நவம்பர் 4

உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்பது உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியமாம்.

தியானம்.

மதிகெட்ட மனுஷன் ஒருவன் தன்னைப் பெற்ற தாய் தகப்பனைக் கோபித்து அடித்து வெட்டிக் கொலை செய்கிறான் . அவன் கட்டிக் கொண்ட பாவம் எவ்வளவு கொடியதென்று சொல்லிலும் நினைவிலும் அடக்கும் தன்மையல்ல . மற்றொருவன் ஒரு கத்தரிப்பிஞ்சு திருடுகிறான் . இவன் செய்த குற்றம் தாய் தகப்பனைக் கொன்றவன் பண்ணின துரோகத்திற்கு எவ்வளவு தூர வித்தியாசம் ! மோக வெறி கொண்ட சண்டாளனான பாவி ஒருவன் பல தந்திர உபாயங்களைத் தேடி தனது சிநேகிதனுடைய பெண்ஜாதியை மோசப்படுத்துகிறான் . இதை எல்லோரும் பெரிய தோஷ துரோகம் என்பார்கள் . வேறொருவன் தன் மனதிலே தோன்றிய ஆகாத விசாரங்களை உடனே தள்ளாமல் சொற்ப நேரம் அசத்தையாய் இருக்கிறான் . இவன் இப்படிப் பண்ணின குற்றம் அந்த சண்டாளன் பண்ணின துரோகத்துக்குச் சரி என்று சொல்வாருண்டோ ? ஒருவன் தன் விரோதியைக் கெடுக்க வேண்டும் என்கிற ஆசையினாலே அவன் பேரில் இல்லாத குற்றத்தைச் சாட்டி, பொய் சாட்சிகளை ஏற்படுத்தி பல முகாந்தரங்களையும் ,அத்தாட்சிகளையும் பிறப்பித்து அவனுக்கு மரண தீர்வை வரப்பண்ணுகிறான். இதை போல அநியாய துஷ்டத்தனம் வேறு உண்டோ ? மற்றொருவன் விளையாட்டுக்கு ஒரு சொற்பப் பொய்யைச் சொல்லுகிறான் . இந்தக் குற்றம் அந்த பாதக தோஷத்துக்கு நிகரான தோஷமென்று சொல்லுவார் உண்டோ ?

இது இப்படி இருக்க , எந்த மனுஷரும் பெரிய பாவங்களும் சொற்ப பாவங்களும் உண்டென்று சுபாவ புத்தியினால் அறிந்து சொல்லுவார்கள் என்பதற்க்குச் சந்தேகமில்லை . மேற்சொன்ன பாவங்களைக் கட்டிக் கொண்டவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யாமலும் உத்தம மனச்தாபப்படாமலும் திடீரெனச் சாகிறார்கள் . சர்வ நீதி நிறைந்த கடவுளாகிய சர்வேசுரன் அவர்களை என்ன செய்வார் ? ஒருமிக்க அவர்களை தீயெரி நரகத்தில் தள்ளி விடுவாரோ ? பெரிய தோஷ துரோகங்களைக் கட்டிக் கொண்டவர்களைப் போலவே அற்பப் பொய் அற்பத் திருட்டு என்கிற சொற்ப குற்றங்களையும் செய்தவர்களையும் தண்டிப்பாரோ ? அப்படிச் செய்வது அவரது நீதிக்கும் தயவுக்கும் ஏற்குமோ ? அது நியாயம் இல்லை என்று யாவருக்கும் காணப்படுகிற சத்தியமாமே . அதனால் மனம் திரும்பாத மூர்க்கரான பாவிகளை என்றென்றைக்கும் வேதனைப்பட நித்திய நரகத்துக்கு நீதியான சர்வேசுரன் அனுப்பும்போது சொற்ப குற்றங்களோடு செத்தவர்களை அப்படிச் சபித்துத் தள்ள மாட்டார் . ஆயினும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எந்த குற்றத்தொடும் ஒருவராவது பிரவேசிக்கக் கூடாது என்கிறதினாலே, இந்த சொற்ப பாவத்தோடு சாகிறவர்கள் அவ்விடத்துக்கு உடனே போகாமல் தாங்கள் சுத்தராகும் மட்டும் ஒரு நாடு ஸ்தலத்திலே நிறுத்தப்படுவார்கள் என்று சொல்ல வேண்டியுள்ளது . செத்த பிற்பாடு நரகத்தைப் பெருவிக்கும் பாவமும் மோட்சத்தை வருவிக்கும் புண்ணியமும் செய்ய இடமும் காலமும் இல்லாததினாலே , இந்த ஆத்துமாக்கள் கெட்டுப் போக மாட்டார்கள் . யாதொரு பேறு பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் . ஆகையால் தங்களுடைய குற்றங்களுக்குத் தக்க ஆக்கினைகளை அனுபவித்து சுத்திகரப்படுவார்கள் அல்லாமல் மற்றபடியல்ல . இந்த ஆத்துமாக்கள் ஆக்கினைப்படுகிற இடம் உத்தரிக்கிற ஸ்தலம் எனப்படும்

