நவம்பர் 8

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எத்தனை காலம் உத்தரிக்கிறார்கள் என்று காண்பிக்கிற வகையாவது.

தியானம் 

ஒரு சொற்ப வேதனையானாலும் வெகு நாளாய் அதை அனுபவிக்க வேண்டியதானால் பெரிதாகிப் பொறுக்கப்படாத வேதனையைக் காணப்படும் என்கிறதற்குச் சந்தேகமில்லை . போன தியானங்களிலே காண்பித்தாற் போல உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் அவ்வளவு கடினமும் அகோரமுமாய் இருக்கையிலே இவைகளை வெகு வருஷமாய் அனுபவிக்கிறது எவ்வளவு வருத்தமாய் இருந்திருக்க வேண்டும் என்று இப்போது யோசித்துக் கொள்ள வேண்டும்

மகா சாஸ்திரியான பெல்லாமீனூஸ் என்கிறவர் இவ்விஷயத்தில் எழுதினதாவது : சில ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனைகளில் பத்து , இருபது வருஷத்துக்கு அதிகம் , நூறு ஐந்நூறு வருஷத்துக்கு அதிகம் உபாதிக்கப்படுவார்கள் என்பது நிச்சயந்தான் என்ற பிற்பாடு , தாம் சொல்லுகிறதை அநேக உதாரணங்களினாலும் ,வேத பாரகருடைய வாக்கியங்களினாலும் , சில அர்சியசிஷ்டவர்களுடைய காட்சிகளாலும் ஒப்பித்துக் கொண்டு வருகிறார். இவைகளெல்லாம் இங்கே விவரிக்காமல் ஒன்றிரண்டு நியாயங்களை மாத்திரம் சொல்லிக் காட்டுவோம் .அது எப்படி என்றால் :

நீதியுள்ளவருமாய் சகலத்தையும் அறிகிறவருமாய் இருக்கிற சர்வேசுரன் சகலமான நற்கிரியைகளுக்கு மோட்சத்தில் வெகுமதி கொடுக்குமாப் போல சகலமான பாவங்களுக்கு தண்டனை இடுவாரென்பது தப்பில்லாத சத்திய விசுவாசமாம் . ஆகையால் ஒரு மனுஷனுக்கு நேரிடப்போகிற தண்டனை எவ்வளவென்று அறிவதற்கு அவன் செய்த பாவங்களுக்கு கணக்கேற்றிப் பார்க்க வேண்டுமல்லவோ ? இந்தப் பிரகாரமாய் முதன் முதலில் கிறிஸ்தவன் ஆன ஒரு நல்ல மனுஷனுடைய சொற்பப் பாவங்களை உத்தேசித்து எண்ணிக் கொள்ளலாம் . நீதிமானானவன் நாளொன்றுக்கு ஏழு தரம் பாவத்தைக் கட்டிக் கொள்ளுகிறான் என்று சத்திய வேதத்திலே எழுதி இருக்கிறது . இப்போது நாம் குறிக்கிற மனுஷன் நாள் ஒன்றுக்கு பத்து சொற்ப பாவங்களைக் கட்டிக் கொள்ளுகிறான் என்கிறாற்போல கணக்கு சொல்லலாம் . ஒரு வருஷத்திலே அந்த மனுஷன் நாளொன்றுக்கு பத்து பாவங்களைச் செய்கிற விதமாக ஒரு வருஷத்திலே மூவாயிரத்து அறுநூற்று ஐம்பது பாவங்களைக் கட்டிக் கொண்டிருப்பான் .பத்து வருஷத்துக்கு பிற்பாடு முப்பத்து ஆறாயிரத்து ஐந்நூறு பாவங்களைச் செய்திருப்பானே. இன்னும் வேறே பத்து வருஷம் இந்த மனுஷன் ஜீவித்திருந்தால் எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைச் செய்திருப்பான் அல்லவோ ? அப்படி இருபது வருஷத்துக்குள்ளாக எழுபத்து மூன்றாயிரம் பாவங்களைக் கட்டிக் கொண்ட மனுஷன் எவ்வளவாய் சர்வேசுரனுடைய நீதிக்குப் பரிகாரமாக தண்டனை இடப்பட வேண்டியதாய் இருக்கும் . ஒரு பாவத்துக்கு ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்க வேண்டுமென்றாலும் முன் சொன்ன மனுஷன் எழுபத்து மூன்றாயிரம் நாள் அந்த அகோர நெருப்பிலே வேக வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் சர்வேசுரனைக் காணாமல்  இருக்க வேண்டும் , எழுபத்து மூன்றாயிரம் நாள் மேற்சொன்ன வேதனைகளை அனுபவிக்க வேண்டும் . எழுபத்து மூன்றாயிரம் நாள் காய்ச்சலோடும்,அல்லது  பல்வலியோடும் அல்லது வாயிற்று வலியோடும் வருத்தப்பட்டுக் கிடக்க வேண்டுமென்றால் பொறுக்கக் கூடுமோ சொல்லுங்கள் . அந்தந்த பாவம் சொற்ப பாவமென்றாலும் அவைகள் அம்மாத்திரமான பெரும் தொகையாய் இருக்கிறதென்று கண்டு அப்பேற்பட்ட தண்டனைகளுக்குக் காரணம் ஆகிறதினால் அவைகளைச் சொற்ப போல்லாப்பென்று சொல்லுவீர்களோ ? பயப்படாமல் இருப்பீர்களோவென்று அர்ச் அகுஸ்தீனூஸ் கேட்கிறார் .

