அக்டோபர் 3

செபமாலையின் வரலாறு.

பத்து பத்தாகக் குறிப்பதற்கு உடல் ஜெபத்தை முன் காலத்தில் உபயோகித்தனர் என்று சொல்லப்பட்டது . வாய்ச் செபம் எனில் உதடுகளை அசைத்து உச்சரித்துச் சொல்லும் ஜெபம் . உரத்த சத்தமாகச் சொன்னாலும் சரி எவருக்கும் கேட்காவண்ணம் நமக்கு மட்டும் புரியும்படி உதட்டை அசைத்துச் சொன்னாலும் சரி , அது வாய்ச் செபம் . இவ்விதம் ஏற்கனவே மனப்பாடம் செய்திருந்த செபத்தைத் சொன்னாலும் ,அப்போதைக்கப்போது மனத்தில் எழுவதை உச்சரித்தாலும் அது வாய்ச் செபம் . ஒரு மடத்தில் உள்ள துறவிகள் கூடி சங்கீத மாலையைப் பாடுவது வாய்ச் செபம். தற்காலத்தில் செபமாலைக்கு அளித்திருக்கும் பலன்களை அடைய வேண்டுமானால் மற்றவர்களோடு சேர்ந்தோ தனித்தோ மந்திரங்களை வாய்ச் செபமாகச் சொல்வது அவசியம்.

பத்து மணி வாய்ச் செப முடிவைக் குறிக்க முதல் துவக்கத்தில் உடல் ஜெபத்தை வழங்கினர் என்று கண்டோம்.பின்னர் ஒவ்வொரு பத்துக்கும் இடையில் கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொன்னார்கள்
"ரோஜாமலர் பூங்கா " என்று பொருள்படும் மேல்நாட்டு மொழிகளில் தற்சமயம் வழங்கும் ரோசரி என்னும் மொழி எக்காலத்தில் பெரிதும் வழங்கினது என்று தெரியவில்லை .இதைப் பற்றி மேல்நாட்டில் ஒரு சரிதை பிரபலமாகி இருந்தது . ஓர் இளைஞன் பகதியாய்ச் செபமாலை சொல்லுவது வழக்கம் . ஒரு நாள் அவன் முன் தேவதாய் தோன்றினார் . அவன் ஒவ்வொரு முறை 'அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லுகையில் அவன் உதடுகளினின்று ஒரு சிவந்த ரோஜா வந்து அன்னையின் சிரசில் முடியாக அமர்ந்தது.

16ஆம் நூற்றாண்டில் தான் விசுவாச மந்திரத்தைச் செபமாலை நேரத்தில் சொல்லும் வழக்கம் உதித்தது . 15ஆம் நூற்றாண்டில் இருந்து சிலர் ஜெபமாலை சொல்லும் பொது , சமயத்துக்கு சமயம் மனோ ஜெபத்தையும் சொல்லத்தொடங்கினர். தொண்டை , நா , உதடுகளின் அசைவின்றியே உள்ளத்திலேயே இறைவனையோ தேவதாயையோ புகழ்வதும் அவர்கள் பெருமையைச் சிந்திப்பதும் துதிப்பதும் ,அவர்களைக் கெஞ்சுவதும் மனோ ஜெபமாம் . துவக்கத்தில் தாயின் சந்தோஷங்களையும், வியாகுலங்களையும், மகிமையையும் பொதுவில் தியானித்து வந்தனர் . இவ்வழக்கத்தை அர்ச் சாமிநாதர் மரித்து இரு நூற்றாண்டுகளுக்குப் பின் கர்த்தூசியர் சபையினரான ப்ரஷ்ஷிய நாட்டு டொமினிக் துவங்கினார் . ஒவ்வொரு பத்துக்குப் பின்னும் தேவ இரகசியம் சொல்லி அதைத் தியானிக்கும் வழக்கம் இன்னும் வெகுகாலத்துக்குப் பின் தான் சம்பிரதாய வழக்கில் நடைமுறையாயிற்று. செபமாலையில் முடி போல் தொங்கும் மூன்று மணிகளும் அவைகளில் இப்போது சொல்லும் செபமும் வெகுகாலம் சென்று தான் வந்தன . என்னவானாலும் இப்போது சொல்வது போல செபமாலை சொல்லும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டில் வந்ததெனச் சொல்லலாம்.

"அருள் நிறைந்த மரியே  " என்று சொல்கிற மந்திரமும் இப்போது நாம் சொல்வது போலவே முதல் தொடங்கி இருந்தது என்று எண்ணலாகாது . செபமாலை அல்லது மரியின் சங்கீத மாலை சொல்லிவந்த துவக்கத்தில் சம்மனசின் மங்களத்தை மட்டும் சொன்னார்கள் . "அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே " . சில நூற்றாண்டுகள் சென்று எலிசபெத்தம்மாளின் வாழ்த்துதளையும் சேர்த்துக் கொண்டனர். "அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே ; பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ; உம்முடைய திரு வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே " இயேசு என்ற சொல் இன்னும் சிலகாலம் சென்ற பின்னர் சேர்க்கப்பட்டது . "கனியான இயேசு " மேலும் பல நாள் சென்று "அர்ச் மரியாயே , சர்வேசுரனுடைய மாதாவே " என்கிற மன்றாட்டைத் திருச்சபை சேர்த்தது.

சரிதை.

செபமாலை எல்லா இடைஞ்சல்களையும் ஒழித்துக் கட்டும் என்னும் நம்பிக்கை 82 வயதுள்ள ஒரு வயோதிக மாதுக்கு நலனை அளித்தது . கம்யூனிசப் பேய் தாண்டவமாடும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஓடி ஒளிய ஆசித்தாள்.அங்கு நியூயார்க் என்னும் நகரில் அவரது மகனும் மருமகளும் இருந்தனர் .அனுமதிச் சீட்டு பெறுவதற்கு இடையூறாக இருந்த பற்பல விஷயங்களுள் ஒன்று அவளுக்கு உடல்நிலை சரியில்லை  என்னும் அபிப்பிராயமாம் . இதிலும் செபமாலை சொல்லி வெற்றி கொள்ளலாம் என்னும் நம்பிக்கை அவளுக்கு . "இரக்கமுள்ள நிலையம் " ஒன்று இருந்தது அங்கு. வேறொரு முறை அங்கு வைத்தியர்கள் அவளை சோதிக்கச் செய்தனர். எக்ஸ்ரே உடல் குறைகள் ஒன்றையும் காட்டவில்லையென வைத்தியர்கள் அவளுக்கு நல்ல செய்தி கொண்டு வந்தனர் . இதைக் கேட்டதும் அவள் ஒன்றும் பதிலளிக்காமல் ஏமாந்தவளைப் போல் ஏங்கி இருக்கவே , அதை மறுமுறையும் வைத்தியர் சொன்னார். " சும்மா இரு ஐயா.. உனக்குத் தெரியவில்லையா ? நான் ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன் " என்றாள் அந்த  வியாதியஸ்தி. செபமாலை தான் சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னொருமுறை மனுப் போடச் சொல்லினர்  .மனுப்போட்டாள் செபமாலை சொன்னாள் . இறுதியில் வெற்றி . 1953 ஆம் ஆண்டில் வெரோனிக்கா பூசணிக் என்ற அந்த மாது அனுமதிச்சீட்டு பெற்று அமெரிக்கா சென்றாள்

சாமிநாதர் ஜெபமாலையைப் பற்றி போதித்தார் .பெரிய பிரசங்கி என்று பேரெடுத்தார் . பல கலாசாலை கல்லூரிகளுக்கே முதன்மையான பாரீஸ் பட்டணத்து பேராலயத்தில் அருளப்பர் திருநாளன்று பிரசங்கம் வைக்க அவருக்கு அழைப்பு . பெரிய பெரிய சாஸ்திரிகள் வருவார்கள் என்று எண்ணி அர்ச் அருளப்பரைப் பற்றி அருமையான பிரசங்கம் ஒன்று தயார் செய்தார் ,பிரசங்கம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேவதாய் அவருக்கு தரிசனையாகி ஒரு புத்தகத்தை நீட்டி " மகனே டோமினிக், நீ தயாரித்த பிரசங்கம் அபாரம் ; நான் கொண்டு வந்திருக்கும் பிரசங்கம் அதைவிட அபாரம். வீண் சிலாக்கியத்தைத் தேடாதே . இலேசான நடையில் இப்புத்தகத்தில் உள்ளது போல் எளிய நடையில் சொல் " என்று கூறி மறைந்தார் . பிரசங்க மேடைக்கு வந்த போது, எதிரில் பெரிய பெரிய பட்டதாரிகளான கலாசாலை மாணவர்களும் , ஆசிரியர்களும் , பிரபுக்களும் குழுமி இருக்கக் கண்டார் . " நம் அருமையான பிரசங்கத்தைச் சொல்ல முடியவில்லையே , இப்போது சொல்லப் போவதை இவர்கள் இரசிக்கவா போகிறார்கள் என்ற எண்ணம் இலேசான பனிப்படலம் போல் அவர் மனதில் தோன்றியிருக்கக் கூடும் . ஜெபமாலையை பற்றி சாதாரண பொருளையே எளிய வடிவில் சொன்னார் . ஆண்டவள் அவருக்குத் தோன்றி " டொமினிக் , நீ உன் புத்தித் திறமையில் ஊன்றி நிற்காமல் , மனிதர் புகழ்ச்சியைத் தேடாமல் , மக்கள் ஈடேற்றத்துக்காக தாழ்மையாய் நடப்பதைக் கண்டு எனக்கு மனமகிழ்ச்சி . மக்கள் செபத்தின் மேல் பிரியங்கொண்டு , செபமாளையைச் செய்து வருவார்களேயானால்  இரக்கமுள்ள ஆண்டவர் அவர்களுக்கு வரப்பிரசாதத்தைக் கொடுப்பார் என்பது நிச்சயம் . ஆதலால் செபமாலையைப் பற்றி பிரசங்கம் வை " என்று சொல்லிப் போனார்.

செபம்.

முத்திப் பேறு பெற்ற கன்னிகையே , எல்லாச் செல்வாக்குள்ள அரசருக்கு அன்னையானவரே , பட்டப்பகலில் என்னைப் பார்த்தருளும் . இருண்ட இரவில் என்னைக் காத்தருளும் . செபமாலை மாதாவே , நான் நின்றாலும் , படுத்தாலும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாலும் எனக்குக் காவலாகவும் , பாதுகாவலாகவும் வாரும்.  நித்திரை நேரத்தில் என்னைக் காத்தருளும் . கன்னித் தாயான செபமாலை இராக்கினியே , என் கரத்தைப் பற்றி நான் உம் மகனோடு உறவு கொண்டாடச் செய்தருளும் . கெட்ட அரூபிகள் என்னை அண்டாதபடி அவர்களுக்கும் எனக்கும் இடையில் அருட்பிரசாத அரசர் நிற்பாராக. பாவிகளுக்கு அடைக்கலமான ஜெபமாலை மாதாவே , எல்லாப் பாவிகளிலும் கேடு கெட்டவனாகிய என்னிடத்தில் மனச்தாபத்தைப் பிறப்பித்தருளும். என் மன்றாட்டைக் கேட்டருளும் . எனக்காக மன்றாடும், நித்திய நாசத்திலிருந்து என்னை இரட்சியும். இறைவனின் சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் மோட்ச மகிமை சாவின் வேதனையிலிருந்து என் ஆத்துமத்தைப் பிரித்து ஏற்றுக்கொள்வதாக.

ஆமென்.