவித்தார்.
12 பக்தியோடு கிறிஸ்து இயேசுவில் வாழவிரும்புவோர் அனைவரும் துன்புறுத்தப்படுவார்.
13 தீயவர்களும் எத்தர்களும் மேன்மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.
14 நீரோ, கற்றுக்கொண்டவற்றையும், உம் மனத்தில் உறுதியாய் நிறுத்திய உண்மைகளையும் கடைப்பிடியும். உமக்குக் கற்பித்தவர்கள் யாரென்று தெரியுமன்றோ?
15 குழந்தைப் பருவமுதலே உமக்கு மறைநூல் தெரியும் என்பதை நீர் மறவாதீர். மறைநூல் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மீட்பிற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஞானத்தை அளிக்க வல்லது.
16 மறைநூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது. போதிக்கவும் கண்டிக்கவும் சீர்திருத்தவும், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில் மக்களைப் பயிற்றவும், பயன்படும்.
17 இவ்வாறு கடவுளின் அடியான், திறமை நிரம்பப் பெற்று, எல்லா வகையான நற்செயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகின்றான்.
அதிகாரம் 04
1 கடவுள் முன்னிலையிலும், வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் தீர்ப்பிடப்போகும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் இவரது பிரசன்னத்தை முன்னிட்டும், இவரது அரசாட்சியை முன்னிட்டும் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்வது: தேவ வார்த்தையை அறிவியும்; வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப்பேசும்;
2 கண்டித்துப் பேசும்; கடிந்துகொள்ளும்; அறிவுரை கூறும் மிகுந்த பொறுமையோடு போதித்துக்கொண்டே இரும்.
3 ஒருகாலம் வரும், அப்போது மக்கள் நலமிக்க போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் மனம் போன போக்கிலே எண்ணிறந்த போதகர்களைத் திரட்டிக்கொள்வர்.
4 உண்மைக்குச் செவி கொடுக்க மறுத்து, கட்டுக் கதைகளுக்குத்தான் செவி சாய்ப்பர்.
5 நீரோ எந்தச் சூழ்நிலையிலும் சமநிலையாயிரும். துன்பத்தை ஏற்றுக்கொள்ளும். நற்செய்தித் தொண்டனுக்குரிய வேலையைச் செய்யும். உம் திருப்பணியைச் செவ்வனே செய்யும்.
6 எனக்கோ, பிரியவேண்டிய நேரம் வந்து விட்டது. இதோ என் வாழ்க்கை, பலியின் இரத்தமென வார்க்கப்படுகிறது.
7 சீரியதொரு பந்தயத்தில் ஓடினேன், ஓட்டத்தை முடித்து விட்டேன்; விசுவாசத்தைப் பாதுகாத்தேன்.
8 இனி எனக்கு இருப்பது ஒன்றே; நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராம் ஆண்டவர் அந்த இறுதி நாளிலே எனக்குக் கைம்மாறாக அருள்வார். எனக்கு மட்டுமன்று, அவரது பிரசன்னத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் அனைவருக்கும் அருள்வார்.
9 காலம் தாழ்த்தாது விரைவில் வந்து சேரும். ஏனெனில், உலகப்பற்று மேற்கொண்டதால்,
10 தேமா என்னைக் கைவிட்டுத் தெசலோனிக்கேவுக்குப் போய் விட்டான். கிரேஸ்கே கலாத்தியாவுக்கும், தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்.
11 லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கிறார். உம்மோடு மாற்குவையும் கூட்டிக்கொண்டு வாரும். அவர் எனக்குத் திருப்பணியில் ஏற்ற துணை.
12 தீக்கிக்குவை எபேசுவுக்கு அனுப்பிவிட்டேன்.
13 நீர் வரும்போது துரோவாவூரில் கார்ப்புவிடம் நான் விட்டுவந்த போர்வையை எடுத்துக் கொண்டுவாரும். நூல்களையும், சிறப்பாகத் தோல் சுருள்களையும் கொண்டு வாரும்.
14 கன்னானாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகத் தீங்கிழைத்தான். அவனுடைய செயல்களுக்குத்தக்கபடி ஆண்டவர் அவனுக்குக் கூலி கொடுப்பார்.
15 நீரும் அவனைப்பற்றி எச்சரிக்கையாயிரும். அவன் நம் போதனையை மிகவும் எதிர்த்து நின்றான்.
16 நான் முதல் விசாரணையில் என் வழக்கை எடுத்துச் சொன்னபோது, எனக்குத் துணை நிற்க யாரும் முன்வரவில்லை. எல்லாரும் என்னைக் கை விட்டனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக.
17 ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார், என் வழியாய் நற்செய்தியின் அறிவிப்பு முற்றுப் பெறும்படியும், புறவினத்தார் அனைவரும் அதைக் கேட்டறியும்படியும் என்னை உறுதிப்படுத்தினார். சிங்கத்தின் வாயினின்று நான் விடுவிக்கப்பட்டேன்.
18 ஆண்டவர் எனக்கு உண்டாகும் எல்லாத் தீங்குகளினின்றும் என்னை விடுவித்து மீட்பளித்துத் தம்முடைய வானக அரசினுள் என்னைச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக. ஆமென்.
19 பிரிஸ்காள், ஆக்கிலா, ஒனேசிப்போருவின் வீட்டார் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.
20 எரஸ்து கொரிந்துவில் தங்கி விட்டான். துரேப்பீமு பிணியுற்றிருந்ததால் மிலேத்துவில் அவனை விட்டு வந்தேன்.
21 குளிர்காலம் தொடங்குமுன் காலம் தாழ்த்தாமல் வந்து விடும். ஐபூலு, பூதே, லீனு, கிலவுதியாள், மற்றுமுள்ள சகோதரர் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். ஆண்டவர் உம்மோடிருப்பாராக. இறை அருள் உங்களோடிருப்பதாக.