தேவநீதிக்கு எழுபத்து மூன்றாயிர நாள் கடன்பட்ட இந்த மனுஷன் நல்ல கிறிஸ்தவன் என்றும் சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளாத மனுஷனென்றும் இருக்கிறார்போலே மேற்சொன்ன கணக்கை எண்ணிக் கொண்டோமே . ஆயினும் இவ்வுலகத்திலே அப்படிப்பட்ட மனுஷர்கள் கொஞ்சம் பேர்தான் . மற்ற எல்லோரும் பொதுப்பட அநேகம் சாவான பாவங்களைக் கட்டிக் கொண்டு வருகிறார்கள் என்றும் உங்களுக்கு நன்றாய்த் தெரிந்த காரியம் தானே . சிலர் யாதோர் பயம் அச்சமின்றி ,சிலர் பத்து இருபது வருஷம் மோகப் பாவச் சேற்றிலே விழுந்து ,சிலர் விடாத மனஸ்தாபத்தோடே வாழ்ந்து ,சிலர் புறத்தியாருடைய உடைமைகளைத் திருடி உத்தரிக்காமல் இருந்து சிலர் ஆங்காரத்தால் பொங்கி குருக்களுக்கும் திருச்சபைக்கும் கீழ்ப்படியாமல் நின்று , சிலர் புத்தி மயங்கி லாகிரியான வஸ்துக்களை தின்னப் பழகி , இது முதலான துரோகங்களைப் பண்ணி பெரும் பாவிகளாகத் திரிவார்கள் அல்லவோ ? இத்தகைய பாவங்களைக் கட்டிக் கொண்ட பிற்பாடு ஒரு மணி நேரம் ஆயத்தம் செய்து அடிமை மனஸ்தாபப்பட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணுவார்கள் என்பது மெய்தான் . ஆயினும் அத்தோடே எல்லாம் முடிந்ததென்று நினைக்கிறார்போலே அவர்கள் யாதொரு தபசு பண்ணவும் , யாதொரு பரிகாரம் பண்ணவும் யாதோர் பிச்சை தருமமும் கொடுக்கக் காணோமே . திரும்பத் திரும்ப அவர்கள் அநேகம் பாவங்களை கட்டிக் கொள்ளுகிறதல்லாமல் யாதொரு உத்தரிப்பையும் பரிகாரத்தையும் செய்கிறவர்கள் அல்ல .அப்படித் தங்களுக்கு ஆயுள் இருக்குமளவும் நடந்த பின்னர் கடைசியிலே சர்வேசுரனுடைய அளவிறந்த கிருபையினாலே நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணி இஷ்டப் பிரசாதத்தோடு சாவார்கள் . ஆனால் முன் சொன்ன மனுஷன் தான் கட்டிக் கொண்ட சொற்ப பாவங்களுக்கு எழுபத்து மூன்றாயிரம் நாள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே உத்தரிக்க வேண்டியதாய் இருக்கையில் இவ்வளவு சாவான பாவங்களைச் செய்தவர்கள் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணிச் செத்திருந்தாலும் எத்தனை வருஷ காலம் உத்தரிப்பார்கள் என்று சொல்லுங்கள் .ஆனால் அர்ச் சிப்பரியானூஸ் எழுதினாற்போல சில பாவிகள் உலகம் முடியுமட்டும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருப்பார்கள் என்று சொல்லத்தக்கதாய் இருக்கிறது

செய்த சொற்ப பாவங்களுக்கும் ,கட்டிக் கொண்ட சாவான பாவங்களுக்கும் ,இவ்வுலகத்தில் தான ,தர்ம, தப , செபத்தினாலும் திருச்சபையின் பலன்களினாலும் பரிகாரம் பண்ணலாம் என்பது மெய்தான் . ஆயினும் தங்களுடைய பாவங்களுக்காக செபங்களைப் பொழிகிறவர்களும் , பிச்சை கொடுக்கிறவர்களும் , தவக்கிரியைகளை நடத்துகிறவர்களும் மிகவும் கொஞ்சம் பேர்களே என்று நீங்கள் முதலாய் சொல்லுவீர்கள் அல்லவோ ? எல்லோரும் ஏறக்குறைய இவ்வுலகத்தின் சுகபாக்கியங்களையும் ஆஸ்தி திரவியங்களையும் சிலாக்கிய மகிமைகளையும் மகா கவனத்தோடு தேடுகிறதுமல்லாமல் அவர்கள் தவத்தினுடைய பேரை முதலாய் அறியார்கள் . இது இப்படி இருக்க அவர்கள் தாங்கள் தேவ நீதிக்குச் செலுத்தவேண்டிய சகலமான கடன்களோடு செத்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வருஷகாலம் உபாதிக்கப்படுவார்கள் என்பது தப்பாது .

அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறபோது அவர்களுக்காகச் செய்யப்பட்ட ஜெபங்களினாலும் கொடுத்த பிச்சைகளினாலும் செய்வித்த பூசைகளினாலும் அவர்களுடைய அவதி குறையலாம் என்பது மெய்தான் . ஆனாலும் தோமாஸ் ஆக்கென்பிஸ் சொன்னது போல உயிரோடிருக்கும்போது தன்னைத்தான் மறந்து போகிறவன் செத்த பிற்பாடு அவனை நினைக்கப் போகிறது யார் ? அப்படித்தான் உங்களுக்கும் சம்பவிக்குமோ இல்லையோ என்று அறிவதற்கு உங்களுடைய மரித்தோர்கள் மட்டில் நீங்கள் இப்போது செய்கிறதைப் பாருங்கள் . மரித்த உங்களுடைய உற்றார் , பெற்றார் , சேர்ந்தார் ,சிநேகிதர் , உபகாரிகளுக்கோ என்னத்தைச் செய்கிறீர்கள் ? என்ன பிச்சை கொடுக்கிறீர்கள் ? எத்தனை பூசை பண்ணுவித்தீர்கள்? மிகவும் கொஞ்ச மாத்திரம் செய்தோமென்றால் அப்படித்தான் உங்களுக்கும் மிகவும் கொஞ்ச மாத்திரம் செய்வார்கள் . உங்களை எல்லோரும் மறந்து போகிறார்போல நீங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் எத்தனையோ வருஷம் கிடப்பீர்கள் என்று உத்தேசித்துப் பார்க்கக் கடவீர்கள் . முன் சொன்ன நியாயங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் மெத்தவும் கடினமாய் இருக்கிறதும் தவிர ,அவைகளை அநேக வருஷ காலம் அனுபவிக்க வேண்டுமென்று தெளிவிக்கப்பட்டது  . அதன் பேரிலே நீங்கள் நன்றாய் யோசனை பண்ணக் கடவீர்களாக.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம் 

சேசுவே ! எங்கள் பேரில் தயவாய் இரும்

செபம் 

நித்திய பிதாவாகிய சர்வேசுரா ! எங்களுடைய தாய் தகப்பனை வணங்க வேணுமென்று கற்பித்தீரே, மரித்த எங்களது தாய் தகப்பனுடைய ஆத்துமாக்களுக்குக் கிருபை செய்து அவர்களுடைய பாவங்களைப் பொறுத்து , நாங்கள் அவர்களை நித்திய பிரகாசமுள்ள உம்முடைய இராஜ்ஜியத்தில் பார்க்கும்படி செய்ய வேண்டுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

எட்டாம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை 

மரித்த உங்களுடைய தாய் தகப்பனை நினைத்து அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்றும் , என்ன செய்யப் போகிறீர்கள் என்றும் யோசிக்கிறது

