அசட்டைத்தனமும், பக்தி குறைவும் இல்லாமல் தகுந்த மரியாதையோடு நற்கருணை ஆண்டவரை உட்கொள்ளுகிறோமா?
தெறிந்துகொள்ளப்பட்டவர்களுடைய ஏக நம்பிக்கையும், அடைக்கலமுமாயிருக்கிற சேசுநாதர்சுவாமியை உட்கொள்ள நாம் அதிகமான ஆசைப்படாமல் இருப்பதற்கு காரணமாகிய நமது அசட்டைத்தனத்தையும், பக்தி வெதுவெதுப்பபையும் பற்றி நாம் மிகுந்த மனஸ்தாபத்தோடு பிரலாபித்து அழ வேண்டும். ஏனெனில் அவரே நம் அர்ச்சிப்பும், இரட்சண்யமுமாயிருக்கிறார். அவரே பரதேசிகளுக்கு ஆறுதலும், அர்ச்சிஷ்ட்டவர்களுக்கு நித்திய பேரின்பமுமாயிருக்கிறார்.
ஆகையால் பரலோகத்தை அக மகிழச்செய்து பூலோக முழுமைக்கும் இரட்சண்யமுமாயிருக்கும் அந்த உந்நத பரம இரகசியத்தை அநேகர் மதியாதிருப்பது மிகவும் பரிதாபத்திற்குறியது; வேதனைக்குரியது. மனிதருடைய குருட்டாட்டத்தையும், கல் நெஞ்சத்தையும் என்னென்போம் !. அவன் எவ்வளவு வாக்குக்கெட்டாத வரத்தை மதிக்கவில்லை. அதை நாள்தோறும் பிரயோகிப்பதனாலேயே அதன் விலை அவன் கண்ணுக்கு குறைவது போலத்தோன்றுகிறது. ஏனெனில் இந்த புசித பலி உலகத்தில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் நிறைவேற்றப்பட்டு, ஒரே ஒரு குருவானவரால் மாத்திரம் ஒப்புக்கொடுக்கப்படுமானால், அந்த பரம இரகசியங்கள் நடத்தப்படுவதைப் பார்ப்பதற்கு அந்த ஏக குருவானவரிடத்திலும், மனிதர் எவ்வளவு ஆசையோடு ஓடிவருவார்கள் !
உள்ளபடி இப்போதோ பரிசுத்த சர்பிரசாதம் (திவ்ய நற்கருணை) எவ்வளவுக்கு அதிகமாக விஸ்தாரமாய் பரவியிருக்கின்றதோ, அவ்வளவுக்கு அதிகமாய் வரப்பிரசாதமும் சர்வேசுவரன் மனிதர் மேல் கொண்ட நேசமும் விளங்கும்படியாக குருக்கள் அநேகர் ஆனார்கள். கிறிஸ்து நாதரும் அநேக ஸ்தலங்களில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
நல்ல சேசுவே ! நித்திய ஆயனே ! ஏழைகளும், பரதேசிகளுமான எங்களை உமது மதிப்பிட முடியாத சரீரத்தைக் கொண்டும் உமது திருஇரத்தத்தைக் கொண்டும் திடப்படுத்த சித்தமான உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
“ வருந்திச் சுமை சுமை சுமக்கிறவர்களே! நீங்கள் அனைவரும் நம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு இளைப்பாற்றியைக் கட்டளையிடுவோம்.“ என்று திருவாய் மலர்ந்து, நாங்கள் இந்த பரம இரகசியங்களை பெறுவதற்கு எங்களை அழைக்கத் தயை செய்தததிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
நன்றி : கிறிஸ்துநாதர் அநுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்
சிந்தனை : மேலே இந்த நூலின் ஆசிரியரான அருட்தந்தை தாமஸ் நற்கருணை ஆண்டவரை உட்கொள்ளச் செல்லும் போது நம்மிடையே இருக்கும் அசட்டைத்தனத்தையும், பக்தி வெது வெதுப்பையும் கண்டிக்கிறார். தினமும் திருப்பலியில் பங்கேற்பதாலேயோ, அல்லது அடிக்கடி பங்கேற்பதாலேயா இந்த அசட்டுத்தனம் வருகிறது என்று நம்மை வினவுகிறார்.
நற்கருணை ஆண்டவரின் வாக்குக்கெட்டாத மகிமையையும், அவர் நமக்கு தாராளமாக தர இருக்கும் வரப்பிரசாதங்களையும் அனுபவிக்க முடியாமல் இது போன்ற அசட்டைத்தனமும், அசமந்தமும் நம்மைத் தடுக்கிறதா?
நாள்தோறும் வந்தாலும் நம் ஆண்டவர்.. ஆண்டவர்தானே… மோட்சத்திலிருந்து வரும் இத்தெய்வீக திருஉணவை உட்கொள்ள நம்மை தயாரிக்க வேண்டாமா? ஒரு திருமணத்திற்கு செல்லும் முன் நம்மை எப்படியெல்லாம் அலங்கரிக்கிறோம், அழகுபடுத்துகிறோம்.. அதே போல் நம் தெய்வீக மணவாளனை உட்கொள்ள செல்லும் முன் நம் ஆன்மாவை அழகுபடுத்த வேண்டாமா? பாவக்கறையோடும், அசட்டுத்தனத்தோடும் அதி உந்நதரை உட்கொள்ளுவது எவ்வளவு பாவமாகும்.. நம்மிடம் கொஞ்சமாவது பயம் வேண்டாமா?
வேண்டாம்… இத்தகைய செயல்கள் இனி வேண்டாம்..
பரிசுத்தத்தோடும், பக்தி சுறுசுறுப்போடும், மிகுந்த ஆசையோடும், நம் நேசரை.. நம் கடவுளை முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம்
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !