உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகளைக் குறிக்கிற விளக்கமாவது.
தியானம்.
உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்றும் அதில் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வேதனைப்படுகிறதென்றும் முன் செய்த தியானங்களில் எடுத்துக் காட்டப்பட்டது . இப்போது நீங்கள் இந்த ஆக்கினைகளுக்குப் பயந்திருக்கவும் ,அவைகளை வருவிக்கும் பாவங்களைச் செய்யாதிருக்கவும் , இந்த ஆக்கினைகளை அனுபவிக்கும் ஆத்துமங்களின் பேரில் இரக்கமாய் இருக்கவும் , இந்த வேதனைகள் எப்பேர்ப்பட்டதென்று ஆராய்ந்து தியானித்துப் பார்க்கக் கடவீர்கள்
ஒரு நாள் சில புத்தியில்லாத வாலிபர் , நாங்கள் நரகத்துக்குப் போகாமலிருந்தால் மாத்திரம் போதும் , உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகிறது பாரமல்ல என்று சொல்லுவதை அர்ச்.அகுஸ்தீனூஸ் கேட்டு ஞான கோபம் கொண்டு " நிர்பாக்கியரே ! அப்படிப் பேசாதீர்கள் . இவ்வுலகத்தின் வாதை வேதனைகள் எல்லாவற்றையும் கூட்டினாலும் , இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளுக்கு நிகரல்லவென்று அறியக் கடவீர்கள் " என்று வற்புறுத்திச் சொன்னார் . இந்த ஒரு சொல்லிலே எவ்வளவு உண்மை இருக்கிறது என்று கொஞ்ச நேரம் தியானிக்கக் கடவோம்
இவ்வுலகத்திலே மனுஷனை உபாதிக்கும் வியாதிகள் எத்தனை என்றும் எப்பேர்பட்டதென்றும் எவ்வளவு வருத்தமுள்ளதென்றும் யாராலே சொல்லக் கூடும் ? நேத்திர வலியும், காது வலியும் , பல் வலியும் வயிற்று வலியும் ,சூலைக் கட்டும் ,பக்க வாதமும் , குஷ்ட ரோகமும் , பலவகைப் பிளவையும் , இது முதலான வியாதிகளுக்குக் கணக்குண்டோ ? இந்தச் சகலமான வியாதிகளினாலே நேரிடும் வருத்தங்கள் எல்லாவற்றையும் ஒழுங்குடன் ஒரு மனுஷன் அனுபவிக்க வேண்டுமென்றால் அவைகளை பொறுக்கமாட்டான் என்று எல்லாரும் நினைப்பார்கள் அல்லவோ ? ஆயினும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் இப்போது சொன்ன வருத்தங்களுக்கு எல்லாம் மேற்பட்டதாய் இருக்கிறது என்று வேத சாஸ்திரிகள் நிச்சயிக்கிறார்களாம் . இவைகளைப் பொறுத்துக் கொள்ளுவீர்களோ , சொல்லுங்கள் .
அதல்லாமலும் அர்ச். வனத்து சின்னப்பரும் , பெரிய அந்தோணியாரும் , இரண்டு மாக்காரியாரும் சிமையோனும் மற்றப் பேர் பெற்ற தபோதனரும் , ரிஷிகளும் வெகு வருஷமாய் நடத்திய தவக் கிரியைகளையும் அனுசரித்த ஒருசந்திகளையும் தரித்துக் கொண்ட முள் ஒட்டியானங்களையும் தாங்கள் அடித்துக் கொண்ட கசைகளையும் புசித்த கொஞ்சம் ஆகாரங்களையும் நினைக்குமிடத்தில் இதெல்லாம் மகா பெரியவைகளென்றும் மகா கடினமென்றும் ஒருவராலேயும் பொறுக்கப்படாத தவமென்றும் எண்ணுவீர்கள் .
ஆயினும் இவையெல்லாவற்றையும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளோடு ஒப்பிட்டால் கொஞ்சமும் சொற்பமும் எளிதுமான தவமென்கிறதற்குச் சந்தேகமில்லை. ஒரு மணி நேரம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதைப்படுகிறதிலும் நூறு வருஷ காலம் கடின தபசு பண்ணி ஒருசந்தியாய் இருக்கிறதே பெரிய ஆறுதல் போலக் காணப்படுமென்று ஒரு சாஸ்திரி சொல்லி இருக்கிறார். திருச்சபை கற்பித்த ஒருசந்தி நாட்களை அனுசரிக்கிறதே பெரிய வருத்தமென்று எண்ணி வேறே தவம் செய்யாத நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளை பொறுத்துக் கொள்ளுவீர்களோ என்ன , சொல்லுங்கள் .
