அதிகாரம் 01
1 நம் தந்தையாகிய கடவுளுக்குள்ளும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் வாழுகின்ற தெசலோனிக்கேய மக்களின் சபைக்கு, சின்னப்பனும் சில்வானும் தீமோத்தேயுவும் எழுதுவது:
2 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
3 சகோதரர்களே, உங்களை நினைத்துக் கடவுளுக்கு நாங்கள் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில், உங்கள் விசுவாசம் வளர்ந்து ஓங்குகிறது; நீங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும் பெருகி வருகிறது.
4 உள்ள படியே. நீங்கள் வேதனைக்குள்ளாகித் துன்புறுத்தப்பட்ட போதெல்லாம் காட்டிய மன உறுதியையும் விசுவாசத்தையும் கண்டு, நாங்களும் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசுகிறோம்.
5 நீங்கள் படும் பாடெல்லாம் கடவுளின் அரசுக்காகவே, இத்துன்பங்கள் நீங்கள் கடவுளின் அரசுக்குத் தகுதியுள்ளவர்கள் என்பதை விளங்கச் செய்து, துன்பங்களில் நீங்கள் காட்டும் மன உறுதியும் விசுவாசமும் கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அத்தாட்சி.
6 எவ்வாறெனில், உங்களை வேதனைப்படுத்துவோருக்குத் தண்டனையாக வேதனையையும், 'வேதனையுறும் உங்களுக்குக் கைம்மாறாக எங்களோடு இளைப்பாற்றியையும் அளிப்பது கடவுளுடைய நீதிக்கு ஏற்றதேயன்றோ?
7 நம் ஆண்டவராகிய இயேசு வெளிப்படும் நாளில் இப்படி நிகழும்.
8 அந்நாளில், கொழுந்துவிட்டெரியும் தீயின் நடுவே, இயேசு வல்லமை மிக்க தம் தூதர்களோடு வானினின்று இறங்கி வருவார்; வந்து, கடவுளை அறியாதவர்களையும், நம் ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் பழி வாங்குவார்.
9 இவர்கள் ஆண்டவருடைய வல்லமை விளங்கும் மாட்சிமையைக் காண முடியாமல் அவருடைய திருமுன்னிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லாத அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.
10 தம்முடைய பரிசுத்தர்கள் நடுவே மகிமை பெறவும், விசுவசித்தோர் அனைவர் நடுவிலும் வியந்து போற்றப்படவும் அவர் வரும் அந்நாளில் இவையெல்லாம் நடைபெறும். நாங்கள் உங்களுக்கு அளித்த சாட்சியத்தை விசுவசித்ததால் நீங்களும் அதில் கலந்துகொள்வீர்கள்.
11 இதற்கென உங்களுக்காக என்றும் செபிக்கிறோம்; நம் கடவுள் தாம் விடுத்த அழைப்பிற்கு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குவாராக. உங்கள் நற்கருத்து ஒவ்வொன்றையும், விசுவாசத்தால் ஏவப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக.
12 இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்கள் வழியாக நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும், அவருள் உங்களுக்கும் மகிமை உண்டாகும்.
அதிகாரம் 02
1 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைப்பற்றியும், அவரோடு நாம் ஒன்று கூடுதல் பற்றியும் உங்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது
2 ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என யாராவது தேவ ஆவியின் வாக்காகவோ, திருவுரையாகவோ, நாங்கள் எழுதிய கடிதத்தின் செய்தியாகவோ சொன்னால், நீங்கள் உடனே நிலைகுலைந்து மனங்கலங்கவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
3 எவனும் உங்களை எவ்வாறேனும் ஏமாற்ற விடாதீர்கள். அந்த நாள் வருமுன் இறைவனை எதிர்க்கும் கிளர்ச்சி நிகழ வேண்டும். அக்கிரமமே உருவான மனிதன், அழிவுற வேண்டியவன் வெளிப்பட வேண்டும்.
4 இவன் இறைவனுக்கு எதிரி. தெய்வம் எனப்படுவது, வழிபாடு பெறுவது அனைத்திற்கும் மேலாகத் தன்னையே உயர்த்திக்கொள்வான். கடவுளுடைய ஆலயத்தில் அமர்ந்து, தன்னைக் கடவுளெனக் காட்டிக்கொள்ளும் அளவுக்குத் துணிவான்.
5 உங்களோடிருந்தபொழுது இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறிவந்தேன்; உங்களுக்கு நினைவு இல்லையா?
6 குறித்த காலம் வருமுன், அவன் வெளிப்படாதபடி இப்பொழுது தடையாயிருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமே.
7 அக்கிரமத்தின் மறைவான ஆற்றல் ஏற்கனவே செயல்படுகிறது. ஆனால், தற்போது தடையாயிருப்பவன் நீக்கப்படும்வரையில் தடைசெய்வான்.
8 பின்னரே அந்த அக்கிரமி வெளிப்படுவான். ஆண்டவர் தம் வாயின் ஆவியினால் அவனை அழித்து விடுவார். அவர் விரும்பியபோது தம் பிரசன்னத்தால் அவனைத் தொலைந்துவிடுவார்.
