அருள் நிறைந்த மரியாயே!
முத். ஆலன் ரோச் கண்ட பற்பல காட்சிகளிலிருந்து இரண்டொரு காரியம் அழுத்திக் கூறுகிறார். இந்த மந்திரத்தை அசமந்தத்தினாலாவது , அசட்டையினாலாவது , வெறுப்பினாலாவது சொல்லாதவர்கள் சீக்கிரம் இறந்து நித்திய ஆக்கினைக்கு ஆளாவார்கள் என்று நினைக்க இடமுண்டு . சம்மனசின் மங்களம் அல்லவா உலகைக் காப்பாற்றியது! இந்த மங்களத்தின் மேல் பிரியமுள்ளவர்கள் ஈடேற்றத்திற்கு முன்நியமனம் செய்யப்பட்டவர்கள் எனக் கருதலாம் . நமதாண்டவளை நேசித்து அவளுக்கு சேவை செய்யும் கிருபையை ஆண்டவரிடம் இருந்து பெற்றவர்கள் மோட்சகரைச் சேருமட்டும் அவ்வணக்கத்தைத் தொடர்ந்து செலுத்துவார்களாக.
அர்ச் லூயிஸ் மான்போர்ட் சொல்லுவார் " அருள் நிறைந்த மரியாயே , ஐம்பத்து மூன்று மணியோ , நூற்று ஐம்பத்து மூன்று மணியோ செபமாலை சொல்லுகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் என்று சொல்வேன். பெரும் காட்சி வரம் பெற்றவர்களில் முதலாய் சிலர் பேயால் ஏமாந்து போனார்கள் . நான் காரணத்தைத் தேடிய போது , அவர்கள் 'அருள் நிறைந்த மரியே ' என்பதையும் செபமாலையையும் அலட்சியம் செய்தார்கள் "
முன் நியமகம் செய்யப்பட்டவர்களுக்கு மோட்சம் அளிக்கும் பெருங்கிருபை 'அருள் நிறைந்த மரியே ' என்னும் செபத்தைச் சொல்லத் தூண்டுவதாம் . அது கூரிய அம்புக்குச் சமானம் . அதைத் தாங்களே உபயோகித்து அதைப் பற்றிப் போதிக்கும் குருக்கள் , கற்பாறையைப் போல கடினமான உள்ளத்தையும் ஊடுருவிப் பாய்ந்து இளக்கவல்லவர்கள் ஆவார்கள் .
அருள் நிறைந்த மரியாயே வாழ்க :
நீதி சூரியனது கதிர்களில் குளித்தெழுந்தவளே வாழி ! மோட்ச பாதையை விட்டு விலகி விட்டாயேயாகில் , இவ்வுலக வாழ்வின் யாத்திரையில் நம் ஆத்துமமாகிய கப்பல் அலை மோதி நிற்குமேயாகில் , சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய மரியை அழை, அவர் நித்திய ஜீவியத்தின் துறைமுகம் கொண்டு போய் உன்னைச் சேர்ப்பார். துன்பக் கடலில் மிதக்கிறாயா ? அத்துன்பக் கடலை மோட்சத்தின் மெய்யான ஆனந்தக் கடலாக மாற்றுகிறவர் அவர். மரிஎன்றழை , உன் தீய துன்பத்தை மதுரமான இன்பமாக மாற்றுவார் .
அருள் நிலையை இழந்துவிட்டாயா ? கன்னித்தாய்க்கு கர்த்தர் அளித்து நிரப்பிய பற்பல கிருபைகளைப் புகழ்ந்தேத்து . அருளாலும் பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் நிறைந்தவர் மரியா . அருட்கொடைகளை உனக்களிப்பார் .
கர்த்தர் உம்முடனே :
கடவுளுடைய உதவியை இழந்து தவிக்கிறாயா ? மாமரியை அண்டி வந்து சொல் ."ஆண்டவளே , கர்த்தர் உம்முடனே ; அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் ஆண்டவருக்கும் இருந்த ஐக்கியத்தை விட உமக்கும் அவருக்கும் மிகுந்த நெருங்கிய ஐக்கியம் . நீங்கள் இருவரும் ஒன்று . அவர் உம் மகன் ; அவர் சதை உம் சதை ; அவருடைய உத்தம சாயல் நீரானபடியினாலும் , நீர் அவருடைய அன்னையானபடியினாலும் ஆண்டவரோடு உமக்கு நெருங்கிய ஐக்கியம் .நீர் திருத்துவத்தின் திரு ஆலயம் . தமத்திருத்துவத்தின் மூன்று ஆட்களும் உம்மோடு இருக்கிறார்கள் " இதைக் கேட்ட உடனே நேசத்தாய் உன்னை அழைத்துச் சென்று ஆண்டவரின் பட்சமுள்ள பாதுகாப்பில் வைப்பார்.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே :
உம்முடைய பரிசுத்த தனத்தினாலும் , பிள்ளைப் பேற்றாலும் எல்லாப் பெண்களுக்குமேல் உயர்ந்தவர் . எல்லா சாதி சனங்களுக்கு மேல் உயர்ந்தவர் . இறைவனுடைய சாபத்தை நீர் ஆசீராக மாற்றி விட்டீர் . என்னையும் ஆசீர்வதிப்பாய் அம்மா !