மேலும் வேத சாட்சிகள் புறமதத்தாரால் அனுபவித்த எவ்வித குரூரமான வேதனைகளையும் நினைக்க வேண்டும் . அவர்கள் சிறைச்சாலைகளிலும் நீதிஸ்தலங்களிலும் அகோரமாய் அடிக்கப்பட்டு , இரும்பு ஆயுதங்களால் சரீரம் ஆதியந்தமும் கிழிக்கப்பட்டு , உருகின ஈயத்தைக் குடிக்கக் கொடுக்கப்பட்டு , புலி , கரடி ,சிங்கம் முதலான துஷ்ட மிருகங்களுக்கு இரையாய் தள்ளப்பட்டு , அவயங்கள் எல்லாம் துண்டு துண்டாய் அறுக்கப்பட்டு அகோரமாய் எரியும் நெருப்புச் சூளையிலே போடப்பட்டு , சாகுமுன்னே ஆயிரந்தடவை செத்து , அவர்கள் அவ்வளவான வாதிகளை எப்படிப் பொறுத்தார்கள் என்று சொல்லுவாருண்டோ ? கண்டுபிடிப்பாருண்டோ?
ஆயினும் இந்த பிரதாபமுள்ள வேத சாட்சிகள் அனுபவித்த வேதனைகள் எல்லாவற்றையும் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனையின் முன்பாக அது நிழலென்றும் சித்திரமென்றும் சொல்லி இருக்கிறது . சத்தியமாகவே இந்த வேதனைகள் மனுஷனுடைய புத்திக்கு மேற்பட்டதாய் இருக்கிறதினாலே இவைகளுடைய அகோரத்தை மனுஷனானவன் கண்டு பிடிக்க முடியாதென்று அர்ச் அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார் .இது இப்படி இருக்க , ஒரு கொசுக் கடிக்கும் கொஞ்சம் குளிர் வெயிலுக்கும் பயப்படுகிற நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளைப் பொறுப்பீர்களோ சொல்லுங்கள்
கடைசியில் நித்திய நரகத்தில் சபிக்கப்பட்ட பாவிகள் அனுபவிக்கும் ஆக்கினைகளுக்கும் , உத்தரிக்கிற ஆத்துமங்கள் படும் வேதனைகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தவிர வேறே வித்தியாசமில்லை என்று அர்ச் சிரில்லூஸ் என்பவரும் அர்ச் தோமாஸ் என்கிறவரும் நிச்சயித்தார்களாமே. அந்த வித்தியாசம் ஏதென்றால் :
உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனை முடியும் , நித்திய நரகத்தின் ஆக்கினை ஒருபோதும் முடியாது. அது இப்படி இருக்கையில் நரகத்துக்குப் பயப்படுகிற நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் பயப்படாமல் போகிறது எப்படி ? அதனுடைய வேதனைகளைப் பொறுத்துக் கொள்ளுகிறதற்குத் திராணி உண்டோ சொல்லுங்கள்
கிறிஸ்துவர்களே ! இப்போது நான் புன்சொற்களால் விவரித்ததைக் கண்டு பயந்து அஞ்சி ,ஐயோ ஐயோ என்பீர்களல்லாமல், அவ்வளவான வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் பேரில் மிகுந்த இரக்கமாய் இருப்பீர்கள் என்று நம்பி இருக்கிறேன் . ஆயினும் இந்த தியானத்தால் உங்களுக்கு வேறே ஆதாயம் வர வேணும்
முதலாவது : இத்தகைப்பட்ட வாதைகளையும் வருத்தங்களையும் வருவிக்கும் சொற்ப பாவங்களை மிக கவனத்துடனே விலக்க வேண்டியது. அநேகர் சொல்லுவது போல இது சொற்பப் போயும் சொற்ப திருட்டும் சொற்ப பாவமும் என்று நினைக்க வேண்டாம் . சொல்லவும் வேண்டாம் . வரும் தண்டனையால் ஒரு குற்றத்தின் கனம் தெரியப்படுமல்லோ ? இந்தப் பாவங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் மேற்காண்பித்த ஆக்கினைகளை நீதியுள்ள சர்வேசுரன் கட்டளையிடும் போது இந்தப் பாவங்கள் சொற்பமென்று எண்ணுவீர்களோ என்ன ?
இரண்டாவது: நீங்கள் சிறுவயதிலும் வாலிப வயதிலும் நல்ல வயதிலும் கட்டிக் கொண்ட சாவான பாவங்களை நினைத்துக் கொள்ளுங்கள் . நல்ல பாவசங்கீர்த்தனத்தைச் செய்து இவற்றுக்காக மன்னிப்பை அடைந்திருப்பது மெய்தான் .ஆயினும் இவற்றுக்கான பரிகாரங்கள் என என்ன செய்தீர்கள் ? சொல்லுங்கள் . இவ்விஷயத்தில் உங்களை நீங்களே ஏய்க்க வேண்டாம் . இவ்வுலகத்தில் அதற்குத் தகுந்த பரிகாரத்தைச் செய்யாதிருப்பீர்களேயானால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் மேற் சொன்ன வாதனைகளை எத்தனை வருஷம் எத்தனை நாள் அனுபவிக்க வேண்டியதாய் இருக்குமென்று தியானித்துக் கொள்ளுங்கள் . அதனாலே இப்போது இந்தப் பரிகாரத்துக்கு அதிக ஜெபம் பண்ணுங்கள் . அதிகப் பிச்சை கொடுங்கள் . அதிக தபசு செய்யுங்கள் . அதிக பிரயாசையோடு திருச்சபையின் பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள்
மூன்றாவது : இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு வியாதியினாலேயும் பசி தாகத்தினாலென்கிலும் எதிரிகளுடைய விரோதத்தினாலேயாயினும் எவ்வித துன்ப வேதனை வருத்தம் வருகிறதென்று உங்களுக்கு நன்றாய் தெரியுமே .உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகளைச் சரியாய் நினைத்தால் இவைகளெல்லாம் சொற்பமென்று கருதி அமைந்த பொறுமையோடும் தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிதலோடும் சகித்து பொறுத்துக் கொள்ளுவீர்கள் . இப்படிக்கு இந்த வருத்தம் கஷ்டமெல்லாம் கொஞ்ச வருத்தம் போல் காணப்படுமல்லாமல் இவைகள் உங்கள் பாவங்களுக்கு நல்ல பரிகாரமென்று அறியக் கடவீர்கள்
இன்றைய தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்.
சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்.
கிருபை நிறைந்த சர்வேசுரா ! மரணத்தை அடைந்த எங்கள் சகோதரரைக் கிருபையாய்ப் பார்த்தருளும். அவர்களுடைய ஆத்துமாக்களை பிதாப் பிதாக்களான ஆபிரகாம் ,ஈசாக்கு , யாக்கோப் என்பவர்களோடு என்றென்றைக்கும் வாழும் மோட்சவாசிகளினடத்தில் சேர்த்தருளும் . அழுகை ,துக்கம் , வருத்தம் அறியாத ஸ்தலமான பேரின்பம் நிறைந்த உம்முடைய பரகதியில் இந்த ஆத்துமாக்களை வைத்துக் கொள்ள வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்
ஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியை.
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பிச்சைக்காரிக்குப் பிச்சை கொடுக்கிறது
புதுமை.
தொலோமை என்னும் ஆஞ்சலேம்மாள் உயர்ந்த கோத்திரமான தாய் தகப்பனிடத்தில் பிறந்து இளம் பிராயத்தில் முதலாய் எல்லாப் புண்ணியங்களையும் அனுசரித்துக் கொண்டு வந்தாள். பின்பு தேவ சிநேகத்தில் மேன்மேலும் வளரும்படிக்கு அர்ச் சாமிநாதர் உண்டு பண்ணின கன்னியாஸ்திரீகளுடைய சபையிலே பிரவேசித்தாள்.
அம்மடத்தில் அவள் மற்ற கன்னியாஸ்திரீகளுக்கு நன்மாதிரிகையும் சகல புண்ணியங்களின் கண்ணாடியைப் போல் இருந்தாலும் சில சொற்ப குற்றங்களை அசட்டையிலே பண்ணுவாள் . இதிப்படி இருக்கையிலே , ஒரு நாள் கடின வியாதியாய் விழுந்து அவஸ்தையாகிச் சாகக் கிடக்கும்போது ஒரு தரிசனத்தைக் கண்டாள். அதெப்படியெனில் : உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பயங்கரமான வேதனைகள் எல்லாவற்றையும் பற்றும் பற்றாய்த் தரித்து , இந்த ஸ்தலத்திலே தனக்கு நியமித்திருக்கிற இடத்தையும் கண்ணால் காண்கிறார்போலே தெளிவாய்க் கண்டாள்.
இந்தக் காட்சியினாலே அவளுக்கு வந்த பயம் எம்மாத்திரம் என்றால் , விழித்த பிற்பாடு அவளது சரீரமெல்லாம் திகிலடைந்தாற்போல் நடுநடுங்கி துடி துடித்து வலிப்பெடுத்து அமரக்கூடாதிருந்ததாம் . அதற்கப்பால் அவள் சௌக்கியத்தை அடைந்து ஓர் அற்ப சந்தோசம் தேடாமலும் ,சொற்ப ஆறுதல் முதலாய் விரும்பாமலும் , எவ்வித தவக்கிரியைகளையும் செய்து கொண்டு வருவாள் .
மேலும் அச்சபையில் வழங்கின ஒருசந்திகளும் முள் ஒட்டியானங்களும்,சாட்டை கசைகளும் , நெடும் ஜெபங்களும் அவளுக்குப் போதாமல் தன்னை உபாதிக்கும்படி மற்ற எவ்வித உபாதைகளையும் தேடிக் கொண்டிருப்பாள் . சில சமயங்களிலே தன்னை நெருப்பினால் சுட்டெரித்துக் காயப்படுத்துவாள். சில சமயங்களிலே இரத்தம் ஓடுமட்டும் முட்சேடிகளிலே விழுந்து புரளுவாள் . அநேக நாளில் யாதொரு ஆகாரமும் புசியாது இருப்பாள் . அப்படியே செய்யக்கூடுமான தபசெல்லாம் பண்ணுவாள் . அவள் நடத்துகிற அந்த பயங்கரமான தவக்கிரியைகளைக் கண்டு மற்ற கன்னியாஸ்திரிகள் பிரம்மித்து , அப்படிச் செய்வது மகா கொடுமை என்றும் ஏற்காத காரியமென்றும் சொல்லுவார்கள் .
.அதற்கு அவள் மறு உத்தாரமாக மறு உலகத்தில் சொற்ப பாவங்களுக்கும் சொற்ப குற்றங்களுக்கும் நியமித்த வேதனைகளுடனே இவற்றை எல்லாம் ஒப்பிட்டால் ஒன்றுமில்லாதது போலக் காணப்படும் . இவையெல்லாம் ஆயிரம் வருஷம் அனுபவித்தாலும் உத்தரிக்கிற ஸ்தலத்தை விட எளிதாய் இருக்குமே என்பாள் . ஆகையினாலே அவள் சாகும் பரியந்தம் தனது தவக்கிரியைகளில் ஒன்றும் குறையாமல் செய்து பெயர் பெற்ற அற்சிஷ்டவளானாள்.
இந்தப் புதுமையைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! இப்போது என்ன நினைக்கிறீர்கள் ? நீங்கள் யாதொரு பயமும் இல்லாமல் கட்டிக் கொள்ளுகிற பற்பல சொற்ப குற்றங்கள் கொஞ்ச பொல்லாப்பென்றும் அவைகளுக்கு வருகிற உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் சொற்ப வேதனைகள் என்றும் நினைப்பீர்களோ ? இவ்விராஜ்ஜியத்தில் பழமொழியாகச் சூடு கண்ட பூனை அடுப்பையண்டாதென்று சொல்லுகிறார்களே . முன் சொன்ன கன்னியாஸ்திரியானவள் உத்தரிக்கிற ஸ்தலத்தைக் கண்ட பிற்பாடு அந்த சொற்ப பாவங்களுக்கு அஞ்சி நடந்ததுமல்லாமல் , அகோர தவக்கிரியைகளையும் செய்தது போலே நீங்கள் இனிமேல் எந்தப் பாவங்களையும் விலக்கிக் கூடினமட்டும் தவத்தைச் செய்ய வேண்டுமென்று அறிய கடவீர்களாக
மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது
நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
நவம்பர் 5
Posted by
Christopher