9 சாத்தானின் வல்லமையோடு அவன் வருவான். எல்லா வகையான போலி அருங்குறிகளையும் அற்புதங்களையும், வல்லமை மிக்க செயல்களையும் செய்து காட்டுவான்.
10 அழிவுறுபவர்களுக்குக் கேடாக அநீதி ஏமாற்றச் செயல்களெல்லாம் நடக்கும். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு மீட்பைத் தரவல்ல உண்மையின் மீது அன்பு கொள்ள மறுத்தனர்.
11 இதனால், பொய்மையை நம்பச் செய்யும் வஞ்சக ஆற்றலுக்குக் கடவுள் அவர்களை உட்படுத்தினார்.
12 அவ்வாறு உண்மையை விசுவசியாது அநீதத்தில் பற்றுக்கொள்ளும் அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்.
13 ஆண்டவரால் அன்பு செய்யப்படும் சகோதரர்களே, நாங்கள் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், பரிசுத்தமாக்கும் தேவ ஆவியாலும், உண்மை மீதுள்ள விசுவாசத்தாலும் நீங்கள் மீட்பு அடைவதற்கென்று கடவுள் உங்களைத் தொடக்கமுதல் தேர்ந்துகொண்டுள்ளார்.
14 இதற்காகவே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக, இறைவன் உங்களை அழைத்தார்.
15 எனவே, சகோதரர்களே, எங்களிடமிருந்து வாய் மொழியாகவோ, கடிதத்தின் வழியாகவோ நீங்கள் கற்றறிந்த பரம்பரைப் படிப்பினைகளைப் பற்றிக்கொண்டு நிலையாயிருங்கள்.
16 நம்மேல் அன்பு கூர்ந்து, தம் அருளால் முடிவில்லாத ஆறுதலும், நல்ல நம்பிக்கையும் அளித்த நம் தந்தையாகிய கடவுளும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்
17 உங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளித்து எல்லா வகையான நற்செயலிலும் நற்சொல்லிலும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக.
அதிகாரம் 03
1 இறுதியாக, சகோதரர்களே, எங்களுக்காகச் செபியுங்கள்,. ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே பரவியதுபோல,
2 எங்கும் விரைந்து பரவி மகிமை பெறவும், முறை கெட்டவர் தீயவர் கைக்கு நாங்கள் தப்பவும் வேண்டிக்கொள்ளுங்கள்: விசுவாசம் என்பது எல்லாரிடமும் இல்லயைன்றோ? ஆண்டவரோ நம்பிக்கைக்குரியவர்.
3 அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காப்பாற்றுவார்.
4 நாங்கள் கட்டளையிட்டதை எல்லாம் நீங்கள் செய்து வருவீர்கள், இனியும் செய்து வருவீர்கள் என்று ஆண்டவரின் அருளால் உங்கள்மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
5 கடவுளின் அன்பைப்பெறவும், கிறிஸ்துவின் பொறுமையை அடையவும் ஆண்டவர் உங்கள் உள்ளங்களுக்கு வழிகாட்டுவாராக.
6 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது: எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைக்கு ஏற்ப நடக்காமல் சோம்பித்திரியும் எந்தச் சகோதரனிடமிருந்து விலகி நில்லுங்கள்.
7 எங்களைப் போல் நடப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமே. உங்களோடிருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை.
8 யாரிடமும் நாங்கள் இலவசமாக உணவு கொள்ளவில்லை. மாறாக, உங்களுள் யாருக்கும் சுமையாய் இராதபடி பிழைப்புக்காக இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
9 உங்களிடமிருந்து பிழைப்புக்குத் தேவையானதைப் பெற எங்களுக்கு உரிமையில்லை என்பதனால் இவ்வாறு உழைக்கவில்லை. நாங்கள் செய்வதுபோலவே நீங்களும் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு முன்மாதிரியாய் இருக்கவே அப்படிச் செய்தோம்.
10 நாங்கள் உங்களோடிருந்தபொழுது, 'உழைக்க மனமில்லாத எவனும் உண்ணலாகாது' என்ற கட்டளை கொடுத்தோம்.
11 உங்களுள் சிலர் எவ்வேலையும் செய்யாமல், இங்கும் அங்கும் சோம்பித் திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
12 இத்தகையோர் தங்கள் உணவுக்காக அமைதியோடு உழைக்க வேண்டுமேன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.
13 சகோதரர்களே, நன்மை செய்வதில் மனந்தளர வேண்டாம்.
14 இக்கடிதத்தில் நாங்கள் சொல்வதற்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அவனுக்கு வெட்க முண்டாகும்படி, சபையில் அவன் பெயரைக் குறிப்பிட்டு அவனோடு உறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.
15 எனினும், அவனைப் பகைவனாகக் கொள்ளாமல், சகோதரனாகவே கருதி, அவனுக்கு அறிவு புகட்டுங்கள்.
16 சமாதானத்தின் ஊற்றாகிய ஆண்டவர் எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்குச் சமாதானம் அருள்வாராக.
17 ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. இவ்வாழ்த்து சின்னப்பனான நான் என் கைப்பட எழுதியது. என் கடிதம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்.
18 நான் எழுதுவது இப்படித்தான், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.