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே :
வரப்பிரசாத அன்னத்தின் மேலும் சீவிய அப்பத்தின் மேலும் உனக்குப் பசியா ? மோட்சத்திலிருந்து இறங்கி வந்த சீவிய அப்பத்தை உதரத்தில் தாங்கியவரை அண்டி வந்து சொல் ; உமது கன்னிமைக்கு யாதொரு அற்பப் பழுதின்றி கருத்தரித்து யாதொரு நோவின்றித் தாங்கிச் சென்று யாதொரு வாதனையின்றிப் பெற்றெடுத்தவர் . உமது உதரத்தின் கனியானவர் அர்ச்சிக்கப்பட்டவரே , நாங்கள் பாவ அடிமைத்தனத்தில் இருந்த போது , வருந்திய இவ்வுலகை இரட்சித்த இயேசு , உலகத்தை அதன் நோயினின்று குணமாக்கியவர், மரித்தோரை உயிர்ப்பித்தவர். அகதிகளை வீடு அழைத்து வந்தவர் ; பாவிகளுக்கு வரப்பிரசாத வாழ்வை வழங்கியவர் ; நித்திய ஆக்கினையினின்று மனிதர்களை இரட்சித்தவர் , அர்ச்சிக்கப்பட்டவரே
அர்ச் மரியாயே :
உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தமானவரே , சர்வேசுரனுடைய சேவையில் நிகரற்றதனமாய் பிரமாநிக்கத்தால் சொந்தமானவரே , மேலான பதவியை வகித்ததால் பரிசுத்தமானவரே , மேலான அர்ச்சிப்பைக் கடவுள் உமக்குத் தந்தார்
சர்வேசுரனுடைய மாதாவே :
எங்களுடைய மாதாவே , எங்களது பரிபாலியே, மனுப்பேசுகிறவரே , இறைவனுடைய வரப்பிரசாதங்களின் பொக்கிஷ தாரிணியே, உம் பிரியம் போல் அப்பொக்கிஷத்தை வழங்குகிறவரே, எங்கள் பாவங்களுக்குச் சீக்கிரம் மன்னிப்பைப் பெற்றுத் தந்து மாட்சிமை தங்கிய கடவுளோடு உறவாடும் பாக்கியத்தையும் கொண்டு வருவாய்
பாவிகளாகிய எங்களுக்காக :
அம்மா , ஏழைகளுக்கு எப்போதும் நீர் இரங்குபவர். நீர் பாவிகளை ஒரு நாளும் அவமதிப்பது இல்லை, அவர்களைத் தள்ளிவிடுவதும் இல்லை . பாவிகள் இல்லாவிடில் நீர் ஒருநாளும் இரட்சகரின் தாயாகியிருக்க மாட்டீரன்றோ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
இப்பொழுதும் :
துன்பத்தாலும் வருங்கால பயத்தாலும் நிறைந்திருக்கும் இக்குறுகிய வாழ்நாளில் , நரகப் பேய்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாய் எங்கள் மேல் சாடி வரும் இந்நாளில் , சோதனைகள் அலை அலையாய் மோதும் இப்பொழுது , மனித ரூபத்திலோ , தினத்தாள் , புத்தகங்கள் ,தொலைகாட்சி, கணினித்திரை வாயிலாலோ , உல்லாசப் போக்குக் காட்சி என்ற போர்வையிலோ மறைந்துள்ள பலசாலிகளான பகைவர்கள் பலர் எங்கள் மேல் பாயக் காத்திருக்கும் இப்பொழுது எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும் :
எங்கள் பலம் எல்லாம் தளர்ந்து போய் , உள்ளம் ஒடுங்கி ஆத்துமமும் சரீரமும் பயத்தாலும் வலியாலும் நைந்திருக்கும் வேளை, அப்பயங்கரமான வேளையில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் . எங்களைத் தம் வலையில் தள்ளி படுகுழிக்குக் கொண்டு போகத் தங்கள் சத்துவம் எல்லாவற்றையும் கூடிப் பேய்கள் தாக்கும் மரண நேரத்தில் , நரகமோ மோட்சமோ என்ற நிலையை நித்தியத்திற்கும் தீர்மானிக்கும் அச்சமயம் , இரக்கத்தின் சுந்தர மாதாவே , ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரைந்து வாரும் . பாவிகளின் அடைக்கலமும் , மனுப்பேசுகிறவருமான அன்னையே , மரண நேரத்தில் எங்களைப் பாதுகாத்து , எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லி எங்களைப் பயமுறுத்தும் பேய்களை அந்நேரத்தில் எங்களை விட்டு துரத்தியருளும் . சாவின் நிழலிலும் அந்தகாரத்திலும் பதிந்த எங்கள் பாதையைப் பிரகாசத்தால் துலக்கி உமது திருமகனின் நீதி ஸ்தலமுன் எங்களை அழைத்துச் செல்லும் . அத்தோடு நில்லாமல் அவ்விடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசும் . எங்கள் பாவங்களை மன்னிக்கவும் , நித்திய மகிமையின் வாசஸ்தலத்தில் புனிதர்கள் மத்தியில் எங்களை அமரச் செய்யவும் உமது திருமகனை மன்றாடும் என் நேசத்தாயே ஆமென்.
சரிதை.
முத் அருளப்பரின் தோமாஸ் அடிக்கடி செபமாலையைப் பற்றி அருமையான பிரசங்கங்கள் செய்வார் . ஆத்துமங்களுக்கு அவர் செய்து வந்த நன்மையைக் கண்டு சகியாத பேய்கள் , அவரை அதிகம் அலட்டி வந்தன . அதைத் தாங்கமுடியாமல் வியாதியை விழுந்து நெடுநாள் நோய் வாய்ப்பட்டு இருந்தார். வைத்தியர்கள் அவர் பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டனர் . பேயும் பயங்கரமான ரூபத்தில் அவருக்குத் தோன்றியது . கட்டிலண்டை தேவதையின் படம் ஒன்று இருந்தது அதை உற்று நோக்கினார் . " மதுரமான அன்னையே , எனக்கு உதவியாக வாரும் , என்னை இரட்சியும் " என்று அலறினார் . இவ்விதம் தேவதாயை அழைத்த உடனே படத்துக்கு உயிர் வந்தது போல இருந்தது. தேவதாய் அவரது கரத்தைப் பிடித்துச் சொல்லுவார்: " என் மகனே தோமாஸ் , அஞ்சாதே . இதோ நான் இங்கிருக்கிறேன் , உன்னைக் காப்பாற்றுவேன் , எழுந்திரு . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பற்றிப் போதனை செய் . உன் பகைவரிடமிருந்து உன்னைக் காக்கிறேன் என்று வாக்களிக்கிறேன் "
நமதாண்டவள் இதைச் சொன்னவுடனே பேய் பறந்து ஓடிற்று . அந்நேரமே முழுச் சுகத்துடன் தோமாஸ் எழுந்தார். கண்களிலிருந்து நீர் வடிய நம் நல்ல தாய்க்கு நன்றி சொன்னார் . வழக்கம் போல் செபமாலை பக்தியைப் பரப்பும் அப்போஸ்தலத்துவத்தில் முனைந்து நின்றார் . செபமாலையை பக்தியாய்ப் பிரமாணிக்கமாய்ச் சொல்லி வருவோமாக.
செபம்.
செபமாலை இராக்கினியே , அன்பின் வடிவே , அமலோற்பவ நாயகியே , உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும் எளிய ஆத்துமன்களைக் கரை சேர்க்க விரைந்து வாரும் . அவர்களுக்காக வேண்டிக் கொள்ளச் சொன்னீரே , இரக்கமுள்ள மகனின் மதுரமான அன்னையே , அவர்கள் செலுத்தவேண்டிய கடனை , அவதியின் காலத்தைக் குறைத்தருளும் . எங்கள் சிறிய பரித்தியாகங்களை , பராக்கு நிறைந்த செபங்களை , அற்பப் பரிகார முயற்சிகளை தயவு செய்து ஏற்றுக்கொள்ளும் . திருச்சபையின் குறைக்க முடியாத நிதியிலிருந்து அவர்கள் செலுத்த வேண்டிய பரிகாரத்தைத் தீர்த்தருளும் . எங்கள் எளிய மன்றாட்டைக் கேட்டு தேவ நீதியின் கடுமையைக் குறைத்து உத்தரிக்கிற ஸ்தல வாசிகள் சீக்கிரம் மோட்சம் சேரக் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே.
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
அக்டோபர் 9
Posted by
Christopher