நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி நீரோ
காலம் : கி.பி. 64 - 68.
ஆதியிலிருந்தே யூதர்கள் திருச்சபையை உபத்திரவப் படுத்தினார்கள். ஆயினும் ஒரு நாட்டின் அரசாங்கம் அதன் அரசனுடைய அதிகாரத்தைக் கொண்டு கிறிஸ்துவின் ஞான அரசாட்சியை நேருக்கு நேர் முதன் முதல் எதிர்த்தது நீரோ என்ற உரோமைச் சக்கரவர்த்தியின் தலைமையில் தான்.
உரோமை நகரம் எரிந்த நிகழ்ச்சி சரித்திரப் பிரசித்தமானது. அதற்குக் காரணமாயிருந்தவன் நீரோ மன்னன். ஆனால் அவன் கிறிஸ்தவர்களே காரணம் என்றான். உரோமையின் அஞ்ஞான தேவதைகளை அவர்கள் வணங்காததுதான் நகரம் தீப்பிடிக்கக் காரணம் என்று திரித்துக் கூறி, கிறீஸ்தவர்களை வேட்டையாடி விரட்டிப் பிடித்து, ஆயிரக்கணக்கில் கொலை செய்தான்.
அவன் செய்த கொடுமைகளை நினைத்துக் கூடப் பார்க்க நெஞ்சம் பதறும். குற்றமற்ற கிறீஸ்தவர்களை காட்டு மிருகங்களின் தோல்களுக்குள் வைத்துத் தைத்து, அதன்பின் நாய்களை ஏவிவிட்டு அவர்களைத் துண்டுதுண்டாய்க் குதறிக் கிழிக்கச் செய்தான்.
உரோமை வீதிகளில் மாலைப் பொழுதாகி விட்டால் வரிசையாகப் பெரிய கம்பங்களில் பந்தங்கள் எரியும். அவை தெரு விளக்குகளாகப் பயன்படும். உண்மை என்ன? கிறீஸ்தவர்களைக் கம்பங்களில் கட்டி அவர்கள் மேல் தார் எண்ணை ஊற்றி எரித்தான் நீரோ. கிறீஸ்தவ மக்கள் தாங்கள் கிறீஸ்துவின் மீது கொண்ட அசையாத விசுவாசத்திற்காக இப்படி எரிந்து பலியானார்கள்.
இக்காலத்தில்தான் கி.பி. 66ல் திருச்சபையின் முதல் பாப்பரசரான அர்ச். இராயப்பரும், அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரும் வேதசாட்சிகளாய் மரித்தார்கள்.
இராயப்பர் 9 மாதம் சிறையில் அடைபட்டிருந்தார். அவருடைய உயிர் ஆதித் திருச்சபைக்கு எவ்வளவு அவசியம் என்பதை நினைத்து கிறீஸ்தவர்கள் அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். சிறைக்காவலர் சிலர் மனமிரங்கி இராயப்பர் தப்பிச் செல்ல உதவி செய்தனர்.
அவர் புறப்பட்டு பட்டண வாசலருகே வந்தபோது நமதாண்டவர் சிலுவை சுமந்து கொண்டு பட்டணத்திற்கு உள்ளே வருவதைக் கண்டார். 'ஆண்டவரே எங்கே போகிறீர்?" என்று இராயப்பர் கேட்டார். வேதசாட்சிய மரணத்தில் இருந்து தப்பியோடும் இராயப்பருக்காகத் தாம் இரண்டாம் தடவையாக சிலுவையில் அறையப்படப் போவதாகக் கூறி சேசு மறைந்தார்.
இராயப்பர் இக்காட்சியின் பொருளைப் புரிந்து கொண்டு உடனே சிறைக்குத் திரும்பினார். சிலுவை மரண தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவரோ, தம் குருவும் ஆண்டவருமான சேசுவைப் போல் சிலுவையில் அறையப்பட தாம் தகுதியற்றவர் எனக் கருதி சிலுவையில் தலை கீழாய் அறையப்படும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறே வேதசாட்சிய முடி பெற்றார்.
அர்ச். சின்னப்பர் உரோமைப் பிரஜையாக இருந்ததால் சட்டப்படி சிலுவையில் அறையப்பட முடியாது. ஆகவே அவர் தலை வெட்டுண்டு வேதசாட்சியானார். சேசுவின் நாமம் வாழ்க!
நம் விசுவாசமும், வேதசாட்சியத்தை எட்டும் அளவிற்கு வீர வைராக்கியமுடையதாக வலுப் பெறும்படி மன்றாடுவோம்.
வேதசாட்சிகளின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.