கர்த்தர் கற்பித்த ஜெபம்.
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே :
உமது சர்வ வியாபகத்தால் பரலோக பூலோகத்தை நிரப்புகிறவரே, எங்கும் நிறைந்திருக்கிறவரே, உமது மகிமையினால் அர்சிஷ்டவர்களிடத்திலும், உமது நீதியினால் நரகவாசிகளிடத்திலும் , உம்முடைய வரப்பிரசாதத்தினால் நல்லவர்களிடமும் , உமது சகிப்புத் தன்மையால் பாவிகளிடத்திலும் இருக்கிறீர் . நாங்கள் உம்மிடம் தங்கி இருந்து உம்மையே நினைக்கவும் , உம்முடைய உண்மையான மக்கள் வாழ வேண்டிய முறையில் நாங்கள் வாழவும் , நாங்கள் உம்மையே நோக்கி நாடவும் ,எங்கள் சத்துவத்தைஎல்லாம் கூட்டி உம்மையே நாங்கள் தேடவும் , எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும் . நீர் மனுக்குலத்தின் தந்தை . ஏனெனில் எல்லாவற்றையும் உருவாக்கிக் காப்பாற்றுகிறீர் . விசேஷமாய் எங்களை இரட்சித்தீர். பாவிகளுக்கு நீர் இரக்கமுள்ள தந்தை . நீதிமான்களின் நண்பரான தந்தை . மோட்சவாசிகளுக்கு மகிமையுள்ள தகப்பன்.
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக :
" கர்த்தரின் நாமம் பரிசுத்தமும் பயங்கரமானதுமென்றார் தாவீது அரசர் . " பக்தி சுவாலகர் , ஞானாதிக்கர்களுடைய வாழ்த்துக்களினால் மோட்சம் முழங்குகிறது " என்றார் இசையாஸ் . பரிசுத்தரான மாட்சிமை நிறைந்த கர்த்தாவே , உம் குணாதிசயங்களை உலகெலாம் அறிய வேண்டும் . யூதர்கள் முதலிய பிற மதத்தினர் உம்மை அறிந்து ஆராதிக்க வேண்டும் . எல்லா மக்களும் உயிருள்ள விசுவாசத்தோடும் ,அசையாத நம்பிக்கையோடும் , கொழுந்து விட்டு எரியும் நேசத்தோடும் எல்லாப் பொய்க் கோட்பாடுகளையும் எறிந்து விட்டு உமக்கு ஊழியம் செய்து உம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்
உம்முடைய இராச்சியம் வருக :
மரணத்திற்குப் பின் உம்முடைய அரசாளும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டும் வண்ணம் இப்போது உம் வரப்பிரசதத்தால் எங்கள் ஆன்மாவில் அரசாளும் . மோட்சத்தில் சம்மனசுக்கள் உமக்குக் கீழ்ப்படிவது போல உலகில் மனிதர்கள் யாவரும் உமக்கே கீழ்ப்படிந்து வருவார்களாக . மோட்ச ராஜ்ஜியம் எங்களுக்கு கிட்டும்படி கேட்கிறோம் . அச்சந்தோஷத்தையும் மகிமையையும் ஆசித்து வேண்டிக் கொள்ளுகிறோம் . மோட்ச அரசில் நாம் சேர வேண்டுமானாலும் , பிறரைச் சேரச் செய்ய வேண்டுமானாலும் முதன் முதலில் வரப்பிரசாதத்தினால் அந்த ராச்சியத்தை நாம் உள்ளத்தில் தாபிக்க வேண்டும்
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக :
மனிதர்கள் இறைவனுடைய சித்தம் , தீர்மானம் நிறைவேறாமல் தடுத்துவிடுவார்கள் என்ற பயம் நமக்கில்லை. நாம் கேட்பது யாதெனில் " பிதாவே , நாங்கள் உமது சித்தத்தோடு ஒத்துழைக்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருளும். இவ்வுலகில் என்னிலோ, மற்றவர்களிடமோ என்னென்ன நடந்தேற நீர் சம்மதிக்கிரீரோ , அவைகளைஎல்லாம் நாங்கள் பொறுமையாய் ஏற்றுக் கொள்ள கிருபை செய்தருளும் " உம் கற்பனைகளினால் , ஏவுதலினால், சம்மதத்தினால் என்னென்ன நடைபெற நீர் ஆசிக்கிறீரோ , அவைகளெல்லாம் எங்களிலும் , எங்களாலும் , மேலும் நடைபெறக் கிருபை கூரும்.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் :
நம் ஆத்துமத்தின் ஜீவியத்திற்கோ , சரீரத்தின் ஜீவியத்திற்கோ தேவையான யாவற்றையும் கடவுளிடம் இருந்து கேட்க வேண்டும் . ஆண்டவரே , நாங்கள் தரித்திரர் , ஒன்றும் இல்லாதவர்கள் , ஒன்றுக்கும் ஆகாதவர்கள் , உம் பராமரிப்பு ஒன்றையே நாங்கள் நம்பி வாழ்கிறோம் . எங்களுக்கு இவ்வுலகில் வேண்டிய உணவையும் உறைவிடத்தையும் உடையையும் நாங்கள் கேட்கிறோம் . சுகமான வாழ்வையோ, விருந்து உணவையோ , கம்பீரமான உடையையோ கேட்கவில்லை . எங்களுக்குத் தேவையானதைக் கேட்கிறோம். உலகப் பொருட்கள் மேல் எங்களுக்குப் பற்றில்லை .அவைகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் இல்லை . நாளையை நினையாத குழந்தைகளைப் போல இன்றைக்கு வேண்டிய உணவைக் கேட்கிறோம் . நாளைக்கு வேண்டியதை நீர் பார்த்துக் கொள்வீர். உம்முடைய உதவி ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவை . நாள்தோறும் நாங்கள் உமது அடைக்கலத்தை நம்பி வாழ்வோம் . எனக்கு மாத்திரம் இவைகளைக் கேட்கவில்லை. எங்கள் உற்றார் , உறவினர்களுக்காகவும் , எங்கள் ஊராருக்காகவும் , எங்கள் நாட்டாருக்காகவும் கேட்கிறோம் . இக்காலம் அகதிகளின் நாள் . இக்காலத்தில் தவிக்கும் கோடிக்கணக்கான அகதிகளுக்கு உணவு , உடை , உறைவிடம் தந்தருளும் தேவ பிதாவே
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் :
பாவி, கடன்காரன். இறைவனுக்கு கடன் செலுத்த வேண்டியவன். நாம் கட்டிக்கொண்ட எல்லா பாவங்களுக்காகவும் மனஸ்தாபத்தோடு , தாழ்மையோடு , நம்பிக்கையோடு மன்னிப்பு கேட்க வேண்டும் . பிதாவே எங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களை உமக்காக நாங்கள் மன்னிக்கிறோம் . இரக்கமுள்ள பிதாவே , அன்புள்ள பிதாவே , நீரும் எங்கள் பாவங்களை மன்னிக்கத் தயை புரியும்
எங்களைச் சோதனையில் விழ விடாதேயும் :
பிதாவே சோதனையை ஜெயிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பைக் காட்டுவோம் . சோதனையில்லாவிடில் நாங்கள் அகங்காரிகளாகி விடுவோம் . சோதனை வந்தால் அதை வெல்ல எங்களுக்கு உதவி செய்யும்
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் :
பஞ்சம் படை கொள்ளை நோய்களினின்று எங்களைக் காப்பாற்றும் . சண்டைக்கு ஆயத்தமான இடி எங்கும் முழங்குகிறது . யுத்தம் வேண்டாம் ஆண்டவரே! பேய் எங்களுக்குத் தீமை ; எங்களுடைய சத்துரு . ஆண்டவரே எங்கள் அருகிலிருந்து அவனை ஓட்டியருளும் ஆமென்
சரிதை.
தனித்த ஆளோ, குடும்பங்களோ, தேசங்களோ , செபமாலை வழியாய்ப் பேய்கள் மேலும் , தங்கள் எதிரிகள் மேலும் கொண்ட வெற்றிகளுக்குக் கணக்கில்லை. போர் முனையில் செபமாலையினால் பெற்ற வெற்றிகளில் எல்லாம் முதன்மையானது லெப்பாந்தொ என்னும் கப்பல் சண்டையில் கிறிஸ்தவர்கள் கொண்ட ஜெயமாம்
துருக்கியர்கள் கப்பல் படையில் மகா வலிமை பெற்றிருந்த காலம் . மத்தியதரைக்கடலில் தங்கள் கப்பல் படையை நிறுத்தி கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும் நாசமாக்க நினைத்திருந்தனர் . இக்கலக நேரத்தில் அர்ச் 5 ஆம் பத்திநாதர் அவர்களை எதிர்க்க ஓர் ஐக்கிய அணியை உருவாக்கினார் . வெனிஸ் , ஜெனீவா , ஸ்பானியா இராச்சியங்களின் கப்பற் படைகள் ஒன்றாய்ச் சேர்ந்தன . அவைகளை ஆஸ்திரியா நாட்டு தொன்ஜான் தலைமை தாங்கி நடத்தினார்
1569 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி அர்ச் 5 ஆம் பத்திநாதர் சுற்றறிக்கை அனுப்பி கிறிஸ்துவ சேனையின் வெற்றிக்காக எல்லாக் கிறிஸ்தவர்களும் செபமாலை சொல்லி வேண்டும்படிக் கேட்டுக் கொண்டார் . எல்லா ஆலயங்களிலும் நாற்பது மணி நேர ஆராதனை , செபமாலையின் பேரால் சுற்றுப்பிரகாரங்கள் நடத்தவும் , செபமாலை சொல்லவும் கற்பித்தார் . அக்டோபர் ஏழாம் தேதிக்கு முந்தின இரவு முழுவதும் பாப்பாண்டவர் செபத்தில் ஊன்றி நின்றார்
லெப்பாந்தொ என்ற இடத்தில் யுத்தத்திற்கு அணிவகுத்தவுடன் எல்லா மாலுமிகளும் செபமாலை செய்து ஒப்புக்கொடுத்தனர் . அதன்பின் அப்போஸ்தலிக் தானாதிபதி அப்போஸ்தலிக் ஆசீர்வாதம் அவர்களுக்களித்தார் . அறுபத்து ஐந்தாயிரம் மக்கள் காலைப் பூசையில் தேவ நற்கருணை அருந்தி , மூன்று மணி நேரமாகச் செபமாலை செய்தனர் . போர் தொடங்கியது . துவக்கத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் காற்று வீசியது . ஆனால் அது திடீரென நின்று விட்டது . மாலை வெகு நேரம் வரை போர் மும்முரமாக நடந்தது . துருக்கியர்கள் பின்னடைந்து ஓடினர் . இந்த வெற்றியால் கிறிஸ்தவர்கள் துருக்கியரது கப்பல் படையின் முதுகெலும்பை நொறுக்கி விட்டனர் எனலாம். அதற்குப் பின் அவர்கள் கடற்போரில் தலை தூக்கவில்லை . மத்திய தரைக்கடலில் அவர்களது கொட்டம் அடங்கியது
முதல் துவக்கத்திலிருந்தே தொன்ஜான் செபமாலையினால் தான் வெற்றி ஏற்பட்டது என்றார் . வெனிஸ் மந்திர ஆலோசனை சபையும் மற்ற நாடுகளுக்கு இந்த வெற்றியை அறிவித்தபோது , தள கர்த்தர்கள் அல்ல ,மாலுமிகளின் படையல்ல வெற்றிக்குக் காரணம் . வெற்றியைக் கொடுத்தது செபமாலை மாதா தான் என்றனர் .
செபமாலை இராக்கினி கொடுத்த இந்த வெற்றிக்கு நன்றியறிதலாகத்தான் தேவமாதாப் பிரார்த்தனையில் செபமாலை இராக்கினியே என்று அழைத்தார்கள். இவ்வெற்றியின் நினைவாக அக்டோபர் 7 ஆம் நாள் செபமாலை மாதாவின் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.
செபம்.
செபமாலை இராக்கினியே , செபமாலை மணிகளை நாங்கள் விரும்ப வேண்டும் . உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு எல்லா இக்கட்டிலும் , இன்னலிலும் செபமாலை ஆறுதல் அளித்தது . ஓ மாமரியே ! என் அன்னையே , என்னுடைய பலவீனத்தில் பலமாகவும் , சந்தேகத்தில் ஒளியாகவும் , துயரத்தில் சமாதானமாகவும் , சோதனை நேரத்தில் தைரியமாகவும் , வாழ்நாள் எல்லாம் உம் செபமாலை தேற்றரவாகவும் இருப்பதாக . செபமாலை மாதாவே , செபமாலை பக்தி உலகெங்கிலும் விரைவில் பரவுவதாக.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அக்டோபர் 7
Posted by
Christopher