மாதாவுக்கு முழு அர்ப்பணம் செய்ய 33 நாள் தயாரிப்பு.
முகவுரை.
நம்முடைய சகல காரியங்களுக்கும் மாதாவை முற்றும் முழுவதுமாக சார்ந்திருத்தலையே முழு அர்ப்பணம் என்று அர்ச். லூயிஸ் மரிய தெ மோன்போட் 'மரியாயின் இரகசியம்'' என்ற தமது நூலில் கூறுகிறார்.
மாதாவை சகலத்திலும் சார்ந்திருப்பதற்கு நாம் நம்மையே உண்மையான காரியார்த்தமான முறையில் 33 நாட்களாகத் தயாரிக்க வேண்டும் என்று மரியாயின் மீது உண்மைப்பக்தி" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
33 நாள் என்று அவர் வரையறுத்திருப்பது நமதாண்டவரின் வாழ்நாளாகிய 33 ஆண்டுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதை 33 நாள் தியானம் என்றே கூறிவிடலாம்.
இதில் முதல் 12 நாட்களிலும் நாம் கிறிஸ்து நாதருடைய தன்மைக்கு முற்றிலும் எதிரிடையாயிருக்கிற இந்த உலகத் தன்மையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்கிறார் அர்ச். லூயிஸ். அதன்பின் மூன்று வாரங்கள் உள்ளன. அதில் முதல் வாரம் தன்னை அறிவதிலும், 2-ம் வாரம் மாதாவை அறிந்து கொள்வதிலும், 3-ம் வாரம் சேசு கிறிஸ்துவை அறிவதிலும் செலவிடப்பட வேண்டும்.
இந்த 33 நாள் தயாரிப்பைச் செய்வதற்கு உதவக் கூடிய ஜெபங்களையும் பாடல்களையும் வாசகங்களையும் பதிவிட இருக்கின்றோம்.
வருடத்தில் நான்கு மரியாவின் திரு நாட்களில் இம் முழு அர்ப்பணம் செய்யப்படுவதற்கு ஏதுவாக ஒரு அட்டவணையும் நாம் ஏற்கெனவே பதிவிட்டிருந்தோம்.
ஆயினும் மார்ச் மாதம் 25-ம் தேதி மரியாயின் மங்கள் வார்த்தை திருநாளன்று இம்முழு அர்ப்பணம் செய்யப்படுவதையே அர்ச். லூயிஸ் மோன்போர்ட் மிக விரும்பிக் கூறியுள்ளார். இத்திருநாளை ''இப்பக்தி முயற்சியின் பாதுகாவல் திருநாள்" என்றே அவர் அழைத்துள்ளார்.
மாதாவின் பிள்ளைகள் இந்நாடெங்கும் இம் முழு அர்ப்பணத்தைச் செய்து, அதனால் மாதாவின் வழியாக நமதாண்டவரும் இரட்சகருமாகிய சேசு கிறிஸ்துவுக்கு முழுச் சொந்தமாகும்படி இச்சிறு இணையதளம் உதவுவதாக.
ஆன்மாக்களின் ஞான உள் ஜீவியத்தின் பாதுகாவலரான அர்ச். சூசையப்பரை மன்றாடி இத்தயாரிப்பைச் செய்வது நிச்சயமான பலனை அளிக்கும். அவர் நம்முடன் இருந்து நம்மைத் தயாரிப்பாராக. மரியாயே வாழ்க!
33 நாள் தயாரிப்பு.
மரியாயின் புனித அடிமைத்தனம் அல்லது மாதாவுக்கு முழு அர்ப்பணம்.
"மரியாயின் அடிமைத்தனம்" என்னும் வார்த்தையைப் பற்றி அர்ச். லூயிஸ் மரிய தெ மோன்போர்ட் தரும் விளக்கம்:
''ஞானஸ்நானம் பெறுமுன் நாம் பசாசின் அடிமைகளாயிருந்தோம். ஞானஸ்நானம் நம்மை சேசு கிறிஸ்துவின் அடிமைகளாக்கியது. ஆன்றோரான ஹென்ரி பூ டோன் என்பவர் உண்மையோடு கூறியிருப்பது போல் முந்நாட்களில் ''ஊழியன்' என்றால் "அடிமை'' என்பதைத் தவிர வேறு பொருள் இல்லை. அர்ச். சின்னப்பர் 'கிறிஸ்துவின் ஊழியன்" என்பதை ஒரு மதிப்பிற்குரிய பட்டமாகக் கொண்டு தன்னை "கிறிஸ்து நாதருடைய ஊழியன்' என்றழைக்கிறார்.
இங்கே நான் சேசு கிறிஸ்துவைப்பற்றி முழு உண்மையாகக் கூறுபவைகளை, அவருடன் சார்புடைய தன்மையில் மரியாயைப் பற்றிக் கூறுகிறேன். ஆயினும் யாரும் தன்னை மரியாயின் "அடிமை" என்று சொல்ல விரும்பாவிட்டால் அதனால் என்ன? அவர்கள் சேசுவின் அடிமைகளாகட்டும். அவருடைய அடிமைகள் என்று தங்களை அழைக்கட்டும். இதுவும் மரியாயின் அடிமையாயிருப்பதும் ஒன்றுதான் - மரி. மீது உண். பக்தி எண். 72 & 77.
மாதாவின் முழு அடிமைத்தனம் 33 நாள் தயாரிப்பின் முதல் 12 நாட்கள்.
நோக்கம்:
கிறீஸ்துநாதருடைய தன்மைக்கு எதிராயிருக்கிற உலகத் தன்மையிலிருந்து விடுபடல்.
உலகத்தின் தன்மை கடவுளுக்கு எதிராக உள்ளது. அது பாவத்திலும் கடவுளைப் புறக்கணிப்பதிலும் வெளிப்படுகிறது. அதனால் அது மாதாவுக்கும் எதிராக இருக்கிறது.
இந்த உலகத் தன்மையானது சரீர இச்சையிலும் கண்களின் இச்சையிலும் ஜீவியத்தின் அகங்காரத்திலும் (1 அரு. 2:16) காணப்படுகிறது. பாவம் இவற்றால் விளைகிறது.
உலகத் தன்மையினால் பசாசின் செயல்களான சகல விதமான பாவங்களும் பாவ சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. தப்பறைகளும் ஆன்ம இருளும் ஏமாற்றமும் கெடுதலும் வருகின்றன. பாவத்தைக் கவர்ச்சியுள்ளதாக்க பசாசின் ஆரவாரங்களாக உலகப் பொருள்களும் இடங்களும் ஆட்களும் பசாசினால் உபயோகிக்கப்படுகின்றன.
உத்தமமான அர்ப்பணத்துக்கு ஆயத்தம் செய்கிறவர்கள் பாவத்தையும் பாவ சந்தர்ப்பங்களையும் விட்டு விட வேண்டும். பசாசையும் அவனுடைய ஆரவாரங்களையும் விட்டு விலக வேண்டும், இப்பன்னிரண்டு நாட்களிலும் தினமும் இதை வாசித்து சிந்திப்பதோடு கீழ்வரும் ஆத்தும பரிசோதனையையும் செய்ய வேண்டும்.
ஆத்தும பரிசோதனைகள்:
உலகத்தை நான் நேசிக்கிறேனா? உலகத்தின் மீது பற்று என்னிடம் உள்ளதா? உலகப் பொருட்கள், இடங்கள், ஆட்கள் மீது எனக்குப் பற்றுதல் இருக்கிறதா? பாவப் பழக்கம் என்னிடம் உள்ளதா? பாவ சந்தர்ப்பங்களில் நான் இருக்கிறேனா? உலகக் கவர்ச்சியால் இழுக்கப்படுகிறேனோ? செளகரியத்தைத் தேடுகிறேனா? பகட்டையும் அழகையும் வெறுக்காமல் அவைகளை விரும்புகிறேனா? கண்ணடக்கமா யிருக்கிறேனா? நான், எனது என்ற சுயத்தையும், என் விருப்பம் என் அபிப்பிராயம் என்னும் சுய பற்றுதலையும் விட்டு விடுகிறேனா? இருதயத் தாழ்ச்சியுடன் இருக்கிறேனா?
செய்ய வேண்டியவை:
1. மன உருக்கத்தோடும், கடவுளுக்குச் சித்தமானால் கண்ணீரோடும் உலகப் பற்று அறும்படியும் ஜெபித்து மன்றாட வேண்டும்.
2. தன் மூப்பையும், தன் விருப்பங்களையும் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும்.
3. சகலத்திலும் பரித்தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
4. எல்லாவற்றையும் தேவ சிநேகத்திற்காகவும் மாதா மேல் உள்ள அன்பிற்காகவும் செய்து முகத்தாட்சண்யத்திற்கு இடங்கொடாதிருக்க வேண்டும்.
5. தன்னுடனும் பிறருடனும் இருதயத் தாழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
3. சகலத்திலும் பரித்தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
4. எல்லாவற்றையும் தேவ சிநேகத்திற்காகவும் மாதா மேல் உள்ள அன்பிற்காகவும் செய்து முகத்தாட்சண்யத்திற்கு இடங்கொடாதிருக்க வேண்டும்.
5. தன்னுடனும் பிறருடனும் இருதயத் தாழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.