புதுமை 

1644 ம் ஆண்டில் இராஜ கோத்திரத்திலே பிறந்த பேர் பெற்ற ஒரு துரையானவன் தன் மைத்துனனான வேறொரு துரையிடம் சண்டை செய்த நிமித்தம் அவர்களுக்கிடையில் ஒரு தனிப்போர் உண்டானது . அந்த தனிப்போரில் மேற்சொன்ன துரையானவன் ஈட்டியினாலே நெஞ்சிலே குத்தப்பட்டு உடனே செத்துப் போனான் . இப்படிப்பட்ட தனிப்போர்களை திருச்சபையானது விலக்குகிறதினாலே செத்தவனுடைய ஆத்துமத்துக்காக தேவாலயத்தில் யாதொரு சடங்கும் பண்ணவில்லை ,அவனுடைய பிரேதம் மந்திரிக்கப்பட்ட கல்லறையிலே வைக்கப்பட்டதுமில்லை . அந்தப் பிரபு பாவசங்கீர்த்தனம் இல்லாமலே திடீரென்று செத்துப் போனதால் அவன் நரகத்திற்குப் போயிருப்பான் என்று எல்லோரும் நிச்சயித்துக் கொண்டிருந்தார்கள் . அர்ச் பிரான்சீஸ்கு சலேசியூஸ் உண்டு பண்ணின சபையிலே புண்ணியம் நிறைந்த ஒரு கன்னியாஸ்திரி அக்காலத்திலே இருந்து வந்தாள். சர்வேசுரன் அவளுக்கு அந்த துரை உயிரோடிருக்கும்போது பண்ணின தர்மங்களைக் குறித்து ஆண்டவருடைய விசேஷ கிருபையினாலே அவன் சாகிற தருணத்தில் உத்தம மனஸ்தாபப்பட்டு நித்திய நரகத்துக்குத் தப்பி உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறதாக அறியப் பண்ணினார்

அவன் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகுகாலமாய் உபாதிக்கப்படத் தீர்வை இடப்பட்டானென்று அந்தக் கன்னியாஸ்திரியானவள் கண்டு அவனுடைய அவதியைக் குறைக்கத் தன்னுடைய செபத்தியானங்களை ஒப்புக் கொடுத்தாள். அப்படி வெகு நாளாய்ச் செய்த பிற்பாடு அந்த ஆத்துமத்தினுடைய வேதனை சில மணிநேரமாகக் குறைந்தது என்று சர்வேசுரனாலே அறிந்தாள். இந்தச் செய்தியை மற்ற கன்னியாஸ்திரிமாரோடு சந்தோசத்துடன் அறிக்கை பண்ணுமிடத்தில், அவ்வளவு சொற்ப ஆறுதலுக்கு அத்தனை சந்தோசப்படுவானேன் என்று அவர்கள் சொன்னார்கள் .அதற்க்கு அவள் அந்த ஆத்துமத்தின் வேதனைகள் கொஞ்ச நாழிகை அமர்ந்திருந்ததை அற்ப ஆறுதலாய் நினைக்காதேயுங்கள் . கொஞ்ச நேரம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுகிறதற்கு முன்பாக இவ்வுலகத்தில் அநேக வருஷம் கடின வியாதியினாலே வருகிற வருத்தமெல்லாம் நிகரல்ல என்றாள்

மீண்டும் அந்தப் புண்ணியவதி அந்த நிர்பாக்கியமுள்ள ஆத்துமத்தைக் குறித்து பத்து வுருஷம் ஒருசந்தியாய் இருந்து செய்யக் கூடிய தவக்கிரியை எல்லாம் செய்து ஓயாமல் செபித்துக் கொண்டிருந்தாள் . அதற்க்கு அப்பால் இந்த ஆத்துமத்திற்கு விதித்த வேதனைகளில் ஒரு பங்கு தனக்கு அனுப்ப வேண்டுமென்று ஆண்டவரை மன்றாடினாள் . ஆண்டவர் அந்த மன்றாட்டுக்கு இரங்கி ஓர் அகோரமான வியாதியை அவளுக்கு அனுப்பினதின் பேரில் அவளுடைய சரீரமெல்லாம் கடினமாய் வலித்து வேகமாய்க் காய்ந்து அவளுடைய கை கால் பொறுக்கப்படாத குளிரினாலே திமிர்ந்து அவளுடைய மனதில் அதிகத் துன்பமும் கிலேசமும் உண்டாயிருந்தது . அவள் இதெல்லாவற்றையும் அந்த ஆத்துமத்திற்காகச் செய்திருந்தாலும் அந்த ஆத்துமத்தை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து முழுமையும் மீட்டு இரட்சிக்கக்கூடாமல் செத்தாள்

கிறிஸ்துவர்களே , மேற்சொன்ன புதுமையினாலே உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனைகள் எவ்வளவு கடினமாய் இருக்கிறதோ , எவ்வளவு காலம் இருக்கப் போகிறதோவென்று யோசித்து அவ்விடத்துக்கு நீங்கள் போகாதபடிக்கு தக்க முறையாய் நடக்க வேண்டியதுமல்லாமல் அதிலே அதிக உபாதிக்கப்படுகிற ஆத்துமாக்களைக் குறித்து சோம்பல் , சலிப்பு மறதி இன்றி இடைவிடாமல் செபம் பண்ண வேண்டுமென்று அறியக்கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்