உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்கிறது திருச்சபையின் சத்திய விசுவாசமாம்.
தியானம்.
சேசுக்கிறிஸ்து நாதர் சுவாமி இவ்வுலகத்திற்கு எழுந்தருளி வரும் முன்னே வரைந்த வரிவேத புஸ்தகங்களினாலும் , அவருடைய ஸ்தானாதிபதிகளாய் இருந்த அப்போஸ்தலர்களுடைய நிருபங்களினாலும் வேதபாரகர் அனைவோரும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று திருஷ்டாந்தமாய் ஒப்பித்துக் கொண்டு வந்ததினாலே , இவர்கள் சொல்லும் பரம நியாயங்களை இதிலே பற்றும் பற்றாய்க் காண்பிக்க வேண்டியதில்லை . துஷ்ட பதிதர்களை மறுப்பதற்கு இந்த நியாயங்களை அறிய வேண்டுமானால் இவைகளை வேத விளக்கமென்னும் புஸ்தகத்திலும் ஞான சஞ்சீவி என்னும் புஸ்தகத்திலும் இவை போன்ற பிற புத்தகங்களிலும் வாசிக்கக் காணலாம்
மேலும் சத்திய வேதத்தை எங்கும் போதித்து ஸ்தாபித்த அப்போஸ்தலர்கள் நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களுக்காக ஜெப வேண்டுதல்களையும் பூசை பலிகளையும் பண்ணுகிற சுகிர்த வழக்கம் பாரம்பரியமான முறையாய் நடந்ததுமல்லாமல் ,அந்தந்த காலத்திலே விளங்கின வேதபாரகரும் , கிரந்த கர்த்தாக்களும் , தெய்வீக சாஸ்திரிகளும் இந்த முறைமையை பக்தி வணக்கத்துடன் அனுசரிக்க வேண்டுமென்று கற்பித்துக் கொண்டு வந்தார்கள் என்கிரதர்க்குச் சற்றாகிலும் சந்தேகப்பட இடமில்லை . அர்ச் இராயப்பருக்குச் சீடராய் இருந்த அர்ச் சாந்தப்பர் என்னும் பாப்பனவர் பிரசித்திபடுத்தின அப்போஸ்தலிக்கக் கட்டளைகளின் எட்டாம் அதிகாரத்தில் சொல்லுகிறதாவது : சர்வேசுரனுடைய சமாதானத்தில் மரித்த நமது சகோதரருடைய ஆத்துமாக்களுக்கு ஆண்டவர் கிருபை செய்து அவர்கள் பாவங்களைப் பொறுத்து அவர்களைப் பிதாப் பிதாவான ஆபிரகாமுடைய மதியான மோட்சத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுவோமாக என்று சொன்ன பிற்பாடு அவர்களைக் குறித்து ஒரு நேர்த்தியான ஜெபத்தை எழுதி வைத்திருக்கிறார் .
நூற்றைம்பதாம் ஆண்டில் இருந்த தெர்த்துல்லியன் என்பவர் : பெண்ஜாதியானவள் செத்த தன புருஷனுடைய ஆத்துமத்திற்காக வேண்டிக் கொள்ள வேணுமென்கிற கவலையின்றி மறு கலியாணம் பண்ணுகிறது தகாது என்றார்
நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியான ஒரிஜென்என்பவர் எழுதினதாவது : இவ்வுலக யுத்தத்தில் இருந்து மறு லோகத்துக்குப் போகிறவன் உத்தரிக்க வேண்டி இருப்பதால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது கடனும் பிரயோசனமும் உள்ள வழக்கமாம் என்கிறார்
முன்நூற்றைம்பதாம் ஆண்டில் மகா சாஸ்திரியாகவும் அர்மேனியா தேசத்தில் சத்திய வேத விளக்காகவும் துலங்கின அர்ச் எபிரேம் என்பவர் சாகப் போகிற தருணத்தில் தனக்கு அருகே இருந்த தன் சீடரை நோக்கி :" என் பிரியமுள்ள பிள்ளைகளே , மரிக்கப் போகிற உங்களுடைய தகப்பனாராகிய எனக்குக் கடைசி உபசரணை செய்ய வாருங்கள் . என் சரீரத்துக்குப் பரிமளங்களைக் கொடுக்க வேண்டாம். ஆனால் நான் சர்வேசுரனிடத்தில் கிருபை அடையும் பொருட்டு தேவ சங்கீதங்களைப் பாடிக் கண்ணீர் சொரிந்து என் ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள் . இனிமேல் கோவிலில் நீங்கள் கூடும்போது எப்போதும் என்னை மறவாமல் எனக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும் என்றார்
அர்ச் அமிர்தநாதரோவென்றால் "எனக்கு மகனும் ஆண்டவருமான தேயோதோசியூஸ் இராயனுடைய ஆத்துமத்தை மோட்சத்தில் பிரவேசிக்கப் பண்ணுமளவும் என்னுடைய செபங்களையும் தபங்களையும் அழுகையையும் தவக்கிரியைகளையும் விட்டு விடுகிறதில்லை என்றார்
தமது தாயாரான அர்ச் மோணிக்கம்மாள் செத்த பிற்பாடு அர்ச் அகுஸ்தீன் எழுதின சுகிர்த வாக்கியமாவது :" எனக்கு மகிமையும் உயிருமாய் இருக்கிற என் சர்வேசுரா ! இப்போது என்னுடைய தாயாரின் புண்ணியங்களை உம்மிடம் விவரித்துப் பேசாமல் , அவளுடைய பாவங்களுக்காக உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன் . அவள் பேரில் இரக்கமாயிரும் , இரக்கமாயிரும் சுவாமி . அவளுக்குக் கடின தீர்வை இடாதேயும் . கர்த்தாவே , அவள் மரிக்கப் போகிற தருணத்தில் தன்னுடைய சரீரத்தை நினைக்கவுமில்லை , அதற்கு மகிமையான அடக்கத்தைப் பண்ண கேட்டதுமில்லை என்று நினைத்தருளும் . திவ்விய பூசையிலே பாவங்களைப் போக்குகிற பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறதை அறிந்து ,அந்த திவ்விய பூசையில் தன்னை நினைக்க வேண்டுமென்று மாத்திரமே கேட்டுக் கொண்டாள். அதனால் என் ஆண்டவரான சர்வேசுரா ! இப்போது நான் எழுதினவைகளை வாசிக்கப் போகிற உமது ஊழியரும் என் சகோதரருமான சகலரும் உமது அடியாளாகிய மோனிக்கா என்ற அம்மாளை நினைத்து அவளது ஆத்துமத்துக்காக வேண்டிக் கொள்ளும்படி கிருபை செய்தருளும் என்று எழுதி வைத்தார் . மேலும் இந்த மகா சாஸ்திரியானவர் மரித்தவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளை குறித்து ஒரு நேர்த்தியான புத்தகத்தையும் எழுதி வைத்தாராம்
இது அளவின்றி விரியுமென்று அஞ்சி , அர்ச் கிரிசோஸ்தோமுஸ் ,அர்ச் எரோணிமூஸ் , அர்ச் பசிலியார் , அர்ச் சிரில், அர்ச் கிரகோரியார் முதலான பழைய வேதபாரகர் எழுதினவைகளை விவரித்துக் காட்டாமல் முன் சொன்னது புத்தியுள்ளவர்களுக்குப் போதும் என்று நினைத்திருக்கிறோம் . இப்போது சொன்னபடி அப்போஸ்தலர் நாளில் இருந்தவர்கள் துவக்கி இந்நாள் வரைக்கும் வழங்கின வேதபாரகர் எல்லோரும் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது திருச்சபை முறைமை என்று எழுதியதை மறுத்தவர் ஒருவருமில்லாமையால் , அப்போஸ்தலர் படிப்பினையால் துவக்கி திருச்சபையில் வழங்கின முறைமை இதுவேயென்று சொல்லக் கடவோம் . ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லாமல் இருந்தால் செத்தவர்களுக்காகச் செய்யும் வேண்டுதல் அபத்தம் தானே ? ஆகையால் செத்தவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறது அப்போஸ்தலர் படிப்பினையால் வந்த திருச்சபையின் முறைமை எனக் கொள்ள , உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று அப்போஸ்தலர் படிப்பித்தது சத்திய விசுவாசமல்லோ ?
கடைசியில் சத்தியம் வழுவாத திருச்சபையின் விசுவாசம் அதன் மட்டில் ஏதென்று நன்றாக அறியத்தக்கதாக புளோரன்ஸ் என்கிற பட்டணத்தில் கூடின சகல மேற்றிராணிமார்களுடைய சங்கத்தில் பிரசித்தி படுத்தப்பட்ட தீர்மானத்தைக் கேட்கக் கடவீர்கள் :" மெய்யான மனஸ்தாபப்பட்டு பாவிகள் தவக்கிரியைகளினால் தங்களுடைய பாவங்களுக்கு இவ்வுலகத்தில் பரிகாரம் பண்ணும் முன்னே செத்தால் , அவர்களுடைய ஆத்துமங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளில் சுத்திகரிக்கப்படும் .அப்போது இந்த ஆத்துமாக்களை உயிருள்ள கிறிஸ்தவர்களுடைய மன்றாட்டினால் மீட்டு இரட்சிக்கக்கூடும் என்பது மெய்யான சத்தியம் என்கிறதினால், அவைகளைக் குறித்து திவ்விய பூசை பண்ணுகிறதும் , ஜெபன்களைப் பொழிகிறதும், பிச்சைகளை இடுகிறதும் , மற்ற தருமங்கள் செய்கிறதும் திருச்சபையினுடைய வழக்கமும் கட்டளையுமாமே . அதல்லாமலும் 1583 ஆம் ஆண்டில் திரிதெந்தென்னும் நகரில் கூடின மிகவும் பேர் பெற்ற சமஸ்த சங்கத்தில் ,மேற்றிராணிமார்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் திருச்சபையின் விசுவாசம அதுஎன்றும் சொன்ன பிற்பாடு இந்தப் பரம சத்தியத்தை குருக்கள் எல்லோரும் தங்கள் விசாரணைக் கிறிஸ்துவர்களுக்குக் குறைவின்றிப் போதித்து அவர்கள் அதைச் சரிவர ஒத்துக் கொள்ளும்படியாய்ச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்
கிறிஸ்தவர்களே ! இப்போது விவரித்துக் காண்பித்த உதாரணங்களினால் உங்களுடைய விசுவாசத்தில் சற்றாகிலும் தத்தளிக்காமல் நிலைத்து நிற்க வேண்டியதுமன்றியே மேன்மேலும் உங்களுடைய சுகிர்த மன்றாட்டுகளினாலும் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாளுக்கு ஆறுதல் வருவித்து உதவியைச் செய்யக் கடவீர்களாக.
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்.
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்.
நித்திய பிதாவே ! பெற்றோர் பந்துக்கள் சிநேகிதர் உபகாரிகள் முதளியவர்களைத் தக்க விதமாய் நேசித்து அவர்களுக்கு வேண்டிய நன்மை சேயைக் கற்பித்தருளினீரே , ஆகையால் எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் பற்பல உபசாரம் எங்களுக்குச் செய்தவர்களும் எங்கள் பந்துக்கள் சிநேகிதர் முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மை சந்தோசமாய் தரிசித்துக் கொண்டிருக்க தேவரீர் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது :
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பிச்சைக்காரருக்குப் பிச்சை கொடுக்கிறது
புதுமை.
எண்ணூறு வருஷத்துக்கு முன்னே வழுவாத பக்தி விசுவாசத்தாலும் தேர்ந்த சாஸ்திர படிப்பாலும் செய்த மட்டற்ற அற்புதங்களினாலும் பிரபலயமான பேர்பெற்ற அர்ச் பெர்னர்தூஸ் என்கிறவர் விளங்கிக் கொண்டிருந்தார் . அவர் உண்டு பண்ணி பிரசித்திபடுத்தின சுகிர்த புஸ்தகங்களில் அர்மாக்குப் பட்டணத்தின் மேற்றிராணியாரான அர்ச் மலக்கியாருடைய சரித்திரத்தை இன்பம் நிறைந்த சொற்களோடு எழுதி வைத்தார் . இந்த மேற்றிராணியார் தான் ஜீவித்த நாளெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பேரில் மிகுந்த பக்தி இரக்கமாய் இருந்து அவர்களுக்கு உதவி பண்ண தம்மாலே செய்யக் கூடுமான புண்ணியம் எல்லாவற்றையும் செய்வார் . அவர் குருவாகுமுன்னே மரித்த எளியவர்களுடைய ஆத்துமாக்களுக்கு ஆறுதல் வருவிக்கத்தக்கதாக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல்அவர்களுடைய அடக்கத்துக்கும் போவார் . சில சமயங்களில் அவர்களைத் தம் கரங்களினாலே வேண்டிய பணிவிடை செய்து அடக்கம் பண்ணுவார் . அவர் இந்த தர்ம கிரியைகளைச் செய்யுமிடத்தில் இவ்வுலக செல்வ மகிமையின் பேரில் மிகவும் பற்றுதலாய் இருந்த மதலேனம்மாள் என்னும் அவருடைய சகோதரியான ஒருத்தி அவரை நகைத்துச் சொன்னதாவது : உயர்ந்த கோத்திரத்திலே பிறந்த உமக்கு இந்த நீசத் தொழிலைச் செய்வது தகுமோ ? புத்தியில்லாதவரே , உமது பரம்பரை மகிமையை கெடுக்கிறவரே, இப்பேர்ப்பட்ட வேலையை விட்டு செத்தவர்கள் தங்கள் செத்தவர்களை அடக்கம் செய்ய விடுவீராக என்பாள் . இதையும் மற்ற ஆத்திரமூட்டும் வார்த்தைகளை அவள் சொன்னாலும் அவர் தான் துவக்கிய நற்கிரியைகளை விட்டு விட்டாரல்ல.
சில வருஷத்துக்கு பிற்பாடு அந்தப் பெண் பிள்ளையானவள் இன்னும் நல்ல வயதுள்ளவலாய் இருந்தாலும் தக்க ஆயத்தத்தோடு மரணத்தை அடைந்தாள் . ஆயினும் தன்னுடைய சகோதரரான மலக்கியார் ஆத்துமாக்களைக் குறித்து செய்த நற்கிரியைகளை நகைத்ததினாலே சகலத்தையும் அறிந்த சர்வேசுரன் அவள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மிகவும் உபாதிக்கப்படத் தீர்வை விதித்தார் . அர்ச் மலக்கியாரோவென்றால் வெகு நாள் அவளது ஆத்துமத்தைக் குறித்து திவ்விய பூசை பண்ணி செபித்து தவங்களை நடப்பித்த பிற்பாடு , இந்த ஆத்துமம் ஈடேறி இருக்குமென்று எண்ணி ஒன்றும் செய்யாது போனார் . ஒரு மாதம் கடந்த பின்பு இந்த ஆத்துமம் துக்க வருத்தத்தோடு கோவிலிலே பிரகாசிக்கக் கூடாத வகையாய் அவருக்குக் காணப்பட்டு :" தேவரீர் ஒரு மாதம் முழுவதும் என் ஆத்துமத்திர்க்காய்ப் பூசை பண்ணாததினிமித்தம் நான் படுகிற வாதனைகளில் ஒரு ஆறுதலும் இல்லை என்றது . இந்த அற்சிஷ்டவர் இந்த ஆத்துமத்திற்காய் மீண்டும் பூசை பண்ணத் துவக்கினார் . சில காலத்துக்குப் பிறகு இந்த ஆத்துமம் கோவிலில் பிரவேசித்தாலும் பீடத்துக்குக் கிட்ட வரக்கூடாமல் இருக்கிறதை மேற்றிராணியார் கண்டார் .ஆனதினால் அவர் அநேக தான தருமங்களைச் செஇததுமல்லாமல் , இந்த ஆத்துமத்துக்காக மகா பக்தியோடு திவ்விய பூசையும் செய்து கொண்டு வந்தார் . கடைசியிலே இந்த ஆத்துமம் மேன்மையும் மகிமையுமான வஸ்திரம் அணிந்து மிகுந்த சந்தோஷ பிரதாபத்தோடு உத்தரிக்கிற ஸ்தலத்தை விட்டு மோட்சத்துக்கு போகிறதை இவர் தரிசித்தார்
அவரோவென்றால் வெகு வருஷ காலத்துக்கு தேவ ஊழியங்களை நடத்தின பிற்பாடு தாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களின் திரு நாளிலே அர்ச் பெர்னர்தூஸ் என்பவர் உண்டு பண்ணின சபைக்குத் தலையான ஸ்தலமாகிய மடத்தில் பாக்கியமான மரணத்தை அடைந்தார் . அத்திருநாளில் செய்யப்படும் எல்லா பூசைகளிலும் தர்மங்களிலும் வேண்டுதல்களிலும் தனக்கு பங்கு கிடைக்கும் பொருட்டாக அந்நாளிலே அவர் சாக விரும்பினதுமல்லாமல் அம்மடத்தில் இருக்கும் சகலமான சந்நியாசிகள் தமது ஆத்துமத்தைக் குறித்து பூசை முதலான தவ தர்மங்கள் செய்வார்கள் என்பதினாலே அவ்விடத்தில் தாம் மரிக்க ஆசித்துக் கொண்டிருந்தார் . அப்படியே தேவ சித்தத்தால் அவருக்கு சம்பவித்தது என்று அர்ச் பெர்னர்தூஸ் எழுதினார் .
நல்ல வித்திலிருந்து அநேகங் கிளைகள் கிளைத்து அதிக பலனைக் கொடுக்குமாப்போல , மேற்சொன்ன புதுமையினால் உங்களுக்கும் அநேக ஞானப் பிரயோசனம் வரத்தகும்.
முதலாவது அர்ச் மலக்கியாரின் சகோதரியானவள் அவர் ஆத்துமாக்களைக் குறித்து செய்யும் நற்கிருத்தியங்களை இகழ்ந்து பழித்ததினாலே இளம் வயதில் செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு காலமாய் வேதனைப் பட்டாளென்று கேட்டீர்களே , அவளுக்குச் சம்பவித்தாற்போல உங்களுக்கும் வராதபடிக்கு உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகத் திருச்சபையில் செய்யப்படும் பூசை மோட்ச விளக்கு முதலிய சுகிர்த ஆச்சாரங்களை நீங்கள் புறக்கணியாமல் இருக்கிறதுமல்லாமல்அர்ச் மலாக்கியாரைக் கண்டு பாவித்து இவைகளைப் பக்தி விசுவாசத்தோடு அனுசரித்துக் கொண்டு வரவேண்டும்
இரண்டாவது அர்ச் பெர்னர்தூஸ் சொன்னது போல திவ்விய பூசையானது பாவங்களைப் போக்கவும் பேயினங்களை ஜெயிக்கவும் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மோட்சத்தில் சேர்க்கவும் மிகவும் வல்லமையை இருக்கிறது என்கிறதினால் திவ்விய பூசையை அடிக்கடி காண வேண்டியதுமன்றி கூடுமேயானால் அதைச் செய்விக்க வேண்டும் (காணிக்கை கொடுத்தல்).
மூன்றாவது மேற்சொன்ன புண்ணியவதியினுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்து மீட்டு இரட்சிக்க அர்ச் மலக்கியார் அத்தனை பூசை முதலான தர்மங்களைச் செய்து கொண்டிருக்கையில் , அநேக பெரிய பாவங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறவர்கள் நல்ல ஆயத்தத்தோடு செத்திருந்தாலும் வெகுகாலம் உத்தரிக்காமல் ஈடேறுவார்கள் என்று நினைக்கத்தக்கதாய் இல்லை . ஆனதினாலே செத்துப் போன உங்களுடையவர்களைக் குறித்து நீங்கள் செபித்துப் பிரயாசைப்பட்டு ஒரு போதும் அந்த புண்ணியத்தை விடக்கூடாதென்று அறியக் கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
நவம்பர் 3
Posted by
Christopher