கர்த்தர் கற்பித்த ஜெபம்.
நமதாண்டவர் கற்றுக்கொடுத்த ஜெபம் எவ்வளவு மேலானது ! அதை ஆக்கியவர் மனிதரல்லர் ; சம்மனசுமல்லர்; மனிதர்களுக்கும் சம்மனசுக்களுக்கும் அரசர், நமதாண்டவராகிய இயேசுநாதர் ! அச்செபத்தின் அமைப்பில் உள்ள ஒழுங்கு முறையும் , உருக்கமான வன்மையும் , தெளிவும் நம் தேவ ஆசிரியரின் ஞானத்தை விளக்குகிறது . சிறு செபமானாலும் அநேக காரியங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது . படிக்காத பாமரருக்கும் அது விளங்கும் . கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களும் விசுவாச இரகசியங்களில் புதுப்புது எண்ணங்களை அறிய வருவார்கள்.
இம்மந்திரத்தில் இறைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய எல்லாக் கடமைகளும் , எல்லா புண்ணியங்களும் நமது எல்லா ஆத்தும சரீர தேவைகளுக்கு மன்றாட்டும் பொதிந்து கிடக்கின்றன . இச்செபம் புதிய ஏற்பாட்டின் சுருக்கம் என்றார் தெர்த்துல்லியன். எல்லாப் புனிதர்களுடைய சகல ஆசைகளுக்கும் மேற்பட்டது இம்மந்திரத்தின் வேண்டுகோள் என்று ' கிறிஸ்து நாதர் அனுசார'த்தின் ஆசிரியர் குறிப்பிடுகிறார் . சங்கீதங்களிலும் உன்னத கானத்திலும் உள்ள இரசமானவைகளின் சுருக்கம் என்பதும் அதில் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து கேட்கிறோம் என்பதும் , அதில் மேலான விதமாய்க் கடவுளைப் புகழுகிறோம் என்பதும் , நமது உள்ளத்தை எழுப்பி இறைவனோடு ஒன்றிக்கிறோம் என்பதும் அவரது கருத்து.
தமது மகனிடமிருந்து கற்றுக்கொண்ட செபத்தை நாம் சொல்லும்போது பிதாவானவர் அதை எவ்வளவு கவனமுடன் கேட்பார் ; கேட்பதைக் கொடுப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம் . கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லும்போதெல்லாம் நம் அற்ப பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன என்பது அர்ச் அகுஸ்தீனாரின் அபிப்பிராயம் . நம் பலவீனத்தையும் எளிமைத்தனத்தையும் நன்குணர்ந்த நாதர் நாம் எத்தனைச் சங்கடங்களுக்கு ஆளாகிறோம் என்று உணர்ந்து அந்த செபத்தைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லி வைத்திருக்கிறார்.
பெரிய கலைஞர்களே ! அருமையான செப புஸ்தகங்களில் அணி அலங்காரத்தோடு எழுதிய நீங்க ஜெபங்கள் தாம் நல்லது என்று சொல்லாதீர்கள் . எவ்வளவு ஞானமுள்ள சாஸ்திரி ஆனாலும் மனிதன் ஆக்கிய செபத்தை விட , ஆண்டவர் அமைத்த ஜெபம் எவ்வளவு மேலானதாயிருக்க வேண்டும் . தெளிவான நீரூற்றை விட்டு விட்டு கலங்கலான நீர் ஓடைக்குச் செல்லாதீர்கள் . சுத்த ஜலத்தை விட்டு விட்டு சேறு கலந்த நீரைப் பருகுவது மேல் என எண்ணாதீர்கள் . இந்த செபமாகிய ஊற்றிலிருந்து புறப்படும் சிற்றோடைகள் அன்றோ மற்ற ஜெபங்கள்?
இச்செபத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்துப் பார்த்து யோசித்துக் கவனத்தோடு இச்செபத்தைச் சொல்லுகிறவர்கள் மகா பாக்கியவான்கள் .ஏனெனில் அவர்கள் ஆசிப்பது எல்லாவற்றையும் , அவர்களுக்குத் தேவையான யாவற்றையும் இதில் கண்டடைவார்கள்
இந்த அதிசய ஜெபத்தை உச்சரிக்கத் தொடங்கும்போதே கடவுளைப் பிதாவே என்றழைத்து , அவரது மனத்தை இளக்கி நம் பக்கம் சாயச் செய்கிறோம் . தந்தையர் யாவரிலும் அவர் மகா அன்புள்ளவர் . அவர் படைத்தவைகளில் யாவற்றிலும் சகல வல்லமையுள்ளவர் . அவைகளின் பராமரிப்பில் நேசத்துக்குரியவர் . விசேஷமாய் இரட்சணிய அலுவலில் மகா அன்புக்குரிய நேசத்தந்தை . நம் தந்தை கடவுளா? அப்படியாகில் நாம் யாவரும் சகோதரர்கள், சகோதரிகள் . மோட்சம் நமது சொந்த வீடு . இந்த ஊர் எண்ணமே இவ்வுலகப் பொருட்களிலிருந்து நம்மைப் பிரித்து இறைவனையும் அயலாரையும் நேசிக்கத்தூண்ட வேண்டும்
சரிதை.
ஸ்பெயின் தேசத்து எட்டாம் அல்போன்ஸ் அரசன் மகா கேவலமான வாழ்க்கை நடத்தினான் . ஆண்டவர் அவனைப் பற்பல விதத்தில் தண்டித்து வந்தார். ஒரு சமயம் அவன் சண்டையில் முறியடிக்கப்பட்டு தன் நேசன் ஒருவன் ஊரில் அடைக்கலம் புகுந்தான் . இயேசுபாலன் பிறந்த திருநாள் அன்று சாமிநாதர் அந்தப் பட்டணம் வந்து , செபமாலையின் பெருமையைப் பற்றிப் போதித்தார் . இதைக் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மன்னன் சாமினாதரை அழைத்து அவர் சொன்னதெல்லாம் நிச்சயமாய் நடக்குமா என்றான் . " இது மகா உண்மை . நீர் தினம் பக்தியைச் செபமாலை செய்து செபமாலை மாதா சபையில் சேருவீரேயாகில் நான் சொன்ன பலன்களைக் கண்டடைவீர் " என்றார் தோமினிக். அன்று முதல் தினந்தோறும் அரசன் செபமாலை செய்து முடித்தபின் , ஒரு நாள் செபமாலை மாதா அவனுக்கு காட்சி கொடுத்து ," அல்போன்ஸ் , ஒவ்வொரு நாளும் பிரமாணிக்கமாய்ச் செபமாலை செய்து எனக்கு ஊழியம் செய்தாய் , உனக்கு வெகுமதியளிப்பேன் . என் மகனிடம் இருந்து உன் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றேன் . இன்னும் இதோ உனக்கு ஒரு செபமாலை , இதை எப்போதும் தரித்திரு . உன் பகைவர்களால் உனக்கு ஒரு தீமையும் செய்ய முடியாது " என்று சொல்லி மறைந்தார்
மன்னனுக்கு என்ன மகிழ்ச்சி ! உடனே தன் மனைவியிடம் சென்று நடந்ததையெல்லாம் சொல்லி குருடியான அவள் கண்முன் தான் பெற்ற செபமாலையைக் காண்பித்தான் . அதிசயம் ! அந்தக்கணமே அவள் இழந்த பார்வையைத் திரும்பப் பெற்றாள். சிறிது நாள் சென்று ஒரு சேனையைச் சேர்த்துக் கொண்டு தன் பகைவர்களை எதிர்த்துச் சண்டையிட்டு தான் இதுவரை இழந்த நாட்டை திரும்ப அடைந்தான். அது முதல் அவன் எச்சண்டைக்குப் போனாலும் வெற்றி ! ஆதலால் பல சேவகர்கள் ஓடி வந்து அவன் சேனையில் சேர்ந்தனர் . வெற்றிக்குக் காரணம் எது தெரியுமா? அவன் முழந்தாளில் நின்று செபம் சொல்லாமல் ஒரு சண்டைக்கும் செல்வதில்லை . தன் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள யாவரும் செபமாலை சபையில் சேர்ந்து , செபமாலை சொல்வதில் பிரமாணிக்கமாய் இருக்கச் செய்தான் . அவனும் அவன் மனைவியும் தாயின் சேவையில் ஈடுபட்டு புண்ணிய வாழ்க்கை பொலிவுற நடத்தினர்.
செபம்.
ஓ செபமாலை இராக்கினியே , மாசற்ற மரியே , திரு இருதயத்தின் அன்னையே , மக்கள் உள்ளங்களை வாட்டும் பாவங்களுக்காக உண்மையிலேயே நான் மனம் நொந்து கஸ்திப்பட எனக்குக் கிருபை செய்யும். கூரிய முட்களையும் கொடிய முள் முடியையும் குரூரமான சாட்டை அடிகளையும் , இயேசுவுக்கு மரண வாதை கொடுத்த யாவற்றையும் என் கண்ணை வருத்தும் விதம் காண்கிறேன் எனினும் துன்பத்தைக் கொடுக்கும் உயிரற்ற பொருட்கள் அவை . என் பாவங்கள் அல்லவா அவரது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தச் செய்தன. எனது ஈடேற்றத்திற்காக என் மேல் வைத்த அளவற்ற அன்பால் இவை யாவற்றையும் அனுபவிக்க அவர் சித்தமானார் . இதற்கு ஏதாவது கைம்மாறு நான் செய்ய வேண்டாமா? உண்மையைச் சிந்திக்காத யோசனையற்ற உலகத்திற்காக பரிகாரம் செய்வதில் என் அற்ப சிநேகத்தைக் காட்ட வேண்டாமா ?
துக்கத்துக்குரிய பாடுகளின் வியாகுல மாதாவே , எங்கள் பாவங்கள் அவரைப் படுத்தி வைத்த ஒவ்வொரு வாதனையிலும் நீர் பங்கு கொண்டீர் . மனமார நாங்கள் செய்த அக்கிரமத்திற்கும் , துரோகத்திற்கும் பரிகாரம் செய்யும் பிரயாசையில் எங்கள் இதயத்தை உம்முடைய இதயத்தோடு ஒன்றிக்கும் அரிய வரப்பிரசாதத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும்
செபமாலை இராக்கினியே தூய அன்பினால் எங்கள் இதயம் பற்றி எரியச் செய்தருளும்.
ஆமென்
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அக்டோபர் 6
Posted by
Christopher