மேலும் சொற்பக் குற்றங்களோடு செத்தவர்களைத் தவிர அநேகர் சாவான பாவங்களைக் கட்டிக் கொண்ட பிற்பாடு பாவசங்கீர்த்தனத்தால் ஆனாலும் உத்தம மனஸ்தாபத்திலென்கிலும் இந்த பாவத்திற்கு மன்னிப்பை அடைந்த பின் சாகிறார்களே , அவர்கள் மட்டில் அறிய வேண்டிய சத்திய விசேஷமென்னவென்றால் : மனம் பொருந்திச் செய்த சாவான பாவத்தால் பாவிக்கு இரண்டு கேடுண்டாம் . அதாவது : பாவதோஷமும் அபராதக் கடனும் இவ்விரண்டுமாம் . பாவியானவன் பாவதோஷத்தால் இஷ்டப்பிரசாதத்தை இழந்து சர்வேசுரனுக்குத் துரோகி ஆகிறான் . அபராதக் கடனோவெனில் இரண்டுண்டாம் : நரகத்துக்குப் போக நித்திய அபராதக் கடனும் அநித்திய அபராதக் கடனும் நீங்காததினாலே என்றென்றைக்கும் நரகத்தில் வேகக் கடனுண்டாம் . அந்தப் பாவதோஷம் பாவசங்கீர்த்தனத்தினாலாவது மெய்யான மனஸ்தாபத்தினாலாவது தீர்ந்தால் நித்திய நரகத்திற்குப் போக இருக்கிற அபராதக் கடனும் தீரும்; ஆனாலும் இந்தப் பாவத்துக்குச் செலுத்த வேண்டிய அநித்திய அபராதக் கடன் தீராது .

இந்த அபராதத்தை இவ்வுலகத்தில் தான் செலுத்த வேண்டும் என்று இருந்தாலும் அநேகர் இதைச் சரிவரச் செலுத்தாமல் மரிக்கிறார்களே, அவர்கள் இஷ்டப்பிரசாதத்தோடே சாகிறதினால் நித்திய நரகத்துக்குத் தள்ளப்படுகிறதில்லை. ஆயினும் பாவத்துக்குச் செய்ய வேண்டிய அநித்திய அபராதத்தை அவர்கள் செலுத்தாமல் இருக்கிறதினால் அவர்கள் மோட்சத்துக்குப் போகிறதுமில்லை. அதனால் அவர்கள் தங்களுடைய பாவங்களுக்குச் செலுத்த வேண்டிய அபராதத்தையும் செலுத்துவதற்கு ஓரிடம் இருக்க வேண்டியதல்லவோ ? அதிலே முன் சொன்ன பிரகாரமே , பேறுபலன்களை அடையவும் , புண்ணியத்தைச் செய்யவும் காலமில்லாததினாலே தாங்கள் அனுபவிக்கும் வேதனைகளால் அந்த பரிகார அபராதத்தைச் செலுத்த வேண்டும் . இப்பொழுது சொன்னதெல்லாம் புத்தியுள்ள எந்த மனுஷனுக்கும் சரியான நியாயமுமாய் தேவ நீதிக்கும் தேவ கிருபைக்கும் ஏற்புடைய நடவடிக்கையுமாய்க் காணப்படுமல்லோ?

சர்வேசுரன் அருளிச் செய்த கற்பனைகளெல்லாம் இரண்டு கற்பனைகளுக்குள் அடங்கி இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமே . அதாவது : தேவ சிநேகமும் , பிறர் சிநேகமும், இவ்விரண்டு கற்பனையாம் . மற்றவர்கள் எல்லோரையும் தன்னைத்தான் நேசிப்பது போல நேசிக்க வேண்டுமென்று இருந்தாலும் , பந்து ஜனங்களையும் ,சிநேகிதர் உபகாரிகளையும் , மற்ற யாவரையும் அதிகமாய் நேசிக்க வேணுமல்லவா ? இந்த விசேஷ சிநேகமும் பொதுவாகப் பிறர் சிநேகமும் சாவினால் அற்றுப் போகுமோ ? அப்படிச் சொல்லவும் நினைக்கவும் கூடாது . அதிலே நாம் நேசித்துச் செத்தவர்களுக்கு யாதொரு நன்மையையும் சகாயமும் செய்ய கூடுமானால் இதை மகா பிரியத்துடனே செய்வோம் என்பதில் சந்தேகம் உண்டோ ? ஆண்டவருடைய மட்டில்லாத கிருபை தாளத்தை நம்பி அப்படிச் செய்யலாமென்று நாம் நினைத்து நம்முடைய ஜனங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகளை அமர்த்தவும் , குறைக்கவும் , முடிக்கவும் , வேணுமென்கிற ஆசையினாலே ஜெபங்களைப் பொழிவோம் , பிச்சைகளைத் தருவோம் . தவத்தைச் செய்வோம் . திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கப் பண்ணுவோம்

அப்படி அவர்கள் நம்முடைய ஜெப தப தான தருமத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்ச பேரின்பத்துக்குச் சேர்ந்த பிற்பாடு , நம்மை மறவாமல் சர்வேசுரனிடத்திலே நமக்காக வேண்டிக் கொள்ளுவார்கள் என்கிற நம்பிக்கையானது சந்தோசம் நிறைந்த சத்திய விசுவாசமாம் . இவ்வாறு இன்னும் இவ்வுலகத்திலே ஜீவிக்கிறவர்களும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறவர்களும் மோட்சத்திலே வாழுகிறவர்களும் தங்களுக்குள் விடாத சிநேகமும் முறியாத பந்தமுமாய் இருக்கிறார்கள் என்று புத்தியினாலே போதிக்கப்பட்ட சத்திய விசுவாசமென்று அறியக் கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்.

சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்.

செபம்.

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா ! ஜீவியர்கள் மேலும் மரித்தவர்கள் மேலும் செங்கோன்மை செலுத்தி விசுவாசத்தாலும் நற்கிரியைகளாலும் உமது பட்சமாவார்கள் என்று தேவரீர் முன் தெரிந்த சமஸ்தருக்கும் தயையுள்ளவராய் இருக்கிறீர் . நாங்கள் யாருக்காக செபித்து மன்றாடுகிறோமோ, அவர்கள் எல்லோரும் சரீர சம்பந்தத்தோடு இவ்வுலகில் இருக்கின்றவர்களாயினும் சரீரத்தை விட்டு மறுவுலகில் சென்றவர்களாயினும் சகல அற்சிஷ்டவர்களுடைய வேண்டுதலாலும் உமது நன்மைப் பெருக்கத்தின் கிருபா கடாட்சத்தினாலும் பாவப் பொறுத்தலை அடையத்தக்கதாக தேவரீரைப் பிரார்த்திக்கிறோம் சுவாமி ஆமென்.

இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது.

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஐம்பத்து மூன்று மணி செபம் சொல்லுகிறது.

புதுமை.

உத்தரிக்கிற ஸ்தலம் இல்லை என்றும் செத்த ஆத்துமாக்களுக்கும் உயிரோடிருக்கும் ஆத்துமாக்களுக்கும் பந்தமில்லை என்றும் இந்த ஆத்துமாக்களுக்கு மனுஷராலே ஆறுதல் வரப்போகிறதில்லை என்றும் துஷ்டப் பதித்தார் சொல்லுமிடத்தில் தங்களுடைய புத்தியீனத்தைக் கான்பிக்கிறதும் தவிர அவர்கள் மகா கொடுமையுள்ளவர்களாய் எண்ணப்படுகிறார்கள் என்கிறதற்குச் சந்தேகமில்லை . மரித்த தாய் தகப்பனுக்குப் பிள்ளைகளும், இறந்த புருஷனுக்குப் பெண்சாதியும், செத்த தமையனுக்கு தம்பியும் , உயிர்விட்ட சிநேகிதனும் , யாதொரு உதவி ஒத்தாசை பண்ணக் கூடாதென்று இந்த பதிதர் சொல்லும் பொய் பிரச்சாரம் எந்த மனுஷனுக்கு சரியென்றும் நியாயமென்றும் காணப்படும்?

ஸ்கோசியா இராஜ்ஜியத்தில் பெரும் செல்வந்தரான இரண்டு சகோதரிகள் இருந்தார்கள் . அவர்களுக்குள்ளே சரி சமானமான குணமும் , உற்ற நேசமும் இருந்ததினாலே இருவரும் ஒரே உயிர் போலவும் ஒரே சரீரம் போலவும் பிரிந்து போகாமல் எப்போதும் கூட இருப்பார்களாம் . ஆனால் இவ்விருவர் பதிதர் மதத்தில் பிறந்து வளர்ந்ததினாலே வேறொன்றையும் அறியாமல் அதைத் தான் கூடிய மட்டும் அனுசரிப்பார்கள் . ஒரு விசேச நாளிலே இவர்களும் சில சிநேகிதர்களும் ஒரு பெரிய விருந்து செய்து ஆசனத்தில் உட்கார்ந்து சந்தோசமாய்ச் சாப்பிடும்போது இளையவன் திடீரென்று மூர்ச்சையாய் விழுந்து செத்தான் . செத்தவனுடைய அண்ணனானவன் தன் தம்பியினுடைய உயிரில்லாத பிரேதத்தைக் கண்டு சொல்லில் அடங்காத துக்கம் அனுபவித்ததுமல்லாமல் அதற்கப்பால் ஒரு சந்தோசமும் மன இரம்மியமும் அற்ப ஆறுதலும் அடைந்தானில்லை . இரவும் பகலும் தன் தம்பியின் ரூபத்தைக் கண்டாற்போலே கவலைப்பட்டு பிரலாபித்து ஓயாமல் கண்ணீர் சொரிவான் . தம்பியானவன் மறு லோகத்தில் நன்றாய் இருக்கிறானென்று நம்பிக்கை இருந்ததால் கொஞ்சம் பிழைப்பேனென்று அண்ணன் நினைத்தாலும் , பதித்த மார்க்கத்தை உண்டு பண்ணின லூத்தர் என்கிறவன் உத்தரிக்கிற ஸ்தலம் இல்லை என்று தள்ளி இருந்ததினாலே பதிதனான இந்த மனுஷனுக்கு நம்பிக்கை இல்லாதிருந்தது

அதனால் அவன் தன்னுடைய தம்பி யாதொரு ஆயத்தமில்லாமல் திடீர் மரணமடைந்து நீதியுள்ள சர்வேசுரனுடைய தீர்வைக்குப் போனதை நினைக்கும் போது அவனுக்கு அதிக பயமும் கவலையும் கஸ்தியும் உண்டாயிருந்தது . நாள் பட இந்த நினைவினாலே அவனுக்கு பகலிலே அமைதியும் இரவிலே நித்திரையும் மனதிலே சந்தோசமும் இல்லாததினால் அதிக வருத்தப்பட்டு வியாதியாய் விழுந்தான் . அப்போது அவனுடைய சிநேகிதரும் , பந்து ஜனங்களும் அவனுக்குப் பல பராக்குகளும் வெவ்வேறான சிந்தனைகளும் வரும்படி வெளியூருக்கு அனுப்பினார்கள் . பிரான்சு இராஜ்ஜியத்திற்கு வந்து அதில் ஒரு குருசாமியாரைத் தற்செயலாய்க் கண்டு அவருக்குத் தன் தம்பி செத்த வகையையும் அதனாலே தனக்கிருக்கும் தீராத கவலையையும் அறிவித்து " உங்களுக்காவது நம்பிக்கையுண்டு , செத்த உங்கள் சிநேகிதரைக் குறித்து நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறீர்களே , அய்யய்யோ ! எங்களுக்கு அந்த நம்பிக்கையும் இல்லை ,அப்படி வேண்டிக் கொள்ளுகிறதர்குப் பலமும் இல்லை " என்றான்

குருசுவாமியார் அவனுக்கு இரங்கி நல்ல வார்த்தைகளைச் சொல்லி :" நீரே ஏக சத்தியமான கத்தோலிக்க மதத்தைக் கைக்கொள்ளுவீரேயானால், உமக்கு நம்பிக்கை வரும் , செபத்தினாலே உருவாகும் திருப்தியும் கிடைக்கும் என்றார் . இதைக் கேட்டு அந்த நல்ல வாலிபன் தனக்கு நம்பிக்கையும் சந்தோசமும் வரும் பொருட்டு சத்திய வேதத்தினுடைய நியாயங்களையும் திருஷ்டாந்தங்களையும் படித்து நன்றாகக் கற்றுக் கொண்ட பின் குருசுவாமியிடத்திலே வந்து :" எல்லாம் தீர்மானித்தாயிற்று . நான் இப்போது கத்தோலிக்க கிறிஸ்தவனாய் இருக்கத் தீர்மானித்திருக்கிறேன் . என்னுடைய தம்பி ஆத்துமத்தைக் குறித்து நான் வேண்டிக் கொள்ளக் கூடும்போது என்னுடைய நிர்பாக்கியம் நீங்கும் அவனுக்கு மோட்ச பாக்கியத்தை தரவேண்டுமென்று தினம் தினம் ஆண்டவரைப் பிரார்த்தித்துக் கொண்டு சீவிப்பேன் . மெய்யாகவே திருச்சபையானது மனுஷனுடைய சுபாவத்தையும் குணா குணங்களையும் நன்றாய் அறிந்ததினாலே இவ்வுலகத்தின் எல்லையிலே உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று போதித்துக் கொண்டு வருகிறது . அதிலே என் தம்பியினுடைய ஆத்துமமும் ஒருவேளை இருக்கக் கூடுமே , அவனுக்காக எப்போதும் வேண்டிக் கொள்ளுகிறதே எனக்கு எவ்வளவோ ஆறுதலாய் இருக்கும் அதனாலே நான் கிறிஸ்தவனாய் இருக்கத் தீர்மானித்தேன் என்றான் . இவ்வாறு அவன் சத்திய வேதத்தைக் கைக் கொண்டு தன் ஆத்துமத்திற்குச் சந்தோசமும் நம்பிக்கையும் அடைந்து நல்ல கிறிஸ்தவனாக நடந்தான்

செட்டியானவன் எந்த வியாபாரத்திலும் இலாபம் தேடிக் கொண்டு வருகிறதைப் போலே நீங்களும் கிறிஸ்தவர்களே ! மேற்சொன்ன புதுமையினாலே உங்களுக்கு ஞான பிரயோசனம் வர வேண்டும்

முதலாவது சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரன் உங்களை பதிதருடைய மார்கத்திலே பிறக்கவொட்டாமல் சத்திய வேதத்தில் பிறந்து வளர்ந்து நிலைகொள்ளக் கிருபை செய்தாரென்று நினைத்து அவருக்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் பண்ண வேண்டியதுமல்லாமல் , இந்த சுகிர்த வேதத்தின் கட்டளை எல்லாவற்றையும் தாழ்ச்சியுடன் அனுசரிக்க வேண்டியது

இரண்டாவது உங்களுடைய தாய் தகப்பனாவது மகன் மகளாவது புருஷன் பெண்ஜாதியாவது அண்ணன் தம்பியாவது சாகிறபோது வேதத்தை அறியாத புறவினத்தார் போலவும் நம்பிக்கையில்லாத பதிதரைப் போலவும் அதிக கஷ்டப்பட வேண்டாம் . உத்தரிக்கிற ஸ்தலத்தினின்று உங்களுடைய ஜனங்களின் ஆத்துமத்தை இரட்சிக்கக் கூடுமென்று அறிந்ததினாலே அவர்களைக் குறித்து செப தப தான தருமங்களைச் செய்யுங்கள்

மூன்றாவது உங்கள் பந்துக்கள் சிநேகிதர்களுடைய ஆத்துமாக்கள் எவ்வளவு காலம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உபாதிக்கப்படுவர்கள் என்று தெரியாததினாலே மேற்சொன்ன நல்ல வாலிபன் தான் ஜீவிக்கும் நாள் எல்லாம் தன்னுடைய தம்பியின் ஆத்துமத்தைக் குறித்து செபிக்கிறேன் என்றதுபோல நீங்களும் உங்கள் ஆயுள் நாளெல்லாம் உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களுக்காக வேண்டிக் கொள்ள வேண்டுமென்று அறியக் கடவீர்களாக

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.