ஜோ க்ரேக்கோ என்பவர் தம் கனவில் ஒரு சாலையில் பாத்ரே பியோவைச் சந்தித்து, நோயுற்றிருந்த தம் தந்தையைக் காப்பாற்றும்படி கேட்டார். அந்தக் கனவுக்குப் பின் அவரது தந்தை தீடீரென நலமடைந்தார். பாத்ரே பியோவுக்கு நன்றி செலுத்துவதற்காக, ஜோ ரோட்டண்டோவுக்குச் சென்றார் நான்கு நாட்கள் காத்திருந்தபின், இறுதியில் ஒரு வழியாக பாத்ரே பியோவிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய அவரால் முடிந்தது. இந்த சந்திப்பை ஜோ பின்வருமாறு விளக்குகிறார்:
“ பாத்ரே பியோ என்னைப் பார்த்ததும், “ உன் தந்தை இப்போது நலமாக இருக்கிறார் அல்லவா?” என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில் நான் ரோட்டோண்டோவுக்கு இதற்கு முன் வந்ததில்லை. அங்கிருக்கும் யாரையும் எனக்குத் தெறியவும் தெறியாது. ஆகவே நான் ஒரு மலைப்போடு என் மனதில், “ தந்தாய், அது நீங்கள்தானா? என்றேன். உடனே அவர் பதிலுக்கு, “ கனவில், கனவில் “ என்றார். நான் நடுங்கத்தொடங்கினேன். “ஆம் தந்தாய் கனவில்தான் உங்களைச் சந்தித்தேன் “ என்று நான் சொன்னேன். பாவ மன்னிப்பு வழங்கும் முன் அவர் என்னிடம் :
“ ஆனால் நீ சொல்ல வேண்டிய இன்னும் ஒரு பாவம் இருக்கிறது “ என்றார். நான் பதறிப்போய், “ எனக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை “ என்றேன்.
அப்போது பாத்ரே பியோ நான் செய்த ஓர் அருவருப்பான பாவத்தை மிக நுட்பமாக விளக்கிக் கூறினார். அச்சமையத்தில் நான் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவர் கூறியவற்றைக் கேட்டு கூனிக் குறுகிப்போன நான், அப்படியே நிலம் பிளந்து என்னை விழுங்கி விடாதா என்று நினைத்தேன். அந்த அளவுக்கு நான் தர்ம சங்கடமான உணர்வை அடைந்திருந்தேன்.
அதன் பின் நான் அவரிடம் : “ ஆம் தந்தாய், இப்போதுதான் எனக்கு இதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நான் அந்தப் பாவத்தைச் சொல்ல மறந்து விட்டேன். அதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன் “ என்று நான் கூற, அவர் என்னிடம் : “ நீ 1941-ல் இருந்து ப்ளாக்பர்ன் என்னுமிடத்தில் செய்த அந்தப் பாவத்தைச் சுமந்து கொண்டு இருந்திருக்கிறாய் “ என்றார்.
அதன்பின் எனக்குப் பாவ மன்னிப்பளித்தார். நான் எழுந்து செல்ல முயன்ற போது அவர் மீண்டும் என்னிடம்: நீ இன்னும் ஒன்றை மறந்துவிட்டாய் “ என்று புண்ணகையோடு கூறினார். நான் அவரிடம் : ஓ, இல்லை தந்தாய், நான் எதையும் மறைக்கவில்லை “ என்றேன். அவர் ஏதோ ஒரு பாவத்தைப் பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் உன் சட்டைப் பையில் பார் என்றார் “ என்றார். ஆகவே நான் என் சட்டைப் பையிலிருந்து என் ஜெபமாலையை எடுத்து அவரிடம் தர, அவர் அதை ஆசீர்வதித்து என்னிடம் திருப்பித்தந்தார்”
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144, பிரதர் மகிபன் Ph: 9940527787
ஜெபிப்போம்.. ஜெபிப்போம்... ஜெபமாலை...
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !