“ இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் “
“ இதை வாங்கிப்பருகுங்கள் உடன்படிக்கைக்கென பலருக்காக சிந்தப்படும் என் இரத்தம் இது “
“ நானே உயிர் தரும் உணவு “ – அருளப்பர் ( யோவான்) 6 :48
“ உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மனுமகனின் தசையைத் தின்று இரத்தத்தைத் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது” – அருளப்பர் 6 :53
தேவ வாக்குத்தத்தங்களும், மனுக்குலத்தின் நம்பிக்கையும், பழைய ஏற்பாட்டின் உவமானங்களும், தீர்க்கதரிசனங்களும் திவ்விய நற்கருணையில் நிறைவேறுகிறது. தேவனோடு மனிதனை எப்போதைக்கும் சமாதானப்படுத்துகிற மெய்யான பலி, உவமைகளாகக் குறிக்கப்பட்ட பலிகளைப் பின் தொடர்ந்து வருகிறது. மெய்யான பாஸ்கு பலியிடப்பட்டது. பரலோக மன்னாவெனும் போசனம் இஸ்ராயேல் மக்களுக்கு மாத்திரமல்ல, புதிய உடன்படிக்கையின் சகல ஜனங்களுக்கும் அதாவது விசுவாசிகளுடைய தந்தையாகிய ஆபிரகாமின் மெய்யான மக்களுக்கெல்லாருக்கும் உணவாகிறது.
சமாதான அரசனின் மாதிரியைப் பின் சென்று, மெல்கிசேதேக் ஒழுங்கின்படி ஆன நித்திய தலைமைக் குரு உந்நத பரம கடவுளுக்கு அப்பமும் இரசமும் ஒப்புக்கொடுக்கிறார். அது மோட்சத்திலிருந்து இரங்கிய உயிருள்ள அப்பம். அவர் கொடுக்கிற அப்பம் அவருடைய மாமிசமும், இரத்தமுமாயிருக்கிறது. மெய்யாகவே, மனுமகனுடைய மாமிசத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தை பானம் செய்தாலொழிய நாம் உயிரோடிருக்கப்போவதில்லை. எனெனில் அவர் சொல்கிறபடி “ நம் தசை மெய்யான உணவும், நம் இரத்தம் மெய்யான பானமுயாய் இருக்கிறது. மோட்சத்திலிருந்து இறங்கி வந்த அப்பம் இதோ.
“ நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு.. இதை எவனாவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் “ அருளப்பர் 6 :51
அவருடைய பலியின் பேறுபலன்களை அளவு கடந்த விதமாய் நமக்கு அளிப்பதற்காக அவர் மாமிசத்தை நமது மாமிசத்தோடும், அவருடைய ஆத்துமத்தை நமது ஆத்துமத்தோடும் ஒன்றிக்கிறார். இந்த வாக்குக்கடங்காத ஒன்றிப்பினால்,
“ அவரிடத்தில் குடிகொண்டிருக்கும் தேவ தன்மையாம் நாமும் நிரப்பப்படுகிறோம். “
மனிதன் சம்மனசுக்களின் அப்பத்தைப் புசித்தான். அதெப்படி?
புனித அகுஸ்தினார் சொல்வது போல, அழிவில்லாத சம்மனசுக்களை, தமது அழிவில்லாத தன்மையால் போஷிக்கிற சர்வேசுவனுடைய வார்த்தையானது மாமிசமாகி நம்முடன் வாசமாயிருக்கிறது.
“ கிறிஸ்தவர்களே ! தெய்வீக விருந்துக்கு போங்கள். அதில் கிறிஸ்து நாதர் தம்மை முழுவதும் உங்களுக்கு கையளிக்கிறார்; அதில் தேவ வார்த்தையானவர் தம்மைத்தாமே கண்டுபிடிக்கக் கூடாத உணவாக்குகிறார்.. பரலோகத்தின் மெய்யான அப்பத்தை வாங்கிப் புசியுங்கள். அதிலேதான் நம்பிக்கை, அதிலேதான் சீவியம், அதிலேதான் ஸ்நேகத்தின் முழுமையிருக்கிறது “
நன்றி : கிறிஸ்துநாதர் அணுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்
அத்தெய்வீக திருவிருந்திற்கு நம்மையே தயாரித்து மாசற்றத்தனம் என்கிற திருமண ஆடையோடு பக்தியோடு முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !