துவக்க ஜெபம்:
ஆண்டவரே! உமது பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எங்கள் கிரியைகளுக்கு முன் செல்வீராக. உமது வரப்பிரசாத உதவியால் அவைகளை நீரே முற்றுப்பெறச் செய்வீராக. இதனால் எங்களின் சகல ஜெபங்களும் ஞானக் கிரியைகளும் உம்மால் தொடங்கப்பட்டு உம்மாலேயே முடிவடையக்கடவன. எங்கள் ஆண்டவராகிய சேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென்.
தேவ சம்பந்தமான புண்ணியங்களைக் கேட்டு மன்றாடுவோமாக.
விசுவாசம்: என் சர்வேசுரா சுவாமி! திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.
நம்பிக்கை: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறபடியினால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன். ஆமென்.
தேவ சிநேகம்: என் சர்வேசுராசுவாமி! தேவரீர் மட்டில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதினாலே எல்லாவற்றிக்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு சிநேகிக்கிறேன். மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்றெல்லாரையும் நேசிக்கிறேன். ஆமென்.
மாதாவுக்குப் பாத்திமா அர்ப்பண ஜெபம்:
எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே! ரஷ்யாவை மனந்திருப்பி உலக மக்களுக்கு சமாதானம் தருவேனென்று பாத்திமாவில் வாக்களித்தீரே. எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால் உமது மாசற்ற இருதயத்துக்கு நேர்ந்த சகல நிந்தை அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக, எங்களுக்கு வருகிற துன்பங்களைப் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம். ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம். எங்களை உம்முடைய மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். அதன் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிகிறோம். இவ்வர்ப்பணத்தை அடிக்கடி விசேஷமாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே ஆமென்.
1 அருள் நிறைந்த...
(மாதாவுக்கு நாம் செய்யும் இவ்வர்ப்பணத்தின் அடையாளம் கார்மெல் உத்தரியம் அணிந்திருத்தலாகும். உத்தரிய சாலையில் சேர்ந்து அதை அணிவோமாக)
ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை புதுப்பித்தல்:
நான் என் ஞானஸ்நானத்தில் அனைவருக்கும் கொடுத்த வார்த்தைப்பாடுகளை அவர் முன்பாக புதுப்பித்துக் கொள்கிறேன்.
பசாசையும் அவன் கிரியைகளையும் அவன் ஆரவாரங்களையும் முழு மனதோடு விட்டுவிடுகிறேன். பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் ஏசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தாரென்றும் நமக்காகப் பாடுபட்டார் என்றும் விசுவசிக்கிறேன். பரிசுத்த ஆவியையும், பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபையையும் அர்ச்சிஷ்டவர்களுடைய சமூக பிரயோசனத்தையும் பாவ பொறுத்தலையும், சரீர உத்தானத்தையும், நித்திய சீவியத்தையும் விசுவசிக்கிறேன்.
மாதாவுக்கு அடிமை சாசனம்:
சகல மோட்சவாசிகளுக்கு முன், கடவுளின் கன்னித் தாயான அமலோற்பவ மரியாயே உம்மை என் அன்னையாகவும் ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக என் சரீரத்தையும் ஆத்துமத்தையும், என் உள் எண்ணங்களையும் ஐம்புலன்களையும் என் எல்லாவற்றையும் என் ஜீவிய கால முழுவதும் நான் செய்யும் நற்கிரியைகளையும் பலன்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்துக்காக உமது பிரியப்படி நீரே முழு உரிமையுடன் என்னை ஆண்டு நடத்த கையளிக்கிறேன். ஆமென்.
மரியாயின் மாசற்ற இருதயமே என் இரட்சண்யமாயிரும். (மும்முறை)
பரிசுத்த ஆவிக்கு ஜெபம்:
பரிசுத்த ஆவியே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலிருந்து உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரருடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே! ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே! பேரின்பரசமுள்ள இளைப்பாற்றியே! பிரயாசத்தில் சுகமே, வெயிலிற் குளிர்ச்சியே. அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே, உம்முடைய விசுவாசிகளின் இருதயத்தின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்ற மில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும். வணங்காததை வணங்கப் பண்ணும். குளிரோடிருக் கிறதைக் குளிர் போக்கும். தவறினதைச் செம்மையாய் நடத்தும். உம்மை நம்பின் உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச ஆனந்தத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி . ஆமென்.
சமுத்திரத்தின் நட்சத்திரமே:
1. சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க! கடவுளின் கருணையுள்ள தாயே! எப்பொழுதும் கன்னிகையே! மோட்சத்தின் இனிய வாசலே வாழ்க!
2. கபிரியேல் தூதன் உரைத்த, மங்கள் வாழ்த்துரையை ஏற்று, ஏவையின் பெயரை மாற்றிய தாயே! சமாதானத்தில் எங்களை நிலை நிறுத்துவீராக.
3. குற்றவாளிகளின் பாவ விலங்கை அறுப்பீராக. பாவ இருளில் உள்ளோருக்கு ஒளியருள்வீராக. எங்கள் எல்லா தீமைகளையும் நீக்கி நலன் அனைத்திற்காகவும் மன்றாடுவீராக.
4. தாயென்று உம்மைக் காட்டும் எங்களுக்காக உமது மகவாகப் பிறந்த தேவசுதன் உம் மன்றாட்டின் மூலம் எங்கள் வேண்டுதலை ஏற்பாராக.
5. கன்னியருள் சிறந்த கன்னிகையே! அனைவரிலும் மிக சாந்தமுள்ள அன்னையே! எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவியும்; சாந்தமும் கற்பும் உள்ளவர்களாக்கும்.
6. பழுதற்ற வாழ்வை எங்களுக்குத் தாரும். உமது குமாரன் சேசுவை நாங்கள் கண்டு என்றும் மகிழ்ந்திருக்க எங்கள் பாதையை பத்திரமாய்க் காத்தருள்வீராக.
7. தேவ பிதாவுக்கும், துதி உயர் கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும், திரித்துவரான ஏக கடவுளுக்கும் புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
மரியாயின் கீதம்:
(லூக் 1:47 - 55).
என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது. என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தனது அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார் ஆகையால் இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய கிருபையும் தலைமுறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேல் இருக்கின்றது. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார். தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுடையவர்களைச் சிதறடித்தார். வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார். பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி செல்வர்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். தமது கிருபையை நினைவு கூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார். அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவர் சந்த்தியாருக்கும் அவர் வாக்குத் தத்தம் பண்ணியிருந்தார்.
ஒன்பதாவது நாள்:
கிறிஸ்து நாதர் அநுசாரம் முதற்காண்டம், அதிகாரம் 13:5-7
5. எந்தத் தந்திர சோதனைக்கும் காரணம் நமது மனதின் நிலையற்றதனமும், சர்வேசுரன் மட்டில் குறைவான நம்பிக்கையும் தான். எப்படியென்றால், சுக்கானிழந்த கப்பல் இங்குமங்கும் அலைகளால் தள்ளாடிச் சுழலுகிறது போல, அசட்டையுள்ளவனும் தன் பிரதிநிதிகளைக் கைவிடுகிறவனுமான மனிதன் பலவித சோதனைகளால் அலைக்கழிக்கப்படுவான். "இரும்பை அக்கினி பரீட்சிக்கின்றது; "நீதிமானைத் தந்திர சோதனை பரீட்சை செய்யும். நம்மாலாகக் கூடிய தீது எம்மாத்திரமென்று நாம் அறியோம்; ஆனால் நாம் என்னவென்று தந்திர சோதனை நமக்குத் தெளிவாய் வெளிப்படுத்துகிறது. ஆயினும் தந்திர சோதனையின் ஆரம்பத்தில் விசேஷமாய் எச்சரிக்கையாயிருக்க வேண்டியது; ஏனெனில் நமது மனதின் வாசற்படியில் சாத்தானை கொஞ்சமேனும் பிரவேசிக்க விடாமல், அது வெளியே நின்று அதட்டின மாத்திரத்தில் அதற்கு எதிர்த்து நிற்போமேயானால், வெகு எளிதாய் அதை ஜெயிக்கலாம். இதைப்பற்றித்தான் புத்திமான் ஒருவன்; "துவக்கத்திலேயே தீமையைத் தடை செய்; ஏனெனில் வியாதி வேரூன்றிய பின் மருந்து இடுவது அவ்வளவு பலன் தரக் கூடியதல்ல" என்றான். முந்த முந்தப் புத்தியில் இலேசானதோர் நினைவு உண்டாகின்றது, பிறகு பலமான தோற்றம், பிற்பாடு பிரியம், அதற்கு மேல் கெட்ட உணர்ச்சி. கடைசியாய்க் சம்மதம் உண்டாகின்றது. துவக்கத்திலேயே துஷ்டச் சத்துருவை எதிர்க்காவிட்டால், இவ்வகையில், அது படிப்படியாய் ஆத்துமத்தில் முழுமையும் பிரவேசித்துவிடுகின்றது. எதிர்த்துப் போராட எவ்வளவுக்குத் தாமதம் செய்து அசட்டை பண்ணுகிறோமோ அவ்வளவுக்கும் நாளுக்கு நாள் அதிக பலவீனமுள்ளவராவோம்; சத்துருவும் நம்மைத் தாக்க அதிக பலமுள்ளதாகின்றது.
6. சிலர் மனந்திரும்பிய துவக்கத்திலேயும், வேறு சிலர் கடைசியிலேயும் அதிக பலமுள்ள சோதனைகளை அனுபவிக்கிறார்கள்; மற்றும் சிலரோ சற்றேறக் குறைய தங்கள் சீவிய காலமெல்லாம் அத்தந்திரங்களால் துன்பப்படுகிறார்கள். மனிதருடைய அந்தஸ்தையும் பேறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுடைய இரட்சணியத் துக்காகச் சகலத்தையும் முன்னமே ஒழுங்குப்படுத்துகிற சர்வேசுரனுடைய ஞானத்திற்கும் நீதி முறைக்கும் தக்க பிரகாரம், சிற்சிலர் மெத்த இலேசான தந்திரங்களால் வருந்துகிறார்கள்.
7. ஆனதால் நாம் தந்திரங்களால் சோதிக்கப்படும் போது அவநம்பிக்கைப்பட வேண்டியதில்லை; ஆனால் சோதனை களிலெல்லாம் சர்வேசுரன் நமக்குக் கிருபை செய்யும்படி அதிக உருக்கத்தோடு அவரை மன்றாட வேண்டியது. அவரும் அர்ச். சின்னப்பர் சொல்லியது போல், "நாம் சோதனையைத் தாங்கக் கூடுமாயிருக்கும்படி வேண்டிய உதவியும் நமக்குப் புரிந்தருளு வார். ஆனதால் சகல தந்திரங்களிலும் துன்பங்களிலும் நமது ஆத்துமத்தைச் "சர்வேசுரனுடைய கரத்திற்குக் கீழ்ப்படுத்தக் கடவோம்". ஏனெனில் அவர் மனத் தாழ்ச்சி உள்ளவர்களை இரட்சித்து மகிமைப்படுத்துவார்''.
முடிவு ஜெபங்கள்:
சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, இதோ உம்முடைய சாரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்வதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாய் இருக்கிற நித்திய கன்னிகையே சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். ஆமென்.
ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் மன்றாட்டு:
கிறிஸ்துவின் ஆத்துமமே , என்னைப் புனிதப்படுத்தும்.
மரியாயின் மாசற்ற இருதயமே, எனக்கு உதவும்.
கிறிஸ்துவின் திருவுடலே, என்னைக் காப்பாற்றும்.
என் ஆன்மாவின் அன்னையே, என்னை மனந்திருப்பும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை மகிழ்வியும்.
மரியாயின் துயரங்களே, என்னை ஊடுருவும்.
கிறிஸ்துவிலாவிலிருந்து வழியும் திருநீரே. என்னைக் கழுவும்.
மரியாயின் கண்ணிரே , என்னைத் தூய்மையாக்கும்.
கிறிஸ்துவின் பாடுகளே, என்னை ஆறுதல் படுத்தும்.
மரியாயின் தனிமையே, என்னை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடும்.
ஓ! என் நல்ல இயேசுவே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒ! மரியாயின் மென்மையே, என்னைக் கண்ணோக்கும்.
ஓ! இயசுேவே, உமது திருக்காயங்களில் என்னை மறைத்துக் கொள்ளும்.
ஓ! மரியே உமது ஆன்மாவின் ஆழத்தில், என்னை பற்றி எரியச் செய்யும்.
ஓ! இயேசுவே, தீமையிலிருந்து என்னை தப்புவியும்.
ஒ! மரியே நான் சாகும்போது, என்னை உம் அன்புகரத்தில் தாங்கிக் கொள்ளும்.
ஓ! இயேசுவே, உமது சம்மனசுக்கள் புனிதர்களுடைய குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளும்.
ஒ! மரியே விண்ணகத்தில் உம்மைக் கண்டடைய எனக்குக் கட்டளையிடும்.
ஆமென்.